புதன், 2 நவம்பர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 26

வினா 29.- இவ்வாறு இவர்கள்‌ யாவரும்‌ தெற்குப்‌ பாகத்தில்‌ ஸந்தோஷமாய்‌ இருக்கையில்‌ பட்டணத்துள்‌ நடந்த விஷயம்‌ என்ன?

விடை.- மறுநாட்‌ காலையில்‌ தூர்யோதனாதியர்‌ விராடபட்டணத்திற்கு வடக்கு பக்கத்திலிருக்கும்‌ பசுக்கூட்டங்ளைக்‌ கவர்ந்தனர்‌. உடனே கோபாலர்கள்‌ ஓடிவந்து, ஊரிலிருந்த விராடராஜன் குமாரனாகிய உத்தரனிடம்‌ முறையிட்டார்கள்‌. அப்பொழுது உத்தரன்‌ ஸ்திரீகள்‌ மத்தியில்‌ இருந்ததால்‌, அவனுக்கு அதிகக் கர்வமுண்டாக "எனக்கு ஒரு தகுந்த ஸாரதிமாத்திரம்‌ இருந்தால்‌, கெளரவ ஸேனை முழுவதையும்‌ ஒரு நொடிப்பொழுதில்‌ தோல்வியடையும்‌படி செய்து, பசுக்களை மீட்டுக்கொண்டு வருவேன்‌" என, இதைக்‌ கேட்டுக்கொண்டிருந்த ஸைரந்திரி உத்தரையை அழைத்து பிரகந்நளைக்கு ஸாரத்யம்‌ தெரியும்‌ என்று சொன்னாள்‌. இதை உத்தரை தனது தமயன்‌ உத்தரனுக்குச்சொல்ல, அவன்‌ இதற்கு இசைந்து பிரகந்நளையை ஸாரதியாகக்கொண்டு வடக்கு நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 30. கெளரவ ஸேனையைக்‌ கண்டதும்‌ உத்தரன்‌ நிலை என்னமாயிற்று? பிரகந்நளை என்ன செய்தாள்‌?

விடை.- அலைமோதிக்‌ கொண்டிருக்கும்‌ ஸமுத்திரத்தைப்‌ போலத்தோன்றிய கெளரவ ஸேனையைக்‌ கண்டதும்‌, உத்தரனுக்கு அதிகபயம்‌ உண்டாக, அவனுக்கு “சண்டையில்‌ சென்று வீணாய்‌ உயிரிழப்பதை விட, உயிர்‌ பிழைத்து ஸுகமாய்‌ வாழலாம்‌” என்று தோன்றியது. பிரகந்நளை இதைக்‌ கவனியாது “க்ஷத்திரியனுக்கு இது தகாது" என்று சொல்லிக்கொண்டே தேரை யுத்தகளத்தருகில்‌ கொண்டு போனாள்‌. உடனே உத்தரனுக்குப்பயம்‌ அதிகரிக்க, அவன்‌ தேரிலிருந்து குதித்துப்‌ பட்டணம்‌ நோக்கி ஓடஆரம்பித்தான்‌.

வினா 31.- இவ்வாறு உத்தரன்‌ ஓடஆரம்பித்ததும்‌ பிரகந்நளை அவனை எவ்வாறு தேற்றி என்ன செய்தாள்‌?

விடை.- அவனைப்‌ பிரகந்நளை பின்தொடர்ந்து சென்று, பிடித்துதேர்த்தட்டில்‌ கொண்டுவந்து உட்காரவைத்துப்‌ பலவாறாகத்‌ தேற்றப்பார்த்தாள்‌. அவன்‌ அதிக பயத்‌தோடிருப்பதைக்கண்டு, தேரை மயானத்திலிருந்த வன்னிமரத்திற்கு அருகில்‌ கொண்டுபோய்‌, உத்தரனை மரத்தின்மேலுள்ள ஆயுதங்களிருந்த காண்டீவ தனுஸை எடுத்துத்‌ தன்னிடம்‌ கொடுக்கும்படி பிரகந்நளை கேட்டாள்‌. உத்தரன்‌ பின்னும்‌ தேறாது பயந்து நடுங்குவதைக்‌ கண்டு, தமக்கு அக்ஞாதவாஸகாலம்‌ அன்றோடு தீர்ந்தது என்று தெரிந்துகொண்டவனாய்‌, தான்‌ பாண்டவர்களுள்‌ அர்ஜுனனென்றும்‌, தனது ஸகோதரர்களும்‌ திரெளபதியும்‌ விராடநகரத்தில்‌ பலவேலைகள்‌ செய்து கொண்டிருக்கிறார்கள்‌ என்றும்‌ எடுத்துச்‌ சொல்லி தனது பத்துப்பேர்களையும்‌, அவைகள்‌ தனக்கு வந்ததற்குக்‌ காரணத்தையும்‌ பிரகந்நளையாகிய அர்ஜுனன்‌ எடுத்துக்கூற, உத்தரனுக்கு ஒருவாறு தைரியம்‌ வந்தது. உடனே உத்தரனை ஸாரதியாக வைத்துக்கொண்டு அர்ஜுனன்‌ பசுக்கூட்டங்களை மீட்கப்புறப்பட்டான்‌.

