சனி, 25 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

 சுலோகம் 20 & 21


சுலோகம் 20

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
         த்வந்மௌளிமால்ய பரஸம்பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜமிவாதததி த்வதீயாந்யா
         கேகராணி பஹுமாந விலோகிதாநி ||       .20.

நாடுபுகழ் வில்லிபுத்தூர் நங்காயு னாதன்முடி
சூடித் தரப்புனைந்த தொங்கலந்தார் -- நீடியபொன்
மாவடுநேர் கட்பார்வை மன்னுதலால் வாய்மலர்ந்த
காவிமலர் மாலை யொக்குங் காண்.       .20.

பதவுரை

         த்வந்மௌளிமால்ய ஸம்பரணேந -- உன் சிரோமாலைகளைத் தரிப்பதால்; பூயோ தந்யே -- மிகவும் (முன்னிலும்) தந்யமான (க்ருதார்த்தமான); ஸமஸ்த ஜகதாம் பிது: -- எல்லாவுலகுக்கும் தகப்பனான (பகவானுடைய); உத்தமாங்கை: -- சிரஸில்; த்வதீயாநி -- உன்னுடையதான; பஹுமான விலோகிதாநி -- கௌரவத்தைக் காட்டும் த்ருஷ்டிகளான; ஆகேகராணி -- அழகிய அரைக்கண் பார்வைகள்; இந்தீவரஸ்ரஜம் -- கருநெய்தல் மாலையை; ஆதததீவ -- செய்கின்றனபோலும்
         உலகுக்கெல்லாம் தகப்பன் பகவான். அவனுடைய சிரஸு உலகுக்கெல்லாம் தந்யம். உன் மாலைகளைத் தரிப்பதால் அச் சிரஸு இன்னும் மிக்க தந்யமாயிற்று. அதில் உன்னுடைய பஹுமானத்தோடு கூடிய ஆசை நிறைந்த அரைக்கண் பார்வைகள் கருநெய்தல்மாலைபோல சேர்ப்பிக்கின்றன.

