வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

31. பாதுகையின் விசேஷ உரிமை

பெரிய பெருமாளுக்குப் பெரிய பிராட்டியன்றி மற்றும் பல அந்தப்புர மஹிஷிகள் உண்டு. அவன் தன் திருவுள்ளப்படி ஒரு முறை வைத்துக்கொண்டு அந்த அந்தத் தேவியின் அருகே செல்வான். இந்தப் பாதுகாதேவிக்கு மட்டும் மற்ற தேவியரைப் போல் முறையென்பது கிடையாது. அவன் எந்தத் தேவியிடம் அணுகினாலும் பாதுகையின் துணை உண்டு. இந்தத் தேவி பாதுகை வடிவு கொண்டுள்ளதால் அவன் இவளுடன் எங்கும் செல்வதில் மற்ற தேவியர் பொறாமை கொள்ளவும் இடமில்லை. இப்படி எப்பொழுதும் பிரியாது துணை புரியும் தேவியாய் விளங்குகின்றாள் பாதுகை. மேலும் எம்பெருமான் திருவடியை எவர் முன்னிலும் தொடும் உரிமை பாதுகைக்கே உண்டு. அந்தப்புரத்தில் ஒருத்தியின் அறைக்கு மற்றொருத்தி செல்வதில்லை. பாதுகாதேவி எல்லா இடங்களிலும் கூச்சமின்றி அவனுடனே செல்லுபவள். இடைப் பெண்களிடத்தில் மற்றொருத்திக்குத் தெரியாது ஒருத்தியிடம் கண்ணனாய் நின்று செய்யும் குறும்புச் செயல்களையெல்லாம் நேரில் காணும் சாட்சியாய் விவங்குமவள் பாதுகாதேவி. இப்படி கணப்பொழுதும் அவனை விடாது சுற்றுமவள் பாதுகையே என்கின்றார் தேசிகன்.

32. பெருமாளும் பாதுகையும் ஒருவருக்கொருவர் வசப்பட்டவர்

சுதந்திரமென்பது பெருமாளுக்கும் பாதுகைக்குமே உண்டு. பெருமாள் வெளியில் எழுந்தருள்வதானால் பாதுகையை எதிர்பார்த்தேயாக வேண்டும். ஆதலின் பாதுகைக்கு வசப்பட்டவனாகின்றான். அதைப் பெருமாள் தரிக்காவிட்டால் பாதுகைக்குப் பயன் இல்லை. ஆதலால் அவனுக்கு வசப்பட்டவள் பாதுகை. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வசப்பட்டு நிற்க வாய்ப்பு உண்டேயன்றிப் பிறருக்கு வசப்படும் நிலை இவ்விருவருக்கும் இல்லை. மற்ற பிரபஞ்சம் முழுதும் இவர்களுக்கு வசப்பட்டதேயாம். இதை எடுத்துரைக்கின்றார் தேசிகன்.

33. பாதுகை பெருமாளுக்கு ஏற்ற உருவு கொள்ளல்

எம்பெருமான் எந்த வடிவு கொண்டாலும் எங்கு அவதரித்தாலும் பிராட்டி அவனைப் பிரிய மாட்டாள். வாமந ப்ரஹ்மசாரியாய் உருவம் கொண்ட பொழுதுகூட அவனைக் கணப்பொழுது பிரிந்திருக்கப் பிராட்டி உடன்படாததால் மான்தோலால் அவளை மறைத்துக்கொண்டன்றோ பலியிடம் யாசித்தான்! அவ்வாறே பாதுகையும் அவன் கண்ணனாகவோ திரிவிக்கிரமனாகவோ வடிவு கொண்டாலும் அவனைப் பிரிவதில்லை. கண்ணன் சிறு குழவிப் பருவத்தில் சகடவடிவுடன் தீங்கு செய்ய வந்த முரட்டு அசுரனைத் தன் மெல்லிய திருவடியால் உதைத்துத் தள்ளியபோது திருவடிக்கு ஏற்படும் வேதனைக்கு அஞ்சி இப்பாதுகையன்றோ ஊதி ஒத்தடம் கொடுத்துத் தடவி விட்டுக் காத்தது என்கின்றார் தேசிகன். அத்துடன் நில்லாது அவன் கொள்ளும் சிறியதும் பெரியதுமான திருமேனிக்கு ஏற்பப் பாதுகையும் அத்தகைய திருவுருக் கொள்வதும் ஒரு வியப்பு. திரிவிக்ரமனாய் உலகளந்த திருவடிக்கு ஏற்றவாறு பெரிய உருவம் கொண்டது பாதுகை. இங்குப் பெரிய பெருமாள் மூலவர் வடிவுக்கும் உத்சவத் திருமேனிக்கும் உள்ள திருவடியின் அளவுக்குத் தக்க உருவம் கொள்கின்றது. பாதுகை அவன் கொள்ளும் வடிவுக்கு ஏற்றவாறெல்லாம் தானும் கொள்வதைப் போற்றி மகிழ்கின்றார் தேசிகன்.

34. பாதுகை வெளியிடும் ஸாரார்த்தங்கள்

"பாதுகையே ஆழ்வார்-ஆழ்வாரே பாதுகை என்று கூறினோம். பாதுகைதான் ஆழ்வார் வடிவு கொண்டு தமிழ் மறையைக் கண்டருளியது. ஆழ்வாருடைய மகிழம்பூ மணம் திருவாய்மொழியிலும் வீசுகின்றது. மேலும் எம்பெருமானுடைய திருவடித் தாமரையின் பெருமையையே தமிழ் மறை போற்றுவதால் அதன் மணமும் வீசி அதனால் பெருமிதம் கொள்கின்றது அருளிச்செயல். பாதுகை திருவடியோடு சேர்ந்து ஒவ்வோர் அடிவைக்கும் போதும் செவிக்கு இனிய நாதங்கள் எழுகின்றன. அந்த நாதங்கள் எவை தெரியுமா? பாதுகை உபநிஷத்துக்களின் மணத்தை அருளிச் செயலில் சேர்த்து அவற்றையே இந்த ஸூக்தியும் போதிப்பதாய் உலகுக்குக் காட்டும் நாதங்களேயாகும். உபநிஷத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாதுகை வாயிலாக அனுபவிக்கின்றார் தேசிகன்.

35. பாதுகையைப் பந்தயம் வைத்தல்

கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் தேவிமார் என்று புராணமும் ஆழ்வாரும் கூறுகின்றனர். எல்லோரும் ஒரே காலத்தில் கண்ணன் பால் தத்தம் இஷ்டம் பெற விரும்புகின்றனர். கண்ணன் மறுப்பானா! அப்பெண்களின் எண்ணுக்கேற்ற அத்தனை திருமேனிகளை எடுத்துக் கொள்கின்றான். அந்த அந்தப் பெண்களின் இல்லங்களுக்கு எழுந்தருளப் பாதுகைகள் வேண்டுமே பதினாறாயிரம் திருமேனிகளுக்கு அவற்றினும் இரு மடங்கு உருவங்களைப் பாதுகை கொள்ள வேண்டியதாகின்றது. பாதுகைக்குத்தான் எத்தகைய தொண்டு புரிய நேர்கின்றது என்று வியக்கின்றார் தேசிகன். கண்ணன் ஆயிரக் கணக்கான உருவெடுத்துக்கொண்டு ஒரே காலத்திலும் எல்லாப் பெண்களின் வீட்டிலும் குதூகலிப்பதை அப்பெண்கள் அறியவில்லை. ஒவ்வொருத்தியும் தன்னுடன் மட்டுமே கண்ணன் இருப்பதாய் எண்ணுகின்றாள். கண்ணனுடன் கேளிக்கையாகச் சொக்கட்டான் ஆடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கு ஆட்டத்தின் நடுவிலேயே கண்ணன் எழுந்து மற்ற பெண்களிடம் சென்று விடுவானோ என்று ஓர் அச்சம் எழுகின்றது. அதற்காக அவன் எழுந்து நடப்பதற்குச் சாதனமான அவன் பாதுகையையே ஆட்டத்தில் பந்தயம் வைக்கின்றார்கள். ஆட்டத்தில் வெற்றி பெறுமவரைச் சேரும் அந்தப் பந்தயப் பொருள். எப்படியும் ஆட்டம் முடியும் வரையிலாவது அதை எடுக்க மாட்டானென்ற தைரியம் அப்பெண்களுக்கு. இந்த யுக்தி மற்றவர்க்குத் தெரிந்தால் அவர்களும் இவ்வாறே செய்வார்கள் என்ற அச்சத்தால் ஒவ்வொரு பெண்ணும் பந்தயம் வைக்கும் செய்தியைக் கண்ணனுக்கு மட்டும் கேட்கும்படி அவன் காதில் இரகசியமாகக் கூறுகின்றார்களாம். இப்படி பெண்களும் பாதுகை வாயிலாக நன்மை பெறுவதை அழகாய் வருணிக்கின்ருர் தேசிகன்.

