வெள்ளி, 13 ஜனவரி, 2023

ராமாயணம் --- உத்தர காண்டம் 22

முப்பத்தாறாவது ஸர்க்கம்

[ராவணனின் விஜய விருத்தாந்தத்தைக் கேட்ட ஸ்ரீராமன், 'அவனை ஐயிக்க அப்பொழுது யாருமே இல்லையா?' என்று அகஸ்தியரைக் கேட்க, ராவணனுடைய தோல்வியை எடுத்துக் கூற ஆரம்பித்தல்)

 

          இவ்வாறான ராவண- இந்திரஜித்தின் விஜயத்தைக் கேட்ட ஸ்ரீராமன் மிகவும் ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் அகஸ்தியரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார் - மகரிஷியே! க்ரூரனான ராவணன் வரபலத்தால் கர்வமடைந்து உலகத்தை ஜயிக்க எண்ணம் கொண்டு சுற்றித்திரியும்பொழுது, இவ்வுலகில் ஜனங்களே இல்லையா? இருந்தும் வீரர்கள் தான் இல்லையா? யாருடனும் அந்த ராவணன் போரிட்டுத் தோற்றதே இல்லையா? எல்லா க்ஷத்திரிய அரசர்களுமேயா அவனிடம் தோற்றுப் போயினா்?

          இதைக் கேட்ட அகஸ்த்தியர் புன்முறுவல் செய்து, ராவணன் தோல்வியடைந்ததைக் கூறுகிறார் - ராவணன் இப்படியாக உலகத்தினரை ஹிம்ஸித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஸமயம் கார்த்தவீர்யார்ஜுனனை ஜயிக்க எண்ணம் கொண்டவனாய், ஸ்வர்க்க லோகம் போலப் பிரகாசிக்கும் மாஹிஷ்மதீ என்ற அவனுடைய பட்டணத்திற்குச் சென்றான். அந்தப் பட்டணத்தை எப்பொழுதும் அக்கினி பகவான் பிராகாசரூபமாக இருந்துகொண்டு ரக்ஷித்து வருகிறான்.

       ராவணன் அங்கே சென்று, கார்ந்த வீர்யார்ஜூனனுடைய மந்திரிகளை நோக்கி, “இலங்காதிபதியான ராவணன் யுத்தத்திற்கு வந்துள்ளான் என்று உங்களரசனிடம் கூ.றுங்கள்" என்றான். அதற்கு அவர்கள், "எங்கள் அரசன் நகரத்தில் இல்லை. எங்கோ வெளியில் சென்றிருக்கிறான்" என்றனர்.

       இதைக் கேட்ட ராவணன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் 'என்று நினைத்தவனாய், அங்கிருந்து புறப்பட்டு, ஆகாயத்தை அளாவி 'நின்ற 'விந்த்ய' மலையை அடைந்தான். அதன் அழகை ரஸித்துக் கொண்டே, அடுத்து. மேற்குமுகமாகப் பிரவஹிக்கும் நர்மதா நதியை அடைந்தான். பிறகு புஷ்பக விமானத்திலிருந்து இறங்கினான். அந்தப் புண்யநதியில் நீராடினான். தனது அமைச்சர்களை நோக்கி, "இந்த நதி மஹாபரிசுத்தமானது. பாபங்களைப் போக்குவதில் கங்கைக்கு நிகரானது. ஆதலால் நீங்கள் அனைவரும் சிரமத்தைப் போக்கி ஆரோக்யத்தைத் தருவதான இந்த நர்மதா நதியில் நீராடிக் களை தீருக. இதோ சூரியன் ஆயிரம் கிரணங்களுடன் கூடினவனாய் உலகத்தை ஸ்வர்ணம் போலப் பிரகாசிப்பித்துக் கொண்டுள்ளாள். இந்த நடுப்பகலிலும் அவன் நான் இங்கு உள்ளதைக் கண்டு பயந்து சந்திரன் போன்று விளங்குகிறான்" என்று கூறினான். பிறகு அவன் அந்த நதியில் நீராடி, சரத்காலத்திய நிலவு போன்ற வெண்மையான அதன் மணல்மேட்டில் அமரிந்து கொண்டு, புஷ்பங்களால் சிவபூஜை செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது அவன் சுத்தமான வெளுப்பு வஸ்திரத்தை உடுத்துக்கொண்டு விளங்கினான். பரிசரர்களால் கொண்டுவரப்பட்ட நாநாவித வாஸனை யுள்ள புஷ்பங்களால் வேதமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தன்னுடன் எடுத்து வரப்பட்ட ஸ்வர்ண மயமான லிங்கத்திற்கு அர்ச்சனை செய்தான். பிறகு ஸாமகானம் செய்தான். லிங்கத்தின் முன்பு பாடிக்கொண்டே நர்த்தனமும் செய்தான்.

