சனி, 6 ஜூன், 2009

அஹங்காரம் ஸர்வ நாசம்.இந்த மாத "தாம்ப்ராஸ்" இதழில் வந்துள்ள ஒரு உண்மைக் கதை அஹங்காரம், மமதை ஆகியவை எந்த அளவு ஒருவனைச் சீரழித்து இழிவு படுத்தும் என்பதற்கு ஒரு அருமையான பாடமாக அமைந்துள்ளதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதை தட்டச்சிட முடியவில்லை. எனவே படங்களாகத் தந்துள்ளேன். படிக்க சற்று சிரமமாக இருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, 5 ஜூன், 2009

சரணாகதிமாலை

சரணாகதிமாலை முன்னுரை தொடர்ச்சி
ப்ராதிகூல்யவர்ஜநமாவது -- ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அதுவும் இருவகைப்படும். ப்ரதிகூலாபிஸந்தி நீக்குகைமாத்திரமும், ப்ராதிகூல்ய வர்ஜநம் செய்யக்கடவேன் என்று ஸங்கல்பிக்கையும். இவ்விரண்டும் முன்பு போலத் தனித்தனி ஸர்வேச்வரன் விஷயத்திலும், ஸர்வபூத விஷயத்திலும் என்று இரண்டு வகை. ஆகையாலே, பகவதநபிமதவர்ஜநம், ஸர்வபூதா நபிமதவர்ஜநம், பகவதநபிமத வர்ஜந ஸங்கல்பம், ஸர்வபூதாநபிமத வர்ஜந ஸங்கல்பம் என்று இவ்வங்கம் நான்கு வகையாகிறது. இதற்குக் காரணம் முன்பு சொன்ன சேஷத்வஜ்ஞானமே, ப்ராதிகூல்ய வர்ஜந ஸங்கல்பம் அங்கமாகும்போது சேஷத்வஜ்ஞானத்தோடு கூடிய மனத்தினால் அநுஷ்டானத்தில் ஸங்கல்பிக்க வேண்டும். ப்ராதிகூல்யவர்ஜநாபிஸந்தி மாத்ரம் அங்கமாகும்போது மனத்தில் சேஷத்வஜ்ஞானமும் நிஷேத சாஸ்த்ர பர்யாலோசனையும் கூடுகையாலே ப்ரதிகூலாபி ஸந்தியை நீக்கிவைக்கும். இதற்கு விரோதியாவது அசாஸ்த்ரீய ஸேவநம். இதற்கு பலமும் இது அங்கமாம் வழியும் முன்பு சொன்னதேயாகும்.
கார்ப்பண்யமாவது -- ஸ்வா பேக்ஷித பலத்தைப் பெறுகைக்கு வேறோர் உபாயமில்லாமையும் வேறொரு ரக்ஷகன் இல்லாமையும். இது இங்கு சொன்ன ஆகிஞ்சந்யம் அநந்ய கதித்வம் இவைகளை அநுஸந்தித்தலும், ஆகிஞ்சந்யாதிகளை அநுஸந்திப்பதால் வரும் கர்வஹாநி (செருக்கு நீங்கல்)யும், ஸர்வேச்வரனுக்குத் தன் விஷயத்தில் க்ருபை அதிகமாகும்படி தழுதழுத்து அழுதல், பற்களைக் காட்டல்களோடு திருவடிகளில் விழுதல் , கைகூப்பி நிற்றல் முதலிய க்ருபண வ்ருத்தியும் என்று மூன்று வகையாயினும், இம்மூன்றும் ஸமநியதமாகையாலே ஒன்றை அநுஷ்டித்தலாலே மற்ற இரண்டும் அநுஷ்டிதமாகுமாகையாலே இம் மூன்று வகையில் ஏதாவது ஒன்றை அநுஷ்டிப்பதே போதும். இதற்குக் காரணம் தான் அல்பசக்தியென்றும், ஈச்வரனுக்கு பரதந்த்ரன் என்றும் தெளிகை. இதற்கு பலம் வேறுபாயங்களில் ப்ரவர்த்தியாமை. இதற்கு விரோதி தான் ஸ்வதந்த்ரன் என்று நினைத்தல். அப்படி இவன் நினைத்தானாகில் தான் ஸமர்த்தன் என்று ப்ரமித்து உபாயாந்தரங்களில் ப்ரவர்த்திக்கவும் கூடும். ஆகையாலே ஸர்வேச்வரன் ஒருவனே உபாயம் என்று அத்யவஸிக்கையாகிற ப்ரபதநம் கைகூடாது ஒழியும். ஆகையாலே இவ்வழியாயிது அங்கமாகிறது. இதன் பிரிவுகள் மூன்றில் என்கையில் உபாயமில்லை என்று அநுஸந்திப்பது என்னும் கார்ப்பண்யம் கீழ்ச்சொன்ன காரணமான அல்பசக்தித்வ பகவதேக பரதந்த்ரத்வஜ்ஞானத்தோடும் அநுபலப்தியோடும் சேர்ந்த ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் உண்டாகின்றது. கர்வஹாநியென்னும் கார்ப்பண்யமானது, ஆகிஞ்சந்யாநுஸந்தாநத்தாலே உண்டாகின்றது. க்ருபண வ்ருத்தியாகிற கார்ப்பண்யமானது, இவன் ஸம்ஸாரத்திற்கு மிகவும் பயந்தவனாகையாலும், அகிஞ்சநனாகையாலும், ரக்ஷிக்க வல்லனாய் பரமதயாளுவான ஸர்வேச்வரன் விஷயத்தில்தானே உண்டாகிறது.
மஹாவிச்வாஸமாவது -- ஸர்வேச்வரன் நாம் செய்யும் வ்யாபாரத்தை எதிர்பாராமலே (நிரபேக்ஷனாய்) ரக்ஷிப்பவன் என்கிற அத்தியவஸாய (திடநிச்சய)மாம். ப்ரபதநாநுஷ்டாநத்திற்குப் பின்பு ப்ருஹஸ்பதி போன்ற மஹான்கள் யுக்திகளாற் கலக்கினாலும் கலங்காமலும் அணுவேனும் ஸம்சயம் உதியாமலும் இருக்கும்படிக் கேதுவாகத்தக்கதாய் ப்ரபதனம் பண்ணும்போது உண்டாகும் விச்வாஸம் என்று நிக்ஷேபரக்ஷை என்னும் கிரந்தத்தில் நிர்ணயித்துள்ளது. இதற்குக் காரணம் மறுக்கவொண்ணாத புருஷகாரயோகமும், ஒழிக்க வொழியாத சேஷ சேஷிபாவ ஸம்பந்தயோகமும், நிருபாதிகமான காருண்ய வாத்ஸல்யாதி குணயோகமும், வேறொரு ஸஹகாரியை எதிர்பாராதிருத்தலும், தண்ணியரான (அகிஞ்சநரான)வர்களுடைய புருஷார்த்தமே தன் புருஷார்த்தமாய் நினைப்பதுமாகிற எம்பெருமானது ஸ்வபாவத்தை அநுஸந்தித்தல். இதற்கு உபயோகம் ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனுமான ஸர்வேச்வரன் அநந்தமான அபராதங்களையுடைய நமக்குக் கிட்ட எளியனாவனோ? அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலங்கொடுப்பவன் மோக்ஷ விரோதியான பல தீவினைகளையுடைய நமக்கு அளவில்லாத பலத்தைக் கொடுப்பனோ? இதரர் செய்யும் உபகாரத்தை அபேக்ஷியாதவன் அல்ப வ்யாபாரத்துக்குப் பலம் கொடுப்பானோ? தேவதாந்தரங்கள் போலே