ஸ்ரீ மஹாபாரத வினா விடை - முதல் பாகம்
2. ஸபா பர்வம்
புரண்ட வர்கள்புரிந்ததவப்பயனாகி
யவுதரித்துப்பகைத்துமென்மேன்
மூண்ட வினைமுழுவதுவுமுனைகதோறு
முரண்முருக்கிமுகில்புகாமல்
காண்டவமுங்கனலவயிற்றுக்
கனறணியநுகருவித்துக்காக்குமாறே
பூண்டருளெம்பெருமானைப்
போற்றுவாரெழுபிறப்புமாற்றுவாரே
வினா 1.- காண்டவவனத் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட மயாஸுரன் எப்படித் தன் நன்றியறிதலைக் காட்டத் தொடங்கினான்?
விடை.- மயன் தனக்கு உயிர் தந்த அர்ஜுனனிடம் வந்து தனக்கு இருக்கும் ஸந்தோஷத்தை தெரிவித்து, தன்னால் இயன்றமட்டும் பாண்டவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்ய எண்ணுவதாகச் சொன்னான். அர்ஜுனன் தனக்கு ஒரு உபகாரமும் தற்காலம் வேண்டாம் என்றும், தன்னிடத்தில் மயனுக்கு அப்பொழுது இருக்கும் நன்றியறிதல் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று மறுமொழி சொன்னான். மேன்மேலும் மயன் உபகாரம் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று வற்புறுத்த, அப்பொழுது அர்ஜுனன் 'கிருஷ்ணனுக்குப் பிரியமானது எதுவோ அதைச் செய்' என்று மயனுக்கு உத்தரவு செய்தான்.
வினா 2.- கிருஷ்ணமூர்த்தி மயாஸுரனை என்ன செய்யும்படி ஏவினார்?
விடை.- மஹாத்மாவாயும் அர்ஜுனன் தமயனாயும் உள்ள தர்மபுத்திரர் இருந்து அரசாளத் தகுந்ததாயும், தேவாஸுர சிற்ப சாஸ்திர விசித்திரங்கள் அமைந்து அற்புதங்கள் நிறைந்ததாயும் உள்ள ஒரு திவ்ய ஸபையை இந்திரப்ரஸ்தத்தில் உண்டாக்கும்படி கிருஷ்ண பகவான் மயனை ஏவினார்.
வினா 3.- இப்படிக் கிருஷ்ண பகவான் உத்தரவு செய்த பின்பு என்ன செய்தார்?
விடை.- இதன் பின்பு பாண்டவர்களில் தன்னைவிட வயதில் சிறியவரை ஆசிர்வதித்து ஸமான வயதுள்ளவர்களை ஆலிங்கனம் செய்துகொண்டு தன்னைவிட பெரியோரிடம் இருந்து மஹா விநயத்துடன் விடைபெற்று கிருஷ்ண பகவான் துவாரகாபுரியை நோக்கிச் சென்றார்.
வினா 4.- மயாஸுரன் எங்கிருந்து ஸபைக்கு வேண்டிய ஸாமான்களைக் கொண்டு வந்து எவ்வளவு நாளில் ஸபையைக் கட்டி முடித்தான்?
விடை.- கைலாஸகிரிக்கு வடக்கே மைநாக மலைக்கருகில் பிந்து ஸரஸின் கரையோரமாக அநேக விசேஷ விலையுயர்ந்தகற்களை விருஷபர்வன் என்கிற அஸுரராஜன் வீட்டின் அருகாமையில் மயன் முன்னொருக்கால் தானவர்கள் யாகஞ்செய்யுங்கால், சேர்த்துவைத்திருந்தான். அவைகளை வடக்கே சென்று தர்மபுத்திரரது ஸபைக்காக எடுத்துக்கொண்டு வந்து தனக்கு ஊழியக்காரரா யிருக்கும் கிங்கரர்கள் என்கிற அஸுரர்களது ஸஹாயத்தால் 14-மாதத்தில் ஒரு விசித்திர ஸபையை இந்திரப்ரஸ்தத்தில், கட்டி முடித்தான்.
வினா 5.- இந்த ஸபையிலடங்கிய முக்கிய விசித்திரங்கள் என்ன?
