41. பாதுகை-திருவடி சேர்த்தியழகு
ஸ்ரீதேசிகனுக்குப் பாதுகையால் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஒடுகின்றது. ப்ரஹ்மாதிகளின் ஐச்வர்யத்தையும் துரும்பாய் எண்ணித் திருவரங்கனது திருவடி-பாதுகை இவற்றின் சேர்த்தியழகையே அனுபவித்துக்கொண்டு இவ்வுலகிலேயே வாழ ஆசைப்படுகின்றார். பாதுகை சேருவதால் திருவடிக்கு ஒர் அழகு. திருவடியில் சேர்ந்து அதைத் தாங்குவதால் பாதுகைக்கு ஒர் அழகு. இந்தச் சேர்த்தியழகு தம் திருவுள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது என்கிறார் தேசிகன்.
42. இந்நூல் அவதரித்தது பாதுகையாலேயே
எம்பெருமானுடைய பெருமையைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டுமானால் விசேஷ ஞானம் வேண்டும். வேதாந்தங்களில் சிறந்த அறிவு வேண்டும். இரத்தினங்கள் பொதிந்த பாதுகைகளின் செவிக்கினிய நாதங்கள் அவ்வறிவை ஊட்டச் சாதனமாய் உபநிஷத்துக்களின் ஸாரார்த்தங்களைப் போதிக்கும் முன்னுரையாய் விளங்குகின்றனவாம். அவ்வொலிகளைக் கேட்டுக் கேட்டுத் தம் திருவாக்கினின்று செவிக்கினிய செஞ்சொற்களாய் இன்பமாரியாய் எழுகின்றனவாம். அக் கவிகள் திராட்சை கலந்துபெருகித் தரும் இனிப்பைப் பெற்றுள்ளனவாம். இம்முறையில் பெருகியதாம் இந்தப் பாதுகா ஸஹஸ்ரமென்னும் அமுத வெள்ளம். இப்படி தேசிகன் தாமே போற்றுகின்ருர் பாதுகையின் அருளால் வந்த தம் வாக்விலாஸத்தை.
43. பாதுகையின் உயர்வும் தம் தாழ்வும்
இந்நூலை இயற்றும் சூழ்நிலையில் பாதுகையின் பெருமையை நினைக்கும்போதே ஸர்வஜ்ஞரான தேசிகனுக்கும் உள்ளம் நடுங்குகின்றது. இயற்றுமவர் எவ்வளவு தாழ்ந்தவராயினும் அதனுள் கூறப்படும் விஷயத்தின் பெருமையால் நூல் சிறந்ததாகி விடுமென்று உள்ள வழக்கைக் கொண்டு துணிந்து நூல் இயற்றுகின்றர் தேசிகன். தம் கிரந்தமும் பாதுகையைப் பற்றியே பிறப்பதால் வால்மீகியின் நூலை ஒத்ததாகி விடுமென்று நம்பித் தைரியமடைந்து உவமை கூறுகின்றர். தூய்மையான யமுநாஜலமும் அசுத்தமான தெருத் தண்ணீரும் சேர்ந்தே கங்கையில் விழுந்தாலும் வேற்றுமை காணமுடியாதபடி ஸமமாகி விடுவதை எடுத்துக் காட்டுகின்றர். மேலும் இழிவான தம் வாயினால் பாதுகையைத் துதித்தால் பாதுகையின் பெருமைக்குக் குறைவு வருமோ என்று அஞ்சி மிக இழிவான உவமையைக் காட்டி மனம் தேறுகின்றார் மஹாதேசிகன். அதாவது-கங்கை நதியின் நீரை நாய் தன் நாவினால் நக்கிப் பருகினாலும் அதனால் கங்கையின் பெருமை குறைவதில்லையென்றும் ஆனால் நாயின் விடாய் தீர்ந்து விடுகின்றதென்றும் உவமானமிட்டருள்கின்றார். மேலும் தம் தகுதியின்மையை அறிந்தும் பாதுகையின் மகிமையைப் புகழ்கின்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு முறைதப்பிச் செய்யும் பக்தியின் வன்மையால் தைரியம் ஏற்பட்டுப் பேசுவதாயும் குழந்தைகள் பல கேளிக்கைகளைச் செய்வதுபோல் தாமும் சிறுபிள்ளை வீட்டாக இந்த நூலைச் செய்வதாயும் தெளிவு படுத்தியருள்கின்ருர். எப்படியாயினும் பாதுகையின் அநுக்ரஹ விசேஷத்தால் அமுத வெள்ளமோ என்று ஐயுறும்படி கங்கை வெள்ளத்தையும் அதிசயித்த செவிக்கு இனிய செஞ்சொற்களாகத் தம் வாயினின்று பொங்கி வருமென்று நிச்சயத்துடன் தொடங்குகின்ருர், உள்ளவாறு பாதுகையின் பெருமையை நூல் வடிவில் கொண்டு வருவதானால் அதற்குக் கருவிகள் அமைய வேண்டிய முறையே வேறு என்கின்றார். ஆகாயம் முழுதும் எழுதும் காகிதமாய், ஏழு கடல்களும் ஒன்றுகூடி எழுதுவதற்கு மையாகி, கவி கூறுமவன் ஆயிரம் திருமுகம் கொண்ட பரம புருஷனாக வாய்த்தால் திருவரங்கன் பாதுகையின் பெருமையை ஒருவாறு எழுதப் பாரிக்கலாமென்கிறார் மஹாகவி ஸார்வ பெளமரான மஹாதேசிகன்.