சீக்ர பலப்ரத னல்லனானவன் நாம் கோரின காலத்திலே பலங் கொடுப்பனோ? என்று பிறக்கும் சங்கைகள் ஐந்தும் நீங்குகை. இச்சங்கைகள் உண்டானால் ப்ரபதநம் கைகூடாது. இவ்வழியால் இது அங்கமாகிறது. இதற்கு விரோதி ஈச்வரன் உபேக்ஷிப்பவன், கர்மாநு குணமாகப் பலங் கொடுப்பவன் என்பவை போன்றவையும் கீழ்ச்சொன்ன சங்கைகள் உதிக்க ஹேதுக்களுமான ஈச்வரனது ஸ்வபாவங்களை அநுஸந்தித்தல். கீழ்ச்சொன்ன புருஷகார யோகம் முதலியவைகளை அநுஸந்திப்பதனால் இச்சங்கைகள் ஐந்தும் நீங்கி ப்ரபதநம் கைகூடும். சங்கைகள் நீங்கும்படியாவது -- ஈச்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே, நாம் செய்த அபராதங்களை அறிந்தவனாயும், ஸர்வசக்தனாகையாலே நம்மை தண்டிக்க சக்தனாயு மிருந்தாலும் தனக்கு ப்ரியதமையான பிராட்டியாகிற மறுக்க வொண்ணாத புருஷகாரத்தாலே மனக்கலக்கம் நீங்குகையாலே அந்தப்புர பரிஜனங்கள் பெரிய குற்றம் செய்தாலும், தன் பத்நிக்காக அதை ராஜா மறந்துவிடுவது போலே நம் அபராதங்களையும் மறந்தவன் போல் க்ஷமித்து நிற்பவனாகையாலே நமக்குக்கிட்ட எளிதாவன் என்றும், நற்கருமங்களுக்கு நற்பயனும், தீக்கருமங்களுக்குத் தீயபயனும்,பெரிய கருமங்களுக்குப் பெரிய பலனும், சிறிய கருமங்களுக்குச் சிறிய பலனும் என்று அவர் அவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலன் கொடுப்பவனேயானாலும், ஒழிக்க வொண்ணாத சேஷ சேஷிபாவாதி சம்பந்தம் உண்டாகையாலேயும், பலம் நமக்குத் தாயம் போல் கிடைக்கக் கடமைப்பட்டிருப்பதனாலேயும், இப் ப்ரபதனம் என்னும் வ்யாஜ மாத்திரத்தாலே ப்ரஸந்தனாய் அளவில்லாத பலத்தையும் தரும் என்றும், இதரர் செய்யும் உபகாரத்தில் நிரபேக்ஷனானாலும் காருணிகனான ராஜா அல்பவ்யாஜத்தாலே வசமாவது போலே நிருபாதிகமான காருண்யம் வாத்ஸல்யம் முதலிய குணங்களை உடையவனாகையாலே இவன் செய்யும் சிலவான வ்யாபாரங்களைப் பரமோபகாரமாக ஆதரித்து க்ருதஜ்ஞனாய்ப் பலந்தரும் என்றும், தேவதாந்தரங்களைச் சிறிது அதிகாரிகளுக்குச் சில பலங்களை த்வரையில் கொடுக்கும்படி நியமித்து வைத்துத் தான் விளம்பித்துப் பலந்தருமவனேயானாலும், அகிஞ்சனன் செய்யும் சரணாகதி விஷயத்தில் "வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு" என்கிறதுபோல ஸஹகாரியை எதிர்பாராத தன் ஸங்கல்பத்தாலே இவன் கோலின காலத்திலே பலங்கொடுக்கும் என்றும், "ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா" என்கிறபடியே ஸமாதிக ரஹிதனேயாகிலும் தான் ஸ்வதந்த்ரனாகையாலும் நம் புருஷார்த்தத்தைத் தன் புருஷார்த்தமாக நினைப்பவனாகையாலும், ராஜாக்கள் தன் பிள்ளைகளுக்கும் கிளி முதலிய பக்ஷிகளுக்கும் துல்யமாகப் பாலூட்டுவது போலவும், "புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே, நற்பால யோத்தியில் வாழுஞ் சராசரம் முற்றவும், நற்பாலுக்குய்த்தனன்" என்கிறபடியே கோசல தேசத்தில் உள்ள புல் பூண்டு முதலாக எல்லாச் சேதனா சேதனங்களுக்கும் மோக்ஷம் கொடுத்தது போலவும், நமக்கும் அளவில்லாப் பெரும் பலந்தரும் என்றும் இம்முறையே கண்டு கொள்வது. இப் புருஷகாராதிகள் ஐந்தும் ஸதாசார்யோபதேசத்தாலே அறிய வேண்டும். இம் மஹா விச்வாஸம் முதலில் சாஸ்த்ரம் ப்ரமாணம் என்னும் நிச்சயத்தால் பிறக்கும் ; மேன்மேல் அந்த ஸம்ஸ்காரத்தாலும் கீழ்ச்சொன்ன சங்காபஞ்சக நிவ்ருத்தி ஹேதுகரமான நிச்சயத்தாலும் ப்ரபதனாநுஷ்டாந காலத்தில் அதுபோலவே மஹா விச்வாஸம் பிறக்கும். ஸர்வேச்வரன் இவனிடத்தில் ஒரு வ்யாஜத்தை வையாமல் ரக்ஷிக்குமானால் வைஷம்யமும் நைர்க்ருண்யமும் வரும் என்பதற்காக ப்ரபத்தி என்று ஒரு வ்யாஜத்தை வைத்து ரக்ஷிக்கிறான். ஆகையாலே நாம் செய்யும் ப்ரபதநம் ஒரு வ்யாஜ மாத்ரம் என்று தெளியவேண்டும். சாஸ்த்ரம் ப்ரமாணம் என்று தெளிந்த போதே ஸம்சயம் நீங்குமாகையாலே அவன் விச்வாஸத்தை உடையவன் ஆகிறான்.அவன் ப்ரபதநம் செய்ய அதிகாரி. ஆகையாலே விச்வாஸம் அங்கமானால் போதுமே, விச்வாஸம் பெரிதாயிருக்க வேண்டும் என்பது என்னவெனில்? தான் மஹாபராதியாய் அபேக்ஷிக்கும் பலம் மஹத்தரமாய் அதற்காகச் செய்யும் உபாயம் லகுவாயிருப்பதனாலே அவ்விஷயமாய் வரும் சங்கைகளை அதற்குத் தக்கபடி நீக்கிக் கொள்ள வேண்டியது கடமையாயிருக்கிறதாகையாலே மஹாவிச்வாஸம் அங்கமாக வேண்டியதாயிற்று என்று ந்யாஸ விம்சதியில் அருளிச்செய்யப் பெற்றுள்ளது. இதற்கு விரோதியாகக் கீழ்ச்சொன்ன ஈச்வரஸ்வபாவஜ்ஞானம் அநுஷ்டான காலத்தில் உண்டாகுமானால் இம் மஹாவிச்வாஸம் அங்கமாகவேண்டும். இல்லையானால் முன் சொன்னபடி விச்வாஸமே அங்கமாகும். அப்போது மஹத்வம் உபயுக்தம் அன்று. ஆனால் பின்காலத்தில் சங்கைகள் பின் நாடாதபடி இவ்விச்வாஸம் திடமாய் நிலை நிற்கும் விஷயத்தில் உபயோகிக்கின்றது, என்பது ஸாராம்சம்.

