வெள்ளி, 29 மே, 2009

"மார்கழித் திங்கள்"

[ Since my system crashed down day before yesterday, I upload the remaining part of "Markazhi thingaL" from a friend's machine. He still uses a Windows 98 and hence I experienced some difficulty in writing Tamil in that machine and so there may be spelling errors despite my check. Kindly excuse me. And it is my Thurathirshtam always that I could find out only a portion or few pages of old useful and intersting granthams. This is also such a one. Definitely Sri N.R. Krishnaswamy Iyengar would have written vyakyanams for the remaining 29 pasurams. Since he lived at Madurai very recently (in 1960s) if at all anybody finds out his other works and inform adiyen shall be very grateful. Please continue to read the remaining portion and enjoy]

மதி -- அசைச்சொல் தெருட்சி. மாத முன்னிலைத் திங்கட்பேர்.

மதி நிறைந்த -- தெருட்சி, தெளிவு நிறைந்திருந்தபடியால் உயர்ந்த நாள் எனுமாம். 'மதியசைச்சொல் தெருட்சி மாதம் முன்னிலைத் திங்கட்பேர்' (அரும்பொருள் விளக்க நிகண்டு 254ம் பாடல்)
மார்கழி மாஸத்தில் இருட்டில்லாது இரவும் பகலாக சந்த்ர வெளிச்சமுள்ள காலமும் பகவான் அவதரித்து விளையாடிய இடமாகிய வைகுண்டலோகம் இடம் ஆய்ப்பாடியும் என்று ஆண்டாளுக்குத் திருவுள்ளக் கிடக்கை உண்டானவுடன் எம்பெருமான் சர்வவ்யாபியாய் நிறைந்து அவளை ஆட்கொண்டு அந்த ஆராதனத்தில் மற்றவர்களையும் ஈடுபடுத்த த்வரை (வேகத்தை) யுண்டாக்கின அதிசயத்தைக் குறிப்பால் உணர்த்த மதியென்றும் இவ்வுருபுப் பெயராகப் பணித்துள்ளாள். எம்பெருமான் தனக்கும் ஆச்ரிதர்களுக்கும் முன்னிலைப்பட்டு நிற்கும் நாள் மற்றெல்லா நாள்களிலும்உயர்ந்த நாளன்றோ? காண்மதி செய்மதி என்னும் முன்னிலை ஏவற் சொற்களை நோக்குக. ம்ருகசீர்ஷ நக்ஷத்திரத்திற்கே மார்கழி யென்று தமிழ்ப்பெயர். "மார்கழி யோர்ம திப்பேர் மான்றலை நாட்கு மாமே." -- (அரும்பொருள் விளக்க நிகண்டு 424) மார்கழி நாள் -- என்று கூட்டிப் பௌர்ணமி தினமொன்றிலேயே இந்த பகவத் ஆராதனம் பகல் இரவு இரண்டிலும் அநுஷ்டிக்கத் தக்கதாகக் கொள்ளினும் பொருந்தும். அது எவ்வித இருட்டிடை ஈடின்றி முழுவெளிச்சம் உள்ள தினமாதலின் நாளும் கோளும் மாதமும் மார்கழி யென்று இவள் இந்த ஆராதனம் செய்த கிழமையும் திங்கள் கிழமை யென்று கொள்ளினும் நன்றாம். இப் பொருள் இரட்டுற மொழிதலென்னும் ஸமர்த்தனத்தாலும் கொள்ளக் கிடக்கிறது. திங்கள் மாதமென்றும், கிழமையென்றும் பொருள் கொள்க. பகவத் ஸாந்நித்யம் முன்னிலைப்பட்டு நின்றதையுணர்ந்து ஆய்ப்பாடியின் சீர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு உண்டாய் விட்டதென்று நிர்த்தேசிக்கிறாள். இதைக் கண்டு தெளிந்த விடத்து அளவற்ற அவன் குணக்கடலாடுதலுக்குக் காலமும் இடமும் இதுவே என்று மனக் கொண்டு "ரகஸ்வாது நபுஞ்சீத" என்னும் நியாயத்தால் எல்லாரையும் பங்கிட்டுப் புசிக்க அழைக்கிறாள். அவன் தானாய் வந்து நிறைந்த விடத்து அநுபவிப்பதற்கு அதிகாரி நியமமில்லை என்பதைத் தெரிவிக்க வருபவர் எல்லாரும் வாருங்கள் என்றாள். "பெருநெருப்புக் கீரமில்லை" "வாழாட்பட்டு நின்றாரும், கூழாட்பட்டு நின்றாரும்" எல்லாரும் இதில் கலந்துகொள்ள அதிகாரிகள்தான். சுத்த ஸாது கோஷ்டி பிதாவும் வைதீகருமானதால் எம்பெருமானையே "இந்த ப்ரக்ருதிவாஸனை அவனுக்கு ஏறிவிடுமோ, அது தோஷமாயிற்றே, அது அவனுக்கு வரக்கூடாதே" என்று யானைமணிகளை ஜாலராவாக்கிக் கொண்டு பல்லாண்டு பாடித் திருஷ்டி கழித்து ஆயுராரோக்கியத்தை ஆசீர்வதித்து ஊருக்குப் போகச் சொன்னவர் அங்கேயுள்ள ஸதஸத்விவேசனகாஷ்டை இங்கே தலைமயங்கி நிற்கும் தாய்த் தன்மையாதலால் இழிவிக்கும் அறிவின்மைக்கும் தாய்ப்பக்கல் சலுகை யதிகமல்லவா? இது ஆய்ப்பாடியன்றோ? ஆய் -- தாய். எல்லாப் பெண்களுமே சேயிழையாராகி லோகமாதாக்களாக அந்வர்த்திக்கப் புகும் ப்ரவேசமல்லவா? செல்வம் --இன்பம், ஐச்வர்யம், கல்வி, சுவர்க்கம், பாக்கியம், அழகு.

