வியாழன், 16 மார்ச், 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி


 சுலோகம் 26
ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே
         க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |
தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்
         ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் ||    .26.
மின்னனைய பூவையொடு மேகமென வீற்றிருக்குந்
தென்னரங்கன் தன்னடியார் சேமமுறத் -- துன்னியமுத்
தாபமெலா மாற்றல் தடங்கோதாய் நீ நோக்கு
மாபலத்தா லன்றோ மகிழ்ந்து.               .26.

பதவுரை
         கோதே-- கோதாய்! ரங்கே -- ஸ்ரீரங்கத்திலுள்ள; ரமையைவபெரியபிராட்டியாராலே; தடித்குணவத: -- மின்னற்கொடியோடுகூடிய; க்ருஷ்ணாம்புதஸ்யகருமேகத்தினுடைய; க்ருபயா -- க்ருபையென்னும்; ஸுவ்ருஷ்ட்யா -- நல்ல வர்ஷத்தால்; கடிதாம் -- கடனை செய்யப்பட்ட; தௌர்கத்யதுர்விஷவிநாசஸுதாநதீம் -- ஸம்ஸாரமென்னும் துர்கதியாகிய கொடிய விஷத்தைப் போக்கும் அம்ருதநதியான; த்வாம் -- உன்னை (உன் திருமொழியை, உன் நீராட்ட ஸரஸ்வதியை; ப்ரபத்யஅவகாஹித்து (சரணம் பற்றி) ; ஸந்த: -- ஸத்துக்கள்; அசிரேணசீக்கிரத்தில்; தாபாந் -- எல்லாத் தாபங்களையும்; சம்யந்தி -- போக்கிக் கொள்கிறார்கள்.
         கோதாதேவியே! பெரியோர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளதும், லக்ஷ்மியாகிற மின்னற்கொடியோடு கூடினதுமான கருத்த மேகத்தினுடைய க்ருபையாகிற நல்ல மழையாலே உண்டாக்கப்பட்டிருக்கிற கெட்ட விஷத்தைப் போக்கடிப்பதில் அமுதநதியான உன்னைச் சரணம் அடைந்து உடனே (ஸம்ஸார) தாபங்களைப் போக்கடிக்கின்றனர்.
அவதாரிகை
         தன் ப்ரியமான நாயகனான ஈச்வரனுடைய நிருபதமான ஈச்வரத்வம் ஸ்வாதந்த்ரியமென்னும் உயிர்நிலையைச் சேதிப்பதாகப் பேசப்பட்டது. இது என்ன அழகு? நாயகனுடைய உயிர் மர்மஸ்தானத்தை ஓர் சதியான நாயகி பிளப்பளோ? இப்படிப் பேசுவது கோதா ஸ்துதியாகுமோ? இதற்கு பதில் கூறுகிறார். பெருமாள் ஈச்வர ஸ்வாதந்த்ரியத்தாலேயே புருஷகாரமான ஆசிரியர்களோடு தம்முடைய க்ருபையால் சேர்த்துவைத்த ப்ரணதியென்னும் வ்யாஜமாத்ரத்தால் ரக்ஷிப்பதென்பதும் ஈச்வரன் திருவுள்ளத்தாலே உள்ளதே. ஆசார்ய ப்ராப்திக்கும் அவள் க்ருபை வேண்டும். கோதை ஆசார்ய தத்துவம். புருஷகார தத்துவம். கடகரான ஆசாரியரை கடிப்பித்து வைப்பது ஈச்வர க்ருபை. ஆகையால் தாமே கடிப்பித்து வைக்கும் புருஷகார சம்பந்தத்தைக்கொண்டு சேதனர் அபராதங்களை மன்னித்து ரக்ஷிப்பதும் ஓர்விதமாக அவர் ஸ்வாதந்த்ரியத்தைச் சேர்ந்ததே. ஈச்வர ஸ்வாதந்த்ரியமே தண்டனைகளைச் செய்யாமல் ரக்ஷிப்பதற்கும் நிதானமாகிறது. பிராட்டியோடுகூடி அவனேதான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால், தன் க்ருபையால், தன் சந்தத்தால் கோதை என்னும் புருஷகாரத்தின் ப்ராப்தியை, ப்ரணதியை கடிப்பித்தான். விபுவின் ஸ்வாதந்த்ரிய விசிஷ்டமான கருணை ரக்ஷணத்திற்கு ஹேது. இப்படிக்கு ஈச்வரன் சந்தமே நிறைவேறுவதால் அவன் ஸ்வச்சந்தத்திற்குக் குறைவில்லை என்கிறார். முன்பு கோதையைப் பல நதிகளாக வர்ணித்தார். இங்கே அவளும் அவள் திருமொழியும் அம்ருதநதீ என்கிறார். விரஜையிலுமுயர்ந்த நதி.
