ஞாயிறு, 29 மே, 2011

ஸ்ரீ தேசிகன் புகழ்

இதுவும் ஸ்ரீ தி. இராமஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” இதழில் (1939 செப்டம்பர் ப்ரமாதி புரட்டாசி மாதம்) எழுதியுள்ள ஒரு அருமையான கட்டுரை.

1
ஸ்ரீதேசிகன் புகழ்
ஸ்வாமி தேசிகன் தமக்குப் பூர்வாசாரியர்களாயிருந்த மஹா புருஷர்களைப் புகழ்ந்து பாடியிருக்கும் பாசுரங்களும் ச்லோகங்களும் அநேகவிடங்களில் ஸ்வாமி தேசிகன் விஷயமான ஸ்தோத்திரமாகவே த்வனிப்பன வென்பது அவைகளைப் பயிலும் திருவுடையார்க்குத் தெளிவாய் விளங்கும். ஸர்வஜ்ஞனுக்கு எப்படி ‘தாம் தம் பெருமையறியார்’ என்ற ப்ருதை ஆழ்வார்கள் ஸமர்ப்பித்தனரோ, அப்படியே ஸ்வாமி தேசிகனையும் தமக்கு ஏற்பட்ட பெரும் பெருமையைத் தமதென்று அறியாது தம்மாசிரியர்கள் பெற்ற பேறென்று கர்வங் கொள்ளாதிருப்பர் என்று பின்புள்ளார் பலரும் வியந்திருக்கிறார்கள். அப்படியிருப்பினும் பூர்வாசாரியர்களிடத்தில் தாம் புகழ்ந்த பெருங் குணங்களுக்கெல்லாம் தாம் நிதியா யிருந்தமைபற்றி அவர்களுக்கிட்ட பாசுரம் இவருக்கே பொருத்தமுடையதாய்க் காண்கிறது. இந்த ரஹஸ்யமறியாது இதை அஹங்கார காரியமென்று கருதி அபசாரப் படுவோரை, கீதாசார்யனிடத்தில் தற்புகழ்ச்சியை ஆரோபிக்குமவர் தொகையில் சேர்த்து விடுவோம்.
வையமேழும் மெய்ம்மையே வரம்பிலூழி ஏத்திலும் வரம்பிலாத கீர்த்தியை யுடைய நம் தேசிகோத்தமனை எண்ணிறந்த பேர்கள் தங்களன்பாரத் தமது சொல்வளத்தால் தலைத்தலை சிறந்து பூசித்திருக்கிறார்கள். அந்த மேன்மையை அவருடைய சொற்கொண்டே காண வேண்டுமென்ற அவாவுடைய அடியேனுக்குத் தோன்றியவற்றுள் சிலவற்றை இங்கே குறிக்க விரும்புகிறேன்.
ஸ்ரீயதிராஜஸப்ததியில் ‘காஷாயேந க்ருஹீத’ என்று தொடங்கும் ச்லோகத்தில் ‘எந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய குணகணங்களை அப்யஸிப்பவர்களுக்கு உலகம் நிறைந்த கீர்த்தி ஏற்படுகின்றதோ’ என்று பொருள்படும்படியான உத்தரார்த்தத்தில் காணும் ‘ஆஸிந்தோரநிகம்ப்ரதேச்சநியதாகீர்த்தி’யானது நம் தேசிகர் பெருமானுடையதன்றென்றால் வேறு எவருடையது என்று வினயத்துடன் வினவ விரும்புகிறேன். ‘பரக்கும் புகழ் வரும்’ என்று தொடங்கும் ஸ்ரீ அம்ருத ஸ்வாதினிப் பாசுரத்தில் கண்டபடி எந்த தேசிகர் ‘சுரக்கும் சுரபிகள்போல் சொரிகின்றனர் சொல்லமுதே’ என்ற சொல்லுக்கு இலக்காகவல்லார் நம் வேதாந்த தேசிகரல்லால்? இந்தப் பாசுரத்தின் பூர்வார்த்தத்தை ஸ்வாமி தேசிகன் விஷயத்திலே அன்வயித்துக் காட்டியிருக்கிறார் அவருடைய திருக்குமாரர், ‘ய: க்யாதிலாபபூஜாஸு விமுக:’ என்கிற ஸ்ரீ தேசிக மங்கள ச்லோகத்தில். ‘கன்றென நம்மையெண்ணிச் சுரக்கும் சுரபிகள்போல் சொரிகின்றனர் சொல்லமுதே’ என்னும் வாக்கியம் அடியேன் உள்ளத்தை உருக்குகின்றது. மடியில் வாய்வைக்கவு மறியாத இளங்கன்றுக்கு நேர் நின்று பால் பொழியும் காமதேனுவாய், வேதாந்த விழுப்பொருளை அறியமாட்டாத ஞானசூன்யரும் கற்றுக் கரையேறும்படி