அவதாரிகை

         (1) ரகுபதியின் திருவடிகள் எல்லோருக்கும் தந்யம் என்றார் காளிதாஸர். "தன்யை: பும்ஸரம் ரகுபதி பதை:" ஸர்வலோகபிதாவான பெருமாள் சிரஸு எல்லா உலகங்களுக்கும் ஸ்வயம் தந்யமே. உன் மாலைகளையணிந்து அது இன்னும் அதிநயமாக தந்யமாகிறது. வாஸனையின் அதிசயம் கிடைத்தது மட்டுமல்ல, தந்யையுமதிகமாயிற்று.
         (2) ஆசையோடு தொடுத்த பூமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல, பாமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல, ஓர் நாயனார் தன் கண்ணையே பிடுங்கித் தன் தேவனுக்கு அப்பினாரென்பர். அது பக்தியைக் காட்டினாலும் ஜுகுப்ஸா ரஸத்தையும் தரும். 'அஸிதேக்ஷணா' என்று ஸீதைப் பிராட்டிக்கு ராகவனிலும் ஏற்றத்தைப் பணித்தார், இருவரையும் தராஸில் நிறுத்து அனுபவித்த ருஷி. "மையார் கருங்கண்ணிக் கமலமலர்மேற் செய்யாள்". தன் கருவிழியின் அரைக்கண் திருஷ்டிகளின் நீலகாந்திகளால் ஸ்நேஹமயமான கருநெய்தல் புஷ்பமாலையை சிரஸில் ஸமர்ப்பிக்கின்றாள்போலும். 'யாரிடம் மனத்திற்கும் கண்ணுக்கும் நிர்ப்பந்தமுளதோ, அவரை வரிப்பது ச்ரேயஸ்ஸு' என்பர். மனமும் கண்ணும் இந்த வார் முடியில் மாலையாக பத்தமாயின. பெருமாள் தாமரைக்கண்கள் தாமரைப் பூமாலையை ஸமர்ப்பிக்கும், இவள் கண்கள் கருநெய்தல் மாலையை ஸமர்ப்பிக்கின்றன. 'மீனப்பெருமானின் கண்கள் தாமரைக் காடுகளைச் சொரிந்தன' என்ற அனுபவத்தை நினைக்கவும்.
         தந்யே -- இதை முதலிலேயே பேசுவது அழகு. பெருமாள் தந்யர், பூயோதந்யர் (இன்னும் மேலும் மேலும் தந்யர்) என்கிறார். தந்யரென்று எத்தனை தரம் பேசினாலும் தகும். நம் பெருமாள் திருமுடிக்கு என்ன பாக்யம் கிடைத்தது!
         ஸமஸ்தே ஜகதாம் -- உலகுக்கெல்லாம். இதை நடுவில் வைத்தது மிக அழகு. உலகுக்கெல்லாம் தந்யம், உலகுக்கெல்லாம் தகப்பன். கோதை விவாஹ விஷயத்தில் நம் ஸ்வாமியிடம் இத்துதியான பாமாலை கிடைத்ததும் பெருமாள் பாக்யம். அவரிடம் பிருதம் பெற்ற கவிஸிம்ஹம்.
         பிது: -- உலகுக்கெல்லாம் தகப்பனுடைய. 'உலகுக்கோர் தனியப்பன் தன்னை'. இவரை மாலையிடுவதால் நீ உலகுக்கெல்லாம் ஓர் தாயாகிறாய். விவாஹக்ஷணத்திலேயே ஸர்வலோகத்துக்கும் நீ தாயாகிறாய். "பத்துப்பிள்ளைகள் பெறுவாயாக" என்று பெரியோர் அதிசயமாக விவாஹத்தில் ஆசீர்வதிப்பர்.
         உத்தமாங்கை: -- அவர் திருவடி உலகுக்கெல்லாம் தந்யம். அவர் திருமுடி ஸர்வேச்வர கிரீடம் தரிப்பது. மௌளிபர்யாதம். அவரை ஸேவிப்பது மஹாபாக்யம்.
         த்வமௌளிமால்யஸம்பரணேன -- உன்னுடைய மாலைச்சுமையை வஹிப்பதால். மாலைச்சுமை, வாசனைச்சுமை, கோதையின் ஸ்நேகச்சுமை. சுமை சுமப்பதால் தந்யமாவரோவென்று கேட்கலாம். இச்சுமை இன்பச்சுமை . இன்பமான வாசனைச்சுமை என்று பதில். 'பாரத்தைப் பரிப்பதால்' என்னுமிடத்தில், 'பாரத்தை அழகாக, இன்பமாக, புருஷார்த்தமாகச் சுமக்கிறார்' என்பதைக் காட்ட "ஸம்" என்று சேர்த்து "ஸம்பரணத்தால்" என்று பேசுவது மிகவழகு. ஸமன்வயஸூத்ரத்தில் "ஸம்" போல.
         இந்தீவரஸ்ஜ -- கருநெய்தல்பூமாலையை. "இந்தீவரரக்ஷி" என்பர். கண்ணை இந்தீவரமாக (கருநெய்தல் புஷ்பமாக) ரூபணம் செய்வர். கண்களில் கருங்காந்திகள் நெய்தல் புஷ்பங்களாகின்றன. புஷ்பங்களுக்கு அன்பு ஸூத்ரமாகும். கண்கள் ஜ்யோதிஸ். ஸூர்யகிரணங்கள் கண்களுக்குள் புகுந்துள்ளனவென்பர். ஜ்யோதிர்மயமான கண்களிலிருந்து வரும் காந்திமாலை.
         த்வதீயாநி -- உன்னுடையவைகளான.
         ஆகேகராணி -- பாதி மூடிய கண்களால். அரைக்கண் திருஷ்டிகளான.
         பஹுமானவிலோகிதாநி -- பஹுமானத்தோடு கூடிய பார்வைகள்.
         ஆதததீவ --- (நெய்தல் மாலையாக) ஆகின்றனபோல (மாலை ஸமர்ப்பிக்கின்றனபோல). "பூய:" என்பதை இங்கேயும் சேர்த்து அந்வயிக்கலாம். பூமாலைகள் சிலவே. கடாக்ஷமாலைகள் ஏராளமானவை. இப்படியும் அந்வயத்தைத் திருவுள்ளம் பற்றி 2 பாதிகளுக்கும் நடுவில் இம்மாலையை நடுநாயகமாக வைத்தது

