ஞாயிறு, 12 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 8

வேதாந்த ஸாரார்த்தம்.

"வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்
னூல் பாதங்களான பதினாறு" (பரமதபங்கம் 22) என்றபடி
ஆமூலாக்ரம் பகவத்கல்யாணகுண ப்ரதிபாதகங்களான
வேதாந்தங்கள் சங்காலேசமுமின்றிக்கே விசதமாக ஸ்வார்த்தத்தை ப்ரதிபாதிக்கைக்காக பரம காருணிகனான பாதராயண ப்ரும்மர்ஷியாலே ப்ரணீதமான சாரீரக சாஸ்த்திரத்தினுடைய நாலத்யாயங்களுக்குமுள்ள பதினா றான பாதங்களில் பதினாறு கல்யாணகுணங்கள் அடைவே பதினாறு சரணங்களினாலே ப்ரதிபாதிக்கப்படுகின்றன வென்று ஒரே பாசுரத்தில் அமைத்து அருளிச் செய்திருக்கும் பேசுபய வேதாந்த தேசிகனின் வல்லமைக்கு நிகருண்டோ? நிகமாந்தாசாரியனே இங்ஙனம் இயம்ப இயலும். அத்விதீயமான அத்திருப்பாசுரம் அறிஞர் அநுபவத்துக்காக இங்கு தரப்பெறுகின்றது.


சித்தசித்தென விரித்துரைத்தன
     அனைத்தமைத் துறையுமிறைவனார்
     சிறிய பெரிய வுருவுடைய வுடலமென
     நடல மில திலகு நிலையினார்
சித்திரத் தொழிலை யொத்த பத்தரொடு
     முத்தர்பித்தியெனுமுணர்வினார்.
     சிதைவின் மறைநெறியிலெறிய வுரு முறைகள்
     முறிய சிறையரிய நிறைவினார்
கத்துவிக்கவல தத்துவித்தை வழி
     கற்றவர்க்கசைவின் மாயனார்
     கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர்
     வழிகளழியு மருண்மொழியினார்
கத்திலக்கிலு மருக்குலத்திலும்
     அசித்தி லொக்குமொரு முதல்வனார்
     கரணமிடு கடிய பதினொரிருடிகமும்
     அடைய முடியுமடி யிருடியார்
ஒத்தனைத் துலகு மொற்றியொற்றி வரும்
     இப்பவத்திசை யினிசைவினார்
     உருவ மருவமெனு முலகின் முடகிலதில்
     உவமை யில திலகு தலைவனார்
உத்தமப்படி வகுத்த வித்தைகளில்
     உத்தரிக்க வுணர் குணவனார்
     உரிய கிரிசைகளிலரியதொரு விரகு
     தெரிய விரையு மவர் பரிவினார்
சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை
     தொத்தறுக்கவல துணிவினார்
'    சரியுமளவிலுரி யவரையறிவரிய
     தமனி நெறி சொருகு விரகினார்
தத்துவத்திரளு தைத் துதைத் தடவு
     தத்துவிக்குமவர் தலைவனார்
     தருகவுணருமவர் சரணமனுகவிட
     லரிய வருள் வரதரடியமே.
         - (அத்திகிரி மான்மியம், 19)

சாரீரக சாஸ்த்ர ஷோடசபாதீ ப்ரதிபாத்ய குணங்களை
'ஸ்ரஷ்டா தேஹீஸ்வநிஷ்டோ நிரவதி மஹிமா பாஸ்த தோஷ ச்ரிதாப்த:   காத்மா தெரிந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ| நிர்த்தோஷ த்வாதி ரம்யோ பஹுபஜநபதம ஸ்வார்ஹ காம்ப்ரஸாத்ய: பாபச்சித் ப்ரஹ்மநாடீ கதிக்ருத திவஹந் ஸாம்யதச் சாத்ரவேதய:
என்பது அதிகரண ஸாராவலி உபக்ரமத்திலே அநுக்ரமித்த படி.  இப்பாசுரத்தில் இதன் அடைவை அமைத்துள்ள அழகினைக் காட்டுவாம்.
 
(1) "சித்து அசித்து என விரித்து உரைத்தன அனைத்து
அமைத்து உறையும் இறைவனார் - சேதனங்கள் அசேதனங்கள் என்று விஸ்தரித்துச் சொல்லப்பெற்றவை யான எல்லா வஸ்துக்களையும் ச்ருஷ்டித்து அவற்றில் வஸிக்கும் ஈசுவரன். இத்தால் முதல் பாதத்தின் அர்த்தம் என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட "ஸ்ரஷ்டா " (சிருட்டிப்பவன்) என்பது அருளிச் செய்யப்பட்டதாயிற்று.

(2) "சிறிய பெரிய உரு அடைய உடலம் என நடலம்
இலது இலகு நிலையினார்" - ஸூக்ஷ்மங்களான ஸ்தூலங்களான ரூபங்களையுடைய வஸ்துக்களெல்லாம் சரீரம் என்னும்படி தோஷம் இல்லாமல் விளங்கா நிற்கிற ஸ்திதியையுடையவர். இரண்டாம் பாதார்த்தமான தேஹி" (ஸகல சேதனாசேதனங்களையும் தனக்கு சரீரமாக வுடையவன்) என்பது நிரூபிதம்.

(3) "சித்திரத் தொழிலை ஒத்த பத்தரொடு முத்தர்
பித்தி எனும் உணர்வினார்"- சித்திரம் எழுதுவதாகிய வியாபாரத்தோடே ஸத்ருசமான பக்த ஜீவர்களுடன் முக்தர் களான - ஜீவர்களும் சுவர் என்று சொல்லப்படுகிற (இவற்றிற்கு ஆதாரமாகிய) ஸங்கல்ப ரூபஜ்ஞானத்தை உடையவர். மூன்றாம் பாதார்த்தமான "ஸ்வநிஷ்ட:" (தன்னை யொழிந்த மற்ற எல்லா வஸ்துக்களையும் தன்னுடைய ஸ்ங்கல்பத்தின் ஏகதேசத்தினால் தாங்கிக் கொண்டிருப்பவன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகின்றது.

(4) "சிதைவில் மறைநெறியில் எறிய உருமுறைகள்
முறிய சிறை அரிய நிறைவினார் "-அபௌருஷேய மாகையாலே ப்ரமம் முதலிய தோஷங்களினால் சிதைவில்லா . வேதமார்க்கத்திலே ஆரூடங்களான அசேதனங்களுடைய கிரமங்கள் (ஸங்கோசம், விகாசம், விகாரம், நாசம் முதலியவை முறிந்துபோகுமாறு (அவை தன்னிடத்தில் இருக்காதவாறு ஸங்கோசம் செய்யமுடியாத குணபூர்த்தியை உடையவர். இத்தால் நாலாவது பாதார்த்தமான"நிரவதி மஹிமா" ("நினைந்தஎல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே ... உன் பெருமை" என்கிறபடியே எல்லையில்லாத பெருமையுடையவன்) என்பது நிரூபிக்கப் பெற்றதாகிறது.

(5) "கத்துவிக்கவல கத்துவித்த வழி கற்றவர்க்கு அசைவில மாயனார்" - ஜல்ப விதண்டாவாதங்களைச் செய்ய ஸாமர்த்யத்தையுடைய அப்படிப்பட்ட வாதங்களை அப்யஸித்தவர்கட்கு அவர்கள் வாதங்களினால் அசைக்க முடியாத விசித்திர சக்தியுடையவர். ஐந்தாவது பாதார்த்த மாகிற அபாஸ்த பாத:" (யுக்திகளினாலும் 'ஸாங்க்யஸ்ம்ருத் யாதிகளினாலும் சலிப்பிக்க முடியாதது) என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

(6) "கபிலர் கணசரணர் சுகதர் சமணர் அரர்வழிகள்
அழியும் அருள் மொழியினார்" - கபிலருடைய மதாநுஸாரிக
ளான ஸாங்க்யர்கள், கணாதமதாநுஸாரிகள், பௌத்தர் கள், ஜைனர்கள், பாசுபதமதாநுஸாரிகள் இவர்களுடைய வழிகள் நசிக்கும்படியான கிருபையினால் சொல்லப்பட்ட வார்த்தையையுடையவர். (கபிலாதிகளுடைய மதங்கள் வேதவிருத்தங்களானபடியால் அப்படி விரோதமின்றிக்கே தன்னை ஆச்ரயித்தவர்களிடத்தில் கிருபையினால் தன்னால் உபதேசிக்கப்பெற்ற சாஸ்த்ரத்தை யுடையவர். எனவே கபிலாதி சாஸ்த்ரங்களைக் கொண்டு அநாச்ரிதர்களை மோஹிப்பிப்பதும் ஸாத்விகமான பாஞ்சராத்திர சாஸ்த்ரத்தைக் கொண்டு தன் ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் செய்கிறான்) இத்தால் ஆறாவது பாதத்தின் அர்த்தமான
'' ஶ்ரிதாப்த:" (தன்னுடைய ஆச்ரிதர்களுக்கு ஆப்தன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(7) 'கத்து இலக்கிலும் அருக்குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்''-- இந்திரியங்களில் லக்ஷ்யங்களான
(இந்திரியங்களால் அறியப்படுமவைகளான ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களிலும்) இந்திரியங்களால் அறியப்படாத ஜீவவர்க்கத்திலேயும் கீழ்க்கூறப்படாத மஹான் முதலிய அசேதன வஸ்துக்களிலும் ஸமமாயிருக்கிற அத்விதீயமான காரணபூதர் (பிரகிருதியுடைய ஸாக்ஷாத் விகாரமான மஹத் தத்வத்திலே போல பரம்பராவிகாரமான பூததந்மாத்ர பஞ்சகத்திலேயும் விகாரமில்லாத ஜீவ வர்க்கத்திலேயும் ஸாக்ஷாதேவ நிமித்தோபாதாந பூதரானவர்) இத்தால் ஏழாம் பாதத்தினுடைய அர்த்தமான "காத்மா தேருசித ஜநந க்ருத்" என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.


