செவ்வாய், 24 ஜனவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தரகாண்டம் 26

நாற்பத்திரண்டாவது ஸர்க்கம்.

(மறுநாள் ஶ்ரீராமபிரான் ஸபைக்கு எழுந்தருளல்)

      இவ்வாறு ஶ்ரீராமபிரான் பட்டாபிஷேக மஹோத்ஸவத்தைக் கண்டருளிய பின்பு, முதல் தினத்தை முனிவர்களுடன் பேசிப் பொழுது போக்கி, அன்று ராத்திரி அந்தப்புரத்தில் நித்திரை கொண்டனன். அன்றிரவு கழித்து விடியற்காலையில் ஶ்ரீராமபிரானைத் திருப்பள்ளி எழுமாறு, சுப்ரபாதம் சொல்லிப் போற்றிப் புகழும் துதிபாடகர்கள் ராஜமாளிகை வாயிலில் வந்து கூடி நின்றார்கள். அவர்கள் நன்கு சிக்ஷிக்கப்பட்ட கின்னரர்கள் போல இனிமையான குரல்களை உடையவர்களாகப் பின்வருமாறு துதித்தனர்.

वीर सौम्य विबुत्यस्व कौसल्या प्रीतिवर्धन ।
जगद्धि सर्वं स्वपितित्वयि सुप्ते नराधिप ॥

வீர ஸௌம்ய விபுத்யஸ்வ கௌஸல்யா ப்ரீதிவர்தன|
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸபதே நராதிப||

        ஹே வீரனே! அழகியவனே! கௌஸல்யாதேவிக்கு ஆனந்தத்தை வளர்ப்பவனே! பிரஜாநாதனே! நீ துயிலெழுந்து வரவேண்டும். நீ கண்ணுறங்கினால் உலகமனைத்துமே உறங்கிவிடுமே! என்றும், உனது பராக்கிரமம் விஷ்ணுவுக்கு நிகரானது, உனது அழகு அச்விநீ தேவதைகளுடையது போன்றது, அறிவினால் நீ பிரஹஸ்பதிக்குச் சமமானவன், நீ பூமியைப் போன்ற பொறுமையுள்ளவன், உனது தேஹகாந்தி சூரியனுடையது போன்றது, வாயு போன்ற கதியையுள்ளவன் நீ, ஸமுத்திரம் போன்ற காம்பீர்ய முடையவன் நீ, மலை போன்று அசைக்க முடியாதவன், சந்திரன் போன்று இனிமையாகக் காணத்தக்கவன், இதற்கு முன்பு, உன்னைப்போன்று, அசைக்க முடியாதவர்களாயும், ஜனங்களிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்களாயும், தர்மநிஷ்டர்களாயுமுள்ள அரசர்கள் இருந்ததில்லை என்றும்,

        ஹே புருஷ ச்ரேஷ்ட! உன்னைக் கீர்த்தி என்றும் விட்டகலாது, லக்ஷ்மியும் உன்னிடத்தில் நித்யமாக வஸிப்பாள், அடக்கமும் தர்மமும் என்றுமே உன்னை விட்டு அகலாமலிருக்கும் என்றும்,

        இப்படியாகத் துதிக்கப்பட்ட ராகவன், வெண்பட்டுமயமான ஹம்ஸதூலிகா மஞ்சத்திலிருந்து, நாகத்தணையில் துயிலெழும் நாராயணனைப் போல் எழுந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, பகவத்ஸந்நிதியை அடைந்து, அங்கு இக்ஷ்வாகு குலதேவதையைப் பூஜித்து, பித்ருக் கடன்களையும் முடித்துக்கொண்டு, பிராம்மணர்களையும் தானம் முதலியவற்றால் திருப்தி செய்வித்து, அங்கிருந்து பரிஜனங்கள் மந்திரிகள் புடைசூழ ஆஸ்தான மண்டபத்தை அடைந்தான்.

        ஶ்ரீராகவன் அங்கு வந்து அமர்ந்தவுடன், வஸிஷ்டர் முதலான மகரிஷிகளும், ஸாமந்த ராஜாக்களும் இந்திரனைச் சூழ்ந்து அமர்ந்துள்ள தேவர்கள் போன்று அமர்ந்தனர். ஶ்ரீராமனது அருகில், பரத லக்ஷ்மண சத்துருக்னர்கள், யாகத்தில் மூன்று வேதங்கள் விளங்குவதைப் போன்று விளங்கினர். ஸுக்ரீவன் முதலான இருபது வானர வீரர்கள் (இஷ்டப்படி உருமாறக்கூடியவர்கள்) சூழ்ந்து அமர்ந்தனர். விபீஷணனும் தனது நான்கு மந்திரிகளுடன் அமர்ந்தான்.