விடை. இச்சபையில் சிலவிடங்களில் கீழேபோட்டுள்ள பளிங்குக் கற்களால் பார்ப்பவர்களுக்குத் தண்ணீர் ஓடுவதுபோல் தோன்றும், சில விடங்களில் நல்ல குளத்தை உண்டாக்கிவைத்து அதன் படிகளில் பளிங்குக் கற்கள் அமைத்திருத்தலால் அங்கு தண்ணிராவது பள்ளமாவது இருப்பதாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றா திருக்கும். வேறு சில விடங்களில், சுவரில் கண்ணாடிகளின் மூலமாயாவது, திரைகளின் மூலமாயாவது, சித்திரங்கள் மூலமாயாவது வாசல் இருக்குமிடத்தில் இல்லாதது போலவும், இல்லாதவிடத்தில் இருப்பதுபோலவும் தோன்றும்படி செய்திருந்தது. ஆகையால் இந்த ரகஸியங்களை அறியாது உள்ளே செல்லும் ஜனங்கள் உள்ளே போகமுடியாமலும், வெளியே வரமுடியாமலும் தத்தளிக்க வேண்டியது தான். இதுபோல இன்னும் அனேக விசித்திரங்களோடு கூடி இருந்தது இந்த மயஸபை.
வினா 6.- இவ்வாறு மயன் ஸபையைக் கட்டி முடித்ததும் தர்ம புத்திரர் என்ன செய்தார்?
விடை... மஹாப்பிராமணர்களுக்கு ஒரு சுபதினத்தில் வயிறார போஜனமிட்டு, அன்று ஒரு சுபலக்கினத்தில் பிராமண சிரேஷ்டரால் ஆசீர்வதிக்கப் பெற்று, இந்த ஸபையில் யுதிஷ்டிரர் பிரவேசித்தார். இந்த ஸபையில் இருக்குங்கால் அநேக மஹரிஷிகள் அங்குவந்து தர்மபுத்திரருக்கு சாஸ்திர ரகஸியங்களை உபதேசித்தருளினர். அனேக சிற்றரசர்களும், ஸ்நேகித ராஜாக்களும் தர்மபுத்திரரிடம் வந்து காத்துக்கிடந்தனர். இவ்வாறு மேலான பதவியில் தர்மபுத்திரர் மயனால் செய்யப்பட்ட அந்த விசித்திர ஸபையிலிருந்துகொண்டு மனுநெறி வழுவாது செங் கோல் செலுத்தி வந்தார்.
வினா 7.- இவ்வாறு பாண்டவர்கள் கோலாஹலமாய் மயஸபையில் வஸிக்கும்பொழுது யார் இவர்களைப் பார்க்க வந்து, என்ன சொன்னார்?
விடை.- ஸகல சாஸ்திரங்கள், கலை ஞானங்கள் முதலியவைகளில் கரை கண்டவரும், ஸதா ஹரிநாம ஸங்கீர்த்தனம் செய்பவருமான நாரதர் பாண்டவர் களைப் பார்க்க இந்திரப்ரஸ்தத்திற்கு வந்தார். உடனே யுதிஷ்டிரர் முதலியவர்கள் எழுந்து ரிஷிக்கு மரியாதை செய்து அவரை ஒரு உயர்ந்த ஆஸனத்திலிருத்தி விட்டுப் பாண்டவர் முதலியவர்கள் தத்தமக்குத் தகுந்த கீழான ஆஸனங்களில் உட்கார்ந்தார்கள். உடனே நாரதர் இராஜ்யத்தின் செழிப்பு முதலியவைகளை பற்றி மிகுந்த ஆவலோடு யுதிஷ்டிரரை விசாரித்தார். இதன் பின்பு தர்மபுத்திரர் “இந்த ஸபையைப்போல வேறு ஸபை எங்கேயாவது கண்டதுண்டா?" என்று நாரதரை மஹா விநயத்தோடு கேட்டார்.
வினா 8.- இதற்கு நாரதர் என்ன பதில் சொன்னார்?
விடை... "மனுஷ்ய லோகத்தில் இதைப்போன்ற விசித்திரமான ஸபை நான் எங்கும் கண்டதில்லை. ஆனால் லோக பாலர்கள், பிரம்மா, இந்திரன் முதலியவர்களது ஸபைகள் வேண்டுமானால் இதற்குக் கொஞ்சம் மேற்பட்டதெனச் சொல்லலாம்" என்று சொல்லி அவர்களது ஸபைகளை நாரதர் யுதிஷ்டிரருக்கு வர்ணிக்கத் தொடங்கினார்.
வினா 9.- இவ்வாறு நாரதர் வர்ணித்துக்கொண்டு வருங்கால் யுதிஷ்டிரரது மனதில் பற்றிய முக்கிய விஷயங்கள் எவை? யுதிஷ்டிரர் முடிவில் என்ன செய்தார்?
