அங்கம் 5
களம் 5
ஐந்தாங் களம்
----XXX----
இடம்: நந்திக்கிராமத்தில் புதிதாய் ஏற்படுத்தப்பெற்ற அரசிருக்கை மண்டபம்.
காலம்: காலை.
பாத்திரங்கள்; பரதர், சத்ருக்நர், சுமந்திரர் முதலிய மந்திரிகள், வசிஷ்டர் முதலிய முனிவர்கள், குடிஜனங்கள், வாயில் காப்போர் முதலியோர்.
[நந்திக்கிராமத்தில் அரசிருக்கை மண்டபத்தில் சிம்மாசனமிட்டு, அச்சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் பரதர் தலையிற் பாதுகைகளைத் தாங்கி நிற்கிறார். இடது புறத்தில் சத்ருக்நர், கையிற் சாமரை பிடித்து வீசிக் கொண்டிருக்கிறார். மற்றையோர் தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றனர். ]
பரதர்:-- (சபையிலுள்ளோர்களைப் பார்த்து,) ஓ, தவசிரேஷ்டர்களே! மதிமந்திரிமார்களே! குடிஜனங்களே!
தீயூட்டித் தாமுண்ணுஞ் செய்தவத்தோ ரானினங்கள்
நோயூட்டு காய மிகழ்ந்தியற்று நோன்பினோர்
வேயூட்டு தோளார் விருத்தர் சிறு பாலர்தமைத்
தாயூட்டிப் போற்றுதல் போற்றார் வேந்தன் காக்குமால்.
என்றபடி, விதிப்படி வேள்வியாற்றிவரும் வேதியர், மாதவர், நோய்க்கிடமாகிய உடலை நொய்தென வெறுத்து இறைவனடிக்கன்பு பூண்டு நோன்பியற்றும் துறவிகள், யாக்கை தளர்வுற்ற முதியோர், அபலைகளான ஸ்திரீகள், குழந்தைகள், பசுக்கள் முதலாயினோரைத் தாய்போலக் காத்து வருதல் வேந்தன் கடமை. அக்கடமையை மேற்கொண்டு கடல் புடை சூழ்ந்த இந்நிலவுலகத்தை, சூரியகுலத்து வந்த என் முன்னோர்கள் நெடுங்காலமாக நெறிமுறை தவறாது அரசாண்டு வந்தனர். வாழையடி வாழையாகக் குலமுந் தழைத்து வளர்ந்தோங்கி வந்தது. என் தந்தையாகிய தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே சத்தியந்தவறாது நெடுங்காலம் செங்கோல் செலுத்தி வந்தனரென்பதை நீங்கள் அறிவீர்கள்.
யார் செய்த பாவமோ, இந்நிலஞ்செய்த நலக்கேடோ, என் வினை செய்த தீப்பயனோ, இக்காலத்தில் என் தந்தை மாய முணராது வஞ்சம் அறியாது சத்தியத்திற் கட்டுண்டு தலைமகனைத் தவிர்த்து ஒன்றுக்கும் பற்றாத என்னை இவ்வரசுரிமைக்கு ஆக்கினர். அவர் இட்ட கட்டளைப்படி சீமந்த புத்திரராகிய ஸ்ரீராமர் காட்டிற்குப் போனார். நான் காட்டிற்குச் சென்று அவரை இரந்து வேண்டியும் அவர் அரசாட்சிக்கு இசைந்திலர். பதினான்கு வருஷமும் என்னையே ஆளும்படி ஆணை தந்தனர். அவ்வாணையை மறுத்தற்கஞ்சியும், வஞ்சனையால் வந்த்தும் மரபல்லாததுமான அவ்வரசுரிமையைத் தாங்கி நடத்த என் மனம் இசைந்திலது. சர்வ உரிமையும் சகல குணங்களும் வாய்ந்த புருஷோத்தமராகிய அவர், தர்மபத்தினியுடனும், தம்பியுடனும் பரதேசியாகிக் காட்டில் காய்கனிகளையுண்டு காலம் கழித்துத் திரிய, பாதகனாகிய நான் சகலவித போக சல்லாபங்களுடன் சிம்மாசனத்திலிருந்து நாடாள்வதா? யானும் அவர் திரும்பி வருமளவும் அவரைப்போலவே தவக்கோலம் கொண்டு காலங்கழிப்பேன். அவரிடமிருந்து பெற்று வந்திருக்கும் அவருடைய திவ்விய திருப்பாதுகைகளை இந்தச் சிம்மாசனத்தில் ஏற்றி, பாதுகைகளின் திருவாணை தாங்கி எவ்விதக் கடமைகளையும் நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறேன். நீங்களும் அரசருக்குச் செய்யவேண்டிய எல்லா மரியாதைகளையும் இவைகளுக்கே செய்து உங்கள் கடமைகளை நிறைவேற்றும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் இனி இராகவர் திரும்பி வருமளவும் அயோத்தியில் அடியெடுத்து வைக்கமாட்டேன். அங்கு வசிஷ்ட பகவான் முன்னிலையில் மந்திரிகளால் நடத்தப்படும் நியாய வழக்கு விசாரணைகளும் இந்த திவ்விய பாதுகைகளின் தீர்மானத்திற்கு வரும்.
[பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைக்கிறார். சத்ருக்நர் அவைகளுக்கு வெண்கொற்றக்குடை பிடிக்கிறார். வசிஷ்டர் முதலிய பிராமணச் சிரேஷ்டர்கள் ஆசீர்வாத மந்திரங்கள் கூறிப் பாதுகைகளின்மீது அக்ஷதை யிறைக்கின்றனர். வாத்யங்கள் முழங்குகின்றன. பட்டாபிஷேகம் நிறைவேறுகிறது.]
இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்
நிறைவுற்றது.