ஸ்ரீமந் -- ஸ்ரீ மஹாலக்ஷ்மியோடு கூடிய நாராயணனே! லக்ஷ்மியோடு கூடின எம்பெருமானே ப்ரபத்திக்கு உத்தேச்யன் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றது. முதலில் புருஷகார ப்ரபத்தி பண்ணி, அம்முகத்தாலே வசீக்ருதனான எம்பெருமானிடத்தில் ப்ரபத்தி செய்யவேண்டும் என்பதும் ஸூசிக்கப் பெறுகின்றது.
இவ்வாசார்யசிரேஷ்டர் தெய்வநாயகனைச் சரணம் அடையத் திருவுள்ளங்கொண்டு முதலில் செங்கமலவல்லித் தாயாரிடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதற் பாசுரத்தால் வெளியிடுகிறார் "மும்மணிக்கோவை"யில்.
அருடரு மடியவர்பான் மெய்யை வைத்துத்
தெருடர நின்ற தெய்வ நாயகநின்
னருளெனுஞ் சீரோ ரரிவை யானதென
விருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன நின்றிரு வுருவி
லணியம ராகத் தலங்கலா யிலங்கி
நின்படிக் கெல்லாந் தன்படி யேற்க
வன்புட னின்னோ டவதரித் தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
தீண்டிய வினைகண் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக
நின்னுடன் சேர்ந்து நிற்குநின் றிருவே.
[தேவரீரால் அருள்புரியப்பெற்ற அடியவர்கள்மீது மெய்யாக ஒழுகுந் தன்மையை இட்டு 'அடியவர்க்கு மெய்யன்' எனப் பெயர் பெற்று அடியோங்களுக்கு ஜ்ஞாநக்கண்ணை அருள்கின்ற தெய்வநாயகனே! எமக்கு அஜ்ஞாநமாகிய இருள் ஒழியும்படி ஒப்பற்ற இனிய பிரகாசத்தையுடைய தீபம் போன்றவளாய், இந்த்ரநீல பர்வதம் போன்ற தேவரீர் அழகிய திருமேனியில் திருவாபரணங்கள் அமர்ந்து நிற்கின்ற திருமார்பில் மாலையாகப் பிரகாசித்துக்கொண்டு, தேவரீர் ப்ரகாரங்களுக்கு எல்லாம் தன் பிரகாரங்கள் ஒத்திருக்குமாறு தேவரீரைப் பிரியமாட்டாத அன்புடன், தேவரீரோடு தானும் அவதரித்தருளி, ஆச்ரிதர்கள் பிரார்த்திக்கும் உரைகளைத்தான் முந்துறக் கேட்டு, மறுபடியும் அவ்வுரைகளைத் தேவரீர் கேட்குமாறு செய்து, திரண்ட கர்மங்கள் ஒழிந்து போகச் செய்ய முயன்று, தன் திருவடிகளை அடைந்த பாகவதர்கள் தேவரீரை அடையும்படி தேவரீர் கருணையெனும் குணமே ஒப்பற்ற பெண்வடிவு கொண்டது என்னலாம்படி தேவரீருக்கும் பெருமையைத் தருகின்ற பெரிய பிராட்டி தேவரீரோடு க்ஷணமும் பிரியாது சேர்ந்து நிற்கின்றாள்] என்ற தேசிகமாலைப் பாசுரமே அது.
எம்பெருமானுடைய குணங்களுக்கு அளவே இல்லை. ஒரு பொருளுக்கு உளதாகக் கூறும் குணமானது தன்னைப் பெற்றிருக்கும் மற்றொரு பொருளைக் காட்டிலும் ஒரு பேதத்தைக் காட்டுவதால் அக்குணம் விசேஷணம் என்னப் பெறும். இத்தகைய விசேஷணம் "ஸ்வரூபநிரூபக விசேஷணம்" என்றும், "நிரூபித ஸ்வரூப விசேஷணம்" என்றும் இருவகைப்படும். ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை எந்தக் குணத்தை உடையதாகக் கூறியே விளக்கினால் அன்றி அவ்வஸ்துவின் ஸ்வரூபத்தை அறியமுடியாதோ, அந்தக் குணம் ஸ்வரூபநிரூபக விசேஷணம் எனப்படும். ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை விளக்கியபின் அதன் பெருமை புலப்படுவதற்கு எந்தக் குணங்கள் வெளியிடப் பெறுகின்றனவோ, அவை நிரூபித ஸ்வரூப விசேஷணம் எனப்படும்.