விடை.- இந்திர ஸபையில் ஸூர்ய வம்சத்தரசராகிய ஹரிச்சந்திரர் இருக்கிறார் என்பதும், யம ஸபையில் பாண்டு மஹாராஜா இருக்கிறார் என்பதும், யுதிஷ்டிரர் மனதில் நன்றாய்ப் பதிய, கடைசியில் யுதிஷ்டிரர் நாரதரை நோக்கி “என் தகப்பனார் ஏன் இன்னும் பிதிர்லோகத்தில் யமஸபையில் இருக்கிறார்? ஹரிச்சந்திரன் போன்ற அரசர்கள் மாத்திரம் ஏன் இந்திர ஸபையில் இருக்கவேண்டும்? இவர்களைப்போல என் பிதாவும் இந்திர ஸபைக்குப் போகவேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
வினா 10.- இதற்கு நாரதர் என்ன பதில் சொன்னார்?
விடை. "ஹரிச்சந்திரன் முன்பு இராஜஸூய யக்ஞம் செய்து தனது ஸொத்துக்களைத் தானஞ்செய்து ஸகலரையும் திருப்தி செய்தமையால், இந்திர ஸபையில் இப்பொழுது ஸுகத்தை அனுபவிக்கிறான். இப்படி ஸுகம் அனுபவிக்கும் ஹரிச்சந்திரனது பதவியைக் கண்ட உனது தகப்பனான பாண்டு, உன்னையும் இராஜஸுூய யக்ஞம் செய்யச் சொல்லி தனக்கும் அப்பதவி கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டான்” என்று நாரதர் மறுமொழி சொல்லி திரிலோக ஸஞ்சாரத்திற்குப் புறப்பட்டார்.
வினா 11.- இப்படி நாரதர் சொல்லிப்போனதும், யுதிஷ்டிரர் என்ன தீர்மானம் செய்தார்?
விடை. யுதிஷ்டிரருக்கு அந்த யாகஞ்செய்தால் நலம் என்று தோன்ற, தனது தம்பிமார், மந்திரிமார் முதலியவர்களோடு ஆலோசனை செய்தார். அவர்களும் இதை அங்கீகரித்தார்கள். பின்பு தெளம்யர், வியாஸர், இவர்களோடு தர்மபுத்திரர் கலந்து ஆலோசித்தார். இவர்களும் இதை அங்கீகரித்தார்கள். இவ்வளவு முடிந்த பின்பும் தர்மபுத்திரருக்கு ஒருவித ஸ்திரம் வராததால் கிருஷ்ணபகவானைத் துவாரகையிலிருந்து ஒரு தூதன் மூலமாய் வரவழைத்து அவரோடு ஆலோசித்துப் பார்த்தார். இதன் பின்பு தர்மபுத்திரர் இராஜஸுய யாகஞ் செய்வதாகத் தீர்மானித்தார்.
வினா 12.- பாண்டவர்கள் இராஜஸுய யாகஞ் செய்வதற்கு என்ன முக்கியமான தடை இருந்தது?
விடை. - இந்த யாகம் செய்ய வேண்டுமானால், பரதகண்டத்திவிருந்த அரசர் யாவரும் பாண்டவர்களுக்கு ஸ்நேகிதர்களாக வாவது அல்லது அவர்களால் ஜயிக்கப்பட்டவர்களாகவாவது இருந்து யக்ஞத்தில் தர்மபுத்திரருக்கு மரியாதை செய்ய வரவேண்டும். ஜராஸந்தனைத் தவிர வேறு பரதகண்டத்தரசர் யாவரும் ஒருவாறு தர்மபுத்திரருக்கு இணங்கிவிடுவார்கள். இவன் மாத்திரம் ஒரு வழிக்கும் வரமாட்டான். ஆகையால் ஜராஸந்தன் உயிரோடிருப்பதே அந்த இராஜஸுய யக்ஞத்திற்கு ஒரு பெரிய தடையாய் இருந்தது.
வினா 13.- ஜராஸந்தனைக் கொன்று இந்த முக்கிய தடையை நிவர்த்தி செய்வதற்குக் கிருஷ்ணபகவான் என்ன உபாயம் சொன்னார்?