         கோதே -- திருமொழி, திருப்பாவை தரும் கோதாய்! ரங்கே -- அரங்கத்தில்;
         ரமையைவரமணத்தைச் செய்விப்பதையே ஸ்வபாவமாகவுடைய லக்ஷ்மீயாலேயே. கோதையை ஆசிரிய தத்துவமாகச் செய்தது லக்ஷ்மியே.
         தடித்குணவத: -- மின்னலென்னும் கொடியோடு (குணத்தோடு) கூடியவரான. மேகமும் மின்னலும் கூடினால் குளிர்ந்த வர்ஷமுண்டாகித் தாபங்கள் தீரும். பெருமாளும் பெரியபிராட்டியாரும் சேர்ந்துதான் க்ருபாவர்ஷத்திற்குக் காரணமாவாரென்பதை இது விளக்குகிறது. பெருமாளும் லக்ஷ்மியுமாகச் சேர்ந்து தங்கள் க்ருபாவர்ஷத்தால் கோதை நாச்சியார், அவள் திருமொழி ஆகிய அம்ருத நதியை கடனை செய்வித்தார்கள்.
         க்ருஷ்ணாம்புதஸ்யகிருஷ்ணமேகத்தினுடைய; க்ருபயா -- க்ருபையினாலே, க்ருபையென்னும். ஸுவ்ருஷ்ட்யா -- நல்ல வர்ஷத்தாலே.
         கடிதாம் -- கடனை செய்விக்கப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட. கடகையான உன்னை அடைவிப்பது ஸ்வதந்த்ரேச்வரனாகிய ச்ரிய:பதியின் க்ருபை. கடகப்ராப்தியையும் லக்ஷ்மீவிசிஷ்டமான ஈச்வரனுடைய க்ருபை கடிப்பிக்கும்.
         தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாநதீம் -- ஸம்ஸாரம் என்பதற்கு 'நற்கதி' என்பது சொற்பொருள். அது உண்மையில் துர்கதியே என்பதைக் காட்ட 'தௌர்கத்யம்' என்கிறார். ஸம்ஸாரம் என்பது காலகோடிவிஷம். இந்தக் கொடிய விஷத்தால் குழந்தைகள் மூர்ச்சிதராயிருக்கிறார்கள். அவர்கள் ம்ருதப்ராயராயிருக்கிறார்கள். குழந்தைகளைத் தீண்டிய கொடிய விஷத்தை நாசம் செய்வதிலும் பெருமாளுக்குப் பெரிய பேறுண்டோ? அந்த விஷத்தை அமிர்தநதியாகிய உன்னைச் சரணம் பற்றி உன் அமுதஸரஸ்வதீயில் நீராடிப் போக்கலாம். ‘பராசர்யவசஸ்ஸுதையானது ப்ராணன் போய் மூர்ச்சிதரான குழந்தைகளை உயிர்ப்பிக்கும்' என்று ப்ரம்ம ஸூத்ரங்களை வர்ணித்ததை நினைக்க. அம்ருதப்ரவாஹமான ஸுதாநதியாவாய்.
         த்வாம் -- உன்னை (உன் தேன்மொழியை)
         ஸந்த: -- ஸம்ஸாரவிஷமூர்ச்சிதராய் அஸத்ப்ராயராயிருந்தவர் இப்பொழுது உன்னைச் சரணம்பற்றி ஸத்தானார்.
         ப்ரபத்ய (ஸந்த:) -- உன்னைச் சரணம் பற்றி உன் ஸரஸ்வதீயில் நீராடி (ஸத்தானார்)
         அசிரேணவிரைவில். ‘தாபதேவ சிரம்' என்றபடி ப்ராப்தகர்ம ப்ரயுக்தமான அனேக சரீரங்களின் தாமதமில்லை. உடனே வேண்டுமென்ற ஆர்த்தியிருந்தால், உடனே.
         தாபாந் -- ஸகல ஸம்ஸார தாபங்களையும்; சமயந்தி -- போக்கிக் கொள்ளுகிறார்கள்.   (26)

சுலோகம் 27
ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
         கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: |
வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்
         ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி ||     27
தெளிந்துந் தெளியாதுஞ் செய்தபிழை யெல்லாங்
களங்கமறக் கோதாய் களைவாய் -- பளிங்கனபால்
தன்னை யருந்துந் தனங்கடித்தாற் றன்குழந்தை
யன்னை முனியாண்மற் றாங்கு.            .27.

