வெள்ளி, 21 அக்டோபர், 2022

ஶ்ரீமஹாபாரதம் வினா விடை 22

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ படித்தவனாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- வேதங்களைப்‌ படித்தலால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ மேன்மையை அடைகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- ஸந்நியாஸத்தால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ புத்திமானாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- பெரியோருக்குப்‌ பணிவிடை செய்தலால்‌.

யக்ஷன்‌:- பிராமணர்களுக்கு என்ன கெட்டகுணம்‌ இருக்கும்‌?

தர்மபுத்திரர்‌:- பரநிந்தை.

யக்ஷன்‌:- வாயுவைவிட வேகமானது எது?

தர்மபுத்திரர்‌:- மனஸ்‌. ‌

யக்ஷன்‌:- இறப்பவர்களுக்குத்‌ தகுந்த ஸ்நேகிதர்‌ யார்‌?

தர்மபுத்திரர்‌:- அவர்கள்‌ செய்த தர்மமே.

யக்ஷன்‌:- மதங்களின்‌ முடிவான பயன்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனோ விசாலம்‌.

யக்ஷன்‌:- கீர்த்தியைத்‌ தாங்கி நிற்பவை எவை?

தர்மபுத்திரர்‌:- தானமும்‌ தர்மமும்‌.

யக்ஷன்‌:- ஸுகம்‌ எதனால்‌ உண்டாகும்‌?

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கையால்‌.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான தனம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- அறிவு.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான ஸுகம்‌ யாது ?

தர்மபுத்திரர்‌:- கிடைத்தவரையில்‌ திருப்தி அடைவதே.

யக்ஷன்‌:- சிறந்த தர்மம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- அஹிம்ஸை.

யக்ஷன்‌:- ஸுகம்‌ கொடுக்கும்‌ நிரோதம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- மனோ நிரோதம்‌.

யக்ஷன்‌:- ஒருநாளும்‌ நீங்காத ஸங்கம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- ஸத்ஸங்கம்‌.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ நம்மை எல்லாரும்‌ விரும்புவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- கர்வத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ துக்க நிவர்த்தி? ‌

தர்மபுத்திரர்‌:- கோபத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஒருவன்‌ தனவானாவான்‌?

தர்மபுத்திரர்‌:- ஆசையை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஸுகமுண்டு?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையை.

யக்ஷன்‌:- எதனால்‌ ஸ்நேகிதர்கள்‌ விரோதிகளாவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையால்‌.

யக்ஷன்‌:- ஒருவன்‌ எதன்படி நடக்கவேண்டும்‌?

தர்மபுத்திரர்‌:- சிஷ்டாசாரப்படி.

யக்ஷன்‌:- ஸந்யாஸத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- ஸ்வதர்மாசரணம்‌.

யக்ஷன்‌:- மனோநிரோதத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அகக்கரண புரக்கரணத்‌ தண்டம்‌.

யக்ஷன்‌:- தித்க்ஷையின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- விரோதிகளிடத்திலும்‌ துவேஷமின்மை.

யக்ஷன்‌:- வெட்கத்தின்‌ லக்ஷணமென்ன?

தர்மபுத்திரர்‌:- கெட்டகாரியத்தை மறுபடியும்‌ செய்யாமை.

யக்ஷன்‌:- அறிவு என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பரம்பொருளை அறிதல்‌.

யக்ஷன்‌:- சாந்தம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சித்த ஸமாதானம்‌.

யக்ஷன்‌:- தயை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பிராணிகளுக்கு நன்மை செய்ய எண்ணுதல்‌.

யக்ஷன்‌:- கபடமற்றதென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனம்‌ சலியாதிருத்தல்‌.

யக்ஷன்‌:- ஜயிக்க முடியாத விரோதி யார்‌?

தர்மபுத்திரர்‌:- கோபம்‌.

