நாற்பதாவது ஸர்க்கம்
(ஸ்ரீராமன் ஹநுமானைப்பற்றிக் கேட்க அகஸ்தியர் கூறுவது)
இவ்வளவும் கூறக் கேட்ட ஸ்ரீராமசந்திரன், அகஸ்திய முனிவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்- "முனிவர்பெருமானே! வாலியினுடையதும் ராவணனுடையதுமான வலிமைகள் மிகமிக உயர்ந்தவையாக உள்ளன. ஆயினும் இவையனைத்தும், ஹனுமானுடைய பராக்கிரமத்திற்கு இணையாகாதவை என்று நினைக்கிறேன். ஏனெனில் சௌர்யம், ஸாமர்த்தியம், பலம், தைர்யம், அறிவு, நேர்மையாக நடப்பது, ஆகிய அனைத்தும் ஹனுமானிடம் குடிகொண்டிருந்தன. நூறு யோஜனை அகன்றுள்ள ஸமுத்திரத்தைக் கண்டு வாளரப்படை அதைத் தாண்டும் விஷயத்தில் கலக்கமுற்றிருந்த பொழுது, அதைச் சமாதானப்படுத்தி, கடலைக் கடந்து, இலங்கைக்குச் சென்று, ஸீதையைக் கண்டு ஸமாச்வாஸப்படுததியும், ராவணனுடைய குமாரன், சேனாபதி, மந்திரி குமாரர்கள், வீரர்கள் முதலானோரைக் கொன்றும், ராவணனுடன் ஸம்பாஷித்தும், இலங்கையைத் தீக்கிரையாக்கித் திரும்பி வந்தான். இவையனைத்தும் அவன் ஒருவனாலேயே செய்யப்பட்டதென்பதும் நாம் அறிந்ததே. மேலும், நடை பெற்ற யுத்தத்தில், இவனது வீரச் செயலுக்கு ஒப்பானதாக, காலனுடையவோ, இந்திரனுடையவோ குபேரனுடையவோ ஏன்? விஷ்ணுவினுடைய வீரதீரச் செய்கையோகூட முன்பு இருந்ததில்லை. இந்த மஹாநுபாவனான ஹநுமானுடைய வீரதீரச் செய்கைகளாலேயே, லக்ஷ்மணனை உயிருடன் பெற்றேன். ஸீதாதேவியைத் திரும்பப் பெற்றேன், ராஜ்யத்தையும் அடைந்து இப்பொழுது ஸுகமாகத் தேவரீர் போன்ற மஹான்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டும் இருக்கிறேன். இப்படிப்பட்ட மாவீரனான ஹநுமான், ஸுக்ரீவனுக்கு நண்பனாக இருந்துகொண்டும், ஏன் அவனுடைய விரோதியான வாலியை, நண்பனுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வதம் செய்யாமல் இருந்தான். அப்பொழுது தனது வலிமையைத் தான் அறிந்துகொள்ளாமல் இருந்தானோ? இவ்விஷயத்தில் அடியேனுக்கு உண்டாகியிருக்கும் ஸம்சயத்தைப் போக்கியருளவேண்டும்'' என்று.