பதவுரை
         கோதே -- கோதையே! த்வம் -- நீ; ஜாதாபராதமபி -- அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட குற்றங்களோடு கூடியிருந்தாலும்; மாம் -- என்னை; அநுகம்ப்யதயவு பண்ணி; கோப்த்ரீ அஸி யதி -- ரக்ஷிப்பவளாக ஆகியிருந்தால்; இதம் -- இவ்விஷயம்; பவத்யா: -- உனக்கு; யுக்தம் -- தகுந்தது; ஜநநீ -- தாயாரானவள்; குமாரம் -- குழந்தையை; தஷ்டபயோதரதராபி -- கடித்த முலையையுடையவளாயினும்; வாத்ஸல்யநிர்பரதயா -- குழந்தையினிடத்தில் உள்ள ஆசை மிகுதியால்; ஸ்தந்யேநமுலைப்பாலினால்; வர்த்தயதி -- காப்பாற்றுகிறாளன்றோ.
         கோதே! (நான்அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட அபராதங்களை உடையவனாயிருந்தாலும் நீ என்னை தயவுபண்ணி ரக்ஷிப்பவளாக ஆவாயேயாகில், இவ்விஷயம் உனக்கு உசிதமே. எப்படித் தாயானவள் குழந்தை தன் முலையைக் கடித்துவிட்டாலும் அதனிடத்திலுள்ள அன்பினால் அதைத் தன்பாலினால் காப்பாற்றுகின்றாளல்லவா? அதுபோல,
அவதாரிகை
         பெருமாள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கிறதென்ற தர்மமுள்ளவரல்லவோ? ஸஹதர்மசரியான கோதையும், அந்த தர்மத்தை அவரோடுகூட அநுஷ்டிக்கவேண்டாவோ என்று சங்கை வரக் கூறுகிறார். அவர் பிதா, நீ மாதா. மாதாவின் வாத்ஸல்ய குணம் உனக்கு ஸஹஜம். புதிதாகச் செய்து இன்னம் ஈரமுலராத அபராதங்களையும் பாராட்டாமல் ஸ்நேஹத்தைப் பெருக்குவது வாத்ஸல்யமாகும். தாய்க்குத் தாய் தர்மம் ப்ரபலம், ஸ்வபாவத்தை ஒருவரும் மீறமுடியாது. ஸ்வதர்மம் ப்ரபலம். பரதர்மம் பயாவஹம். தாய் ஸ்வபாவத்தை, தாய் தர்மத்தைக் காட்டுகிறார். பர்த்தாவோடு ஸஹதர்மசரியானாலும் மாத்ருத்வத்தை விடுவளோ? ஸ்திரீத்வமே அழியுமே.
கோதே -- கோதாய்! ஜாதாபராதமபி மாம் -- (1) அபராதம் நேர்ந்தவனாகிய என்னையும். வேண்டுமென்றே குற்றத்தை நான் செய்தாலும், ஏதோ அறியாமல் குற்றம் நேர்ந்துவிட்டதென்று உன் நினைப்பு என்பதை வ்யஞ்ஜிக்கிறார், ‘ஜாத' என்று. ‘க்ருதாபராதஸ்ய ச தே ' என்று திருவடி ஸுக்ரீவரிடம் பேசியதுபோல 'க்ருத' பதத்தை வைக்கவில்லை.
(2) ‘ஜாதன்' என்பது 'ப்ரியமான குழந்தை'யைச் சொல்லும். உன் அருமைக்குழந்தை அறியாமற் குற்றம் செய்துவிட்டதென்று உன் நினைப்பும், பரிவும். ‘ஸத்யோ ஜாத:’ இன்று ஈன்ற கன்று வத்ஸம், அதனிடம்போல வாத்ஸல்யம். மூன்றாமடியில் சொல்லும் 'பூர்ணவாத்ஸல்யத்திற்கு' இந்த 'இன்று பிறந்த கன்று' என்பது ஸமர்த்தகம். ஸத்யோஜாத சிசுவின் அபராதம், கன்று உதைத்தது, கன்றின் பல் மடியில் பட்டது என்று உன் நினைப்பு.
(3) குற்றம் ஈரமாயிருந்தாலும், இப்பொழுதே செய்து இன்னம் உலராமலிருந்தாலும். ‘ஆர்த்ராபராதிநி ஜநே' ‘ஆர்த்ராபராதா: ஸதீ'
         அநுகம்ப்யஎன்னிடம் தயவு பண்ணி இரங்கி.
         கோப்த்ரீ யதி த்வமஸி -- நீ ரக்ஷகையாகிறாயென்பது.
         யுக்தம் இதம் பவத்யா: -- உனக்கு இது ஏற்றதே.
         வாத்ஸல்யநிர்பரதயா -- புத்ரஸ்நேஹம் சுமை தாங்காதபடி நிரம்பியிருப்பதால்.