சுலோகம் 21


ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
         அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திமபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
         ந்யூநாதிகத்வ ஸமதாவிஷயைர் விவாதை: ||    .21.

தென்னரங்கன் றன்னோடுநீ சேர்ந்து திருக்கோதாய்
மன்னு மணமாலை மாற்றுங்காற் -- பன்னறிஞர்
நும்மி லெவர்பெரியோ ரென்றுநுவல் வாதவுரை
விம்முகட லென்ன மிகும்.                          .21.

பதவுரை

         வஸுதே -- பூமிப்பிராட்டியே (விஷ்ணுபத்நியே); ரங்கேச்வரஸ்ய -- ரங்கேச்வரனுக்கும்; தவ ச -- உனக்கும்; ப்ரணயாநுபந்தாத் -- பரஸ்பர ஸ்நேஹ வெள்ளத்தால்; அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் -- ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்வதை; அபிஷ்டுவந்த: -- நன்றாய்த் துதிப்பவரான; ரஸிகா -- ரஸிகர்கள்; ந்யூநாதிகத்வஸமதா விஷயை: - தாழ்ச்சி உயர்த்தி ஸமத்வமென்ற கக்ஷிகளைப் பேசும்; விவாதை: -- விவாதங்களால்; த்ரிலோகம் -- மூவுலகையும்; வாசாலயந்தி -- ஒரே சப்தமாகச் செய்கிறார்கள்.
         அம்மா பூதேவியே! ரங்கேச்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும்போது அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக்காரர்களாக்குகிறார்கள்.)

