நாற்பத்தாறாவது ஸர்கம்
[அகஸ்திய முனிவர் கூறிய-ராவணனின் ச்வேத த்வீபகமனம், அங்கு அவனடைந்த பரிபவம், மறுபடி அங்கு ஸநத்குமாரரை ஸந்திப்பது முதலியன.)
மீண்டும் ராவணன், உலகத்தவரை வெற்றி கொள்ள விரும்பியவனாகி, சூரர்களான ராக்ஷஸர்கள் பலர் சூழப்பெற்று இப் பூமண்டலமெங்கும் ஸஞ்சரிக்கும் பொழுது, நாரத முனிவர் அவனெதிரில் வரக்கண்டு, ஸந்தோஷமடைந்தவனாய், அவரை வணங்கிப் பூஜித்து, அவரைப் பார்த்து 'ஸ்வாமின்! நாரதமுனிவரே! தாங்கள் மூவுலகங்களிலும் ஸஞ்சாரம் செய்கிறீரல்லவா? என்னுடன் போர் புரியக் கூடிய பலசாலி இவ்வுலகினில் எவரேனும் உளரா? அப்படியிருப்பின் அவர்களிருப்பிடத்தை எனக்குக் கூறவும்' எனக் கேட்டான்.
நாரதர் ராவணனை நோக்கி, ஒரு முகூர்த்த காலம் சிந்தனை செய்து, பின்வருமாறு கூறினார்- அரசனான ராவண! பாற்கடலின் மத்தியில், ச்வேத த்வீபமென்கிற திடலொன்றுள்ளது. அங்குள்ள மானவர்கள் பால் போன்ற வெண்மையான நிறம் உள்ளவர்களாகவும், மிகுந்த பலசாலிகளாகவும். மிகப்பெரிய சரீரங்களை உடையவர்களாகவும், மேக கர்ஜனம் போன்ற குரலையுடையவர்களாகவும், மிக்க தைரியசாலிகளாகவும் மிக நீண்ட கைகளையுடையவர் களாகவும் விளங்குகின்றனர். நீ விரும்பியபடி உன்னோடு போர் புரியத் தக்கவர்களாக அவர்களுள்ளார்களென நினைக்கிறேன், என்றார்.
இதைக் கேட்ட ராவணன் - மறுபடியும் நாரதரைப் பார்த்து - 'மஹர்ஷியே, அந்தத் தீவில், மானிடர்கள் பலசாலிகளாக இருப்பதற்கென்ன காரணம்? அம்மகானுபாவர்களுக்கு அந்த ச்வேத த்வீபம் வாஸ ஸ்தானமாயமைந்ததற்கு காரணம் யாது? இவை யாவையும் உள்ளபடி அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்', என வேண்டினான். நாரதர் அவனை நோக்கி, “ராவண அம்மனிதர்கள் வேறு சிந்தனையின்றி எப்பொழுதும் நாராயணனையே மனத்திற் கொண்டு அவனே தமக்கு ரக்ஷக னென்றுணர்ந்து எப்பொழுதும் அவனையே தியானம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
அவர்களுடைய ஜன்மாந்தர புண்ணிய விசேஷத்தினால் அத்தீவினில் வஸிக்கும்படியான பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. சங்கொடு சக்கரம் ஏந்துந் தடக்கையனான ஸ்ரீமந் நாராயணன் தனது சார்ங்கமென்னும் வில்லை வளைத்துச் சமர்புரிய, அவர் கையால் அடியுண்டவர் எவரோ, அவர்களுக்கே எல்லாவற்றிற்கும் மேலான அவ்வுலகம். தானம், தவம், வேள்வி முதலியவை புரிந்தவர்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் எளிதிற் கிடைப்பதரிதாகும். என்றார். இது கேட்டு ராவணன் வியப்புற்றவனாகி, நெடுநேரம் ஆலோசனை செய்து, 'யான் அந்த நாராயணனுடன் எதிர்த்துப் போர் புரிவேன்’ என்று தீர்மானித்து ச்வேத த்வீபத்தை நோக்கிச் செல்லலாயினன்.
