4. மழையே ! மழையே! வா, வா!
மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்றால், நாட்டுக்கு விளையும் நலங்கள் குறித்து ஆயச் சிறுமியர் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மழைக்கடவுளும், ‘இவ்வளவு கிருஷ்ண பக்தியுள்ள இவர்களுக்குக் கொஞ்சம் நம்மால் ஆன பணியும் புரிவோம்,புரிந்து பேறு பெறுவோம்’ என்று தானும் ஆலோசிக்கத் தொடங்கி னானாம். இப்படி ஆலோசித்து,’நான் உங்கள் விஷயமாக என்ன பணி செய்யவேண்டும் என்பதை நீங்கள் தயவு செய்து தெரிவிக்கவேணும்’ என்று இவர்களைக் கேட்கிறானாம். இவர்கள் மழைக்கடவுளைப் பிரார்த்திக்க வில்லை; அவன்தான் இவர்களைப் பிரார்த்தித்துப் பாக்கியம் அடைய விரும்புகிறானாம். இப்படி யெல்லாம் தோன்றுகிறது இவர்களுக்கு, நீண்ட வானத்திலே கரும் புள்ளிபோல ஒரு மேகத்தைப் பார்க்கும்போது.
‘மழைக்கடவுளே! நீ ஒன்றும் கையிருப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாத வள்ளல் போல் பொழிய வேணும்’ என்று இவர்கள் சொல்லுகிறார்கள். விண்ணப்பம் செய்து கொள்ளவில்லை; கட்டளை யிடுவதுபோல் பேசுகிறார்கள். ‘கடலுக்குள் புகுந்து அந்த வெள்ளத்தை அப்படியே முழுதும் முகந்துகொண்டு நன்னீராகக் கொட்டவேணும்’ என்கிறார்கள். ‘கொஞ்சமும் லோபம் செய்யக் கூடாது, தெரியுமா?’ என்கிறார்கள்.
மேகத்தினிடையே தோன்றிய அந்த மழைக்கடவுள் தங்களிடம் அடங்கி ஒடுங்கிப் பணி கேட்பதைப் பார்த்து, ‘நீ பொழியும்போது இந்த அடக்க ஒடுக்கங்களை விட்டுவிட வேணும்’ என்கிறார்கள். கடல்நீரை முகந்து கொண்டதும் பெரு முழக்கத்துடன் கம்பீரமாக வான வீதியில் செல்லவேணும் என்கிறார்கள்.
‘உன் அஞ்சன மேனியில் அழகு கறுத்து விளங்க வேண்டும்’ என்கிறார்கள். “ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து” என்கிறார்கள். கண்ணனுடைய கறுப்பழகு பெற்றுத் திகழ வேண்டுமாம் மழைக்கடவுள்.
கண்ணனை ‘ஊழி முதல்வன்’ என்கிறார்கள்;’பத்மநாபன்’என்கிறார்கள். ’வாராய் மழைக்கடவுளே! நீ எங்கள் பெருமானது திருமேனி போலக் கருமை யழகு பூண்டு, அவனது வலது கையிலுள்ள சக்கராயுதம் போல் பளிச் பளிச்சென்று மின்னவேண்டும்’ என்கிறார்கள். ‘பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி’ என்பது இவர்கள் வாக்கு. வலிமையும் அழகும் பொருந்திய தோள் அந்தப் பத்மநாபன் தோளையும் வருணிக்கிறார்கள்.
கண்ணனுடைய அழகிலும் இவர்களுக்கு ஆசை; வலிமையிலும் ஆசை. கண்ணனுடைய மேனி நிறத்தை மேகத்தினிடம் காண ஆசை. வலிமைக்கு அறிகுறியாக அவன் கையிலுள்ள சக்கராயுத த்தை மேகத்தினிடையே மின்னி வரும் மின்னலிடம் காண ஆசை. அப்படியே எம்பெருமானின் இடது கையிலுள்ள வலம்புரிச் சங்கின் முழக்கம் போன்ற இடி முழக்கத்தையும் கேட்க ஆசைப்படுகிறார்கள். “பாழிஅந் தோள்உடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து” மழையைக் கொட்டவேணும் மழைக்கடவுள் என்கிறார்கள்.