36. பாதுகைக்கு எல்லாக் கைங்கர்யங்களிலும் முக்கியப் பங்கு

திருவரங்கன் ஸந்நிதியில் பாதுகைக்குப் பல விசேஷ உரிமைகள் உண்டு. பல அடியார்கள் வேறு பயனே நாடாமல் பெரிய பெருமாளின் திருவுள்ள உகப்பையே பயனாகக் கொண்டு பற்பல விசேஷ உத்ஸவங்களை நடத்துகின்றனர். குடை-சாமரம்-திருவால வட்டம் முதலிய கைங்கர்யக் கருவிகளுக்குச் சிற்சில சமயங்களில் தான் உபயோகம் உண்டு. ஆனால் பாதுகைக்கு மட்டும் ஒவ்வோர் ஆஸ்தாநத்துக்கு எழுந்தருளும் போதும் ஒவ்வோர் உபசாரத்தை ஸமர்ப்பிக்கும்போதும் முக்கியப் பங்கு உண்டு கைங்கர்யக் கருவிகளுள் பாதுகைபோல் முக்கிய ஸ்தானம் வகிப்பது வேறு இல்லையென்று திடமாய்க் கூறலாம். இப்படி பாதுகையின் சிறப்பைக் கொண்டாடுகின்றார் தேசிகன்.

37. கெளஸ்துபத்தினும் சிறந்தது பாதுகையின் மணி

திருவரங்கன் திருமேனியின் மேற்பகுதியான திருமார்பில் கெளஸ்துபமென்னும் இரத்தினம் பிரகாசிக்கின்றது. அதைச் சீவனுக்கு அதிஷ்டாந தேவதையென்று சாஸ்த்ரம் கூறும். பாதுகையோ திருமேனியின் கீழ்ப்பகுதியான திருவடிக்கும் கீழே விளங்குகின்றது. இதில் உள்ள பல இரத்தினங்களின் ஒளிக்கு அடியார்களின் பாபங்களைப் போக்குவதும் அதன் வாயிலாகச் சீவர்களை மோக்ஷம்வரை கொண்டு சேர்ப்பதுமே செயல். இவற்றின் பெருமையைச் சிந்திக்கும் போது ஜீவர்களுக்குத் தேவதையென்ற பெயரோடு நிற்கும் கெளஸ்துபம்கூட இவற்றிலும் தாழ்ந்ததே என்று கூறுவதற்கு என்ன தடை? என்கிறார் தேசிகன்.

38. எம்பெருமானிடம் பாதுகைக்குச் சலுகை மிகுதி

சேதநன் அபயம் வேண்டித் திருவரங்கனை அணுகுகின்றான். அவனது பாபத்தால் சீற்றம் கொண்ட எம்பெருமான் இவனைக் காண விரும்பாது வலப்பக்கம் திரும்புகின்றான். கருணையே வடிவு கொண்ட பெரிய பிராட்டி சேதநனிடம் கருணை காட்ட வற்புறுத்துகின்றாள். இடப்பக்கம் திரும்பினாலோ பொறுமையின் உருவமான பூமிதேவி சேதநன் பாபங்களைப் பொறுக்குமாறு வலியுறுத்துகின்றாள். இருவரிடமும் தப்பிக் கொள்ளக் கீழே நோக்கினால் அவன் அப்புறம் நகராதபடி பாதுகை அவன் திருவடிகளப் பிடித்துக்கொண்டு சேதநனுக்காக மிக மிகப் பரிந்து பேசி அவனைக் காத்தருளும்படி நிர்ப்பந்திக்கின்றாள். எம்பெருமான் என்ன செய்வான்? பாதுகையிடமிருந்து தப்ப முடியாமல் திணறுகின்றான். வேறு வழியின்றிச் சேதநனுக்கு அபயமளித்துக் காத்து விடுகின்றான். இப்படி மற்ற பிராட்டிமாருக்கு இல்லாத சலுகை திருவரங்கனிடம் பாதுகைக்கு உண்டென்று களிக்கின்றார் தேசிகன்.

39. பாதுகைக்கு ஒய்வில்லாத பொறுப்பு

உலகில் பெற்றோருக்கு ஒரே புதல்வன் இருந்தால் அவர்கள் தம் அன்பு முழுதையும் அவனிடமே சொரிவது இயல்பு. திருவரங்கன் ஏழு உலகங்களையும் தன் குடும்பமாகக் கொண்டுள்ள கிருஹஸ்தன் என்னப்படுகின்றான். ஒரே புத்திரனிடம் வைக்கும் அன்பை ஒவ்வொரு ஜீவனிடமும் வைத்து உலகைக் காக்கின்றான். அவனுக்கு உலகத்தைத் தாங்குவதில் சற்று ஒய்வு உண்டு. பாதுகைக்கு மட்டும் ஒய்வே இல்லை. ஏன்? அவன் திருக்கண் விழித்திருக்கும் நிலையில் நடந்து செல்லும்போதும் நிற்கும்போதும் பாதுகை அவன் திருவடிக்கீழ் நின்று அவனத் தாங்குகின்றது. அவன் திருப்பள்ளி கொள்ளும் பொழுதும் உலகைத் தாங்கும் பொறுப்பைப் பாதுகையிடம் வைத்து விடுகின்றன். வனவாச காலத்தில் தனியே நின்று நாட்டை ஆண்டு பழகியவளல்லளோ பாதுகை. இங்ஙனம் திருவரங்கன் விழிப்பிலும் உறக்கத்திலும் பொறுப்பைத் தாங்கும் அவளுக்கு ஒய்வே இல்லையேயென்று கவலையடைகின்றார் தேசிகன்.

40. தேவமாதர் தாலியிலும் பாதுகைச் சின்னம்

நம் நாட்டுப் பெண்கள் தங்கள் ஸெளமங்கல்யச் சின்னமாக அணியும் பொன்னாலான திருமங்கலியங்களில் எம்பெருமான் திருவடியை நினவூட்டும் திருமண்காப்பு வடிவத்தைப் பொறித்து அணிகின்றனர். இந்திரன் முதலிய திக்பாலர்களின் அந்தப்புரத்துப் பெண்களோ தங்கள் கணவன்மார்கள் நெடுங்காலம் வாழ வேண்டுமென்ற விருப்பத்துடன் பாதுகையிடம் அளவற்ற பக்தி கொண்டு தங்கள் தாலிகளில் பாதுகைச் சின்னத்தைப் பொறித்து அணிந்து கொண்டிருக்கின்றனராம். தேவமாதர் எம்பெருமானை விட்டு, அவன் திருவடியையும் விட்டுப் பாதுகையையன்றோ எல்லை நிலமாகக் கொண்டு வழிபடுகின்றனர். அதனால் தான் நம்மைக் காட்டிலும் நீண்டகால வாழ்வைத் தேவர்கள் பெற்றுள்ளார்கள் என்று முடிவு கட்டுகின்றார் நம் தேசிகன். நம் பெண்களும் இம்முறையைப் பின்பற்றினால் என்ன? செய்வார்களா?

