வியாழன், 7 மே, 2020

அமலனாதிபிரான் அனுபவங்கள் பாசுரம் 6

துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்
அண்டரண்ட பகிரண்டத்தொருமா நில மெழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண்டீ ரடியேனை யுய்யக் கொண்டதே.    (6)

துண்டம் -- ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான): வெண் பிறையன் --வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய: துயர்--(பிச்சை எடுத்துத் திரிந்த) பாதகத்தை: தீர்த்த‌வ‌ன் – போக்கினவனும்: அம் சிறைய வண்டு .... அழகிய சிறகையுடைய வண்டுகள்: வாழ் – வாழ்தற்கிடமான பொழில் சூழ் -- சோலைகள் சூழப் பெற்ற: அரங்கம் நகர்—திருவரங்கப் பெரு நகரிலே: மேய .. பொருந்தியிரா நின்ற: அப்பன் .... ஸ்வாமியுமான ஸ்ரீரங்க நாதனுடைய்.: அண்டர் –அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும் அண்டம் ... அண்டங்களையும் ப‌கிர‌ண்டம் –அண்டாவர‌ண‌ங்களையும்: ஒரு மாநிலம் -- ஒப்பற்ற மஹாப்ருதிவியையும்: ஏழுமால் வரை ...... எழு குலபர்வதங்களையும்: முற்றும் -- சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவ‌ற்றை யும்: உண்ட – அமுதுசெய்த‌:கண்டம் கண்டீர் – திருக்கழுத்துக்கிடீர்: அடியேனை -- தாஸனான என்னை: உய்யக் கொண்டது....... உஜ்ஜீவிப்பித்தது.-

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் :- (1) இங்கே கண்டத்தின் அநுபவம். நீலகண்டருடைய கண்டம் உயர்ந்ததென்பர். ஜ‌நங்களை நாசம், செய்யவந்த கால கோடி விஷத்தைப் பாநம் செய்து உலகத்தைக் காப்பாற்றித் தம் கண்டத்திற்குள் விஷத்தையடக்கியதால் பொன் வர்ணமாயிருந்த கண்டம் நீலமாய்க் கறுத்ததென்பர். அவர் பெருமைக்கும் மேற்பட்ட பெருமையைக் காட்டுகிறார். அவருக்கேற்பட்ட குருபாதகத்தைத் தீர்த்தவரென்கிறார். பாதகம் விஷத்திலும் கொடியவிஷம்.

(2) காலகோடி விஷத்தையுண்டதால் நீலகண்டர் கண்டம் பெருமை பெற்றது. அவர் கண்டத்தையும், அவரையும், உலகத்திலுள்ள ஸகல விஷங்களையும் அண்ட பஹிரண்டத்து ஒருமாநில மெழுமால்வரையும் முற்று முண்டகண்டம் எத்தனை பெருமையுடயதென்று நீரே காண்பீரென்கிறார். 3) விஷத்தால் கண்டம் நீலமாயிற்று. இவர் திருமேனி முழுவதும் ஸ்வபாவ மாகவே நீலம். 'முடிவில்லதோ ரெழில் நீலமேனி ஐயோ ' என்று மேலே பாடுகிறார்.

(4) பாரமாய என்பழவினையறுப்பவர் மட்டுமல்ல. நீல‌கண்டருக்கும் வினைத் துயர் தீர்த்தவரென்கிறார்.

5) அயனைப் படைத்ததோரெழில் என்று உந்தியை வர்ணித்து அயனிலும் பெரியார் என்றார். இங்கு துண்ட வெண்பிறையாரிலும் பெரியாரென்கிறார்.

(6) சந்த்ரன் பகவானுடைய மனத்திலுதித்தவர். பிறையைச் சூடுவதால், பகவானுடைய மனத்தில் உதிக்கும் திருவுள்ளத்தைத் தலையால் தாங்குகிறார் என்றும் த்வநிக்கிறது. தலையில் வெண் சந்த்ரன், அக்நி வர்ணமான செஞ்சடை, கங்கை நீர்ச்சுழல், கண்டம் நீலம், பொன்னார் திருமேனி என்றிப்படிப் பலவர்ணங்கள். பெருமாள். திருமேனி முழுதும் கருமேக வண்ணம், அதிலும் கேசம் மைவண்ணம்.

7) ' பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே, கபாலனன் மோக்கத்துக்கண்டு கொண்மிண்' என்ற திருவாய் மொழியில் பரத்வநிர்ணய ப்ரகரணத்தில் அநுபவம். .

அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர்மேய அப்பன்:-

(1) அவன் கருமைபோல் அவனைப் பாடும் வண்டுகளும் கரிய; அப்பெருமாள் பாடகரும் பெருமாள் போன்ற வண்ணத்தவர்.

(2) அரங்கநகரில் பாடும் வண்டுகள் வாழ்வண்டுகள்; வாழாட்பட்டு நின்றவை.