வினா 32.- இவ்வாறு அர்ஜுனன்‌ செய்துகொண்டிருக்கையில்‌ துர்யோதனாதியர்‌ கூட்டத்தில்‌ என்ன நடந்தது?

விடை... கர்ணன்‌, பிரகந்நளை உத்தரனைப்‌ பிடிக்க ஓடுகையில்‌ அவள்‌ அர்ஜுனன்‌ என்று தெரிந்து துர்யோதனனிடம்‌ சொல்ல, அவன்‌ தான்வந்த காரியம்‌ முடிந்தது, பாண்டவர்களுள்‌ ஒருவனை 13-வதுவருஷம்‌ முடிவதற்குமுன்‌ கண்டு பிடித்தாய்‌ விட்டது. ஆகையால்‌ பாண்டவர்களை மறுபடியும்‌ முன்‌ ஏற்பாட்டின்படி காட்டிற்கு அனுப்பி விடலாம்‌ என்று ஸந்தோஷித்தான்‌. இதைக்கேட்ட பீஷ்ம துரோண கிருபர்களாகிய மஹாத்மாக்கள்‌ யாவரும்‌ கணக்கிட்டுப்பார்த்து, அன்று ஸூர்ய உதயத்தோடு 13-வருஷங்கள்‌ முடிந்துவிட்டன என்று சொல்ல, துர்யோதனன்‌ ஒன்றும்‌ பேசமுடியாமல்‌ தத்தளித்தான்‌. அதற்குள்‌ அர்ஜுனன்‌ உத்தரனை ஸாரதியாக வைத்துக்‌ கொண்டு சண்டைக்கு வர யாவரும்‌ யுத்தத்திற்கு ஸித்தமானார்கள்‌.

வினா 33.- யுத்தம்‌ எவ்வாறு நடந்தது? எவ்வாறு முடிவு பெற்றது?

விடை... அர்ஜுனன்‌, பீஷ்மர்‌, துரோணர்‌, கிருபர்‌, அசுவத்தாமன்‌ முதலியவர்களை எதிர்த்து, முறையே சண்டைக்காரம்பித்து ஒவ்வொருவரையும்‌ தோல்வி அடையும்‌படி செய்து வருகையில்‌, துர்யோதனன்‌ பயந்து பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு, ஹஸ்தினாபுரியை நோக்கிச்சென்றான்‌. அர்ஜுனன்‌ கர்ணனை இரண்டுதரம்‌ தோல்வியடையும்படி செய்து, பீஷ்மர்‌, துரோணர்‌, கிருபர்‌, அசுவத்தாமா ஆகிய இவர்களையும்‌ வென்று, பசுக்களைத்‌ தேடிப்‌ பார்த்தான்‌. பின்பு பசுக்களைத்‌ துர்யோதனன்‌ வெகுதூரத்தில்‌ ஓட்டிப்போவதாகக்‌ கேள்வியுற்று அவனைத்‌ தெடர்ந்து சென்று ஜயித்து பசுக்களைத்‌ திருப்பிவருகையில்‌ துர்யோதனனுடைய ஸேனைகள்‌ அர்ஜுனனை எதிர்த்து சண்டையிடவந்தன. அர்ஜுனன்‌, பசுக்களது இருபக்கங்களில்‌ ஊர்வரையில்‌ சரக்கூடுபோட்டு மறைக்க, பசுக்கூட்டங்கள்‌ அதனுள்‌ விளையாடிக் கொண்டு போய்ச்சேர்ந்தன. துர்யோதனாதியர்கள்‌, அர்ஜுனனும்‌ பசுக்களும்‌ போவதைப்‌ பார்த்திருந்தபோதிலும்‌ சரக்கூட்டைச்‌ சின்னாபின்னமாக்க முடியாது தயங்கி நின்றனர்‌. பசுக்கள்‌, ஊரை நோக்கிச்சென்றதும்‌, அர்ஜுனன்‌ மறுபடியும்‌ கெளரவ வீரர்களோடு சண்டை செய்து, அவர்களைத்‌ தோல்வியடையும்படி செய்தான்‌. இவ்வாறு கெளரவ ஸேளையைச்‌ சின்னாபின்னப்‌ படுத்திவிட்டு, இருவரும்‌ ஒருசோலையில்‌ வந்து தங்கினார்கள்‌.

