சனி, 22 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

9.துறவு.

மூவகையாம் பகையறுத்து முக்குணத்து
       ளிரண்டகற்றி யொன்றி லூன்றி
மாவருசீ ரகலத்தான் மாலோன்றன்
       தனந்தன்னைத் தன்பா லீர்த்த
மீவரிய விசயத்தான் வேய்வருமுக்
       கோலோடுந் துவர தேற்றுப்
பாவலர்தங் கோவாகிப் பாட்டன்றன்
       ஆணையதே பரவ வாழ்ந்தான்.                                 .82.

ஆளவந்தார் துறவேற்று நாதமுனியின் ஆணையைப் பரப்பி வந்தமை. மூவகை ஆம் பகை – உயர்குலப் பிறப்பு, மிகுந்த செல்வமுடைமை, கல்வியுடைமை இவை மூன்றும் மக்களுக்கு அகங்காரத்தை விளைவிப்பதால் பகை எனப்படுவன. முக்குணத்து இரண்டு அகற்றி – சத்துவம், ரஜஸ், தமஸ் என்பனவற்றுள் பின்னிரண்டை நீக்கி. ஒன்றினில் ஊன்றி – சத்துவத்தில் பொருந்தி. மா வரு சீர் …… மாலோன் – பிராட்டி பொருந்துவதால் பெருமையுற்ற மார்பினனாகிய திருமால். மீ அரிய விசயத்தான் – மிகவும் அரிதான வெற்றியுடையவன். வேய்வரு முக்கோல் --- மூங்கிலாலாகிய முக்கோல். துவர் – துவராடை.

நிறைமதியின் நிலவெனவே நரையுற்ற
        நின்மலனாம் மணக்கால் நம்பி
குறையறவே குலையவென நாதமுனி
        தன்கனவிற் கூறக் கேட்டுக்
கறையறவே கலியிதனைக் கடியவென
        வருவான்றன் கவினார் மூர்த்தி
செறிகதிரன் முனிவனிடஞ் சேர்த்”தமல!
         செல்வமென வுந்தை முந்தை,                                         .83.

நாதமுனி நம்மாழ்வாரிடம் பெற்ற திருவுருவை மணக்கால் நம்பி ஆளவந்தாரிடம் சேர்த்தமை. குறை அறவே குலைய என நாதமுனி தன் கனவில் கூறக் கேட்டு. நாதமுனி தம் மனத்திலுள்ள குறையை ஓதி, இது நீங்குமாறு இத்திருவுருவை ஆளவந்தாரிடம் சேர்க்குமாறு கனவில் பகர, இதுகேட்டு, கறை அறவே ------- கலியின் கொடுமை, விடம் நீங்குமாறு. கவின் ஆர் மூர்த்தி – அழகு நிரம்பிய திருவுரு. செறிகதிரன் --- ஒளி வாய்ந்த திருமேனியுடைய மணக்கால் நம்பி.

“சடகோப னருள்பெய்யத் தான்பெற்ற
        தமிழோடுங் கலியிற் பொங்கும்
அடமோய வவதரிப்பா னொருவன்றன்
         னணியுருவங் கொண்டா னிஃதே
திடமாக நீயிந்தச் சீரியனைக்
         காணும்பே றுடையை யென்றான்
இடவாகு மிதுவுன்றன் னுள்ளத்து
         ளுண்மையிது தேர்வா” யென்றான்.                                  .84.

நம்பி பகர்ந்தது: கலி கெடுமாறு தோன்றும் புருடனை நீ நேரிற் காணும் பேறு வாய்ந்துளை. சீரியன் – சிறந்தவன். இது தன்னை உன் உள்ளத்து இட ஆகும். இதனை நீ உள்ளத்தில் கொள்வாய். இது உண்மை தேர்வாய் -------.

மறைக்கடலை மாறன்றன் நாவாகும்
        மந்தரத்தால் திரித்துப் பெய்த
பெறற்கரிய வானமுதா மாயிரத்தின்
         வளனெல்லாம் மணக்கால் நம்பி
மறைக்கடல்யா முனமுனிக்குத் தானோதி
         வலன்நாத முனிவன் றன்னால்
முறைப்படுநற் றரிசனத்தைக் காக்கவெனத்
        தானோதி முத்த னானான்.                                                       .85.