இன்பம் --கூடியிருந்து, குளிர்ந்து, வருத்தமும் தீர்ந்து மகிழ்தல் (27,28,25 -ஆம் பாடல்கள்)

ஐச்வர்யம் -- வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் (3)

கல்வி -- (24), சீர் (11), சுவர்க்கம் (10), பாக்கியம் (3,4), அழகு(23), பின்னுள்ள மூன்று தொடர்களால் இவன் ருத்ரப்ரஹ்ம ஸ்வரூபங்களாகவும் உள்ள நாராயணன் என்கிறாள். ருத்ர ரூபத்தில் இவன் செய்யும் அழித்தல் தொழிலைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்றது. ஸர்வலோக சரண்யனும் ரக்ஷகனுமாயுள்ளவனிடம் தேஹிகளாக இருக்கும் தசையில் சரணாகதி செய்ய உடன்படாத நிலையில் த்ருடப்பட்டிருந்தால் அந்த நிலையை அழிக்கிறான். அவை அந்த ஜீவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் பகை, அதைக் கெடுக்கிறான், தொலைக்கிறான், ஜீவனை உஜ்ஜீவிப் பிக்கிறான் ."வென்று பகை கெடுக்கும் நின் கையில்வேல் போற்றி" (24ஆவது பாசுரம், 5ஆவது பாதம்) இவனுக்கு யாரும் எதுவும் பகையல்ல. இவன் அடி அடையாமல் ஜீவனை நிறுத்தி வைத்திருக்கும் நிலை அந்த ஜீவனுக்குப் பகை. அந்நிலையைக் கெடுக்கிறான் என்பது நன்கு புலப்பட "பகை கெடுக்கும்" என்றாள் "பகைவனெ"ன்னாமல். சிவனுக்கும், சுப்பிரமணியனுக்கும் வேல் ஆயுதம் என்பதும் அதுவும் வெல் என்னும் பகுதியடியாக வருதலால் யார் யாரை எவ்வப்படி வெல்லவேண்டிய அவசரத்தில் எதெதையெல்லாம் ஆயுதங்களாக எம்பெருமான் ப்ரயோகிப்பானோ அவையெல்லாவற்றிற்கும் உபலக்ஷணமாக வேல் என்னும் சொல் நின்றது. சுதர்சன பாஞ்சசன்னியங்கள், கதை, கடகம், வில், நகம், கோரைப்பல், புல் முதலிய எல்லாம் வெல்ல உதவுவனவாதலால் வேலில் அடக்கம். ஸர்வப்ரஹரணாயுதங்களுக்கும் வேல் ப்ரதிநிதி. விளவையெறிந்த கன்றும், சகடாசுரனை யுதைத்த திருவடிகளும் பகாசுரனைக் கிழித்த திருக்கைகளும், அகாசுரன் தொண்டையில் மிகப் பெரிய உருவெடுத்துப் பருத்து அவன் கழுத்தும் தலையும் வெடித்துப் பிளந்தழியவுதவிய கண்ணன் திருமேனியும்கூட அந்தந்த அவசரத்திலும் ப்ரயோகத்திலும் வேலேயாம்.

கொடும் -- வளைந்த எம்பெருமானால் நிரசிக்கப்பட்டவர்களாகப் புராண இதிகாசங்கள் கூறும் எல்லாருமே அந்நிரசனம் தனக்குக் கிடைத்ததே பெரும் பேறு என்று களித்திருக்கிறார்கள். ஆனதால் இவை லோகாபவாதத்துக்கு கொல்லுதலாகுமேயொழிய உண்மையாகக் கொல்லுதல் ஆகமாட்டா. வெளிப்பார்வைக்குத் திரிந்து காணப்படுகிறதே யொழிய பகவான் நித்யமான ஜீவனை ரக்ஷிக்கும் ப்ரகாரங்களில் இதுவும் ஒன்றேயாகும் என்பது நன்கு புலப்பட கொடும் (வளைந்த) என்றாள். கொடுங்கை-- வளைந்த கை என்பது பொருள்.