அவதாரிகை

         (1) 14 முதல் 7 சுலோகங்களால் கோதை மாலையைப் புகழ்ந்தார். இந்த விவாஹத்தில் 'மாலை' கடகராகும். உலகத்திற்குப் புருஷகாரமாகும் ஆண்டாளுக்கும் புருஷகாரமாகிற பெருமையையுடையது. மாலையை எத்தனை புகழ்ந்தாலும் தகும். விவாஹம் சப்த பதங்களால் ஏற்படும். 7 சுலோகங்களால் மாலா வர்ணனம். ஆண்டாள் மாலையை மட்டும் புகழ்ந்ததை 7 சுலோகங்களோடு நிறுத்தி, விவாஹத்திற்கு முக்யமான அங்கமான மாலை மாற்றுதலை வர்ணித்து விவாஹத்தைப் பூர்த்தியானதாகக் காட்டுகிறார்.
         (2) இதுவரையிலும் கோதை கன்யாப்பெண்ணாயிருந்தாள். இப்போது பத்நியாகிறாள். "அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ" என்ற ச்ருதிக்கு விஷயமான பூமிப்பிராட்டியாகிறாள். இதைப்பற்றி இங்கே 'வஸுதே' என்று கூப்பிடுகிறாரென்ற ரஸத்தை அனுபவிக்கவேண்டும். 'ஈசானா' என்ற பதத்திற்கு ஆண்டாள் என்று பொருள். இவரை, இந்த ரங்கேச்வரரை ஆண்டாள் -- ஜகத: உலகத்தை ஆண்டாள்.
         (3) விவாஹத்தில் கன்யையைச் சேர்ந்தவர் கன்யையை உயர்த்திப் பேசுவர். வரனைச் சேர்ந்தவர் வரனை உயர்த்திப் பேசுவர். உண்மையில் இருவரும் மஹிமையில் ஸமமென்று சொல்லக்கூடுமானாலும், அந்தந்த பக்ஷத்தார் அந்யோந்யம் ஏற்றத்தாழ்ச்சியைப் பேசுவதும், இரைச்சல் போடுவதும், ரஸப் பேச்சுக்கள். அதெல்லாம் தத்துவமல்ல.; ப்ரணயாநுபந்தாத்', தங்கள் பரிவின் மிகுதியால், ரஸத்தின் மிகுதியால், ரஸிகர்களாகப் பேசுகிறார்கள்.
         ரங்கேண்வரஸ்ய --அண்டர்கோன் அணியரங்கம் -- புருஷஸூக்தத்தால் புகழப்படும் ஸர்வேச்வரனுக்கும்.
         தவ ச -- உனக்கும்
         ப்ரணயாநுபந்தாத் --  ஸ்நேஹப் பெருக்கால். முன்பே பந்தம் (பதிபத்நீ ஸம்பந்தம்) உளதே. இப்பொழுது கோதை என்ற கந்யையாக அவதரித்ததில் ஆசையோடு கோடித்த இந்த வதுவையில் ஸ்நேஹம் மிகப் பெருகியது. இப்படி ஸ்நேஹப் பெருக்குக்காகவே அவதரித்து வதுவை கோடிப்பது. அரங்கனும் இவரவதரிக்கப்போகும் திக்கை நோக்கிக்கொண்டே யிருந்தார். 'ப்ரணயாநுபந்தாத்' என்பதை வாசாலந்தி' என்பதற்குக் காரணமாகவும் அந்வயிக்கலாம். அப்படி உச்சாவசமாகத் தாழ்த்திப் பேசுவதும் ஸ்நேஹப்பெருக்கால்தான். நிந்திப்பதில் தாத்பர்யமேயில்லை. ஸ்நேஹத்தால் மற்றொன்றைப் புகழ்வதில் மட்டும் தாத்பர்யம். நஹிநிந்தாந்யாயம்.
         அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் -- ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்வதை. பெரிய பிராட்டியார் ஸ்தனசந்தனமாலையான வைஜயந்தீ ஆண்டாளுக்கும், ஆண்டாள் மாலை திருவுடன் கூடிய பெருமாள் மார்புக்கும் சேருகிறது. கழுத்திலுள்ள மாலைகளின் மாற்றம். பெருமாள் சிரஸிலேறிய மாலை இந்த மாற்றத்தில் வாராது. அதன் ஏற்றத்தை மறுப்பாரொருவருமில்லை.
         அபிஷ்டுவந்த: -- நன்றாய்த் துதிக்க ஆசைப்படுபவர். துதிக்கும் ஆசையால் அதிகமாகப் பேசுவது ஸஹஜமே. ஒருவரைத் துதிக்கையில் அத்துதிக்காகவே மற்றொருவரைக் கொஞ்சம் தாழப்பேசுவதும் ஸஹஜமே. இங்கே சத்ருப்ரத்யம் அழகு. ஹேதுப்பொருள். அதற்காகவே அடுத்தாற்போல் கிரியையும் வைக்கிறார்.
         வாசாலயந்தி -- ஒரே சப்தகோஷமாக்குகிறார்கள். அதிகப் பேச்சுக்காரர்களாகிறார்கள். ஸத்யாய மிதபாஷிணம் என்றிருப்பவரையும் பஹுபாஷிகளாக அதிகப்ரஸங்கம் செய்யும்படி செய்துவிடுகிறார்கள். ஒரு கக்ஷியைக் குறைத்துப் பேசவே பேச்சு தடித்துவிடுகிறது.
         வஸுதே -- அம்மா பூமிதேவியே! பூமி முழுவதையும் (மூவுலகையும்) இக்கலஹசப்தத்தால் உத்கோஷிக்கச் செய்கிறார்கள். அம்மா! நீ பூமிப்பிராட்டியானதால் பூமியிலுள்ளாரெல்லாரும் பெண்கக்ஷி. ஏகக்கூக்குரலாய்விடுகிறது.
         ரஸிகா: -- ரஸப்பேச்சுக்களம்மா, நிந்தைபோன்றதும் துதிகளேயம்மா. உன் நாயகனை இளப்பமாக்காது. ஆகையால் நீ தாபப்படவிடமில்லை. உன்னையும் இளப்பம் செய்யாது. ஆகையால் உன் நாயகனுக்கும் தாபத்திற்கு இடமில்லை. எல்லாம் ஒரே ஸ்நேஹரஸம். ஸ்நேஹப்பெருக்கு. உண்மையில் விரஸமான எண்ணமே ஒருவருக்குமில்லை.
         த்ரிலோகீம் -- த்ரிபுவனகமனமான, த்ரிலோகேச்வரரான. தம்பதிகளின் விவாஹத்தில் மூவுலக ஜனங்களும் பேசுகிறார்கள். பெண்கக்ஷியோர், பிள்ளை கக்ஷியோர், மத்யஸ்தர் ஆகிய மூவரையும் முறையே தாழ்ச்சி, உயர்த்தி, ஸமம் என்ற மூன்று கக்ஷிகளையும் பேசச் செய்கிறார்கள். மூவுலகையும் சப்தமயமாக்குகிறார்கள்..
         ந்யூநாதிகத்வஸமதாவிஷயை  -- ஒருவர் தாழ்த்தி, ஒருவர் உயர்த்தி. இருவரும் ஸமம் என்ற மூன்று கக்ஷிகளான.
         விவாதை: -- விவாதங்களாலே. விவாஹமும், விவாதமும் ஸமர்களுக்குத்தான் சோபிக்குமென்பர். இந்த விவாஹத்தில் வதூவரர்கள் ஸமராயிருந்துதீர வேண்டுமாகையால் விவாதப்படுபவர்களும் ஸமர்களாகி ஸமத்வக் கக்ஷியையே ஸித்தாந்தப் படுத்துகிறார்கள். . முன் கக்ஷிகள் இரண்டும் பூர்வபக்ஷம். ஸமத்வம் ஸித்தாந்தம். துல்யகுணமான வதூவரர்களை ஒன்று சேர்த்து (ஸமமாகச் சேர்த்து) ப்ரஜாபதி நீண்டகாலமான அபவாதத்தை நீக்கிக்கொண்டார் என்று சாகுந்தலம். 'துல்ய' என்ற அடைமொழியோடு த்ருப்தியில்லாமல் 'ஸமமாகச்சேர்த்து' என்ற க்ரியாபதத்தையும் கவி வைத்தார். "மைச்சேர்த்தி அரிது அரிது."     (21)