44. பாதுகையே பெரும் பயன்
உலகில் எத்தனையோ வகைப் பலன்கள் உள்ளன. அவையெல்லாம் நிலை நிற்பனவாகா. சிறுபொழுதுக்கு இன்பம் தருவதாய்க் காட்டி மறைவன. எம்பெருமான்தான் நம்மால் அடையப்படும் பெரும்பயனாவான். அவனிலும் இனிய சிறந்த பயன் அவன் திருவடி. எல்லாப் பயன்களுக்கும் எல்லை நிலமாய்த் தனக்கு மேம்பட்டது இல்லையென்னும்படி உச்ச நிலையில் உள்ள பயன் பாதுகையே. எம்பெருமானுடைய திருவடித் தாமரையை எக்காலமும் தொட்டு இன்புறும் பெருமை பாதுகைக்கே உள்ளது. அதன் பெருமை பரதாழ்வானால் உலகுக்குத் தன் செயல் மூலமாய்த் தெளிவிக்கப் பெற்றது. பரதாழ்வான் பாதுகாபரமைகாந்தி. பாதுகையன்றி வேறு தெய்வத்தையும் வேறு பயனையும் நாடாத மனத்திடம் கொண்டவன். அவன் கண்டு வெளியிட்டது பாதுகா ஸித்தாந்தம். அதன் பெருமையை ஸ்தோத்ரவடிவும் காவ்யவுருவும் கொண்ட இந்த ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தில் அமைத்துக் கவி பாடினார் பெருங்கவிச் சிங்கமாகிய நம் தேசிகன். பாதுகையின் புகழையே போற்றுவதால் சிறந்த ஸ்தோத்ரமாகின்றது இநநூல். காவ்ய முறையில் இதைக் கற்பவர்களுக்கு வடமொழியில் சிறந்த வ்யுத்பத்தி ஏற்படுவதற்குப் பாங்காகப் புதிய சொற்களின் சேர்த்தியும் பல்வகை ஸமாஸங்களும் வெவ்வேறு அலங்காரங்களும் விசேஷமான பல வ்ருத்தங்களும் பல்வகை விசித்திர பந்தங்களும் கொண்டு ஒப்பற்ற காவ்யமாய்த் திகழ்கின்றது. ஸர்வதந்த்ரங்களிலும் சுதந்திரமாய் ஸஞ்சரிக்கும் திறம் பெற்ற நம் தேசிகனேயன்றி வேறு எவராலும் இத்தகைய, நூலை இயற்ற முடியாது. திருவரங்கத்தில் பாதுகையின் ஸந்நிதியிலேயே தம்மை எத்தனை நூற்றாண்டுகள் வாழச் செய்தாலும் நாளுக்கு ஒன்றாகப் பல பாதுகாஸஹஸ்ரங்களை இயற்றிக் கொண்டே நற்பொழுது போக்கிப் பக்தர்களின் உள்ளம் குளிரச் செய்வாராம். தம் மனம்வாக்கு-உடல் ஆகிய முக்கருவிகளையும் பாதுகை தன் வசமாக்கிக் கொண்ட சிறப்பை நினைத்துப் பெருமிதம் கொள்கின்றார். இப்படி அமைகின்றது ஸ்ரீதேசிகனது பக்தி ஸாம்ராஜ்யம். மேலும் ஸ்தோத்ரம் என்ற பெயரில் பாதுகை தம் திருவாக்கினின்று ஆயிரம் ஸூக்திகளை அவதரிப்பிக்கச் செய்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய தேசிகன் இதனாலேயே தாம் பெரும்பயனைப் பெற்று விட்டதாயும் இனித் தாம் உலகில் பெறவேண்டிய பயன் எதுவுமில்லை. யென்றும் முடிவு கூறி விடுகின்றார்.