நந்த கோபன்குமரன் -- என்றது தானே தன்னை ஸ்ருஷ்டித்துக் கொண்டவன் என்பது புலப்பட. இவன் வசுதேவர் குமாரன் அல்ல என்பது பிரசித்தம். குமரன் என்னும் இவன் நந்தகோபனுக்கு எவ்வளவு குமரன் என்னலாமோ அவ்வளவுதான் வசுதேவருக்கும் குமரன் என்று உணரக்கிடக்கிறது. கீதையில் "ஸம்பவாமி ஆத்ம மாயா" என்றும், "ஆத்மாநாம் ஸ்ருஜாம்யஹம்" என்றும் சொன்ன ப்ரகாரம் இவன் தன்னைத்தானே ஸ்ருஷ்டித்துக்கொள்ளும் தன்மையுடைய ப்ரஹ்மமேயாவான். மற்றொரு ப்ரஹ்மாவோவென்னில் ஸகலலோகத்தையும் ஸ்ருஷ்டிப்பவன். ஆனால் அவனை இவன் ஸ்ருஷ்டிக்க வேண்டும். தானே தன்னை ஸ்ருஷ்டிக்க வல்லவனல்லன். இவன் ப்ரஹ்மம் தன்னை ஸ்ருஷ்டித்துக் கொள்ளவும் உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்கும் சக்திவாய்ந்த ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தும் நிற்கும் சக்தி வாய்ந்தது என்பது புலப்பட ஹாஸ்யரஸத்தில் "நந்தகோபன்குமரன்" என்றாள். மறைமுகமாக இந்த க்ருஷ்டமான சாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டிருத்தலால் இதை மறையென்னத் தட்டில்லை. கர்மாதியால் பிறப்பவரை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஹ்மா இவனை ஸ்ருஷ்டிக்க எவ்விதத்திலும் அர்ஹன் அல்ல. இளஞ்சிங்கம் -- ஸ்ரீஆண்டாளுக்கு உபாஸநீய விக்ரஹமும் அவளை மணந்த மணாளனும் ஸ்ரீந்ருஸிம்ஹனே. கண்ணன் ராமன் முதலியோர்களை இவள் ப்ரதிபாஷிப்பது அவர்களிடம் மறைந்து கிடக்கும் ந்ருஸிம்ஹத்வத்தில் உள்ள ருசியால்தான். "நாரஸிம்ஹவபு; ஸ்ரீமாந்" என்பதுதெரியத்தக்கது. "கோளரிமாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை" என்பதில் இன்று காளையாய் மனத்தை அபகரிக்கும் அவனும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பேசப்படுபவனும் ஆகும். அவன் ந்ருஸிம்ஹத்வம் ஒன்றே அவளுக்கு அநுபவிக்கக் கிடக்கிறது. அதையே "அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கைவைத்து" என்று உறுதிப் படுத்திக் கொள்ளுகிறாள். இங்கே இளஞ்சிங்கம் என்றது அவள் ஹ்ருதயகமலத்தில் அங்குஷ்டப்ரமாணமாக இருக்கும் லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஹார்த்தவிக்ரஹத்தை. அதையேதான் "பாவ:" என்று தன் மனத்தில் பாவித்துக்கொண்டுள்ள விக்ரஹம் குட்டியாகச் சிறியதாயிருப்பதை ஏட்டில் இடுகிறாள். இவள் ஹ்ருதய குஹரத்தில் அடங்கிக்கிடக்கும் சீரிய சிங்கம் இளஞ்சிங்கம். இவை இன்னொன்றைக் கொல்லாத சிங்கம், ஆச்ரிதர் மனப்பாங்குக்கும் சிங்கம், எக்காலத்திலும் ரக்ஷணம் ஒன்றையே செய்யும் சிங்கம்."ஏததேவ உத்தாரகம் கலௌ" என்று ந்ருஸிம்ஹதாபநியோபநிஷத் வாக்யமும் இங்கே க்ராஹ்யம். இம்மூன்றுபடியாலும் அவன் குணசேஷ்டிதங்கள் முறையே ருத்ரன், ப்ரஹ்மா, விஷ்ணு இவர்கள் மூவருடையவுமாயிருக்கையைக்காட்டிப் பின்னடியில் இவனுருவமும் இம்மூவருருவமுமே யாகும் என்பதைக் "கார்மேனிசெங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்" என்கிறாள். 'கார்மேனி' என்றது வளர்ச்சிக்கறிகுறியான பச்சை நிறம் மேம்பட்டு நிற்கும் அவன் விராட் ரூபத்தை என்றும், 'செங்கண்' என்றது கமலக்கண்கள் இரண்டினின்றும் வேறுபட்ட நெருப்புக் கண்ணாகிய நெற்றிக்கண் என்றும், அவன் திருமுகமண்டலத்திலிருந்து எழும் ஒளி வெளுத்து மேகம் உண்டமின் என்ன ஸேவையாதலும் பணிக்கிறாள். "வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணன்" என்ற இவன் மூன்று ரூபங்களையும் தனித்தனிக் கண்ட ஆழ்வார் நிற்க இம்மூன்று ரூபங்களையும் ஒரு இளஞ்சிங்கம் ஒன்றிற் காணும் செல்வி இவள். இந்தச்செங்கண் விஷ்ணுவின் ரூபங்களில் ந்ருஸிம்ஹன் ஒருவனுக்குத்தான் உண்டு. இது ஆச்ரிதர்களுடைய பாபப் போர்களைப் பொசுக்கும் நெருப்புடைக்கண். "போயவினையும் புகுதருவான் நின்றனவும் தூசா"க்கிக் கொளுத்தும் தொழிலுடைய தீயுமிழுங்கண். ஸாக்ஷாத்ருத்ரன் கண் உலகத்தை அழிப்பது. இது அதனின்றும் விலக்ஷணமானது. ஆனால் இதன் அழிக்கும் சக்தி ருத்ரன் கைப்பட்ட காலத்தில் அவனுக்கு இட்ட தொழிலுக்கு அதை உபயோகிக்கிறான். ஒரே பொருளை அவரவர் மனப்பான்மைக்கு ஏற்ப ஹேயோபதேய மார்க்கங்களில் உபயோகித்தல் மரபன்றோ?

