திங்கள், 21 செப்டம்பர், 2009

திருப்பாதுகமாலை





25. அமைப்புப்பத்ததி

781. குரிசி றோன்றுமைக் குறினெ டிற்களுக்
         குரிய தாயவன் குரைக ழற்சம
         நிரையி லக்குணக்  குறினெ டிற்களில்
         வருப தாவனிக் கிடுவன் வந்தனம்                            1
782. வாமன னாளடி யாமள வொன்றுங்
         கோமள நின்னிடை கோநிலை கொள்வான்
         ஆமிறை யக்குறி யாவும ராடீ! 
         தாமுட னோர்குறி தானென வாமே.                          2
783. எந்தும ரங்கந ரேந்திரன் பாதூ!
         பாந்தளு முன்வடி வார்ந்தவி ரேகை
        நேர்ந்தொளிர் தன்முடி மீதெழு மன்பிற்
        சார்ந்துனைத் தன்னுருவாயினுந் தாங்கும்.             3       
784. அய்யன தஞ்சல றஞ்செயு மான்றோர்
        உய்யவன் தாளுரு வாக்கொரு சாக்கிற்
        கய்யென மன்னொரு பன்னிரு நாமத்
        தெய்யுரு பாதுனை மெய்யிடு வாரே.                    4
785. மாமறை மங்கல மங்கைய ருச்சிப்
         பூமண நாறலிற் பூண்டுனைப் பாதூ!
         தூமணந் தம்மகட் காற்றுவர் துய்யர்
         ஆமணி நின்னுரு மாமுடி சூட்டி.                                5
786. எண்டிசை யண்டர்க ணீடிய வாயுள்
         கொண்டிட நன்கவர் கோதையர் பாதூ!
         ஒண்டிரு மங்கல நூலிலுன் வண்ணம்
         மண்டணி மங்கல கண்டவர்க ளாவர்.                     6
787. தொத்தரி தாண்மலர்க் கொத்தொழி  லாரக்
         கொத்தொளி மண்டலின் மண்டல நோக்கும்
         அத்தகு பாதுனை நோக்குவ னத்தன்
         நத்தடி சக்கர சத்தியே னத்தான்.                                7
788. மின்னிடை மன்னரி வண்ணர விந்தக்
         கன்னிகை மன்னிறை யந்நிறை யொன்றில்
         தன்னல ரங்கொளிர் தாமரை மங்கை
         யின்னுரு தானென மின்னரி பாதூ!.                     8
789. என்றனை நாடுவர்க் கேதினி யெஞ்சல்
         என்றது நின்னிடை யாப்பிடு காப்பில்
        நின்றதி லெண்ணுவ னீயரி பாதூ!
        நன்றும ருங்கில நகையெ னத்தான்.                    9
790. மாலடி மன்னடி மல்கலி லெஞ்சுங்
         காலிடை குன்றலி லாடக பாதூ!
         சாலுமு யிர்க்கரி தாணிறை யீனத்
         தாலழ காகுல மாநிலை தேறும்.                      10
791. பூத்திரு மாலடி பூடண வண்ணச்
         சீர்த்தியி லம்மணி பாதுகை! சேரும்
        பூர்த்தியி லண்ணல்பு கழ்ப்புனை காவற்
        கீர்த்திய ருண்ணடு நின்னிலை காப்பாய்                11
792. மற்றவ ரங்கன தங்கம வற்றுக்
         குற்றணி வேறவை மாறணி பூட்ட
         முற்றவு மங்கிரி யொன்றினுக் கம்மா!
         உற்றது மாறில வொத்திணை நீயே.                   12
793. கண்ணிதி ரண்டுதி ரண்டுக னத்த
        கண்ணய முன்னது காணரி தென்றோர்க்
        கண்ணல டித்திதி! யன்புநி ரம்புங்
        கண்ணது மாயிர மாயிடு நாளில்.                        13
794. அன்றுப தம்பிர மாணமெ னுங்கோள்
         ஒன்றணு பாதரி யொண்பத மென்றே
         நன்றினை யுன்பிர மாணந யத்தே
         நின்றிட மானம ராடி! நி லைப்பாய்.                   14
795. ஒங்கிட முப்புவி போதுத லின்றி
         ஓங்கல ளந்துவ ளர்ந்தப தத்தை
         வாங்கரு முன்னிறை யொன்றினி னாளுந்
         தாங்கிய ளந்தரி தாணிலை! காப்பாய்.                  15
796. மாலெனு மூலம ணத்தொளிர் பாத்தி
         யேலணி பாதுனை யேத்திவ ணங்கும்
         சூலியி னுவ்விசு ரந்தெழு மோர்வாய்க்
         காலென நின்னிடை வானதி பாயும்.                   16
797. ஈறில தின்பநி ரம்பளி யன்பர்
          நாறுயர் முத்திம ரந்தமு மிழ்ந்தோர் 
         தேறரி யீரடி நீரல ரேம
         வீறணி கன்னிகை மின்னரி பாதூ!.                    17
798. நான்கொடு நான்குற ழாயிர வாயம்
         வாங்குரு வாயிர வப்பதி னாறில்
         ஒங்கரி தாணிலை! யோங்கலை நீ தான்
         தாங்கினை யொத்திரு பாங்குருவத்தே.                 18
799. குறுமையும் நெடுமை யுங்கொள் ளுருநறும் பணைவி ருத்தித்
           துறையெழில் பொழிய மாயக் கூத்தனல் லரங்க மாடும்
           நிறையினீ துணை நடிக்கும் நீதிமீ தகில நோக்கும்
          இறையருள் பரவு பாதுன் னினியபல் லுருத்த ரிப்பாய்.            19