45. நூலைத் தலைக்கட்டல்
ஸ்ரீமத் ராமாயணம் முழுதுமே பிராட்டியின் பெருமையைக் கூறவந்தது என்று வால்மீகி பகவானே கூறிவிட்டான். பிராட்டியும் வால்மீகியும் பூமியினின்று பிறந்தவர்களாதலின் உடன் பிறந்தவராவர். ஸஹோதரரான வால்மீகியைக் கொண்டு பிராட்டி தன் சரிதையை எழுத வைத்தாள். பெண்களுக்கே சாதுரியம் அதிகம். அவ்வாறே பாதுகாதேவி தம்மைக் கொண்டு தன் சரிதையை எழுத வைத்தாளென்கிறார் தேசிகன். எப்படி? துருவன் முகத்தில் எம்பெருமான் சங்கத்தால் தொட்டதும் ஞானம் உதயமாகிப் பல்வகையில் துதி செய்தான். அவ்வாறே பாதுகையின் பரிசம் தமது முடியில் பட்டதும் தாமும் அறிவு பெற்று நூலைத் தொடங்கியதாகக் கூறுகின்றார். மேலும் பக்தியுடையர் பாதுகையையே பற்றிய இந்த நூலைக் கற்று மனத்தில் கொள்ளவேண்டுமென்று கூறி உலகில் பித்துப் பிடிக்காத எந்த அறிஞனும் பாதுகையின் திவ்ய ஸங்கல்பத்தால் அமுதப் பெருக்காய் வந்த இந்த ஸ்தோத்ரத்தை ஆதரியாமல் இருக்கப் பெறான் என்று தைரியத்துடன் பேசுகின்றார். நூலைப் பூர்த்தி செய்யும் போது அதியற்புதமான ஒரு ஸூக்தி அவதரிக்கின்றது. வடமொழி மறைக்கு விளக்கம் தந்தருளிய எம்பெருமானார் திவ்யஸூக்தி சிறந்து விளங்குகின்றதாம். தமிழ் மறையைக் கண்ட ஆழ்வாரின் மறுவடிவமான பாதுகைகள் இரண்டும் உயர்ந்து பிரகாசிக்கின்றனவாம். இந்த இரண்டு வேதாந்தங்களையும் சிறந்த நிதியாகக் கொண்ட பெரியோர்கள் மூன்று வேதங்களுக்கும் விபரீத அர்த்தங்கள் தலைகாட்ட இடம் தராமல் பாதுகாத்துக் கொண்டு உலகில் மேம்பட்டு வாழ்வதாகக் கூறி மங்களாசாஸநம் செய்கின்றார். அந்தாதி முறையில் 'ஸந்த:' என்று தொடங்கி ஸந்த:' என்றே நூலைத் தலக்கட்டுகின்றார் நம் தேசிகர் பெருமான்.