கதிர்மதியம் -- ஒளிமிகுதியாலும் தானே தனதின்னொளியைப் பரப்பலாலும் (சந்திரனைப்போல் இன்னொன்றின் ஒளியை வாங்கித் தருதலில்லாமை) சூரியனுக்குள்ள வெப்பமும் காய்தலால் சோஷணமும் இல்லாமல் தண்மையும் வளர்க்கும் தன்மையும் பொருந்தியிருத்தலால் திருமுகத்திற்கு இரு கதிர்களே ஒப்புமையாகும் என்கிறாள். கதிர்மதியம் -- சூர்யனுடைய வெளிச்சமும் சந்திரனுடைய தண்மையும் ஒருங்கு சேர்ந்தது போன்ற முகத்தான் என்றுமாம். இந்த வெண்மை ப்ரஹ்மத்வ ப்ரதிபாதகம்.

'நாராயண' சப்தார்த்தம் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் குருமுகமாக அறியத்தக்கதே. அதிற்சேர்ந்த ஏவகாரம் தேவதாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது. அவன் பரத்வத்தின் உயர்வு சிறப்பையும் விளக்குகிறது.

'நமக்கே' -- இவ்விதம் சுலபமாகச் செய்யத்தக்க இவன் ஆராதனத்தைத் தவிர்ந்த பிற உபாயங்களை எல்லாம் வ்யாவர்த்திக்கிறது. கேவலம் அறிவொன்றும் இல்லாத இவர்கள் இழிவையும் எதிர்த்தட்டில் வைத்து நிறுத்திக் காட்டுகிறது. அந்த மேன்மைக்கு இந்த ஏழ்மைதான் சம எடை. மேலும் கன்னிப்பருவத்தில் இவர்கள் செய்யக்கடவது இதுதான் என்றும், மற்ற பர்வங்களில் இவர்கள் எம்பெருமானுக்குச் செய்யத்தக்க இதர ஆராதநங்களையும் வ்யாவர்த்தித்து அதிகாரித்வஹேதுனா உபாய ஸாமஞ்ஜஸ்யத்தை த்ருடீகரித்து ஸித்தமான அபயப்ரதானத்தைப் 'பறைதருவான்' என்று உறுதிப் படுத்திப் பேசுகின்றது.