         ஸ்தந்யம் -- ஸ்நேஹமென்னும் பால் நிரம்பிப் பெருகும் கடுப்பினால்.
         ஜநநீ -- பெற்ற தாய்
         குமாரம் -- (1) இளங்குழந்தை, பச்சைக்குழந்தை என்று தாயின் நினைப்பு. என்ன முதிர்ந்த வயதாயினும் தாய்க்குச் சிசுவே. (2) ராஜகுமாரன் ராஜ்யத்திற்குப் பட்டப்பிள்ளை என்று நினைப்பு. (3) குமரன் போன்ற குமாரனென்று அருமை. “குமாரகல்பம் ஸுஷுவே குமாரம்", ‘குமரனைப்போன்ற குமாரனைப் பெற்றாள்'.
         ஸ்தந்யேநபாலால் குழந்தையை வளர்க்க, பெருக்க.. ஸ்தனத்தில்தானே பாலுண்டாகும்? ஸ்தனத்தில் குழந்தை பல்லால் கடித்தது. கடித்த இடத்திலிருந்தே பால் சொரிகிறது என்று காட்ட 'ஸ்தந்யம்' என்கிறார்.
         வர்த்தயதி -- குழந்தையைப் பருக்கச் செய்யவேண்டாவோ? பால் பெருக்கால் குழந்தை பருக்கிறது. பால் ஸ்தனத்தில்தானே பெருகும்? கடித்த இடமென்று அதை விட்டால் பாலுக்கு வேறு இடமேதுளது? வர்த்தயதி என்பதில் மிக்க ரஸமுண்டு. “ப்ருஹப்ருதௌ ப்ரும்ஹயதி" என்று பொருள் திருவுள்ளம். ப்ரும்ஹணம் செய்கிறாள், ப்ரஹ்மம்போலச் செய்கிறாள்.
         தஷ்டபயோதராபி -- பல்லால் கடிக்கப்பட்ட ஸ்தனத்தை உடையவளானாலும். ‘பயோதர' என்னும் பதத்தில் மிக்க ரஸம். ‘நீரோ பாலோ நிரம்பிய' தோல்பையைப் பொத்துவிட்டால் ஜலமும் பாலும் ஒழுகி விழாமலிருக்குமோ? விரிவுக்கு பயந்து ரஸங்களைச் சிறிதே பேசுகிறோம்.    ..27.
சுலோகம் 28
சதமகமணிநீலா சாருகல்ஹாரஹஸ்தா
         ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
         விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: ||  .28.
மால்விரும்பு மாலை மலர்க்குழலு மாமணிநேர்
மாலுருவுஞ் செங்கு வளைக்கரமுங் -- கோலமுலை
வன்பொறையாற் சற்று வளையுடலு மாங்கோதை
தன்சரண நெஞ்சுறையுஞ் சார்ந்து.                    .28..

பதவுரை
         ஶதமகமணி நீலா -- இந்த்ரநீலக்கல்லுபோல நீலமானவளும்; சாருகல்ஹாரஹஸ்தா -- அழகிய செங்கழனிப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்; ஸ்தனபரமிதாங்கீ -- ஸ்தனத்தின் பரத்தால் சிறிது வணக்கப்பட்ட திருமேனியை உடையவளாயும்; ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: -- கனத்த (நிரம்பிய) ஸ்நேஹக் கடலாயும்; அளகவிநிஹிதாபி: -- கூந்தலில் சூடிய; ஸ்ரக்பி -- மாலைகளால்; ஆக்ருஷ்டநாதா -- இழுக்கப்பட்ட நாதனோடு கூடியவளாயுமான; விஷ்ணுசித்தாத்மஸா கோதா -- பட்டர்பிரான் புத்திரி கோதை; : -- நமது; ஹ்ருதி -- ஹ்ருதயத்தில்: விலஸது -- விளங்கட்டும்.
         இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும், தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.
அவதாரிகை
(1) முதல் ச்லோகத்தில்கோதையைச் சரணம் புகுகிறேன் என்று அவளைப் பரோக்ஷமாகப்  பேசினார். பிறகு 26 ச்லோகங்களில் கோதையை அழைத்து நேருக்கு நேராக ப்ரத்யக்ஷமாகப் பேசினார். தேவியான கோதையைப் பரோக்ஷமாக 'அவள்' ‘அவள்' என்று பேசித் துதிப்பது உசிதம். ‘பரோக்ஷப்ரியா தேவா:’ மனுஷ்யர்களில் அவதாரம் பண்ணினாலும், கோதை தேவியே. ஆயினும் தாயானதால், தேவியாயிருந்தும் நீ என்றே கூப்பிட்டுப் பேசினார். தேவியாயுமிருப்பதால், உபஸம்ஹாரத்திலும் உபக்ரமத்திலும் (முதலிலும், முடிவிலும்) ‘அவள்' ‘அவள்' என்று பேசுகிறார். முதலிலும், முடிவிலும், ஒரே விதமாக 'அவள்' என்று பேசுவது தேவீ என்கிற தாத்பர்யத்தைக் காட்டும்.
