சனி, 23 செப்டம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ - இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: -
கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.
வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.
ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் --
அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி " என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: --- உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக்.
திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,
ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் --
ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களையுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப்படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.
சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி --
ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு' என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல்குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும்காலையும் - 8- 6, மாலைநண்ணி -9-10, கண்ணன்கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக்காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.
அதர்வா ரஸைச்ச பாதி
ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.
ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.
மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை. இவை மேலே உபபாதிக்கப்படுகின்றன.