வியாழன், 25 பிப்ரவரி, 2016

சந்தோஷம்

ரொம்பவே சந்தோஷமா இந்தப் பதிவை இடுகிறேன். சந்தோஷம்? நவம்பர் 15ம் தேதி தொலைத்த -- இல்லை இல்லை திருடு போன --போனை இன்று கைப்பற்றினால் சந்தோஷம் வராதா என்ன? காணாமல் போன InFocus M2 Mobile போனை ஜூலையில் வாங்கியிருந்தேன். மிக நன்றாக இருந்த அந்த போனை நவம்பர் 15ல் பறிகொடுத்த பிறகு, சில நாள்கள் தேடிக் கிடைக்காமல், ஒரு மாதம் போல ஒரு பேஸிக் போனை உபயோகப் படுத்தி அதன்பின் டிசம்பர் கடைசியில் இப்போது பயன்படுத்தும் கல்ட் 10 போனை வாங்கி அதில் சில கூகுள் ஆப்ஸை நிறுவுவதற்காக, என்னுடைய டெஸ்க் டாப்பில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போய் முயற்சிக்கையில் முதல் தகவல் என்னுடைய தொலைந்து போன போனில் ஏர்டெல் கார்டு போட்டு இருப்பதாகத் தெரிந்தது. ஓரிருநாளில் அந்த கார்டை மாற்றி bpl card போட்டிருப்பதாக கூகுள் ப்ளே சொல்ல என்னுடைய ஆர்வம் அதிகரித்து விடாமல் கண்காணித்து வந்தேன். ஆனால் வெறுமனே கேரியர் பெயரை மட்டும் வைத்து எப்படிக் கண்டுபிடிப்பது? இந்தத் தகவல் தெரியாவிட்டால் மொபைலைத் தொலைத்துவிட்டுப் புலம்பி வேறு போன் வாங்கி உபயோகப் படுத்தும் இலட்சக் கணக்கானோரில் நானும் ஒருவனாகவே இருந்திருப்பேன். ஆனால், தொடர்ந்து கவனித்து வந்ததில் போனில் சில நாள் ஏர்செல் கார்டு போடுவதும் பின் சில நாள் எடுத்துவிட்டு மீண்டும் போடுவதும் மறுபடியும் எடுப்பதுமாக போனை எடுத்துப் பயன்படுத்தியவன் என்னுள் கண்டுபிடிக்கும் ஆர்வத்தையும் இல்லை வெறியையும் வளர்த்து வந்தான். மூன்று நாளைக்கு முன் மீண்டும் ஏர்செல் கார்டு போட்டு உபயோகிக்க ஆரம்பித்ததும் என் வெறி அதிகமாகி, சில நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களின் உதவியோடு ஐஎம்ஐஈ எண் உதவி கொண்டு அந்த போன் எண்ணையும் அது இயங்கி வரும் இராமநாதபுரம் டவரையும் தெரிந்து, பின் ட்ரூ காலர் உதவியுடன் பெயரையும் தெரிந்து ஆள் இன்னாரென்று அறிந்து அவனின் அதிகாரி உதவியுடன் இன்று அவனிடம் பேசி போனை மீட்டு விட்டேன். அதன்மூலம் போனைத் தொலைத்துத் திரும்பப் பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் நானும் ஒருவனாகியிருக்கிறேன். எடுத்தவன் யார் தெரியுமா? என் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகளு தள்ளி வசிக்கும் ஒரு எம்சிஏ படித்த பிராமண இளைஞன். என்றோ எதற்கோ அவனை அவன் செய்த ஒரு தப்புக்காக நான் திட்டினேனாம். அதற்காகப் பழிவாங்க இப்படிச் செய்தானாம் அந்த "உலகு காப்பவன்"
சிலருக்கேனும் சந்தேகம் வரலாம். அது எப்படி கூகுள் ப்ளே காட்டும் என்று? ஆப்ஸை போனில் நேரடியாக நிறுவினால் ஒன்றும் தெரியாது. ஆனால் அதையே டெஸ்க் டாப் வழியாகப் பண்ணினால், நீங்கள் கூகுள் அக்கவுண்டில் எத்தனை டிவைஸ்களை ரெஜிஸ்டர் பண்ணியிருந்தாலும் அத்தனையையும் காட்டி எதில் நிறுவ என்று கேட்கும். அப்படிக் காட்டும்போதே அந்த டிவைஸ்கள் எந்த கேரியர் வழியாக (அதாவது பிஎஸ்என்எல், வோடோபோன், ஏர்டெல் என்று) இயங்குகின்றன என்பதையும் காட்டும்.
போன் தொலைந்துபோனபோது அதை இங்கு தெரிவித்திருந்தேன். பலர் வருத்தப் பட்டிருந்தார்கள். சிலர் எனக்காக ப்ரார்த்தனை பண்ணியிருக்கக் கூடும். அனைவருக்கும் அடியேனது நன்றிகள்.

புதன், 24 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

21. பாதுகையின் பாரதந்த்ர்ய உச்ச நிலை

பாதுகாதேவி இராமனுக்கு வசப்பட்ட நிலயில் உள்ளவளே யன்றிச் சுதந்திர நிலையை ஏற்பவளல்லள். இராமனேயே உயிராகக் கொண்ட லக்ஷ்மணனும் பரதனும் பிராட்டியும் கூடச் சுதந்திரத்தைக் கைக்கொண்டு இராமன் சொல்லுக்கு உடன்படாத நிலமை பெற்ற துண்டு. லக்ஷ்மணன் வனத்துக்கு வருவதைத் தடுத்து அயோத்தியிலே இருக்கும்படி இராமன் கட்டளையிட்டானே! லகஷ்மணன் அவ்வாறு செய்தானா? பரதனே முடி சூட்டிக் கொள்ளும்படி கட்டளையிட்டானே! பரதன் உடன் பட்டானா? பிராட்டிக்கு இராமன் வனத்தில் உள்ள கஷ்டங்களையெல்லாம் விளக்கி மாளிகையிலேயே இருக்கும்படி கூறினனே! செவி சாய்த்தாளா? இராமனுக்கு முன்பே புறப்பட்டாளே? நம் பாதுகாதேவியோ அத்தகையவ ளல்லள். நாட்டுக்குத் திரும்புமாறு கட்டளையிட அவ்வாறே செய்தாள். முடி சூட்டிக் கொள்ளும்படி நியமித்ததற்கு ஏற்பப் பரதன் சூட்டிய முடியை ஏற்றாள். நாட்டிலேயே வாழும்படி நியமித்ததற்கும் இசைந்தாள். இங்ஙனம் இராமபிரான் சொன்ன வண்ணம் செய்து பரதந்த்ர நிலயில் அம் மூவரையும் வென்றுவிட்டாள் பாதுகாதேவி. இப்படி ஒரு தோற்றம் தேசிகனுக்கு.

22. பாதுகைக்கு அரசாளும் திறமை உண்டு

மற்றெரு சுவைமிக்க அம்சம். பரதன் குடிமக்களுடனும் தாய்மாருடனும் சித்திர கூடத்துக்கு வந்திருக்கிறன். ஆள்பவன் இல்லாத நாட்டைக் காக்க இராமனை மீட்டு வருவதாக மக்களுக்கு உறுதி கூறியுள்ளான். பின் விளைவு என்ன? மரவடியை வாங்கிக்கொண்டு வந்து நிற்கின்றான் பரதன். நாட்டைத் தாங்கி நிற்க இராமபிரானையே எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். பரதன் தான் ஆராய்ந்து பார்த்தே பாதுகையை வாங்கி வந்ததாகக் கூறுகின்றன். அதாவது நாட்டைத் தாங்குமவன் இராமபிரான். அவனையும் சேர்த்துத் தாங்கும் பாதுகைக்கு நாட்டைத் தாங்குவது கடினமோ? உள்ளே ஒரு வஸ்துவைக் கொண்ட ஒரு பேழையைச் சுமப்பவனுக்கு உள்வஸ்துவைச் சுமக்கும் சக்தியில் ஐயமுண்டோ? இதைச் சிந்தித்துப் பார்த்துத்தான் அவ்வாறு செய்ததாகக் கூறுகின்றான். குடிமக்கள் மிக்க தெளிவு பெறுகின்றனர். இதை ஸ்வாமி தேசிகன் மிக அழகாய் விளக்குகின்றார்.