(8) 'கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் அடி இருடியார் -- சக்ஷுராதி இந்திரியங்களை பிரவேசிக்கும்படி செய்வதற்கு அசக்யங்களான (அவற்றிற்கு விஷயமில்லாத) பதினொரு இந்திரியங்களும் எல்லாம் நசிக்கும்படியான ஆதிகாலத்தில் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கும் ரிஷி யாகிய பகவான். -இத்தால் எட்டாம் பாதத்தின் அர்த்தமான 'இந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்' என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.


(9) "அனைத்து உலகும் ஒத்து ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்" - ஸமஸ்த லோகங்களிலேயும் ஸமமாக இருந்து மேன்மேலென விருத்தி அடைந்து வருகிற (ஒன்றை அநுஸரித்து மற்றொன்றாக கர்மம், அவித்யை, வாஸனை, ருசி, ப்ரக்ருதிஸம்பந்தம் என்பவை சக்கரம் போல் ஒன்றின் பின் ஒன்றாய் வருகிற) இந்த ஸம்ஸாரத்தில் தானும் அவற்றுடன் சேர்ந்திருக்கும்படியான அங்கீகாரத்தை யுடையவர். (அவரவர்களுடைய கர்மாநுகுணமாக அவரவர்கள் ஸம்ஸரிக்கும் பொழுது தானும் கூட இருந்து நடத்துபவன்). இத்தால் ஒன்பதாம் பாதத்தின் அர்த்தமான ஸம்ஸ்ருதௌ தந்தரவாஹீ என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(10) "உருவம் அருவம் எனும் உலகில் முடகு இல் எனில் உவமை இலது இலகு தலைவனார்" -- ரூபத்தையுடைய சேதனவஸ்துக்கள் ரூபம் இல்லாத அசேதன வஸ்துக்கள் என்று சொல்லப்படுகிற லோகங்களில் இருக்கச் செய்தே ஸங்கோசம் இல்லாதவன் என்கிற விஷயத்தில் உபமானம் இல்லாதபடி விளங்குகின்ற பிரதாநபூதர். (சேதனாசேதன வஸ்துக்களுடன் கலந்திருக்கச் செய்தேயும் அவற்றினுடைய தோஷங்கள் தன்னிடத்தில் தட்டாதபடி பிரகாசிக்கிறான்.) இத்தால் பத்தாம் பாதத்தின் அர்த்தமாகிற நிர்தோஷத்வாதி ரம்ய;  என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(11) "உத்தமப்படி 'வகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்"-- உத்தம ப்ரகாரத்தாலே (பரம புருஷார்த்த ஸாதனமாக) பிரித்துச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு ப்ரும்ம வித்யைகளில் ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தாரணம் செய்வ தற்காக அந்தந்த வித்யா நிஷ்டர்களினால் அநுஸந்திக்கப் படுகிற குணத்தையுடையவர். பதினோராம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட பஹுஜன பதம் (அநேகம் விதங்களான உபாஸனங்களுக்கு விஷயமானவர்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(12) " உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினார்'' -- அவரவர்கள் வர்ணாச்ரமத்திற்கு உசிதமான நித்ய நைமித்திக காம்ய கர்மங்களில் அநுஷ்டிக்க முடியாததான ஒரு உபாயத்தினால் (பலாபி ஸந்தியில்லாமல் ஸாத்விக த்யாகத்துடன்    அநுஷ்டிப்பதினால்) தன்னை உள்ளபடி அறிந்து கொள்ள த்வரிக்குமவர்களிடத்தில்  கிருபையை உடையவர். இத்தால் பனிரெண்டாம் பாதத்திற்கு அர்த்த மான ''ஸ்வார் ஹ கர்ம ப்ரஸாத்ய:" என்பது நிரூபிக்கப்பட்ட தாகிறது.

(13) ' சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை தொத்தறுக்க வலதுணிவினார் -- புண்ணிய ரூபங்களான ஸத்துக்கள் பாப ரூபங்களான அசத்துக்கள் என்று சொல்லப்பட்ட ஸமஸ்தங்களான ஆத்மாவைச் சூழ்ந்து கொண்டிருக்கிற இரண்டு வித கர்மங்களுடைய ஸம்பந்தத்தை சேதிக்கச் சக்தமான நிச்சயத்தையுடையவர். (இவனுடைய ஸங்கல்பமுண்டாகில் வேறு தடுப்பாரில்லை). இத்தால் பதின்மூன்றாம் பாத அர்த்தமான 'பாபச்சித் என்பது நிரூபிக்கப்பட்ட தாயிற்று.

(14) "சரியுமளவில் உரியவரை அறிவரிய, தமனிநெறி சொருகுவிரகினார்" --- தேகந்தளருங் காலத்திலே (சரீர விச்லேஷ சமயத்தில்) அர்ச்சிராதி கதியாலே போகக்கூடிய யோக்யதை யுடையவர்களை பகவத் கடாக்ஷத்தாலன்றி அறிய முடியாததான நூற்றோராவதான ப்ரும்ம நாடியில் பிரவேசிக்கும்படியான உபாயத்தை அறிந்தவர்.  இத்தால் பதிநாலாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட "ப்ரஹ்ம நாடீ கதிக்ருது'' என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(15) "தத்துவத்திரள் உதைத்து தைத்து அடைவு தத்து விக்கு மவர் தலைவனார்" -- பிராகிருத தத்துவங்களினுடைய ஸமூஹத்தை பாதங்களாலே ஆக்ரமித்து கிரமத்தில் பிரகிருதி மண்டலத்தைத் தாண்டுவிக்குமவரான அர்ச்சிஸு முதலிய ஆதிவாஹிகர்கட்கு நியாமகர். இத்தால் பதினைந்தாம் . பாதார்த்தமான அதிவஹந்' என்பது நிரூபிக்கப்பெற்றது.

(16) "தருக வுணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர்" -- தங்களுக்கு அவன் திருவடிகளிலே அது பாவ்யமாகக் கொடுப்பதற்காக ந்யாஸோபாஸனாதிகளைச் செய்யுமவர் அவனுடைய திருவடிகளைக்கிட்டி அநுபவிக்கும் பொழுது விடுவதற்கு அசக்யமான கிருபையாலே ஸகல புருஷார்த்த ப்ரதரான பேரருளாளர். இத்தால் பதினாறாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட "ஸாம்யத:" என்பது நிரூபிக்கப் பட்டதாகிறது.
     பரமபதத்தில் பகவானுடைய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமை செய்தாலும் அபஹதபாப்மத்வாதி குணங்களின் ஆவிர்பர்வத்தினால் பரமாத்மாவுக்கு ஸத்ருசனாகவிறே இவன் இருப்பது என்று தாத்பர்யம்.

    வேதாந்த சாரார்த்தத்தை என்றும் பதினாறெனத் திகழும் வண்ணம் வேதாந்தாசாரியனே இங்ஙனம் செந்தமிழ்க் கவியில் கவினுற வமைத்துள்ளார்.

சனி, 11 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 7

குணதசகம்.


     எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று குணதசகத்தால் அநுபவிக்கிறார் தூப்புல் கோமான். அப் பாசுரம் இதுவே. :-


" பயின்மதிநீயே பயின்மதி தருதலின்
வெளியு நீயே வெளியுற நிற்றலின்
தாயு நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையு நீயே முந்தி நின்றளித்தலின்
உறவு நீயே துறவா தொழிதலின்
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின்
ஆறு நீயே யாற்றுக் கருடலின்
அறமு நீயே மறநிலை மாய்த்தலின்
துணைவனு நீயே யிணையிலையாதலின்
துய்யனு நீயே செய்யாளுறைதலின்
காரண நீயே நாரணனாதலின்
கற்பக நீயே நற்பதந் தருதலின்
இறைவனு நீயே குறையொன்றிலாமையின்
இன்பனு நீயே துன்பந் துடைத்தலின்
யானு நீயே யென்னுளுறைதலின்
எனது நீயே யுன தன்றியின்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய் நீயே வய்யமுண்டுமிழ்தலின்
எங்கனமாகு மெய்ய! நின் வியப்பே
அங்ஙனே யொக்க வறிவதாரணமே.''
         - (மும்மணிக்கோவை. 7)

    (தன்னைத்தான் அநுபவித்தபடியே பேசுமிடத்தில் ஸஹேதுகமாக உபபாதித்தருளுகிறார். பயில்மதி - இடை விடாதே அநுபவிக்க அளவுடைமையை ; தருதலின் - எனக்கு அருள் செய்கையாலே ; பயில்மதி - அநுபவயோக்யனான சந்திரன் ; வெளியுற - இதர தேஜோவஸ்துக்கள் பிரகாசத்தை அடையும்படி ; நிற்றலின் - நிற்பதினாலே ; வெளியும் - நிருபாதிகதேஜோ ரூபியான சூர்யனும் ; சாயை-நிழலை (சாயை -- ஸம்ஸார ஸந்தாப ஹரமான திருவடிகளை); தந்து - கொடுத்து ; உகத்தலின் - சந்தோஷித்தலால், தாயும் - மாதாவும் ; முந்தி - சிருஷ்டி காலத்திற்கு முன்னே ; அளித்தலின் - கரணகளேபர ப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; தந்தையும் - பிதாவும் ( அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து, அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்" - திருவாய் மொழி 2-3-3) ; துறவாது - விடாதே ; ஒழிதலின் - ஒழிகையாலே ; உறவும் - நிர்வ்யாஜ பந்துவும் ("தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை, வேறே போக எஞ்ஞான்றும் விடலே'. திருவாய்மொழி 2-9-10) ; சிற்றின்பம் - அல்பாநுகூலங்களாகத் தோற்றிப் பின்னர் அநர்த்தத்தை விளைவிக்கும் காமங்கள் ; இன்மையின் -- இல்லாமையால் ; உற்றதும் - ப்ராப்தமும், வகுத்த விஷயமும் ; பரித்யாகாநர்ஹ அந்தரங்கவஸ்து ; வாஸஸ்தானமும் ; ஆற்றுக்கு - அநுஷ்டிக்குமேதேனுமொரு வ்யாஜமாத்ரமான உபாயத்துக்கு ; அருள்தலின் - உபாயலாகவத்தையும், பல கௌரவத்தையும், நினையாதே பரிபூர்ண பலப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; ஆறும் - நிருபாதிக ஸர்வவித ஸம்பந்தமுமுடையவனாகையாலே இத்தலையில் வ்யாஜ மாத்ரத்தைக்கொண்டுதான் உபாயாந்தர ஸ்தானத்திலே நிற்கையாலே ஸகலபல சாதகமும்; மறநிலை - பாபங்களின் நிலையை ; மாய்த்தலில் - நசிப்பிக்கையாலே ; அறமும் - தர்மமும் ; இணை - தன்னோடொப்பார் ; இல்லையாதலின் - இல்லாமையால் ("ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா" - திருவாய்மொழி 2-3-2) ; துணைவனும் - சகாயமாய் நிற்பவனும் ; செய்யாள் - பெரிய பிராட்டியார்; உறைதலின் – அகலகில்லேனிறையுமென்று நித்யவாஸம் பண்ணுகையாலே ; துய்யனும் -- பரிசுத்தனும்
நாரணனாதலின் -- நாராயணனாகையாலே ; காரணம் --
நிகில ஜகந்நிமித்தோபாதாநருப ஸர்வவித காரணபூதனும் ; நற்பதந்தருதலின் - பரம பதத்தைத் தருகையாலே ; கற்பகம் - கல்பவ்ருக்ஷம் ; குறை ஒன்று - ஒருகுறையும்; இலாமையின் -- ஸ்வரூப ரூபகுண விபவாதிகளில் நியூநதை ஒன்றுமில்லாமையாலே ; இறைவனும் - ஸர்வேசுவரனும்; துன்பம் - துயரங்களை; துடைத்தான் -- நீக்குகையால்; இன்பமும் - நிருபாதிகாநந்த ஸ்வருபமும்; என்னுள் -- எனக்குள்; உறைதலின் - கறந்தபாலுள் நெய்யே போல் அப்ருதக்ஸித்தனாய் வஸிக்கையாலே; யானும் - இவ்வாத்மாவைப்பற்ற எவன் நியந்தாவும், ஆதாரமும், சேஷியும் ஆகையாலே யானும் நீயே; உனதன்றி - உன்னுடையதல்லாமல் : இன்மையின் - இல்லாமையின்; எனதும் மதியமெல்லாம் பொல்லாங்கு இலாமையின் - தீமையொன்றுமில்லையாதலின்; - நல்லாய்- கல்யாண ஸ்வபாவன், நல்லவன்; வய்யம்-பூமியை, ப்ரஹ்மாண்ட லக்ஷ சதகோடிகளை ; உண்டு-பிரளயம் வந்தவாறே வயிற்றில் வைத்து ரக்ஷித்து; உமிழ்தலில் -பிரளயம் போனவாறே யதா பூர்வம் நிகரணம் பண்ணுகையாலே; வல்லாய் --          வல்லவன், நிகில ஜகத் ஶ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகரண சக்தன்;  மெய்ய --  அடியவர்க்கு மெய்யனே; எங்ஙனமாகும் அங்ஙனமே-எவ்வகையாயிரா நின்றதோ அவ்வகையில் எல்லாம் ; நின் வியப்பு -உன் ஆச்சர்ய ஸ்வபாவம்; ஒக்க அறிவது -- உன் படிக்கேற்க அறிய வல்லது; ஆரணமே -- அபௌருஷேயமான நித்ய நிர்த்தோஷமான வேதமே).

"ஸோ அங்கவேத யதியா ந வேத" என்று கைவாங்கின
பழமறை போலன்றிக்கே மாறன்மறை அனைத்தையும் அறிவது. "ஸேவா யோக்ய:" (திரமிடோபநிஷத் ஸாரம்) இத்யாதியிற்படியே திருவாய்மொழி பத்து பத்துக்களிலும் ப்ரதிபாதிதங்களான பத்து அர்த்தங்களும் இப்பாசுரத்திலே அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. எங்ஙனமென்னில்,


(1) பயின்மதி நீயே -- ஸேவ்யத்வம் (எம்பெருமானே தொழத் தகுந்தவன்)
(2) வெளியுநீயே --போக்யத்வம் (எம்பெருமானே பரம போக்யன்)
(3) தாயு நீயே, தந்தையு நீயே - சுபஸுபக விக்ரஹத்வம்
(எம்பெருமானே விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹம் படைத்தவன்)

(4) உறவு நீயே, உற்றதுநீயே -ஸர்வ போக்யாதிகத்வம்
(போக்யங்களான ஸகல புருஷார்த்தங்களிற் காட்டிலும் மேம்பட்ட அளவற்ற யோக்யதையை யுடையவன்)

(5) ஆறுநீயே, அறமுநீயே - ச்ரேயஸ்தத்தேதுதாநம் (உபாயமான புருஷார்த்தத்தையும் அதற்கு உறுப்பான உபாயத்தையும் எம்பெருமான் தானே கொடுத்தருள்பவன்).

(6) துணைவனு நீயே, துய்யனுநீயே - ப்ரபதந ஸுலபத்வம்
(தன்னை யடைக்கலம் புகுகிறவர்களுக்கு மிகவும் எளியன்)

(7) காரணநீயே, கற்பகநீயே - அநிஷ்ட நிவர்த்தகத்வம் (அடியார்களது அல்லல் போக்கும் தன்மையன்)

(8) இறைவனுநீயே, இன்பனுநீயே - ஆச்ரிதேச்சாநுஸாரித் வம் (அடியார்களுடைய அபிப்பிராயத்தைப் பின் சென்று நடப்பவன்)

(9) யானு நீயே, எனதுநீயே - நிருபாதிக ஸுஹ்ருத்வம்
(இயற்கையாகவே இன்னருள் புரியும் இயல்வினன்)

(10) நல்லாய் நீயே, வல்லாய் நீயே - ஸ்த்பதவீ ஸஹாயத்வம்
(தாளடைந்தோர் தங்கட்குத்தானே நலமந்தமில்லதோர் நாட்டில் வழிக்குத் துணையாமவன் எம்பெருமான்)

இங்ஙனம் இங்கு குணதசக வடைவை வமைத்த வற்புத
வள்ளலாரின் வன்மையே வன்மை.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 6

ஐம்பொருள்

முக்தியைப் பெற விரும்புமவன் முமுக்ஷு. இவன் முக்கியமாய் உணரவேண்டும் பொருள்கள் ஐந்து. அவையாவன:--


(1) நம்மால் அநுபவிக்க வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம் (பரமாத்ம ஸ்வருபம்)
(2) அப்பெருமானை அநுபவிக்கும் சேதனனுடைய ஸ்வரூபம் (ஜீவாத்ம ஸ்வரூபம்)
(3) அப்பெருமானைப் பெறுதற்கான உபாயத்தின் ஸ்வரூபம் (உபாய ஸ்வரூபம்)
(4) அவ்வுபாயத்தினால் பெறக்கூடிய பேற்றின் ஸ்வரூபம் (பலஸ்வரூபம்)
(5) அப்பேற்றைப் பெறவொட்டாமல் தடை செய்கின்ற ப்ரதிபந்தகத்தின் ஸ்வரூபம் (விரோதி ஸ்வரூபம்).
இவற்றையே " அருத்தபஞ்சகம் என்பர்.
 