வினா 34.- நகரப்‌ பிரவேசம்‌ செய்யவேண்டியதற்கு இவர்கள்‌ என்ன ஏற்பாடு செய்தார்‌கள்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை... அர்ஜுனன்‌ உத்தரனை நோக்கி நீயே கெளரவர்களை வென்றதாக ஊருக்குத்‌ தூதரிடம்‌ சொல்லி அனுப்பிவிடு. நான்‌ வென்றதாகச்‌ சொல்லவேண்டாம்‌' என, உத்தரனுக்கு இவ்வாறு செய்ய மனம்‌ வராதபோதிலும்‌, அர்ஜுனனது வேண்டுகோளிற்கு இசைந்து, தூதரை அனுப்பி விராடராஜனுக்கு ஸங்கதியைத்‌ தெரிவித்தான்‌. உடனே, பட்டணம்‌ அலங்காரமாக, யாவரும்‌ உத்தரனது வரவை வெகு ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்‌.

வினா 35.- இவ்வாறு ராஜன்‌ தனது அருமைக்‌ குமாரனை எதிர்‌ பார்த்திருக்கையில்‌ ஸபையில்‌ ஏன்‌ என்ன விபரீதம்‌ நடந்தது?

விடை.- அரசனுக்கு ஸந்தோஷம்‌ அதிகரித்ததால்‌, சொக்கட்டானைக்‌ கொண்டுவரச்‌ சொல்லி, கங்கபட்டரைச்‌ சூதாடவரும்படி அழைத்தான்‌. கங்கபட்டர்‌, அதிக சந்தோஷத்தோடு, கூடியவன்‌, சூதாடினால்‌ ஏதாவது விபரீதம்‌ விளையும்‌ ஆகையால்‌ தாம்‌ சூதாட வருவதில்லை என்றார்‌. பின்பு அரசன்‌ கட்டாயப்படுத்த, இருவரும்‌ உட்கார்ந்தனர்‌. சூதாடிவருகையில்‌ அரசன்‌ 'என்‌ பிள்ளை கெளரவர்களை வென்று விட்டானே என்று சொல்லிக்‌ கொண்டு ஆட, கங்கபட்டர்‌ 'பிரகந்நளையை ஸாரதியாய்‌ வைத்திருக்கும்‌ போது அவனுக்குத்‌ தோல்வி ஏன்‌ உண்டாகும்‌' என்று சொல்லிக்கொண்டு சொக்கட்டான்‌ காயை உருட்டினார்‌. உடனே 'என்ன இந்தப்‌ பிராம்மணன்‌ என்‌ பிள்ளையையும்‌, ஒரு பேடியையும்‌ ஸமமாய்க்‌ கூறுகிறான்‌! என்று அரசனுக்குப்பட, அவனுக்குக்‌ கோபமுண்டாயிற்று. அப்பொழுது தன்‌ கையிலிருந்த சொக்கட்டான்‌ காயால்‌ கங்கபட்டாது முகத்தில்‌ வெகுவேகமாய்‌ அரசன்‌ இடித்தான்‌. அது கங்கபட்டரது நெற்றியில்‌ பட, உடனே இரத்தம்‌ தாரை தாரையாய்ப்‌ பெருகத்‌ தொடங்கிற்று. அதைக்கீழே விழாது, தன்கையில்‌ ஏந்திக்கொண்டு, அருகிலிருந்த ஸைரந்திரியை நோக்க அவள்‌ தனது கணவனது உட்கருத்தை அறிந்து கொண்டு, ஒரு பாத்திரத்தில்‌ தண்ணீர்‌ கொண்டு வந்து இரத்தம்‌ கீழே விழாது அதில்‌ ஏந்தினாள்‌.

வினா 36.- உத்தரன்‌ இராஜ ஸபைக்கு வந்ததும்‌ என்ன நடந்தது? ஏன்‌?

விடை... உத்தரனும்‌, அர்ஜுனனும்‌ ஸபை வாசலில்‌ இருந்து கொண்டு, அரசனுக்குத்‌ தமது வரவைத்‌ தெரிவிக்க, அரசன்‌ இருவரையும்‌ தன்‌ முன்‌ கொண்டுவந்து விடும்படி வேலைக்‌காரனை ஏவினான்‌. யுதிஷ்டிரர்‌ வாயில்‌ காப்போனிடம்‌ சென்று உத்தரனை மாத்திரம்‌ உள்ளேவிடும்படி கட்டளையிட, அவனும்‌ அவ்வாறே செய்தான்‌. உத்தரன்‌ வந்து தகப்பனாரை அடி பணிந்துவிட்டு, கங்கபட்டரிடம்‌ போக, அவர்‌ நெற்றியிலிருந்து இரத்தம்‌ வருவதையும்‌, ஸைரந்திரி அவருக்குப்‌ பணிவிடை செய்வதையும்‌ கண்டு, இந்த அபராதம்‌ செய்தவர்‌ தன்‌ தகப்பனார்‌ எனக்கண்டு, கங்கபட்டரைச்‌ சீக்கிரம்‌ ஸமாதானப்படுத்த வேண்டும்‌ என்று தகப்பனாரை மிகக்‌ கடிந்து பேசினான்‌. உடனே கங்கபட்டர்‌ யாரோ பெரியவர்‌ என்று அரசனுக்குத்‌ தோன்ற, அவன்‌ தணிந்து பேசி கங்கப்பட்டருக்கு ஸந்தோஷமுண்டாக்கினான்‌.