23. பெருமாள் நான்கு வடிவு கொண்ட கரணம்

மற்றும் ஓர் அம்சம். அடியார்களான தேவர்களுக்கு இன்னல் புரிந்து வந்த இராவணன் முதலிய எதிரிகளை ஒழிப்பதற்காகத் தன் ஸர்வேசுவரத் தன்மையை மறைத்து மனிதவுருக்கொள்ள வேண்டிய அவசியம் வந்தது எம்பெருமானுக்கு. அதற்காக இராமனாக மட்டும் அவதரித்தால் போதுமே பரதன்-லசஷ்மணன்-சத்ருக்நன் என்ற மூன்று தம்பிகளுடன் அவதரிக்க வேண்டுமோ என்ற ஐயம் எழலாம். இதற்கு விடை காண்கின்றார் தேசிகன்-பாதுகையின் பெருமையைச் சிந்திக்கின்றான் எம்பெருமான். மற்றவர்கள் அதில் ஈடுபட்டு ஆராதிப்பதுபோல் தானும் பூஜிக்கவேண்டுமென்று ஓர் ஆசை எழுகின்றது. தானே இராமனாக அவதரித்ததால் தன் பாதுகையைத் தானே ஆராதிப்பது நகைப்புக்கு இடமாகு மென்று கூசுகின்றான். அதற்காகத் தன் தம்பிகளாகவும் வடிவு கொண்டு அவர்களைக் கொண்டு பாதுகாராதநம் செய்வித்துத் திருப்தி பெற்றான். அந்தப் பாதுகையே திருவரங்கன் திருவடியில் சேர்ந்து நிற்கும் நிலையில் இராமபிரான் நேரிடையாகவே அந்தப் பாதுகையைத் தொழுவதில் இடர் எதுவும் இல்லை. தசரதர் மாளிகையில் இக்ஷ்வாகு வம்சத்துக்குக் குலதனமாய்த் திருவாராதனத்தில் இருந்து வந்த பெரிய பெருமாளை அவனது அவதாரமான இராமபிரான் அனுதினமும் வணங்கி வழிபடவில்லையா? உண்மையில் தன் தொடர்பை மறந்து வஸ்துவின் பெருமையை மட்டும் நோக்கும்போது இராமனே தன் பாதுகையை வழிபட்டாலும் குற்றமில்லை. திருமங்கையாழ்வார் பத்தராவிப் பெருமானப்பற்றி அதியற்புதமான பாசுரங்களைக் கொண்ட ஒரு பதிகமிட்டு அவனேயே அழைத்து அவனைப் பற்றியதேயாயினும் பொருளின் சுவையைக் கொண்டு தம்மிடம் அப்பதிகத்தைக் கற்றுக் கொள்ளும்படி கூறவில்லையா? இப்படி இராமனே வழிபடுதற்கு உரியது பாதுகையென்று நமக்குப் போதிக்கின்றார் தேசிகன்.

24. பாதுகை பேரரசி

உலகப் படைப்பு. காத்தல் முதலியனவெல்லாம் பாதுகாதேவியின் லங்கல்பத்தாலேயே நடைபெற்று அவள் பேரரசியாய் விளங்குவதாய்க் கண்முன்னே காண்கின்றார் தேசிகன். இந்தப் பெண்ணரசியின் ஆட்சிச் சிறப்பைக் கண்டு வியக்கின்றார். இப்படி அவளே அரசியாய் நின்று நடத்துவதாயின் பாதுகை என்று மட்டுமே அழைக்காமல் திருவரங்கன் பாதுகை ராமபாதுகை என்று ஆணினத்தைச் சேர்த்தே வழங்குவது ஏன்? என்று ஒரு கேள்வியை எழுப்புகின்றார். அதற்குக் காணும் விடை- அக்காலத்தில் பெண்ணினத்தின் ஆட்சிக்கோ அரசுரிமைக்கோ மதிப்பு இருந்ததில்லை. அக்குறை வராதிருப்பதற்காகத் திருவரங்கன் இராமன் ஆகிய ஆணினத்தை முற்பட்டுக் கூறலாயிற்று. உண்மையில் பாதுகாதேவியின் ஆட்சியே முழுவெற்றி கண்டதாகக் கூறி மகிழ்கின்றார். இக்காலத்தும் நாடுகளில் பெண்ணாட்சி சிறப்புடன் நடந்து வரவில்லையா? ஆகவே பாதுகை முடிசூடியபின் அரியணையில் அமர்ந்து அகண்ட பூமண்டலத்துக்கும் பேரரசியாயிருந்து முறையோடு ஆண்டதாகப் போற்றுகின்றார் தேசிகன்.

25. பாதுகையின் ஆட்சியே குற்றமற்றது

பதினான்கு ஆண்டுகள் நடந்த பாதுகையின் ஆட்சியில் ஏதாவது குறை கூற முடியுமா? இராமனது ஆட்சியில் குறைகள் உண்டு. தகுதியில்லாத சம்புகன் பெருந்தவம் புரிந்தான். அவனை இராமபிரான் கொன்றுவிட நேர்ந்தது. ஓர் அந்தணச் சிறுவன் அகாலமரணமடைந் தான். அந்தணன் வந்து இராமனது ஆட்சியைப் பழித்தான். அதற்காகப் பெருமுயற்சி கொண்டு அவனைப் பிழைப்பிக்க நேர்ந்தது. எப்படியும் குறை குறைதானே! இத்தகைய குறை எதுவுமின்றியன்றோ பாதுகாதேவி ஆட்சி புரிந்துவிட்டாள்! ஆகவே ராமராஜ்யத்தினும் பாதுகாராஜ்யம் மிகப் பெருமை பெற்றதாகக் கூறுவதற்கு என்ன தடை? இதை எடுத்துப் புகழ்கின்றார் தேசிகன்.

26. பாதுகை பின் இளவரசியாதல்

பாதுகை ஒப்பற்ற சிறப்போடு நாட்டை ஆண்டு 'பாதுகாராஜ்யம்' என்ற பெயரை வாங்கித் தந்தது. இராமபிரான் வனத்தினின்று நாட்டுக்குத் திரும்பியபின் பாதுகாராஜ்யம் முடிந்து விட்டதென்று கருத வேண்டாம். பொறுப்பை ஏற்றவர் உரியவர் திரும்பியதும் அவரிடம் சேர்ப்பதென்ற ப்ராமாணிக முறையைத் தழுவி இரண்டு பாதுகைகளும் தம் பெருந்தன்மையால் வனத்திலிருந்து திரும்பிய இராமன் திருவடிகளிடமே பேரரசுரிமையைத் தந்தன. ஆனால்தாம் இளவரசுரிமையைச் சாச்வதமாகப் பெற்று நாட்டை எந்நாளும் ஆண்டுவந்தனவென்று பாதுகையின் மனப்போக்குக்கு வியக்கின்றார் தேசிகன்.

27. பாதுகை எந்நாளும் பொறுப்புடையள்

பல்லாண்டுகள் இராமனைப் பிரிய நேரிட்ட பூமியை எக்குறையும் வராது இராமனிலும் சிறப்பாகத் தாங்கி நின்றாள் பாதுகை. அவன் வனத்தினின்று மீண்டதும் தான் தாங்கிநின்ற பூமியை அவனிடம் சேர்த்து அவனே தாங்குமாறு செய்தாள். பின் பூமியைத் தாங்கும் இராமனேயும் சேர்த்து எந்நாளும் தாங்கி நின்றாள் பாதுகை. தாங்கும் பொறுப்பு பாதுகையை விட்டு எந்நாளும் அகலவில்லை. வேறு யாருக்கு இந்தச் சக்தி உண்டு? என்று கேட்கின்றார் தேசிகன்.

28. பாதுகையே மோக்ஷம் தரவல்லது

செளநக பகவான் அர்ச்சைவடிவு கொண்ட எம்பெருமானே சரணமடைந்தவர்க்கு எளிதில் மோக்ஷத்தைத் தருவதாக அருளிச் செய்துள்ளான். த்வயமென்னும் ரஹஸ்யம் அவன் திருவடிகளையே மோக்ஷத்துக்கு உபாயமாகக் காட்டுகின்றது. தேசிகன் இன்னும் ஒரு படி முன் சென்று திருவரங்கன் பாதுகையே மோக்ஷத்தை எளிதில் தரவல்லதென்று கண்டு அதன் பெருமையைப் புகழ்கின்றார். திருவரங்கனது கருணைதானே பாதுகை வடிவு கொண்டதென்று காரணமும் காட்டுகின்றார்.