முப்பத்தேழாவது ஸர்க்கம்

[ராவண பூஜை செய்யும் இடத்திற்கு மேற்கே, சிறிது தூரத்தில் கார்த்தவீர்யார்சுனன். அந்த நதிநீரைத் தனது ஆயிரம் கைகளால் தடுத்து நிறுத்தல், இதை அறிந்த ராவணன் அவனுடன் போரிட்டு அவனிடம் கட்டுப்படுதல்)

 

          ராவணன் சிவபூஜை செய்து கொண்டிருந்த அதே ஸமயத்தில், அந்த நதியில், அவ்விடத்திற்குச் சமீபத்தில் கார்த்தவீர்யாஜுனன் அனேக ஸ்த்ரீகளுடன் மகிழ்ந்து ஜலக்ரீடை செய்துகொண்டிருந்தான். அவன் தன் கைவலிமையைச் சோதிக்க நினைத்தவனாய். தனது ஆயிரம் கைகளாலும் அந்த ஆற்றுநீரை, அணைக்கட்டுவது போல நீட்டித் தடுத்தான். இப்படித் தடுக்கப்பட்ட அந்தப் பிரவாகமானது, மேலே செல்லச் சக்தியற்றதாக தேக்கம்கொண்டு பின் னோக்கிச் செல்லலாயிற்று. அந்தத் திடீர்ப் பிரவாகத்தால் இராவணனுடைய சிவபூஜை உபகரணங்கள் அடித்துச் செல்லப்படலாயின.

       எதிர்பாராத இதைக் கண்ட இராவணன் வேகத்துடன் சுகசாரணா்களை அழைத்து, இப்படி ஜலம் எதிர்த்துப் பிரவகிப்பதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டான். ஸஹோதரர்.களான அவ்விருவரும் வானில் கிளம்பி மேற்கு நோக்கிச் சென்றனர் அர்த்த யோஜனை தூரம் சென்ற அவர்கள் அங்கு அவ்வாற்றில் ஒரு புருஷன் அனேக ஸ்திரீகளுடன் ஜலக்கிரீடை செய்வதைக் கண்டார்கள். அந்தப் புருஷன், பெரிய ஸாலவ்ருக்ஷம் போன்றும், நீர் முழுவதும் பரந்துள்ள கேசங்களையுடையவனும், மதத்தினால் சிவந்த கண்களை யுடையவனும், தேஹகாந்தியுள்ளவனாகவும், ஒரு மலையானது தனது பாதங்களால் பூமியைத் தடுத்து நிறுத்துவது போலத் தனது ஆயிரம் கைகளானும் ஆற்றுநீரைத் தடுத்து நிறுத்துபவ னாகவும் காணப்பட்டான் இந்த ஆச்சரியத்தைக் கண்ட சுகசாரணர்கள் ஆற்றுநீர் எதிர்த்து வரும் காரணத்தை அறிந்தவர்களாய். வேகமாகத் திரும்பி வந்து ராவணனிடம் விஷயத்தைக் கூறினார்கள்.