46. தேசிகன் கூறிய அற்புதங்கள்
ஸ்ரீதேசிகன் ஸாரசாஸ்திரத்தில் தாம் கண்ட சில அற்புத நிகழ்ச்சிகளை அடுக்கிக் கூறுகின்றார். ஒரு கல் அகலிகை யென்னும் பெண்ணின் உருக்கொண்ட அற்புதம் ஒருபுறம் இருக்கட்டும். அங்காவது கல்லின் உருவம் அடியோடு நீங்கிய பின் பெண்ணுரு வந்தது. அதிலும் பெரிய ஆச்சர்யம் ஒன்று உள்ளது. அக்னியின் உருவம் மாறாமலிருந்தே பனிக்கட்டியின் தன்மையைப் பெற்றது. அதிலும் பெரிய அற்புதமன்றோ? அனுமானது வாலில் அரக்கர் வைத்த தீ எரிந்துகொண்டே பிராட்டியின் சொல்லால் பனிக்கட்டியின் தன்மையைப் பெறவில்லையா? மற்றோர் அற்புதம் உள்ளது. இராமன் விடுத்த ஒரு துரும்பு காகத்தின் விஷயத்தில் ப்ரஹ்மாஸ்த்ரமாகி வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை வாங்கித் தரவில்லையா? மற்றொன்று - பகைவரைச் செய்த வதமே அவர்களுக்கு அனுகூலமாகி விடவில்லையா? விராதன் கபந்தன் முதலிய எதிரிகளைக் கொன்றதும் அவர்களுக்கு தேவவிமானம் வந்து நற்கதி பெறவன்றோ வாய்த்தது! இந்த அற்புதங்கள் அனைத்திலும் பெரியதோர் அற்புதம் --- பாதுகை மூன்று உலகங்களையும் நீதிமுறை வழுவாது ஆண்டு முழுமையான வெற்றியைப் பெற்றது. இதனிலும் பெரியதோர் அற்புதம் உலகில் உண்டா? என்று வினவுகின்றார் ஸ்ரீதேசிகன். இந்த அற்புதச் செயலைச் சிந்தித்தே ஸ்வாமி பாதுகையிடம் பரமபக்தி கொண்டு அந்தப் பாதுகையைப் பற்றிய ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரத்தை இயற்றித் தாமும் பெரியதோர் அற்புதத்தை நிகழ்த்தியருளினார்.
47. ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயமும் பாதுகையும்
திருவரங்கத்தில் பெரிய பெருமாள் திருவடி நிழலிலே தோன்றி அங்கேயே அவனது திருவருளால் வளர்ந்து அவன் பாதுகைகளை அனுதினமும் வழிபட்டு அனுபவித்துத் திளைத்து வந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயம் இன்றளவும் பாதுகையைத் திருவரங்கனைக் காட்டிலும், ஏன்? அவன் திருவடிகளையும் காட்டிலும் மேம்பட்டதாய் அனு ஸந்தித்து விசேஷ முறையில் போற்றிவரும் பாதுகாபரமைகாந்தியாய் விளங்கி வருவது நாடறிந்ததொன்றாகும். இக்ஷ்வாகு வம்சத்துக்குக் குலதனமாய் ஸ்ரீரங்கவிமானம் அமைந்தது போல் திருவரங்கன் பாதுகை ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்துக்கு இன்றளவும் பரம் பரையாய் வரும் குலதன மென்னுதல் மிகையாகாது. சக்கரவர்த்தித் திருமகன் ஆட்சியில் எங்குச் சென்றாலும் இராமன் -- இராமன்-- இராமன் என்ற சொல்லே செவியில் புகுவதாகவும் உலகமே இராம மயமாக ஆகிவிட்டதெனவும் வால்மீகி கண்ட முறையில் ஸ்ரீமத் ஆண்ட வன் ஸம்ப்ரதாயத்தினுள் புகுந்து பாதுகை செய்யும் ஆட்சியில் எங்கும் பாதுகாசப்தமே முழங்குவதையும் அந்த ஸம்ப்ரதாயம் பரவுமிடமெல்லாம் பாதுகாமயமாகவே காட்சியளிப்பதையும் இன்று கண் கூடாகக் காணலாம். இந்த ஸம்ப்ரதாயத்தில் ஆச்ரமம் --பாதுகாச்ரமம், பாடசாலை -- பாதுகா வித்யாலயம், கல்யாண மண்டபம் -- பாதுகா மண்டபம், ஆராதநம் -- பாதுகாராதநம், பவனம் -- பாதுகா பவனம், தர்ம நிர்வாஹம் -- பாதுகாசாரிடீஸ், ராஜ்யம் -- பாதுகாராஜ்யம், பத்திரிகை -- ரங்கநாத பாதுகா என்ற முறையில் எம்பெருமான் படைப்பு அனைத்தையுமே பாதுகா மயமாகக் காண்கின்ற சிறப்பு வேறெங்கும் காணக் கிடைக்காது. ஆழ்வார் நிற்கின்றதெல்லாம் நெடுமாலாகக் கண்டதை அடியொற்றியதோ இம்முறை!
