வினா 121.- இப்படிப்பாண்டவர்கள் விருத்தி யடைவதைக்கண்டு யார்யார் என்னென்ன வெண்ணினார்கள்?
விடை.- ஜனங்கள்யாவரும்திருப்தியோடு பாண்டவர்களைப்புகழ்ந்து பேசினர். பீஷ்மர், விதுரர், யுயுத்ஸு, துரோணர், கிருபர் முதலிய தர்மாத்மாக்கள் யாவரும் ஆனந்தித்தனர். ஆனால் திருதிராஷ்டிரனுக்கும், விகர்னனைத்தவிர மற்றைய துர்யோதனாதியருக்கும் அடங்காப் பொறாமை வந்துவிடப் பாண்டவர்கள் ஐவரையும் எப்படியாவது ஒழித்துத் தமது கீர்த்தியை நாட்டி தாம் நிலைபெற வேண்டுமென்று அவர்களுக்குத்தோன்றியது.
வினா 122.- துர்யோதனாதியர் பாண்டவரிடத்தில் இருந்த விரோதத்தை எவ்வாறு முதலில் வெளியிட்டார்கள்?
விடை... துர்யோதனாதியர் திருதராஷ்டிரனோடு ஆலோசித்து பாண்டவர்களை மெதுவாய் வாரணாவதம்(பிரயாகை) என்ற பட்டணத்திற்கு அனுப்பிவிட்டுத் தாம் ஹஸ்தினாபுரியில் தமது கீர்த்தியை நிலை நிறுத்த எண்ணினார்கள். பாண்டவர்களை அடியோடு ஒழிப்பதற்கு அவர்களை வாரணாவதத்தில் புரோசனன் என்ற தச்சனால் முன்னமேயே கட்டப்பட்ட அரக்குமாளிகையில் இறங்கும்படி செய்து, பாண்டவர்கள் நிச்சிந்தையாய் தூங்கும் ஓரிரவில் அந்த மாளிகையைக் கொளுத்தி விடும்படி புரோசனனை ஏவி பாண்டவர்களோடு கூடவே அனுப்பி விட்டார்கள்.
வினா 123.- இதைத்தெரிந்துகொண்டு யார் பாண்டவர்களுக்கு உதவி செய்தது?
விடை.- விதுரர் இதைத் தெரிந்துகொண்டு, முன்பு யுதிஷ்டிரருக்கு மாத்திரம் மிலேச்ச பாஷையில் ஜாடையாக அரக்கு மாளிகையின் ஸ்வரூபத்தையும், அவர்கள் கூடவே வரும் புரோசனனது மோசக்கருத்தையும் வெளியிட்டார்.
வினா 124.- இதைத் தெரிந்துகொண்டு தர்மபுத்திரர் என்ன செய்தார்? புரோசனன் பின்பு என்ன செய்தான்?
விடை... தர்மபுத்திரர் ஒன்றும்தெரியாதவர்போல் குந்தி தனது தம்பிமார் யாவரையும்கூட்டிக்கொண்டு, வாரணாவதம் சென்று அவர்களுக்காகத் தயாராய் இருந்த அரக்கு மாளிகையில் வாஸம்செய்து வந்தார். புரோசனனும் கொஞ்ச காலம் தனது எண்ணப்படி மாளிகையைக் கொளுத்தி விடாது நல்லஸமயம் பார்த்துக் கொண்டு சும்மா விருந்தான்.
வினா 125.- இப்படி இருக்கையில் விதுரர், பாண்டவர்கள் தப்புவித்துக்கொள்ள வேறு என்ன ஏற்பாடுகள்செய்தார்?