    "ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்ய காத்மந: |ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததாப்ராப்தி விரோதிச || வதந்திஸ கலாவேதாஸ் ஸேதிஹாஸ புராணகா:|

என்று ஹாரீத ஸம்ஹிதை இதனை அறுதியிட்டது.

இவ்வைம்பொருளை ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் அனைவரும் அறிந்து உய்யும் பொருட்டு ஸர்வ சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமான அவ்வருத்த பஞ்சகத்தில் ஒவ்வொன்றையும் இரண்டு பாசுரங்களினால் நிரூபிக்கிறதாய்ப் பத்துப் பாசுரங்களும், பல ச்ருதியாக ஆக ஒருபாட்டும் அருளிச்செய்த தமிழ்ப்பிரபந்தமே " அருத்த பஞ்சகம்" என்பது. மூலப்ரமாண சுலோகத்தில் ஜீவாத்ம ஸ்வரூபத்துக்கு அடுத்தபடி உபாயம் குறித்திருந்தபோதிலும் விரோதியை அறிந்து அத்தாலே சோகமுண்டாகி பிறகு உபாயாநுஷ்டாநம் ஏற்பட வேண்டுமென்கிற அர்த்த க்ரமத்தை அநுஸரித்து இந்நூலில் விரோதி ஸ்வரூபத்தின் பின்னர் உபாய ஸ்வரூபம் வெளியிடப்பெறுகின்றது. எனவே, இங்குள்ள முறைவைப்பு வருமாறு:-

(1) பரமாத்ம ஸ்வரூபம் (2) ஜீவாத்ம ஸ்வரூபம் (3) விரோதிஸ்வரூபம் (4) உபாயஸ்வரூபம் (5) பலஸ்வரூபம் என்பன.

(1) அவன் ஒருவனே நாம் அடையவேண்டிய வஸ்து என்று சொல்லும்படி யிருக்கிற அலர்மேல்மங்கை மணாளன்
(2) அவனுடைய திருவடிகளை அடைந்து அவனுடைய அருளோடு ஒன்றியிருக்கிற அவனை அனுபவிக்கிறவனான அன்பனான சேதனன்
(3) செய்யவேண்டிய உபாயம்
(4) அந்த ஜீவனுடைய ஸ்வரூபாநு குணமான பிரயோஜநம்
(5) அவித்யையோடுகூடிய கர்மங்களாகிற பலமான விலங்கு
என்கிற இந்த ஐந்து விஷயங்களையும் அறிந்த ஆசார்யர்கள் அஜ்ஞானம் சற்றும் இல்லாதபடி என்னுடைய மனமானது நன்கு அறியும்படி உபதேசித்தனர் என்ற கருத்தடங்கிய

" பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருளொன்று மன்பன் அவன்கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று வையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே."

                                             - (அதிகாரச் சுருக்கு. 11)
என்று இவ்வாசிரியர் தாமே அருளிச்செய்துள்ளார். இங்கு முறைவைப்பு மூலப்பிரமாண சுலோகப்படியேயுள்ளது.

" அயன்பணியு மத்திகிரி அருளாளரடி யிணைமேல்
நயங்கொள் சேர்கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்களிவை யனைத் துமெனப் பண்டுரைத்தார்படி யுரைத்த
வியன்கலை களீரைந்தும் வேதியர் கட் கினியனவே." (11)

என்ற பாசுரத்தில் ஈரைந்து" என்றதனையும் நன்கு நோக்குக.

ஐங்கால காரியங்கள்

.ஸாத்விக ஸ்மிருதிகளில் கூறப்பட்டதாயும், " இருமுப் பொழுதேத்தி" என்கிற பாசுரத்தில் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதும், எம்பெருமானாரால் நித்யத்தில் சுருக்கி உரைக்கப்பெற்றதாயும் இருக்கிற பஞ்சகால ப்ரக்ரியை யாய்ச் செய்யப்பெறும் பகவத் ஸமாராதநமாகிற உத்தர கைங்கர்ய விசேஷத்தை விளக்கும் பத்துப்பாக்கள் கொண்டது  "ஸ்ரீ வைஷ்ணவ தினசரி" எனும் தனித்தமிழ்ப் பிரபந்தம். இதில்,

(1) அபிகமநம் :- ப்ராஹ்ம முகூர்த்தம் என்று சொல்லக் கூடிய வைகறையில் எழுந்து நிர்மலமான உள்ளம், உரை, செயல் இவற்றுடன் கூடினவனாய் ஸர்வ ஜகத்காரணனான ஆதியம் பகவானைக் குறித்து தியானம், தோத்திரம் முதலியவற்றால் புகழவேண்டும். இக்காலத்தில் சரீராதிகளின் சுத்திக்காக ஸ்நாநம் முதலியவற்றைச் செய்வதும் ஸந்த்யோபாஸநாதிகளைச் செய்வதும் தகும். அன்று முழுதும் நடக்கவேண்டிய கைங்கரியங்கள் தடையின்றி நடந்தேற வேண்டுமென்று எம்பெருமானிடம் விண்ணப்பித்து பிரபத்தி செய்வதுமாம்.
(2) உபாதாநம் :- அதிகாலைக்கடன்கள் பூர்த்தியானதும், பகவானுடைய திருவாராதநமாகிற யாக நிஷ்பத்தியின் பொருட்டு திருத்துழாய், புஷ்பம், பலம், முதலிய ஸாதனங்களைச் சேகரித்தலும், சித்த சுத்திக்காக ஆழ்வார் ஆசாரியர்கள் அருளிச்செய்துள்ள காலக்ஷேபத்திலீடு படுதலும், தர்மாநு குணமான திரவ்யார்ஜநமும் செய்யுங்காலமிது.
(3) இஜ்யை:- மாத்யாஹ்நிக காரியங்களைச் செய்துவிட்டு அஷ்டாங்கயோக புரஸ்ஸரமாகவோ அல்லது ஆஹ்நிகங் களிற் கூறியாங்கு முறைப்படி எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்யுங்காலம்.
(4) ஸ்வாத்யாயம் :- அபராஹ்நத்தில் பகவத் கதைகளின் சிரவணம், அவற்றைப்பற்றிய சிந்தநம், பகவானைப்பற்றிய வேதாந்த பாகங்களைப் படித்துப் பரிசயம் செய்தல் முதலியவற்றைச் செய்யுங்காலம்.
(5) யோகம் :--ஸாயங்காலத்திற் செய்ய வேண்டிய ஸ்மார்த்த கர்மங்களைச் செய்து விட்டு, யதோசிதம் பகவந் நிவேதநம் முதலிய கார்யம் முடிந்த பிறகு விச்ரமத்தை அடையும் முன்னதாகப் பகவானை உபாஸிக்கவேண்டும். இதற்கு யோகம் என்று பெயர். எம்பெருமானுடைய திருவடி களைத் தியானம் செய்தலும், தன்னுடைய தூக்கவேளை யிலும், பகவான் திருவடிகளில் தன் தலையை வைத்திருப்ப தாய் தியானித்துவிட்டு சயனித்தலும் இவ்வேளையில் செய்யவேண்டுவன.

என்ற ஐந்து கால காரியங்களையும் பேரருளாளன் விஷயமாகவாக்கி ஒவ்வொன்றையும் முறையே இரண்டிரண்டு பாசுரங்களால் நிரூபித்துள்ளார் நம் சந்தமிகு தமிழ் மறையோன்.

திங்கள், 6 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் -- 5

பன்னிரு நாமம்.

எம்பெருமானது துவாதச நாமங்களாவன :- (1) கேசவன் (2) நாராயணன் (3) மாதவன் (4) கோவிந்தன் (5) விஷ்ணு (6) மதுசூதனன் (7) திரிவிக்கிரமன் (8) வாமனன் (9) சிரீதரன் (10) இருடீகேசன் (11) பற்பநாபன் (12) தாமோதரன்.
    நம்மாழ்வார் “கேசவன் தமர் " என்ற இரண்டாம் பத்து "' ஏழாந்திருவாய்மொழியைப் "பன்னிரு நாமப்பாட்டு" என்கின்றார்.