புதன், 22 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 18ம் 19ம்

 

சுலோகம் 18

சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)

பாலார் கடற்றுயின்று பாரநெடுஞ் சோலைமலை
மேலாகி வேங்கடத்து மேவியே -- மாலானோன்
சேட்டு முலைக்கலிங்கஞ் செல்வியுன தைம்பாற்பொன்
சூட்டணிந்து மேன்மையுறுந் தொட்டு. .18

பதவுரை

கோதே -- கோதாய்! ரங்கபதி: ஏஷ: -- ரங்கபதியாகிய இவர்; தவ உத்தரீயம் -- உனது ஸ்தன உத்தரீயத்தையும்; த்வதௌகை: -- உன்னுடைய குழற்கற்றைகளால்; அதிவாஸ்ய -- வாஸனையேற்றி; தத்தாம் -- கொடுக்கப்பட்ட; மாலாமபி -- மாலையையும்; சூடாபதேந -- கிரீடத்தின் ஸ்தானமான சிரஸால்; பரிக்ருஹ்ய -- பெற்று (அணிந்து); ஸௌபாக்யஸம்பதபிஷேக மஹாதிகாரம் -- மங்களத்தன்மை, மங்களம் செய்யும் தன்மையாகிய ஸௌபாக்ய ஸம்பத்தில் முடிசூடப் பெறும் அரிய யோக்யதையை; ப்ராயேண -- மிகவும்; பிபர்த்தி -- தரிக்கிறார்.