800. காணக் கேட்கத் தானா மானச்
        சேணுத் தாளுந் தாளும் நீயும்
        மாணொத் தாவீ ரேனுந் தாணீ
       பேணத் தாணின் போணின் மாணும்.                        20
26. குடைப்பத்ததி

801. யாதுற மன்னியெம் மாத வன்பதம்
         மீதொரு மண்டனம் வேண்டி லாது செந்
         தாதணி யந்தநல் லெந்தி ரந்தளிர்
        நீதிவி ளங்குதா ணிலைவ ணங்குவான்                      1
802. கீழினெடு மண்டுகடு கற்களையு னீரின்
          மாழையது மேனிகழ  மாதவன டிக்கேல்
         நீழலுற வாதிபத நீடுநிலை! சாலச்
         சூழணியு னக்குடையி னீகுடைக விப்பாய்.              2
803. ஒன்றுமறை நின்றபர னென்றபொரு ளொன்றே
         யென்றவனி காணவரி பாதநிலை! யெண்ணில்
         ஒன்றறுதி யிட்டுறுதி சுட்டுவிர லென்ன
         நன்றுனது கொட்டைவிற னட்டுநிலை நாறும்.           3
804. அப்பனடி யங்குலியி ரண்டிடை தெருண்ட
         செப்பமிகு விந்தைதெரி யெந்திர மராடீ! 
         அப்பனிறை செப்புவண வப்பிரண வத்துக்
         குப்பியென வந்தியரை மாத்திரை குறிக்கும்.              4
805 உன்னவர்ம னோரதந டத்துனது ளத்தில்
         மன்னனளி யேறுவிளை யாடிரத மன்னத்
         துன்னுமணி பாதுனது துய்யகுமிழ் மின்னு
         முன்னுரிமை கூவுமொரு கூவிரவ ணத்தே.              5
806. அத்தனடி யங்குலியி னப்பிடிந லங்கொண்
         டொத்தவுன தங்குலியின் முத்திரையெ னத்தான்
         நித்தமரி பாதுலகு நிற்குநிலை யேவும்
        அத்தலைய கல்லைநெறி யெல்லையென லாகும்.         6
807. வட்டணிபொ குட்டுமுடி வண்ணமடி நாலம்
         நட்டுநிகழ் பாதுனது நாறுகுமி  ழேறும்
        அட்டபுய னப்பதம லர்த்திருத ரிக்கும்
         மட்டுமிழு மம்புயம லர்நலமி யம்பும்.                7
808. கேசவன தங்கிரியின் மேனிலை யிற் பாதூ!
         தேசுதெரி யெந்திரிகை தேறுனதி றைக்கண்
         பூசைபுரி யீசர்முடி பேசுமுன தண்ணல்
        ஆசுபெறு மெண்ணியது தண்ணியதெ னத்தான்  8           
809. மாதுமலர் மங்கைகா மாழைவிரி மாயோன்
        பாதமலர் சூடியணி சூடிகைவ யங்கும்
        பாதுகை! யுனத்தகைய பாரரசு சாலச்
       சோதிநடை யேறுகுடை யோர்குடை யுனக்காம்.  9
810. நிறை யரங்க வேந்தனோர் பிறை நிரம்ப லேறுநின்
         முறை விளங்கு கோடுபர திறை யரும்பியம்புமே.     10