"வண்ணமாமணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணிற் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே." (13)

என்ற திருநாமப் பாசுரங்காண்க.

    பெரியாழ்வார் காது குத்தும் வியாஜத்தால் "பன்னிருநாமத்தால் அந்தாதி" பாடியுள்ளார்.

"வார் காது, தாழப்பெருக்கி யமைத்து
    மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
    சிந்தையுள் நின்று திகழ
பாரார்தொல் புகழான் புதுவை மன்னன்
    பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்
    அச்சுதனுக்கு அடியாரே.''
- (பெரியாழ்வார் திருமொழி 2-3-13)

என்ற பாசுரத்தை நோக்குக.
    இவ்விரு ஆழ்வார்களின் அருளிச்செயல்களை நன்கோதிய நம் மறைமுடிக் குருவரனார், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினந் தோறும் புண்ட்ரம் தரிக்கும்போது அநுசந்திப்பதற்காக கேசவன் முதல் தாமோதரன் வரையிலுள்ள பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி அவ்வவ்வெம்பெருமான்களை ஆவாஹநம் செய்து ஸேவிக்கும் முறையில் அவ்வவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம், அவர்கள் அணிந்திருக்கும் ஆயுதங்கள், அவர்கள் தலைவராய் வீற்றிருக்கும் திசை, நம் சரீரத்தில் புண்ட்ரரூபமாய் அவர்கள் வசிக்கும் பாகம் ஆகியவற்றையும் சேர்த்து "பன்னிரு நாமம் " என மகுடஞ் சூட்டி ஒரு பிரபந்தம் அருளிச்செய்துள்ளார். இங்கு பன்னிருநாமம் ஆழ்வார்கள் முறையை அநுசரித்து அமைக்கப்பெற்றுள்ளது செந்தமிழணங்கிற்கோரணிகலனே.
"கத்தித் திரியுங்கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்குறு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முத்திக்கு மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்
தித்திக்குமெங்கள் திருவத்தியூரரைச் சேர்பவர்க்கே.'' (13)

என்ற இப்பிரபந்தத்தின் இறுதிப்பாசுரம் ஒதியோதி யுணருந்தொறு முணர்ச்சி யுதவும் வேதமொத்தது. இங்ஙனம் அடைவு அமைக்கும் அற்புதனின் ஆற்றலை யாரே அறியகில்லார் ?

திருச்சின்னமாலை.

    “ திருச்சின்னமாலை" என்பது வேதமுடித்தேசிகனார் திரு வாய் மலர்ந்தருளிய ஒரு தனித் தமிழ்ப்பிரபந்தம். இது பதி னொன்று பாசுரங்கள் கொண்டது. 'திருச்சின்னம்' என்னும் வாத்ய விசேஷம் எம்பெருமானுடைய ஸந்நிதிகளில் ஸேவிக் கப் பெறுவதுண்டு. அதன் ஒசையின் காம்பீர்யமும் இனி மையும் ஒப்பற்றன. ஸ்ரீ தேவப்பெருமாளுடைய திருச் சின்ன வாத்யவோசையில் ஒரு நுட்பத்தைக் கண்டார் ஸ்வாமி தேசிகன்.
    இம்மாலையில் உலகம் போற்றும் உத்தமரான தூப்புற் குலமணி, தேவாதி தேவனான பேரருளாளனுடைய யாத்ரோத்ஸவாதிகளில் ஊதப்படுகிற திருச்சின்னத்தின் நாத நலம் இருக்குமிருப்பை அநுஸந்தித்து அகமகிழ்ந்து இது போன்ற நாதவின்பத்தை நல்குமோ இதர தேவதைகளின் பிரயாணகாலத்தில் முழங்கப்பெறும் காஹளாதி வாத்தியங்கள் என்று அநுபவித்து, அந்த அதிமதுரநாதம் மற்றத் தேவதைகட்கு ஸாதாரணமல்லாமையினாலே திருமந்திரம் முதலிய மூன்று இரகசியங்களிற் பொதிந்துள்ள பகவானுடைய அஸாதாரண குணங்களை நிரூபித்து அப்படிப்பட்ட உயர்குணங்களை உடைய பெருமாள் எழுந்தருளினார் என்று காட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி  அருளிச் செய்துள்ளார். ரஹஸ்யார்த்த கர்ப்பமான திருச்சின்ன ஓசையை ப்ரதி பாதிக்கிறபடியினால் இந்நன்னூல் " திருச்சின்னமாலை " என்று பெயர் பெற்றது என்பர். தூப்புலிறை தமது அநுபவ பரீவாஹ மேலீட்டால் திருச்சின்னத்துக்குப் பாமாலை சாத்தி மகிழ்ந்தார் போலும்.

    இது, மன்னு திருமந்திரத்தின் பொருளும், வாழ்துவயத்தின் பொருளும், துன்னுபுகழ்க்கீதை தனிற் சொன்ன வெண்ணான்கின் பொருளும் இன்னபடி என்றுரைக்கும் செய்ய தமிழ் மாலை. இதனுள், முதலாறு பாசுரங்கள் திருமந்திரத்தைப் பிரதிபாதிக்கின்றன. இவற்றின் முதல் மூன்று பாட் டுக்கள் பிரணவார்த்தத்தை வெளியிடுகின்றன. அவற்றுள் ஆதிப்பாட்டு, பிரணவத்தில் அகாரத்தின் அர்த்தத்தை சுருங்கக் கூறுகின்றது. பிரயோஜனாந்தர பரருக்கும் அவன்  ரக்ஷகன் என்பதும், பிரமன் பிரமன் முதலியோரைக்கொண்டு ஜகத் ஸ்ருஷ்டி பண்ணிவைக்கிறபடியினால் அவன் நிமித்த காரணன் என்பதும் இதில் விளக்கம். இரண்டாம் பாட்டு அயனுக்கு அன்று அருமறைகளை உபதேசித்து ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தால் நிமித்த காரணமாகும் பிரகாரமும், சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பித்து மோக்ஷ ப்ரதானமாகிற ரக்ஷண ப்ரகாரமும் கூறுகின்றது. மூன்றாம்பாட்டு அகாரத்தின்மேல் ஏறி லோபித்துக்கிடக்கும் நான்காம் வேற்றுமையையும் உகார மகாரங்களின் அர்த்தங்களையும், வாக்யார்த்தம் இருக்கும்படியையும் விளக்குவன. நான்கு முதல் ஆறு வரையுள்ள பாக்கள் நம: சப்தார்த்தத்தையும், நாராயண சப்தார்த்தத்தையும், சதுர்த்தீவிபக்தியினால் லக்ஷணையாகச் சொல்லப் படுகிற கைங்கர்யமாகிற அர்த்தத்தையும் விளக்குகின்றன.  துவயார்த்தத்தை வெளிக்காட்டுவது ஏழாம் பாட்டு. சரம சுலோகக் கருத்தைச் சுருக்கிக்கூறுவது எட்டாம் பாட்டு. அச்சுலோகத்தில் மாம், அஹம் என்கிற பதங்களிலே ப்ரஸ்துதங்களான பரத்வ ஸௌலப்யாதி குணங்களை அவனுடைய திவ்ய சேஷ்டித முகத்தாலே நிரூபிப்பது ஒன்பதாம் பாட்டு. பத்தாம் பாட்டு அர்ச்சாவதார வைபவத்தைப் பரக்கப் பேசுகின்றது. நிகமனப்பாசுரம் இம்மாலைச்  சுருக்கத்தையும், சங்கதியையும் பேரருளாளன் பிரபாவமான இந்நூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது.
-
இம்மாலையின் இறுதிப்பாசுரமான,
"மறைத்தலையிலிசை யெழுத்தில் வணங்கும் வாக்கில்
    மந்திரத்தினா லெழுத்தாந் திருநாமத்தில்
நிறைத்திலகு வேற்றுமையி லிரண்டாமொன்றி
    னெடுமாறன் கீதையெல்லா நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டுரைத்த பொருளான தெல்லாம்
    உயர் விருத வருளாளப் பெருமாள் தேசின்
திறத்திலிவை திருச்சின்னமாலை பத்துஞ்
    செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையாதார்க்கே." (11)

[மறைத்தலை - வேதமுடி ; இசை எழுத்து - பிரணவம்; மந்திரம் - மூலமந்திரம் ; நாலெழுத்தாந்திருநாமம் - மூலமந்த்ராநு ப்ரவிஷ்டமாய் சதுரக்ஷரமான நாராயண என்பது; இலகு - விளங்குகிற ; வேற்றுமை - நான்காம் வேற்றுமை ; இரண்டாம் ஒன்றில் - கண்டத்வயாத்மகமான துவய மந்திரத்தில் ; நெடுமால் - விபூத்யத்யாய விச்வ! ரூபாத்யாயப் படியே ஸர்வோத் க்ருஷ்டரான கண்ணன்; கீதை - கீதா சாஸ்த்ரம் ; நிறைந்த சொல் - பூர்த்திகரமான சரம சுலோகம்; தேசின் திறத்தில் - தேஜஸ்ஸு விஷயமாக ; இசையாதார்க்கு - ஸம்மதியாதவர்கட்கு ; இனிதாம் - போக்யமாம்.)
என்பது இம்மாலைப் பொருளை அடைவாக அமைத்து அருளியுள்ளதை அங்கைக் கனிபோல அறிவிக்கின்றது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன். -- 3

 திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்

24-09-1944ல்

வெளியிட்ட

15ஆவது நூலான

அடைவு அமைக்கும் அற்புதன்


பகுதி 4


சரம சுலோகச் சுருக்கு. 