29. பிராட்டியும் பாதுகையை வணங்குதல்

வனவாசம் முடிந்து இராமபிரான் பிராட்டியுடன் நாட்டுக்குத் திரும்புகின்றான். இச்செய்தியை அனுமன் வாயிலாகக் கேட்ட பரதாழ்வான் மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கித் திருப்பாதுகங்களைத் தன் முடிமேல் எழுந்தருளச் செய்து ஸகல பரிவாரங்களும் புடை சூழ மரியாதைகளுடன் இராமபிரானிடம் வருகின்றான். அவன் முடியில் பாதுகைகளைக் காண்கின்றாள் சீதைப் பிராட்டி. உடனே அப்பாதுகையை வணங்கி உரிய உபசாரங்களைச் செய்கின்றாள். எதனால்? பிராட்டி தன் மெல்லிய திருக்கையால் வருடி இன்புறும் திருவடியைக் காத்துத் தருவது பாதுகைதானே! மேலும் சீதை இராமனுக்குத் தேவி. பாதுகையும் ஒரு தேவிதானே! பாதுகை முன்பே முடிசூட்டு விழாவைப் பெற்றவளாதலின் முதியவளாகின்ருள். இனி முடிசூடுதலைப் பெறப்போகும் சீதை இளையவள்தானே! சாஸ்த்ர முறைப்படி இளையவள் மூத்தவளை வணங்கி வழிபடுதல் பொருத்தமானது தானே! பிராட்டி தான் மட்டுமன்றித் தன்னுடன் வரும் தாரை முதலிய தோழியருக்கும் பாதுகையை வணங்கி நலம் பெறும்படி உபதேசிக்கின்ருள். இந்தச் சிறப்பை நினைந்து மனமுருகுகின்ருர் நம் தேசிகன்.

30. அர்ச்சை வடிவுக்கும் பாதுகை அவசியமாதல்

அர்ச்சைத் திருமேனியிலும் திருவரங்கன் பாதுகையை அணிந்து கொண்டு அற்புதக் காட்சியளிக்கின்றான். இராமனாய் நின்றபோதுதான் ஸஞ்சாரத்துக்குப் பாதுகை அவசியமாகின்றது. அர்ச்சை வடிவில் பள்ளி கிடக்கும் திருவரங்கனுக்குக் கூடப் பாதுகை அவசியமா? இல்லை. ஆனால் உயர்ந்த அரசியாய் விளங்கி நாட்டை ஆண்ட பாதுகாதேவியை விடவும் திருவரங்கனுக்கு மனமில்லை. அதற்காக ஒரு யுக்தி செய்தான் திருவரங்கன். அர்ச்சா ஸமாதியை மறந்தான். இராமாவதாரம் முடிந்த பின்பும் தன்னை இராமனாகவே கருதிக் கொண்டான். இதை உணர்ந்த பாதுகை தானே திருவடியில் வந்து சேருகின்றது. இப்படி அவன் சாதுரியத்தை வியந்து பேசுகின்றார் தேசிகன்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

14. ஸாத்துவிகத் தியாகம் பாதுகையளவும் செல்லல்

எந்தக் கடமையைச் செய்தாலும் ஸாத்துவிகத் தியாகம் மிக அவசியமானது. ‘எம்பெருமான் தான் கொடுத்த சரீர. இந்த்ரியங்களைக் கொண்டு தான் கொடுத்த அறிவின் துணை கொண்டு தன் உகப்புக்காகத் தானே முன் நின்று செய்விக்கின்றான்' என்ற உணர்ச்சியே ஸாத்துவிகத் தியாகமெனப்படுகின்றது. இதை எம்பெருமானுடனும் அவன் திருவடியுடனும் நில்லாது அவன் பாதுகை வரையில் செய்தால்தான் நிறைவு பெறுமென்றும் இதுவே உச்சநிலையென்றும் காட்டுகின்றார். இல்லையேல் யாகம் முதலிய கருமங்களுக்குப் பசுவதமும் வேள்வி செய்ததாய்ப் பெயர் பெறுவதுமே பலனாய் முடியுமென்று விளக்குகின்றார் தேசிகன்.

15. வனம் புகவும் பாதுகையே துணை

பாதுகையைத் திருவரங்கன் தொடர்புடன் அனுபவிப்பதில் இனிமை ஒரு புறம் இருக்க, இராமபிரானோடு சேர்த்து அனுபவிக்கும்போது நமதுஉள்ளம் பறிபோகின்றது. தந்தை சொற்கொண்டு இராமபிரான் வனத்துக்குப் புறப்படுகின்றான். குல முறையாக வந்த அரசைத் துறந்தான். அவனிடமே உயிரை வைத்திருந்த நகர மக்களை விட்டான். தன் நாட்டை விட்டான். யானை குதிரை தேர் முதலியவற்றை விட்டான். பிராட்டியையும் தம்பியையும் கூட வரவேண்டாமென்று மறுத்தான். பாதுகையை அவ்வாறு விடமுடிந்ததா? அதையே துணையாகக் கொண்டு புறப்பட்டானே! கல்லிலும் முள்ளிலும் அவனுடைய மெல்லிய திருவடி நடக்காமல் பாதுகாக்கப் பாதுகைதானே துணை புரிந்தது? அவ்வாறே அடியார்கள் இராமனை விட்டாலும் அவன் திருவடியை விட்டாலும் தங்கள் பாதுகாப்புக்குப் பாதுகையை விட முடியாதென்ற உண்மையை விளக்குகின்றார் தேசிகர் பெருமான்.

16. இராமனிலும் பாதுகை சிறந்தது

நன்கு சிந்திக்கும்போது மூவுலகுக்கும் பெருந்தலைவனான இராம பிரானைக் காட்டிலும் விஞ்சிய பெருமையுடையது அவன் பாதுகை என்று உணர்தல் எளிது. எப்படி? சித்திர கூடத்துக்குப் பரதன் வந்தது எதற்காக? இராமனை வனம் செல்லவிடாது அயோத்திக்கு மீட்டு வருவதற்காக. இராமன் செய்தது என்ன? பரதனிடம் பாதுகையைப் பணயமாக வைத்துத் தான் நாட்டுக்குத் திரும்பாது தன்னை மீட்டுக்கொண்டான். இதிலிருந்தே இராமனிலும் பாதுகை உயர்ந்து விடவில்லையா? பணயம் (அடகு) வைக்கும் பொருள் உயர்ந்ததாயிருந்தால்தானே அதனிலும் மதிப்புக் குறைந்த பொருளைப் பெற முடியும்! செல்வ நிலையங்களில் விலைமிக்க பொன் பொருளை வைத்துக் குறைந்த தொகையைப் பெறுவதை உலகில் காண்கின்றோமே! இக்கருத்தைக் கொண்டுதானே பெரியாழ்வாரும் மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்துப்போய்' என்று சிறந்த பணயமென்கின்றார். இவ் வம்சத்தை மிக அழகாகச் சித்தரிக்கின்றார் நம் தேசிகன்.

17. பாதுகையின் கருணை

இராமபிரான் வனம் சென்று விட்டான். தசரதன் வானுலகம் சேர்ந்துவிட்டான். வஸிஷ்டர் முதலியவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் மூத்தவன் இருக்க இளையவன் அரசை ஏற்பதில் வரும் உலகப் பழிச்சொல்லுக்கு அஞ்சிப் பரதன் முடிசூட மறுத்துவிட்டான். நாட்டுக்கு அராஜக நிலை. பின் பரதன் சித்திர கூடம் சென்று இராமனை நாடு திரும்புமாறு வேண்டுகின்றான். அப்பொழுது பாதுகையை நாட்டை ஆள்வதற்கு அனுப்புகின்றான் இராமபிரான். பரதனுடன் வந்து பாதுகாதேவி அரசை ஏற்கின்றாள். மக்கள் மனம் தேறுகின்றனர். சீதையைப்போல் பாதுகையும் வனம் வந்தே தீருவேனென்று பிடிவாதம் செய்திருந்தால் கோசல நாட்டு மக்களின் கதி என்ன? மக்கள் துடிப்புத் தீர என்ன வழி? என்று கூறிப் பாதுகா தேவியின் கருணைக்கு வியக்கின்றார் தேசிகன்.

18. பாதுகையின் பொறுமை

பொறுமையென்பது இராமபிரானிடம் சிறந்து விளங்கும் உயர்ந்த குணம். பாதுகா தேவியை நோக்கும்போது இராமனுடைய பொறுமையே பாதுகை வடிவு கொண்டதாய்க் கூறலாம். பாதுகாதேவியும் இராமனுடன் முழுதும் சென்றல் மஹாபாபியான இராவணனைக் கூடக் கொல்ல இடம் தந்திருக்கமாட்டாள். தேவர் முனிவர்களின் துன்பம் நீங்கியாக வேண்டுமே! அதற்காகப் பாதுகையைப் பரதனுடன் அனுப்பிவிட்டான் இராமபிரான். அவன் பொறுமையும் அவனை விட்டு அகன்றது. இராவணன் முதலிய எதிரிகளை ஒழித்து உலகைக் காத்தருளினான் இராமன். இவ்வாறு பாதுகா தேவி உலக நலத்துக்காகப் பெருமாளைப் பிரிந்தாள். இப்படி ஓர் அநுபவம் தேசிகனுக்கு.