சிறிய சில்லரை ரஹஸ்யங்களையும் உள்ளம் புகுந்து தித்திக்கும் ஸ்தோத்திரங்களையும் அளவில்லாது உதவிய உத்தமர் யாரே பிறரொருவர்? ரஸித்து ஊட்ட உணர்வு ஏற்பட்டபிறகு யாதவாப்யுதய ஹம்ஸ ஸந்தேச பாதுகா ஸஹஸ்ர ஸங்கல்ப ஸூர்யோதய தேன்மாரியும், இன்னும் ஈடுபட்டால் அதிகரண ஸாராவளி தத்வடீகைகள் போன்ற அமுத வெள்ளமும் தோன்றும். அவரவர் கர்மாவுக்குத் தகுந்த பலனளிக்கும் ஸர்வேச்வரனைப் போலவல்லவா அவரவர் ஞானத்துக்குத் தகுந்த இன்பமளிக்கும் இக் கவீச்வரனும்! இப்படி அளவு கடந்து அளித்தவருக்குத் தானே ‘போற்றியுகப்பதும், புந்தியிற்கொள்வதும், பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே’ என்ற பாசுரம் பொருந்தும்! ஏனையோர் விஷயத்தில் இந்தப் பாசுரம் ஔபசாரிகமாகப் போவதன்றி வந்திக்கப் பேசியது நிந்திக்கப் பேசியதோடொக்கும். ‘ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே’ என்ற ச்லோகத்தில் வர்ணிக்கப் படும் ஆசார்ய லக்ஷணங்களெல்லாம் ஒருங்கே தோன்றுவதும் தேசிகனிடத்துத்தான். ஒவ்வொரு அடைமொழியையும் ஆழ்ந்து அனுபவித்தால் நம் ஆசார்யோத்தமனுடைய விஷயந்தானென்று விளங்கும்.
இவர் விஷயத்தில் பெருமாள் எவ்வகை ப்ரீதி செய்தாரென்பதையும் இவருடைய அருளிச் செயலைக் கொண்டே அறியலாம். யுத்தரங்கத்தில் முழங்கி வெற்றி அடைவிக்கும் பாஞ்சசன்னியமாயும், சித்தரங்கத்தில் மிழற்றி உணர்வையுருக்கும் வீணையாயுமன்றோ எம்பெருமான் இவரை கையாண்டதாக இவர் பேசிக் களிப்பது! அதிகரண ஸாராவளியில் பரமதப்போர் பூரித்தபோது பாஞ்சசன்னியமாயும், தயாசதகத்தில் கேட்பவர் உள்ளத்தைப் பூரித்தபோது வீணாவிசேஷமாயும் தம்மைப் பேசிக்கொள்ளும் பொருத்தம் ஒன்றே போதுமே இவர் திறத்து நம்மை அடிமையாக்க!
அதிகம் பேசியென்? தமது அவதார ரஹஸ்யத்தையும் அவர் உணர்வித்துத்தான் நாமறிய வேண்டியிருக்கிறது. ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் தாம் கண்டாவதாரமென்பதை அறிவாளிகளின் உத்ப்ரேக்ஷையாக ஸாதிக்கிறார். உண்மையில் தாம் எம்பெருமானுடைய அவதார விசேஷமென்பதை ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் இறுதியில் அருளிச் செய்கிறார். ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிய ஜனங்களைக் கரையேற்றுவிப்பதற்காக நாராயணன் தேசிகவேஷம் போட்டதாக ஆசார்யக்ருத்யாதிகாரத்தின் இறுதி ச்லோகமான ‘அத்யாஸீந துரங்கவக்த்ர’ என்பதில் ஸித்தாந்திக்கப் பட்டிருக்கிறது. இதற்குப் பின்னும் ஸ்வாமி தேசிகன்தான் பீதகவாடைப் பிரானாகிய பிரமகுருவென்பதில் ஐயமா? ‘ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸனமப்யுபேயா:’ என்று ப்ரார்த்தித்ததற்கிணங்கி ஸ்ரீ ஹயக்ரீவன் அனுக்ரஹித்த வேதாந்தசார்யாத் இஹ தேவதாம் ஸமதிகாம் அந்யாம் ந மந்யாமஹே, அதாவது தேவு மற்றறியோம் தேசிகனன்றி.
                                                                                    ----தி. ராமஸ்வாமி தாஸன்