'தருவான்' -- "ஈ, தா, கொடுவெனும் மூன்றையே மூன்றும் முறையே இழிந்தோன் தக்கோன் மிக்கோன் உறைப்புறை" இங்கே இடைப்பிள்ளையாய் இழிந்து கலத்தலுமாய் 28ஆவது பாசுரத்தை ஒப்பிட்டுப் பார்க்க இப்பொருள் விளங்கும். "அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்" புண்ணியம் அத்ருஷ்டம். இவர்கள் நிலைக்கு அவன் இரங்கி இறங்கிவந்து காப்பாற்றும் கருணையை வியந்தது. இவர்களுக்குச் சமானநிலை யுடையவனாய் சரண்யன் வந்துதவியதுமாம். (1) இந்தப் பாசுரத்தில் 'போதுவீர் போதுமினோ' என்று அழைத்ததற்கு இணங்கிப் பலபடியாயுள்ளவர்கள் எல்லாரும் வந்து நோற்றுப் பல ப்ராப்தி காலத்தில் எல்லோரும் "திங்கள் திருமுகத்த"ராயாகி விட்டார்கள். (2) நேரிழையராக தங்கள் தங்களுக்கிட்ட கர்மமாகிய வர்ணாச்ரம தர்ம நிலையிலிருந்த எல்லா சாதியினரும் பிறப்பினரும் இத்தொழில்கள் எல்லாம் ஒழிந்து அவரவர் சாதிக்கேற்ற இலச்சினைகள் நகைகள் அணிந்திருந்தவர்கள் எல்லாரும் ஒருங்கே"சேயிழையா"ராகி விட்டார்கள் என்னை? பகவத் பாகவத கைங்கர்யபர ராகிவிட்டார்கள் என்னை? பகவத் பாகவத கைங்கர்யமன்றி வேறு தொழில் அறியாதவர்களாகவும், ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்களைத் தவிர்ந்த குறிகளும் அக்ஷமாலாதி ஸ்ரீ சின்னங்களாகிய அணிகளைத் தவிர வேறு ஆபரணங்கள் இல்லாதவராகவும் ஆகிவிட்டார்கள். செய்ய இழை -- சேயிழை. (3) 'பறை தருவான்' என்று சென்றவர்கள் 'பறை கொண்ட'படியால் பகவத் ஸாமாந்யராகி ஸாரூப்யம் அடைந்து விளங்கினார்கள். (4) ப்ரக்ருதி நிஷ்டர்களாயிருந்து "கூர்வேற் ..... முகத்தான்" என்று பெரியார்பாற் கேட்டுணர்ந்தும் நூல்களிற் கற்றும் போதமானவன் "வங்கக் கடல் கடைந்த மாதவன் கேசவன்" என்று எதிரே ஸேவை அருளும்படி நோக்கத்தக்கது. (5) இங்கே 'படி'கிறார்கள் -- ஆழ்ந்து நோற்கிறார்கள். அங்கே 'இறைஞ்சு'கிறார்கள். நேரில் ஸேவிக்கிறார்கள், வணங்குகிறார்கள். (6) 'சிறுமீர்காள்' என்று இழிதொழிலாகிய இடைத்தொழிலும் பிறதொழிலு முடைமையால் வந்த பேரொழிந்து சேயிழையா ராகினமையும் நோக்கத் தக்கது. முன்கண்ட மூன்றுருவுகளும் தோற்றமாறின்றனவென்பதை உணர்த்துவாள். "வங்கக் கடல்கடைந்த மாதவன் கேசவன் செங்கட்டிருமால்" என்று வேறு மூன்றுருவான ஸேவை நேரில் அளித்தலைச் சொல்லுகிறார்கள் என்னை? வங்கம் -- கருத்து உள்ளக்கிடக்கை. இவைகள் ப்ரேமையோடு தேவதாந்தர உபாயாந்தரக் காடுகளில் மயங்கிப் பலபடியான இதிஹாஸ புராணக் கதைகளில் ப்ரமித்துக் கிடந்ததைக் கடைந்து போக்கி இவனை அடையும்படியாய் ஆக்கித் தந்ததுதான், இவன் செய்திருந்த கர்மாவாகிய அழித்தல் என்கிறாள். பாப நாசமேயன்றி ப்ரமை மயக்க நாசத்தில் இவன் தன் அடியாருக்கு ருத்ரன் ஆகிறான். 'கடல் கடைந்த' என்பது சிங்க நோக்கும் இரட்டுற மொழிதலும். 'கடல் கடைந்த மாதவன்' -- அடியார் உள்ளத்தைக் கடைந்து உறுபொருளும் உபாயமுமான அமுதூட்டலுக்குக் கடல் கடைந்தது லக்ஷணையாகக் குறிக்கப்படுகிறதும் அமுதூட்டினதும் அக் கடல் கடைந்ததின் பயனாகத் தோன்றின லெக்ஷ்மிக்குப் பர்த்தாவாகி இவன் மாதவன் ஆனதுபோல் இம் மனக் கடல் கடைந்ததின் பயனாக இவர்கள் எல்லாரும் ப்ரபந்நர்களாகி நாயகித் தன்மையை அடைந்து அவனை இறைஞ்ச அவர்களுக்கும் நாயகனாகி அவர்களையும் தன் நாயகிகளின் கோஷ்டியில் சேர்த்துக் காத்தல் ப்ரயுக்தமாக 'மாதவன்' என்று அவன் லக்ஷ்மீ காந்தத்வத் தால் ஸர்வலோக சரண்யனாயும், ஆச்ரித ஸர்வஜன ஸம்ரக்ஷகனாயும் இருக்கும் பெருமிதத்தைச் சொன்னாள். மாதவன் என்பதற்கு லக்ஷ்மிக்கு பர்த்தா என்றும், யதுவின் மூத்த குமாரனான மதுவின் வம்சத்தில் ஜனித்தவன், கிருஷ்ணன் என்றும், விரோதிகளால் கம்பிக்கப்படாதவன் என்றும் சொல்லும் பொருள்களும் முன்சொன்ன பாட்டுக்களின் அர்த்த ஸ்வாரஸ்யங்களின் சுருக்கமாக இங்கே கொள்ளத்தக்கன.

"கேசவன்" -- நல்ல மயிரையுடையவன். நல்ல மயிர் நுண்ணிதாய்க் கறுத்து மேலிருந்து கீழே வளரும் மயிர். இது ஸாத்வீக லக்ஷணம். மேல் நோக்கி வளரும் தடித்த சிவந்த மயிருடைமை அசுர ராக்ஷஸ லக்ஷணம். ஸாத்வீகன் என்று பொருள். கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் க்ருஷ்ணன். ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராள் இவனிடத்தில் இருக்கிறார்கள். (க, ஈச்) ஆகையால் கேசவன் என்று மூன்று பொருள்களிலும் இங்கு ப்ரயோகம். இந்த ஒரு சொல்லிலேயே ப்ரஹ்மா, விஷ்ணு ருத்ரன் இவன் அம்சம் என்பது வ்யக்தமாவதுடன் முதலாவது பாசுரத்தில் மூன்று அடிகளால் எம்பெருமானுடைய மூன்று உருவங்கள் குணங்கள் சேஷ்டிதங்கள் சிறுமீர்கள் அறிய மூன்றுபடியாக விரித்துரைத்த நூல் பாரமார்த்திக தசையில் நேரில் காணும்போது இந்த மூன்றையும் ஒரு பொருளில் காட்டி ஓரடியால் நிர்த்தேசித்ததும் அதுவும் ஒரு பொருளே என்பதை இவை மூன்றும் அடங்கின கேசவ நாமம் ஒன்றால் முடித்ததும் வியப்பொடு துணுக்கந் தரும் தெய்வீகச் செயல். இவை மேலும் இன்னும் பலபடி பயனை கடைசிப் பாட்டு ஆக்கித்தரும் அருமை பெருமைகள் சுவைக்கத் தக்கவை.