எம்பெருமானுடைய ஸ்வரூபத்தை ஸத்யத்வம், ஜ்ஞாநத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்களை யிட்டே விளக்க வேண்டும். ஆதலின் இவ்வைந்தும் ஸ்வரூப நிரூபகம் ஆகும். இந்தக்குணங்கள் "அமலனவியாத சுடரளவில்லா வாரமுதம்" (தேசிகமாலை அருத்த பஞ்சகம் 1) என்ற வடியிற் கூறப்பெற்றுள்ளன.
(1) ஸத்யத்வம் -- எஞ்ஞான்றும் மாறுபடாத தன்மை. இது 'அவியாத' எனும் சொல்லாற் கூறப்பெற்றது.
(2) ஜ்ஞாநத்வம் -- எப்பொழுதும் குறைவுபடாத ஜ்ஞாந ஸ்வரூபனாந் தன்மை. இது 'சுடர்' என்ற சொல்லால் உணர்த்தப் பெற்றது.
(3) அநந்தத்வம் -- 'இங்குத்தான் இருக்கின்றான்' என்று தேசத்தாலும், 'இப்பொழுதுதான் இருக்கின்றான்' என்று காலத்தாலும், 'இந்த வஸ்துவின் ஸ்வரூபமாக இருக்கின்றான்' என்று வஸ்துவினாலும் அளவிடமுடியாதபடி எவ்விடத்திலும், எக்காலத்திலும், எந்த வஸ்து ஸ்வரூபனாகவும் நிற்கும் தன்மை. இது 'அளவில்லா' என்றதால் கூறப்பெற்றது.
(4) ஆநந்தத்வம் - தோஷங்கள் இல்லாத தன்மை. இது 'அமலன்' என்றதால் குறிக்கப்பெற்றது.
இவ்வைந்து குணங்களால் எம்பெருமானது ஸ்வரூபத்தை ஒருவாறு அறிந்தபின் ஸௌசீல்யம், காருண்யம், வாத்ஸல்யம் முதலிய அளவற்ற திருக்கல்யாண குணங்கள் அவன் பெருமையைக் காட்டுகின்றன. இவை நிரூபித ஸ்வரூப விசேஷணமாகும்.
"இப்படி ஸபத் நீகனாய்க்கொண்டு ஸர்வரக்ஷண தீக்ஷிதனாய் 'சாந்தானந்த' (சதுச்லோகீ 4) 'ஸ்வவைச்வரூப்யேண' (ஸ்தோத்ர ரத்நம் 38) இத்யாதிகளிற்படியே ஸ்வரூபத்தாலும், குணத்தாலும், ப்ரணயத்தாலும் ஸுச்லிஷ்டனான சரண்யனுக்கு 'தன்னடியார் திறத்தகத்து' (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) இத்யாதிகளில் அபிப்ரேதங்களாய் புருஷகாரமும் தன்னேற்ற மென்னலாம் படியான சரண்யத்வ உபயுக்தங்களான ஆகாராந்தரங்களைச் சொல்லுகிறது இங்குற்ற நாராயண சப்தம். அவையாவன :-- சரீராத்மபாவநியாமகங்களான சேஷசேஷித்வாதி ஸம்பந்தங்களும், ஆச்ரயணீயதைக்கும் பலப்ரதானத்துக்கும் உபயுக்தமான குணவர்க்கமும், ஸககாரி நிரபேக்ஷமாக ஸர்வத்தையும் நினைத்தபோதே தலைக்கட்டவல்ல ஸங்கல்பரூப வ்யாபாரமும், 'ஸ்வமுத்திச்ய ஸ்ரீமாந்' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-87) என்கிறபடியே ஆச்ரிதஸம்ரக்ஷணம் தானும் தன்பேறாக ரக்ஷிக்கிற ப்ரயோஜந விசேஷமும். இங்கு குணவர்க்கம் என்கிறது ;-- காருண்ய ஸௌலப்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய க்ருதஜ்ஞாதிகளும், ஸர்வஜ்ஞத்வஸர்வ சக்தித்வ ஸத்ய ஸங்கல்பத்வ பரிபூர்ணத்வ பரமோதாரத்வாதிகளும் ; காருண்யம் -- ஒரு வ்யாஜத்தை முன்னிட்டு நம்முடைய துக்கங்களைக் கழிக்கைக்கு