முப்பத்து மூன்றாவது சர்க்கம்.
[ ராவண குமாரனான மேகநாதனுக்கும், இந்திரகுமாரனான ஜயந்தனுக்கும் யுத்தம், தோல்வியைத் தழுவிய ஜயந்தனை, அவனது மாதாமஹன் எடுத்துக்கொண்டுபோய் ஸமுத்திரத்தில் மறைதல், ராவணனுக்கும் தேவேந்திரனுக்கும் நடைபெற்ற யுத்தம்.]
ஸுமாலி கொல்லப்பட்டதும், ராவண ஸைன்யம் நான்கு பக்கங்களிலும் ஓடி ஒளிந்தது. அதைக்கண்ட ராவண குமாரனான மேக நாதன் மிகுந்த கோபத்துடன் தனது பெரும்படையைக் கொண்டு தேவஸேனையை எதிர்த்தான். அக்கினியைப் போல் ஜ்வலிப்பதாயும். இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் தன்மையை உடையதுமான உயர்ந்த ரதத்தில் அமர்ந்த மேகநாதன், தேவர்களின் படையில் புகுந்து, உயர்ந்த மரக்காட்டை அக்கினியானது அழிப்பது போல் தேவர்களை நாசஞ்செய்ய ஆரம்பித்தான். அனேக விதங்களான அஸ்த்ர சஸ்த்திரங்களைப் பிரயோகிக்கின்ற அவனை எதிர்க்கச் சக்தியற்றவர்களாகத் தேவர்கள் பயந்து ஒடினர். இப்படி ஓடுபவர்களைக் கண்ட தேவேந்திரன். "வீரர்களே! ஓடாதீர்கள், பயப்படாதீர்கள், திரும்பி வாருங்கள். இதோ எனது குமாரனான ஜயந்தன் போர்முனைக்கு வருகிறான். அவன் பிறரால் ஜயிக்க முடியாதவன் என்பதை அறிந்திடுங்கள்" என்று கூறினாள்.
உடனே ஜயந்தனுடன் கூடின தேவஸேனையானது. திரும்பி வந்து மேகநாதனை எதிர்த்தது. இரு படைகளுக்கும் பயங்கரமான போர் நடந்தது. மேகநாதன் மாயாயுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவன் விடுத்த மாயையினால் மயங்கியப் படையினர் தம்மைச் சேர்ந்தவர் - பிறரைச் சேர்ந்தவர் என அறிய முடியாதவர்களாக ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். மாயையால் மோகத்தை அடைந்த இந்திரகுமாரனான ஜயந்தனை அவனது மாதாமஹனான புலோமா என்பவன் தூக்கிக்கொண்டு சென்று, ஸமுத்திரத்தில் பிரவேசித்து விட்டான். இவன் இப்படி எடுத்துச் செல்லப்பட்டதை அறியாத தேவர்கள், ஜயந்தன் காணப்படாததால் அவன் நாசத்தை அடைந்தான் என்று நினைத்தவர்களாய், மனக்லேசமடைந்தவர்களாக யுத்த களத்தை விட்டுச் சென்றனர். இப்படி ஓடுகின்ற தேவர்களை, மேன் மேலும் பாண வர்ஷங்களால் துன்புறுத்திக்கொண்டே பின்தொடர்ந்தான் மேகநாதன்.
தனது குமாரன் காணப்படாததையும், மேகநாதனின் செய்கையையும் கண்ட தேவேந்திரன், வேகத்துடன் மாதலியை அழைத்து ரதத்தை ஸித்தப்படுத்தச் சொல்லி அதன்மீது அமர்ந்து யுத்தத்திற்குப் புறப்பட்டான். அப்போது மின்னலுடன் கூடிய மேகங்கள் இடி முழக்கம் செய்தன. தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும், நர்த்தனம் செய்தனர். ருத்ரர்களும், ஆதித்யர்களும், வசுக்களும், ஸாத்யர்களும், மருத்துக்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். அனேக ஆயுதம் தரித்து வீரர்களும் உடன் சென்றனர்.
அதே சமயம் கடுங்காற்று உண்டாயிற்று. சூரியன் ஒளியிழந்து காணப்பட்டான்.. ஆங்காங்கே கொள்ளிக் கட்டைகளும் விழுந்தன.
ராவணன் தனது மகனான மேகநாதனைத் தடுத்துவிட்டுத் தானே இந்திரனை எதிர்க்கச் சென்றான். விச்வகர்மாவால் நிர்மாணம் செய்யப் பட்டதும், உத்தமமானதும், பயங்கரமான பக்ஷிகளாலும், பெரிய பாம்புகளாலும் சூழப்பட்டதுமான தேரில் ஏறியவனாய் அனேக வீர ராக்ஷஸர்களுடன் கூடி ஸமரபூமியை அடைந்தான். இரு ஸைன்யங்களும் ஒன்றையொன்று எதிர்த்தன. கும்பகர்ணன் யுத்த வெறி கொண்டவனாகி நம்மவர் பிறர் என்று அறிந்திடாமல் எதிர்ப்பட்ட அரைவரையும் கால்களால் நசுக்கியும், கைகளால் கிழித்தும், பற்களால் கடித்தும் வதைத்தான்; கொன்றும் குவித்தான். மஹாகோரமாக ஹிம்ஸிப்பவனான கும்பகர்ணனை ருத்ரர்கள் எதிர்த்து வந்து யுத்தம் செய்தார்கள். அவர்களுடைய ஆயுதங்களால் அடிக்கப்பட்ட கும்ப கர்ணன், உடலில் பதிந்து காணப்படும் அஸ்திரங்களுடனும், இரத்தம் பெருக்குடனும், கர்ஜிப்பவனுமாக, பெரிய மழைத் தாரையைப் பொழிந்துகொண்டு கர்ஜிக்கும் நீலமேகம் போன்று காணப்பட்டான்.