யக்ஷன்‌:- ஸ்திரமான வியாதி எது

தர்மபுத்திரர்‌:- பிறர்‌ பொருளை விரும்பல்‌.

யக்ஷன்‌:- யார்‌ நேர்மையானவர்கள்‌? யார்‌ திருடர்கள்‌!

தர்மபுத்திரர்‌:- முறையே, பூத தயை உடையோர்‌; பிராணிகளை வருத்துவோர்‌.

யக்ஷன்‌:- அஞ்ஞானமென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திர ஞானமின்மை.

யக்ஷன்‌:- சோம்பல்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திரவிஷயத்தில்‌ மனம்‌ செல்லாமை.

யக்ஷன்‌:- துக்கம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அஞ்ஞானம்‌.

யக்ஷன்‌:- பொறுமை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- காமக்ரோதாதிகளை அடக்கல்‌.

யக்ஷன்‌:- உண்மையான கர்மானுஷ்டானம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- சித்தசுத்தி,

யக்ஷன்‌:- பிறப்பு, படிப்பு, நன்னடக்கை, வேதாத்தியயனம்‌ இவைகளுள்‌ எது பிராம்மணனுக்கு முக்கியமானது? ‌

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கை.

யக்ஷன்‌:- எது ஆச்சரியகரமானது?

தர்மபுத்திரர்‌:- உலகில்‌ ஒவ்வொருநாளும்‌ ஜனங்கள்‌ இறந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்‌. உயிரோடிருக்கிறவர்‌ இதைப்பார்த்துக்‌ கொண்டிருந்தும்‌ தாம்‌ மாத்திரம்‌ இறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணுகிறார்கள்‌. இதுதான்‌ மிகவும்‌ ஆச்சரியமானது.

யக்ஷன்‌:- எது மோக்ஷத்திற்கு வழி?

தர்மபுத்திரர்‌:- வேதங்கள்‌ பலவாறாய்‌ இருக்கின்றன. தர்க்கத்தால்‌ பயனில்லை. ரிஷிகளது அபிப்பிராயங்கள்‌ பேதப்பட்டிருக்கின்றன. மதவிஷய உண்மைகளோ இரகஸியமாக இருக்கின்றன. ஆகையால்‌ சிஷ்டாசாரமே மோக்ஷமார்க்கம்‌.

யக்ஷன்‌:- எது விசேஷமான சங்கதி?

தர்மபுத்திரர்‌:- அக்ஞானாந்தகாரம்‌ நிறைந்த உலகமாகிய கொப்பரையில்‌, ஸூர்யன்‌ என்கிற நெருப்பை இராப்பகலாகிய விறகுகளால்‌ மூட்டி, மாஸங்கள்‌, ருதுக்களாம்‌ கரண்டிகளால்‌, காலன்‌ என்ற சமயற்காரன்‌ பிராணிகளைச்‌ சமைத்துக்கொண்டே இருக்கிறான்‌. இதுதான்‌ விசேஷமான ஸங்கதி.

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌.கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

புதன், 19 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம்–வினா விடை 21

வினா 126.- இவ்வாறு காம்யகவனத்தில்‌ வஸிக்கையில்‌ தர்மபுத்திரர்‌ மனதில்‌ என்ன கஷ்டம்‌ உண்டாயிற்று? இதை யார்‌ எவ்வாறு நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்டது?

விடை.- கர்ணன்‌ அர்ஜுனனைக்‌ கொன்றுவிடுவானே என்ற பயம்‌ அடிமுதல் தர்மபுத்திரர்‌ மனதில்‌ இருந்தது. இதை யறிந்து இந்திரன்‌ தனது பிள்ளையாகிய அர்ஜுனனைக்‌ காப்பாற்றுவதற்காக கர்ணனிடம்‌, அவனோடு பிறந்த கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளை, யாசித்துப்‌ பெற்றுக்கொள்வதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 127.- இவ்விஷயம்‌ கர்ணனுக்குத்‌ தெரியவந்ததா? எப்படி? கர்ணன்‌ என்ன தீர்மானம்‌ செய்தான்‌?