        இப்படி விளங்கும் இந்த ஸபையானது தேவேந்திரனுடைய ஸபையைக் காட்டிலும் மேலானதாகக் காணப்பட்டது. பலரும் பலவிதங்களான புண்ணியக் கதைகளை, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.    

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தரகாண்டம் 25

நாற்பத்தோராவது ஸர்க்கம்


[பிரம்மதேவனுடைய கரஸ்பர்சத்தால் வாயுகுமாரன்
உயிர்பெறுவது
, தேவர்கள் வரமளித்தல் முதலியன.)

·
ஸகல தேவர்களுடன் கூடின பிரம்மதேவன் தன்முன் வந்து நிற்பதைக் கண்ட வாயுதேவன், உடனே எழுந்து அவரை வணங்கிக் குழந்தையைக் கையிலேந்தியவனாய் அவர்முன் நின்றான். வேத வித்தான அந்தப் பிரம்மதேவர், தமது வலக் கையினால் அந்தக் குழந்தையைத் தொட்டார். உடனே அந்தக் குழந்தை வாடிய பயிர் ஜலத்தால் நனைக்கப்பட்டவுடன் நிமிர்வது போலத் துள்ளி எழுந்தது. உயிர் பெற்றெழுந்த குமாரனைக் கண்டு மகிழ்ந்த வாயுவும் தன்னுள் அடக்கி வைத்திருந்த தனது கதியை வெளிப்படுத்தினான். தத்க்ஷணமே ஸகல ஜீவராசிகளும் பழையபடித் தம்நிலையை அடைந்து மகிழ்ந்தன.

அப்பொழுது பிரம்மதேவன் ஸகல தேவர்களையும் பார்த்து, “ஓ தேவர்களே! இந்தக் குமாரனால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியங்கள் பிற்காலத்தில் பல உள்ளன. ஆகவே நாம் அளைவரும் இப்பொழுது இந்த வாயுதேவனின் பிரீதியின்பொருட்டு இந்தக்குழந்தைக்கு வேண்டிய வரங்களை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

அது கேட்ட இந்திரன் பிரீதியடைந்தவனாகத் தன் கழுத்திலுள்ள பொற்றாமரை மாலையைக் கழற்றிக் குழந்தையின் கழுத்தில் அணிவித்து, 'எனது வஜ்ராயுதத்தினால் அடிக்கப்பட்ட இவனுடைய ஹநுவானது சூம்பிப்போனபடியால் இதுமுதல் இவன் “ஹநுமான்” என்ற பெயராலே அழைக்கப்படட்டும்' என்றும், 'இனி இவனுக்கு ஒருபொழுதும் இந்த என் வஜ்ராயுதத்தினால் மரணம் உண்டாகாது' என்றும் வரமளித்தான். பிறகு சூரியன், 'நான் எனது கிரணங்களில் நூற்றில் ஒரு பாகத்தை இவனுக்கு அளிப்பேன். மேலும் இவன் பருவ வயதையடைந்தவுடன் இவனுக்கு ஸகல கலைகளையும் போதிப்பேன். இவனுக்குச் சமனான சாஸ்திரஜ்ஞன் இவ்வுலகில் வேறொருவனும் இல்லை என்னலாம்படிச் செய்வேன்' என்று வரம் தந்தான். வருணன், 'எனது பாசக்கயிற்றினாலோ, தண்ணீரினாலோ, இவனுக்கு மரணம் உண்டாகாது' எனக் கூறினான். காலதண்டத்தினால் வதம் உண்டாகாமையையும், எப்பொழுதும் ஆரோக்கியத்துடனேயே இருக்கும் தன்மையும் யமன் வரமாக அளித்தான். தனதனான குபேரன், மனம் மகிழ்ந்தவனாக யுத்தத்தில் இளைப்புறாமையையும், தனது கதாயுதத்தினால் போரில் சாவாமையையும், அளித்துத் தன்னாலும் தனது ஆயுதங்களாலும் பிராணபயம் இல்லாதபடிக்கு வரமளித்தான்.

அப்படியே சிவபெருமானும் பிரீதராய்த் தமது சூலாயுதத்தினாலும் பாசுபதாஸ்திரத்தினாலும் மற்றவற்றினாலும் மரணமில்லாதவாறு உயர்ந்த வரங்களை அநுமனுக்கு அளித்தார். இவற்றைச் செவி மடுத்து மகிழ்ந்த பிரம்மதேவரும், ‘பிரபல மகரிஷிகளின் சாபங்களாலும், பிரம்மாஸ்திரம் முதலிய வற்றாலும் இவனுக்குச் சாவு உண்டாகாது. நீண்ட ஆயுள் பெற்று இவன் பெருமையுடன் வாழ்வானாக' என்று வரமளித்தார். சிற்பிகளுள் சிறந்த விச்வகர்மாவும், 'என்னால் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த அஸ்திரங்களாலும் இவன் கொல்லப்படமாட்டான். இவன் திறத்தில் அவை செயலற்றவையாக ஆகும். மேலும் இவன் சிரஞ்ஜீவியுமாக இருக்கக்கடவன்' என்ற வரத்தை அளித்தான்.