(2) ஓர் ஆச்சர்ய மூர்த்தியாக ஹ்ருதயத்தில் எப்பொழுதும் த்யானம் செய்யும்படி க்ருபையால் விளங்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். ‘நீளாதுங்க ஸ்தநகிரிதடீ' என்னும் தனியன் த்யான ச்லோகத்தையும் அநுஸரிக்கிறார். நக்ஷத்ரக்கணக்கான 27 ச்லோகங்களால் துதித்து பாவனை செய்து, இங்கே ஹ்ருதயத்தில் பரமப்ரஸக்யாய் வீற்றிருப்பதைப் பிரார்த்திக்கிறார்
         ஶதமகமணிநீலா -- இந்த்ரநீலம்போல நீலவர்ணமானவள். ஸ்ரீ, பூமி, நீளை என்று மூன்று தேவிமாரில் முதல் ச்லோகத்திலிருவரைப் பேசினார். இங்கே நீளையை சப்தமாத்ரத்தாலேயாயினும் ஒருவாறு குறிக்கிறார். ‘நீளாதுங்கஸ்தனஎன்ற த்யான ச்லோகத்திலுள்ள முதற்பதத்தை இங்கும் முதல் பதமாக வைக்கிறார் என்றும் ரஸம்.
         சாருகல்ஹாரஹஸ்தா -- அழகிய செங்கழுநீர்ப் பூவைக் கையில் உடையவளாய். "அவள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் வாய் செங்கழுநீர்" ஆகியதால், அது சாரு (அழகியது). ஸ்வாராதானத்தில் தன்தோட்டத்தில் தான்வைத்து வளர்ந்த கொடிப் புஷ்பம்.
         ஸ்தனபரநமிதாங்கீ -- தனபரத்தால் கொஞ்சம் வணங்கிய காத்திரமுடையவளாய். தனங்களும் கிரிபோன்றன. தனங்களின் வாத்ஸல்யப் பெருக்கால் ஸ்தந்யப் பெருக்கை முன் ச்லோகத்தில் பேசினார். தனத்தின் பாரத்துடன் ஸ்தந்யத்தின் பாரமும் சேர்ந்தது.
         ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: -- கனத்த புத்ரஸ்நேஹக் கடல். முன்பு அம்ருதநதீ என்றார். இங்கே ஸ்நேஹக்கடல் என்கிறார்.
         அளகவிநிஹிதாபி: -- கூந்தலில் அழகாகச் சூடிய. (யார் கூந்தலில் என்று குறிப்பிடவில்லை) முதலில் கோதைசூடிப் பிறகு பெருமாள் சூடிய.
         ஸ்ரக்பி: -- மாலைகளால். ‘ஸ்ரஜிஎன்று தனியனிலுள்ளது.
         ஆக்ருஷ்டநாதா -- இழுக்கப்பட்ட நாதனையுடையவளாய். தன்னால் உச்சிஷ்டமான (சூடிய) மாலையால் விலங்கிடப்பட்ட என்று பச்சையாக உன் மேன்மை பேசப்பட்டது. இங்கே கட்டுண்டு இழுக்க இடம் கொடுத்தது குடுமி. விலங்கு போட்டாற்போல சலிக்காமலிருக்கும் பயன் கிடைப்பதைச் சொன்னது தனியன். சிரஸில் விலங்கு போடமாட்டார்கள். ‘குடுமியைப் பிடித்துக் கயிறால் இழுக்கப் படுகிறான்என்பது இங்கே பேச்சு. சூடிக் கொடுத்த மாலையை முடிமேற்கொண்ட நாதனோடுகூட ஹ்ருதயத்தில் ஸர்வதா ஸேவை ஸாதிக்கவேண்டும்..
         விலஸது -- நன்றாய்ப் பிரகாசிக்கட்டும்.
         ஹ்ருதி -- த்யாதம் ஹ்ருதம்புஜே, த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி.
         கோதா -- கோதாம் சரணம் ப்ரபத்யே என்பது முதல் ச்லோகத்தின் கடையடி. இங்கேயும் முடிவில் கடைசிப் பதத்தில் கோதா என்று அமைக்கிறார். அங்கே இரண்டாம் வேற்றுமை. சரணமடைந்ததற்குப் பயனாக அவள் ஸேவை அளிப்பதால் இங்கே முதல் வேற்றுமை.