       இப்படிக் கூறக் கேட்ட ராவணன், அவன்தாள் கார்த்தவீர்யார்ஜுனனாக இருக்க வேண்டுமென நினைத்தான். உடனே தனது அநுசரர்களுடன் அவ்விடத்தை நோக்கிப் புறப்பட்டான். இப்படி அவன் புறப்பட்டபொழுது, காற்று தீவிரமாக வீசியது. மேகங்கள் அனைத்தும் ஒரே ஸமயத்தில் ஹோ என்று சப்தமிட்டன. மஹோதான், மஹா பார்ச்வன்,,தூம்ராக்ஷன், சுகன், சாரணன் ஆகியவர்களும் உடன் புறப்பட்டனர். அனைவரும் அர்ஜூனன் இருக்குமிடத்தை அடைந்தனர்.

       அங்கே அனேக ஸ்திரீகளுடன் ஜலக்ரீடை செய்யும் அர்ஜுனனைக் கண்ட ராவணன், அவனுடைய மந்திரிகளைப் பார்த்து, கம்பீரமான குரலில் பின்வருமாறு கூறினான்-மந்திரிகளே! நீங்கள் உடனே உங்களுடைய அரசனான ஹைஹயாதிபதியிடம் சென்று, ராக்ஷஸேச்வரனான ராவணன் உன்னிடம் போர் புரிய வந்திருக்கிறான் என்று கூறுங்கள்" என்று.

       இதைக் கேட்ட அர்ஜுனனின் மந்திரிகள் தங்கள் தங்கள் ஆயுதங்களுடன் வேகத்துடன் எழுந்து நின்று கொண்டு, ராவணனிடம், "போர் புரியக் காலத்தை தன்கு அறிந்தாய். மதம் பிடித்தவனை. ஸ்திரீகளின் மத்தியிலுள்ளவனை எதிர்த்துப் போரிட நினைக்கிறாய் மிக மிக நன்று! பெண் யானைகளுடன் கூடிக் களித்திருக்கும் ஆண், யானையைப் பெரிய புலி எதிர்ப்பது போலுள்ளது உனது செய்கை. இந்த இரவுப் பொழுது போகட்டும். பொறுத்துக்கொள். நாளைக் காலை எமது அரசனுடன் போரிடவும். அப்படிக்கீன்றி இப்பொழுதே போரிட விரும்புவாயாகில், எங்களுடன் போரிட்டு வென்று பிறகு அரசனுடன் போரிடவும்" என்று கூறினர்.

       இந்த அவகாசத்தை ஸஹிக்காத ராவண ஸைன்யத்திற்கும் அர்ஜுன மந்திரி ஸைன்யத்திற்கும் யுத்தம் உண்டாயிற்று. அரக்கர் ஸைனிகர்களால் அர்ஜூன ஸைனிகர்கள் பலர் கொல்லப்பட்டு பக்ஷிக்கப்பட்டனர்.

       அர்ஜுன ஸைன்யம் அதிகமாக அழிக்கப்படுவதைக் கண்ட த்வார ரக்ஷகர்கள் அர்ஜுனனிடம் சென்று ராவணனுடைய அதிக்கிரமச் செயலைக் கூறினர். அவள் மிகவும் சினங் கொண்டு, யுகாந்தகால அக்கினி போல ஜலத்திலிருந்து வெளிக்கிளம்பி, ஸுவர்ண மயமான பெரிய கதையைக் கையிலேந்தியவனாக, ராவண ஸைன்யமாகிற இருளை அழிக்கச் சூரியன் போல எதிர்த்துச் சென்றான். இப்படி எதிர்த்து வந்த அர்ஜுனனைப் பிரஹஸ்தன் உலக்கையைக் கையில் கொண்டவனாக எதிர்த்து நின்றான். மேலும் கையிலுள்ள ஆயுதமான உலக்கையை, அர்ஜூனன்மீது பிரயோகித்தான். நெருப்பைக் கக்கிக் கொண்டு வரும் அந்த உலக்கையை அர்ஜுனன் தனது சக்தியினால் அழித்துவிட்டான். ஐந்து முழ நீளமுள்ள தனது கதையால் பிரஹஸ்தவை அடித்தான். அந்த அடியைத் தாங்க மாட்டாமல் பிரஹஸ்தன், வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்ட மலை போலக் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தான், பிரஹஸ்தன் அடிபட்டு விழுந்ததைக் கண்ட மாரீசன், சுகன், சாரணன் முதலானவர்கள் யுத்தபூமியிலிருந்து பயந்தவர்களாக ஓடிவிட்டனர்.