பிறகு பிரம்மதேவர், வாயுவைப் பார்த்து, 'ஹே வாயுதேவனே! உனது குமாரன் எதிரிகளை அழிப்பவனும், மித்திரர்களை மகிழ்விப்பவனுமாகி எவராலும் வெல்வதற்கு அரியனாவான். மேலும் இவன் நினைத்தபடி உருவமெடுக்க வல்லவனும், இஷ்டப்பட்ட இடங்களுக்குச் செல்ல வல்லவனும், எங்கும் தடையின்றித் தாவவும் செல்லவும் சக்தி படைத்தவனுமாகி மிகவும் புகழ் பெற்று விளங்குவான். ராவணன் அழியவும், ஸ்ரீராமன் மனம் மகிழவும் காரணமான மிகப் பெரிய போரில், மிகப் போற்றத்தக்க காரியங்களைச் செய்து வெற்றிவீரனாக விளங்குவான்” என்று கூறி, வாயுவினிடம் விடைபெற்றுத் தேவர் குழாங்களுடன் தமது இருப்பிடம் சென்றார்.

பிறகு வாயுதேவன் குமாரனை எடுத்துக்கொண்டு இல்லஞ் சென்று, அஞ்ஜனாதேவியிடம் அளித்து, அவனுக்குக் கிடைத்த வரங்களையும் கூறி, ஸந்தோஷத்துடன் அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.
இப்படி இருக்கும்பொழுது, ஹநுமான் பலம் மிக்கவனாகி, எவரையும் மதிக்காமல், மகரிஷிகளின் ஆச்ரமத்தில் புகுந்து அவர்களுடைய பாண்டங்களையும், யாக உபகரணங்களையும் நாசம் செய்து அவர்களுக்கு உபத்திரவம் செய்து வந்தான். இவனால் அல்லற்பட்ட ரிஷிகள், பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட வரத்தினால் இவன் தண்டிக்கத் தகாதவனென உணர்ந்து, அவன் செய்யும் தீமைகளைத் தம்மால் கூடுமான அளவு பொறுத்து, வாயு தேவனிடமும் கேஸரியினிடமும் அதனைத் தெரிவித்தனர்.

ஸ்ரீராமசந்திர! இந்த ஹநுமான், அவர்கள் அறிவுரைகூறித் தடுத்தும் கேளாமல், அளவுகடந்து தீங்கு இழைக்கப் புகுந்தமை கண்டு, பிறகு அங்கிரஸ் என்ற ரிஷியின் வம்சத்தில் தோன்றிய முனிவர்கள் முனிந்து சபிக்கலாயினர். இருப்பினும் அவர்கள், அதிகமாகக் கோபப்படாமல், “ஹே வானர! நீ எந்த பலத்தைத் துணையாகக் கொண்டு எங்களை இப்படி ஹிம்ஸிக்கிறாயோ அந்த பலத்தை நீ எங்கள் சாபத்தினால் மயக்கமடைந்தவனாகி, உணரச் சக்தியற்றவனாகுக. யாவரேனும் உனது பலத்தை எடுத்துக் கூறிப் புகழ்ந்து போற்றி உனக்கு அறிவுறுத்துவாராயின் அப்பொழுதே உனக்கு அந்த பலம் விருத்தியடையக்கடவது" என்று சாபமிட்டனர். பிறகு மாருதி தனது வலிமையொழியப் பெற்றவனாகி,. மறுபடியும் அந்த ஆச்ரமங்களிலேயே அடக்கமுடையவனாக ஸஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

பிறகு ரிக்ஷரஜஸ் என்ற ஒரு வானர அரசன் இருந்தன். அவன் மிக்க பராக்கிரமசாலியாக விளங்கினான். அவனது குமாரர்கள் வாலி ஸுக்ரீவன் என்பவர்கள். ரிக்ஷரஜஸ் இறந்த பிறகு வாலி அரச னானான். ஸுக்ரீவன் இளவரசனானான். ஸுக்ரீவனுக்கும் மாருதிக்கும் இளமை முதலே நட்பு உண்டாகி இருந்தது. அது நெருப்புக்கும் காற்றுக்கும் இருப்பது போன்று இருந்தது. இந்த மாருதி சாபவசத்தால் தன் சக்தியை அறியாமல் இருந்த காரணத்தால்தான், வாலி ஸுக்ரீவ விரோத காலத்தில், வாலிக்குப் பயந்து ஸுக்ரீவன் அல்லல்பட்டுத் திரிந்தபோதும் வாலியை எதிர்க்காமல் இருந்தான். இதுதான் காரணம் வாலியை எதிர்க்காமலிருந்ததற்கு.