வினா 37.- பிரகந்நளை எப்பொழுது ஸபைக்கு வந்தாள்‌? பிரகந்நளையை ஏன்‌ உள்ளே விடக்கூடாது என்று தர்மபுத்திரர்‌ ஏற்பாடு செய்தார்‌?

விடை.- அர்ஜுனன்‌ முன்னமேயே யுத்தகாலங்கள்‌ தவிர மற்றைய காலங்களில்‌ என்‌ தமயனை யார்‌ இரத்தம்‌ வந்து கீழே விழும்படி காயப்படுத்துகிறார்களோ, அவர்களை நான்‌ உடனே கொல்லுவேன்‌' என்று சபதம்‌ செய்திருக்கிறான்‌. இது விராடராஜன்‌ தம்மைக்‌ காயப்படுத்தியவுடன்‌ கங்கப்பட்டருக்கு ஞாபகம்‌ வர, பிரகந்நளை ஸபைக்கு வந்து இரத்தம்‌ ஒழுகும்‌ தன்னைப்‌ பார்த்தால்‌ விராடராஜனைக்‌ கொல்லப்‌ போவாள்‌ என்று எண்ணி தன்‌ இரத்தம்‌ அடங்கும்‌ வரையில்‌ அவளை ஸபை வாயிலில்‌ நிறுத்தி வைத்துப்‌ பின்பு உள்ளேவரும்படி செய்தார்‌.

வினா 38.- அதன்‌ பின்பு என்ன நடந்தது?

விடை.- கங்கபட்டரது இரத்தம்‌ நின்ற உடனே, வாயிலிலிருந்த பிரகந்நளையைக்‌ காவலாளி உள்ளே விட்டான்‌. பிரகந்நளை வந்ததும்‌, உத்தரன்‌ தான்‌ கெளரவ ஸேனையைக்‌ கண்டு பயந்தோடுங்காலத்தில்‌, ஒரு திவ்ய புருஷன்‌ தன்முன்‌ தோன்றி, தன்னைத்‌ தைரியப்படுத்தி தேரில்‌ ஸாரதியாக வைத்துக்கொண்டு கெளரவ ஸேனைகளைச்‌ சின்னாபின்னப்படுத்தி பசுக்கூட்டங்களை மீட்டுவந்து மறைந்து போனான்‌ என்று சண்டைக்‌ கதையை விஸதாரமாய்ச்‌ சொன்னான்‌.

வினா 39.- இது முடிந்ததும்‌ பாண்டவர்கள்‌ எவ்வாறு வெளிவந்தனர்‌?

விடை... மறுநாட்‌ காலையில்‌ பாண்டவர்கள்‌ ஐவரும்‌, திரெளபதியும்‌, மங்கள ஸ்நானம்‌ செய்து, ஆடையாபாரணம்‌ அணிந்து, விராடராஜன்‌ ஸபைக்கு ஸூர்யோதயத்திற்கு முன்னர்வந்து, அங்கிருந்த சிங்காதனங்களில்‌ உட்கார்ந்தார்கள்‌. விராடராஜன்‌ வந்து, தான்‌ உட்கார இடமில்லாதது கண்டு “நீங்கள்‌ யார்‌?" என்று கேட்க, அர்ஜுனன்‌ எழுந்து தங்களது குலகோத்திரம்‌ பெயர்‌ முதலியவைகளை விஸ்தாரமாய்ச்‌ சொன்னான்‌. கீசகனையும்‌, உபகீசகர்களையும்‌ எளிதில்‌ கொன்றது பீமன்‌ என்பதையும்‌, மற்றையவர்கள்‌ இன்ன இன்ன வேஷத்தோடு இவ்வொரு வருஷகாலம்‌ அவனுக்கு இன்ன இன்ன வேலைகள்‌ செய்து வந்தார்கள்‌ என்பதையும்‌ முறையே அரசனுக்கு அர்ஜுனன்‌ வெளியிட்டான்‌. இதன்‌ பின்பு அரசன்‌ தன்னைத்‌ தென்புற மாடுபிடிச்சண்டையில்‌ காப்பாற்றியது பீமன்‌ என்று தெரிந்துகொண்டான்‌.

வினா 40- இவ்வாறு பாண்டவர்கள்‌ தன்னிடம்‌ வேலைசெய்தார்கள்‌ என்று தெரிந்ததும்‌ அரசன்‌ என்ன செய்தான்‌?