கீதோபநிஷத் சாரமான சரம சுலோகம், 

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ! 

அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமாசுச:"" 

என்பது. 

பரம காருணிகரான தூப்புற் பிள்ளை இச்சுலோக ரத்தினத்தின் அருமையை அனைவரும் அறிந்து அவனியை அமரருலகம் ஆக்கத் திருவுள்ளங்கொண்டு பதினொன்று பாசுரங்கள் கொண்ட "சரம சுலோகச் சுருக்கு" எனும் பிரபந்தம் அருளிச்செய்திருக்கின்றார். இதில் முதற்பாசுரம் சரம சுலோகத்தின் முழுத்தாத்பர்யமும், பின்னுள்ள பத்துப் பாசுரங்களும் முறையே 

1. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய, 2. மாம், 3. ஏகம், 4. சரணம், 5. வ்ரஜ, 6. அஹம், 7. த்வா, 8. ஸர்வ பாபேப்ய:, 9. மோக்ஷயிஷ்யாமி, 10. மாசுச: என்னும் பாகங்களுக்கு வியாக்கியானமுமாக அமைத்துள்ளார் அருமறை முடி அண்ணல்.

''ஸ்ரீ'' சப்தார்த்தம்.

" ஸ்ரீ " என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது. 

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க, 

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று) 

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து, 

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து, 

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற (அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி. 

இவ்விசேடார்த்தங்களை நம் அன்பர் குலச்சிங்கம் ஒரு திருப்பாசுரத்தில் அழகுற அமைக்கும் பெற்றியே பெற்றி. 

அப்பாசுரம் வருமாறு:-

அருவுருவானவை தன்னை 
          யடைந் திடத் தானடைந்து
வருவுரைகேட்டு அவை கேட்பித்து 
               அகற்றும் வினைவிலக்கி
இருதலை யன்பு தனால் எம்மை 
                       யின்னடி சேர்த்தருளும்
திருவுடனே திகழ்வார். சிறந்தா 
                      ரெங்கள் சிந்தையுள்ளே.
                                      -(துவயச்சுருக்கு, 2)

" அருள் தரு மடியவர்பான் மெய்யைவைத்து
        தெருள்தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென
       இருள்செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரையன்ன. நின் திருவுருவில்
      அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க
      அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
       தீண்டியவினைகள் மாண்டிட முயன்று
தன்னடிசேர்ந்த தமருனை யணுக
       நின்னுடன் சேர்ந்து நிற்குநின் திருவே."
                                             --(மும்மணிக்கோவை. 1)

[தெருள் - பூர்ண ஜ்ஞாநம் ; அருள் எனும்சீர் - கிருபை என்கிற கல்யாண குணம் ; ஓர் -- ஒப்பற்ற; அரிவை - பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்); இருள் - அஜ்ஞாநாத்யந்தகாரம் ; செக - நசிக்க ; விளக்கு -- நிரதிசயாநந்த ரூபமான பகவத்ஸ்வரூபம், அபராதாநுகுணமாக தண்டதரனான அவன்படி ஒளிவிளக்கு, பெரிய பிராட்டியின்படி இன்விளக்கு, ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு. ஆகையாலே த்வத்விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ; மணிவரை - மரகதமலை ; திருவுருவில் - திருமேனியில் ; ஆகம் - திருமார்பு; அலங்கலாய் -- மாலையாய் ; இலங்கி - விளங்கி ; நின்படிக்கெல்லாம் - என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ; அன்புடன் - இருதலையன்புதனால்.) என்றும் ;

" வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி
            வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற
         தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன்                                       -                 (அமிருதாசுவாதினி. 8)

என்றும் திருவின் பொருளைத் தெளிவுறத் தெரிவித்துள்ளார் திருவெங்கடேச குரு.

தொடரும்

சனி, 4 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் - 2



தசாவதாரம்.

திருமால், 
(1) மச்சம் (2) கூர்மம் (3) வராகம் (4) நரசிங்கம் (5) வாமநம் (6) பரசுராமர் (7) பலராமர் (8) ஸ்ரீ ராமர் (9) கிருஷ்ணன் (10) கற்கி என்று சொல்லப்பட்ட தசாவதாரமுஞ் செய்தருளினர். இந்தப்பத்து அவதாரங்களுள்ளே, வேதத்தைத் திருடிக் கடலிலொளித்த சோமுகாசுரனைக் கொல்லும்பொருட்டு மச்சாவதாரமும், திருப்பாற்கடல் கடையும் போது மந்தரமலையைத் தாங்கும் பொருட்டுக் கூர்மாவதாரமும், இரணியாக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டின போது அதை விரிக்கும் பொருட்டும், அவனைக் கொல்லும் பொருட்டும் வராகாவதாரமும், தமையன் பழிவாங்க சருவதேவ வணக்கத்தை விலக்கின இரணியனைக் கொல்லும்பொருட்டு நரசிங்காவதாரமும், மாவலியை யடக்கும் பொருட்டு வாமனாவதாரமும், அரசரால் தாழ்த்தப் பட்ட வேதியர் நிமித்தமாக அவ்வரசரைக் கொல்லும் பொருட்டுப் பரசுராமாவதாரமும், இராவணன் முதலி யோரைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீ ராமாவதாரமும், பிரலம்பன் முதலியபல ராக்ஷஸரை வதைக்கும் பொருட்டுக் கிருஷ்ணாவதாரமும், தருமத்தை நிலை நிறுத்தும் பொருட்டுக் கற்கி யவதாரமும் செய்தருளுவர்.
 
இத்தசாவதார வைபவத்தை,
தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவி னிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்
- (பெரியாழ்வார் திருமொழி 4-9-9)

என்று விட்டுசித்தனும்;

“ மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்
தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்
--(பெரிய திருமொழி 8-8-10)

என்று திருமங்கைமன்னனும் ,
"மீனாமை கோலநெடு நரசிங்கமாகி
நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை
யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு
மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு
நாராயணாய நமவே
(மகாபாரதம், சல்லிய பருவம். 1)

என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
 
ஸ்ரீ வேதாந்த தேசிகன் அமைத்துப் பாடிய அடைவினைக்
கண்டு களிமின்.
" மீனோடாமை கேழல் கோளரியாய்
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில்
துன்னியபரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும்
மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர்
வானாரின்ப மிங்குறவருதி.''
(மும்மணிக்கோவை. 4)

[கேழல் - வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி - பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்கவுற்றனை.
- (நவமணிமாலை. 2)


(மகரம் - மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் - இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் - இரணியகசிபு, மதலை - பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் - அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் - இராவணன் ; வரை - கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)

நம் வேதாந்தவாரியன் "ஸ்ரீ தசாவதார ஸ்தோத்திரம் '' பாடியுள்ளார். இத் தோத்திரம் பொதுவாக அவதாரங்களைப் பற்றிய ஒரு சுலோகமும், பகவதவதாரங்களில் பிரதானமாக வெண்ணப்பெற்றுவரும் பத்து அவதாரங்களைப்பற்றிப் பத்து சுலோகங்களும், அனைத்தையுஞ் சேர்த்தநுஸந் திக்கிற ஒரு சுலோகமும், பல ச்ருதியாக, ஒரு சுலோகமும் ஆக பதின்மூன்று சுலோகங்கள் கொண்டது.
இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://

இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.''
- (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)


"தயாசதகம் " எனுந் தோத்திரத்தில் 81 முதல் 90 வரை
யுள்ள சுலோகங்கள் திருவவதாரப் பதிகமே; முறைவைப்பும்
முன்னர்க் கூறியாங்கே.
"ஸ்ரீ ஸங்கற்ப சூரியோதயம்" எனும் அரிய நாடகம் சுபாசிரய நிர்த்தாரணம் (தியானத்திற்குரிய பகவத் விக்ரஹத்தை நிச்சயித்தல்) என்னும் ஏழாமங்கம் தசாவதார வைபவத்தைப் பரக்கக் காட்டுகின்றது.

பரமபத ஸோபாநம். 

