மொழிவார் மொழிவன மும்மறை
யாகும் அயிந்தையில் வந்து
இழிவார் இழிக வென்று
இன்னமுதக் கடலாகி நின்ற
விழிவார் அருள்மெய்யர் மெல்லடி
வேண்டிய மெல்லியள் மேல்
பொழிவார் அனங்கர் தம்
பூங்கரும்புந்திய பூமழையே. (3)
மொழிவார் -- வார்த்தை சொல்பவர்கள்; மொழிவன -- பேசும் வார்த்தைகளெல்லாம்; மும்மறையாகும் -- மூன்று வேதங்களே என்று சொல்லும்படியாயிருக்கும்; அயிந்தையில் -- திருவஹீந்த்ரபுரத்தில்; வந்து -- (அர்ச்சாவ தாரமாக எழுந்தருளி); இழிவார் -- இறங்க (அதாவது அனுபவிக்க) விருப்ப முடையவர்; இழிக என்று -- வந்து அனுபவியுங்கள் என்று (சொல்வது போல்); இன்னமுதக் கடல் ஆகி --- (அனுபவிப்போருக்கு) இனிமையான அம்ருத ஸமுத்ரம் என்னும்படி; நின்ற -- நின்றுகொண்டிருக்கும்; (இதற்கு மெய்யர் என்பதோடு அந்வயம்); வி.ழிவார் அருள் -- திருக்கண்களில் பெருகும் கிருபையையுடைய ; மெய்யர் -- அடியவர்க்கு மெய்யனாகிய ஸ்ரீதேவநாத னுடைய; மெல்லடி --- தாமரைப்பூப்போல் மிருதுவான திருவடியை;
வேண்டிய --- விரும்பிய; மெல்லியள்மேல் -- மிருதுவான சரீரத்தையுடைய இந்த ஸ்திரீயின் மேல்;அனங்கர் -- மன்மதனார்; தம் பூங்கருப்பு உந்திய --- தமது அழகிய கரும்பாலான வில்லிலிருந்து கிளம்பிய; பூமழையே --- புஷ்ப வர்ஷத்தை; பொழிவார் --- வர்ஷிப்பார்.
ஸ்ரீமந்நிகமாந்த மஹா தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் ஆழ்வார்களுடைய திவ்யப்பிரபந்தங்களை அடியொற்றியே அவதரித்திருக்கின்றன. பக்தி விஞ்சியபோது ஆழ்வார்கள் தாமான தன்மையை மறந்து ஸ்திரீ ஸ்வபாவத்தை ஏறிட்டுக் கொண்டு சிங்காரப் பேச்சுக்களாலே தங்களுடைய பக்தி பாரவச்யத்தைப் பாசுரமிட்டிருக்கிறார்கள். மும்மணிக் கோவையில் மூன்று பாசுரங்கள் அதே ரீதியில் அமைந் திருக்கின்றன. அவற்றுள் இது முதல் பாசுரம். ஆறாவது ஒன்பதாவது பாசுரங்களும் இங்ஙனமே இருப்பன. பக்தி யோக நிஷ்டனுக்குச் சொன்ன பரபக்தி பரஜ்ஞானம் பரம பக்தி என்ற தசைகள் பிரபன்னனுக்கும் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவும் இம்மூன்று பாசுரங்கள் பாடப்பட்டன வாகத் தோன்றுகிறது. ஸாத்விக பரிசீலனம் சாஸ்திராப்பியாஸம் முதலியவற்றால் பகவத் விஷயத்தில் வரும் பிரீதி விசேஷம் ஸர்வேச்வரனைத் தெளிய அறியவேண்டும் என்ற ஆசைக்குக் காரணமாய் பக்தி என்று பேர் பெற்றிருக்கும். இந்த பக்தியினால் வரும் பரபக்தி எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகக் கொண்டதாய் ஸ்ம்ருதி ரூபமாய் ஸாக்ஷாத்காரம் போல் தெளிவையுடைத்தாய் நிரதிசய ப்ரீதிரூபமான த்யான விசேஷம். இந்த பரபக்தி பகவானை ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்ற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “ஒரு நாள் காண வாராய்” என்று புலம்பும்படி