கோதாய்! ரங்கப்ரபுவாகிய இவர் உன் திருமார்ப்புக்கச்சையையும், நீ சூடி வாசனை ஏற்றிக்கொடுத்த மாலையையும் சிரஸினால் க்ரஹித்து ஸௌபாக்ய ஸம்பத்தென்னும் ஐச்வர்யத்தில் முடிசூடப்பெறும் அரும்பெரும் அதிகாரத்தை நன்றாய் தரிக்கிறார்.

அவதாரிகை

(1) கந்யை ரூபத்தை வரிப்பாளென்பர். திவ்ய தேசத்தெம்பெருமான்கள் அழகுக்கடல்கள். மற்ற எம்பெருமான்களிலும் அழகுமிக்கோன் என்று சொல்லக்கூடியதால் ஆண்டாளால் மணாளனாக வரிக்கப்பட்டதை நேரில் தம் திருவாக்கால் பேசாமல் அதை வ்யஞ்ஜனம் செய்கிறார். ஆண்டாள் திருவாக்கினால், காளிதாஸர் அற்புதமாக ஈடுபட்டு வர்ணித்திருக்கும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட அழகுக்கடலைக் காட்டிலும், அழகரென்று அஸாதாரணமாகத் திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலைமாமாயனிலும், திருவேங்கடத்துக்கார்முகிலிலும், 'அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே' என்று வரிக்கப்படும் மஹாபாக்யத்தை வர்ணிக்கிறார்.

(2) பெருமாள் ஸந்நிதியில் சிரஸில் பரிவட்டம் கட்டி மாலை சேர்த்து சிரஸில் ஸ்ரீசடாரியாகிய கிரீடத்தை நமக்குச் சாற்றுவர். இங்கே ஆண்டாள் கோயிலில் பெருமாள் சிரஸில் ஆண்டாள் திருமார்ப்க்கச்சைப் பரிவட்டமும், மாலையும் சாற்றப்படுகிறது. சிரஸிலிருந்து ஸர்வேச்வரத்தின் சிந்ஹமான கிரீடத்தைக் கழட்டிவிட்டு சிரஸில் இவ்விரண்டையும் பரிக்ரஹித்தார். இவை ஸௌபாக்யஸம்பதபிஷேகத்திற்குக் கிரீடமாயிற்று. ஸர்வேச்வரத் தன்மையைக் காட்டிலும் இது பெரிய அதிகாரம்.

தவ உத்தரீயம் -- உன் மேலாடையை; கோபிகள் கண்ணன் எழுந்தருளியதும் தங்கள் ஸ்தனகுங்குமங்களால் முத்திரைபோட்ட உத்திரீயங்களால் ஆத்ம்பந்துவான காந்தனுக்கு ஆஸனம் ஸம்ர்ப்பிவித்தார்கள் என்றார் சுகர். கோதையின் ஸ்தன சந்தனம் கலந்த ஆடையை.

த்வதௌகை:அதிவாஸ்ய -- உன்னுடைய குழற்கற்றைகளால் மணமூட்டி; கூந்தல் முழுவதின் முழுவாஸனையையும் மாலையிலேற்றி. பன்மையால் குழலில் ஓரிடமும் பாக்கியில்லாமல் சூடி என்று காட்டுகிறார்.

தத்தாம் -- கொடுக்கப்பட்ட; மாலாமபி -- மாலையையும்; சூடாபதேந -- சிகைஸ்தானத்தால்;

பரிக்ருஹ்ய -- ஆதரத்துடன் க்ரஹித்து; "பரிக்ருஹ்ய" என்பது மணம்புரிதலையும் சொல்லும். விவாஹ ஸந்தர்ப்பத்தையும் விளக்குகிறது.

கோதே -- கோதாய்! ரங்கபதியையும் கோதையையும் "ரங்கபதிரேஷ கோதே" என்று ஓரடியில் ஜோடி சேர்த்தார்.