விடை. - இந்த விஷயங்களை அரசன்‌ கேட்டதும்‌, தனக்குப்‌ பாண்டவர்களோடு ஸம்பந்தம்‌ ஏற்படவேண்டுமென்று அவனுக்குத்தோன்ற, அர்ஜுனனுக்கு உத்தரையைக்‌ கொடுத்து விவாஹம்‌ நடத்துவதாகச்‌ சொன்னான்‌. ஆனால்‌ அர்ஜுனன்‌ இதை ஒப்புக்கொள்ளவில்லை.

வினா 41.- ஏன்‌ அர்ஜுனன்‌ இதை ஒப்புக்கொள்ளவில்லை? விராடராஜன்‌ மனதை அர்ஜுனன்‌ எவ்வாறு திருப்தி செய்து வைத்தான்‌?

விடை.- தான்‌ இதுவரை, உத்தரையை தனது பெண்ணாகவே பாவித்து, உபாத்தியாயர்‌ ஸ்தானத்திலிருந்து ஸஹஜமாய்‌ இருந்து விட்டதால்‌, தன்னால்‌ அவளைப்‌ பெண்சாதியாகக்‌ கருதல்‌ முடியாது என்று அர்ஜுனன்‌ மறுத்துவிட்டான்‌. விராடராஜனைத் திருப்தி செய்வதற்காக, தனது பிள்ளை அபிமன்யு (ஸுபத்திரையின்‌ பிள்ளை) வுக்கும்‌ உத்தரைக்கும்‌ கல்யாணம்‌ நடத்துவதாக ஒப்புக்‌ கொண்டான்‌. இதைத்‌ தர்மபுத்திரர்‌ ஒப்புக்கொள்ள, உத்தரையும்‌ ஒப்புக்கொள்ள, உத்தரைக்கும்‌, அபிமன்யுவுக்கு , கிருஷ்ணபரமாத்மாவின்‌ ஸந்நிதானத்தில்‌, விராட பட்டணத்தில்‌ வெகு கோலாஹலமாய்‌ விவாகம்‌ நடந்தது.

வினா 42.- இந்த விவாஹத்தின்‌ முக்கியச்‌ சிறப்பு என்ன?

விடை... இதனால்‌ அபிமன்யுவுக்கு பரீக்ஷித்து ராஜன்‌ பிறந்தான்‌. இவன்‌ மூலமாய்‌, உலகத்தில்‌ யாவரும்‌ அறிய, பாகவதம்‌ என்ற அரிய நூல்‌ வெளிவந்தது. இப்பரீக்ஷித்திற்கு ஜனமேஜய மஹாராஜன்‌ பிறந்தான்‌. இவன்‌ மூலமாய்‌, இம்மஹாபாரதமே வெளிவந்தது. இச்‌ சிறந்த காரியங்கள்‌, இக்கல்யாணத்தால்‌ உண்டானமையால்‌ இக்கல்யாணம்‌ மஹாபாரதத்தில்‌ மிகச்‌ சிறந்தது.

விராட பர்வம் நிறைவுற்றது.

தொடர்வது உத்யோக பர்வம்.

 

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 25

வினா 21.- இவ்வாறு கீசகன்‌ இறந்ததும்‌ என்ன நடந்தது?

விடை.- பீமன்‌ திரெளபதியை இவ்வாறு திருப்திப்படுத்தி விட்டு தன்‌ மடைப்‌ பள்ளிக்குச்‌ சென்றான்‌. திரெளபதி அருகிலிருந்த காவலாளர்களை அழைத்துத்‌ தனது கற்பைக்‌ கெடுக்க வந்த கீசகன்‌ தனது பர்த்தாக்களான கந்தர்வர்களால்‌ பட்டபாட்‌டைக்‌ காண்பித்தாள்‌. அவர்களும்‌ ஸைரந்திரி சொல்லுவது உண்மை என்று நம்பினார்கள்‌. இந்த ஸங்கதியை உடனே உபகீசகர்கள்‌ என்ற கீசகன்‌ தம்பிமார்கள்‌ கேள்விப்பட்டு நாடகசாலை வந்து தமது தமயன்‌ நிலையைக்கண்டு பரிதபித்தனர்‌.

வினா 22.- இவர்கள்‌ வந்ததும்‌ அருகே இருந்த திரெளபதிக்கு என்ன கஷ்டம்‌ வந்தது?