விடை... தமக்குத்தெரிந்தவனாயும், நல்ல நம்பிக்கையுடைய வனாயுமுள்ள ஒரு சுரங்கம் வெட்டுபவனை தர்மபுத்திரரிடம் அனுப்பி, இரகஸ்யமாய் அரக்குமாளிகையிலிருந்து கங்கைக்கரை வரையில் ஒரு சுரங்கம் இயற்றி அரக்கு மாளிகையுள் இருக்கும் இதன் வாயை ஒரு கற்பாறையால் அடைத்துவிட்டு, தர்மபுத்திரரிடம் இந்தச்சுரங்கத்தின் ரஹஸ்யங்களைச்சொல்லி வரும்படி கட்டளையிட்டார். மேலும் அவர் கங்கைக்கரையில் சுரங்கத்தின்வாயண்டையில் ஒரு குறிப்பிட்ட இராத்திரியில் தப்பிவரும் பாண்டவர்கள் எளிதில் கங்கையைக் கடப்பதற்காக ஒரு நம்பிக்கையான ஓடக்காரனைத் தனது ஓடத்தோடு இருக்கும்படி செய்து இதையும் யுதிஷ்டிரரிடம் வெகு ரஹஸ்யமாய்த் தெரிவித்தார்.
வினா 126.- யுதிஷ்டிரர் இவைகளைத் தெரிந்துகொண்டு என்ன செய்தார்? பின் என்ன விசேஷம் நடந்தது?
விடை... இவ்விஷயங்கள் யாவையும் பீமஸேனனிடம் சொல்ல, அவன் விதுரரால் குறிப்பிட்ட இரவில் அரக்கு மாளிகையைக் கொளுத்திவிட்டு சுரங்கத்தின்வழியாய் தனது தம்பிமார், தாயார் இவர்களைத் தூக்கிகொண்டு போவதாகத் தீர்மானித்தான். இதே மாதிரி குறிப்பிட்ட நாள் இரவு வரவே புரோசனன் முதலியவர்கள் ஒரு ஸந்தேகமுமின்றி உறங்குகையில், பீமன் கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு அரக்குமாளிகையின் நான்குபுறங்களிலும் நெருப்பை வைத்துவிட்டு, தனது தம்பிமார், தாயார் இவர்களைத் தனது தோளிலும், முதுகிலும், கையிலும் தூக்கிக் கொண்டு, தனது காலால் சுரங்கத்தின் கல்லைப் புரட்டிவிட்டு, அதன்வழியாய் கங்கைக்கரையை அடைந்தான். அங்கு ஓடக்காரன் தயாராய் இருக்க, கங்கையைக் கடந்து அக்கரையில் இருந்த ஹிடும்ப வனத்துட்சென்று பீமன் தனது உறவினர்களை மெதுவான ஓர்இடத்தில் படுக்க வைத்துவிட்டு காவல் காத்து வந்தான்.
வினா 127.- அரக்குமாளிகை தீப்பற்றி எரிந்தபின்பு வாரணாவதவாஸிகள், திருதிராஷ்டிரன் முதலியோர் என்ன செய்தார்கள்?
விடை.- வாரணாவதவாஸிகள், திருதிராஷ்டிரன் முதலியவர்களைப் பழித்தார்கள். திருதிராஷ்டிரன் முதலியோர் அதிக துக்கப்படுவதுபோலப் பாசாங்கு செய்தார்கள். பாண்டவர்களுக்கு வேண்டியவர்கள் துக்கக்கடலில் ஆழ்ந்தனர். விதுரர்மாத்திரம் இவைகளை எல்லாம்பார்த்து துக்கிக்காது மனத்துள் நகைத்து வந்தார். விதுரரைத் தவிர யாவரும் பாண்டவர்கள் அநியாயமாய் இறந்தனர் என்றே எண்ணினார்கள்.
வினா 128.- பாண்டவர்கள் ஹிடும்ப வனத்திற்குப் போனார்களே அங்கு என்ன விசேஷம் நடந்தது?