இங்ஙனம் தேவர்களுக்கும் செல்வதற்கரியவிடமான ச்வேத த்வீபத்தை அவன் அணுகியதும், அவன் அமர்ந்து சென்ற புஷ்பக விமானம, அந்தத் தீவினது ஒளியால் எரிக்கப் பட்டதாகி. அங்கு உண்டாகிய காற்றில் வேகத்தினால் மோதப்பட்டு நிலை கொள்ளத் திறமை அற்றதாகியது கண்ணெடுத்துக் காணவும் அரியதாக விளங்கும் அத்தீவினிடஞ் சேர்ந்த அளவில் ராவணனது மந்திரிகள் அஞ்சி நடுங்கியவர்களாகி ராவணனை நோக்கி, “அரசே! நாங்கள் இவ்விடத்தை அணுகிய அளவில், அறிவையும் ஆலோசனையையும் இழந்து மூடர்களாயினோம், நிலைத்து நிற்கவும் சக்தியற்றுத் தவிக்கிறோம். ஆதலால் நாங்கள் எதிர்த்துச் சமர் புரிவது எங்ஙனம்? என்று கூறி யாவரும் ஒன்று கூடி ஓடிப் போயினர். அதற்குள் நாரத முனிவர் அந்தத் தீவை அடைந்து அங்கு நடக்கும் அதிசயத்தைக் காண விரும்பி அங்குச் சென்றனர். ஆனால் ராவணன் கொஞ்சமேனும் பயப்படாமல் விமானத்தைவிட்டு இறங்கி. பயங்கரமான பத்துத் தலைகளுடன் கூடின உருவத்தைத் தரித்து, அந்த ச்வேத த்விபத்தில் பிரவேசிக்கலாயினான்.. அவன் அத்தீவில் புகுந்த மாத்திரத்தில் பல கட்டழகு வாய்ந்த பெண்மணிகள் அவனைக் கண்டனர். அவர்களிலொருத்தி ராவணனைக் கண்டு நகைத்து. அவனது கையைப் பிடித்துக் கொண்டு, “நீ யார். இங்கு வந்த காரணமென்ன?” என வினவினள்,
அது கேட்ட ராவணன், கோபங் கொண்டு அவளை நோக்கி, “நான் விச்ரவஸ் முனிவரது புதல்வன். ராவணன் எனப் பெயர் பூண்டவன் நான் யுத்தம் செய்வதன் பொருட்டு இங்கு வந்தேன்.” என்று கூறினான். ராவணன் இவ்விதம் கூறியதைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் குலுங்க நகைத்தனர். அவர்களிலொருத்தி சினங் கொண்டு ராவணனை ஒரு குழந்தையெனக் கையிலெடுத்து வினோதமாய் அவனைச் சுழற்றிக் கீழே வீழ்த்தி, மற்றெரு தோழியை அருகிலழைத்து, 'ஸகி! நீ இப்பூச்சியைப் பார்த்தனையா? பத்து முகமும் இருபது கைகளுமுடையதாய், மைபோலக் கருநிறமாயிருக்கின்றது." என்று கூறி, மீண்டுமவனை எடுத்து, மற்றெருத்தி கையிலெறிந்தனள். அவள் வேறொருத்தி கையிலெறிந்தனள், இங்ஙனமவர்கள், கைக்குக்கைவீசி எறிவதைத் தாங்க முடியாது தசானனன் தவித்து ஆயாசமுற்றனன். அப்பொழுது அவன் கோபங் கொண்டு, ஒரு அழகியைக் கையில் பற்களால் பற்றிக் கடித்தனன். அவ்வேதனையைப் பொறுக்க முடியாது. அந்த மாது அவனைக் கீழே எறிய, மற்றெரு மங்கை அவனைக் கையிலெடுத்துக் கொண்டு வானத்தில் எழுந்தனள். ராவணன் மிக்கச் சினங்கொண்டு அவளை நகங்களால் நன்றாகப் பீறினான். அந்த வலியினால் அவளும் அவனைக் கீழே விட்டுவிட, அவன் அங்கிருந்த ஆழமான கடலினிடையே, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட மலையென விழுந்து, அக்கடலின் மீதே மிதந்து கொண்டு கிடந்தனன்.
ஸ்ரீராம! இங்ஙனம் ச்வேத த்வீப வாஸிகளான வனிதையர்களால் ராவணன் வருத்தப் பட்டவனாகி மயங்கித் தவித்தனன். இதை நாரத முனிவர் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு, நகைத்து நர்த்தனம் செய்தனர். பிறகு ராவணன், அக்கடலின் தென்கரையை அடைந்து, 'ஆ இஃதென்ன ஆச்சரியம்! நான் உலகமெல்லாம் சென்று ஜயம் பெற்றேன். ஸ்வபாவமாகவே ஆற்றலில்லாத வர்களாய், அபலைகள் எனப்பெயர் பெற்ற பெண்களுக்கு இவ்விதமான செய்கை இயல்பிற்கு விரோதமானது அன்றோ! இவ்வுலகத்து மனிதர்கள் நாரதர் கூறியபடி ஸர்வ வல்லமை உள்ளவர்கள் போலும்! அவர்களே இங்ஙனம் அரிவையர்களாக வேடம் பூண்டு, என்னைப் பரிபவப்படுத்தினர் என நினைக்கிறேன்! அத்தகைய பலவான்களுடன் சினேகம் செய்து கொள்வதே சிறப்புடையது' என்று சிந்தித்துத் தேறினன்.