மழை அடித்துச் சொரியவேணும் அடைத்துப் பெய்யவேணும் என்றும் ஆசைப்படுகிறார்கள். எப்படி? கண்ணபிரானுடைய கையில் சார்ங்கம் என்ற வில் இருக்கிறதல்லவா? அந்த வில் அம்புகளை உதிர்க்கவில்லை, உதைத்துத் தள்ளுகிறது! ‘மழைக்கடவுளே! நீயும் மழைத்துளிகளை உதிர்த்தால் போதாது’ என்கிறார்கள். துஷ்ட நிக்கிரகம் செய்வதற்காக இறைவனது வில் அம்புமழையை உதைத்துத் தள்ளுகிறதல்லவா?—அப்படித் தள்ள வேண்டும் வானத்திலிருந்து மழைவெள்ளத்தை என்கிறார்கள்.
மழை வளத்தை வரும்புகிறவர்கள் கண்ணனுடைய அம்பு மழையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன? கண்ணனுக்கு அம்பு மழையும் அன்பு மழைதான்! அசுர சுபாவத்தை வேறுவிதமாகத் திருத்த முடிய வில்லை யென்றால் அழித்துத்தானே திருத்த வேண்டியிருக்கிறது! இதைத்தான் ‘மறக்கருணை’ என்கிறார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்க்கும் இறைவன் முடிவில் பயங்கரமான நாச வழிகளாலும் உலகத்தை வாழ வைக்கிறான் என்பர்.
தென்றலாக வீசுகிறவன் சண்டமாருதமாகவும் சீறியடிக்கிறான். சாதுவுக்குத் தென்றல், அசுரனுக்குப் புயல் – புரட்சி! “தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல், வாழ உலகினில் பெய்திடாய்!” என்றுதானே மழைக்கடவுளுக்குக் கட்டளை யிடுகிறார்கள்.
அம்பு மழைபோல் அழியப் பெய்திடாய் என்று சொல்லவில்லை; இறைவனுடைய அம்பு மழைபோல் உலகம் வாழப் பெய்திடாய் என்று இவர்கள் கூறுவது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. “வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழிநீர் ஆட, மகிழ்ந்துஏலோர் எம்பாவாய்” என்றுதான் பாடுகிறார்கள்.
கண்ணனுடைய அருள்போல் – மறக்கருணை போலவும்--- மழை இறங்கி வரவேணும் என்று கூறுகிறவர்கள், கண்ணனுடைய அருளும் இத்தகைய மழைபோல் இறங்கி வரவேணும் என்று ஆசைப்படுகிறார்கள்.
வாழ உலகினில் பெய்திடாய்!
ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழிஅந் தோள்உடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீர் ஆட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்.
மழைக்கு அண்ணலாகிய தேவதையைக் குறித்துச் சிறுமியர்கள் பாடுகிறார்கள். இவர்கள் மழைக் கடவுளைப் பிரார்த்திக்கவில்லை. அக் கடவுளுக்குக் கட்டளையிடுவது போலப் பேசுகிறார்கள். ஆம்! ‘தாழாதே .... பெய்திடாய்’ என்று கட்டளை யிடுகிறார்கள்.
‘மழையே! உலகம் வாழவும், நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் பெய்வாயாக!’ என்று கட்டளையிடுகிறார்கள். கிருஷ்ண பக்தர்களானதால் கண்ணனுடைய மேனி நிறம், சங்கு சக்கரங்கள், வில் அம்பு மழை ஆகியவற்றை நினைவூட்டி, அப்படிப் பெய்யவேணும் என்கிறார்கள். கண்ணனுடைய அம்பு மழைகூட அன்பு மழைதான் என்பது குறிப்பு.