(3) மதுகரர் ஸந்யாஸிகள்; திருவடித்தாமரைத் தேனைப் பருகி இன்புறுமவர்; ஞாந கர்மங்களாகிய இரண்டு சிறகுகளை உடையவர். सारंगानां पदाम्बुजम् (ஸாரங்காநாம் பதாம்புஜம்) என்று திருவவடித்தாமரைத் தேனையருந்தி இன்புறுவர் பக்தரென்றார் சுகப்ரஹ்மரிஷி (பாக‌வ‌த‌ம்1,11,26) ' ஸாரங்கம் ' என்று வண்டுக்குப் பெயர் ; ஸார ப்ரஹ்மத்தைப் பாடும் பக்தருக்கும் அப் பெயரென்றார் ஸ்ரீதரஸ்வாமி. 'सारं गायन्तीति सारंगा: ' (ஸாரம் காயந்தீதி ஸாரங்கா

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்று முண்ட கண்டம் - எழுமால்வரையில் கிரீசர் வஸிக்கும் வெள்ளி மலையும் அடங்கியது. நீலகண்டருடைய கண்டத்தினும் மஹத்தான கண்டம்.

கண்டீர் - நீங்களே பாருங்கள்.

அடியேனைஉய்யக்கொண்டதே- அஹமந்நம் அஹமந்தம் அஹமந்தம்' என்ற படி என்னை அவருண்டு அவருக்கு நான் போக்கியனாகிறேன். - அண்டரண்ட பஹிரண்டங்களை உண்டதிலும் திருப்தியடையாமல், மலைகளை (குல பர்வதங்களை) யுண்டும் திருப்தியடையாமல், அணுவாகிய என்னை ஆசை யுடன் உண்கிறான்; நீங்களே பாருங்கள். உண்ணப்படும் வஸ்து ஜீர்ணமாகி விடும் என்பர். உண்ணப்படும் நான் அதனாலேயே உஜ்ஜீவித்து இன்புறுகிறே னென்னும் விந்தையையும் பாருங்கள். இந்த அற்புதக்காட்சியை நீங்களே கண்கூடாகக் காணுங்கள்.

ப்ரஹ்மஹத்யா என்பது பெரும் பாதகம். ப்ராஹ்மண ஜாதி ஸாமாந்யரின் ஹத்தியையே பாதகமென்பர். ப்ரஹ்மாவின் தலையையே கிள்ளியெறிந்தது பெரும் பாதகம் , குருபாதகம். கிள்ளின கையிலேயே அந்தப் பாதகம் ஒட்டிக்கொண்டது. எந்த அவயவம் பாபம் செய்ததோ அங்கே அது கெட்டி யாய் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதனால்,ஈச்வரனாயினும் ஒரு பாபம் செய்தால் அது கழற்ற முடியாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டு அவரையே பாதிக்கும் என்று ருஜுவாகிறது. ஈச்வரன் வலிமையினும் பாபத்தின் வலிமை அதிகம். இந்த உண்மை ஸர்வலோக ஸாக்ஷிகமாக இந்தச் சரித்ரத்தால் விளக்கப் பட்டது. தலையில் பிறை சூடி என்ன? கையில் கபாலம் விடாமல் ஒட்டிக் கொண்டுவிட்டதே! உலகத்திற்கெல்லாம் க்ஷேமம் செய்யும் சங்கரராயினும், ஈச்வரனென்று ஐச்வர்யம் பெற்றவராயினும், பாபம் செய்தால் அது விடாமல் ஒட்டிக்கொள்ளும். ஸர்வேச்வரன் க்ருபையால்தான் அது கழியுமென்று இந்த விருத்தாந்தம் உலகமறியக் காட்டுவது. 'மாநுஷ ஜந்மம் பெற்றும், ஊமையும் செவிடுமில்லாமலிருந்தும், வாயிலிருந்தும், நமோ நாரணாவென்றோவாது

உரைக்கும் உரையிருந்தும், பகவந்நாமத்தைச் செவியுறக் காதிருந்தும், எவன் ஸம்ஸாரத்தைக்கடப்பதற்கு சுலபமான வழிகளைத் தேடுகிறதில்லையோ அவன் ப்ரஹ்மஹத்யைக்காரன்' என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. ப்ரஹ்ம மாசைப் பட்டு ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கென்று கொடுத்த மநுஷ்ய ஜந்மத்தை வீணாக்குகிறவன் ப்ரஹ்மத்தை பக்னாசமாக்கிக் கொலை செய்தவன் போலாகிறான். எல்லாவித ப்ரஹ்மாக்களையும் அபஹதபாப்மர்களாக்குவது ப்ரஹ்மம். மாத்ஸ்ய வசநத்தை நாயனார் உதாஹரித்தார். 'तत्र नारायणः श्रीमान् मया भिक्षां प्रयाचित: (தத்ர நாராயண : ஸ்ரீமான் மயா பிக்ஷாம் ப்ரயாசித:) என்றார் சங்கரர். முன் பாட்டில் திருவாரமார்பை ஸேவித்ததும், ஸ்ரீமானான நாராயண னுடைய ஸர்வேச்வரத்வத்தையும், எல்லையற்ற கருணையையும் இங்கே பாடுகிறார். கபாலம் ஆயிரம் துண்டமாய் உடைந்தது. வெண்பிறைச் சந்த்ரனுக்கும் ராஜயக்ஷ்மாவான பாபரோகம் போக்கப்பட்டதையும் பிள்ளை உரைத்தார். 'உண்ட கண்டம் अत्ता चराचरग्रहाणात् (அத்தா சராசர க்ரஹாணாத்) என்று ஸூத்ரத்தை நாயனார் உதாஹரித்தார். கண்டம் யாவற்றையும் உண்டு வயிற்றில் சேர்த்தது “ஆதி” என்பதும், கண்டத்திலொட்டுமென்று ரஸம். “ஆதி”, “அத்தா” என்று உபநிஷத் பாஷ்யம்.