விடை.- கர்ணன்‌ தகப்பனாராகிய ஸூர்ய பகவான்‌ பிராமண உருக்கொண்டு கர்ணனுக்கு இந்திரனது தீர்மானத்தைத்‌ தெரிவித்து அவன்‌ உடன்பிறந்து அவனுக்குத்‌ தோல்வி வராதிருக்கும்படி செய்யும்‌ கவச கர்ணகுண்டலங்களை இந்திரனுக்குக்‌ கொடுக்கக்கூடாது என்ற புத்திமதி கூறினார்‌. கொடையில்‌ சிறந்த கர்ணன்‌ இதற்கு ஒப்பவில்லை. உடனே ஸூர்யன்‌ நீ இந்திரனிடம்‌ இருந்து சத்ருக்களைக்‌ கொல்லும்படியான ஒரு சக்தி ஆயுதத்தை வாங்கிக்‌ கொண்டு இவைகளைக்கொடு' என்று சொல்லி மறைய, கர்ணன்‌ அவ்வாறு செய்வதாய்த்‌ தீர்மானித்தான்‌.

வினா 128.- இந்திரன்‌ எவ்வாறு வந்து என்ன செய்தான்‌?

விடை.- இந்திரன்‌ ஒருகிழப்பிராமணன்‌ உருக்கொண்டு, கர்ணனிடம்‌ வந்து கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளைத்‌ தனக்குத்‌ தரவேண்டுமென்று கேட்டான்‌. உடனே இவைகளால்‌ தனக்கு உள்ள மேன்மைகளையும்‌, இவைகளைக்‌ கொடுத்துவிட்டால்‌ தனக்கு உண்டாகும்‌ தீங்குகளையும்‌ எடுத்துக்‌ கர்ணன்‌ சொல்லி, இந்திரனைத்‌ தனது தானத்திற்குப்‌ பதில்‌ ஒரு பெரிய விரோதியைக்‌ கொல்லத்தக்க ஒரு ஆயுதம்‌ தரவேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டான்‌. இந்திரன்‌ அவ்வாறே ஒருசிறந்த பகைவனை மாத்திரம்‌ கொல்லத்தக்க இந்திரசக்தியைக்‌ கர்ணனுக்குக்‌ கொடுத்துவிட்டு கர்ணனது கவசத்தையும்‌, குண்டலங்களையும்‌ வாங்கிக்‌ கொண்டான்‌. இந்திரனது அனுக்கிரகத்தால்‌ கர்ணன்‌ இவைகளை இழந்தும்‌ முன்‌ போலவே விளங்கினான்‌.

வினா 129.- முன்‌ சொல்லியபடி திரெளபதிக்கு வந்த கஷ்டம்‌ நிவர்த்தியானதும்‌ பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌? அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ காம்யகவனம்‌ விட்டு துவைதவனம்‌ சென்றார்கள்‌. அங்கு ஒரு ரிஷியின்‌ நெருப்புண்டாக்கும்‌ கருவியாகிய அரணீக்கட்டைகள்‌ ஒரு மானின்‌ கொம்புகளில்‌ அகப்பட்டுக்‌ கொள்ள அது அவைகளைக்கொண்டு ஓடிப்போய்விட்டது. ரிஷிவந்து இதைப்‌ பாண்டவர்களிடம்‌ சொல்ல அவர்கள்‌ அந்த மான்‌ போனவழியே வெகுவிரைவாய்ச்‌ சென்றார்கள்‌. மான்‌ சில காலம்‌ கண்ணில்‌ பட்டும்‌ சில காலம்‌ மறைந்தும்‌ இவர்களைக்‌ காட்டில்‌ வெகு தூரம்‌ அலைத்து இழுத்துப்போக, இவர்களுக்குத்‌ தாகம்‌ அதிகரித்துவிட்டது. உடனே நகுலன்‌ ஒரு மரத்தில்‌ ஏறிச்‌ சுற்றுமுற்றும்பார்க்க, தூரத்தில்‌ ஒரு செழிப்பான சோலையைக்‌ கண்டான்‌; அங்கு இருக்கும்‌ தண்ணீரைக்‌ கொண்டுவருவதற்காக நகுலன்‌ புறப்பட்டுச்‌ சென்றான்‌.