19. பாதுகை இராமன் திருவடியோடு ஒன்றிய காரணம்

பாதுகா தேவி முதலில் இராமபிரான் திருவடியின் பெருமையையும் அத்திருவடி பல அவதாரங்களிலும் செய்த திவ்ய லீலைகளையும் சிந்திக்கின்றாள். கணவருக்குத் துரோகம் செய்து சாபத்தால் கல்லுருவில் கிடந்த அகலிகைக்குப் பெண்ணுருவம் கொடுத்துக் காத்தது அவன் திருவடிதானே! கிருஷ்ணாவதாரத்தில் சகட வடிவு கொண்டு வந்த அசுரனை மெல்லிய இந்தத் திருவடிதானே உதைத்து ஒழித்தது! த்ரிவிக்ரம அவதாரத்தில் பிரமன் சேர்த்த தீர்த்தத்தைப் புனித கங்கையாக்கித் தந்தது இந்தத் திருவடிதானே! கரியுருவில் கிடந்த பரீக்ஷித்தை மஹாராஜ வடிவு கொடுத்துக் காத்ததும் இந்தத் திருவடி தானே! மேலும் இந்த மெல்லிய திருவடிதானே பாண்டவர்க்காகத் தூது சென்று "பாண்டவ தூதன்' என்ற திருநாமத்தையும் வாங்கித் தந்தது! உள்ளம் கவரவல்ல, திருவடியின் இந்த லீலகளையெல்லாம் சிந்தித்துப் பாதுகா தேவி இத்தகைய திருவடியை எந்நாளும் பிரியக் கூடாதென்றே துணிந்து திருவடியோடு ஒன்றியிருந்தாள்.

20. பின் பாதுகை திருவடியைப் பிரிந்தது ஏன்?

பின் பாதுகை திருவடியைப் பிரிந்த காரணம் கேண்மின். இராமனது பிரிவைத் தாங்க முடியாத குடிமக்கள் திரண்டு பரதனை முன்னிட்டுக் கொண்டு சித்திர கூடம் வந்துவிட்டார்கள். பரதன் இராமனை மீண்டு வந்து அரசை ஏற்குமாறு வலியுறுத்துகின்றான் இராமன் உடன்படவில்லை. பரதன் மனம் நொந்து பழி கிடக்க முற்படுகின்றான். இத்துணைப் பரிவுடனும் மனநோவுடனும் பிரார்த்தித்த பரதன் விரும்பியபடி நாடு திரும்புதற்கு இராமனது திருவடி உடன்படவில்லை. பரதனது ஆர்த்தியைப் பொருட்படுத்தாது அவன் விருப்பத்தை மறுத்துத் தான்றோன்றியாய் யதேச்சாதிகாரம் செலுத்தத் திருவடி முற்பட்டதாய்ப் பாதுகை எண்ணுகின்றது. திருவடியின்மீது வெறுப்பும் சீற்றமும் பாதுகைக்கு. கீழ்க் கூறிய திருவடியின் பெருமையெல்லாம் மறந்து போகின்றன. பரதனது வேண்டுகோளைப் புறக்கணித்துக் காட்டுக்கே செல்லும் இந்தத் திருவடியால் தனக்கு என்ன ஆகவேண்டும்? என்று கருதுகின்றது பாதுகை. இனி அத்திருவடியுடன் வாழக் கூடாதென்று நினைத்துப் பரதனைத் தேற்றி அழைத்துக் கொண்டுபோய் இராமனிலும் பன்மடங்கு சிறப்புடன் ஆட்சியை நடத்தினாள் பாதுகாதேவி. இப்படி ஒர் அதிசயக் கற்பனை தேசிகன் திருவுள்ளத்தில் உதிக்கின்றது.

(தொடரும்)

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

தன்னுடைய “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி-உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி இந்த வாரம் (22-2-2016) ஆரம்பித்திருப்பது அயோத்யா காண்டம். கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/listen/tplel8bvf9ictx6/026_SSR_(22-02-2016).mp3

