||ஸ்ரீ||
ஸ்ரீரங்கநாத பாதுகாவின் பழைய இதழ்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 1970களில் வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீராமதேசிகாசார்யார் (ஒப்பிலியப்பன் ஸந்நிதி) ஸ்வாமி எழுதி வந்த “ஸ்ரீபாதுகா சாம்ராஜ்யம்” என்னும் நெடுந்தொடர் ஸ்வாமி தேசிகனின் “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்” நூலுக்கு ஒரு அருமையான சுருக்கமான அறிமுகமாக, படிக்காதவர்களையும் தினமும் பாராயணம் பண்ண வைக்கும் அற்புதமான விளக்கமாக அமைந்திருந்ததையும் படித்து வியந்தேன். பழைய ஸ்ரீரங்கநாத பாதுகா இதழ்களையோ, அவற்றையெல்லாம் தொகுத்து ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் வெளியிட்டுள்ள குறுந்தட்டுகளையோ படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காகவும், முழுவதும் ஒரே நேரத்தில் கொடுத்தால் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காகவும், அந்த நெடுந் தொடரை இங்கு சிறிது சிறிதாக எழுதி வரலாம் என்று நினைத்து பதிவிட ஆரம்பிக்கிறேன். இனி ஸ்ரீ ஸ்ரீராமதேசிகாச்சார் ஸ்வாமியின் “ஸ்ரீபாதுகா சாம்ராஜ்யம்”
|| ஸ்ரீ: ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீ பாதுகா சாம்ராஜ்யம்
(வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீராமதேசிகாசார்ய ஸ்வாமி
ஒப்பிலியப்பன் ஸந்நிதி)
1. முன்னுரை
உலகில் எத்தனையோ கவிகள் வடமொழியில் பற்பல காவ்யங்களையும் நாடகங்களையும் இயற்றியுள்ளார்கள். அவையெல்லாம் வடமொழிக்குச் செய்த அருந்தொண்டே யாகும். அவர்களுள் தலைசிறந்து விளங்கியவர்களாய் மஹா கவிகளென்று நம் தேசிகனாலும் புகழப்பட்ட சில கவிகள் உண்டு. அவர்கள்தாம் காளிதாஸன், பவபூதி முதலியவர்கள். அவர்கள் சில புண்ய புருஷர்களையும் இராமன் முதலிய தெய்வங்களையும் நாயகராக அமைத்து அழகிய கவிகளைப் பாடி உலகுக்குத் தருமங்களை அறிய உதவி புரிந்ததையும் வடமொழியில் புலமை பெற்றவர்கள் அவர்களின் நூல்களையே முதலில் கற்றுத் தேர்ச்சி பெறுவதையும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. இலக்கிய முறையில் அவர்களின் தொண்டு போற்றுதற்கு உரியதேயாயினும் அவர்கள் இலக்கியச் சுவையையே முதன்மையாகக் கொண்டு அதற்கு ஏற்ற சொற்களைத் தொடுத்து நூல்களை இயற்றினார்களே அன்றி, பகவானுடைய பெருமையை விளக்கி மக்களுக்கு நல்வழி காட்டும் தோத்திரங்களின் வடிவத்தில் நூல்களை இயற்றவில்லை. காவ்ய உருவில், நாடக வடிவில், தோத்திர முறையில், தத்துவ விளக்க வழியில், நீதிநெறியில், இன்னும் பலவகைகளில் வடமொழி – தமிழ்மொழி – பிராகிருதம் – மணிப்ரவாளம் ஆகிய மொழிகளில் எம்பெருமானுடைய பெருமையை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு எல்லை கூறமுடியாத அளவுக்கு நூல்களை இயற்றிய மஹா புருஷர் உலகில் ஒருவரே என்பதை உலகம் மகிழ்வுடன் ஏற்கும். அந்த மஹாநுபாவர் நம் வேதாந்த தேசிகனே என்பதைக் கூறவும் வேண்டுமோ?
2. மற்ற காவியங்கள்
ஸ்வாமி தேசிகன் பற்பல பழமொழிகளைக் காட்டிச் சிலேடைச் சொற்களை அமைத்து “ஸுபாஷிதநீவி” என்னும் காவ்யத்தை யும், இராமபிரான் பிராட்டிக்குத் தூது விடும் பொருளைக் கொண்ட “ஹம்ஸ ஸந்தேசம்” என்ற ஒரு சிறந்த காவ்யத்தை யும் , கண்ணனது சரிதையை முழுதும் விளக்கும் “யாதவாப்யுதயம்” என்னும் ஓர் அற்புதப் பெருங்காவ்யத்தையும் அருளிச் செய்து மஹோபகாரம் செய்தருளினார். இவையன்றி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் முதலிய இருபத்தெட்டு ஸ்தோத்ரங்களையும் பல்வகை விருத்தங்களில் அருளிச் செய்து ஆஸ்திகர்களின் அநுஸந்தானத்துக்கு வழி செய்தருளினார். ஸ்வாமி திருவாக்கினின்று அவதரித்த ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தைப் பற்றி இப்பொழுது பேசி மகிழலாம்.
(தொடரும்)