புதன், 3 ஜூன், 2009

சரணாகதிமாலை

ந்யாஸவித்யையாவது -- ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜநம், கார்ப்பண்யம், மஹாவிச்வாசம், கோப்ருத்வ்வரணம் என்னும் இவ்வைந்து அங்கங்களோடே கூடினதாய், சரணாகதி என்றும், நிக்ஷேபம் என்றும், த்யாகம் என்றும், ப்ரபத்தி என்றும் சொல்லப் பெறுகிற ஓர் வித்யையாம். அஷ்டாங்கயோகம் என்றது போல் இவ்வங்கங்கள் ஐந்துடன் கூடின அங்கியான பரந்யாஸத்தை ஷடங்கயோகம் என்று சொல்லுவார்கள். இது ஸர்வாதிகாரம். வர்ணாச்ரம தர்மம் இதற்கு அங்கமன்று. ஸக்ருத்கர்த்தவ்யம். அந்திம ஸ்மிருதி அபேக்ஷிதமன்று. இந்த ஸரீரம் விட்டபோதே பலம்ஸித்தம் உபாஸநத்தில் சக்தி யில்லாமையும், அதற்கேற்ற ஜ்ஞானமில்லாமை யும், சாஸ்த்ராநுமதமான ஜாதி குணாதிகளில்லாமையும், பலத்தைப் பெறக் கால விளம்பம் பொறாமையும் என்னும் இந்நான்கும் தனித்தும் ஒன்றிரண்டுமூன்று களுடன் சேர்ந்தும் ப்ரபத்திக்கு அதிகாரம் ஆகும். அந்த அதிகாரமாவது 15 பிரிவாகிறது. அசக்தி மாத்திரம் 1. அஜ்ஞாந மாத்திரம் 2. சாஸ்த்ரா நநுமதி மாத்திரம். 3. விளம்பம் பொறாமை மாத்திரம் 4. அசக்தியும் அஜ்ஞாநமும் சேர்ந்து 5. அசக்தியும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 6. அசக்தியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 7. அஜ்ஞாநமும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 8. அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 9. சாஸ்த்ரா நநுமதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 10. அசக்தியும், அஜ்ஞாநமும், சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 11. அசக்தியும், அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 12. அசக்தியும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 13. அஜ்ஞாநமும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 14. அஜ்ஞாநமும் அசக்தியும் சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் இந்நான்கும் சேர்ந்து 15. இப்படி இந்நான்கும் சேர்ந்தால் ஒன்று; தனித்தனி நான்கு; இரண்டிரண்டு சேர்ந்தால் ஆறு ; மும்மூன்று சேர்ந்தால் நான்கு ; ஆகப் பதினைந்து ஆகிறது. இவைகளில் எந்த விதமான அதிகாரம் உடையவனானா லும் ந்யாஸவித்யையில் அதிகாரிதான்.
ஆழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் முதலிய பூர்வாசார்யர்கள் சக்தி, ஜ்ஞாநம், சாஸ்த்ராநநுமதி இம்மூன்றும் உடையவர்களாயிருந்தும் விளம்பம் பொறாமையாலே ப்ரபத்தியில் இழிய வேண்டி வந்தது. ஸ்ரீமந்நாதமுனிகள் யோகம் செய்தருளினதாகச் சொல்வதுண்டு. அது மோக்ஷோபாயமான பக்தி யோகம் அன்று. பகவதநுபவ ரூபமாகையாலும், ஸ்ரீராமாயணாதி பாராயணம் போலே சித்த ஸந்தோஷஹேதுவானகாலக்ஷேப மாத்ரமாகையாலும், த்வய மர்த்தாநுஸந்தாநேந ஸஹஸதைவம் வக்தா என்கிறபடியே த்வய வசநம் போலே பலரூபம்.
ஆநுகூல்ய ஸங்கல்பமாவது -- இனி நான் அநுகூலனாய் நடந்துகொள்ளக் கடவேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அது இருவகைப்படும். எம்பெருமான் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும், ஸர்வபூதங்கள் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும். இதற்குக் காரணம் இவன்தான் ஸர்வேச்வரனுக்கு ஸர்வப்ரகாரத்தாலும், சேஷபூதன் என்று தெரிந்திருக்கை. சேஷபூதன் சேஷிக்கு அநுகூலனாயிருக்க வேண்டியதுபோலே ஸர்வபூதங்களும் தன்னைப்போலே ஸர்வேச்வரனுக்கு சேஷபூதங்களென்றும் அவனுக்கு சரீரபூதங்களென்றும் இவன் அறிந்திருக்கையாலே சேஷியின் சரீரத்துக்கும் இவன் அநுகூலனாயிருக்கவேண்டியது கடமை. இதற்கு பலம்தான் ஈச்வராஜ்ஞை யைக் கடந்தானாகாமை. இதற்கு விரோதி பூதத்ரோஹம். இவன் சேஷியின் ஆஜ்ஞையைக் கடந்தானாகில் "என்னை ஈச்வரன் தண்டிப்பனேயல்லது அங்கீகரியான்" என்று தெரித்து கொள்வன் ; அதனால் ப்ரபத்தியில் ப்ரவர்த்தியான் ; ஆகையால் இவ்வழியாம் இது ப்ரபத்திக்கு அங்கம் ஆகிறது.

இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வேன்.சரணாகதி மாலை

ஒவ்வொரு முறையும் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க நூல்களை அறிமுகப் படுத்தும்போதெல்லாம் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைக்கு ஈடாக அமையும் பந்தல்குடி திருமலைஐயங்காரின் முன்னுரைகளையும் இட நினைப்பதுண்டு. ஆனாலும் நூல்கள் முன்னுரிமை பெற்று அந்த நினைப்பு இதுவரை நினைப்பாகவே இருந்து விட்டது. ஆனால் இன்றுமுதல் தொடங்கும் ந்யாஸதசகத்தின் தமிழ்விரிவுரைக்கு அவர் அளித்துள்ள அற்புதமான முன்னுரை அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதால் முன்னுரையை முதலில் இடுகிறேன். அவ்வப்போது அவர் மேற்கோள் காட்டும் பல நூல்கள் அவர் எப்படிப் பட்ட அறிஞராக விளங்கியிருக்கிறார் என்பதை நாம் அறியச் செய்வன. இனி நூலுக்குள்..

