சனி, 27 மார்ச், 2010

திருப்புல்லாணியில் திருக்கல்யாணம்.

பங்குனி உத்ஸவத்தின் ஆறாம் நாளான இன்று பெருமாள் தாயார் திருக்கல்யாணம். மற்ற எல்லா இடங்களிலும் பங்குனி உத்திரத்தன்று தானே சேர்த்தி? இங்கு மட்டும் ஏன் முன்னால்? மற்ற ஊர்களிலில்லாத ஒரு தனிப் பெருமை எங்கள் தாயாருக்கு! பெருமாளால் தாயாரைப் பார்க்காமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தாயார் ஸந்நிதிக்கு ஓடி வந்து அன்று பூராவும் தாயாரிடம் இருந்து மகிழ்ந்து இரவில் ஊஞ்சல் ஆடிக் களித்து நம்மையும் பரவசப்படுத்தி ஆஸ்தானம் திரும்புவார். அதனால் பிற ஊர்களில் உத்திரத்தன்று சேர்த்தியும், ப்ரளய கலகமும் நடந்தால், இங்கோ அன்று ப்ரளய கலகம் மட்டும், அதுகூட சில வருடங்களில் மறுநாள்கூட, நடக்கும். சரி!திருக்கல்யாணத்துக்கு வருவோம்.

மாலையில் பெருமாள்

மானவி லிறுத்து மிதிலாபுரிச் சனகேசன்
       மகளை முன்மணம் புணர்ந்து
மாதங்கமே றியேமாதவர் துதிக்க நீ
      மணிமருகில் வந்த தென்னத்
தான மும்மதமொழுகு மதயானை யேறியே
       தாமரைக் காடு பூத்துத்
தயங்குமொரு பச்சைப்பருவ முகில் வருவ
      போற் தாரணியெலாம் வழுத்த
மேனகை திலோத்தமை யிந்திராணி யுருவசி
     வெண்கவரிவீச மென்பூ
மேலிருந்தவளை நன்மணம் புணர்ந்தே தும்பை
      வேரி மணமாலை சூட்டித்
தேனலரு நறுமலர் விதான நாற்றியமணிச்
     சிறு சாளரங்கள் சூழ்ந்த
செம்பொன் மணிமேடை சூழ்புல்லாணி வீதி

களிலே

திருவீதிப்புறப்பாடு கண்டு கோயில் திரும்பி தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயார் எதிரில் வந்து நிற்க, இராமநாதபுரம் ஸமஸ்தானம் திவான், மணமகன், மணமகள் இருவருக்கும் புத்தாடைகள், ஆபரணங்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்க, பெருமாளிடமிருந்து புது வஸ்திரங்களும், திருமாங்கல்யமும் பெற்று அர்ச்சகர்கள் அதை தாயாருக்கு சேர்த்து மீண்டும் தாயாரிடமிருந்து மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பித்து திருக்கல்யாணம் இனிது நிறைவு பெற்றது. அவ்வளவுதானா! என ஆச்சர்யப்பட வேண்டாம். மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். நேரில் பார்த்து ஆனந்தப் பட வேண்டும்.

ஆனால் எங்கள் ஊர் திருக்கல்யாணத்தின் மூலம் பெருமாள் உலகுக்கு உணர்த்தும் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அந்த நாளில் மிக விவரம் அறிந்தவர்கள் நிறைந்திருந்த நாளில் மிக விரிவாக, இப்போது பல இடங்களில் நடப்பதுபோல், ஹோமங்கள் செய்து திருக்கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? பெருமாளின் திருவுளம் ஆடம்பரம் ஒழிமின் என்று உலகத்தார்க்கு அறிவுறுத்துவதற்காகவே இப்படி படு சிம்பிளாகத் தனது திருக்கல்யாணத்தை நடத்திக்கொள்கிறான் போலும்.

அவன் எவ்வளவு கருணாவத்ஸலன் பாருங்களேன். முந்தைய பதிவில் ஆந்திர மாநில ஸேவார்த்திகளை ஊக்குவிப்பார் யாருமில்லை என எழுதியிருந்தேன் இல்லையா? இது அவன் திருச்செவி சாற்றிக் கொண்டான் போலிருக்கிறது. திருக்கல்யாணத்துக்கு இராமநாதபுரத்திலிருந்து சுமார் 400 பேர் திரண்டு வந்திருந்தனர். LIC நாராயணன் என்று ஒருவர். இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமன் ஸந்நிதியில் ஸ்ரீராமபக்த சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பிரமிக்கத்தக்க கைங்கர்யங்களை அனாயாஸமாகச் செய்து வருபவர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தினம் வந்துகொண்டிருந்த ஸேவார்த்திகள் இன்று தினமும் நூற்றுக்கணக்கில் வருகிறார்களென்றால் இவரது அபார முயற்சியே காரணம். தான் மட்டும் செய்வதில்லை. எல்லோரையும் ஊக்குவித்து அனைவரையும் கைங்கர்யங்களில் ஈடுபட வைப்பது இவர் ஸ்பெஷாலிடி. இந்த நாராயணன் பிரசாரத்தாலே திருக்கல்யாணம் ஸேவிக்க வந்தவர்கள், ஆந்திர மாதர்களின் கோலாட்டங்களைப் பார்த்து வியந்து பாராட்டி அவர்களை உற்சாகப் பட்டுத்தி அவர்களை மன நிறைவடையச் செய்தனர். 