ஏஷ ரங்கபதி -- இந்த ரங்கபதி; விவஸைப்ரகரணம் ஸ்வாமிக்கு எதிரில் ஸாக்ஷாத்காரமாகிறது. 'பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே' என்று வரிக்கப்பட்ட இவர்.

ஸௌபாக்யஸம்பதபிஷேகமஹாதிகாரம் -- ஸர்வேச்வரத்வாதிகாரத்திலும் பெரியதோர் ஸௌபாக்யச்வைர்யாதிகாரம். ஸமரான பெருமாள்களிலும் மஹத்தான ஓரதிகாரம். தமயந்தி ஸ்வயம்வரத்தில் பல தேவர்கள் கூடினார்கள். இங்கே ஒரே தேவர் பல ரூபங்களோடு பலராகக் கூடினர். எம்பெருமான்கள் கூட்டத்திலும் 'எங்கள் மாலே' என்று மஹாவ்யாமோஹத்துடன் வரிக்கப்படும் ரஹாஸௌபாக்யம்.

ப்ராயேண -- அதிகமாக; பெருமாள்களுக்குள் தாரதம்யத்தைஐ நான் அறுதியிடேன். உத்ப்ரேக்ஷையாகக் கவிபாடுவது மட்டுமே தேவிமார் பேசலாம்.

சுலோகம் 19

துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.

தேசுறுநி னண்பன் றிருவே திகழ்சருவ
வாசனையா னென்று மறையோத -- மாசற நீ
சூடிக் களைந்த மலர்த் தொங்கன் மிகு கந்தமெனக்
கோடிக்குந் தன்முடிமேற் கொண்டு. .19.

பதவுரை

அக்ருத்ரிமகிர: -- ஒருவராலும் செய்யப்படாத ச்ருதிகள்; துங்கை: -- உயர்ந்த; உத்தமாங்கை: -- சிரஸுகளால் (உபநிஷத்துகளால்); யம் -- எவனை; ஸர்வகந்த இதி -- எல்லா நற்கந்தங்களையுமுடையவனென்று; ஸாதரம் -- ப்ரியத்தோடு; உத்வஹந்தி -- தாங்குகின்றனவோ; (விவாஹம் செய்துகொள்ளுகிறார்களோ, மாலையிடுகிறார்களோ,); ஸோபி -- அவனும்; த்வதீயகுடிலாள கவாஸிதாபி: -- உன் சுருட்டைக் குழல்களால் மணமேற்றிய; மாலிகாபி: -- மாலைகளால்; ஆமோதம் அந்யம் -- ஓர் புதிய விலக்ஷண வாஸனையை; அபிகச்சதி -- பெறுகிறார் (அனுபவிக்கிறார்)

அபௌருஷேயமான ச்ருதிகள் தங்கள் உன்னதமான சிரஸுகளால் எவனை 'ஸர்வகந்தன்' என்று தாங்குகின்றனவோ (மாலையிடுகின்றனவோ), அவனும் உன்னுடைய வக்ரமான குந்தளங்களால் மணமூட்டப்பட்ட மாலைகளால் ஓர் 'புதிய மணத்தை'ப் பெறுகிறான். (உன் மாலை மணத்தைப் பெற்று உன்னை மணம் புரிந்து திருமால் ஓர் புதுமணம் பெறுகிறார்.)

அவ: -- எல்லா ஸுகந்தங்களையுடையவனென்று ச்ருதிகள் உன் நாயகன் உத்தம கந்தத்தைப் புகழ்ந்து தங்கள் தலைகளால் அந்த வாசனையோடு கூடினவனைச் சூடி வாஸனை பெறுகின்றன. ச்ருதிசூடைகள் ஸர்வகந்தனைச் சூடுகின்றன. எவனை அனந்த ச்ருதிதேவிகள் சிரஸால் ஆதரத்தோடு சூடுகின்றனவோ! ஸர்வகந்தத்திற்குள்ளகப்படாத கந்தமுண்டோ? உண்டு.