விடை.- உபகீசகர்கள்‌, அருகே ஒரு தூணில்‌ சாய்ந்து கொண்டு எல்லாவற்றையும்‌ பார்த்துக்கொண்டிருந்த திரௌபதியைக்‌ கண்ட உடனே அவர்களுக்கு அவளை அவமானப்படுத்த வேண்டுமென்று தோன்றிற்று. விராடராஜன்‌ பலமற்ற அரசனாகையால்‌ அவனிடமிருந்து ஸைரந்திரியையும்‌, கீசகனது தேகத்தோடு கட்டி எரித்துவிட அனுமதியைப்‌ பெற்றுக்கொண்டு வந்து, உபகீசகர்கள்‌ ஸைரந்திரியின்‌ தலைமயிரை இழுத்து கீசகனது பாடைக்‌ கொம்பில்‌ கட்டி அவளையும்‌ மயானத்திற்கு இழுத்துச்‌ சென்றனர்‌.

வினா 23.- இந்தக்‌ கஷ்டம்‌ திரெளபதிக்கு எவ்வாறு நீங்கியது?

விடை... மயானத்திற்குப்போகும்‌ வழியில்‌ திரெளபதி "ஏ ஜயா, ஜயந்தா, விஜயா, ஜயத்ளேனா, ஜயத்பாலா! என்னை இத்தருணத்தில்‌ கைவிட்டுவிடக்கூடாது” என்று கந்தர்வர்களை அழைப்பது போலப்‌ பாண்டவர்களை அவர்களது ஸங்கேதப்‌ பெயர்களைச்‌ சொல்லி அழைத்தாள்‌. இதை மடைப்பள்ளியில்‌ இருக்கும்‌ பீமன்‌ கேட்டதும்‌ அவன்‌ தனது உருவை ஒருவாறு மாற்றிக்கொண்டு தேகந்தெரியாது எழுந்து விரைவில்‌ கோட்டை மதில்‌ முதலிய தடைகளைத்‌ தாண்டிக்‌ குதித்து சீக்கிரத்தில்‌ மயானம்‌ வந்தான்‌. அவன்‌ வரும்பொழுது வழியிலிருந்த ஒரு பனைமரத்தைப்‌ பிடுங்கி எடுத்துக்கொண்டு விரைவாய்‌ வருவதைக்‌ கண்ட உபகீசகர்கள்‌ பயந்து ஸைரங்திரியை விட்டுவிட்டு நாலாபக்கங்களிலும்‌ ஓடத்தலைப்‌ பட்டனர்‌. பீமன்‌, உபகீசகர்கள்‌ 105 பேர்களில்‌ ஒருவரையும்‌ ஊருக்குள்‌ போகவிடாமல்‌ தனது பனைமரத்தால்‌ ஓங்கி அடித்து யமபுரம்‌ அனுப்பி, திரெளபதியைத்‌ தேற்றி அவளை. அந்தப்புரம் போகச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌ மடைப்பள்ளியை அடைந்தான்‌.

வினா 24.- இவ்வாறு ஸகல கஷ்டங்களும்‌ நீங்கித்‌ திரெளபதி அரண்மனைக்கு வந்ததும்‌ அங்கு என்ன நடந்தது?

விடை.- இப்படி கீசகனும்‌, உபகீசகர்களும்‌ மாண்ட ஸங்கதி அரசனுக்குத்‌ தெரியவர, அவனுக்கு ஸைரந்திரியை இனிமேல்‌ இங்குவைத்திருக்கக்‌ கூடாது என்ற எண்ணம்‌ வந்தது. அதை ஸுதேக்ஷணையிடம்‌ தெரிவித்தான்‌. இதற்குள்‌ திரெளபதி அரண்மனையில்‌ புகுந்தாள்‌. அப்பொழுது மடைப்பள்ளி வாயிலில்‌ இருக்கும்‌ பீமனைக்‌ கண்டதும்‌ ஆகாயத்தைப்‌ பார்த்துக்கொண்டு, சற்று நேரம்‌ கந்தர்வர்களை வாயாரத்‌ துதித்தாள்‌. உள்ளே போகும்பொழுது பிரகந்நளையும்‌, இராஜ குமாரிகளும்‌ இவளது க்ஷேமத்தை விசாரித்தார்கள்‌. அந்தப்புரம்‌ சென்றதும்‌ அரசனது எண்ணத்தை ஸைரந்திரியிடம்‌ ஸுதேக்ஷணாதேவி வெளியிட்டாள்‌. இதைக்கேட்டதும்‌ திரெளபதி தான்‌ இன்னும்‌ 13-நாள்‌ தான்‌ அங்கு இருக்கப்போகிறதாகவும்‌, அதன்‌ பின்பு தன்‌ பர்த்தாக்கள்‌ தன்னை அழைத்துப்போவார்கள்‌ என்பதாகவும்‌, அது வரையில்‌ பொறுத்‌திருந்தால்‌ அவர்களுக்குக்‌ கந்தர்வர்கள்‌ நன்மையையே செய்வார்கள்‌ என்பதாகவும்‌ சொல்லி விராடராஜன்‌ அந்தப்புரத்தில்‌ திரெளபதி ஸுகமாய்‌ வாழ்ந்திருந்தாள்‌.

