வியாழன், 28 டிசம்பர், 2006

இயற்கை எனும் ஆசான்

படித்ததில் பிடித்தது இன்று “ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில்” படித்த ஒரு நல்ல கட்டுரையின் சில பகுதிகள்:

“இயற்கையெனும் இணையிலா ஆசான்”

ஒரு சமயம் ஒரு அவதூதர் யது மஹராஜனிடம் வந்தார். அந்த ப்ரும்மஞானியைப் பார்த்து யது கேட்டார்:"ப்ராமணோத்தமரே! புலன்களின் திருப்திக்கு இடங்கொடாத நீங்கள் மிக நுட்பமான தெளிவை எப்படிப் பெற்றீர்கள்? உலகை நன்கு அறிந்தும் ஒன்றும் உணராதவர் போல் நடந்து கொள்கிறீர்?'
அவதூதர்:-- இந்தத் தெளிவை அடைய எனக்கு 24 ஆசார்யர்கள். அதில் பெரும்பான்மை இயற்கையே. பூமி, வாயு, ஆகாசம், நீர், அக்னி, சந்திரன்,சூரியன், மாடப்புறா, மலைப் பாம்பு, ஸமுத்ரம், விளக்கு, வெட்டுப் பூச்சி, தேனி, யானை இவை 13ன் மூலம் கற்றுக் கொண்டவற்றைச் சொல்வேன்.
1) பூமியில் வாழும் மக்கள் அவரவர் புண்ய பாவங்களுக்கேற்ப வாழ்கின்றனர். இதை உணர்ந்து வாழ்வின் சுக துக்கங்கள் கர்மாவின் அடிப்படையில் என்று தெளிந்து, எதைப்பற்றியும் மனபாதிப்பு பெறாமல் வாழ பூமியிடம் கற்றேன். இரவு, பகல் பருவ காலங்கள் இவைகளுக்குக் காரணம் இயற்கையின் நியதி. பூமி அதைப் பற்றிக் கவலைப்படாமல் அன்று முதல் இன்று வரை தன் சுழற்சியில் மாற வில்லை. இதுதான் வாழ்வின் உண்மை என்று தெளிந்தேன்.
2) நிலையின் திரியாது அடங்கி, மற்றவர் பயனடையவே தான் என்று இருக்கும் மலை, மற்றவர் அனுபவிக்கவே இலை, பூ, காய், கனி இவை நல்கும் மரங்கள் இவைகள் எனக்கு பரோபகாரார்த்தம் இதம் சரீரம் என்று அறிவுறித்தின
.3) காற்று --- நல்ல மலர்ச்சோலை, துர்நாற்றம் மிகுந்த பகுதி இவைகளின் ஊடே திரிந்து, அவ்வாஸனையால் மற்றவர் வேண்டுமானால் விருப்பு, வெறுப்புக் காட்டினாலும் தான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அன்று முதல் இன்று வரை வீசிக் கொண்டிருப்பதுபோல வாழ்வின் ஊடே நிகழும் இன்பதுன்பங்களால் பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொண்டேன்.
4) நம் சரீரத்துக்குள் ஆத்மா இருந்தாலும், உலகின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் இவற்றால் ஏற்படும் அசைவுகளால் ப்ரம்மத்தைப் பற்றிய எண்ணம் கலையாமல் ஆகாயம் போல் இருக்க வேண்டும். மேகம் வரும். மறையும். இயற்கை மாற்றங்கள் நிகழும்.. ஆனால் வெளியோ பாதிக்கப் படுவதில்லை. இந்த உண்மையை ஆகாயத்திடமிருந்து தெரிந்து கொண்டேன்.
5)நீர் நிர்மலமாய், இயற்கையிலேயே உயிர்களிடம் அன்பு உள்ளதாய் இனிமையாய்வேடகை தணிவிப்பதாய் உள்ளதோ அப்படி மனிதன் தன் பார்வை தன் தொடர்பு இவைகளால் பிறர் வேட்கை தீர உதவுவதுபோல அதேசமயம் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். முடியுமானால் தன்னைச் சேர்ந்தவர்களையும் தூய்மையும், மென்மையும் உடையவர்களாகச் செய்யவேண்டும் என்று உணர்ந்தேன்.
6)எப்படி அக்னியானது ஒளி, அணுக முடியாமை எல்லாவற்றையும் சாம்பலாக்கும் இயல்பு இவைகளோடு கூடியதாய் உள்ளதோ அப்படி இறையுணர்வெனும் தேஜஸ் துறவு என்னும் அணுகமுடியாமை உணவின் சுவை பாராமல் அருந்துதல் இவைகளை உடையவனாய் வாழக்கற்றுக்கொள்ளவேண்டும் என்று புரிந்தேன்.
7) வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை) பற்றிக் கவலைப் படாமல், மாறி மாறி வரும் தேய்பிறை, வளர்பிறை இவைகளோடு விளங்கியும் தன்னால் இயன்றவரையில் ஒளியூட்டும் சந்திரனைப் போல வாழவேண்டும் என்று தெளிந்தேன்.
8) நீர்நிலைகளில் உள்ள நீரை தன் கிரணங்களால் சூரியன் கோடையில் ஏற்றுக்கொண்டாலும், மழைக்காலத்தில் மீண்டும் அந்நீரை விட்டுவிடுவது போல உயர்ந்த யோகி விஷயங்களை க்ரஹித்து, தான் பாதிக்கப் படாமல் அவற்றை விட்டுவிடவும் வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
9) அளவுக்கு அதிகமான பாசமோ, அப்பாசத்தால் ஏற்படும் பற்றையோ வளர்த்துக்கொள்ளக் கூடாது. அப்படி வளர்த்துக் கொண்டால் விவேகமற்ற மாடப் புறாவின் கதிதான் ஏற்படும்.
அது என்ன மாடப் புறா கதி?

கட்டுரை ஆசிரியர் ஸ்ரீ வீராபுரம் சம்பத் தீக்ஷிதர் ஜனவரி வரை காத்திருக்கச் சொல்லிவிட்டார்.
இன்னும் ஓர் சில நாள் காத்திருப்போம்.

திங்கள், 25 டிசம்பர், 2006

அம்மா

அம்மா என்றொரு தெய்வம் என்றும் துணை செய்ய வேண்டும்