       தனது வீரர்கள் ஓடினதைக் கண்ட ராவணன் மிகவும் கோபத்துடன் அர்ஜூனனை எதிர்த்தான். ஆயிரம் கையனுக்கும், இருபது கையனுக்கும் மிக்க பயங்கரமான யுத்தம் நடந்தது. இருவரும் கதையினா ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனா். மிகவும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது பலம் முழுவதையும் ஒன்றுசேர்த்து, வேகத்துடன் கதையை ராவணனுடைய மார்பைக் குறித்துப் பிரயோகித்தான். சாகா வரம் பெற்ற ராவணனுடைய, மார்பைத் தாக்கிய அந்த கதை இரண்டு துண்டாகக் கீழே விழுந்தது. வேகமாகப் பிரயோகித்து அடிக்கப்பட்ட ராவணனுடைய கைகளிலிருந்த ஆயுதங்கள் நழுவின. ராவணனும் வலி தாங்காதவனாகக் கூக்குரலிட்டுக்கொண்டு கீழே அமர்ந்துவிட்டான்.

       சிந்தைக் கலக்கமடைந்து உட்கார்ந்த ராவணணைக் அர்ஜுனன் வேகமாகச் சென்று, தனது ஆயிரம் கைகளாலும் பிடித்துக் கட்டிக்கொண்டு, கருடன் பாம்பை எடுத்துச் செல்வது போலத் தூக்கிச் சென்றான். அதனைக் கண்ட தேவர்கள் 'நன்று, நன்று' என்று சொல்லிக் கொண்டே பூமாரி பொழிந்தனர். அர்ஜூனன் ராவணனைத் தூக்கிச் செல்வது புலி மானைத் தூக்கி எடுத்துச் செல்வது போலவும், சிங்கம் யானையை அடித்துச் செல்வது போலவும்  இருந்தது.

       மூர்ச்சை தெளிந்தெழுந்த பிரஹஸ்தன், ராவணன் கட்டப்பட்டுப் பிடித்துச் செல்வதைக் கண்டு மிகுந்த கோபத்துடன் ஸைன்யத்துடன் அரிஜூனனைத் தொடர்ந்து சென்று "ராவணனை விட்டுவிடு” என்ற கூச்சலிட்டுக்கொண்டே அனேக ஆயுதங்களால் அர்ஜுனனை தாக்கினான். அர்ஜுனனும், அவற்றையே தான் கையில் வாங்கி கொண்டு அவற்றினாலேயே அவர்களைத் தாக்கி, பெருங்காற்றானது மேகக் கூட்டங்களைச் சிதற அடிப்பது போலச் சிதறியோடும்படி செய்தான்.

       ராவணனைச் சிறை பிடித்து வந்த கார்த்தவீர்யார்ஜூனனை நகர வாசிகள் அனைவரும் புஷ்பங்களையும் அக்ஷதைகளையும் வாரியிறைத்து மங்கள ஹாரத்தி எடுத்து வரவேற்றனர்.

 

முப்பத்தெட்டாவது ஸர்க்கம்

[கார்த்தவீர்யார்ஜுனனால் ராவணன் கட்டப்பட்டதைத் தேவர்கள் மூலமாக அறிந்த புலஸ்தியர் அவனை விடுவித்தல்.)