"பரமபத ஸோபாநம்" என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார். 

அவற்றின் வரிசை இவர் தாமே 
 "விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய: ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: " . என அருளிச்செய்துள்ளார். 
 அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை. 
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன -- 
 (1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்) 

 “தேனேறு தாமரையாள் திருமார்பன்றன் 
     திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு 
 ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின் 
     ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக் 
 கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான் 
     குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு 
 வானேறும் வழிப் படிகளடைவே கண்ட 
 வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே." 
 என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க. 
 இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான , 

" மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி 
     மன்னாத பயனிகந்து மாலேயன்றிக் 
 கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு 
     கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று 
 விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு 
     விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப் 
 பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும் 
     பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.'' 

 [(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.

அயிந்தைச் செல்வன் விஷயம். 

திருவயிந்தைமா நகரமர்ந்துள்ள செல்வத் தெய்வநாயகன் விஷயமாக ப்ராக்ருத பாஷையில் ஸ்ரீ அச்யுத சதகம், (101 சுலோகங்கள்), ஸம்ஸ்க்ருத பாஷையில் ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் (53 சுலோகங்கள்), த்ரமிட பாஷையில் மும்மணிக் கோவை, பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவமணிமாலை முதலியன நம் வேதாந்த குரு அருளிச்செய்துள்ளார். இதனை, இவர்தாமே, 

 அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத 
     னடியிணைமேல் அடியுரையாலைம்ப தேத்திச் 
 சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச் 
     செந்தமிழ் மும்மணிக்கோவை செறியச்சேர்த்துப் 
 பந்து கழலம்மானை யூசலேசல் 
     பரவு நவமணிமாலை யிவையுஞ் சொன்னேன் 
 முந்தைமறை மொய்ய வழிமொழி நீயென்று 
     முகுந்தனருள் தந்தபயன் பெற்றேன் நானே."
 - (நவமணிமாலை 10) 
 என அடைவு அமைத்து அற்புதமாக அருளிச் செய்திருத்தல் நோக்கி இன்புறற்குரியது.

வியாழன், 2 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன்.



திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 15 ஆவது வெளியீடு
24-9-1944 தாரண ௵ புரட்டாசி ௴கேட்டை நன்னாளில்
திருவயிந்தை ஶ்ரீதேசிகன் திருவடி வாரத்தில்
வெளியிடப்பட்ட

அடைவு அமைக்கும் அற்புதன்

||ஶ்ரீ:||
ஶ்ரீமதே ராமானுஜாய நம:




அடைவு அமைக்கும் அற்புதன்


வித்தகன் வேதியன் வேதாந்ததேசிக னெங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன் கலைகள்
மொய்த்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமறக்
கைத்தவ னென்றுரைத்தேன் கண்டிலேனென் கடுவினையே.
                                                                                                     (பிள்ளையந்தாதி)

அவதாரிகை


"செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற்சீரிய 
கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்" --- (பாலகாண்டம், நகரப்படலம்)
என்றும்,
கோதாவரியை வருணிக்கின்ற இடத்தில்,

"புவியினுக் கணியாயான்ற பொருடந்து புலத்திற்றாகி
அவியகத்துறை கடாங்கி யைந்திணை நெறியளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்க முந்தழுவிச் சான்றோர்
கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்."
                                            (ஆரணிய காண்டம், சூர்ப்பனகைப் படலம்)
எனக் கவி லக்ஷணத்தை ஆற்றின் மேலேற்றிக் கூறியவாற்றானும், பம்பைப் பொய்கையை வர்ணிக்குங்கால்,
"கற்பக மனையவக்க விஞர் நாட்டிய
சொற்பொருளா மெனத் தோன்றல் சான்றது."
                       (கிட்கிந்தா காண்டம், பம்பாநதிப் படலம்)

எனக் கூறியவகையாலும், கல்வியிற் பெரிய கம்பர் கருத்திற்கொண்ட கவிபாவம் இன்னதென்பது வெளிப்படை. அவர் கொண்ட விலக்கணத்துக்கு விலக்கியமாய் நிற்பதே இராமாவதாரம் என்பதோர் பேருண்மை.

        கம்பர் கவிச் சக்கரவர்த்தி. தூப்புல் வேதாந்ததேசிகன் என்ற சந்தமிகு தமிழ்மறையோன் தென்வடமொழி நாவலராய்த் திகழ்ந்த கவி வாதி சிங்கர். இவர் பற்பல கலை வல்ல பாவலர். பத்தரேத்தும் அற்புதர். அற்புதரே அறியும் மெய்த்தவர். இவரது தமிழ்க்கவிகள் உவமையற்றன. அவற்றில் அடைவு அமைக்கும் பெற்றியினைச் சற்றுக் காட்டுவாம் இங்கு.

ஆழ்வார்கள் அடைவு.

ஆழ்வார்கள் பதின்மர் என்று,

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வருங்குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
தொண்டரடிப் பொடி மழிசை வந்தசோதி
வய்யமெலா மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் .........
-(அதிகாரச் சுருக்கு 1)


[(1)பொய்கைமுனி--பொய்கையாழ்வார்; (2) பூதத்தார்- பூதத்தாழ்வார்; (3)பேயாழ்வார்; (4) தண் பொருநல் வருங்குருகேசன் - நம்மாழ்வார் ; (5) விட்டுசித்தன் - பெரியாழ்வார் ; (6) துய்ய குலசேகரன் - குலசேகராழ்வார் ; (7)நம்பாணநாதன் - திருப்பாணாழ்வார்; (8) தொண்டரடிப்பொடி- தொண்டரடிப் பொடியாழ்வார்; (9) மழிசைவந்த சோதி திருமழிசையாழ்வார்; (10) வய்யமெலா மறை விளங்க வாள்வேலேந்தும் மங்கையர்கோன் திருமங்கையாழ்வார் ]
என்ற பாசுரத்தில் அமைத்துள்ளார்.

அவர்கள் பன்னிருவர் என்பதை,
வையகமெண் பொய்கை பூதன் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ் மாறன் மதுரகவி
பொய்யில் புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
அய்யனருட் கலியன் ..................
- (பிரபந்த சாரம் 17)

(மகிழ்மாறன் - நம்மாழ்வார் ; கோழியர்கோன்--குலசேகராழ்வார் ; கோதை ஆண்டாள் ; கலியன்-திருமங்கையாழ்வார்.) இங்குற்ற அடைவுவருமாறு :-
(1) பொய்கையாழ்வார் (2) பூதத்தாழ்வார் (3) பேயாழ்வார் (4) திருமழிசையாழ்வார் (5) நம்மாழ் வார் (6) மதுரகவியாழ்வார் (7) குலசேகராழ்வார் (8) பெரியாழ்வார் (9) ஸ்ரீ ஆண்டாள் (10) தொண்டரடிப்பொடியாழ்வார் (11) திருப்பாணாழ்வார் (12) திருமங்கையாழ்வார்.
முன்னர்க் கூறியதில் நம்மாழ்வாரைக் கூறவே மதுரகவியாரும், பெரியாழ்வாரைக் குறிக்கவே
ஸ்ரீ ஆண்டாளும் குறிக்கப் பெற்றார் என்ப. எனவே, "பதின்மர்” பின் வருமாறுஅடைவு அமைக்கப் பெற்றுள்ளனர்.

அதிகாரச் சுருக்கு                                               பிரபந்தசாரம்

1. பொய்கையாழ்வார்                              1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்                                          2. பூதத்தாழ்வார்`
3. பேயாழ்வார்                                              3. பேயாழ்வார்
4. நம்மாழ்வார்                                             4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்                                         5. நம்மாழ்வார்
6. குலசேகராழ்வார்                                    6. குலசேகராழ்வார்
7. திருப்பாணாழ்வார்                                7. பெரியாழ்வார்
8. தொண்டரடிப்பொடியாழ்வார்          8. தொண்டரடிப்பொடியாழ்வார்
9. திருமழிசையாழ்வார்                            9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்                         10. திருமங்கையாழ்வார்

ஶ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை நான்காவது பாசுரம் 

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன்அருள் மாறன் சேரலர்கோன் -- துய்யபட்ட
நாதன் அன்பர் தாள்தூளிநற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு. 

என்பதிற் காணப்படும் அடைவு மேலே காட்டப் பெற்றுள்ள பிரபந்தசார அடைவை அப்படியே கொண்டுள்ளது.

இராமாநுச நூற்றந்தாதியிலுள்ள "அடைவுஅமைப்பு" பின்வருமாறு.