"பாரோர் புகழ" -- என்றது இவர்களை அல்ல. இந்த அனுஷ்டானத்தை பயனின் பெருமை தோன்றியவிடத்துச் செயலிற் பற்றுவரும். அதனால் அதை அவலம்பித்து உலகம் உள்ளவரை உடல் எடுத்த உயிர் எல்லாம் உஜ்ஜீவனம் அடையத்தக்க சுளுவான துறை இதுவாதலின் எல்லா மனிதரும் இதைக் கடைப்பிடிக்க நாம் இத்துறையில் இழிவோம் எனும் பரோபகார ஸங்கல்பம் நாம் இதை ஆறும் பயனும் முற்றுணர்ந்து கடைப்பிடிக்கிறோம். ஆதலின் நாம் பெறும் பேற்றை இனி உலகில் பிறப்பார் எல்லாரும் கண்டு இந்த மார்க்கத்தையே கடைப்பிடிப்பார்கள். பெரும்பயனாகிய இறைவன் திருவடி அடைந்து இறைஞ்சுதலை அடைவார்கள் என்பது 'புகழ' என்னும் சொற்பொருளும் அவ்வழி நிற்க ஸங்கல்பித்தல் அப் பெரும்பயனும் எனக் கொள்ளத்தக்கது. 'ஏல், ஓர்' என்னும் இரு சொற்களாகவும் பொருள் கொள்ளத்தக்கவை. 'ஏல்' என்று உயர்ந்த என்னும் பொருளில் உபயோகப்படுவது. 'எல்லோ' என்னும் தொடர்மொழிக்கு 'உயர்ந்தல்லவா' என்னும் பொருள். மேலும் தமிழின் முதற் குழவியாகிய தெலுங்கில் 'ஏலினவாடு' -- உயர்ந்தோர் என்னும் பொருளில் இன்றும் வழங்குவது நோக்கத்தக்கது. 'ஏர்' என்னும் சொல் 'ர'வுக்கு 'ல' பெற்று 'ஏல்' என்று ஆயிற்று எனினும் பொருந்தும். 'ஓர்'-- ஒப்பற்ற, தனித்த , இணையில்லாத. 'நஸமோ அப்யதிச்ச' என்றபடி. வினைச் சொற்களாகக் கொள்ளின் 'ஏல்' -- ஏற்றுக்கொள், தங்கள் ஆராதனத்தைச் செயலும் பயனுமாய் பகவதர்ப்பணம் செய்தலாகிய ஸாத்வீக த்யாகத்தால் ஹார்த்த ஸ்வரூபத்திற்குக் கொடுத்தல்; 'ஓர்'---எங்கள் உஜ்ஜீவகத்தை ஸங்கல்பித்து ரக்ஷி என்றபடி பகவத் ரக்ஷண ஸங்கல்பமே ஸாதுக்களின் எல்லா ஸத்கர்மாக்களுக்கும் ப்ரயோஜநம் என்பது ப்ரஸித்தம். 'அநேக வ்ருத்தத: ஸோபாஹ நிவேதித பலாகதி' என்றான் காளிதாஸனும். 'எம்' --எங்களில், அவரவர்கள் மனத்தில் உள்ள, 'பாவாய்' ஹார்த்த ஸ்வரூபம் கொண்ட திவ்ய மங்கள விக்ரஹமே என்று கூவி ப்ரார்த்திக்கிறாள். ஹார்த்தமான திவ்ய மங்கள விக்ரஹத்தையே இந்த நூலில் 'பாவை' என்னப்படுவதும், அதன் உணர்ச்சி உயிர்களாகிய மனிதர்களுக்கு மிகுந்து பயன் தருவதும்தான் இந்த நூலின் நோக்கமும் ப்ரயோஜனமும் என்பதும் பின்னுள்ள எல்லாப் பாசுரங்களாலும் நன்கு அறியத் தக்கது. இந்த அநுஷ்டாநத்தின் திறத்தைத் தெரிந்து அதில் புகழுடைமை மனத்தில் தேறி நிற்கும் ஜீவன்களை விளித்து அடுத்த பாசுரத்தில் கூவியும் நிர்த்தேசித்தும் இந்த வ்ரதத்தை எடுத்துக்கொள்ளும் படிகளை எல்லாம் விதி நிஷேதங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லி வ்ரதம் எடுத்துக்கொள்ளும் ஸங்கல்பம் செய்து வைக்கிறாள். ___________________________________________________

திங்கள், 25 மே, 2009

"மார்கழித் திங்கள்"