வினா 25.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ மறைந்து வாஸம்‌ செய்யுங்கால்‌ அவர்களைத்‌ தூர்யோதனாதியர்‌ எவ்வாறு கண்டு பிடிக்க முயன்றனர்‌? அவரது பிரயத்தனம்‌ என்னமாயிற்று?

விடை... துர்யோதனாதியர்கள்‌ 13-வது வருஷாரம்பமுதல்‌ எவ்வளவோ தூதரையும்‌, வேவுகாரரையும்‌ அனுப்பிப்‌ பாண்டவர்ளைக்கண்டுபிடிக்க முயன்றனர்‌. என்ன செய்தும்‌ பாண்டவர்களையாவது பாண்டவர்கள்‌ மறைந்து வாஸம்‌ செய்யும்‌ இடத்‌தையாவது அவர்களால்‌ கண்டு பிடிக்கமுடியாமல்‌ போய்விட்டது. இவர்களில்‌ விராடபட்டணம்‌ போய்வந்த வேவுகாரர்கள்‌ மாத்திரம்‌ பாண்டவர்கள்‌ இருக்கும்‌ இடத்தை அறியமுடியாத போதிலும்‌, கீசகன்‌ ஒரு ஸதிரீ நிமித்தமாய்‌ தனது தம்பிமார்‌ 105-பேர்களோடுமாண்ட அதிசய ஸமாசாரத்தை மாத்திரம்‌ கொண்டு வந்தார்கள்‌.

வினா 26.- இவ்வாறு வேவுகாரரை அனுப்புவித்த செய்தி முடிந்ததும்‌ துர்யோதன ஸபையில்‌ என்ன விஷயத்தைப்பற்றி யார்‌ யார்‌ என்னென்ன பேசினார்கள்‌? விடை... கர்ணனும்‌ சகுனியும்‌ “இன்னும்‌ அதிக ஸாமர்த்தியமுடைய வேவுகாரர்‌ மூலமாய்‌ பாண்டவர்களைக்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கண்டுபிடிக்கவேண்டும்‌" என்றனர்‌. “வேவுகாரர்‌ நன்றாய்த்தேடட்டும்‌. ஆனாலும்‌ கஷ்டங்கள்‌ அறியாத பாண்டவர்கள்‌ வனவாஸ அக்ஞாதவாஸ உபாதைகளால்‌ அவசியம்‌ இறந்தே யிருப்பார்கள்‌ என்று எனக்குத்‌ தோன்றுகிறது” என்று துராத்மாவான துச்சாஸனன்‌ சொன்னான்‌. “பாண்டவர்கள்‌ இறந்திருக்கமாட்டார்கள்‌. அவர்கள்‌ இருக்கும்‌ இடத்தை பிராம்மண தூதர்கள்‌ ஸித்தாள்‌ மூலமாய்‌ சீக்கிரம்‌ கண்டுபிடிக்க முயலவேண்டும்‌” என்றார்‌ துரோணர்‌. பீஷ்மர்‌ “பாண்டவர்‌ மஹாத்மாக்களாகையால்‌ அவர்கள்‌ இறந்திருக்கவே மாட்டார்கள்‌. அவர்கள்‌ சூதாட்டத்தில்‌ ஏற்பட்ட நிபந்தனைப்படி நடந்தாய்விட்டது. இனிமேல்‌ அவர்களைக்‌ கண்டுபிடித்துக்‌ காட்டுக்கனுப்புவது ஸரியன்று. அவர்கள்‌ இருக்கும்‌ தேசத்தில்‌ ஸகல சுபக்குறிகளும்‌ காணப்படும்‌, அசுபக்குறியே இருக்க மாட்டாது. அப்பட்டணத்திலுள்ளவர்கள்‌ தமது தர்மத்தைவிட்டு விலகாது, ஸன்மார்க்‌கத்தைப்‌ பின்பற்றுபவராய்‌ சண்டை சச்சரவு, வியாதி, அகாலமிருத்யு முதலியவைகளால்‌ வருந்தாது எப்பொழுதும்‌ ஸுகமாய்‌ வாழ்வார்கள்‌. ஆகையால்‌ அவர்கள்‌ விஷயத்தில்‌ நீ சீக்கிரமாக நியாயமாய்‌ நடந்து கொண்டால்‌ தான்‌ உனக்கு நலம்‌" என்று புத்திமதி கூறினார்‌. கிருபாசாரியர்‌, பீஷ்மர்‌ சொல்லியது யாவும்‌ ஸரி என அங்கீகரித்தார்‌. இவர்கள்‌ இவ்வாறு பாண்டவர்களைப்‌ பற்றிப்‌ பேசிக்கொண்டிருக்க திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மா என்பவன்‌ தான்‌ அதுவரையில்‌ கீசகனால்‌ அனேகம் தரம்‌ தோல்வி யடைந்திருப்பதாகவும்‌ இப்பொழுது கீசகன்‌ இறந்து விட்டதால்‌, தான்‌ மறுபடியும்‌ விராட நகரத்தை நோக்கிப்‌ படையெடுத்துப்போய்‌ அதைப்‌ பிடித்து துர்யோதனது இராஜ்யத்தை விஸதாரப்படுத்துவதாகவும்‌ சொன்னான்‌. இதைக்‌ கேட்டதும்‌ துர்யோதனனுக்கு முன்னமேயே பீஷ்மர்‌ பாண்டவர்‌ களிருக்கும்‌ இராஜ்யத்தை வர்ணித்ததற்கும்‌, விராடநகரத்தின்‌ செழிப்பிற்கும்‌, ஏதோ பொருத்தம்‌ இருக்கிறதாகத்‌ தோன்றினமையால்‌ அங்கு ஒருவேளை படையெடுத்துச்‌ சென்றால்‌ பாண்டவர்களையும்‌ கண்டு பிடிக்கலாம்‌ என்று தோன்ற அவன்‌ ஸுசர்மா சொன்னதை ஒப்புக்கொண்டு, விராடநகரத்தின்மேல்‌ படையெடுத்துச்‌ செல்லுவதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 27.- விராட நகரத்தின்‌ மீது துர்யோதனாதியர்‌ எவ்வாறு படையெடுத்துச்‌ சென்று எவ்வாறு விராடராஜனைப்‌ போருக்கழைத்தனர்‌?