வினா 130.- அந்தச்‌ சோலையில்‌ பாண்டவர்களுக்கு என்ன ஆபத்து நேரிட்டது? ஏன்‌?

விடை.- போன நகுலன்‌ அங்குத்‌ தண்ணீர்‌ இருப்பதைக்‌ கண்டு குடிக்க யத்தனிக்க அக்குளத்தைக்‌ காத்துவரும்‌ கொக்குரூபமான யக்ஷன்‌ ஒருவன்‌ அசரீரிபோல்‌ 'நான்‌ கேட்கும்‌ கேள்விகளுக்குத்‌ தகுந்த பதில்‌ சொல்லிய பின்புதான்‌ இந்தக்‌ குளத்து நீரை நீ குடிக்கவாவது வெளியே எடுத்துப்போகவாவது செய்யலாம்‌. அதற்கு முன்‌ நீயதைத்‌ தொடாதே என்று சொன்னான்‌. நகுலன்‌ இதைக்‌ கவனியாது தண்ணீரைக்‌ குடிக்க, உடனே கரையில்வந்து இறந்துவிழுந்தான்‌. நகுலன்‌ வராதது கண்டு தர்மபுத்திரர்‌ ஸஹாதேவனை அனுப்ப அவனும்‌ யக்ஷனது சொல்லைக்கவனியாது தண்ணீர்‌ குடித்தமையால்‌ கரையில்‌ இறந்து விழுந்தான்‌. இதுபோலவே அர்ஜுனனும்‌ பீமனும்‌ முறையே அக்குளக்கரைக்குப்போய்‌ இறந்து விழுந்தார்கள்‌.

வினா 131.- இவ்வாறு போன தம்பிமார்‌ ஒருவரும்‌ திரும்பி வராதது கண்டு யுதிஷ்டிரர்‌ என்ன செய்தார்‌?

விடை.- இவர்‌ மனங்கலங்கிக்‌ குளக்கரைவர, அங்குத்‌ தமது தம்பிகளிருக்கும்‌ நிலையைக்கண்டார்‌. முதலில்‌ துக்கமேலிட்டதால்‌ கொஞ்சம்‌ பிரலாபித்துவிட்டு, இவர்கள்‌ இறக்கக்‌ காரணம்‌ என்ன இருக்கலாம்‌ என்றும்‌ யோசித்தார்‌. தண்ணீர்‌ காரணமாயிருக்கும்‌ என்று அவருக்குத்‌ தோற்றவிலை. அவர்‌ உடனே தாமும்‌ இறப்போம்‌ என்று தண்ணீரில்‌ விழுந்தார்‌. அப்பொழுது வழக்கப்படி அசரீரி வாக்குண்டாகத்‌ தர்மபுத்திரர்‌ கொக்காகிய யக்ஷனைக்‌ கண்டார்‌. அவன்‌ அவரது தம்பிமார்‌ தனது கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லாது தண்ணீரைக்‌ குடித்ததால்‌ தான்‌ தானே அவர்களைக்‌ கொன்றுவிட்டதாகச்‌ சொன்னான்‌. இதைக்கேட்டதும்‌ தர்மபுத்திரர்‌ யக்ஷனைக்‌ கேள்விகளைக்‌ கேட்கும்படி சொல்ல, அவன்‌ கேட்ட கேள்விகள்‌ எல்லாவற்றிற்கும்‌ மனக்கலக்கமின்றி விடை கொடுத்தார்‌.

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?