பண்ணி, பகவத் பிரஸாதத்தாலே அக்காலத்தில் மட்டும் இருக்கும் பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை யுண்டாக்கும். இந்த ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. நிரதிசயமான பகவத் ஸ்வரூபத்தைக் கண்டவாறே பெற்றல்லது தரிக்கவொண்ணாத பிரீதி விசேஷமே பரம பக்தி. இந்தப் பிரபந்தத்தில் மூன்றாவது, ஆறாவது, ஒன்பதாவது இம்மூன்று பாசுரங்களில் இந்த மூன்று தசைகளையும் முறையே ஸ்ரீதேசிகன் அனுபவிக்கிறார். பக்தி ச்ருங்காரமாக பரிணமிக்கிறது என்பதும் ஆத்மாக்களுக்குப் பரமாத்மாவைக் குறித்து ஸ்திரீபாவம் ஏற்படலாம் என்பதும் பிரமாணங்களிலிருந்து கிடைக்கிறது. ஸ்ரீதேசிகனே “பக்தி: ƒருங்கார-வ்ருத்த்யா பரிணமதி” என்று த்ரமிடோப நிமிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும் “பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த:” என்று கோதாஸ்துதியிலும் அருளிச் செய்திருக்கிறார். புருஷோத்தமனின் அழகும் ஆடவரும் பெண்மையை அவாவும்படியான தொன்றன்றோ˜
ஒரு நாயகி ஏற்ற நாயகனை வரித்து அவனுடன் கூடப் பெறாதபோது மன்மத பாணங்களால் அடியுண்டு வருந்து வதும் அவனை நினைந்து நைந்து உருகுவதும் ச்ருங்கார ரஸ ப்ரதானமான காவ்யங்களில் வர்ணிக்கப்படும் விஷயங்கள். அந்த முறையையும் விசேஷித்து அதில் தமிழர்கள் துறை யையும் பின்பற்றி ஸ்ரீதேசிகன், இங்கு தெய்வநாயகனைப் பெற ஆசைப்பட்டு அவ்வாசை பெருகித் தன்னிலையை மாற்றிப் பெண்ணிலையை அடைவித்தபடியையும் அப்போது விரஹத்தை விருத்தி செய்யும் மன்மத பாணங்களாலே அடியுண்டு வருந்தும் நிலையையும் ஒரு தோழியின் பாசுரத் தாலே தெரிவிக்கிறார். ஸ்ரீதெய்வநாயகனிடம் மையல் கொண்டு ஸ்திரீபாவத்தை அடைந்தமை “மெல்லடி வேண்டிய மெல்லியள்”என்பதால் காட்டப்பட்டது. அவனைக் கூடப்பெறாது அதனால் உண்டான விரஹ வேதனையை மன்மதன் தன் புஷ்ப பாணங்களை வர்ஷித்து விரித்தி செய்கிறான் என்பதை “அனங்கர் தம் பூங்கரும்புந்திய பூமழையே பொழிவார்” என்று பேசுகிறார். அனங்கனாகை யால் அவனுக்கு சரீரம் இல்லை. சரீரம்இருந்தாலன்றோ சரீரம் படைத்தார் படும் வருத்தத்தை உணரக்கூடிய மனமிருக்கும். ஒன்று இரண்டு பாணங்களை எய்தானென்ப தில்லாமல் இடைவிடாது பூ (மன்மதசர) மழையாய்ப் பொழிந்து விரஹத்தை மறக்கவும் ஒட்டாது செய்கிறான் என்பது பொருள் மன்மதனுக்குக் கரும்புதான் வில் என்றும் புஷ்பங்களே பாணங்கள் என்றும் பிரஸித்தம். அனங்க னாயிருந்தும் சரீரம்கொண்டு செய்யவேண்டிய கார்யமான எய்தலைச் செய்கிறான்; துன்பத்தை உண்டுபண்ணும் இயல் பில்லாத புஷ்பங்களாலே வருத்துகிறான்; பஞ்சபாணம் மட்டுமுடையவன் பாணவர்ஷத்தைச் செய்கிறான்; இவ்வள வும் வருத்தம் பொறா ஒரு மெல்லியள் மேல் என்ன விபரீதம் என்று தோழி கலங்கிக் கூறும் பாசுரமாயிருக்கிறது இது.