வீடியோக்கள் தொடரும். எங்கள் ஊர் மேல் “ஆற்காட்டார்” விசேஷ கவனம் செலுத்துவதால் இரவில் போன கரண்ட் இப்போதுதான் வந்தது. போன பாரா எழுதும்போது போய் விட்டது.

6 கருத்துகள்:

  1. கண்ணாலம் கோடித்து
    கண்ணாலக் காட்சிகள்
    அருமையோ அருமை!

    திருமாங்கல்ய தாரணம் அப்படியே கண்களில் ஒத்திக் கொண்டேன்!

    //பெருமாளின் திருவுளம் ஆடம்பரம் ஒழிமின் என்று உலகத்தார்க்கு அறிவுறுத்துவதற்காகவே இப்படி படு சிம்பிளாகத் தனது திருக்கல்யாணத்தை நடத்திக்கொள்கிறான் போலும்//

    சூப்பர்!
    "கல்யாண" குணங்களில் ஆடம்பர/அலங்காரம் சொல்லப்படவில்லை!
    ஆனால் "எளிவந்த தன்மை" சொல்லப்பட்டிருக்கு!
    அதன் படி, அவனே நடந்து காட்டிக்கறான் போல! :)

    பதிலளிநீக்கு
  2. //தாமரைக் காடு பூத்துத்
    தயங்குமொரு பச்சைப்பருவ முகில் வருவ//

    தாமரைக் காடா?
    தாமரைக் குளம் தெரியும்!
    தாமரைக் காடு என்னவோ?
    காட்டைக் காட்டி விளக்க வேணும்! :)

    //LIC நாராயணன் என்று ஒருவர். இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமன் ஸந்நிதியில் ஸ்ரீராமபக்த சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பிரமிக்கத்தக்க கைங்கர்யங்களை அனாயாஸமாகச் செய்து வருபவர்//

    வணங்கிக் கொள்கிறேன்!
    அடியேன் சென்னி மிசை - தொண்டர் அடிப் பொடிகள்!

    //இந்த நாராயணன் பிரசாரத்தாலே திருக்கல்யாணம் ஸேவிக்க வந்தவர்கள், ஆந்திர மாதர்களின் கோலாட்டங்களைப் பார்த்து வியந்து பாராட்டி அவர்களை உற்சாகப் பட்டுத்தி அவர்களை மன நிறைவடையச் செய்தனர்//

    அருமை! கோலாட்டம் கோலாகலமானது-ன்னு சொல்லுங்க! :)

    ஆந்திர மாநில அடியார் சபை
    மற்றும்
    ராமநாதபுர ராம பக்த சபை
    பற்றிய தகவல் - முகவரி - பெயர்கள்...இவற்றையும் இங்கே அறிவித்து வைக்க வேணுமாய் வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. //பெருமாளால் தாயாரைப் பார்க்காமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தாயார் ஸந்நிதிக்கு ஓடி வந்து அன்று பூராவும் தாயாரிடம் இருந்து மகிழ்ந்து இரவில் ஊஞ்சல் ஆடிக் களித்து நம்மையும் பரவசப்படுத்தி ஆஸ்தானம் திரும்புவார்.//

    ஆஹா.. இதுதான் காரணமா.. அதிலும் இம்முறை ஆண்டாள் பாடியவாறு வாரணம் மீதேறி வந்து மணமுடித்துக் கொள்கிறார் போலும்..

    பதிலளிநீக்கு
  4. கஜேந்திராழ்வான் மீது அமர்ந்திருக்கும் கம்பீரம் அழகோ அழகு.. பெருமாளுக்கு அலங்கார கைங்கர்யம் செய்வதே ஒரு தனிக்கலை.. பக்தர்களை கோவிலுக்கு வரச்செய்ய பட்டர்களின் கைவண்ணம் மிகவும் உதவி புரியும்.. எங்கள் எமனேஸ்வரத்திற்கும், பரமக்குடிக்கும் இவ்விஷயத்தில் ஒரு போட்டியே நடக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. ஆமாம்! ராகவ்! அர்ச்சகர்கள் பெரும் கலா ரசிகர்கள். அவர்களுக்கு அவர்கள் ஆராதிக்கும் பெருமாள்களும் அவர்களது குழந்தைகள் என்ற மனோபாவம் நிறைய உண்டு. அந்த நினைப்பாலே, சிறு குழந்தையைப் பெற்ற தாய் பல விதங்களிலும் அழகுபடுத்திப் பார்ப்பது போல் பெருமாளுக்கும் வித விதமான அலங்காரங்கள் செய்து ஆனந்தப் படுபவர்கள். அவர்களுக்கு தக்ஷணைகளைக் காட்டிலும், அவர்கள் செய்யும் சாத்துப்படிகளைப் பலர் பார்த்து பரவசப்பட்டு பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம்தான் பெரிது.
    உங்கள் பரமக்குடியையும் எமனேஸ்வரத்தையும் பற்றிக் கேட்கவே வேண்டாம். கள்ளழகர் உத்ஸவம் விசேஷமானதுதான். ஆனால் அடியேனைக் கவர்ந்தது இன்றும் ஆயிரம் தீவட்டிகளுடன் ஆற்றில் இறங்கும் பரமக்குடி அழகரே. அடுத்த மாதத்தில் ஆற்றில் இறங்கும் எமனேஸ்வரத்து அழகரைக் காணவும் கண் கோடி வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. Word verification - நீக்குங்களேன் ப்ளீஸ்! பதிவிட தடையாக உள்ளது.!

    பதிலளிநீக்கு