விடை.- அந்த வனத்துக்கு அதிபதியான ஹிடும்பாஸுரன் மனிதர் வந்திருப்பதாக நாற்ற மூலமாய்த் தெரிந்து கொண்டு தனது தங்கை ஹிடும்பியை மனிதர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்த்துவர அனுப்பினான். அவள்வந்து மஹா கம்பீரமாய் உட்கார்ந்திருக்கும் பீமனைக்கண்டதும் இராக்ஷஸகுணம்போய், அவளுக்குப் பீமனை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணம்வர, பீமனிடம் சென்று அவளுக்குத் தனது தமையனால் வரும்அபாயத்தைத் தெரிவித்து, அவர்கள் தப்புவதற்கு வேண்டிய உபாயம் சொன்னாள். பீமன் இதைக் கவனியாது தைர்யமாய் இருப்பதைக் கண்ணுற்ற ஹிடும்பிக்கு அவனிடம்இருந்த காதல் அதிகரிக்க, பீமனோடு பேசிக்கொண்டே அவனது அழகைப் பார்த்துப் பிரமித்து, அங்கு வெகு நாழிகை தனது தமையனது கட்டளையை மறந்து நின்றுவிட்டாள்.
வினா 129.- இதற்குள் ஹிடும்பன் என்ன செய்தான்? இது என்னமாய்முடிந்தது?
விடை.- வெகு நாழிகை தன்தங்கை வராதது கண்டு, தங்கைக்குப் போனவிடத்தில் என்ன அபாயம்வந்ததோ என்று பயந்து, ஹிடும்பன் கோபமாய் பீமனிருக்குமிடம் வர, அங்கு தனது தங்கை வெட்கத்தோடும், அடக்கத்தோடும்நிற்பதை அவன் கண்டான். உடனே பீமன் தனது தங்கையை ஏதோ மந்திராதிகளால் கட்டிவிட்டான் என்ற எண்ணம்வர ஹிடும்பனுக்கு அடங்காக் கோபம்வந்தது. உடனே பீமனோடு சண்டைக்குப்போனான். கொஞ்சநேரம் இருவரும் சப்தம் அதிகம் உண்டாகாமல் சண்டை செய்து கடைசியில் பீமன் ஹிடும்பனைக் கொன்றான்.
வினா 130.- ஹிடும்பன் இவ்வாறிறந்ததும் ஹிடும்பி கதி என்னவாயிற்று?
விடை- ஹிடும்பனுக்கும் பீமனுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கையில் உண்டான சப்தத்தால் குந்தி முதலானவர்கள் எழுந்திருக்க, அவர்களுக்கு ஹிடும்பி தனது எண்ணத்தை வெளியிட்டு வெகுவாகச்சொன்னாள். அவர்கள் ஹிடும்பியினது வேண்டுகோளுக்கிசைந்து, மத்தியானமெல்லாம் பீமனோடு ஸுகமாய் இருந்துவிட்டு இரவில்பீமனைத் தம்மிடம்கொண்டுவந்து விட்டுவிட வேண்டுமென்று ஹிடும்பிக்குக் கட்டளையிட்டார்கள். பீமனோ தனது தாய்முதலியவர்களது வார்த்தைக்கு இசைந்து, ஹிடும்பிக்கு ஒரு பிள்ளை உண்டாகிறவரையில் அவளோடிருப்பதாகவும், பின்பு போய்விடுவதாகவும் அவளுக்கு வாக்களித்து கொஞ்சகாலம் அவளோடு அங்கேயே ஸுகித்திருந்தான்.
வினா 131.- ஹிடும்பிக்குப் பிள்ளை பிறந்ததா? அந்தப்பிள்ளை என்ன செய்தான்?
விடை.- ஹிடும்பிக்குக் கொஞ்ச காலத்திற்கெல்லாம் பீமனைப்போல் மஹா விரயவானான கடோத்கசன் என்ற ஒரு பிள்ளை பிறந்தான். உடனே கடோத்கசன் பாண்டவர்களிடம்வந்து “நீங்கள்எப்பொழுது காரியார்த்தமாய்என்னை நினைக்கிறீர்களோ அப்பொழுது நான்உங்களுக்கு என்னாலியன்ற ஸஹாயம் செய்யத்தயாராய்வந்துவிடுகிறேன்" என்று வாக்குக்கொடுத்துவிட்டு தனது தாயை கூட்டிக்கொண்டு இஷ்டப்படி அந்த வனத்தில் உலாவிவந்தான்.