         விஷ்ணுசித்தாத்மஜா -- ஸ்ரீவிஷ்ணுசித்த குலதந்தன என்று தொடக்கத்திற்குத் தக்கபடி முடிவு. பட்டர்பிரான் கோதை சொன்ன என்ற திருப்பாவை முடிவையும் இது அநுஸரிக்கிறது. இங்கே 'கோதை பட்டர்பிரான் குமரீ' என்ற க்ரமத்தை மாற்றியுளது. அதற்கடியென்? இங்கே பல விசேஷணங்களிலும் 'பட்டர்பிரான் புத்ரி' என்பது உயர்த்தி என்று திருவுளம். ‘ஜநகாத்மஜா' என்பது போல.   (28)
சுலோகம் 29
இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்
         பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: |
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
         சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் ||   .29.
மேதினியெ லாம்புகழும் வேதாந்த தேசிகன் சொல்
மாதர் செயுங்கோதா மான்மியத் தை -- யாதரவாய்ப்
போற்றினோர் பட்டர்பிரான் போலப் புகழ்மருவி
வீற்றிருப்பர் வைகுந்த மேல்.         .29.
பதவுரை
         இதி -- இந்தத் தோத்திரம் முழுவதிலும் காணும் ப்ரகாசமாக, விகஸித பக்தே: -- (கோதை திருவடியில்) மலர்ந்த பக்தியையுடைய; வேங்கடேஶாத் -- வேங்கடேசரிடமிருந்து ; உத்திதாம் -- தோன்றி எழுந்த; பஹுகுணரமணீயாம் -- பற்பல காவ்யகுணங்களால் நிரம்பி மனோரஞ்ஜகமான; கோதாஸ்துதிம் -- கோதைவிஷயமான துதியை; : -- எவர்; வக்தி -- சொல்லுகிறாரோ; : -- அவர்; ஸ்ரீமத்: -- லக்ஷ்மீயோடு கூடிய; ரங்கபர்த்து: -- ரங்கநாதனுக்கு; ஶாஶ்வதீம் -- சாச்வத காலமும்; சரணகமலஸேவாம் -- திருவடித்தாமரையின் ஸேவையை; அப்யுவைஷ்யந் -- அடைபவனாக (அவருக்கு) ; பஹுமாந்ய: -- வெகுமதி பாத்ரமாக; பவதி -- ஆகிறான்.
         கோதை திருவடியில் விஸ்தாரமான பக்தியையுடைய வேங்கடேசரிடமிருந்து தோன்றியெழுந்த அனேகவிதமான காவ்யகுணங்களால் அழகிய கோதாஸ்துதியை எவர் பாராயணம் செய்கிறாரோ அவர் லக்ஷ்மீயோடுகூடிய ரங்கநாதனின் திருவடி ஸேவையை அடைபவனாய்க்கொண்டு அவருக்கு வெகுமதி பாத்ரனாக ஆகிறான்.
         அவதாரிகை
         விஷ்ணுசித்தரிடமிருந்து கோதை தோன்றினாள் என்று 9ல் ஸாதித்தார். ‘விஷ்ணுசித்தாத்மஜை' என்று முன் ச்லோகம் முடிவில் பேசியது அதைக் காட்டுகிறது. கோதை விஷ்ணுசித்தரிடம் தோன்றியதுபோல, கோதை துதி பக்தி நிரம்பிய என் சித்தத்திலிருந்து தோன்றியதென்கிறார். “ஸமுக்திதவதீம் அதிவிஷ்ணுசித்தம்" என்பதுபோல 'விகஸிதபக்தே: வேங்கடேசாத் உத்திதாம்' என்கிறார். முதல் ச்லோகத்தின் உரையில் இந்த ச்லோகத்தின் பொருள்களை விஸ்தரித்திருக்கிறோம். அதையெல்லாம் இந்த ச்லோக உரையில் சேர்த்துக் கவனிக்க.
         இதி -- இப்படி. முன் ச்லோகங்களில் அநுபவம் சென்றபடி. ;இங்கிப்பரிசுரைப்பார்'
         விகஸிதபக்தே: -- புதுவைப் பூந்தோட்டத்தில் பெருமாளிடம் தன்மயத்வத்தோடு கோதை வளர்த்த பூஞ்செடிகள் புஷ்பித்து மலர்ந்ததுபோல, கோதையின் பக்தியும் பெருமாளிடம் புஷ்பம்போல் மலர்ந்து வாஸித்துப் பாமாலையாயிற்று. அதுபோல கோதையிடமும் அவள் பூமாலை பாமாலைகளிடமும் இந்த ஸ்தோத்ரபாவனையால் நம் ஸ்வாமியும், தன்மயத்வத்தையடைந்து, கோதையிடம் பக்தி அத்புதமாக மலர்ந்தது. ‘இப்படி மலர்ந்து வாஸிக்கும் பக்தியையுடைய வேங்கடேசனிடமிருந்து இந்தத்துதி எழுந்தது' என்றும் சொல்லலாம். வேங்கடேசனிடமிருந்து அவருடைய இப்படி மலர்ந்த பக்தியிலிருந்து இத்துதி எழுந்தது' என்றும் பொருள் கொள்ளலாம்.