மணக்கால் நம்பிஆளவந்தாருக்குத் திருவாய்மொழியின் பொருளை ஓதி, நாதமுனியால் உருவாக்கப் பெற்ற அறநெறியைப் பாதுகாக்க ஆசையிட்டு விண்ணெய்தினார். மறைக்கடலை மாறன், தன் நா ஆகும் மந்தரத்தால் திரித்துப் பெய்த --- மறையாகிய ஆழ்கடலை மாறன் தன்னுடைய நாவாகிய மந்தரத்தாற் கடைந்து, குவாலாக வெளியிட்ட. வான் அமுது ஆம் ஆயிரத்தின் --- சிறந்த அமுதமாகிய ஆயிரம் பாக்களின் . வலன் – வல்லவன். முத்தன் ஆனான் --- மண்ணினை நீத்து விண் சென்றான்.

மாதவன்கட் பத்தியெனும் வளநாட்டின்
        தனிமன்னாம் முனிவன் றன்பால்
போதமுறு மேலவர்கள் பெரியதிரு
        மலைநம்பி பெரிய நம்பி
மீதகவின் திருக்கோட்டி யூர்நம்பி
        திருக்கச்சி நம்பி மேலான்
தீதறவே வந்துதித்த தெருள்மாற
        னேர்நம்பி யன்றிச் செல்வ,                                                    .86.

குரவரனாந் திருமலை யாண்டானும்
         மன்தெய்வ வாரி யாண்டான்
உரவரவர் புகழ்வான மாமலையாண்
        டானன்றிச் சீய னாண்டான்
விரதியர்தங் கோனீச னாண்டானும்
         விறல்வளவ னனைய பல்லோர்
வரமுடைய மதியுடையார் வணக்குடனே
          சீடரெனச் சார்ந்தார் தாமே.                                                .87.

மாதவன் …..மன்  -- மாதவனிடம் பக்தி எனப்படும் தனி நாட்டிற்கு இறைவன், அஃதாவது பக்தர்களுள் முதல்வன். போதம் – அறிவு. சீடர்கள் – பெரிய திருமலை நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி, மாறனேர் நம்பி, திருமலையாண்டான், தெய்வ வாரியாண்டான், வானமாமலையாண்டான், சீயனாண்டான், ஈசனாண்டான், சோழ மன்னன் மற்றும் பலர். மன் தெய்வ வாரியாண்டான் --- சிறந்தவனாகிய தெய்வ வாரியாண்டான். உரவர் அவர் புகழ் வானமாமலையாண்டான் ---, உரவர் – அறிவுடையோர். விரதியர் – தவமுடையவர்.

நாதமுனி தானருளப் பெற்றவொரு
         யோகத்தில் நட்ட சீரான்
மாதவனாங் குருகைக்கா வலப்பன்பால்
        யாமுனனு முயோகு கொள்ள
ஆதரத்தி லணுகியிட வன்னவனும்
         முறியொன்றில் தன்னா ளோயும்
போததனைக் குறித்தவணே போதவென
       இயம்பினனாற் பரிவ தோங்க.                                                   .88.

நாதமுனியிடம் யோகத்தைப் பயின்ற குருகைக்காவலப்பன்பால் யோகம் பயில யாமுனர் செல்ல, அவர் ஒரு நாளை முறி ஒன்றிற் குறித்து அன்று தம்மைக் காணுமாறு கூறினார். சீரான் – யோகச் செல்வமுடையவன். மாதவன் – அரிய தவத்திலுற்றவன். போது அதனை – காலத்தை. அவணே – அவ்விடத்திற்கே.

திருவனந்த புரத்துறையுந் திருமாலைத்
              தொழவெனவே நடந்த பத்தித்
திருவனந்த நகர்தன்னில் தாதருடன்
             தொழுதிருப்பக் காவ லப்பன்
தருமனந்த நாளதனைக் குறித்தமுறி
         தனைநினைந்து பார்த்த யர்வே
தருமனந்த கைத்திடவே யாமுனனும்,
         “அந்நாளு மின்றே” என்றான்.                                                     .89.