வினா 132.- இதன்பின் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்? யார் இக்காலத்தில் இவர்களுக்கு எவ்வாறு உதவி செய்தார்கள்?
விடை.- பாண்டவர்கள் காட்டுவழியாய் போய்க்கொண்டிருக்கையில், இவர்கள் கண்முன் பாட்டனாரான வியாஸ மஹாரிஷி தோன்றி, பாண்டவர்களைத்தேற்றி, இவர்களுக்குப் பிராம்மணவேஷம் போட்டு, பக்கத்தில் இருந்த ஏகசக்ரபுரி என்ற பட்டணத்திற்கு இவர்களை கூட்டிக்கொண்டு போனார். அங்கே தான் மறுபடியும் வரும்வரையில் இவர்களைப் பிராமணர் வீட்டில்இருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வியாஸர்மறைந்தார்.
வினா 133.- பாண்டவர்கள் ஏகசக்ர நகரத்திலிருக்கும்பொழுது என்ன நல்ல காரியம் செய்தார்கள்?
விடை.- குந்தியின்உத்தரவின்படி, பீமன் அவர்களிருந்த விட்டுக்காரர் கொடுத்த சோற்று வண்டியைக் காட்டுக்குக் கொண்டுபோய் அங்கு வயிறார அதில்உள்ள உணவுகளைப் புசித்து, அவ்வுணவுக்காக வெகு பசியோடு வந்த பகாஸுரன் என்பவனோடு வெகு நாழிகை சண்டைசெய்து கடைசியில் அவனைக் கொன்றுவிட்டான். அப்பட்டணத்திற்கு அதுவரையில் பகாஸுரனால் நேரிட்டிருந்த பயத்தை இவ்வாறு பீமன் நிவர்த்தி செய்தான்.
வினா 134.- பகன்யார்? அவன் ஏகசக்ர நகரத்தவரை எவ்வாறு வருத்தி வந்தான்?
விடை. - இவன் ஏகசக்ர நகரத்தருகிலுள்ள 10,000-யானை பலமுள்ள இராக்ஷஸன். இவன் அடிக்கடி பட்டணத்துள்வந்து அங்கு அகப்படுவர் எல்லோரையும் வயிறு நிறைகிறவரையில் தினம் புசித்துவிட்டுப் போவது வழக்கம். இதை ஸகிக்க முடியாமல் அவ்வூரார் பகனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அதன்படி ஊரார் ஒழுங்காய் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்காரராக ஒரு வண்டி நிறைய சோற்றையும் அதற்கு வேண்டிய உபகரணங்களையும் அந்த வண்டியில் கட்டி இருக்கும் எருதுகளையும் அதை ஓட்டும் ஒரு சிறு பிள்ளையையும் பகனுக்கு ஆகாரமாகக் கொடுப்பதாகவும், அதற்குப்பதிலாக பகன் அகப்பட்டவரை புசியாமலும் வேறொருவர் ஊராரை வருத்தாமலும் அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தினம் ஒரு பிள்ளையை இழப்பது என்பது பகனால் ஏற்பட்ட ஒரு பெரிய துன்பமாக ஊரார்எண்ணி துக்கித்து வந்தனர்.
வினா 135.- இவ்விஷயம் குந்திக்கு எப்படித் தெரியவந்தது? குந்தி அப்பொழுது என்ன செய்தாள்?