         உத்திதாம் -- கோதை விஷ்ணுசித்தரிடமிருந்து தோன்றியதுபோல, இத்துதியும் ஸ்வாமி சித்தத்தில் தோன்றியது. இருவருக்கும் கர்த்ருத்வமில்லை, ஆவிர்பாவாதிகரணத்வமேயுண்டு.
         வேங்கடேசாத் -- இப்படி கோதையிடம் ஸ்வாமிக்கு பக்தியமைந்ததற்குக் காரணமுண்டு. வேங்கடவற்கென்றேயிருப்பாள் கோதை. அவள் பெருமையை வேங்கடவர் கண்டை உலகமறிய இத்துதியால் சப்திக்கவேண்டியது உசிதம். இரண்டு சம்ப்ரதாயஸ்தரும் தேசிகன்காலம் முதல் சேர்ந்து ஏக கோஷ்டியாகப் பாடும் பாக்யம் பெற்ற ஸரஸ்வதி.
         பஹுகுணரமணீயாம் --  கோதை சூடிய மாலை அநேக குணங்களாலும் நார்களாலும் அரங்கனுக்கு ஹ்ருத்யமானது போலே அநேககுணங்களையுடைய இத்துதியும் அரங்கன்முன் அரங்கேற்றி அவனுக்கு ஹ்ருத்யமாயிற்று.
         வக்தி -- சொன்னால் போதும். தப்பிச் சொன்னாலும் போதும். பெருமாள் விஷயமான திருப்பாவையை 'தப்பாமே' சொல்லவேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. கோதை விஷயமான இப்பாமாலையை ப்ரஜல்பநம் பண்ணாலும் போதும் அரங்கர்க்கு பஹுமான்யராவதற்கு. ஆனால் ஒரு நிர்ப்பந்தம் மட்டும் உண்டு. அதென்ன? “இதி விகஸிதபக்தே: வக்தி" என்றும் அந்வயித்து 'இப்படி மலர்ந்த பக்தியாலே சொல்லுவனேல்' என்று பொருள் கொள்ளவேணும். ஸ்வாமி பக்தியைப்போல நமக்கும் பக்தி மலரவேணும். ஹ்ருதயபுண்டரீகம் விகஸிக்க வேணும்.
         கோதாஸ்துதீம் -- வாக்கைக் கொடுத்தவள் விஷயமான ஸ்தோத்திரம். இந்த ஸ்துதிரூபமான வாக்குபிக்ஷையும் கோதைத்தாயார் கொடுத்தது. ஆகையால் இத்துதியை 'பஹுகுணரமணீய' என்று கொண்டாடினது. ஆத்மச்லாகை அன்று. “வாசா நிர்மலயா ஸுதாமதுரயா யாம் நாத பிக்ஷாம் அதா:” (க்ருஷ்ண! என் நாதனே! அமுதத்தைப்போல் இனிமையும், நிர்தோஷமுமான வாக்கை பிக்ஷையாக எனக்கு நீர் கொடுத்ததை நான் ஸ்வப்னத்திலும் நினைத்து க்ருதஜ்ஞதையை அநுஸந்திக்காமல், என் வாக்கு என்று அஹங்காரமதம் பிடித்திருக்கிறேனே) என்றார் பண்டிதராஜ ஜகந்நாதர். முதல் சுலோகத்திலேயே ஸ்வாமி இத்தாயாரை வாக்பிக்ஷைக்காகச் சரணம் புகுந்ததைக் காட்டியுள்ளோம். ‘வாக்கைத் தானம் செய்பவள்' என்ற திருநாமமுடைய கோதை இந்தத் துதிவாக்கையும் கொடாமலிருந்தால், கோதையாகாளே! கோதை துதியென்னும் பெயரும் பொய்யாமே! அவள்பேரும் இத்துதிபேரும் நிலைப்பதற்கு இத்துதியும் வாக்கும் அவளதேயாய்த் தீரவேணும்.
         :: -- ‘யவனவன்'. ஶ்ரிய:பதியைப் பற்றித் திருவாய்மொழி தொடங்கியதுபோலும். ப்ரம்மஸூத்ரமும் உபநிஷத்தும் ப்ரஹ்மலக்ஷணம் பேசுவதுபோலும், இத்துதியை இப்படி மலர்ந்த பக்தியோடு சொல்லுமவன் மஹிமையை 'யவனவன்' என்று வர்ணிக்கிறார்.