ஸ்ரீ:
சரணாகதி மாலை

முகவுரை

வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி
வாழி யெதிராசன் வாசகத்தோர் -- வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதா ரன்பு.
[ -- தேசிகமாலை, மெய்விரத நன்னிலத்து மேன்மை.1]

உலகில் உள்ள ஒவ்வொரு சேதனனும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டுவன மூன்று.

அவையாவன, தத்வம், உபாயம், புருஷார்த்தம் என்பன. அவற்றுள் தத்வமாவது -- ப்ராமாணிகமான பதார்த்தம். அது சித்து என்றும், அசித்து என்றும், ஈச்வரன் என்றும் மூன்று பிரிவானது என்று வேதங்கள் சொல்லும். சித்து என்பது ஆத்மா. அசித்து என்பது ஞானம் இல்லாதது. அது பிரகிருதி, காலம், சுத்த ஸத்வம் என்று மூன்று பிரிவு பெற்றது. ஈச்வரன் என்பான் ஸர்வ ஜகத்காரண பூதனான நாராயணன். இவற்றின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவதால், ப்ரக்ருதியே ஆத்மா என்றும், ஜீவன் ஸ்வதந்த்ரன் என்றும், ஜீவனும் ஈசுவரனும் ஒன்றே என்றும் உண்டாகும் கலக்கங்கள் நீங்கும்.
புருஷார்த்தமாவது -- புருஷனால் அர்த்திக்கப்படும் பலம். அர்த்தித்தல் -- யாசித்தல், அபேக்ஷித்தலாம். அது த்ரிவர்க்கம் என்றும், அபவர்க்கம் என்றும் இரண்டு வகை. அறமும், பொருளும், இன்பமும் (தர்மார்த்த காமங்கள்) த்ரிவர்க்கம் எனப்படும். அபவர்க்கமாவது -- வீடு, (மோக்ஷம்) எவ்விதத் துக்கமும் இல்லாத அளவு இறந்த ஆநந்தமே மோக்ஷம். அதாவது, பிரகிருதி சம்பந்தம் அற்றதொரு தேச விசேஷத்திலே அர்ச்சிராதி கதியால் சென்று,"அனைத்து உலகும்உடையஅரவிந்தலோசனனை"என்கிறபடியேஸர்வலோகாதீச்வரனாய், "ஒண்டொடியான் திருமகளும் நீயுமே நிலா நிற்பக், கண்டசதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே" என்கிறபடியே, லக்ஷ்மீ விசிஷ்டனாய்ப் பரப்ரஹ்ம ரூபியான நாராயணனைக் கிட்டி, எக்காலத் திலும் ஸம்ஸாரகந்தம் அற்றவர்களான நித்யசூரிகளோடு ஒக்க, ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்ய பர்யந்தமான பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் செய்கை. இது மீட்சி (புநராவ்ருத்தி) இல்லாத பேரடிமையாம். த்ரிவர்க்கமானது நச்வரமானதும், அளவு உள்ளதும், துக்கம் கலந்ததுமாகையாலும், மோக்ஷம் அநந்த ஸ்திரபலமும், துக்கம் கலக்காத கேவலாநந்தம் ஆகையாலும், அவற்றின் ஸ்வரூபத்தை அறிந்து சேதநன் மோக்ஷத்தையே புருஷார்த்தமாகத் தெளிந்து கொள்வன்.

உபாயமாவது -- தான் கோரிய பலத்தைப் பெறுவதற்காகத்தான் செய்யவேண்டிய கார்யம். பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற விரும்புகிறவனுக்கு உபாஸநமும், ப்ரபதநமும் உபாயம் என்று சாஸ்திரங்கள் கூறும். உபாஸநமாவது -- இயமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யாநம் என்னும் ஏழு அங்கங்களுடன் கூடிய பக்தி யோகம். இவ்வங்கம் ஏழுடன் இந்த அங்கியைச் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்பர். இது ஸத்வித்யை, தஹரவித்யை,வைச்வாநர வித்யை, பஞ்சாக்னிவித்யை முதலாகப் பல பிரிவானது. ஜீவவதை செய்யா(அஹிம்ஸை), மெய்மை(ஸத்தியம்), கள்ளாமை (அஸ்தேயம்), பிறர்பொருள் விரும்பாமை, இவைஇயமம் எனப்படும். தவம், தூய்மை, தத்துவ நூலோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வம் வழிபடல் இவை நியமம் என்ப. ஸ்வஸ்திகம், பாத்மம், வீரம், கோமுகம், மாயூரம், பத்ரம் முதலிய பிரிவுகள் உள்ள இருப்பு ஆஸனமாம். ப்ராணாயாமமாவது -- முன்னம் வலதுகைக் கடைவிரல் ஆழிவிரல்களால் இடது நாசித்துவாரத்தை மூடி வலது நாசி வழியால் பிங்களை யென்னும் நாடியால் முப்பத்திரண்டு மாத்திரை வாயுவை ரேசகம் செய்து, பெருவிரலால் வலது நாசியை மூடி இடையென்னும் நாடியால் பதினாறு மாத்திரை வாயுவைப் பூரகம் செய்து, அறுபத்தினான்கு மாத்திரை கும்பகம் செய்து முன்பு போல ரேசகம் செய்தலாம். ப்ரத்யாஹாரமாவது --பூதங்கள் ஐந்து, தந்மாத்திரைகள் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, ஞாநேந்திரியம் ஐந்து, மனம், அஹங்காரம், மஹத்தத்வம், பிரகிருதி என்னும் இவ்விருபத்தினாலு தத்வங்களையும் பரம புருஷனிடத்தில் உபஸம்ஹாரம் (லயிப்பித்தல்) செய்வதாக பாவிப்பதாகும். தாரணை என்பது இவ்விருபத்திநான்கு தத்வங்களையும் லயிப்பித்தலால் ப்ரக்ருதி ஸம்பந்த லேசமும் அற்ற ஜீவாத்ம ஸ்வரூப ஜ்ஞாநத்தோடே கூட மனம் ஒன்றாலே அறியத்தக்கவனான பரமபுருஷனது திருமேனியில் விஷயாந்தரங்களிற் செல்லாதபடி மனத்தைத் திருப்பி "அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்கண்ணே வைத்து" என்கிறபடியே நிலைநிறுத்தலேயாம். த்யாநமாவது -- பரமாத்ம ஸ்வரூபத்தை தைலதாரைபோல் இடைவிடாது சிந்தித் திருத்தலேயாம். ஸமாதியாவது -- ஜீவாத்மா த்யாநம் செய்வதாகவும், பரமாத்மா த்யாநிக்கப்படுவதாகவும், இவ்விரண்டும் தோன்றாமே பரமாத்மா ஒன்றையே விஷயீகரித்து இடைவெளி விடாதே தைலதாரை போல் சிந்தித்திருத்தலாம்.