கருத்து;--மார்கழி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசியில் இந்த வ்ரதம் ஆரம்பமாகிறது. அன்று நக்ஷத்திரம் கார்த்திகை. அன்றிரவு நாலு நாழிகைதான் இருட்டு. அது மறுநாளின் உஷத் காலமானதாலும் அன்றுமுதல் மூன்று தினங்கள் பகலும் இரவும் பகலாதலாலும் காலம் இரவின்றி நித்யம் பகலாயிருக்கும் வைகுண்ட மாக்கிற்று. ஸகல பரத்வ சௌலப்யங்களையும் ஏககாலத்தில் வெளிக் காட்டிக் கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீகாந்தன் விளையாடின குழந்தை விளையாட்டுடையவிடம் ஆய்ப்பாடி யானதால் அந்த இடத்தில் நிகழ்வதாகத் தன் செய்கையை அநுவர்த்திக்கிறான்.
மதி நிறைந்த -- இருட்டின்றிப் பகலாகவே பகவதநுபவம் செய்யக் கிடைக்கும் வைகுண்டத்திற் போன்ற காலம்.நல் -- ஏற்றமிகுந்த உயர்ந்த என்னும் பொருள்களில் பொருந்திய நாள் -- ' மாஸாநாம் மார்க்கசீர்ஷோஹம்' என்று கீதையில் குறிப்பிட்ட காலத்தில் வைகுண்டத்திற் போலக் காலமுண்மையால் தேவதாராதனத்திற்குப் பொருத்தமும் மற்றெல்லா தினங்களைக் காட்டிலும் அந்த மூன்று தினங்களுக்கு ஏற்றமும் குறிக்கப் பெறுகின்றன.
ஆல் -- ஆரல் கார்த்திகை நக்ஷத்திரம் என்பது பரிபாடல் 5 அடி 43 "வடவயின் விளங்கா லுரையெழும் களிருள்" சாமிநாதய்யர் பதிப்புப் பக்கம் 35.நேர் -- ஒத்த இழையீர் -- பிறப்புக்குத் தகுந்த இடைத் தொழிலாகிய ஸ்வதர்மத்தை (உடைத் தவத்தை)ச் செய்கிறவர்களே! தவஞ்செய்தல் தன் கருமஞ் செய்தல் நேர் -- பொருந்திய ஸ்வாபிகதர்மம். பிறப்பினாலே வகுக்கப்பட்ட ஜாதித் தொழில். இந்த ஆராதனத்தின் பயனை அடையும் காலத்தில் இவர்களே 'சேயிழையா'ராக 30ஆவது பாட்டில் மாறிவிடுகிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்குச் செய்யும் இடைத் தொழில் ஸ்வகர்மாவானதால் அதை நேர்ந்த கர்மா என்றாள். இவர்கள் கர்மங்கள் அவனருளால் மாற்றப்பெற்று பகவத் பாகவத கைங்கர்யமே ஸ்வரூபமென்னும் நிலை கிடைக்கும்போது நேரிழை சேயிழையாயிற்று.ஸ்வபாவறியதம் கர்மா. ஸர்வோத்க்ருஷ்ட -- எல்லாவற்றிலும் செய்யச் சிறந்த கர்மாவாயிற்று. 'சிறுமீர்காள்' என்பதன் முழுப் பொருளும் 28ஆவது பாட்டில் விவரணம். இவ்வித ஆகிஞ்சந்ய பராகாஷ்டை நிலைத்திருத்தல்தான், அவன் அருள் பெறுவதற்கு மிகப்பெரிய சாதனமென்பதைத் தெரிவிப்பவன் கவிகள் நாணச் சிறுமைக்குப் பெருமை கற்பித்து அந்த ஆகிஞ்சந்யத்தை உங்கள் உண்மைப் பொருளாக உடையீர்களானதால் நீங்கள், எல்லாரும் எம்பெருமான் செல்வமாக வளர்க்க உரிமையுடையீர்கள் என்பது பையன்களோடு யமுனை மணற்குன்றிற் கண்ணன் அவர்கள் எச்சிலைத் தான் சுவைத்துத் தன்னெச்சிலை அவர்களுக்குக் கொடுத்தும் சோறுண்டதும் அதைப் பிரம்மாதி லோகங்களில் உள்ளவர்கள் கண்டு அதிசயித்ததும் இடைப் பெண்களுடன் இவன் ராஸக்ரீடை செய்ததும் சகல சாஸ்த்ர விசாரதர்களுக்கு எந்நாளும் கிட்டியதாக நூல்களிற் காணவில்லையே !

ஞாயிறு, 24 மே, 2009

"மார்கழித் திங்கள்"

ஆழ்வார்கள் அருளிச்செயல்களின் பெருமையே அவற்றிற்கு எத்தனை எத்தனை பேர்கள் எத்தனை எத்தனை விதமாக வ்யாக்யானமிட்டாலும்,அவற்றை எத்தனை முறை நாம் படித்தாலும், படிக்கும் ஒவ்வொரு தடவையும் அதுவரை நமக்குப் புலனாகாத புதிய விஷயங்களை நாம்அனுபவிக்க முடியும் என்பதுதான். அதிலும் கோவிந்தன் மேல் காதல் வயப்பட்டு ஆண்டாள் பாடியவைகள் அள்ள அள்ளக் குறையாமல்வளரும் அர்த்தக் களஞ்சியங்கள். எவ்வளவு ஞானவான்கள் எப்படியெல்லாம் அனுபவித்து அந்த அனுபவங்களை நமக்கும் சொல்லிப் போந்தார்கள் ! அவற்றை நம்மில் பலர் அலுக்காமல் சுவைப்பதும் வழக்கம்தானே! அந்த வகையில், இதோ மதுரை வழக்கறிஞர் "தார்மிகரத்நப்ரதீப " உ.வே. N.R.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் "மார்கழித் திங்கள்" பாடலை மட்டும் விளக்கி யுள்ளதை நாமும் தினம் கொஞ்சமாக ரஸிப்போமா?

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் !
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் !