அதற்குத் தென் திசைவாழ்முனிவரான அகஸ்தியர், ஹநுமான் முன்பாகவே ஸ்ரீராமபிரானிடம் கூறியது -"ஶ்ரீ ராமசந்திர! நீ கூறியபடி பலத்தினும் செய்கையிலும் புத்தியிலும் ஹநுமானுக்கு நிகரானவர் ஒருவரும் இலர். ஆனால் மிகப் பெரிய சாபத்தினால் அவன் தனது வலிமையை அறியாமலிருந்தான், இவனது பால்யச் செயல் இவனுக்கு இப்படிப்பட்ட சாபத்தைப் பெறச் செய்தது, இவன் அறியாமலே ரிஷிகளால் இடப்பட்ட சாபம் இது. நீ விரும்புகிற படியால் கூறுகிறேன். ஸாவதானமாகக் கேட்பாயாக -
சூரியனுடைய அருளினால் ஸ்வர்ணமயமாகச் செய்யப்பட்ட மலை ஸுமேரு என்பது. அதை ஆட்சி செய்து வந்தான் கேஸரீ" என்பவன். மனைவி அஞ்ஜனை என்பவன். அவள் வாயுதேவனுடைய அருளினால் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றாள். அது ஸ்வர்ணம் போல வர்ணமுடையதாக இருந்தது. அதை ஓரிடத்தில் விட்டுவிட்டுத் தாயான அஞ்ஜனாதேவி பழங்களை எடுத்துவரக் காட்டிற்குள் சென்றாள். சிறிது நேரத்தில் பசியெடுத்த குழந்தை, தாயாரைப் பக்கத்தில் காணாததால் அழுதது. பசிமேலீட்டால் அழும் அது, அப்பொழுதே உதித்துக் கொண்டிருக்கும் இளஞ் சிவப்பு நிறமுள்ள சூரியனைக் கண்டது. அது ஒரு கனியென்று நினைத்து, அதைப் பறித்துத் தின்னுமவாவுடன் சூரியனை நோக்கிப் பாய்ந்து சென்றது. சூரியனை நோக்கிச் சென்ற இந்தக் குழந்தையைக் கண்ட தேவர்கள் யக்ஷர்கள் தானவர்கள் முதலானோர் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள், 'இது செல்லும் வேகத்தைப் பார்த்தால், வாயு கருடன் மனம் இவைகள்கூட இதற்குச் சமமாகாதன போலுள்ளதே! இது இப்பொழுதே இப்படி இருந்தால், பெரியதானால் எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறதோ!' என்று அச்சம் கொண்டனர். சூரியனை நோக்கிச் சென்ற தனது குழந்தையைப் பார்த்து வாயுதேவன், சூரியன் குழந்தையை எரித்திடுவானோ என்ற பயத்தினால், பனிபோன்ற குளிர்ந்த காற்றுடன் பின்தொடர்ந்து காத்துச் சென்றான். தகப்பனான வாயுவினுடைய அநுஸரணையிஞல், வெகு தூரத்திலிருந்த சூரியனைச் சமீபித்து விட்டான். சூரியனும் இது ஒன்றும் (நல்லது கெட்டது) அறியாத சிசு என்று நினைத்து, இதை தஹிக்காமலிருந்தான்.
இந்தச் சிசு சூரியனை நெருங்கும் அதே தினத்தில், ராகு சூரியனை பக்ஷிப்பதற்காக அங்கு வந்துகொண்டிருந்தான். சூரிய ரதத்திற்குச் சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் வாயுகுமாரனைக் கண்டு பயந்தவனான ஸிம்ஹிகையின் குமாரனான ராகு, தான் சூரிய சந்திரர்களை ஹிம்ஸிப்பவனாக இருந்தபோதினும், தேவேந்திரனிடம் ஒடிச் சென்று புருவத்தை நெறித்துக்கொண்டு, 'தேவேந்திர! எனது பசிக்கு உணவாக சந்திர சூரியர்களை நியமித்துவிட்டு, இப்பொழுது, வேறொருவருக்குக் கொடுத்து விட்டாயே? ஏன்? நான் இப்பொழுது சூரியனை உண்ணச் சென்றேன். அவன் வேறெருவனுக்கு உணவாக ஆகப் போகிறான் . இதை நீ உடனே தடுக்க வேண்டும்'' என்றாள். இதைக் கேட்டு இந்திரன், மிக்க வேகத்துடன் ஆஸனத்திலிருந்து எழுந்து கொண்டு ஸ்வர்ணமயமான மாலையசைய, கைலாச மலை என விளங்கும் வெண்மையான யானையின் மீது அமர்ந்து கொண்டு வஜ்ராயுதத்தைக் கையிலேந்தியவனாக, சூரியன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான். நான்கு தந்தங்களுடனும், ஸர்வாலங்கார பூஷிதமும், மணியோசைகளுடன் கூடியதும், மதஜலப் பெருக்கையுடையதுமான அந்த ஐராவதம் என்ற யானையானது, தேவேந்திரனைச் சுமந்து கொண்டு மிக மிக வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த யானைக்கு முன்பாக ராகு சென்றான்.