பகவத்கீதையில் அருளிச் செய்தவாறே கர்மயோகத்தால் ஜ்ஞான யோகசித்தி பெற்று அதனால் பக்தி யோகம் சித்திக்கப் பெற வேண்டுமாகையாலும், இதில் த்ரைவர்ணிகர்க்கு மாத்திரமே அதிகாரமாகையாலும், வர்ணாச்ரம தர்மங்கள் இதற்கு அங்கமாயிருக்கையாலும், பலம் கைகூடும் அளவும் அநுஷ்டிக்கவேண்டுமாகையாலும், இதற்கு அந்திமஸ்மிருதி அபேக்ஷிதமாயிருக்கை யாலும், இதனால் பெறக்கடவதானால் மோக்ஷம் ப்ராரப்தாவஸாநத் திலே யாகையாலும், ப்ராரப்தங்கள் எல்லாம் எந்த ஜன்மத்தில் கழியுமோ அதை அறிய முடியாதாகையாலும், அதற்கு சக்தியும் ஜ்ஞானமும் அதிகமாக வேண்டுமாகையாலும், அதில் அதிகாரம் இல்லாதவர்கள் ந்யாஸவித்யையில் இழிந்து பலத்தைப் பெறுவார்கள்.

ந்யாஸ வித்யையாவது --
.........(தொடரும்)

செவ்வாய், 2 ஜூன், 2009

சரணாகதி

மிக நன்றாகவே தெரிகிறது. ஒர் எழுத்தும் அறியாதானாகிய அடியேன்  வைணவம் வல்லார் நிறைந்திருக்கும்  பேரவையில் அவ்வப்போது ஏதேதோ  எழுதுவது நகைப்புக்கிடமாகும் என்று. ஆனாலும் சிறு குழந்தை உளறுவதை ரசிப்பதைப் போல் அடியேனையும் பொறுப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவ்வப்போது மனதில் தோன்றி தைரியம் ஊட்டும். தவிர  '”உனக்கு ஏது சுய புத்தி ! கையில் கிடைக்கும் பழைய நூல்களைத் தானே இங்கு இடுகிறாய்! அதனால் உனக்குத் தெரியும் என யாராவது தவறாக நினைத்துவிடப் போகிறார்களே என அச்சம் எதற்கு ? நீ ஒரு அச்சுக் கோப்பவன்தானே ! “ஸ்ரீ ரங்கநாத பாதுகாவை அச்சிடுகிற நாராயணனுக்கு அதில் வருகிற சாஸ்த்ரார்த்தங்கள் எல்லாம் முழுதும் தெரியும் என யாராவது நினைப்பார்களா ! பழையவற்றை மீண்டும் அச்சிடும் உன்னையும் யாரும் நிச்சயம் படித்தவன் என தவறாகவே நினைக்க மாட்டார்கள் “ என மனசு ஊக்கமளிக்கும். அவற்றை ஏற்று பழையவற்றை மின்அச்சிடும் பணி தொடர்கிறேன்.

   

என்ன இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ? சிலருக்கு இவனுக்கு எல்லாம் தெரியும் என ஒரு மயக்கம் ஏற்பட்டு, அடியேன் ஸம்ஸ்க்ருதமோ, சாஸ்த்ரமோ ஸம்ப்ரதாயமோ அறியாத துர்பாக்யசாலி என்பது தெரியாமல், அடியேனிடம் தங்கள் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு தொலைபேசி யில் சந்தேகங்கள் கேட்டு நான் “திருதிரு" என விழிக்கும் நிலை அடிக்கடி அனுபவமாதலால்  இது தேவையாகி அடியேன் சரணாக வேண்டியிருந்தது சரணடைந்தோரைக் கண்டிப்பாக நாராயணன் மட்டுமில்லை அவன் அடி போற்றுவோரும் ரக்ஷிப்பீர்கள்தாமே !

திடீரென என்ன சரணாகதி சிந்தனை ? அடியேன் அனுபவித்து இங்கு இடப் போகும் “சரணாகதி மாலை” யின் தாக்கமோ?. “சரணாகதிமாலை” திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடு. “ந்யாஸதசகத்”தின் விரிவுரை. நாளை முதல் …..

இராமாயண ஆசிரிய விருத்தம்

அடியேன்  ஏற்கனவே  மதுரகவி ஸ்ரீநிவாஸய்யங்கார் பற்றி இங்கு கூறியள்ளேன். சுமார் 100 வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம் கம்பம் அறுமந்தன்பட்டியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற மேதை.ஒரு யாமத்தில் ஆயிரம் பொழிந்தவரை ஆசார்யனாகக் கொண்டு அவரைப் போற்றி வாழ்ந்த பெரும் தமிழ் சான்றோன். அதனாலேயோதானோ இவரும் ஏழு நாழிகைக்குள்  “ திருக்கடி நகர் நரசிங்கன் அந்தாதி” என 101 பாடல்களை அனாயாசமாகப் பாடி அனைவரையும் வியப்பிலாழ்த்தினவர். சுமார் 700 வெண்பாக்களால் நளனைப் பாடியதால் வெண்பாவில் புகழேந்தி என்று போற்றப் படுகிறார்.ஆனால் தமிழில் பாடுவதற்குக் கடினமான அந்த வெண்பாவால் இராமாயணத்தையும், பாரதத்தையும் முழுமையாகப் பாடியவர் --- இராமாயணம் 4000 வெண்பாக்களாலும், பாரதம் 11000 வெண்பாக்களாலும் பாடப் பெற்றுள்ளன.--- மிகச் சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்திருந்தார்  என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்தது?  இவைபோக பல தனிப் பாடல்களாக --- வைணவம், மருத்துவம், ஜோஸ்யம் என—இவர் பாடியது --- ரொம்ப ஜாஸ்தி இல்லை – ஒரு லக்ஷம் பாடல்களுக்கு மேலாக இருக்குமாம்.  அவைகளுள் பதிப்பைக் கண்டவை வெகு சிலவே. இராமாயண வெண்பா அவற்றுள் ஒன்று. பல வருடங்களுக்கு முன் திருவல் லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் இவருடைய பல தனிப் பாடல்களை வெளி யிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ப்ராஜக்ட் மதுரை இவரது இராமாயணத்தை மின் பதிப்பாக வெளியிட்டுள்ளது. வெளிச்சம் காணா பலவற்றை அறிந்தவர் தற்போது ஒருவர் மட்டுமே. தீரன் என்று பத்திரிக்கை வட்டாரங்களிலே ப்ரபலமாக அறியப்பட்ட அந்த திரு கோவிந்தராஜனும் இப்போது உணர்வுகள் அடங்கிய நிலையில் படுக்கையில். அடியேனுக்கு மதரகவி நூல் அறிமுகம் வழக்கம்போல் திருவல்லிக்கேணி நடைபாதை பழைய புத் தகக் கடையில்தான். அடியேனது அறியாமையால் பார்த்தும் வாங்கத் தவறியது  அவரது 108 திவ்ய தேசங்கள் பற்றிய “மதுரகவி திருப்புகழ்'”

4000 வெண்பாக்களால் இயற்றிய இராமாயணத்தை ஆசிரிய விருத்தமாக ஒரே வரியிலும்  சொல்ல முடியும் என அவர் எழுதிய இராமாயணம் பல முறை படித்துச் சுவைப்பதற்காக இங்கே;—

||ஸ்ரீ:||

அனுமந்தநகரம் ஸ்ரீ உ.வே. மதுரகவி

                               

ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி

இயற்றிய

இராமாயண ஆசிரிய விருத்தம்.