விடை.- பாண்டவர்கள் அங்கு வாஸம்செய்கையில்அவர்கள் இறங்கி இருக்கும் வீட்டுக்காரன் பகனுக்குச் சோறு படைக்க வேண்டிய தினம்வர, அவ்விட்டுக்காரர்கள் தமது அருமைக்குழந்தை ராக்ஷஸனுக்கு அநியாயமாய் இரையாகி மாளப் போகிறானே என்று கூக்குரலிட்டு அழத்தொடங்கினார்கள். இதைக் குந்தி கேட்டு ஓடிவந்து அவர்களிடம்இருந்து பகனது கொடுமையைத் தெரிந்து கொண்டு அவர்களைத்தேற்றி தனது பிள்ளைகளுள் ஒருவனை அன்றைக்கு வண்டி ஓட்ட அனுப்புவதாகச்சொல்லி பீமனை அன்று வண்டியை ஓட்டிப்போகும்படி ஏற்பாடு செய்து, பகாஸுரனை ஸம்ஹாரம்செய்வித்து, ஏகசக்ரபுரிக்கு நன்மையை உண்டாக்கினாள்.
வினா 136.- ஊரார்பகாஸுரன்எவ்வாறு இறந்ததாக எண்ணினார்கள்?
விடை. - குந்தியின் வேண்டுகோளின்படி அவர்கள் இறங்கி இருந்த வீட்டுப் பிராம்மணர் உண்மையை ஒளித்து யாரோ ஒரு மஹாப்பிராம்மணர் தன்மேல் கருணை கூர்ந்து தமது மந்திர பலத்தால் பகனை ஸம்ஹரித்தார் என்ற வதந்தி உண்டாகிவிட, அது ஊரெங்கும் பரவிற்று. இவ்வதந்தியே ஸத்தியமென ஊரார்நம்பி இருந்தனர்.
வினா 137. இந்த ஸத்கிருத்யம் முடிந்ததும், பாண்டவர்களுக்கு என்ன நல்ல ஸமாசாரம், யார்வந்து சொன்னார்கள்?
விடை... பாண்டவர்கள் இறங்கி இருக்கும் வீட்டில் ஒரு பிராம்மண சிரேஷ்டர் வந்து தமது யாத்திரை விசேஷங்களைச்சொல்லி வருகையில், பாஞ்சால தேசத்தரசனும் துரோணரது ஸ்நேகிதனுமான துருபதனுக்குச் சிகண்டி, திரெளபதி, திருஷ்டத்யும்னன் ஆகிய இக்குழந்தைகள் உண்டான விதத்தையும், அப்பொழுது திரெளபதிக்கு ஸ்வயம்வரம் நடக்கப்போகிறது என்பதையும், எடுத்து வெளியிட்டார்.
வினா 138.- இந்த திரெளபதி, திருஷ்டத்யும்னன்யார்? இவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்?
விடை. துருபதன், துரோணர் தன்னை ஹஸ்தினாபுரியில் அவமானித்த உடன், இரண்டு எண்ணங்களோடு புறப்பட்டு, அதைப் பூர்த்திசெய்ய ஸதா முயன்றான் என்று 119-ம்விடையில்சொல்லியிருக்கிறோம். இதற்காகக் காடெங்கும் திரிந்து ஒரு பிராம்மண சிரேஷ்டரைக் கண்டுபிடித்து அவரால் ஒரு யக்ஞத்தை நடத்தி அந்த யக்ஞகுண்டத்திலிருந்து துரோணரைக் கொல்லத்தக்க திருஷ்டத்யும்னன் என்ற பிள்ளையையும் அர்ஜுனனுக்குத்தக்க கிருஷ்ணை என்ற பெண்ணையும் அடைந்தான்.
வினா 139.- இக்கதைகளைக் கேட்ட பாண்டவர்களுக்கு என்ன எண்ணமுண்டாயிற்று?
விடை.- பாண்டவர்கள் ஐவருக்கும் திரெளபதி ஸ்வயம்வரத்திற்குப் போகவேண்டு மென்று தோன்ற, குந்தியும் இதற்கிசைந்தாள்.
வினா 140.- இந்த எண்ணத்தை யார் எப்படி ஸ்திரப்படுத்தியது?