விடை. தாமும், பீமனும், அர்ஜுனனும் மகத தேசாதிபதி ஜராஸந்தன் பட்டணமாகிய கிரிவ்ரஜம் என்கிற பட்டணத்திற்கு ஸ்நாதகப்ராமணர் வேஷம் தரித்துப்போய் அவனைத் தங்கள் மூவரில் ஒருவரோடு யுத்தம் செய்யும்படி கேட்டுக் கடைசியில் கொன்று திரும்பலாம் என்று உபாயம் சொல்லிக் கொடுத்தார்.
வினா 14- ஜராஸந்தனைக் கொன்றேதான் தீரவேண்டு மென்று ஏன் தர்மபுத்திராதிகள் எண்ணினார்கள்?
விடை.- அவன் துராத்மா. அவன் நரபசு செய்வதற்காக அநேக அரசரைப் பலிகொடுக்க எண்ணி தனது பட்டணத்தருகிலிருந்த ஒருமலைக் குகையில் அடைத்துப் போட்டிருந்தான். ஆகையால் அவனைக் கொன்றால் அனேக அரசரைப் பிழைப்பித்து பாண்டவர்கள் அவர்களைத் தமக்கு வசப்படுத்திக் கொள்ளலாம். ஆதலால், யாவரும் ஜராஸந்தனைக் கொன்றே தீரவேண்டும் என்று எண்ணினார்கள்.
வினா15.- ஜராஸந்தனக்கு இப்பெயர் வரக் காரணமென்ன?
விடை.- இவன் தகப்பன் பிருகத்ரத ராஜாவுக்கு இரண்டு அழகிய மனைவிகள் இருந்தார்கள். இவர்கள் இருவரிடத்திலும் இவருக்குக் குழந்தைகள் உண்டாக இவர்கள் கொஞ்ச காலத்திற் கெல்லாம் பிள்ளைகளைப் பெற்றார்கள். பெற்றதும், ஒருத்திக்கு ஒருகுழந்தையின் வலது பாதியும், மற்றவளுக்கு அதே குழந்தையின் இடது பாதியும் பிறந்தன. இதைக்கண்ட அரசனும் அவன் மனைவிகளும் மிக துக்கித்துவிட்டு இவ்விருபாதிகளையும் தம்மூர் குப்பை மேட்டில் எறிந்து விடும்படி செய்தார்கள். இப்படி இருக்கையில், அந்தவழியே மனுஷ்யமாம்ஸம் புஜிக்கும் ஜரை என்கிற ஒரு இராக்ஷஸி போக, இவ்விரு பாகங்களையும் சேர்த்துத் தின்னக் கொண்டுபோவோம் என்று எண்ணி இவைகளைச் சேர்க்க, இவை ஒரு பலம் வாய்ந்ததும், மஹா கனமானதுமான குழந்தையாக அது உறக்கக் கத்தியது. இதைக் கேட்டு அரசன் முதலியோர் வெளிவர, அவரிடம் இக்குழந்தையை ஒப்புவித்து விட்டு ஜரை மறைந்துபோனாள். இவ்வாறு ஜரை என்கிற இராக்ஷஸியால் சேர்க்கப்பட்டு உண்டானமையால் இப்பிள்ளைக்கு ஜராஸந்த னென்று பெயர் வந்தது. இவனுக்கு 10,000 யானை பலமுண்டு.
வினா 16.- பிருகத்ரத ராஜாவுக்கு இவ்வாறு முதலில் பிள்ளை பிறப்பானேன்?
விடை. இவ்வரசன் பிள்ளை வேண்டு மென்கிற ஆசையால் அநேக யக்ஞம் முதலியவைகள் செய்தும் பயன்படாதிருக்கையில், கெளதம வம்சத்தில் பிறந்த சண்டகெளசிகர் என்கிற மஹாரிஷி தன்னூருக்கு வந்து ஒரு மாமரத்தடியிலிருப் பதாகக் கேள்விப்பட்டார். உடனே தனது பெண்சாதி இருவர்களோடும் அரசன் ரிஷியை அடிபணிந்து தனது எண்ணத்தை வெளியிட, அப்பொழுது அந்த ரிஷியின் மடியில் அம் மாமரத்திலிருந்து ஒரு பழம் விழுந்தது. இதை மந்திரித்து ரிஷி அரசனிடம் கொடுத்துப் பிள்ளை உண்டாவதற்காக அவன் பெண்சாதிக்குக் கொடுக்கும்படி சொன்னார். அரசன் இருபெண்சாதிகளிடத்திலும் ஒரே மாதிரி இருந்தமையால் ஒரு பழத்தில் பாதியை ஒருத்திக்கும், மற்றொரு பாதியை மற்றொருத்திக்கும் கொடுத்தான். இதனால் இவ்வாறு விசித்திரமாய் இவர்களுக்குப் பிள்ளை பிறந்தது.