தானே நினைத்திருக்கையாலே 'எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும்' (திருவாய்மொழி 5-1-7) என்று நம்புகைக்கு உறுப்பாம் ; ஸௌலப்யம் --'சேணுயர்வானத்திருக்கும் தேவபிரான்' (திருவாய்மொழி 5-3-9) என்று அகலாதபடி 'ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் நாராயணனே நமக்கே பறை தருவான்' (திருப்பாவை 1) என்று ஆபால கோபாலம் அணியனாய் அபேக்ஷிதம் தந்தருளும் என்கைக்கு உறுப்பாம்; ஸௌசீல்யம் --'அம்மானாழிப் பிரானவனெவ்விடத்தான்யானார்' (திருவாய்மொழி 5-1-7) என்று அகலாமைக்கு உறுப்பாம்; வாத்ஸல்யம் -- 'நீசனேன் நிறைவொன்றுமிலேன்'(திருவாய்மொழி 3-3-4) என்று ஸ்வதோஷத்தைக் கண்டு அவன் அநாதரிக்கிறான் என்று வெருவாமைக்கு உறுப்பாம்; க்ருதஜ்ஞத்வம் -- 'மாதவனென்றதே கொண்டு' (திருவாய்மொழி 2-7-4) 'திருமாலிருஞ்சோலைமலை யென்றேன்' (திருவாய்மொழி 10-8-1) என்கிறபடியே தன் பக்கலிலே அதிலகுவாயிருப்பதொரு வ்யாஜத்தைக் கண்டாலும் இனி நம்மைக் கைவிடான் என்கிற தேற்றத்திற்கு உறுப்பாம்; மார்தவார்ஜித வாதிகளுக்கும் இப்படியே உபயோகம் கண்டுகொள்வது. ஸர்வஜ்ஞத்வம் ---'எல்லாமறிவீர்' (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே ஆச்ரிதருடைய இஷ்டப்ராப்தி அநிஷ்டநிவ்ருத்தி உபாயங்களையும் விரோதிகளையும் அறிகைக்கு உறுப்பாம்; ஸர்வசக்தித்வம் -- 'கூட்டரிய திருவடிகட்கூட்டினை'(திருவாய்மொழி 4-9-9) என்கிறபடியே ஆச்ரிதர் மநோரதங்களைக் கடிப்பிக்கைக்கு உறுப்பாம்; ஸத்யஸங்கல்பத்வம் -- 'சன்மசன்மாந்திரங்காத்து' (திருவாய்மொழி 3-7-7) இத்யாதிகளிற்படியே 'மோக்ஷயிஷ்யாமி'(ஸ்ரீபகவத்கீதை 18-66) என்றது முடிவு செய்கைக்கு உறுப்பாம்; பரிபூர்ணத்வம் --- 'செல்வநாரணனென்று' (திருவாய்மொழி 1-10-8) இத்யாதிகளிற்படியே பாவ தாரதம்யம் பார்க்கும் அளவே ஆனாலும் நாம் செய்யும் கிஞ்சித்காரத்தில் கௌரவலாவகங்களைப் பாராமைக்கு உறுப்பாம்; பரமோதாரத்வம்--அல்பமான ஆத்மாத்மீயங்களை சோராநீத நூபுர ந்யாயத்தாலே ஸமர்ப்பித்தவர்களுக்குத்தான் 'எனக்கே தன்னைத் தந்த கற்பகம்' (திருவாய்மொழி 2-7-11) என்கிறபடியே, அநந்தமான ஆத்மாத்மீயங்களை வழங்குகைக்கு உறுப்பாம்; ஸ்தைர்ய தைர்யாதிகளுக்கும் இப்படி உபயோகம் கண்டுகொள்வது. " [ஸாரஸாரம் த்வயாதிகாரம்]
இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான -- ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்திதத்வம், ஸர்வஸ்வாமித்வம் முதலான குணங்கள் எல்லாம் "த்வயி" என்கிற பதத்தில் அநுஸந்தேயம். இவை முன்னர் விளக்கப் பெற்றிருத்தல் காண்க.