       வாயுபகவான் கட்டுண்டதைப் போன்று, ராவணன் கட்டுண்டான் என்ற விஷயத்தை ஆகாயத்தில் ஸஞ்சரிக்கின்ற தேவர்களின் வார்த்தைகளின் மூலமாக அறிந்த புலஸ்தியர், தமது பேரனிடமுள்ள அதிக அன்பினால், அதனைப் பொறுக்க முடியாதவராக, வாயுவைப் போன்று அதிக வேகத்துடன், மாஹிஷ்மதி நகரை அடைந்தார். இந்திரலோகமான அமராவதியைப் போலுள்ள அந்த நகரத்தில், ஒளி பொருந்திய சூரியன் நடந்து வருவது போன்று வந்த அவரைக் கண்ட நகரத்திலுள்ளோர் அர்ஜுனனிடம் அந்தச் செய்தியை அறிவித்தனர். அவன் வருபவர் புலஸ்திய மாமுனிவர் என்பதை அறிந்து, கைகளைத் தலைக்கு மேலாகத் தூக்கி அஞ்ஜலி செய்துகொண்டு வரவேற்றான். புரோகிதர் மூலமாக அர்க்யம் முதலானவற்றினால் அவரைப் பூஜித்து உயர்ந்த ஆஸனத்தில் அமரச் செய்து, அவரைப் பார்த்து, "தவசிரேஷ்டரே! தேவரீருடைய வரவினால் இந்த நகரம் தேவலோகம் போலானது. தேவரீருடைய தரிசனத்தால் எனது ஜன்ம ஸபலமானது. இந்த ராஜ்யம் இதிலுள்ள நாங்கள், மற்றுமெல்லாரும் தங்களுக்கு அதீனம். அடியேன் என்ன செய்ய வேண்டும்? ஆஜ்ஞையிடுங்கள், செய்கிறேன்”' என்று விஜ்ஞாபித்தான்.

       இதைக் கேட்டு மகிழ்ந்த புலஸ்தியர், அவனைக் குசலப்ரச்னம் செய்து, பிறகு 'ராஜேந்த்ர! எவனைக் கண்டு ஸமுத்திரமும் காற்றும் அசைவற்றுப் பயத்தினால் நிற்குமோ அப்படிப்பட்ட பலவானான ராவணன் உன்னால் பிடித்துக் கட்டப்பட்டுள்ளான். உனது புகழ் உலகில் பரவியுள்ளது. என் பேரனும் யுத்தத்தில் ஜயிக்க முடியாதவனென்ற கீர்த்தியை யுடையவனுமான ராவணனுடைய கீர்த்தியானது உன்னால் அழிக்கப்பட்டது. நாள் உன்னை வேண்டுகிறேன். இந்த என் பேரனான ராவணனை விட்டுவிடு" என்றார்.

       இதைக் கேட்ட அர்ஜூனன், பதிலேதும் பேசாமல் ராவணனை உடனடியாக விடுவித்தான். அக்கினி ஸாக்ஷியாக அவனுடன் ஸ்நேஹம் செய்துகொண்டு, புலஸ்திய முனிவரை வணங்கி விடை பெற்றுத் தன் இருப்பிடம் சென்றான். ராவணனும் வெட்கித் தலை குனிந்து புலஸ்தியரிடம் விடைபெற்றுச் சென்றனன்.

       இராம! இப்படியாக அர்ஜுனனால் அவமானம் அடைந்த ராவணன் சிறிது காலம் சும்மர இருந்தான் ராகவ! 'பலவான்களைக் காட்டிலும், பலவான்கள் இருப்பார்கள் என்று நினைத்தல் வேண்டும். இதர பலசாலிகள் உலகிலேயே இல்லை என்று, பிறரை அவமதித்தல் கூடாது. இது தனக்கு நல்லதன்று.