உலகமுழு துங்கவிகை யொருநீழ லரசுபுரி

      யுதயன்மர போங்க வந்தோன்

உண்மைநெறி தவறாத வள்ளல்தய ரதன்முனா
     ளுஞற்றுதவ மிதுவா மென
ஒண்டிரைப் பாற்கட லுறக்கம்விடுத் தமல
     முற்றகோ சலை வயிற் றில்
ஊனமறுகேகயன் மடந்தையுத வுங்குமர
      னொண்மதுக் கமழு மந்தார்
ஓதிமித் திரைகுமா ரனுசராய் வரவமர
      ருவகைபெற ராம னாகி
வுபநய முடித்துமறை யோதிவே தாந்தநிலை
      யுள்ளபடி கண்டு தேறி
யுணர்குசிக மாமுனி யுடன்சென்று தாடகைக்
      கோர்கணை விடுத்து மானாய்
உறுகநீ யென்றுமா ரீசனைப் போக்கிமற்

      றொருவனை வதைத் துவாச

மலரடித் துகளினாற் கல்லுருவ மங்கையாய்
      மாறவைத் தேகி மிதிலை
வந்துவளர் கன்னிகா மாடங் கடந்துபோய்
     விரிசிலை முறித் துயிரெலாம்
வாழ்த்துதிரு மாதினை மணந்துவரு நெறியினெதிர்
     மழுவாளி தனையும் வென்று
வன்றனு வணக்கியேழ் புரியினொன் றாகுநகர்
     வாழ்ந்துசிற் றவை வரத்தால்
மணிமுடி துறந்திலக் குவனொடுஞ் சீதைபின்
     வரவுமா நில மிரங்க
வனமருவி வேடர்குல மன்னோடு தோழமை
     வரித்துவெண் கங்கை யென்னு
வானதி கடந்துசித் திரகூட மலையின்முது
    மன்னவ னிறத்தல் தேறா
மாழ்கியுத் தரகரும நூன்முறை முடித்தடியின்
     மராடியை வணங்கு பரதன்


வலனுற வளித்தரிய மாதவர்க் கபயமும்
      வழங்கியத் திரிமுனி வனை
மாமுடி யிறைஞ்சிமுத் தமிழ்முனிவ னருண்முனியும்
      வாளியுங் கொண்டு நெறிவாய்
மண்ணிய விராதனை மடித்து வளமலிபஞ்ச
      வடித்துறை யடைந் துறையுநாள்
வடிவழகு கண்டுமயல் கொண்டசூர்ப் பனகைமுலை
       வார்காது நாசி கொய்து
மானாக வருமாய மாரீச னாவியொரு
      மானாக வாளி யேவி
வைதேகி தனையிரா வணன்வௌவ நொந்துசர
      வங்கருக் குதவி முத்தி
வாள்விழிச் சவரியுரை கொண்டுசுக் கிரிவனவ
     மாகமா லரசு நல்கி
வாலியை யெருக்கியனு மாற்காழி நல்கநெடு
    வாரியைத் தாவி லங்கைத்


தலநக ரடைந்தனை தனைக்கண்டு சாகைத்
     தருப்பொழி லழித் தரக்கர்ச்
சாய்த்தெரி படுத்திமீண் டுரைசெய்து வானரத்
    தானையொ டெழுந்து தென்பாற்
சலதியினில் வருணன்வழி தந்திடத் தனிச்சேது
    தட்டிவரும் வீட ணற்குச்
சரணல்கி வீரத் தசமுகன் கிளையினொடு
    சாகவில் வளைத் தனலிடைத்
தாய்முழுகி யேறவுயர் புட்பக விமானமேற்
   சகலரு மேற வினிதாய்த்
தானெழுந் தொருபரத் துவனமு தருந்திமெய்த்
    தம்பியர்க ளெதிர் கொண்டிடச்
சாகேத நகரெழுந் தருளிநவ ரத்னமய
    தடமுடி புனைந்து ராம
ஜயமெனப் புலவர்துதி சாற்றிடப் புவியரசு
    தாங்குநற் சரித மிதுவே.

ஞாயிறு, 31 மே, 2009

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபானம்அடியேனது வழக்கம்போல, திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க பதிப்பொன்றில் படித்து ரஸித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபாநம்.

[ இது 41ம் பட்டம் அழகிய சிங்கர் அருள்மொழிகளுள் ஒன்று. இதற்கு 43ம் பட்டத்து அழகிய சிங்கர் மணிப்பவள உரை ஒன்று அருளிச் செய்துள்ளார். இவ்விரண்டும் அம்பத்தூர் அறநெறி அரங்கம் வெளியீட்டில் காணலாம். இத்த
மிழாக்கம் ஸ்ரீமான் திருப்பூந்துருத்தி கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களது.]

வெள்ளிய தோர்தெய்வ மண்டபமாம் -- அதில்
விளங்குந் தூண்களோர் நான்குளவாம்
ஒள்ளிய பொன்றிக ழூசலுண்டாம் -- அது
ஒளிவிடும் நவமணி குயின்றதுவாம். (1)

பொன்றிகழ் பீடமும் சேர்த்துளதாம் - அதில்
பூமக ளார்வன் வீற்றுளராம்.
தன்சரண் சார்வதோ ராசையினால் - சாரும்
தமர்கள்தாம் பற்றுதற் கேற்றவண்ணம் (2)

நீட்டிய பாதத்திற் பாதுகையாம் -- அதை
நேசமாய்க் கருடன்றான் தாங்கிநிற்பான்.
தேட்டமா மிவ்வலத் திருவடியை -- எண்ணும்
திருவுடை யார்பவக் கடல்கடந்தார். (3)

மடக்கிய திருவடி மற்றொன்றது -- செழு
மலர்மக ளெழுந்தருள் பீடமாகும்.
கடக்கரும் பவக்கடல் கடப்பதற்கு -- அவர்
கணுக்கால்கள் வாய்த்ததோர் தெப்பமாகும். (4)