1. பொய்கைப்பிரான் (பொய்கையாழ்வார்) 2. பூதத்தாழ்வார் 3. தமிழ்த் தலைவன் (பேயாழ்வார்)
4. பாண்பெருமாள் (திருப்பாணாழ்வார்) 5. மழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) 6. தொண்டரடிப் பொடியாழ்வார் 7. கொல்லி காவலன் (குலசேகராழ்வார்) 8. பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) 9. மாலை சூடிக் கொடுத்தவள் (ஶ்ரீ ஆண்டாள்) 10. தண்தமிழ்செய்த நீலன் (திருமங்கையாழ்வார்) 11. சடகோபன் (நம்மாழ்வார்). 12. மதுரகவி யாழ்வார்.

ஶ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத
ஶ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஶ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

இங்கு காட்டிய அடைவு வருமாறு.

1. பூதம் (பூதத்தாழ்வார்) 2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) 4. பட்டநாதர் (பெரியாழ்வார்) 5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் 6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) 8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) 9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) 11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

ஆழ்வார்கள் அருளிச்செயல்கள்

        ஆழ்வாராதிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் இருபத்து நான்கு என்றும், அவற்றின் பாசுரத் தொகை நாலாயிரம் என்றும் "பிரபந்த சாரம்" என்னும் பிரபந்தத்தில் அறுதியிட்டுள்ளார் மறைமுடித் தேசிகனார்.

"எண்ணில் முதலாழ்வார்கள் மூன்று நூறும்
எழில் மழிசைப்பிரானிரு நூற்றொரு பத்தாறும்
உண்மை மிகுமாறன் மறையாயிரத்தோ
டுற்றவிரு நூற்றுத் தொண்ணூறுமாறும்
வண்மையுடை மதுரகவி பத்துமொன்றும்
வஞ்சியர் கோனூற்றைந்தும் பட்டநாதன்
பண்ணிய நானூற்றேழு பத்துமூன்றும்
பார்க்கோதை நூற்றெழுபத்து மூன்றே" 

பத்தரடிப்பொடி பாட லைம்பத்தைந்தும்
பாணர் புகழ்பத்துடனே பரகாலன்சொல்
அத்தனுயர் வேங்கடமாற் காயிரத்தோ
டானவிரு நூற்றோரைம்பத்து மூன்றும்
முத்திதரு மெதிராசர் பொன்னடிக்கே
மொழிந்த வமுதனார் பாடல் நூற்றுமெட்டும்
எத்திசையும் வாழவிவை பாடிவைத்த
வென்பவை நாலாயிரமுமெங்கள் வாழ்வே."

கீழ்க்கண்ட அட்டவணை இதனை நன்குவிளக்குதல் காண்க










ஆசார்யர்கள்.

முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானளவுஞ்செல்ல அநுஸந்திக்க வேணுமென்றோதப்பட்டது" என்று ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரமாகிய நன்னூற்கு முகவணியாகவுள்ள குருபரம்பராஸாரத்தில் வேதாந்தகுரு கூறுவதுடன் அக்குரு பரம்பரையின் அடைவை அவர்கள் திருநாமங்கள், செய்தருளிய பிரபந்தங்கள், முதலியவற்றுடன் பின்வருமாறு விவரிக்கின்றார்:-

“ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் ..... பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக வொரு தசாவதாரம் பண்ணி மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி ஸர்வோபஜீவ்யமான தண்ணீராக வுமிழுமாப் போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கு மதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்.... பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றுஞ் சொல்லுகிறபடியே அகஸ்த்ய ஸேவித தமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே யவதரித்தருளினான்...

இவ்வாசார்யர்களில் ஈச்வரமுநிகள் பிள்ளை நாதமுநிகள். இவர் ந்யாயதத்வம் என்கிற சாஸ்த்ரமும் யோகரஹஸ்யமும் அருளிச்செய்தார். இவருக்கு ஸ்ரீ மதுர கவிகள் முதலாகவுண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும், போகதசையிலே ஸாக்ஷாத் க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்ய ரானார். 
நாதமுநிகள் பிள்ளை ஈச்வரபட்டாழ்வான். ஈச்வரபட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள். (1) ஆகமப்ராமாண்யம் (2) புருஷ நிர்ணயம் (3) ஆத்மஸித்தி (4) ஈச்வரஸித்தி (5) ஸம்வித்ஸித்தி (என்கிற ஸித்தித்ரயமும்) (6) ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் (7) ஸ்தோத்ரம் (8) சதுச்லோகி. ஆக எட்டு. 

ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டைநம்பி பிள்ளை என்னாச்சான்.. என்னாச்சான் பிள்ளைகள் நால்வர். இவர்களிலொருவர் பிள்ளையப்பர். பிள்ளையப்பர் பிள்ளைதோழப்பர். தோழப்பருக்குப் பெண் பிள்ளைகளிருவர். நாதமுநிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள் (1) உய்யக் கொண்டார் (2) குருகைக்காவலப்பன் (3) நம்பி கருணாகரதாஸர் (4) ஏறு திருவுடையார் (5) திருக்கண்ணமங்கையாண்டான் (6) வானமாதேவியாண்டான் (7) உருப்பட்டூ ராச்சான் பிள்ளை. (8) சோகத்தூராழ்வான். ஆக எண்வர்.

உய்யக்கொண்டார் ஸ்ரீ பாதத்தையாச்ரயித்தவர்கள் ஐவர் . அவர்களாகிறார் :- (1) மணக்கால் நம்பி (2) திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர் (3) சேட்டலூர் செண்டலங்காரர் (4) ஸ்ரீ புண்டரீகதாஸர் (5) உலகப்பெருமாள் நங்கை. 

மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தை யாச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார்:- (1) ஆளவந்தார் (2) தெய்வத்துக் கரசுநம்பி (3) கோமடத்துத் திருவிண்ணகரப்பன் (4) சிறுப்புள்ளூராவுடையபிள்ளை (5) ஆச்சி. 

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் பதினைவர். அவர்களாகிறார் (1) பெரியநம்பி (2) திருக்கோட்டியூர் நம்பி (3) திருமாலையாண்டான்(4) ஆளவந்தாராழ்வார் (5) திருமலைநம்பி (6) ஈசாண்டான் (7) தெய்வவாரி யாண்டான் (8) சிறியாண்டான் (9) திருமோகூரப்பன் (10) திருமோகூர் நின்றார் (11) தெய்வப்பெருமாள் (12)திருமங்கையாளியார் (13) பிள்ளை திருமாலிருஞ் சோலைதாஸர் (14) மாறனேர் நம்பி (15) ஆள் கொண்டி.

பெரியநம்பி ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார் :- (1) எம்பெருமானார் (2) மலை குனிய நின்றார் (3) ஆர்ய ஸ்ரீ சடகோபதாஸர் (4) அணியரங்கத்தமுதனார் (5) திருவாய்குலமுடையான் பட்டர் (6) திருக்கச்சி நம்பி. 

எம்பெருமானார், திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் ரஹஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்; திருமாலையாண்டான் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழி கேட்டார் ; ஆளவந்தாராழ்வார் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழியுமோதி ஸ்தோத்ரமும் அருளிச்செய்யும் நல்வார்த்தைகளுங் கேட்டருளினார்; திருமலை நம்பி ஸ்ரீபாதத்திலே ஶ்ரீமத் ராமாயணங் கேட்டருளினார். இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் :- 1. ஸ்ரீ பாஷ்யம் 2. தீபம் 3. ஸாரம் 4. வேதார்த்த ஸங்க்ர ஹம் 5. ஸ்ரீ கீதாபாஷ்யம் 6. சிறிய கத்யம் 7. பெரிய கத்யம் 8. ஸ்ரீவைகுண்டகத்யம் 9. நித்யம். ஆக ஒன்பது. இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளைத் தந்தாம் ஸம்ப்ரதாயப் படிகளிலே யறிந்து கொள்வது.

'' ஸ்ரீ பாஷ்யகாரர் தொடக்கமாக எம்பெருமானளவும் உள்ள ஆசாரியர்களின் அடைவை அநுசந்தாநக்கிரமத்தில் ஸ்ரீதேசிகன் அருளியுள்ள அழகு அழியாவழகு. அப்பாசுரம் ஈதே.

" என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே யவர்குருக்கணிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகளென் றிவரை முன்னிட்
டெம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.'

                                                -(அதிகாரச் சுருக்கு 3) 

 (பெரும்பூதூர் வந்தவள்ளல் - எம்பெருமானார் ;சடகோபன் -- நம்மாழ்வார் ; சேனை நாதன் - விஷ்வக்ஸேநர்.)

இங்குற்ற அடைவு. 1. ஸ்ரீ பாஷியகாரர், 2. பெரியநம்பி, 3. ஆளவந்தார், 4. மணக்கால் நம்பி, 5. உய்யக்கொண்டார், 6. நாதமுனி, 7. சடகோபன், 8. சேனை முதலியார், 9. பெரிய பிராட்டியார், 10. எம்பெருமான்.

இங்கு குறிக்கப்பெற்றுள்ள பூருவாசாரியர்கள் பதின்மர் என்பது குறிக்கொள்ளத் தக்கது.


---- தொடரும் --