பதவுரை :--
மார்கழித் திங்கள் -- மார்கழி மாதத்தில் ;
மதி -- சந்திரன் நிறைந்த -- பூர்த்தியாயிருக்கின்ற
நன்னாள் -- நல்ல தினமாகிய (நல்--ஏற்றமிகுந்த)
ஆல் -- (ஆரல்) கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய தினத்தில்;
நீர் ஆட -- ஸ்நாநம் செய்ய, (ஒழுக்க முறையில் ஈடுபட பகவத்குணாநுபவம் செய்யப்)
போதுவீர் --விரும்பி வருபவர்கள்;
போதுமினோ -- வாருங்கள்;
நேர் -- தகுந்த, பொருந்திய; இழையீர் -- ஆபரணத்தையுடையவர்களே!
நேர் -- ஒழுங்கான சாஸ்த்ர விஹிதமான , இழையீர்-- செய்கை, நடத்தையுடை யவர்களே;
நேர்-- கிடைத்தவற்றைக் கொண்டு, இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே;
நேர் -தர்மத்திற்கு எதிர்த்தட்டில்; இழையீர் -- புகுரமாட்டாதவர்களே!;

நேர் ---எதிரிலே, பகவத் ஸந்நிதியிலே; இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே!;
சீர் -- சிறப்பு;மேன்மை; மல்கும் --பலமடங்காகப் பெருகுகின்ற
ஆய்ப்பாடி -- இடைச்சேரி, தாய்மார்கள் இருக்கும் ஊர்;
ஆய் -- தெரிந்தெடுத்த ;
பாடி --ஊர் (எம்பெருமாள் அவதாரத்துக்கு யாதுமறியாரிடையே விளையாடப் பொறுக்கித் தெரிந்த ஊர்)
(பகர வொற்று மிகை வினைத் தொகையாகக் கொள்ளில்);
செல்வ -- அருமையான;
சிறுமீர்காள் --குழந்தைகளே (அறிவினாலும், உணர்வினாலும், ஸம்ஸ்கார அநுஷ்டானங்களாலும் சிறியோர்களே!)
கூர் --கூரிய ,சிறப்புற்ற; வேல் -- வேலாயுதத்தையுடைய;
கொடும் -- தன் காத்தல் தொழிலினின்றும் வளைந்து நிற்பது போன்று காணப்படுகிற;

தொழிலன் -- செயலையுடையவன் (சம்ஹாரத்தையும் செய்பவன்)
நந்தகோபன் குமரன் -- நந்தகோபனுக்கு மகனாக இருப்பவன்;
ஏர் -- அழகு;

ஆர்ந்த -- ஒளிவிடுகிற, நிறைந்த,
கண்ணி-கண்ணையுடையவள், சிறந்த மாலையையுடையவள், பூர்வீகர்கள் செய்துள்ள பாக்களைச் சொல்லிக் கொண்டிருப்பவள்;
யசோதை -- யசோதைப் பிராட்டியார், புகழைத் தருபவள்;
இளஞ்சிங்கம் -- சிங்கக் குட்டி;
கார்மேனி -- உருவம் கருத்தும், மேகம் போன்ற மேனி அழகும், குளிர்ச்சியும் உள்ள மேனி;
மேனி -- உடல், உருவம்,அங்கம், மேகத்தின் மினுக்கு;

செங்கண் -- சிவப்பு நிறமுடைய கண், செம்மையான உருவாலும், நோக்காலும் உள்ளன்பின் வெளியீட்டாலும், திருந்திய கண்; கதிர்

மதியம்போல் -- சூரிய சந்திரர்கள் போல், ஒளிவிடு சந்திரன் போல்;
கதிர் -- விளையும், பயன்தரும் சந்திரன் என்றுமாம்;
போல்-- ஒத்திருக்கின்ற
முகத்தான் -- முகத்தினழகுடையவன், ப்ரவேசமுடையவன் (முகம்-- இடம், சந்தி, தொனி, புறம், முகப்பு, வதனம், வாய்,வாயில் வேதம், ஆரம்பம்,, உபாயம்) (இவ்வெல்லாப் பொருட்களும் கொள்ளத் தக்கன) இவைகளையெல்லாம் தனக்கு ஸ்வரூப ரூபகுணசேஷ்டிதங்களாக உடையவன்
நாராயணனே -- ஒப்பார் மிக்காரின்றி உயர்வற வுயர் நலமுடைய நாராயணனே (உயர்வு சிறப்பு)
நமக்கே -- எவ்விதத்திலும் அவனை அடைய முயற்சிக்கும் மார்க்கமொன்று அறியமாட்டா மனிசரிற் றுரிசனாய்,
பறை -- சொல், அபயம், என்றும்காத்தலைச் செய்யும் தீர்மானச் சொல், காத்தலுமாம்;
தருவான் -- நமக்கு ஸாரூப்ய நிலைமையை உண்டாக்கி, அளிப்பான்;
பாரோர் -- உலகத்திலுள்ளோர்கள்;
புகழ -- உவக்க, ஆச்சர்யப்பட, மெச்ச, ;
படிந்து -- இறங்கி, ஈடுபட்டு, அந்வயித்து, ஆழ்ந்து (அல்லது) உணர்ந்து;

எம்பாவாய் -- என் மனத்தில் நினைந்திருக்கும் ப்ரதிமா வடிவு உடைய ஹார்த்த ஸ்வரூபியான மூர்த்தியே! என்று விளி;
ஏல் -- ஏற்றுக்கொள்,அல்லது மேன்மையுற்ற, உயர்ந்த;
ஓர் -- உணர் அல்லது ஒப்பற்ற, தனித்த பெருமையுடைய ;
ஏல் -- உயர்ந்த; ஓர் --ஒப்பற்ற
எம்பாவாய் என்றும், எம்பாவாய்-- எம்பாவையே ஏற்றுக் கொள், உணர் என்றும் இருவகையாலும் பொருள் கொள்ளவும்

திருக்கல்யாணம்

Panorama of thirukkalyanam on CleVR.com