एवं बलिभ्यो बलिनः सन्ति राघवनन्दन ।
नावझा हि परे कार्या
इच्छे त्प्ररिय मात्मनः ॥

ஏவம் பலிப்யோ பலிந: ஸந்தி ராகவநந்தன |
நாவஜ்ஞா ஹி பரே கார்யா ய இச்சேத் ப்ரியரைத்தை://

சில நாட்கள் சென்றபின் இராவணன் மறுபடியும் இதரர்களைப் பீடிக்க ஆரம்பித்தான்.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தரகாண்டம் 21

முப்பத்தைந்தாவது ஸர்க்கம்

(கட்டுண்ட இந்திரனை விடுவிக்க தேவர்கள் ப்ரம்மாவை வேண்டுதல்,
பிரம்மா இராவணனிடம் சென்று இந்திரனை விடுவிக்கக் கோருவது,
அதற்காக மேகநாதன் வரம் வேண்டுவது,
இந்திரன் கட்டுண்டதற்கான காரணம்,
விஷ்ணு யாகம் செய்து இந்திரன் பரிசுத்தனாகி
மீண்டும் தேவலோகாதிபதியாதல்)

            மேகநாதனால், தேவேந்திரன் கட்டுண்டு இலங்கைக்கு இழுத்துச் செல்லப்பட்டவுடன் தேவலோகமானது சூன்யமாயிற்று. இதைக் கண்டு துக்கிதர்களான தேவர்கள் பிரமனை அடைந்து, 'பிரம்ம தேவரே! உமது வரபலத்தினால் இராவணன் கொல்லப்படாதவனாக உள்ளான். ஈச்வானுடைய அநுக்ரஹத்தால், அவனுடைய குமாரனான மேகநாதனும் அனேக சக்திகளைப் பெற்றுள்ளான் இப்பொழுது மாயையினால் இந்திரன் ஜயிக்கப்பட்டுக் கட்டுண்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். போரிட்டு அவனை மீட்க முடியாது. எனவே ஏதேனும் செய்து இந்திரனை மீட்க வேண்டும்" எண வேண்டிக் கொண்டனர்.

          இதைக் கேட்ட பிரம்மதேவர், தேவர்களுடன் இலங்கைக்குச் சென்றார். தன் இனத்தவர்களுடன் ஸபா மண்டபத்தில் அமர்ந்திருந்த இராவணனைக் கண்டு"ராவணா! உனது குமாரன் இந்திரனை வெற்றிகண்டது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். உனக்கும் மேற்பட்டவனாக அவன் விளங்குகிறன். இந்திரனை அவன் ஜயித்தபடியால் இனி அவன் 'இந்திரஜித்' என்று புகழப்படுவான். இணையற்ற வீரனாக இவன் விளங்குவான். இம் மூவுலகமும் உனக்கு வசமாகியுள்ளது. இந்திரனும் உனது வசமாயினான். இவ்வளவே போதுமானது. இனியும் நீ இந்திரனைக் கட்டி வைப்பதனால் என்ன பயன்? இவனை விட்டுவிடவும். இவனை விடுவிக்கும் விஷயத்தில் நீ ஏதேனும் பிரதிபலனை விரும்புவாயாகில் சொல், அதைக் கொடுக்கிறோம்.' என்றார்.