முழந்தாள்க ளிரண்டும்மிக் கெழிலுடைத்தாம் -- அவர்
முன்றொடை கதலியின் தண்டுநிகர்.
மழுங்காத வழகுடன் கடிவிளங்கும் -- பொன்
மணிக்காஞ்சி பீதக வாடைசூழ. (5)

புரைதீர்ந்து விளங்கிடும் நாபிமலர் - இப்
புவனிக்கெ லாமது பிறந்தகமாம்.
திரையாடு கடல்தந்த மாமகள்வாழ் - அவன்
திருமார்வுக் கலங்காரம் திருமறுவாம். (6)

நரசிங்கன் கண்டத்துக் கலங்காரம் -- ஒளி
நலமிக்க கௌஸ்துப மாமணியாம்.
திருவங்கு மடிதன்னி லிடப்பாகத்தில் -- வீற்றுத்
தேவனார் அணைந்திட மகிழ்ந்திடுவாள் (7)

மார்புற வணைந்தங்கு வீற்றிருப்பாள் -- அலை
மாக்கடல் பூத்ததோர் மடக்கொடிதாள்.
சார்புறத் தானின்ற வண்ணமதை அவர்
சரணக்கு றிகாட்டுங் கையுணர்த்தும். (8)

அங்கையொன் றபயத்தைக் காட்டிநிற்கும் -- இரு
அழகிய நீண்டபெ ரும்புயங்கள்.
சங்கமும் சக்கரமும் தாங்கிநிற்கும் -- முகம்
தாமரை நாண்மலர் போன்றுளதாம். (9)

பற்பல வண்ணவில் வீசுமணி -- அங்குப்
பகலவன் காந்திபோல் சோதிதிகழ்
நற்கன கம்முடி சாற்றினராம் -- திரு
நரசிங்க னெழிலுடை முடிக்கணியா. (10)

மேற்புறம் பொன்மயப் பணியரசாம் --அவர்
மிக்கசெஞ் சோதிநற் பணிமுடியால்
நாற்புறமும் விரிந்துநற் குடைகவிப்பார் -- மேலே
நலமிகப் பொற்ப்ரபை விளங்கிடுமாம். (11)

பொன்மய மாம்சத்ரம் மேலுண்டு --அது
புரையற்று நலமிக்கு விளங்கிடுமாம்.
தன்மடி மேற்றிரு மாமகளை -- இடத்
தாமரைத் திருக்கண்ணால் நோக்கிடுவார். (12)


வலதுதி ருக்கண்ணால் பத்தியொடு -- ஆங்கே
வந்தெதிர் நிற்பாரை யாதரிப்பார்.
பொலன்மாலை கண்டத்திற் பூண்டிருப்பார் -- மற்றும்
பூஷணம் பற்பல தரித்திருப்பார். (13)

சாலக்ரா மத்தாலே மாலையுண்டாம் -- இன்னும்
ஸ்வர்ணத்தால் யஜ்ஞோப வீதமுண்டாம்
மாலுக்க லங்காரம் காசுமாலை -- முத்து
மாலைகள் சம்பக மாலையுண்டாம். (14)

மதிப்புக் கடங்காத விலைபெற்றதாம் -- காஞ்சி
மட்டற்ற மாணிக்க மிழைத்துளதாம்.
துதிப்பார்க் கநுகூலம் செய்பவராம் -- ஹரி
தொண்டரைப் புரப்பதில் தீக்ஷிதராம். (15)

மாலோல தேவனைக் கருதுவார்க்கு --அடி
மலர்முதல் முடிவரை யெண்ணுவார்க்கு
மாலோலன் திருவடிப் பத்திதன்னை -- மிக
மட்டற்று வளர்த்திடும் பெற்றியதாய்
மாலோல சடகோப யோகிவரர் -- பெரு
மகிழ்ச்சியால் ஸோபான மியற்றித்தந்தார். (16)

எத்தனை எத்தனை இழந்தோம் நாம் !

31/5/2009 தேதியிட்ட "தினமணி கதிரில்" படித்தது.


மறையும் மரபு: கேட்கக் கூடலையே கெத்து வாத்தியம்!

நாம் நமது நெருங்கிய உறவினர்களையே பல நாட்களாகப் பார்க்க வாய்ப்பில்லாதபோது, சந்திக்கும் நம் சிறுவர்களுக்கு, ""இது நம்ம சித்தப்பாடா... அது நம்ம பெரியப்பாடா.. நீ பார்த்ததில்லை. அதனால்தான் உனக்குத் தெரியவில்லை'' என்று அறிமுகப்படுத்துவதுண்டு. அதுபோலத்தான் நாம் இப்போதைய சங்கீத ரசிகர்களுக்கு "கெத்து' வாத்தியம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதனை அகத்திய முனிவர் தனது வழிபாட்டின்போது வாசித்ததாகக் கூறுவர். இந்த கெத்து வாத்தியம் பண்டைக் காலத்தில் "ஜல்லிரி', "ஜல்லி' என்றெல்லாம் கூட அழைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ சுப்ரமண்ய சகஸ்ர நாமத்தில் "ஜல்லரி வாத்ய சுப்ரியாய நம' என்றும், முத்துசாமி தீட்சிதரின் கிருதியில் "ஜல்லி மத்தள ஜர்ஜர வாத்ய' (துவஜாவந்தி ராகம்) என்றும், பழைய குமாரதந்திரம் குறிப்புகளிலும் இப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோயில்களில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள்:

இடைக்காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கெத்து இசைக்கருவி திருக்கோயில்களில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாகத் திருக்கோயில்களின் வழிபாட்டில் ஒத்து, நாகசுரம், முகவீணை, திருச்சின்னம், எக்காளம், கெüரிகாளம், கொம்பு, நவுரி, துத்தரி, சங்கு, புல்லாங்குழல் போன்ற காற்றுக் கருவிகளும், பலி மத்தளம், கவணமத்தளம், சுத்த மத்தளம், தவில், பேரிகை, சந்திரப் பிறை, சூரியப் பிறை, செண்டை, இடக்கை, டமாரம், டங்கி, டமாரவாத்தியம், தவண்டை, ஜக்கி, ஜயபேரிகை, தப்பு, கனகதப்பட்டை, மிருதங்கம், மத்தளம் (முட்டு), நகார் (நகரா), பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், திமிலை, வீரகண்டி, வான்கா, தக்கை, கிடிகிட்டி போன்ற தோற்கருவிகளும், தாளம் பிரம்மதாளம், குழித்தாளம், மணி, கைமணி, கொத்துமணி, கோயில்மணி (ஓங்கார மணி), சேகண்டி (சேமக்கலம்) போன்ற உலோகக் கருவிகளும், வீணை, கெத்து போன்ற நரம்புக் கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. இதில் கெத்து இசைக் கருவியின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்ததாகும்.
அஷ்டாதச வாத்தியங்கள்

