இது முத்தமிழ் மன்றத்தில் அடியேன் எழுதியது.
இன்று அடியேனது நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு பரிசு வந்தது.
நண்பர் பலகாலமாக தில்லியில் வாழ்கிறவர்.
வயதின் காரணமாக சென்னையில் வந்து
தங்கப் போகிறார்.
ஏராளமான புத்தகங்கள் உள்ளன, சென்னை வீட்டில்
இடமில்லை எனவே அங்கேயே யாரிடமாவது
கொடுத்துவிட்டு வரப் போகிறேன் என்றார்.
அதில் எனக்குப் புரிகிற மாதிரி
ஏதேனும் தமிழ்ப்புத்தகங்கள் இருந்தால் தரலாமே
என்பது அவரிடம் நான் வைத்த வேண்டுகோள்.
அதை ஏற்று சில புத்தகங்களை அஞ்சலில்
அனுப்பியிருந்தார்.அவை இன்று
எனக்குக் கிடைத்தன.
பிரித்தால் ஒரு இன்ப அதிர்ச்சி.
அவற்றுள் ஒன்று
மதுரகவி ஸ்ரீநிவாஸய்யங்கார் எழுதிய
ஏராளமான பாடல்களின் தொகுப்பு.
சென்னைத் திருவல்லிக்கேணித்
தமிழ்ச்சங்கத்தாரின் வெளியீடு.
அதைப் புரட்டிப் பார்த்தேன்.
முதலிலேயே
கண்ணில் பட்டு நெஞ்சை அள்ளியது
அனேகமாக இன்றைய இளம் தலைமுறை
அறியாமலே போனது
அல்லது
இன்று ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்குக்
கிடைத்த பேற்றை இன்றைய தலைமுறை
இழந்தது
என்றே சொல்லலாம்.
அதை எண்ணி சற்று சிந்தனை
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள
விரும்பினேன்.
என்ன அது?
வேறென்ன ?
தாலாட்டு !
அன்று நம்மில் பலர் தூளியிலே உறங்க
நம் அன்னையர் எத்தனை தாலாட்டுப் பாடியிருப்பார்கள்!
ஆழ்வாரின் மாணிக்கம் கட்டி முதல்
நாட்டுப்புறப் பாடல் வரை எத்தனை இனிமையானவை !
அதுவும் குடும்பக் கட்டுப்பாடு என்பதை அறியாத அந்த நாளில்
எங்கள் திருப்புல்லாணி அக்ரஹாரத்தில் அனேகமாக
மாதந்தோறும் நான்கைந்து வீடுகளிலாவது
குழந்தை பிறந்திருக்கும்.
பெற்றவளின் தாயோ பாட்டியோ குழவியைத்
தூளியிலிட்டு தான் கற்றுக்கொண்ட ஒன்றையோ
அல்லது சிலசமயம் சுயமாக இட்டுக்கட்டியோ
தாலாட்டிசைத்து குழந்தையைத் தூங்க வைப்பார்கள்.
அந்தத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே
பள்ளிப் பருவம் வரை நானும் மெய்மறந்து
தூங்கியதுண்டு.
இது உங்களில் பலரும் அனுபவித்த ஒன்றுதான்.
ஆனால் இன்று,
நம் குழந்தைகள் தாலாட்டு என்றால்
“தாலாட்டுதே வானம்” அந்தப் பாட்டைச்
சொல்கிறாயா என்று நம்மிடம் கேட்கும் காலம்.
அவர்கள் என்ன செய்வார்கள்!
கிராமங்களை விட்டு நகரங்கள் சென்றோம்.
கூட்டுக் குடித்தனம் மறைந்து
எந்திர வாழ்க்கை ஆயிற்று.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
கணவனும் மனைவியும் மட்டும்
பெற்றவர்கள் உற்றவர்கள் வேண்டாம்
எனப் புரிந்து கொள்ளப் பட்டது.
எந்திரமய வாழ்க்கையில்
கணவனும் மனைவியுமே
வேலைக்குச் செல்வது காலத்தின் கட்டாயம் ஆயிற்று.
இதில் குழந்தையைக் கொஞ்ச நேரம் எங்கே !
குழந்தையோ ஆயா வளர்ப்பு !
அவள் பாடும் தாலாட்டோ
‘சனியனே ! தூங்கித் தொலை”
அபூர்வமாக சில ஆயாக்கள்
‘ஆராரோ ! ஆரிரரோ' அல்லது
லுலுலாயீ என்ற இரு வரிகள் மட்டுமே
பாவம் நம் எதிர்கால சந்ததிகள்.
அவர்கள் இழப்பது தாலாட்டின் இனிமையை மட்டுமா ?
இல்லை. அந்தச் சிறு வயதிலேயே
தாலாட்டு என்ற பெயரில் நம் அன்னையர்
நமக்கு அறிமுகம் செய்துவைத்த
இதிஹாசங்கள், புராணங்கள்,
மாமன் அத்தை உறவுமுறைகள்
அத்தனையும் அல்லவா
அவர்களுக்குக் கிட்டாத பேறு
என்ற ரீதியில் சென்றது என் சிந்தனை.
நம்மால் முடிந்தது கையில் இருக்கும் தாலாட்டை
மன்றத்தில் இடுவோம். அதன்மூலம்
மன்ற உறுப்பினர்கள் முடிந்த இடங்களில்
இத்தகைய தாலாட்டுக்களை அவரவர் இல்லங்களிலாவது
நடைமுறைப் படுத்தி மழலைகளை
மகிழ்விக்கச் செய்ய வேண்டுகோள் இடுவோம்
என்ற எண்ணத்தில் மதுரகவி ஸ்ரீநிவாஸய்யங்காரின்
தாலாட்டை இங்கு இடுகின்றேன்.||ஸ்ரீ:||
செந்தமிழ்த் தென்பாண்டி நன்னாட்டு
அநுமந்த நகரம் மதுரகவி
உ.வே. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி
இயற்றிய
கண்ணபிரான் தாலாட்டு.காப்பு.
