இம்முதற் பாட்டில் பகவானுடைய தன்மையும், அவனோடு பிராட்டியினுடைய பிரிவில்லாச் சேர்த்தியும், ஈச்வரக்ருபா கார்யங்களெல்லாம் இருவரும் சேர்ந்தே அநுக்ரஹிக்குமவை என்கிற உண்மையும் காட்டப் படுகின்றன. பிராட்டியின் சேர்த்தியில்லாவிட்டால் அவ்வித அநுக்ரஹங்கள் நமக்குக் கிடைக்கா என்பதையும் தெரிவித்துள்ளார். இவை யெல்லாம் ஒவ்வொரு வரியிலும் பதத்திலும்கூட நாம் நன்கு காணலாம்.
இந்தப் பாசுரம் “அருள்” என்று ஆரம்பித்து, “திருவே” என்று முடிகிறது. இவ்விரண்டையும் இசைத்து அநுஸந்தித்தால், லக்ஷ்மீ தத்துவமும், தயா தத்துவமும் வெகு அழகாக ஸூசிக்கப் பட்டதாகும். “அருள்தரும்” என்கிற சொற்றொடரில் “தரும்” என்பதை மூன்று வகையில் அன்வயித்துப் பொருள் கூறலாம்.. “தரும்” என்பதை வினைச்சொல்லாகவும், அதை “திரு” என்கிற எழுவாய்க்குப் பயனிலையாகவும் கொண்டால், “திருவே அருள்தரும்” என்று வாக்கியம் அமைகிறது. பயனிலையை முதலிலும் எழுவாயைக் கடைசியிலும் வைப்பதை இலக்கண முறையில் “விற்பூட்டு” என்னும் பொருள்கோளாகக் கூறுவர். “தரும்” என்னும் சொல்லை “அடியவர்” என்பதோடும், “தெய்வ நாயக” என்பதோடும் அன்வயித்து இரண்டு விசேஷ அர்த்தங்களைப் பெறலாம். அருள்தரும் அடியவர் - அருள் புரிகிறவர்களே அடியவர்கள் -- பகவத் தாஸ பூதர்கள். எவர்கள் உலக வாழ்க்கையில் சென்றவிடமெங்கும் எக்காலத்திலும் எவரிடத்திலும் அருளே புரிந்து வருகிறார்களோ, அவர்களே மெய்யடியார்கள். “அருள் கொண்டாடும் அடியவர்”, “அருள் மிகுத்ததொரு வடிவாய்”, “அருள்தரும் ஆரண தேசிகனே” என்று முன்னுள்ளோர் பாராட்டிய அருள். அருள் புரிபவர்களுக்கே அருள் கொடுக்கப்படும் என்கிற தத்துவமும் விசதமாகிறது. அருள்தரும் தெய்வநாயக என்பது மூன்றாவது அன்வயம். இம்மூன்று அர்த்தங்களையும் ஒரு மும்மணியாகக் கருதலாம். இவ்விதம் சில பதங்களை முன்பின் பதங்களுக்கிடையே வைத்து அப்பதங்களுடன் தனித்தனியே அன்வயித்து அர்த்த புஷ்டியையும் த்வனிமூலமாய் அத்புதரஸங்களையும் அமைப்பது இம்மஹாகவியின் ஸம்ஸ்கிருத -- தமிழ்க் கவனங்களிலெல்லாம் காணக்கூடிய ஒரு பேரழகு. முதல் பாசுரத்தில் மூன்று அருள்கள் --- “அருள்தரும் அடியவர்”, “நின் அருள்”, “அவதரித்தருளி” ; இரண்டாம் பாசுரத்தில் மூன்று திரு ; மூன்றாம் பாசுரத்தில் “மும்மறை”; நான்காம் பாசுரத்தில் மும்”மணி” -- (பன்மணி, சித்திரமணி, அத்திரமணி) இவைகளெல்லாம் சொற்களாலான மும்மணிகள். பொருள்கொள்ளுமிடத்து எத்தனையோ மும்மணிகளை ரஸிகர்கள் கண்டெடுக்கலாம். கவிஸிம்மத்தின் கவிதையை ஊன்றிப் படிக்கப் படிக்க எதிர்பாராத புதிய புதிய சொற்சுவையும் பொருட்சுவையும் பெற்று ஆனந்திக்கலாகும்.
“பத்துடையடியவர்க்கு எளியவன்” என்றார் நம்மாழ்வார். அருள்தரும் அடியர்பால் மெய்யை வைப்பவனென்று பாடுகிறார் நம்மாசார்யோத்தமன். “அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்” என்று திருமங்கைமன்னன் மங்களாசாஸனம். அந்த இரண்டு திருநாமங்களையும் எடுத்துக்கொண்டு ஓரோர் விசேஷணமிட்டு, “ அருள்தரும் அடியவர்பால் மெய்யைவைத்து” “தெருள்தர நின்ற தெய்வநாயக” என்று இங்கே பாடுகிறார். “அருள்தரும் அடியவர் பால் மெய்யை வைப்பவன்” என்றதால் “அப்படியல்லாதாரிடத்துப் பொய்யன்” என்று தோன்றுகிறது. “பொய்யர்க்கே பொய்யனாகும்” அன்றோ. மெய்யை வைப்பது என்றால் அவர்கள் விஷயத்தில் ஸத்யஸந்தனாக விளங்குவது; அல்லது பிரஹ்லாத பீஷ்மாதிகள் விஷயத்தில்போல் அவர்கள் வார்த்தைகளை மெய்யாக்குவது. “வைத்து” என்பதால் காப்பாற்றுவதற்காக (நிக்ஷேபமாக) ஒப்புவிக்கப்பட்டது என்று த்வனிக்கிறது. தன்னைக்காட்டிலும் தன்னடியாரிடத்து நம்பிக்கை வைத்துத் தனது ஸத்யத்திற்கு அவர்களை ரக்ஷகர்களாக்குகிறான் என்றதாயிற்று.
மேலும் “மெய்” என்னும் சொல்லுக்குச் “சரீரம்” எனப் பொருள் உண்டு. அவ்வர்த்தமும் கவியின் திருவுள்ளத்திலிருக்கிறது என்று தெரிகிறது. “மெய்யன்” என்றால் திருமேனியை யுடையவன் --- அது இங்கே அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம். அதன் ரக்ஷணத்தை அடியார்களிடம் ஒப்படைத்து வைத்ததாகப் பேசப்படுகிறது. அர்ச்சா -- திருமேனி அர்ச்சக --பராதீந அகிலாத்மஸ்திதியையுடைய தொன்றன்றோ˜ அதனிடத்தில் பரிவுடன் அதனைப் போற்றும் மெய்யடியவர்பால் அது வைக்கப்பட்டிருக்கிறது என்கிற ரஹஸ்யம் விளங்குகிறது.
அடியவர்க்கே, “மெய்யன்” -- விக்ரஹவிசிஷ்டன்; அல்லாதார்க்குப் புலப்படான். மெய்யை (திருமேனியை) மெய்யாக (உண்மையாக) வைப்பது அடியவர்பால்தான் என்று ஒரு ரஸமான அர்த்தமும் இங்கே த்வனிக்கிறது.
(தொடரும்)