அல்லது

http://1drv.ms/1Or2soB

திங்கள், 22 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

8. பாதுகை -- ஆழ்வார் -- ஸ்ரீசடாரி எல்லாம் ஒன்றே
ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரத்தில் ஒவ்வொரு பத்ததியிலும் உள்ள விசேஷங்களையெல்லாம் இங்கு விரிக்கில் இதுவே ஒரு பெரிய நூலாய்ப் பெருகிவிடும். ஏதோ ஸ்வாமி பாதுகையை அநுபவித்த முறையை நம் சிற்றறிவுக்கு எட்டிய வரை சிறிது பேசி மகிழ்வோம். விபவ தசையில் இருந்த இராமன் அர்ச்சைத் திருமேனியில் உள்ள திருவரங்கனை வணங்கி வழிபட்டபோதிலும் இரண்டு மூர்த்திகளும் ஒருவரே யென்னும் உண்மை நிற்க அர்ச்சைத் திருமேனியில் உள்ள இனிமை திருவரங்கன் தன்னையே கவர்ந்து தானே இராமனது உருக்கொண்டு ஆராதிப்பவனும் ஆராதிக்கப்படுபவனும் தானேயாக இருந்த உண்மையையும் உணர்ந்து அநுபவித்தல் சிறக்கும். ஆகவே இந்தத் திவ்ய ஸூக்தியை அநுபவிக்கும்போது இராமன் பாதுகை -- திருவரங்கன் பாதுகை -- நம்மாழ்வார் -- ஸ்ரீசடாரி இந்த நான்கும் ஒன்றிநின்றே நமக்குத் திவ்ய அநுபவத்தைக் கொடுப்பதான உணர்ச்சி நமது உள்ளத்தில் உதிக்கும். உதிக்கவேண்டும்.
9. நூலின் தொடக்கத்தில் புகழப் பெற்றவர்.
ஸ்வாமி தேசிகன், திருவரங்கனது பாதுகையை முடியில் தரிக்கும் பாக்யவான்களின் திருவடிப் புழுதிபட்ட இடங்களிலெல்லாம் க்ஷேமம் பெருகுமென்று புகழ்ந்துகொண்டே நூலைத் தொடங்குகின்றார். அடுத்துப் பரதாழ்வான் நினைவு வருகின்றது. எதனால்? பரதன் இராமபிரானிடமிருந்து பாதுகையைப் பெற்றுவந்து அதன் தலைமையில் அரசாட்சியை நடத்தியதால்தானே பாதுகையின் பெருமை உலகுக்கு அறியலாயிற்று! பின் நம்மாழ்வாரைத் தொழுகிறார். நம்மாழ்வார் -- பாதுகை இருவருக்கும் சடாரி என்றே பெயர். அவர் கண்ட தமிழ்மறைதானே பகவதனுபவத்திற்கு வழிகாட்டுகின்றது. பின் சரணாகதி வேதமான ஸ்ரீமத் ராமாயணத்தை அவதரிப்பித்த வால்மீகி முனிவரைப் போற்றுகின்றார். வடமொழிநூலை முதன் முதலாக இவ்வுலகில் தோற்றுவித்த பெருமையும் பாதுகையின் பெருமையை உலகுக்கு முதலில் வெளியிட்ட சிறப்பும் வால்மீகி முனிவருடையதுதானே! பின் பாதுகையின் அனுபவத்தில் இறங்குகின்றார் தேசிகன்.
10. ஸ்ரீசடாரியால் வரும் நல்வாழ்வு.
பலர் ஆழ்வார்களின் அருளிச் செயலைப் பயிலும் பாக்கியமில்லாதவர். அவர்களிடம் எம்பெருமான் திருவுள்ளம் உகப்பதில்லையாம். அவர்களின் கதி என்ன? கருணாமூர்த்தியான நம்மாழ்வார் அவர்களை உய்விப்பதற்காக ஸ்ரீசடாரியின் வடிவு கொண்டாராம். அவர்கள் முடியிலும் ஸ்ரீசடாரி எழுந்தருள்வதால் எம்பெருமானுக்கு இருந்த வெறுப்பு மாறி அவர்களும் நல்வாழ்வு பெறுகிறார்களாம். இது தேசிகன் கண்ட ரஹஸ்யம்.
11. ஆழ்வார் வேளாளர் குலத்தில் அவதரித்தது ஏன்?
நம்மாழ்வார் அந்தணர் முதலிய குலத்தைவிட்டு வேளாளர் குலத்தில் ஏன் அவதரிக்கவேண்டும்? என்று ஒரு கேள்வி. இதற்கு உரிய விடை காண்கிறார் நம் தேசிகன். அந்தணர் குலம் எம்பெருமான் திருமுகத்தினின்றும் அரசர் குலம் அவன் திருத்தோளினின்றும் வைசிய குலம் அவன் துடையினின்றும் வேளாளர் குலம் அவன் திருவடியினின்றும் தோன்றியதாக வேதமே ஓதுகின்றது. அவன் திருவடிதானே மற்ற திருவவயங்களைக் காட்டிலும் அடியார்களுக்கு நல்வாழ்வளிக்கும் முக்கிய சாதனமாய் விளங்குவது! அந்தத் திருவடியினின்று தோன்றிய குலத்துக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பை மறுக்க முடியாதே!
அந்தச் சிறப்பை நாடறியச் செய்வதற்காகவே நம்மாழ்வார் அக்குலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாராம். பாதுகையோ அந்தத் திருவடிக்குக் காப்பாயுள்ளது. அந்தக் குலத்தில் அவதரித்த நம்மாழ்வார் தாமே இந்நிலவுலகில் முதல் ஆசார்யனாய்த் திகழ்கின்றார். அவரே பாதுகையாகிச் சடாரியென்ற பெயரையும் பெறுகின்றார்.
12. ஆழ்வாரும் பாதுகையும் செய்யும் உதவி.
வேதமே அனைத்துக்கும் மூலமாய் விளங்குவது. அதைக் கற்பதற்குத் தகுதி குறிப்பிட்ட சில வகுப்பினர்க்கே உண்டு. அதன் பொருளை அறிய எல்லார்க்கும் உரிமை உண்டு. ஆழ்வாரும் பாதுகையும் சடகோபன் என்ற பெயருடையவர். ஆழ்வார் வேதத்தின் உட்கருத்தைப் பொதித்து தமிழ் மறையாக்கி எல்லாரும் கற்பதற்கு உரியதாக்கினார். வேதத்தின் பொருளாய் விளங்குமவன் திருவரங்கன். பாதுகையோ அவனை வீதியில் அழைத்துவந்து அவனை அனைவரும் கண்டு களிக்கச் செய்கின்றது. இப்படி ஆழ்வாரும் பாதுகையும் வேதத்தையும் அதன் பொருளையும் முறையே காட்டிக் கொடுத்த பெருமையைப் புகழ்கின்றார் நம் ஆசார்ய ஸார்வபௌமர்.
13. இந்த நூல் பாதுகையின் இனிய நாதமே.
ஆழ்வாருக்கும் பாதுகைக்கும் உள்ள "சடகோபன்" என்ற திருநாமத்தை மிக்க பொருத்தமுடையதாய்க் காண்கின்றார் தேசிகன். ஆழ்வார் ஆயிரம் பாசுரங்களைத் தோற்றுவித்தார். பாதுகையோ இந்தப் பாதுகாஸஹஸ்ரம் என்ற பெயரில் ஆயிரம் சுலோகங்களைப் பிறப்பித்தது. பாதுகையின் இனிய நாதமே இந்த நூல் வடிவு கொண்டது. பாதுகையே தம்முள் புகுந்து தம் வாயினின்று இந்த ஆயிரம் ஸூக்திகளையும் எழுப்பியதாம். ஆழ்வார் தாம் அருளிச்செய்த திருவாய்மொழியையே எம்பெருமான் தம்முள் புகுந்து தாமே பாடுவித்துத் தம்மைப் பெயரளவில் நிறுத்தியதாகக் கூறவில்லையா? இப்படி ஆழ்வாரும் பாதுகையும் ஆயிரம் செய்யுளைக் கொண்ட நூல்களை அவதரிப்பிப்பதாய்க் கூறி மகிழ்கின்றார் தேசிகன். இது ஒரு ஸாத்துவிகத் தியாகம்தானே?
14. ஸாத்துவிகத் தியாகம் பாதுகையளவும் செல்லல்
எந்தக் கடமையைச் செய்தாலும் ஸாத்துவிகத் தியாகம் மிக அவசியமானது. 'எம்பெருமான் தான் கொடுத்த சரீர -- இந்திரியங்களைக் கொண்டு தான் கொடுத்த அறிவின் துணைகொண்டு தன் உகப்புக்காகத் தானே முன் நின்று செய்விக்கின்றான்' என்ற உணர்ச்சியே ஸாத்துவிகத் தியாகமெனப்படுகின்றது. இதை எம்பெருமானுடனும் அவன் திருவடியுடனும் நில்லாது அவன் பாதுகை வரையில் செய்தால்தான் நிறைவு பெறுமென்றும் இதுவே உச்சநிலையென்றும் காட்டுகின்றார். இல்லையேல் யாகம் முதலிய கருமங்களுக்குப் பசுவதமும் வேள்வி செய்ததாய்ப் பெயர் பெறுவதுமே பலனாய் முடியுமென்று விளக்குகின்றார் தேசிகன்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

3. திருவரங்கனிடம் தேசிகன் ஈடுபாடு

     ஸ்ரீதேசிகனுக்கு விபவவதாரத்தில் இராமபிரானிடமும் கண்ணனிடமும் அர்ச்சாமூர்த்திகளில் திருவரங்கன் திருவேங்கடமுடையான் --- பேரருளாளன் -- தெய்வநாயகன் ஆகிய திருமேனிகளிலும் அளவற்ற ஈடுபாடு உண்டென்பது புதிதாய்க் கூறவேண்டியதன்று. ஆனாலும் திருவரங்கனைப் பற்றிச் சிந்திக்கும்போதும் பேசும்போதும் மற்ற திருமேனிகள் எல்லாம் திருவரங்கனிடமே ஒன்றிவிடுவதாய் ஒரு தோற்றம் ஸ்வாமிக்கு வந்து விடுகிறது. அவன்தானே பெருமாளாகிய இராமபிரானால் ஆராதிக்கப்பெற்றுப் "பெரிய பெருமாள்" என்று அழைக்கப் பெற்றவன்! தேசிகனுக்கு அவனிடம் உள்ள ஈடுபாடு, திருவரங்கனுக்கென்று தாம் பாடிய அபீதிஸ்தவம், பகவத் த்யாந ஸோபாநம், தசாவதார ஸ்தோத்ரம் ஆகியவை தவிர மற்றும் பல ஸூக்திகளில்கூட, திருவரங்கனைப் பற்றிப் பேசியே தொடங்குவதும் முடிப்பதாயுமுள்ள அளவுக்கு ஆர்வத்தை எழுவித்துவிட்டது. ப்ரபத்தியை விளக்கும் ந்யாஸதிலகம், ஸ்ரீபாஷ்ய ஸாரார்த்தத்தைக் குறிக்கும் அதிகரண ஸாராவளி, திருவாய்மொழியின் ஸாரத்தைக் காட்டும் தாத்பர்ய ரத்நாவளி முதலிய ஸ்ரீஸூக்திகளில் கூடத் தொடக்கத்திலும் முடிவிலும் திருவரங்கனையே போற்றுவதைக் கொண்டே அவன்பால் தேசிகனுக்கு உள்ள ஈடுபாட்டை உணரலாம். தம்முடைய ஸூக்திகள் மட்டுமின்றி ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீஸூக்திகள் அனைத்தையுமே தமக்கு உரிமை இருந்தால் திருவரங்கனுக்கே வாரி வழங்கிவிடும் திருவுள்ளப் பாங்கு நம் தேசிகனுக்கு. திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பிரபந்தத்துக்கு ரஹஸ்ய வடிவில் உரையிட்டருளிய நம் தேசிகன், பரமபதநாதன் திருப்பாற்கடலில் உள்ள வியூகத் திருமேனிகள் -- ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்கள் -- அந்தர்யாமி உருவம் -- மற்ற அர்ச்சாமூர்த்திகள் ஆகிய அனைத்துருவங்களையுமே இவ்வாழ்வார் பெரிய பெருமாள் திருமேனி ஒன்றிலேயே கண்டுவிட்டதாயும் அவன் மற்ற எந்த வடிவைக் கண்முன் காட்டினாலும் தாய்ப்பாலையே கொண்டு வளரும் (பழைய காலத்துக்) குழந்தைகளுக்கு மற்ற உணவு ருசியாததுபோல் ஆழ்வாருக்கு ருசியாதென்றும் உறுதியாய் விளக்கியுள்ளார். ஆழ்வாருக்கே அந்தத் திருவுள்ளமோ, தேசிகனது திருவுள்ளமோ, தேசிகனது திருவுள்ளப் பாங்குதான் அவ்வாறு பேசவைத்ததோ அறியோம். ஆழ்வார் திருவுள்ளத்தில் ஊடுருவிச் சென்று உண்மை காணும் திறன் தேசிகனுக்கு உண்டே!