யாமுனர் திருவனந்தபுரம் சென்று, அங்கு ஒரு நாள் அந்த ஓலையைப் பார்க்கக் குருகைக் காவலப்பன் குறித்த நாள் அதுவாக உணர்ந்து வருந்தினார். பத்தி திருவன் – பக்தியாகிய செல்வத்தை உடைய யாமுனர். அந்த நகர் தன்னில் --- காவலப்பன் தருமன் அந்த நாளைக் குறித்த முறிதனை என்றியைக்க. அயர்வே தரு மனம் தகைத்திடவே --- வருத்தத்தைத் தரும் எண்ணம் இவரை வாட்ட.

“கெட்டேன்நா னணித்திலனே கிளரொளியான்
          அவனென்பாற் பெய்யு மருளுக்
கெட்டேன்நா னவனன்றி யுளராரார்
          உயோகிதனை யோர்வா ரனத்தப்
பட்டேன்நான் பிதாமகனார் திருவுளமுங்
           கலங்கிடுமே படியின் பாலன்
பட்டேன்நான் பாருய்ய இதுதானும்
          பரப்பிடுவாய்ப் பற்றே” னென்றான்.                                           .90.

யாமுனர் வருந்திக் கூறியது. நான் அணித்திலன் – குருகைக்காவலப்பன் அருகில் இல்லையே. அவன் என்பால் பெய்யும் அருளுக்கு எட்டேன் -----. அவன் அன்றி உயோகு இதனை ஓர்வார் ஆர்--------. அனத்தப் பட்டேன் – அனர்த்தமுற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் --- பாரோர் உய்யவென நான் யோகம் பயில விரும்பினேன். இது கூடாததால் இந்த விருப்பம் குலைந்தது. பார் உய்ய இதுதானும் பரப்பிடு வாய்ப்பு அற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் -------.

மெலிவெழச் சீட ரோடும் மீண்டன னரங்க மையன்
கலியிறத் தோன்று மேலோன் றன்னையே காணு மாசை
மலிவுறு மனத்த னாகி மாறனி னருணி னைந்து
பொலிக வென் றோது பாக்கள் தம்பொருட் புந்தி யுய்த்தான்.           .91.

யாமுனர் திருவரங்கத்திற்கு மீண்டு, கலிகெடத் தோன்றும் புருடனைக் காணும் ஆசையுடையவராய், இப்புருடனைப் பற்றி தம்மாழ்வார் “பொலிக” என்றருளிய பாக்களைச் சிந்தனை செய்து வந்தார். அருள் + நினைந்து = அருணினைந்து.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

Bingle

Do you often search on the net? Do you know you can simultaneously search in Google and Bing, the two great search engines?  Go to http://bingle.nu , type your search term and hit at the yellow "bingle" on the right. I searched for "Thiruppullani" and the result is below. Is it not helpful?


செவ்வாய், 18 ஜனவரி, 2011

தினமணியில் படித்தேன் பகர்ந்தேன்


புதுக் குறள் பத்து | photoon | Dinamani

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து 
நல்லோர்மன் னித்தருள்வீ   ரே !

பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல்
மலையளவு ஊழல் எனினும் மறப்போம்
அலைக்கற்றை அவ்வளவு தான். (1)

கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்
விற்பனையில் பார்த்ததைத் தான் (2)

விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்
நிலையாக நோட்டுவரும் போது? (3)

இலவசம் இல்லை இவன்வசம் இல்லை
பலமிழந்த பார்வையிது காண்  (4)

தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்
வைவேனே வையத்தைத் தான் (5)

வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்
பொங்காதோ எந்தன் உளம் (6)

செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்
செய்யாச் செயலெனவே புகல் (7)

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
மனத்தை உறக்கத்தில் வை  (8)

புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்
எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)

புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்
வித்தாச்சே எங்கள்கொள் 'கை' (10)

© தினக்குரலன் மணிக்குறளன்

வைணவ ஆசாரியர்கள்

8. திருவரங்கனைத் தொழுதமை

மறையொடு தமிழு மோதி வழியெலாம் மதுர நாதம்
நிறைவுற மணக்கால் நம்பி நடந்தனன் நிலவெ ழுப்பி
இறையவன் யாமு னன்பின் வளர்தரு மிரவி யேபோல்
நெறியினன் முந்தை யீந்த வைப்பினை நேடிச் சென்றான்.
                        .72.