48. பாதுகை என்ற சொல்லே போதுமே!
பாதுகை என்ற சொல்லே ஈரரசு படாததாகும். திருவரங்கன் பெயரைக் கூடச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பாதுகை என்ற சொல் அவன் பாதுகையைத் தான் குறிப்பிட்டுத் தீரும். அர்ச்சை வடிவிலேயே ஈடுபட்டு நிற்கும் நமக்கு இராமபிரானது பாதுகையின் நினைவு வருவதற்கு இடமில்லை. அப்படியே வந்தாலும் திருவரங்கன் பாதுகைதானே அது. திருவரங்கனையன்றி மற்ற அர்ச்சைத் திருமேனிகளுக்குப் பாதுகையைக் குறிப்பிட்டு யாரும் அனுபவிக்கவில்லை. ஆகவே பாதுகை என்று வழங்குவதே போதுமானது. இதைக் கருதியே ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தில் பாதுகை என்ற தனிச் சொல்லாலேயே எல்லாம் வழங்குகின்றது. ஆனால் பத்திரிகையில் மட்டும் திருவரங்கன் தன் பெயரைச் சேர்த்துக் கொண்ட காரணம் அவனையே கேட்க வேண்டும்.
49. இந்த ஸம்ப்ரதாயத்தில் பாதுகாஸஹஸ்ரத்தின் செல்வாக்கு
ஸ்ரீதேசிகன் திருவாக்கினின்று அற்புத முறையில் அவதரித்த ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்திற்கு ஸ்ரீமத் ஆண்டவன் பரம்பரையில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதை மறுக்க முடியாது. ஸ்வாமியின் மற்ற எல்லா ஸூக்திகளையும் விஞ்சிய சிறப்பும் மற்ற ஆசார்ய ஸூக்திகளினும்கூட மேம்பாடும் வழங்குகின்றது. பூர்வாசார்யர்களின் திருநக்ஷத்திரங்களிலோ ஆச்ரமத்தைச் சார்ந்த ஸந்நிதி உத்ஸவங்களிலோ வேத பாராயண -- அருளிச் செயல் கோஷ்டி தொடங்குமுன், கிரந்தாரம்ப காலத்தில், க்ரந்த சதுஷ்டயத்துக்குப் பின் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தையும் தொடங்குவதையும் பின் இதையும் முழுதும் பாராயணம் செய்வதையும் அவ்வாறே சாத்துமுறை ஸமயத்தில் இதன் கடைசி சுலோகத்தையும் அனுஸந்திப்பதையும் இந்த ஸம்ப்ரதாயத்துக்கே உள்ள தனிச் சிறப்பாக எல்லாரும் உணருவர். ஸ்ரீதேசிகன் தாமே ஸகல பலன்களையும் அளிக்கவல்லதென்று போற்றிய ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தைத் தவறாது தினந்தோறும் பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் கூடப் பெரும்பாலும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவராகவே இருப்பர். இவ்வாறு பல்வகையிலும் இந்த ஸம்ப்ரதாயத்துக்கும் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரே மறுக்க முடியும்?