திருக்கோயில்களின் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 வகையான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். இவற்றில் மங்கள இசைக்கருவிகளில் 18 வகை உண்டு. அவை ஜோடி நாகசுரம், ஒத்து, சுற்றுத்தவில், மந்தத் தவில், டங்கா, கிடிகிட்டி, சக்கர வாத்தியம், பம்பை, மகா தமருகம், நகரா (முரசு), மகா, பேரி(உடல்), தவண்டை, மகா சங்கம் (சங்கு), சிகண்டி, சங்கீரணதாளம், நகரா தாளம், பேரி தாளம், பாணி (கைத்தாளம்) முதலியனவாகும். மேலும், செய்யூர் என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலில் "சர்வ வாத்தியம்' என்னும் பெயரில் 18 வகையான காற்றுக் கருவிகளும், தோல் கருவிகளும் இணைத்தும் தனித்தும் வாசிக்கப்படுகின்றன. அவை திருச்சின்னம், பூரி, தவளைச் சங்கு, நபூரி, முகவீணை, நாகசுரம், ஒத்து, பெரிய மேளம் (நாகசுரக் குழு), தகோர வாத்தியம் (நாகசுரமும், டமாரமும்), பங்கா (வங்கா), பஞ்சமுக வாத்தியம், டமாரம், ஜல்லரி, ஜெயபேரிகை (முரசு), நகரா (முரசு), டங்கா, தமுர் வாத்தியம், ராஜவாத்தியம், சர்வ வாத்தியம் (மேலே குறிப்பிட்ட அனைத்தும்) வாசிக்கப்படுகின்றன. இதில் செய்யூர் திருக்கோயிலில் வாசிக்கப்படும் சர்வ வாத்தியத்தில் "ஜல்லரி' என்று இந்த கெத்து வாத்தியம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இப்பொழுது வழிபாடுகளின் போது அவ்வளவாக வாசிக்கப்படுவதல்லை. மேலும் மறைந்து கொண்டும் இருக்கின்றன எனலாம்.

கோயிலில் கெத்து வாத்தியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் இந்த "கெத்து' வாத்தியம் தினசரி வாசிக்கப்படுகின்றது. அங்குள்ள ஸ்ரீ யோகாம்பிகை சந்நிதியில் தினசரி மாலை நேர பூஜையின் போது இதனை முறைப்படி வாசித்து வருகின்றனர். கி.பி.1600 ஆம் ஆண்டிற்குட்பட்ட ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இந்த ஜல்லரி வாசிக்கும் கைங்கர்யம் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குள்ள தெய்வம் ஸ்ரீ யோகாம்பிகை யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். எனவே, சாயங்கால பூஜையில் மென்மையான இசையைத் தரும் வீணையும் அதற்குப் பக்க வாத்தியமாக இந்த கெத்து வாத்தியமும் அங்கு வாசிக்கப்படுகின்றது. தஞ்சை சோழ மன்னர்களும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இதற்காக நிலங்களைத் தானமாக வழங்கி (சர்வ மான்ய தானம்) சன்னதி கைங்கர்யமாக இந்த ஜல்லரி கைங்கர்யம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கெத்து இசைக்கருவியின் அமைப்பு
இது வீணையைப் போன்றோ அல்லது தம்புராவைப் போன்றோ பார்வைக்கு இருக்கும். ஆனால் அமைப்பில் கோட்டு வாத்தியம் போன்று, அதாவது மெட்டுக்கள் (மேளம்) எதுவும் இல்லாமல் இருக்கும். வீணையை வாசிப்பவர் மடியின் மீது படுக்க வைத்த நிலையில் வைத்துக் கொண்டு வாசிப்பார். ஆனால் இந்த கெத்து வாத்தியத்தை தனக்கு முன்னால் சமதரையில் வைத்துக் கொண்டு வாசிக்கின்றனர். வீணையில் குடத்தைப் போன்றே அதன் மறுமுனையில் சுரைக்குடுக்கை தாங்கிக்காகப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் பின்பு யாளி முகம் கீழ்நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கெத்து இசைக்கருவியில் சுரைக்காய்க்குப் பதிலாக யாளி முகத்தின் பகுதி தண்டியிலிருந்து கீழ்நோக்கிச் சென்று தாங்கியாகவும் பின்பு மேல்நோக்கி யாளி முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும். இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறிய குச்சிகளை கையில் பிடித்துக் கொண்டு கம்பிகளின் மீது தட்டி இதனை வாசிப்பர். 2 குச்சிகளின் அடியிலும் 2 வெங்கல வெண்டயங்கள் பொருத்தப்பட்டு சலங்கை ஒலியையும் வெங்கல நாதத்தையும் குச்சிகள் உண்டாக்கும். இடது கைக்குச்சி (25 செ.மீ. நீளம்) மத்தியில் தட்டி வாசிப்பதற்கும் , வலது கைக்குச்சி (32செ.மீ. நீளம்) குடத்தின் மேலுள்ள குதிரையின் அருகில் தட்டி வாசிப்பதற்கும் ஏற்றார்போல் வாசிப்பவர் அமர்ந்திருப்பார். கச்சேரியில் மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்கட்டுகளும் ஜதிகளும் இந்த கெத்து வாத்தியத்தில் லாகவமாகத் தட்டி வாசிக்கப்படும். இக்கருவி லயச் சொற்களின் கன-நய-ஒலி வேறுபாடுகளுடன், தந்தியின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்பொழுது எவரையும் எளிதில் கவரும் தன்மையுடையதாக இருக்கும். இது பார்ப்பதற்குத் தந்திக் கருவியாக இருந்தாலும் வாசிக்கும் முறையில் ஒரு தாளவாத்தியக் கருவியாக உப பக்க வாத்தியமாகப் பயன்பட்டு வந்துள்ளது.
கெத்து வாசித்த இசைக் கலைஞர்கள்
இந்த கெத்து இசைக் கருவியை தஞ்சை சமஸ்தானக் கலைஞர்களான சேசையா சுப்பையா சகோதரர்களும் சுப்பையா குப்பையா சகோதரர்களும் பழங்காலத்தில் வாசித்துள்ளனர். மேலும் கிருஷ்ணபாகவதர்(கி.பி.1803), சுப்பராம ஐயர் (கி.பி.1906) போன்றோர்களும் இதனைச் சிறப்பாக இசைத்துள்ளனர். சமீப காலங்களில் சீத்தாராம பாகவதரும் அவர் மகன்களான வீராசாமி ஐயர் மற்றும் அரிகர பாகவதரும் (1895-1976) இதனை வாசித்துள்ளனர். தற்காலத்தில் அரிகர பாகவதரின் மகன்களான சீதாராம பாகவதர் மற்றும் சுப்ரமண்ய பாகவதர் இந்த "கெத்து' வாத்தியத்தை மிகவும் சிறப்பாக வாசித்து வருகின்றனர் என்றாலும், எதிர்காலத்தில் இந்த கெத்து இசைக் கருவியை வாசிக்க ஆள் இல்லை என்பதுடன், இசைக் கச்சேரிகளில் இந்த கெத்து இசைக்கருவி முற்றிலுமாக மறைந்தும் போய்விட்டது என்பதே உண்மை நிலையாகும்.