வினா 17.- கிருஷ்ணார்ஜுன பீமர்கள் எவ்வாறு ஜராஸந்தன் பட்டணம் போனார்கள்? அவன் யாரோடு சண்டை செய்வதாக ஒப்புக்கொண்டான்?
விடை.- ஸ்நாதக பிராம்மணாள் வேஷம் தரித்து இம்மூவரும் கிரிவ்ரஜம் சென்று, விரோதிகளாகையால், கோட்டைவாசல் வழிபோகாது, கோட்டைமதில் ஏறிக்குதித்து, ஜராஸந்தனது அரண்மனையின் கொல்லை வாசல் வழியாகப் பிரவேசித்தார்கள். இவர்களைக் கண்டதும் ஸந்தேகத்தோடு ஜராஸந்தன் பிராம்மணருக்குரிய மரியாதைகள் செய்து என்ன வேண்டும் என்று கேட்க, அப்பொழுது இவர்கள் தமது பெயர் முதலியவைகளை வெளிப் படையாய்ச்சொல்லி, தம்முள் ஒருவரோடு நீ யுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். உடனே ஜராஸந்தன் பீமனோடு சண்டை செய்வதாக ஒப்புக்கொண்டான்.
வினா 18.- இப்படி பீமனை இவன் தேடி எடுக்கக் காரணம் என்ன?
விடை... அர்ஜுனனைக் கண்டதும், அவன் சிறு பிள்ளை எனத்தோன்ற அவனை விட்டுவிட்டான். கிருஷ்ண பகவானிடம் இவன் பதினெட்டுத்தடவை தோல்வியடைந்திருந்தமையால் இவர் தன்னைக் கொன்றுவிடுவார் என்கிற பயத்தால் கிருஷ்ண பகவானையும் தள்ளிவிட்டான். ஆகையால் இவன் பீமனோடு போர் புரிவதாக ஒப்புக் கொண்டான்.
வினா 19.- இவர்கள் சண்டை எவ்வாறு நடந்தது? இது என்னமாய் முடிந்தது?
விடை.- இவர்கள் சாப்பாடு, தூக்கம், ஒழிவு முதலியவைகள் இல்லாது 14-நாள் யுத்தம்செய்ய, 14-ம் நாள் இரவில் ஜராஸந்தன் களைப்படைந்தான். கிருஷ்ண பகவானது உத்தரவுப்படி, பீமன், ஜராஸந்தன் தனக்குக்கொடுத்த ஆயுதங்களை எறிந்துவிட்டு அவனோடு முஷ்டி யுத்தம் செய்யத்தொடங்கினான். இப்படிக் கொஞ்ச நாழிகை செய்தபின்பு பீமன் ஜராஸந்தனைக் காலைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாய் அநேகம்தரம் சுழற்றி அவன் தேகத்தை முறித்து எறிந்து அவனைக் கொன்றுவிட்டு கர்ச்சனை செய்தான்.
வினா 20.- இதன் பின்பு இவர்கள் என்ன செய்தார்கள்?
விடை... மறுநாட்காலையில், ஜராஸந்தனது இரதத்தைக் கொண்டுவந்து அதில் மூவரும் ஏறிக்கொண்டார்கள். உடனே கருடபகவான் அதன் கொடியில் வந்துட்கார அந்த இரதத்தைக் கிருஷ்ணபகவான் நடத்த அது பட்டணத்தில் ஒரு மைதானத்தில் வந்து நின்றது. அப்பொழுது ஜராஸந்தனது பிள்ளையாயும், ஸத்தாயுமுள்ள ஸஹதேவன் பகவானைச் சரணமடைய, பகவான் அவனுக்கே அப்பட்டணத்தைக் கொடுத்து தர்மபுத்திரரது இராஜ ஸூயயாகத்திற்கு வரும்படி சொல்லி விட்டு, ஜராஸந்தன் சிறையில் வைத்திருந்த அரசர்கள் எல்லோரையும் விடுவித்து, அவர்களையும்கூட அழைத்துக்கொண்டு இவர்கள் இந்திரப்ரஸ்தம் சென்றனர். தர்மபுத்திரர் இவ்வரசர்களுக்குத் தகுந்த மரியாதை செய்து அனுப்பிவிட்டு ஸுகமாய் வஸித்திருந்தார்?