விடை... திரிகர்த்த தேசாதிபதிகள்‌ தமது படைகளோடு முதலில்‌ விராட நகரத்தின்‌ தெற்கே சென்று அங்குள்ள பசுக்கூட்டங்களைக்‌ கவர்ந்து விராட நகரத்தவரை வலுவில்‌ சண்டைக்கு இழுத்தனர்‌. துர்யோதனாதியர்‌, பீஷ்மர்‌ முதலியோர்‌ தாம்‌ செய்து கொண்டு வந்த ஏற்பாட்டின்படி மறுநாள்‌ விராடபட்டணத்தின்‌ வடபக்கத்திலிருந்த பசுக்கூட்டங்களைக்‌ கவர்ந்து சண்டை உண்டாக்கினர்‌.

வினா 28.- தெற்கே வந்த திரிகர்த்த தேசாதிபதிகளை எதிர்த்து யார்‌ போருக்குச்‌ சென்றது? இந்த யுத்தம்‌ எவ்வாறு முடிந்தது? ஏன்‌?

விடை... தெற்குதிக்கை நோக்கி விராடராஜன்‌, கங்கபட்டர்‌, வல்லபன்‌, தாமக்கிரந்தி, தந்திரபாலன்‌ முதலியவர்களது ஸகாயத்தோடு, போருக்குப்‌ புறப்பட்டான்‌. அங்கு சண்டை இரவிலும்‌ அகோரமாய்‌ நடந்தது. அதில்‌ கடைசிக்‌ காலத்தில்‌ திரிகர்த்த தேசாதிபதிகள்‌ விராடராஜனை ஓடிவந்து பிடித்துக்கொண்டு போய்‌ தமது தேர்க்காலோடு கட்டிவிட, விராடராஜன்‌ ஸேனை வெருண்டோடத்‌ தொடங்கியது. இதைக்‌ கண்ட கங்கபட்டர்‌, வல்லபன்‌, தாமக்கிரந்தி, தந்திரபாலன்‌ ஆகிய மூவரையும்‌ அரசனுக்கு ஸகாயமாய்ப்‌ போர்‌ செய்யச்சொல்ல, அவர்கள்‌ வெகு அடக்கமாய்ச்‌ சண்டை செய்து விராடராஜனை விடுவித்து திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மாவைச்‌ சிறைபிடித்து வர, ஸுசர்மாவினது சேனை சின்பின்னமாகி நான்கு பக்கங்களிலும்‌ சிதறி ஓடிப்போயிற்று. கொஞ்ச நாழிகைக்குப்‌ பின்பு கங்கபட்டரது வேண்டுகோளின்படி, வல்லபன்‌ ஸுசர்மாவைக்‌ கட்டவிழ்த்து விட, அவன்‌ வெட்கி ஓடிப்போனான்‌. விராடராஜன்‌ அன்றிரவையும்‌ மறுநாட்காலையையும்‌ அங்கு சோலைகளில்‌ கழித்து விட்டு, மறுநாள்‌ நடுப்பகலில்‌ தன்‌ பட்டணத்திற்குப்‌ போவதாகத்‌ தீர்மானித்தான்‌. மறுநாள்‌ பொழுது விடிந்ததும்‌ பாண்டவர்களது ஒரு வருஷ அக்ஞாதவாஸம்‌ முடிவுபெற்றது.