50. பாதுகைச் சிறப்புப் பரவ மூலகாரணமான மஹான்
ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தைப் பாதுகாஸம்ப்ரதாயமென வழங்குவது மிகப் பொருத்தமே. ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் மற்ற ஸம்ப்ரதாயங்களிலெல்லாம் பெற முடியாத சிறப்பையும் செல்வாக்கையும் இந்த ஸம்ப்ரதாயத்தில் மட்டும் பெற்று விளங்குவதற்கு மூலகாரணமா யிருந்த மஹானுபாவர் யார்? பாதுகையும் அதன் ஸஹஸ்ரமும் இந்த ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த முந்திய ஆசார்யர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்ட போதிலும் இதன் பிரசாரம் வலிமையடையாது அனுஸந்தாநத்தில் மட்டுமே இருந்து வந்தது. இதற்காகவே திருவரங்கன் ஓர் ஆசார்யனை அவதரிப்பித்தான். அவ்வாசார்யனே தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவனெனப்படும் மஹாபுருஷர். முன் பின் காண முடியாத ஒரு விலக்ஷண அவதாரம். பஹுசாஸ்திர நிஷ்ணாதராய் க்ரந்த நிர்மாண சக்தியையும் மிகுதியாகப் பெற்ற ஸ்ரீமத் சின்னாண்டவன் திருவடி நிழலில் குருகுல வாஸம் செய்து விசேஷமான ஞானச் செல்வத்தையும் அனுஷ்டானஸம்பத்தையும் பெற்று எல்லோருடைய மதிப்புக்கும் உரியராய் விளங்கினர் இந்த மஹான். திருவரங்கன் வாலிப தசையிலேயே இம்மஹாகனைப் பற்றற்ற துறவியாக்கியருளினான். தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவன் என்ற திருநாமத்துடன் ஸௌசீல்யம் ஸௌலப்யம் முதலிய ஆத்ம குணங்கள் நிரம்பப் பெற்று மேதாவியாய் விளங்கிய இவ்வாசார்யன் தம்மை வந்து அண்டியவர்களுக்குப் பரம கிருபையுடன் ஆத்மகார்யங்களைச் செய்து வைத்து முக்கியமாய் ப்ரபத்தியின் சிறப்பையும் ஸூக்ஷ்மாம்சங்களையும் போதித்து நல்வாழ்வளிக்கும் திறமுடையராய் விளங்கினார். இப்புண்ய புருஷருடைய பகவத் பக்தியும் குளிர்ந்த திருவுள்ளமும் விசால மனப்பாங்கும் இனிய சொல்லும் ஆசார்ய பக்தியும் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தன. எம்பெருமானார் திருமுடிஸம்பந்தத்தால் முந்திய ஆசார்யர்களும் திருவடி ஸம்பந்தத்தால் பிந்திய ஆசார்யர்களும் நிறம் பெற்றதாக ஸ்ரீதேசிகன் அருளிய முறைக்கு இந்த ஸ்ரீஆண்டவனை இலக்காக்கிச் சிலர் பேசுவதுண்டு.
அக்காலத்தில் பாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீகோசம் கிடைப்பதே அரிது. எத்தனையோ வருஷங்களுக்குமுன் வடமொழி தென்மொழி உரைகளுடன் அச்சிடப்பட்ட பாதுகாஸஹஸ்ரம் கிடைப்பதே அரிதாயிருந்த சூழ்நிலை. கிடைத்தாலும் கையில் எடுத்தால் காகிதங்கள் ஒடிந்து தூளாகுமேயன்றி வளைந்து கொடுக்க மாட்டாத நிலை. இந்த ஸ்ரீமத் ஆண்டவன் எல்லோரும் பாராயணம் செய்தற்குப் பாங்காகப் பாதுகா ஸஹஸ்ரம் மூலத்தையும் அதன் ரஸத்தைச் சுவைத்தற்கு ஏற்பத் தாமே எளிய தமிழில் ஒர் உரையை இயற்றி அதையும் அச்சிட்டு வெளியிடச் செய்தருளும்படியிருந்தது. ஆச்ரமத்தினின்று விலையின்றி அந்த ஸ்ரீகோசங்களைப் பெற்றவரே பெரும்பாலார். ஸ்ரீமத் ஆண்டவன் அதற்கு இட்ட விதையே பின் அந்த ஸ்ரீஸூக்தி பல பதிப்புக்களாய் வெளிவந்து நாடு முழுவதும் பரவிப் பாதுகாமயமாக்கி இன்றளவும் பாதுகா ஸம்ப்ரதாயமென்னும் திருநாமத்தையும் காத்துத் தருகின்றது. இந்த ஆசார்ய ச்ரேஷ்டருடைய பெருமைகளையெல்லாம் அந்தத் திருவடிவாரத்திலேயே ஆத்மலாபம் பெற்றுச் சிறந்த ஞானியாய் ஆத்மகுண பரிபூர்ணராய் ஸ்ரீவைஷ்ணவ ஸமுதாய திலகமாய் பெரிய வழக்கறிஞராய் அசீதிவ்ருத்தராய் இன்று சென்னையில் பிரகாசிக்கும் ஸ்ரீ உப. வே. விளக்குடி ஈயுண்ணி R. கோபாலஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி போன்ற பெரியார்களே அறிவர்.