பின்னர் அவர்களது வரலாற்றை நன்கு உணருமாறு, அவன் அங்குள்ள வனமெங்கும் சுற்றித் திரிந்தனன். அங்குள்ள ஓர் குகையில், ஸனத்குமார முனிவரைக் கண்டு, அவரை நோக்கித் “தபோதனரே! இந்த உலகம் எந்த மகானுபாவனால் உண்டுபண்ணப் பட்டது? இவ்வுலகத்தில் வஸிப்பவர் யார்? தேவரீர் எவரை உள்ளத்தில் கொண்டு தியானம் செய்கின்றீர்? இவை யனைத்தையும் எனக்குக் கூறவும், என்றான். இவ்வாறு ராவணன் வினவியது கேட்டு, அம் மஹா முனிவர், 'குழந்தாய் ராவண! கூறுகிறேன், கேள். ஸகல உலகங்களையும் படைத்துக் காத்தருளும், ஆதி அந்த ரஹிதனான நாராயணனால் தனக்கு வாஸஸ்தானமாக இவ்விடம் கல்பிக்கப் பட்டது. இங்குள்ளவர்கள் அந்த நாராயணனையே தஞ்சமெனக் கொண்டு, அவனைப் பூஜிக்கின்றனர். ராவண! முனிவர்கள் தொழுதேத்தும், அந்த நாராயணனையே நீ நாடக்கடவாய். பிரம்ம தேவனும் அந்த பரப்பிரம்மத்தை அறிந்தவனல்லன். ஸகலலோக நாதனும் ஜகத்துக்குக் காரணபூதனுமான அப்பெருமானை எவன் எப்பொழுதும் பூஜிக்கிறானோ அவன் நிச்சயமாக அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவான்' எனக்கூறினர்.
பிறகு ராவணன் அம்முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு இலங்காபுரி போய்ச் சேர்ந்தான். நாரதரும் அத்தீவை விட்டு மேரு மலையிலுள்ள பிரம்ம தேவனுடைய மகாசபையை அடைந்து, தான் கண்ட அதிசயத்தை பிரம்ம தேவனிடம் கூறினர். அப்பொழுது நான்முகன் நாரதரைப் பார்த்து, 'குழந்தாய்! ராக்ஷஸர்களில் தலைவனான ராவணன் முன் ஜன்மத்தில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்திருந்தனன். அவன் பலவிதமாகத் தவம் செய்து வேண்டிய வரன்கள் பெற்றுச் சிறந்த பலசாலியாய் எவராலும் வெல்லுவதற்கரியனாய் இருந்தனன். அச்சமயம் அவன் நரசிங்க மூர்த்தியினால் இழுக்கப் பட்டு எம்பெருமானது மடியில் கிடந்தவாறே அவரது உகிர்களால் உடல் பிளந்து பரிதபித்துக் கொண்டிருக்கையில், பூர்வ ஜன்ம ஜ்ஞானம் உண்டாகப்பெற்று. அப்பெருமானை நோக்கி, “ஹே தேவ! அடியேனை ரக்ஷித்தருள்க, அடியேனுக்கு இனி நேரிடப் போவதான ராக்ஷஸப் பிறவி தேவரது திருக்கரத்தினால் ஒழிந்து அங்ஙனமே அதன் பிறகு உண்டாகும் மானிடப் பிறவியும் ஒழிந்த பின்னர் அடியேன் தேவரீருடைய ஸாம்யத்தை அடைந்து முக்தி உலகம் பெறுமாறு அருள்புரிய வேண்டுகிறேன். ஹே! ஜகந்நாத! அங்ஙனமே கடாக்ஷித்தருள்க!” என வேண்டிக் கொண்டான். நரஸிங்கமூர்த்தி அது கேட்டு ‘அவ்வாறே ஆகுக' என அருள்புரிந்து அற்புதமான விமானத்திலேறிச் சென்றனர். நாரத! அந்த ஹிரண்ய கசிபு இப்பொழுது ராக்ஷஸ (ராவண) னாகப் பிறந்திருக்கின்றனன். இவன் எப்பொழுதும் அந்த நாராயணனையே, சிந்திப்பவனாகி நாளைக் கழிக்கின்றனன். இனி அவன் மானிடனாகப் பிறந்து உலகங்களைத் துன்புறுத்தத் தலைப்படுவான். அந்த மூன்றாவது பிறவியிலும், விஷ்ணு தேவனால் வதையுண்டு பெறுதற்கரிய விஷ்ணு ஸம்பந்தமான சோதியில் புகுந்து, ச்வேத த்வீபத்தை அடைவான்.
“நாரத! ஸகல பாபங்களையும் போக்குவதான இந்தப் புண்ணியமான வைஷ்ணவ சரித்திரத்தை எவன் நித்யம் ஆதியோடந்தமாகப் படிக்கின்றானோ அவன் உயர்ந்த கதியை அடைவான்”, என்றார். ஸ்ரீராம! பிறகு நாரத முனிவர், மேரு மலையை வலம் செய்து கொண்டு எனது ஆச்ரமத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது நான் அவரை வணங்கி வரவேற்றுப் பூஜித்தேன். அப்பொழுது முனிவர் இக்கதையை எனக்குக் கூறினர். அதை அப்படியே இப்பொழுது நான் உனக்குச் சொன்னேன்.
ஹே ராகவ இக்காரணம் பற்றியே துராத்மாவான ராவணன் மரணமடைய விரும்பி மைதிலியை அபஹரித்துக் கொண்டு சென்றனன். ஆதலால் நீ பஞ்சாயுதங்கள் தரித்த அந்த பரஞ்சோதியான நாராயணனேயன்றி வேறல்ல. இதை நீயே உனது சக்தியைக் கொண்டு உணர்வாயாக.. நீ ஸகல உலகங்களையும் ஸ்ருஷ்டித்துக் காத்து அழிப்பவனன்றோ!. நான்கு வேதங்களின் பொருளாய் நிற்பவன் நீயேயன்றோ! நாராயணனான நீ ராவணனை ஸம்ஹரிப்பதற்காக ராமாவதாரம் செய்தருளினை ஹே ராம! உன்னை நீ யாரென்று அறிந்து கொள்ளவில்லையா? எங்களை மோஹிப்பிக்காதே, நியே முன்பு மஹாபலியை வஞ்சித்து மூவடியால் உலகளந்தனை நீ இப்பொழுது வந்து அவதரித்த காரியம் முடிந்தது. ஶ்ரீமகாலக்ஷ்மியே ஸீதையாக வந்து அவதாரம் செய்தனள். அந்த தேவியை ராவணன் பிரயத்தனப்பட்டு இலங்காபுரிக்குக் கொண்டு போய் தாயைப்போல் வைத்து வெகு கருத்துடன் பாதுகாத்தனன், ஹே ராமச்சந்திர! முக்காலமுணர்ந்த முனிவரான நாரதர் எனக்கு உரைத்தவை யாவும் உனக்கு எடுத்துக் கூறினேன.் இவை யாவும் ஸனத் குமாரர் சொற்படி கேட்டு, அதன்படி ராவணன் செய்த காரியமேயன்றி மற்றொன்றுமல்ல. இதன் பெருமையை உணர்ந்து எவன் இந்த சரித்திரத்தை, சிராத்த காலத்தில், பிராம்மணர்களுடைய ஸன்னிதானத்தில் அவர்கள் கேழ்க்குமாறு செய்கிறனோ அவனுடைய பித்ருக்களுக்கு, அநந்தமான அக்ஷ்யம் அளிக்கப்பட்டதாகும்" என்று கூறி முடித்தார்.
திவ்யமான இக்கதையைக் கேட்டுச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீராமபத்ரன் தனது பிராதாக்களுடனே அளவிலாத ஆநந்தமடைந்தனன். அந்தச் சபையில் கூடியிருந்த, சுக்ரீவன் முதலிய வானரர்களும் விபீஷணன் முதலிய ராக்ஷஸர்களும், மந்திரிகளும், ஏனையோரும் கேட்டுக் கண்கள் மலர்ந்து களிப்புற்றவர்களாகி, ஸ்ரீராமச்சந்திரனையே வைத்த கண் வாங்காமல் கண்டு நின்றனர். அகஸ்திய முனிவரும், ஸ்ரீராமனிடம் விடைபெற்றுத் தமதிருப்பிடம் சென்றனர்.