மணியோசையைக் கேட்ட வாயு குமாரன் அந்தத் திசையை நோக்கித் திரும்பினான். அங்கு வரும் ராகுவைக் கண்டான். வட்டமான முகத்தை மட்டும் உடைய ஸிம்ஹிகா புத்திரனான ராகுவை, ஒரு பழமாக நினைத்து, சூரியனை விட்டுவிட்டு ராகுவைப் பறிப்பதற்காகப் பாய்ந்து வந்தான். தன்னைப் பிடிப்பதற்காகத் திரும்பி வந்த வாயுகுமாரனைக் கண்ட ராகு பயந்தவனாகி, "தேவேந்திர! தேவேந்திர! என்னை ரக்ஷிக்கவும" என்று கூச்சலிட்டுக்கொண்டு, இந்திரனைக் குறித்துத் திரும்பி ஓடினான். ராகுவைத் தொடர்ந்து ஓடிய வாயுகுமாரன். வெண்மையான ஐராவதத்தைக் கண்டான் இது ஒரு மிகப் பெரிய 'பழம்' என்று நினைத்து. ஐராவதத்தின் மீது பாய்ந்தான் இதைக் கண்ட தேவராஜன் தன் கையிலுள்ள வஜ்ராயுதத்தினால் மிகவும் லாகவமாக அடித்தான். இப்படி அடிக்கப்பட்ட வாயுகுமாரன் மலையின் மீது விழுந்தான்.. விழுந்த வேகத்தில் இவனுடைய இடது தாடை (ஹநு) முறிந்தது. மூர்ச்சையும் அடைந்தான்.
இதைக் கண்ட வாயுதேவன் மிகவும் கோபம் கொண்டான். ஸகல ப்ரஜைகளுக்கும் தீமையை உண்டுபண்ணக் கருதியவனாக தன்னுடைய ஸஞ்சாரம் அனைத்தையும், நிறுத்தியவனாய், குமாரனைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு ஒரு குகையின் உள்ளே சென்று அமா்ந்துகொண்டான். பிராணிகளின் மலஜல விஸர்ஜனம் செய்யும் இடங்களை (த்வாரங்களை) அடைத்துக்கொண்டும், மூச்சு விட்டு இழுப் பதைத் தடை செய்ததாலும், அனைத்து உலகுமே துக்கத்தில் ஆழ்ந்தது. ஸகலமும் அசைவு இல்லாமல் கற்சிலை போலாயிற்று. வேத ஒலியோ வேள்விக் கிரியைகளோ எங்கும் நடைபெற வில்லை.
இப்படியான ஒரு நிலை உண்டாகவே, தேவர்கள் அஸுரர்கள் மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பிரம்மதேவரிடம் சென்று, "பிரபுவே! எங்களைப் பாரும், எங்களுடைய இந்த மிகப் பெரிய வயிற்றைப் பாரும். நாங்கள் இப்படி மூச்சு விட்டிழுக்க முடியாதவர்களாகத் தபிக்கிறோம். ஏன் இப்படிப் பட்ட ஒரு நிலைமை உண்டாயிற்று? இதை நிவ்ருத்தி செய்து எங்களை ரக்ஷிக்கவும்” என்று வேண்டி நின்றனர்.
இதைக் கேட்ட பிரம்மா, நடந்தவற்றை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு; 'வாருங்கள், எல்லோருமாகச் சென்று, புத்ரசோகத்துடன் இருக்கும் வாயுவை ஸமாதானப்படுத்துவோம்.' வாயுதான் பிராணன், வாயுனே சுக்மரன், இந்த உலகம் அனைத்துமே வாயுரூபம், வாயு இல்லையேல் இவ்வுலகிற்கே ஸுகமில்லை.
वायुः प्राणः सुखंवायुः वायुस्सर्वमिदं जगत् ।
वायुना संपरित्यक्तं न सुखं बिन्दते जगत् ॥
வாயு : ப்ராண : ஸுகம் வாயு: வாயுஸ் ஸர்வமிதம் ஜகத் |
வாயுநா ஸம்பரித்யக்தம் நஸுகம் விந்தே ஜகத்து]
என்று கூறியவராக வாயு தமது குமாரனுடன் அமர்ந்துள்ள குகையை அடைந்தார். அங்கு ஸ்வர்ண விக்ரஹம் போன்ற குமாரனை மடியில் இறுத்திக்கொண்டு, துயரமடைந்த வாயுவைக் கண்ட பிரமனும் மனங்கலங்கினார்.