மருத்துக்களால் நானாவித சஸ்திரங்களால் தாக்கப்பட்ட அஸுரர்கள் கலக்கமடைந்தனர். சிலர் வெட்டுண்டவர்களாகக் கீழே விழுந்து துடித்தனர். வாகனத்தின் மீது அமர்ந்தவர்களாகவே சிலர் மாண்டனர். சிலர் கைகளால் தேரைப் பிடித்தவர்களாகவும், யானையைப் பற்றியவர்களாகவும், சிலர் குதிரைகளைக் கட்டி யணைத்தவராகவும் பட்டார்கள். தேவர்களுடைய தாக்குதலை ஸஹிக்கமாட்டாத சிலர் சுற்றிச் சுற்றி ஓடினர். அரக்கர்களுடைய இந்தச் செய்கை காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இரத்த நதியானது அங்கே பிரவகித்தது.
யுத்தத்தில் தனது ஸைன்யம் நாசமடைவதைக் கண்ட தசானன் மிக்க கோபங் கொண்டவனாகத் தேவர்களை எதிர்த்து அதிவேகமாக இந்திரன் முன்னே வந்தான். ராவணனைக் கண்ட தேவேசன் தனது பெரிய வில்லில் பரணங்களை பூட்டி, அக்கினிக்கு நிகரான அவைகளால் ராவணனுடைய தலைமீதுப் பிரயோகித்தான். ராவணனும் அனேக பாணங்களால் தேவேந்திரனை அடித்தான். இப்படி ஒருவருக் கொருவர் செய்த பாணப்ரயோகங்களால் திக்குகள் மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது.
முப்பத்து நான்காவது ஸர்க்கம்
(யுத்தத்தில் தேவேந்திரன் ராவணனைக் கட்டுதல், அது கண்டு கோபமடைந்த மேகநாதன் இந்திரனைக் கட்டி இலங்காபுரிக்குக் கொண்டு செல்வது.]
இருள்சூழ்ந்த அந்தச் சமரபூமியில், ராவணன், தேவேந்திரன், மேகநாதன், ஆகிய மூவர் மட்டுமே மற்றவர்களைக் கண்டனர். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள முடியவில்லை. அந்த யுத்தத்தில் ராக்ஷஸ ஸைவ்யத்தில் பத்தில் ஒரு பாகமே மிகுந்தது. மற்றவை அழிக்கப்பட்டு விட்டன. அது கண்ட ராவணன் மிகுந்த கோபம் உடையவனாகி, ஸாரதியைப் பார்த்து, " ஸாரதியே ! நீ இப்பொழுது எனது ரதத்தை இந்தத் தேவ ஸைன்யத்தின் முடிவு பாகத்தைக் குறித்துச் செலுத்து. இந்த ஸேனையின் ஆரம்ப ஸ்தலம் இதுவாகும். முடிவு ஸ்தலமாவது 'உதயகிரி'யாகும். அவ்விடம்செல், சீக்கிரம் செல'' என்றான். இந்திரனின் கண்களிற்படாமல் நின்று கொண்டு தேவஸேனையைத் தாக்கி அழிக்கலாம் என்பது அவனுடைய எண்ணம். இதைக் கேட்ட ஸரதியும் அவ்வாறே செய்தான்.
ராவணனுடைய இந்தத் தீர்மானத்தை அறிந்து தேவேந்திரன் தேரின் மீது அமர்ந்தவாறே தேவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்.
"தேவர்களே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இந்த வாரணள் கொல்லப்படத்தகாதவன். இவனை உயிருடனேயே பிடிக்கவேண்டும். இவன் அதிவேகத்துடன் தேரில் செல்கிறான். நீங்கள் ஸாவதானர்களாக இருங்கள். பலி சக்ரவர்த்தி அடக்கப்பட்ட பிறகு நான் எவ்வாறு திரைலோக்யாதிபதியாகக் கவலையற்று இருக்கிறேனோ அவ்வாறே ராவணணையும் பிடித்துக் கட்டிக் கவலையற்று வாழ்ந்திருப்பேன். இது எனது எண்ணம்" என்று.
பிறகு இந்திரன் ராவணனைப் பின் தொடராமல் ராக்ஷஸ ஸைன்யத்தை எதிர்த்து யுத்தம் செய்தான். ராவணன் வடப்புறமாக சென்று ஸேனையின் கடைசிப் பாகத்தை அடைந்தான். இந்திரன் தென்புறமாகச் சென்று செருச் செய்தான். ராவணன் நூறு யோஜனை தூரம் சென்று திரும்பியவனாய் தேவஸேனையை ஹதம் செய்தான். இதைக் கேட்ட இந்திரன், அப்படியே தென்புறமாகவே உதய பர்வதத்தை அடைந்து ராவணனை எதித்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான். தேரின்மீது ஏற்றி வைத்துக்கொண்டான்.
தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்காக!
இந்தப் பகுதியின் கடைசிப் பத்தியில் கடைசி வரிகளில் “ராவணனை எதிர்த்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான்” என்றிருப்பதில் ஏதோ சில வரிகள் விடுபட்டிருக்கின்றன. மூலத்தில் அச்சுப் பிழை. அடுத்த அத்யாயம் இந்திரனை மேகநாதன் கட்டிவைத்தான் என்று வருகிறது. கவனித்துக் கொள்ளவும்.