வானுலகம் போற்றும் வடமதுரை மாயவன்மேல்
தேனமருந் தாலாட்டுச் செந்தமிழாற் பாடுதற்கு
மையாழி வண்ணன் வலமார்பில் வீற்றிருக்குஞ்
செய்யாள் குருகையர்கோன் சேவடிகள் காப்பாமே.நூல்
தேவாதி தேவருக்காய்த் தேவகியாள் தன்வயிற்றிற்
பூமேல வதரித்த புண்ணியரு நீர்தாமோ .1.
அம்பனைய கண்ணா ளசோதைதரும் பாலகனாய்
வம்பவிழுங் கோகுலத்தில் வந்தவரு நீர்தாமோ .2.
ஆய்ச்சியர்கள் மத்தா லடிபட்டுக் கூத்தாடி
பேய்ச்சி முலையுண்ட பெருமாளு நீர்தாமோ .3.
வாட்டமுடன் கோபாலர் வந்தளிப்பா யென்றுசொல
காட்டழலை யுண்ட கனிவாய னீர்தாமோ .4.
கண்ணா கருணைமழைக் கண்ணாநன் னீலமணி
வண்ணா வரதாவென் மாமணியே கண்வளராய். .5.
பூங்கமழுந் தெய்வமணிப் பொன்மயமாந் தொட்டிலிடை
தாக்கவந்த வீரச் சகடுதைத்த தாளானோ .6.
ஆவர்த் தனமுழுது மன்பாய்த் தளராமல்
கோவர்த் தனத்தைக் குடையா யெடுத்தவனோ .7.
நாரா யணனே நரகரியே ராகவனே
சீரார்ந்த செல்வத் திருமகனே கண்வளராய். .8.
ஆரா வமுதே யடியார் திரவியமே
காரார்ந்த மேனியுடைக் கட்டழகா கண்வளராய். .9.
ஆயரிளம் போரேறே யச்சுதனே நந்தனுக்கு
சேயெனவே வந்த திருமாலே கண்வளராய். .10.
அத்தைமக்கள் பாண்டவர்கட் கன்பாகத் தூதுசென்ற
வித்தகனே வேத விளக்கொளியே கண்வளராய். .11.
பொய்யான வாழ்க்கையிது பொல்லாத தென்றுரைத்த
மெய்யான தெய்வ விதியே நீ கண்வளராய். .12.
அந்தக் கரண மடக்கிமனத் தாசையற்று
நந்தலற ஞானவழி நாடுகென்ற நாரணனோ .13.
மாயா விருக்ஷமதில் மண்ணுகின்ற சீவனைநீ
ஆயாயென் றோதி யறிவித்த வச்சுதனோ .14.
மூன்றாசை நீக்கி முழுமுதலாய் நின்றவனை
சான்றா யறிகவெனத் தத்துவத்தைச் சொன்னவனோ .15.
எல்லாம் யானென்னு மிரும்பதவி யெட்டுறுமேல்
வல்லா யமுத வருக்கமென்ற மாதவனோ .16.
தத்வமசி யென்றுசொலுந் தத்துவத்தை யன்பாக
யுத்தவருக் கன்னா ளுரைத்த பெருமானோ .17.
உண்மையில்லாக் காயமதை யுன்னதெனக் கொள்ளாமல்
வண்மையுட னுன்னை மதியென்ற மாதவனோ .18.
சித்தசித்தோ டீச்சுரனைத் தீர்மானஞ் செய்தறிந்தால்
சித்தசுத்தி யாகுமென்று செப்புமருட் சீதரனோ .19.
நாரதருக் கேற்றபதி னாறா யிரவுருவாய்
காரெனவே நின்ற கருணைப் பெருமானே .20.
வேதத்தில் நன்றாய் விதித்தவிதி யத்தனையும்
சாதித்தால் ஞானமெனச் சாற்றுந் தயாபரனே. .21.
எல்லாக் கருமமுநீ யென்பால் விடுத்தியற்றில்
பொல்லாத பாவவினை போகுமென்ற புண்ணியனோ. .22.
சாங்கியத்தில் சொற்றவிதி தப்பாம லாசரித்தால்
தீங்ககலு மென்றுமுனஞ் செவ்வாய் திறந்தவனோ. .23.
முத்திதனை யெய்தமுடிவில்லா ஞானமெனும்
பத்தியெய்து கென்ற பராற்பரனு நீர்தாமோ. .24.
செம்பவள வாயுஞ் சிறந்தமுகத் தாமரையும்
என்புருக வென்னைநினைந் தேத்துகென்ற வீச்சுரனோ. .25.
மாறாத வாசையென்பால் வைத்தால் பிறப்பிறப்பு
வாராதென் றோதிமுனம் வாழ்வித்த மாயவனோ. .26.
வஞ்சமற்ற பாவி வணங்கா முடியோனைப்
பஞ்சவராற் கொன்றருளிப் பார்முழுதுந் தந்தவனோ .27.
தெய்வத் துரைத்தனமே தேடாத் திரவியமே
வைவச் சுதமனுவாய் வந்துதித்த மாயவனோ .28.
கருணா கரக்கடலே காரான மேனியனே
அருணாம் பரமே யழகாநீ கண்வளராய். .29.