          இதைக் கேட்ட மேகநாதன், "பிதாமஹரே! இந்திரனை விடுவிக்க வேண்டுமாயின், நான் என்றும் அமரனாக (மரணமில்லாதவனாக) இருக்க வரம் தரவேண்டும்" என்றான். இதைக் கேட்ட பிரம்மா, "குழந்தாய்! இவ்வுலகினில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் என்றேனும் ஒரு நாள் மடிந்தேயாகவேண்டும், எதுவுமே அமரமாக (அழிவற்றதாக) ஆக முடியாது" என்றார். இப்படிச் சொல்லக் கேட்ட மேகநாதன், மறுபடியும் பிரம்மாவைப் பார்த்து, ''அங்ஙனமாயின் மற்றெரு வரம் வேண்டுகிறேன். அதையாயினும் அளித்திடுக. அஃது யாதெனில்-- நான் சத்ருக்களை வெல்ல வேண்டிப் போரிடுவதற்காக ஒரு யாகம் செய்கிறேன். அதில் மந்திரங்களுடன் ஹோமம் செய்து அக்னி பகவானை ஆராதிக்கப்போகிறேன். அது தடையின்றி முடியுமாகில் அதிலிருந்து (அந்த ஹோமகுண்டத்திலிருந்து) உயர்ந்த குதிரைகள் பூட்டப்பட்ட ரதமொன்று மேலெழுந்து வரக்கடவது. அந்த தத்தின் மீது அமர்ந்து நான் போரிடுவேனாயின் அப்பொழுது எனக்கு மரணமில்லாமை ரக்கடவது. அப்படியின்றி அந்த யாகம் இடையூறு உண்டாகப் பெறுமாயின், அப்பொழுதே எனக்கு மரணம் உண்டாகக் கடவது. இதுவே எனது முக்கியமான மனோரதம்" என வேண்டினான்.  அதைக் கேட்ட பிரம்மா 'அப்படியே ஆகுக' என அருளிச்செய்து அமரர்களுடன் தன்னிருப்பிடமேகினார். இந்திரஜித்தும், மகிழ்ந்தவனாகி, இந்திரனைச் சிறையிலிருந்து விடுவித்தனன்.

          ஸ்ரீராமசந்திர! தேவராஜனான இந்திரன் மேகநாதனிடம் தோல்வியுற்று அவன் வசப்பட்டுக் கலங்கியிருந்தபடியால். தன்னொளி இழந்து, முயற்சி குன்றிச் சோகமுற்றுச் சிந்திக்கலானான். இதை அறிந்த பிரஜாபதியான பிரம்மதேவர் இந்திரனைப் பார்த்து,  "தேவேந்திரா! நீ ஏன் சோகிக்கின்றாய், முன்செய்த தீவினையின் பயனையே நீ இப்பொழுது அநுபவித்தாய், அதன் விவரத்தைக் கூறுகிறேன்'' கேள் - முன்பு நான் அனேக மனிதர்களைப் படைத்தேன். அவர்கள் எல்லோரும், ஒரே விதமான உருவம், வர்ணம், பேச்சு இவற்றை உடையவர்களாகவே விளங்கினார்கள். அவர்களுள் ஒரு விதமான வ்யத்யாஸமும் காணப்படவில்லை. பிறகு நான் மிகவும் நன்கு தியானித்து விசேஷமாக ஒரு ஸ்திரீயை ஸ்ருஷ்டித்தேன். அவள் ஒவ்வொரு அவயவங்களிலும் வேறுபாட்டை உடையவளாக ஸ்ருஷ்டிக்கப்பட்டாள். 'ஹலம்' என்றால், உருவத்தில் மாறுபாடுகள். 'ஹல்யம்‘ அதனால் உண்டாவது, அதாது மற்றவற்றைக் காட்டிலும், அவயன வேறுபாடுகளினால் உண்டுபண்ணப்பட்டது. இதற்கு ஸமமான மற்றொன்றையுடைத்தானதன்று என்பதனால், அதற்கு அந்த ஸ்திரீக்கு 'அஹல்யா' என்ற பெயர் வைக்கப்பட்டது• அந்த அழகிய ஸ்த்ரீயை நீ விரும்பினாய், காரணம் நீ இந்த மூன்று உலகிற்கும் அதிபதி என்கிற கர்வத்தினால். நான், மிக்க தபோ நிஷ்டரான கௌதம மஹரிஷியின் பொருட்டு அவளை அர்ப்பணித்தேன். இதனால் உனக்குக் கோபம் உண்டாயிற்று. அவளிடத்தில் கொண்ட காமத்தினால், ஒரு ஸமயம் கௌதமர் ஆசிரமத்தில் இல்லாதபொழுது, நீ அவளைப் புணர்ந்தாய். அது ஸமயம் அங்கு வந்து சேர்ந்த முனிவர் உன்னையும் உன்னுடைய செய்கையையும் கண்டு கோபம் அடைந்து 'இந்திரா! நீ இப்படிப்பட்ட கெட்ட காரியத்தை செய்தபடியால், உனது ஸ்வய நிலையில் மாற்றத்தை அடையக்கடவாய். மேலும் ஒரு ஸமயத்தில் போரில் சத்ருவின் பிடியில் சிக்குண்டு அவமானப்படுவாய்.’ என்று சபித்தார், அத்துடன். இப்படிப்பட்ட துஷ்ட கார்யத்தைச் செய்பவர் அனைவரும் இதே நிலையை அடையக் கடவர்என்றும் கூறினார். பிறகு அஹல்யையைப் பார்த்து- கெட்ட நடத்தையுள்ளவளே! நீ நாசமாகக்கடவாய். (தர்மத்தை இழந்தவளாகக்கடவாய்).. அதன்பின் பல பல ஆண்டுகள் அக்கினி பகவானையும் ஸ்ரீராமசந்திரனையும் பூஜித்து இந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய்என்று சாபமிட்டு மேலும், அவளைப் பார்த்து, “எந்த உன் ஒருத்தியிடமே இருக்கும் அவயவ அழகு இப்படிப்பட்ட துஷ்ட செய்கைக்குக் காரணமாக இருந்ததோ. அந்த வடிவழகு பலரிடத்திலும் பிரிந்து குடிகொள்ளட்டும்என்றும் கூறிச் சென்றார். அதுமுதல்தான் பலரிடம் பல வகையான உடலழகு காண்கிறது.