ஶ்ரீராம! நீ கூறியபடி பராக்கிரமம், உத்ஸாகம், புத்தி, பிரதாபம், நீதி, வலிமை, சாதுர்யம் ஆகியவற்றில் ஹநுமானைவிட அதிக்ரமித்தவன் இவ்வுலகினில் யாருமில்லை. மேலும், இவன் சூரியபகவானிடம் வியாகரணம் படிக்க விரும்பி அவன் உதிக்கும்பொழுது அவன்முன் நின்றுகொண்டு, அவன் மேற்குத் திசையில் அஸ்தமனமாகும்வரை அவனை நோக்கிக்கொண்டே பின்பக்கமாகவே சென்றுகொண்டு பாடம் கேட்டான். வியாகரண ஸூத்ரங்கள், விருத்தி, வார்த்திகம், பாஷ்யம் முதலியவற்றைக் கசடறக் கற்றான். சாஸ்திரங்களிலோ, பாண்டித்யத்திலோ சந்தஸ் சாஸ்திரங்களிலோ இதர க்ரந்தங்களிலோ தபஸ்ஸிலோ இவனை எதிர்ப்பவர்கள் இவ்வுலகிலோ மேலுலகிலோ யாரும் இல்லை. இவன் ஒன்பது வியாகரண சாஸ்திரங்களையும் நன்கறிந்தவன். ஶ்ரீராம! இவன் உனது அனுக்ரஹத்தால் வருங்காலத்தில் பிரம்மாவாகக்கூட ஆகப்போகிறவன். மஹாப்பிரளய காலத்தில் பூமியை விழுங்க நினைக்கும் ஸமுத்திரத்திற்கும், உலகைக் கொளுத்த முயலும் அக்கினிக்கும், பிரஜைகளை ஸம்ஹரிக்கும் காலதேவனுக்கும் எதிரியாக யாரும் எப்படி இருக்கமுடியாதோ அப்படியே இவனுக்கும் எதிரியாக யாரும் நிற்க முடியாது.

ஹே! ரகுப்ரவீர! இந்த அனுமனைப்போலவே ஸுக்ரீவன், மைந்தன், த்வீவிதன், நீலன், அங்கதன், ரம்பன் முதலான மேன்மை பெற்ற வானர வீரர்களும் உன் ஸஹாயத்தின் பொருட்டு தேவதைகளால் ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்கள். சிறந்த பலசாலிகளான இவர்கள் அனைவரும் ராவண வதம் காரணமாகப் பூமியில் வந்து பிறந்த தேவர்களேயன்றி வேறல்லர்.

ஹே ஶ்ரீரகுகுலதிலக! ஶ்ரீராம! நீ கேட்டதற்கு இணங்க, அனுமானுடையதான பால்யம் முதலான வரலாறு என்னால் கூறப்பட்டது என்று அகஸ்திய முனிவர் கூறி முடித்தார்.

அநுமானின் வரலாற்றைக் கேட்ட ஶ்ரீராமன், லக்ஷ்மணன், மற்றுமுள்ள வானரர்களும் ராக்ஷஸர்களும் மிகவும் ஆச்சர்யத்தை அடைந்தனர்.

பிறகு அகஸ்தியர் தமக்கு விடையளிக்க வேண்ட, ஶ்ரீராமர், “தங்களுடைய தரிசனத்தால் நான் தன்யனானேன். என் பித்ருக்களும் த்ருப்தர்களானார்கள். தாங்கள் செல்ல விரும்புகிறீர்கள். அடியேனுடைய ப்ரார்த்தனை ஒன்றுண்டு. -- அதாவது லோகக்ஷேமார்த்தமாக நான் யாகங்களைச் செய்ய விரும்பியுள்ளேன். எனது பிரார்த்தனைக்கிணங்கத் தாங்கள் ஸதஸ்யர்களாக எழுந்தருளியிருந்து, அவற்றைப் பூர்த்தி செய்வித்து அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். இது எனது பிரார்த்தனை.” என்று விண்ணப்பித்தார்.

இதைக்கேட்ட அகஸ்தியர் முதலான முனிவர்கள் எல்லாரும், “அப்படியே” என்று அங்கீகரித்து விடைபெற்றுச் சென்றனர்.

மகரிஷிகள் சென்றதும், அஸ்தமன வேளை நெருங்கிவிட்டதால், ஶ்ரீராமனும் அங்கிருந்து அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டுத் தாமும் ஸந்த்யோபாஸனம் செய்யச் சென்றார்.