துங்கை -- ச்ருதிதேவிகளின் சிரஸுகள் உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களிலும் உன்னதமானதுமுண்டோ? ஸர்வோத்தங்களை எட்டி அவனருகிலுள்ள உபநிஷத்துக்களும் ஸர்வோத்தங்கள்.

அக்ருர்த்திமகிர: -- ஒருவராலும் செய்யப்படாமல் தாமாக நித்யமாயுள்ள ச்ருதிகளான வாக்குதேவிகள். கோதை ஸ்துதியில், கோதை கல்யாணத்தில், எல்லாம் இயற்கையானதேயல்லாது, செயற்கைப் பொருளே இல்லை.

ஸ்வயம் -- ச்ருதிதேவிகள் ஸ்வயமாக பூர்ணபாவத்தோடு உன் மணாளனிடம் நாயகப்ரீதி செய்கிறார்கள்.

உத்தமாங்கை: -- ச்ருதிதேவிமாரான அபூர்வ பரிமளமுடைய ச்ருதிதேவிகளான பெண்கள் தங்கள் சிரஸில் ஸர்வகந்தனென்று உன் மணாளனைச் சுமந்து அவன் பரிமளத்தைத் தங்கள் சிரஸில் ஏற்றுகிறார்கள்.

உத்தமாங்கை: -- சிரஸுகளால், சுடர்மிகு சிரஸுகளால். யம் -- யவனை

ஸர்வகந்த: இதி - எல்லா ஸுகந்தங்களையுமுடையவனென்று. 'ஸர்வகந்த:ஸர்வரஸ' என்று சாண்டில்யோபநிஷத்து. சாண்டில்யர் பக்திஸூத்ரங்களியற்றியவர். பஞ்சராத்ரத்தில் அர்ச்சைப் பெருமாள்களின் மஹிமையை விஸ்தரித்திருக்கிறார். ச்ருதியின் பதத்தையே இங்கே அமைக்கிறார்.

ஸாதரம் -- 'ஸர்வகந்த:' என்பதை அந்த உபநிஷத்து வாக்கியம் திருப்பித் திருப்பிப் பேசுகிறது. அதனால் அந்த கந்தத்தில் ச்ருதியின் ஆதரம் தோற்றுகிறது. 'ஆதராதலோப:' என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தை இங்கே நினைக்கிறார். அப்யாஸத்தால் தாத்பர்யமதிகம்.

உத்வஹந்தி -- உத்வாஹமென்பது விவாஹத்தையும் சொல்லும். ச்ருதிதேவிகள் உன் மணாளனை மணம் புரிகிறார்கள். எனவே வாஸனைமாலையாகத் தலையில் சூடுகிறார்களோ

ஸோபி -- அந்த ஸுகந்தக் களஞ்சியமான பெருமாளும்

அதீயகுடிலாளக வாஸிதாபி: -- உன்னுடைய சுருட்டைக் குழல்களால் மணமேற்றப்பட்ட. ஆர்ஜவமே வடிவுகொண்ட உனக்குக் குழல்களொன்றுதான் வக்ரகுணமுடையது. அதுவும் அழகு ஸ்வபாவத்தால். 'ஸ்வபாவ வக்ராண்யௌகாநி தாஸாம்' என்பர். மயிர்கள் சுருண்டிருப்பதுபோல வாசனையும் சுருண்டு சுருண்டு வீசுகிறது. (அகிற்புகை சுருள்வதுபோல)

மாலிகாபி -- மாலைகளால். 'மாலைகளே மாலிகைகள்'

ஸ்வார்தம் -- நீ சூடினாலும், மாலைகள் தேவார்ஹமாக தேவபோக்யமான மாலைகளாகவே இருக்கின்றன.

அந்யம் -- எல்லாமென்பதிலும் அகப்படாத ஓர் புதிய

ஆமோதம் -- வாஸனையை

அதிகச்சதி -- அடைகிறார், அநுபவிக்கிறார். பரிமளரங்கனிலும் வாசனாரஸிகனுண்டோ? (19)