         பவதி -- நித்யமும் ஆகிறான். முக்காலத்தையும் சொல்லுகிறது. ‘பவதி', அம்மா என்று கூப்பிடுவதுமாகலாம். கடைசி ச்லோகத்திலும் 'அம்மா' என்று கூப்பிட்டு முடிப்பதழகு. பவதிபஹுமாந்ய என்று சேர்த்து ஒரு பதமாகவும் ஓர் அந்வயம் கொள்ளலாம். ஸ்ரீக்கும் பஹுமாந்யன். ரங்கபர்த்தாவுக்கும் பஹுமாந்யன். உனக்கும் பஹுமாந்யன். உன் வாக்காயினும், எனக்குத் தானம் செய்துவிட்டதால், உன் குழந்தையாகிய நான் உச்சரித்த துதியென்று உனக்கும் அதில் பஹுமானம். என்முகமாக வெளிப்பட்ட துதியைப் படித்தானென்று என்னிடம் ஸ்நேஹத்தால் படிப்பவனிடம் பஹுமானம். பஹுமாந்ய: காரணமான துதியிலுள்ள குணத்தின் பஹுத்வம் கார்யமானமானத்திலும் வருகிறதென்பது ரஸம்.
         ஸ்ரீமத: -- ஸ்ரீவிசிஷ்டனாகிய. கோதை பெருமையைக் கேட்பதில் ஸ்ரீக்கு மிக்க இன்பம். “ஸ்ரீரங்கராஜஹரிசந்தன" என்று முதல் ச்லோகத்தில் பேசினபடி உபஸம்ஹாரமும் அப்படியே. முதலில் ஸமாஸம், இங்கே முடிவில் வ்யாஸம். “ஸமாஸவ்யாஸதாரணம்" வித்வான்களுக்கு அழகு.
         ரங்கபர்த்து: -- அரங்கத்தின் ப்ரபு. காவ்யங்களையெல்லாம் அரங்கேற்றும் ப்ரபு.
         சரணகமலஸேவாம் -- பக்தியென்னும் புஷ்பம் மலர்ந்தது. ஹ்ருதயகமலம் மலர்ந்தது. இப்படி ஓர் புஷ்பம் மலர்ந்ததுக்கு அளிக்கும் பலன் என்ன? திருவடிக் கமலமென்னும் ஓர் அபூர்வ புஷ்பத்தை சாச்வதமாய் அனுபவிக்கும்படி அளிப்பதே. புஷ்பம் மலர்ந்ததற்குச் சாச்வதபலமான புஷ்பாநுபவமே பயன் என்று ஆநுரூப்யம். கமலத்திற்குப் பரிசு அபூர்வகமலம். ஹ்ருதயகமலம் மலர்ந்தபோது, இந்தத் திருக்கமலமும் அங்கே வீற்றிருந்து ஸமகத்தைக் கொடுக்கும். தாமரையோடு தாமரையின் யோகம் வரும். “கேசவநம்பி கால்பிடித்தல்"
         சாச்வதீம் -- சாச்வதீ மம ஸம்ஸித்தி: என்றவிடத்தில்போல ஸேவையென்னும் வணக்கமே, ப்ரஹ்வீபாவமே, பரமமான ஸித்தியாகும். இதைப் படிப்பவருக்கும் சாச்வத ஸுகம் நியதம். ‘சாச்வதம், ஸுகம்' என்று ச்ருதி பேசியதை 'சாச்வதமான சரணகமல ஸேவாம்' என்று ஸூசிக்கிறார். உன்னேச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள், உனக்கே நாமாட் செய்வோம்' என்று கோதை ஆசைப்பட்ட பயன். ‘திருமாலால் இன்புறுவர்' ஸேவையென்கிற நமஸு (ந மம) என்பது சாச்வதப் பயனையளிக்கிறது. “ந மமேதி ச சாச்வதம்"
         அப்யுபைஷ்யந் -- அடையப்போகிறவனாய். பரமபதத்தில் சாச்வதமான திருவடிஸேவை பாக்யத்தை அடைவானாம்.  “மாமுபேத்ய து கௌந்தேய" என்கிற ச்லோகத்தில் 'ஆசாச்வதமான துக்காலயத்தை அடையமாட்டார், பரமமான ஸம்ஸித்தியையடைவார்' என்பதை "உபைஷ்யந்" என்பதால் ஸூசிக்கிறார். ‘மாம்' என்றவிடத்தில் அப்பதத்தைக் கொண்டே லக்ஷ்மியையும் கொள்ளலாம். ததந்தர்பாவ ந்யாயத்தாலும் கொள்ளலாம்.
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே !
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம: ||
கோதா ஸ்துதி முற்றிற்று