             ஆளவந்தார் நம்பியைத் தொடர்ந்து சென்றார். நம்பி நடக்கும்போது எங்கும் அவரது நிலவு பரவியது. இவரைத் தொடரும் ஆளவந்தார் வளரும் சூரியனைப் போல இயங்கினார். முந்தை – பாட்டன், நாதமுனி. வைப்பு – பொருள்.

தெருளதன் திரிபு தானும் மறலிதன் சினமு மென்றும்
அருகுறாப் பெற்றி வாயு மரங்கமா நகரி லெங்கும்
வருபுனல் நீத்த மேபோல் வளர்தரும் பத்தர் மண்ட
நிருபன், “என் பாட்ட னெற்கே வைத்ததாந் நிலனி” னென்றான்.
                .73.
          

    திருவரங்கத்தில் அடியார்களது குழுவினைக் கண்ட ஆளவந்தார், “எனது பாட்டனார் எனக்காக வைத்தருளிய தலம் இதுவே” என்றார். பெற்றி – பெருமை. நல்லறிவு மங்குதலும் யமனது சினமும் காணலாகாதன இத்தலத்தில். அருகு உறா –அணுகாதவாறு. எற்கு – எனக்கு. என் பாட்டன் எற்கு வைத்த நிலன் இது ஆம் -----------.

வளைமதி ளேழு தம்முள் வளைதரு முறைவி னுள்ளே
வளைவணப் பணியின் பாற்கண் வளர்தருங் கோம ளத்தை
வளைதனு நம்பி காட்ட வளர்தரும் பத்தி வாய்ந்தான்
வளைதலே காணாப் புத்தி யாமுனன் மகிழ்ந்து கண்டான்
.                              .74.

            நம்பி திருவரங்கப் பெருமானை ஆளவந்தார்க்குக் காட்டியமை. வளை மதிள் – சூழ்ந்துள்ள மதிள்கள். உறைவு – ஆலயம். வளை வண பணி – சங்குபோல் வெளுத்த ஆதிசேஷன். கோமளத்தை – கண்ணுக்கு இனியனை. வளை தனு – வயதால் வளைந்த மேனியுடைய. வளைதலே காணா புந்தி – கோணாத புத்தி.

விதுமுகன் நம்பி மிக்கோன் தன்கரம் பற்றி, “மேலோய்!
மதிநலன் வாய்ந்த மாண்பர் வகுத்தநற் றமிழை யீட்டும்
மதுகர முய்த்த தேனை மாந்துமிம் மிறைவன் காண்டி
நிதியிதே குரவ னென்பால் வைத்ததாங் கொள்க” என்றான்.
                            .75.

             நம்பி ஆளவந்தாரிடம், “ இவன்றான் நான் சொல்லிய நிதி” என்று இறைவனைக் காட்டினார். விதுமுகன் நம்பி – சந்திரன் போன்ற முகம் வாய்ந்த மணக்கால் நம்பி. மதிநலன் வாய்ந்த மாண்பர் – ஆழ்வார்கள். தமிழை – அருளிச் செயல்களை. ஈட்டும் – சேர்க்கும். மதுகரம் – வண்டு. உய்த்த தேன் – வெளியிட்டருளின நாலாயிரத்தின் சுவை. காண்டி – காண்பாய். குரவன் (நாதமுனி) என்பால் வைத்த நிதி இது ஆம், கொள்க.

தூமனன் நம்பி காட்டச் சூழ்தருஞ் சோதி தன்னுள்
தாமரை மலர டங்கச் சார்ந்தசெவ் வடிகள் கண்டான்
ஏமநற் சோதி யேந்துந் திருவரை யாடை கண்டான்
தேமலர் பூத்த வுந்தி தன்னொடுஞ் செல்வி தோயும்,                                      .76

மணியனை மார்பு கண்டான் வதமு மிலங்கக் கண்டான்
மணிமயக் குழைகள் கண்டான் மலர்தருங் கண்கள் கண்டான்
பணிமிசை யம்பு யக்கை படர்புகர் மௌலி காட்டிப்
பணிமினீர் இவனே நாதன் என்பபோற் படியக் கண்டான்.
                                     .77.

மலர்மிசை யெழுந்த கோனும் மலைமகள் பங்கி லுற்ற
சலம்புனை சடையி னானுஞ் சதமகன் றானு மேத்தும்
நலம்பெயு மிறைவன் றன்னை நம்பிதன் னருளிற் காட்ட
மலர்தருங் கண்ணிற் கண்டு மாந்தின னெழிலை யன்பன்
.                                       .78.