பகவானுடைய குணங்கள் எல்லாம் பரோபகாரார்த்தமாகவே (பிறருக்கு உதவுவதற்காகவே) யிருக்கிறபடியால் அவனைக் கல்யாண குணவான் என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன. ஸர்வஜ்ஞத்வம் மு.தலான குணங்களை இவ்வளவு என்று எண்ண முடியாது. ஸர்வஜ்ஞத்மாவது:-- எப்பொழுதும் எல்லா வஸ்துக்களையும் உள்ளது உள்ளபடியே பார்ப்பது. ஸர்வசக்தித்வமாவது :-- நினைத்ததை நினைத்தபடியே முடிக்க சக்தி யுண்டாயிருக்கை; இந்த சக்தி பலவிதம். ஸத்யகாமத்மாவது:-- போக்யமான வஸ்துக்கள் நினைத்தபோது ஸித்தமாயிருக்கை; ஸத்ய ஸங்கல்பத்வமாவது --தான் ஸங்கல்பித்ததற்கு (நினைத்ததற்கு) ஒருவராலும் தடையில்லாமல் ஸங்கல்பித்தபடியே நிறைவேற்றுகை. ஸர்வேச்வரன் விபீஷணாழ்வானை ரக்ஷிக்க ஸங்கல்பித்தபோது ஸுக்கிரீவன் அங்கதன் முதலான தம்முடைய அந்தரங்கமான மந்திரிகள் தடுத்தபோதிலும் அந்த ரக்ஷண ஸங்கல்பம் தடையில்லாமல் நிறைவேறிற்று. பாணாஸுரனை சிக்ஷிக்க (தண்டிக்க) ஸங்கல்பித்தபோது, சிவன், ஸுப்ரஹ்மண்யன் முதலானவர்கள் குறுக்கே விழுந்தபோதிலும் அவனைத் தண்டித்தே விட்டான். பரமோதாரத்வமாவது;-- ஆச்ரிதர்களுக்கு அவர்கள் அபேக்ஷித்ததற்கு அதிகமாகவே கொடுத்தும் 'நாமென்ன கொடுத்தோம்' என்றிருக்கை. க்ருதஜ்ஞதையாவது --- தன் விஷயத்தில் அல்பம் செய்தாலும் அதை எப்போதும் அதிகம் நினைத்திருக்கை. ஆச்ரிதவத்ஸலத்வமாவது -- ஆச்ரிதர்களிடத்தில் எவ்வளவு குற்றம் இருந்தாலும் அதைப் பாராததுபோல் இருக்கை. ஸௌசீல்யமாவது ;-- தான் எல்லாரையும்விட ஸர்வப்ரகாரத்தாலும் உத்தமனாயிருந்தும் , ஜாதி, குணம், நடத்தை இவை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்தவர்களுடன், ஸஹோதரர்களோடுபோல் பிரியமாகப் பழகுந்தன்மை. ஸௌலப்யமாவது:-- ஆச்ரிதர்கள் நினைத்தமாத்திரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தானே வந்து கிட்டுகை. ஆச்ரிதபாரதந்த்ர்யமாவது :-- தான் ஸர்வேச்வரனாயிருந்தும் ஆச்ரிதர் இட்ட வழக்காக அவர்கள் இடும் ஏவல் தொழில்களைத் தன் மேன்மைக்குத் தகாததாயிருந்தும் மிக அன்புடன் இவ்வளவு கிடைத்ததே என்று செய்வது. இவை முதலான எண்ணிறந்த மஹா குணங்கள் ஸர்வேச்வரனுக்கு ஸ்வபாவ ஸித்தங்கள் என்று ச்வேதாச்வதரோபநிஷத்தில் சொல்லப் பெற்றிருக்கிறது. இவனுக்கு அஜ்ஞானம் ஒருகாலும் கிடையாது.
[ இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான, இங்கு விளக்கப் பெற்றுள்ள ஸர்வஜ்ஞத்வம் முதலான அகில குணங்களும் "த்வயி" என்ற பதத்தில் அநுஸந்தேயம்.]