          கௌதமரின் சாபத்தைக் கேட்ட அஹல்யை தானறியாமல் செய்ததை க்ஷமித்து அநுக்ரஹிக்குமாறு பிரார்த்தித்தாள். கௌதமரும். அவனிடம் கருணை கொண்டு "மஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரிக்கப் போகிறார். அவர் இங்கு வரும் பொழுது அவரை தரிசித்தவுடன் உனது பாவம் நீங்கும். அவரைப் பூஜித்து என்னை வந்தடைவாய்; என்று கூறிச் சென்றார்.

          தேவேந்திர ! அதனாலேயே உனக்கு இந்த அவமானம் நேர்ந்தது. தசாவிபர்யயம் மேஷ விருஷணனாகவும் ஆனாய். இப்பொழுது நீ வைஷ்ணவமான யாகமொன்று செய்வாயாகில், அதனால் இந்தப் பாவம் நீங்கிப் பரிசுத்தனாகிப் பிறகு தேவலோகம் சேர்வாய்என்று கூறினார்.

          அதன்படியே இந்திரன் விஷ்ணுயாகம் செய்து பரிசுத்தனாகிப் பொன்னுலகம் போய்ச் சேர்ந்தனன். அங்கே சென்றதும், தனது குமாரன் அரக்கர்களுடன் நேர்ந்த போரில் மரணமடையவில்லை என்பதையும், காப்பாற்றப்பட்டு ஸமுத்திரத்தில் மறைந்து இருந்தான் என்பதையும் அறிந்து மேலும் ஸந்தோஷமடைந்தாள்.

அகஸ்தியர் - "ஹே ஸ்ரீராமசந்திர! நீ கேட்டபடியே - என்னால் இந்திரஜித்தின் பெருமையும் பலமும் கூறப்பட்டன. அதே போல் அவன் இந்திரனை ஜயித்தப் பிரகாரமும் கூறப்பட்டது'' என்றார்.

          இதைக் கேட்ட ஸ்ரீராமன், க்ஷ்மணன், மற்றும் அங்குள்ள ராக்ஷஸர்களும், வானரர்களும் ஆச்சரியம் ஆச்சரியமென்று கூறினர்.

          விபீஷணனும் பல வருஷங்களுக்கு முன்பு நடந்த கதையை மீண்டும் கேட்டு ஸந்தோஷமடைந்தான்.