           ஆளவந்தார் இறைவனை ஆபாதசூடம் அநுபவித்தமை. தூமனன் – தூய மனத்துடைய ஆளவந்தார். ஏம நல் சோதி – பொன்னின் ஒளி. மணி அனை – மணியையொத்த; பணிமிசை – ஆதிசேடன்பால். (கை) படர் புகர் மௌலி காட்டி …. நாதன் – பரந்த சோதி வாய்ந்த திருமுடியைக் காட்டி, இம்முடியுடையவனே நாதன். கை … என்ப போல் படியக் கண்டான்-------. மலர்மிசை…..கோன் – பிரமன். மலைமகள் – பார்வதி தேவி. சடையினான் – பரமசிவன். சதமகன் – இந்திரன்.

படியிலாக் கருணை காட்டும் பரனையிக் குரிசிலேத்தி,
”மடிவிலா வான நீத்து வளநதிப் புளினந் தன்னிற்
படிறுவாய் மக்க ளுய்யப் படிந்தனை பாந்தள் பாலே
அடியனேன் நின்னை யண்டி யுய்ந்திட வருள்க வண்ணால்!
                                 .79.

“மண்ணுளா ருய்ய வாகும் மறைதமை யளித்த னைநீ
பண்ணவன் மரபி லென்னைப் பண்பெழத் தோற்றுவித்தாய்
திண்ணமாம் ஞான மேற்றான் திருவடி நிழலி லென்னை
எண்ணலா வகையி னுய்த்தே உயர்த்தினை இறைவ!” என்றான்.
                         .80.

             இறைவனிடம் ஆளவந்தார் தமது மகிழ்ச்சியைக் கூறி, தாம் இவனையே யண்டி வாழவேண்டுமென இறைஞ்சியமை. வானம் நீத்து . வளநதி – காவிரி. புளினம் – மணல்திட்டு. படிறு – வஞ்சகம், கொடுமை. பண்ணவன் மரபு – பெரியோனாகிய நாதமுனியின் வமிசம். திண்ணமாம் ஞானம் ஏற்றான் – குலையாத அறிவு வாய்ந்த மணக்கால் நம்பி.

மனையோ வாழ்சுழல் மகவோ
         வன்திரை உறவோ கடுவளியாய்
வினைசே ரைம்பொறி திமியே
           யாய்மலி வெள்ளப் பவக்கடலை
இனிதே கடந்துய்யப் புணையாய்
          வருதிரு மாலோ னிணையடியே
துளிநீர் புகலெனத் தூயோன்
          யாமுன னேற்றான் தொழுதனனே.
                                                                  .81.

             ஆளவந்தார் திருமாலின் திருவடியே புகலாகப் பற்றியமை. இல்லற வாழ்க்கை ஓர் ஆழ்கடல். மனை ஆழ் கடல் –. மகவு – மக்கள். வன் திரை – கொடிய அலைகள். உறவு – சுற்றத்தார். கடு வளி – வலி மிக்க காற்று. வினைசேர் ஐம்பொறி – வினைகளைக் குவிக்கும் ஐந்து பொறிகள். திமி – பெரிய மீன். பவம் கடலை – சம்சாரமாகிய பெருங்கடலை. புணை – தெப்பம். “துன்பக்கடற் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன்” என்ற சூடிக் கொடுத்த நாச்சியார் வாக்கு நோக்குக. கடந்து உய – கடந்து உய்ய.

 

திங்கள், 17 ஜனவரி, 2011

யாஹூவின் ஆண்டவன் குழுமத்தில், சென்னை ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தின் வீடியோ வெளியாகியிருந்தது. ஆண்டவன் குழுமத்தில் பார்க்க இயலாதவர்களுக்காக அந்த வீடியோ இங்கே.

குருபரம்பரை -- நாட்டேரி ஸ்வாமியின் 17-1-2011 உபந்யாஸம்.

குருபரம்பரை உபந்யாஸம்  
17-1-2011 அன்று காலையில் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸத்தினை இங்கு கண்டு கேட்டு ரஸிக்கலாம்.


MP3 ஆக வேண்டுவோர் இங்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA