ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
முகவை இயற்றமிழாசிரியரான
இராமாநுச கவிராயரவர்கள்
பாடிய
பார்த்தசாரதி பதம்புனை பாமாலை
காப்பு
மாப்புனை குரவ ரன்பர் வாரநின் பரிவா ரங்கள்
காப்புனைப் பாட நாணாக் காதல்கூர் நாயி னேனுக்
கோப்புனைச் சுருதி தன்னை யொண்டமிழ்ப் படுத்தொப் பற்றோன்
பாப்புனை யல்லிக் கேணிப் பார்த்தசா ரதியம்மானே.
அரும்பதவுரை
குரவர் --பெரியோர்; வாரம் --அன்பு; பரிவாரம் -- சூழ்ந்திருக்குந் தேவர், சூழ்வோர்; காதல் --பக்தி, ஆசை; சுருதி -- வேதம்; படுத்து -- செய்து; புனை -- அலங்காரம்,அழகு; பார்த்தசாரதி -- வேங்கட கிருஷ்ணன்.
அல்லிக்கேணி ஐம்பத்துநான்கு
இயற்றியவர்
ஸ்ரீமத் ஆண்டவன் அடிமலர் அடிமை
ஜ்யோதிஷ்மதி டாக்டர்
கி. ஸ்ரீநிவாஸ தேசிகன்
காப்பு
அரியமால் மாவலிபால் மூன்றடி வைக்கப்
பெரிய உருவெடுத்த பெம்மான் -- அரவணை
வன்னனுமன் சங்குவில் பாய்திகிரி மாகருடன்
பொன்வாளுந் தண்டும் புகல்.
அரும்பதவுரையும் சிறு குறிப்புகளும்
அரவணை -- அனந்தன், ஆதிசேடன்; வன்னனுமன் -- வலிமை பொருந்திய ஆஞ்சநேயர்; பாய்திகிரி -- பகைவர்களை அழிக்கப் பாய்ந்துவரும் திருமாலின் சக்ராயுதம்; புகல் -- சரணம்.
மாவலி (மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு '' தாளால் உலகம் அளந்த'' (நான்முகன் திருவந்தாதி 2416) திருமாலும், அவர் துயில் கொள்ளும் ஆதிசேடனும், பெரிய திருவடியாகிய கருடாழ்வார், சிறிய திருவடியாகிய அனுமன், திருமாலின் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்ரம், வில், வாள், கதை இவைகள் நம்மைக் காப்பதாக.
பார்த்தசாரதி பதம்புனை பாமாலை
சீர்திகழ் மறைக்கு மோலித் திருவடி புனைந்தோன் யாவ
னேர்திகழ் பேரின் பத்திற் கிறையவ னென்போன் யாவன்
பேர்திக ழமரர்க் கெல்லாம் பெரியவ னென்போன் யாவன்
பார்திக ழல்லிக் கேணிப் பார்த்தசா ரதியம் மானே. (1)
அரும்பதவுரை:-- மறை -- வேதம்: மோலி -- மௌலி, முடி: நேர் - ஒழுங்கு: இறையவன் -- ஸ்வாமி, எம்பெருமான்: அமரர் -- மரணமில்லாத தேவர், நித்யசூரிகள்: பார் -- பூமி.
அல்லிக்கேணி ஐம்பத்து நான்கு
அருள் வேண்டல்
நற்றவம் செய்கிலேன் நான்மதிள் சுற்றுகிலேன்
உற்றதுணை நின்னுருவ மோர்விருந்தாம் -- முற்றல்
கரும்பைக் கடித்துச் சுவைக்காது மாய்ந்தோர்
இரும்பைக் கடித்தெய்த்தும் நான். (1)
இரும்பைக் கடித்தெய்த்தும் --- இரும்புத்துண்டைக் கடித்துக் களைக்கும்.
உந்நாம மென்றும் உரைத்திடவே தண்ணருள்
உந்நா மலர்ந்தோது வாயின்றோ -- என்னாளோ
நெஞ்சடைத்து வாயுலர்ந்து நாக்குழறும் நேரம்கண்
பஞ்சடையும் முன்னே வணங்கி. (2)
மிடியிடிக்க மிக்கிளமை நீங்கச் சதியால்
துடிதுடிக்கத் துக்கத்தால் சோர்ந்துன் -- படிகிடந்து
கண்கலங்கக் கண்ட விதிசிரிக்க இன்னமும் நீ
கண் துலங்க என்னதயக்கம்? (3)
மிடி -- துன்பம், வறுமை. கண்துலங்க -- கண்களைக் கொண்டு தெளிவாகப் பார்த்து அருள் செய்ய: மிக்கிளமை -- கட்டிளமை, பால்யம்.