27. வரிப்பத்ததி

811. எழுதா மொழிதான் தெரியவ் வரியின்
         எழுதா வொருகட் டழகே நிகழும்
        முழுமா நலமே மொழியப் பழமா
        கொழுநன் பதமா நிலையே தொழுவன்.           1           
812. மீது மீதி றைஞ்சு தேவர் மின்னு மோலி கீறலிற்
       சோதி பாது! வேறு வேறி ரேகை யுந்து விந்தையோ
       டாதி யந்த  வச்சு தன்ப தச்சு மஞ்சி ரத்தலிற் 
       பேதி யாத நீதி யாட்சி தேறி ரேகை யேறுவாய்.            2
813. பாரி தாளு மீளி தேறு பாது னாது நீதி கொண்
         ணேரி லேறு மாறு கூறி ரேகை யாதி யாகவே
         ஏர னந்த னுந்து தாள ழைக்க வேறு மவ்வரி
         சீரி ணைந்த சாயை யன்ன வீற ணிந்து நாறுமே.       3
814. நாடு தேவர் நீடு சூடி கைத்தி ரித்த சித்திரத்
         தாடு மச்சு றாமு கத்து ராய்த லிற்ப தாவனீ!
        பீடு தோன்று மாறு தேடு மீடு சான்ற மாலடிக்
        கூடு போக நாறு கோடு கூறு மாறு கூருமால்.        4
815. உம்பர் மோலி யோம்ப ரக்க லுந்து முன்னி ரேகைமீ
         தின்பு மன்னு பாது! நின்னை யேந்து மன்பர் சென்னியில்
         முன்பு தீவி தித்த லைக்கு றிப்பொ றித்தன் மாறவே.
          மன்ப தத்தி ருத்து நல்லெ ழுத்து நீதி ருத்துவாய்.        5
816. சோதி மால டித்த லத்தி லோதி றைக்கு றிக்களாங்
         கேது வாத பத்தி ரார விந்த சங்கு சக்கரம்
         மீது னவ்வி ரேகை யாவு மேவு பாது! கண்டவை
         நாத னத்த லத்து முள்ள வாறு தேறு மாறதே.            6
817. ஆடி விஞ்சு மஞ்ச னங்க ளண்ணல் பாத மண்ணலிற்
          கூடி வீற்றி ருந்த மஞ்சு கோல வண்ண மெண்ணுதாள்
          ஈடு சந்த நாறு சேறி லேறு போக வீறிலப்
          பீடு தேறு பாது! வேறு ரேகை கூருவாய்.            7
818. ஓது னாத னீடு பாத கோடு வக்க மிக்கதாய்
         மோதி லேகர் மின்னு கோடி மோலி கீறு மாறுறுஞ்
         சோதி ரேகை கோடி தேறு கோடி யேறு பாதுகாய்!
         மீது னாதி நீதி ரேகை வீதி மூரி யேறுமே.         8
819. நாளு மந்த ரங்க நாத னங்கி ரிக்கி ணங்கிநன்
         காளு மப்ப தச்சு மஞ்சு மந்த வின்ப மாந்துமக்
         கேளி யல்வி யம்பு பத்தி நீளி ரேகை வல்லிகொண்
         மீளி பாது! மேலு மேலு மேறு வீறு தேறுவாய்.            9
820. சந்தங்க ளிங்கோரு காந்தத்து நந்தச்
         சிந்திக்கு மையங்கள் சேதித்து நற்பா
         துந்துனனி ரேகைக்க ணொன்றொன்று நோக்கித்
         தந்தந்த வேதங்கள் தாயோலை நீயே.                 10

வாழ்த்துவோம்

கலி முற்றுகிறது. அக்கிரமங்கள், அநியாயங்கள் பெருகுகின்றன. நல்லவர்கள் நலிகிறார்கள். ஊரை ஏய்த்து வாழ்கிறவர்கள் செழிக்கிறார்கள். பெருமாள் பொறுமையாக இருக்கிறாரே என்றெல்லாம் நம் சிந்தனை பல நேரங்களில் ஓடும். நாம் நினைப்பதில், வருந்துவதில் அர்த்தமோ, உண்மையோ இல்லாமல் இல்லை. ஆனால் பெருமாள் பொறுமையாக இருக்க சில காரணங்கள் உண்டு. அங்கங்கே சில நல்ல இதயங்கள் ஆரவாரமில்லாமல் சில நற்பணிகள் செய்து கலியின் வலிமையைக் கூடக் குறைக்கின்ற அளவில் செயல்படுவது அவைகளில் ஒன்றாக இருக்கலாம். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக் கிழமை தினமணி கதிரில் வந்த ஒரு செய்தி. தனி ஒரு மனிதராக 35 வருடங்களாக அன்னதானம் செய்து வரும் பேராசிரியர் திரு விஜயநாராயணசாமி பற்றிய அந்த செய்தியை முழுவதும் படித்தால் பிரமிப்பாயிருக்கிறது. முடிந்தவர்கள் உதவலாம். மற்றவர்கள் தாங்கள் தினமும் செய்யும் ப்ரார்த்தனைகளில் இந்தப் பணி மேலும் சிறக்க வேண்டிக் கொள்ளலாம்.

anna