4. திருவரங்கனது பேராசை

       ஸ்ரீ தேசிகன் திருவாக்கினின்று பல ஸ்தோத்ரங்களையும் பல்வகைப் புகழ்ச்சிகளையும் பெற்றும் திருவரங்கன் திருவுள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை. ஸ்வாமியின் ஒப்பற்ற ஞானத்துக்கும் பெருமைக்கும் வியந்தே பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியும் "வேதாந்தாசார்யன்", ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்" என்ற மிகப் பெரிய விருதுகளை அளித்து மகிழ்ந்தனர். திருவரங்கன் திருவுள்ளத்தில் ஓர் ஆசை உதித்தது. ஆசைக்குத்தான் அளவுண்டோ? தேசிகன் திருவாக்கினின்று தனக்காக ஆயிரக்கணக்கான கவிகள் கொண்ட ஒரு ஸ்தோத்ரத்தைப் பெறவேண்டுமென்பதே அந்த ஆசை. ஸ்வாமியின் திருவவதாரத்துக்குக் காரணமாயிருந்த திருவேங்கடமுடையானே 108 சுலோகம் கொண்ட தயாசதகத்தால் முழுத்திருப்தியை அடைந்திருக்கும்போது திருவரங்கன் கொண்டது பேராசைதானே! தேசிகனது தகுதியை உணர்ந்து கடமையுணர்ச்சியோடு தானும் பிராட்டியும் அளித்த விருதுகளைப் பெற்ற ஸ்வாமியின் நீண்ட திருவாக்கைப் பெற அவன் ஆசை கொண்டதும் உசிதமே. தானே தேசிகன் உள்ளத்துப் புகுந்து ஸங்கல்பித்தான். அமுத வெள்ளம் ஸ்வாமியின் திருவாக்கினின்று பெருகியோடுகின்றது. ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் அவதரித்தது. உலகினர்க்கு மஹாபாக்யம்! இந்த ஸூக்தியையே உயிர் நாடியாகக் கொள்ளுதற்குப் பாங்காக ஸ்ரீமதாண்டவன் ஸம்ப்ரதாயத்துக்குத் தனித்த ஒரு வரப்ரஸாதம் இந்த ஸ்ரீஸூக்தி.

5. பாதுகையே தேசிகன் குறிக்கோள்.

        திருவரங்கன் விரும்பியது தேசிகனிடமிருந்து புகழ்மாலை. அவதரித்ததோ பாதுகையின் புகழ்த்திருமாலை. எப்படி? அதனைச் சிந்திப்போம். ஸ்வாமி கொண்ட முதல் தெய்வம் திருவரங்கன். ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் அவனை நேரடியாகப் பாடவில்லையே! உண்மைதான். உட்புகுந்து பார்க்கவேண்டும். எம்பெருமானிடம் பக்தி கொண்டவன் நலம் பெறுவதற்கு அவன் திருவடியையே பற்றுவதே பொருந்தும். ஏன்? திருமேனியைக் காட்டிலும் திருவடியே மனத்தில் சிந்திக்க எளியது. திருவடியைப் பற்றினால்தான் அவனுக்கு இவன்மீது கருணை பெருகும். உலகிலும் ஒரு மனிதனது கருணையைப் பெறுதற்கு அவன் பாதத்தையன்றிக் கையையோ தோளையோ கழுத்தையோ பற்றுவதில்லையே! மேலும் எம்பெருமான் திருவடியின் அமைப்பே அனுபவிக்க இன்பம் தரும். அவன் திருவடியையே புகழ்ந்து பாடியிருக்கலாமே! இவ்வாறு திருவரங்கனையும் அவனிலும் முக்கியமான திருவடியையும் விட்டுத் திருவடிகள் அணியும் பாதுகையைப் பற்றிக்கொண்டார் தேசிகன். அந்தத் திருவடிகளையும் காத்துத் தரவல்லதாகவன்றோ விளங்குகின்றது திருப்பாதுகம். அவனைவிட்டு அவனது திருவடியைப் பற்றுவது அடிமையின் சிறப்புநிலை. திருவடியையும் விட்டுப் பாதுகையைப் பற்றுவது அவனுக்கு அடியனார் தன்மையின் உச்சநிலை. அதில்நின்று தேசிகன் பாதுகைக்குப் புகழ்மாலையைச் சூடி அலங்கரித்து அழகு பார்த்துப் பேரின்பத்தை நுகர்ந்தருளினார்.

6. பாதுகையைப் பற்றியே பேசுதல்

       பாதுகையைப் பற்றியே அவதரித்த இந்நூலில் திருவரங்கன் கதி என்ன? அவன் திருவடியின் கதிதான் யாது? அரங்கனது பாதுகை அவன் திருவடிக்குப் பாதுகாவல் புரியும் பாதுகை என்று அவ்விருவரது தொடர்பைக் கூறியது கொண்டே அவ்விருவரும் திருப்தியடைய வேண்டுமோ? ஆம். தேசிகன் பாதுகையின் பெருமையை அனுபவித்துப் பேசும் சூழ்நிலையில் வேறொன்றுமே ஸ்வாமியின் திருக்கண்ணுக்கோ திருவுள்ளத்துக்கோ புலப்படுவதில்லையே! இந்தப் பாதுகா ஸஹஸ்ரத்தை அனுபவிப்பதற்கும் வழி தெரியவேண்டும். அரங்கனை இராமபிரான் வழிபட்ட தெய்வ மென்கிறார்களே! அவ்விருவரும் வெவ்வேறு என்று ஆகிவிடுமா? ஆகாது. பரமபுருஷன் ஒருவனே இராமன் வடிவில் நின்று ஆராதிப்பவனாகவும், அர்ச்சைத் திருவரங்கன் வடிவில் நின்று ஆராதிக்கப் படுமவனாகவும் உள்ள உண்மையை அறிந்து அநுபவித்தால் உள்ளம் தேனூறித் தித்திக்கும்.

7. பாதுகைக்கு வந்த அரிய வாய்ப்பு

          இதுவரை எத்தனையோ கவிகளும் ஆசார்யர்களும் பல்வகைக் காவ்யங்களையும் ஸ்தோத்ரங்களையும் நாடகங்களையும் இயற்றியுள்ளார்கள். அவர்களது உள்ளத்தில் எழாத ஓர் அற்புதச் சிந்தை தேசிகன் திருவுள்ளத்தில் தோன்றியதால் வந்தது, இந்த நூலின் படைப்பு. பெருமாளுக்கோ அவனிலும் விஞ்சிய அவன் திருவடிக்கோ பெறமுடியாத ஒரு பேறு --- ஆயிரத்தெட்டு திவ்யஸூக்திகளைப் பெறும் பெருமை அவன் திருப்பாதுகத்துக்குக் கிடைத்தது. நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைத் தமது திருவாய்மொழியில் ஒரு குழந்தை கர்ப்பத்துள் அடங்குவதுபோல் அடக்கிவிட்டதாய்க் கூறுகிறார். ஆனால் அவன் பாதுகையின் பெருமைகளைத் தம் நூலில் அடக்கமுடியவில்லையே என்று ஏங்குகிறார் நம் தேசிகன். பாதுகைக்கு அவன் திருவடிகளைத் தாங்கி ஸஞ்சரிப்பதே பணியாதலின் அதற்குப் பாங்காக முப்பத்திரண்டு வழிகளை (பத்ததிகளைக்) கொண்ட பாதுகா ஸஹஸ்ரம் அவதரித்தது நம் பாக்ய விசேஷம்.

…..தொடரும்…..