விடை.- வியாஸர் முன்சொல்லிப்போயிருந்தபடி பாண்டவர்கள் முன்தோன்றி திரெளபதியின் பூர்வஜன்ம சரித்திரத்தில் ஒரு பாகத்தைச்சொல்லி அவளே பாண்டவர்களுக்குப் பெண்சாதியாகப் போகிறாள் என்றும், அவளால் பாண்டவ குலத்திற்கு மேன்மை வரப்போகிறதென்றும் எடுத்துக்காட்டி, பாண்டவர்களது எண்ணத்தை உறுதிப்படுத்தினார்.
வினா 141.- வியாஸர் திரெளபதியின் பூர்வஜன்ம சரித்திரத்தில் எந்த பாகத்தைச் சொன்னார்?
விடை. - திரெளபதி பூர்வஜன்மத்தில் சங்கரரைக் குறித்து தபஸுசெய்து 'எனக்குப் பதிவேண்டும்' என்று ஐந்து தடவை சங்கரரைக்கேட்டதால், பகவான் உனக்கு அடுத்த ஜன்மத்தில் ஐந்து புருஷர் ஏற்படுவார்கள்என்று சொல்லிப்போனதாக உள்ள சரித்திர பாகத்தை வியாஸர் பாண்டவர்களுக்குச்சொன்னார்.
வினா 142.- திரெளபதி ஸ்வயம்வரத்திற்காகப் பாண்டவர்கள் போகையில் என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படித்தீர்ந்தது?
விடை.- இவர்கள் இரவும்பகலும் வழிநடந்து போகையில், இரவில் முன்புறம் அர்ஜுனன் ஒரு தீவட்டியைப்பிடித்துப்போவது வழக்கம். ஓரிரவில் கங்கைக் கரையில்வந்து அதைத்தாண்ட யத்தனிக்கையில், அங்கு ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்த சைத்தரரதன் என்ற கந்தர்வராஜன் இவர்களைத்தடுக்க, மிகுந்த சண்டை உண்டாயிற்று. இதில் கடைசியாக அர்ஜுனன் தனது கையிலிருந்த தீவட்டியில் ஆக்னேயாஸ்திரத்தை மந்திரித்து விட, அது சென்று கந்தர்வராஜனது இரதம் முதலியவைகளைக் கொளுத்தி, அவனைக்கீழே தள்ளியது. உடனே அர்ஜுனன் கந்தர்வனைப்பிடித்துக்கொல்ல யத்தனிக்கையில், அக்கந்தர்வனது பெண்சாதி தன்தமையன் இவர்களது வேண்டுகோளின்படி கந்தர்வராஜனை உயிரை வாங்காது அர்ஜுனன்விட்டுவிட்டான்.
வினா 143.- இப்படித்தோல்வியடைந்ததும்கந்தர்வன்என்ன செய்தான்?
விடை... தனக்கும், அர்ஜுனனுக்கும் ஸ்நேஹம் ஸதா இருக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், மனுவினிடமிருந்து பரம்பரையாய் வந்ததும், ஒருவன் நினைத்தவைகளை யெல்லாம் அவன் கண்முன் கொண்டுவந்து காட்டும்திறனுடையதுமான சாக்க்ஷஷி என்கிற மந்திரத்தையும், தன்னிடமிருந்த மஹா மகிமை வாய்ந்த குதிரைகளையும் அர்ஜுனனுக்கு நல்ல மனதோடு கொடுத்து, அவனிடமிருந்து ஆக்னேயாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டான். இதன்பின்பு அர்ஜுனன் தன்னை ஜயித்ததற்கு அவனது பிரம்மசரியமும், தான் ஸ்திரீ மத்தியத்திலிருந்ததுமே காரணமென்று எடுத்துக்காட்டி, பின்பு பாண்டவர்களுக்கு ஒரு புரோஹிதரால் அரசனுக்குண்டாகும் நன்மைகளை எடுத்துச்சொல்லி, கூடிய சீக்கிரத்தில் ஒரு நல்ல புரோஹிதரை அடைய வேண்டும் என்று அவர்களுக்குப் புத்திமதி கூறினான்.