சனி, 18 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் -- உத்தர காண்டம் 33

ஐம்பத்து மூன்றாம் ஸர்க்கம்

[ஸ்ரீராமன் தான் கேள்விப்பட்ட லோகாபவாதத்தைத் தனது உடன் பிறந்தோருக்குத் தெரிவிக்க அவர்களை அழைத்தல்,)

        இப்படியாகத் தனது நண்பர்களை அனுப்பிய ஸ்ரீராமன் சற்று ஆலோசனை செய்து இதனைத் தனது ஸஹோதரர்களுக்குத் தெரிவிக்க விரும்பியவனாய், ஸமீபத்திலிருந்த வாயிற்காப்போனை யழைத்து, 'நீ உடனே சென்று, அங்குள்ளவனான லக்ஷ்மணனையும், மஹாபாக்யசாலியான பரதனையும், மாவீரனான சத்ருக்னனையும், நான் உடனே இங்கு வரச் சொன்னதாகக் கூறியழைத்து வரவும்' என்று கூறினான். அந்த வாயிற் காப்போனும், வணங்கியவனாய், அங்கிருந்து புறப்பட்டு லக்ஷ்மணனுடைய மாளிகைக்குச் சென்றனன்,

ஒருவராலும் தடுக்கப்படாத அவன், லக்ஷ்மணனைப் புகழ்ந்து விட்டு, வணக்கத்துடன், ஸ்ரீராமச்சந்திரன் உன்னை உடனே காண விரும்புகிறார். சீக்கிரமாகச் செல்லவும்' என்று கூறினான். உடனே லக்ஷ்மணன் அங்கிருந்து புறப்பட்டு வேகத்துடன் ரதத்திலேறிக் கொண்டு ஸ்ரீராமமந்திரத்தை நோக்கிச் சென்றான். பிறகு த்வார பாலகன், பரதனையணுகி, விநயத்துடன், ராமனுடைய கட்டளையைத் தெரிவித்தான். அதைக் கேட்ட பரதன் உடனே ஆஸனத்திலிருந்து எழுந்து, வேகத்துடன் கால் நடையாகவே ஸ்ரீராம க்ரஹத்தை நோக்கிச் சென்றான். பிறகு த்வாரபாலகன் சத்ருக்னனையணுகி ஸ்ரீராமனுடைய நியமனத்தைக் கூறி, லக்ஷ்மண பரதர்கள் சென்றுள்ளதையும் கூறினான். சத்ருக்னன் தலை வணங்கியவனாய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இவர்களனைவரும் வந்துள்ளதை த்வாரபாலகன் ஸ்ரீராமனிடம் தெரிவித்தான். ஸ்ரீராமனும் உடனே அவர்களை உள்ளே அனுப்ப ஆஞ்ஞாபித்தான். இந்திரனுக்கு நிகரான தேஜஸ்ஸை உடைய அந்த மூவரும் வணக்கத்துடன் ஸ்ரீராமன் ஸமீபம் சென்றனர். அங்கு அவர்கள் ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போன்று, வாட்டமுற்ற முகத்துடன் கூடின ஸ்ரீராமனைக் கண்டு, திகைத்தனர். அவருடைய முகமானது, ஸந்த்யாகாலத்தில் ஒளிகுன்றிய சூரியன் போன்று காணப்பட்டது. கண்கள் தாரை தாரையாக நீரைப் பெருக்குகின்றன. இதைக் கண்டு மனம் கலங்கிய அவர்கள். ஸ்ரீராமனின் ஸமீபம் சென்று வணங்கி நின்றனர். அவர்களை ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்ரீராமன், அவர்களை ஆஸனங்களில் அமரும்படி ஆஜ்ஞாபித்தான். அவர்களைப் பார்த்து ஸ்ரீராமன் “ஸஹோதரர்களே! நீங்களே எனது ஸம்பத்துக்கள். நீங்களே எனது பிராணன்கள். உங்களுடைய ஸஹாயத்தினாலேயே நான் இந்த ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்கின்றேன். நீங்கள் சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்கள். புத்திசாலிகள். அப்படிப்பட்ட நீங்கள் என்விஷயமாகச் சிறிது, யோசிக்க வேண்டியது உள்ளது" என்றார். இப்படி ஸ்ரீராமன் கூறியதும் லக்ஷ்மண பரத சத்ருக்னர் மூவரும், மனக்லேசம் அடைந்தவர்களாய், "ஸ்ரீராமன் என்ன கூறப் போகிறானோ' என்று யோசித்தவண்ணமிருந்தனர்.

ஐம்பத்து நான்காவது ஸர்க்கம்

[ஸ்ரீராகவன்,லக்ஷ்மணன் முதலியோரிடம், அபவாதச் சொல்லைக் கூறி, ஸீதையை வால்மீகி முனிவரின் ஆச்ரம ஸமீபத்தில் விட்டு வரும்படி லக்ஷ்மணனுக்குக் கட்டளையிடுதல்.]

        இப்படி இவர்கள் ஆலோசிக்குமளவில், ஸ்ரீராமன் அவர்களை பார்த்து, வாட்டமடைந்த முகத்தை யுடையவராய், "ஹோதரர்களே! நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். மனக்கலக்கமடையாதீர்கள். லோகாபவாதமானது மிகவும் கொடியது. ஸீதையினிடத்தில் அபவாதமும், என்னிடம் அருவருப்பும் ஜனங்களுக்கு உண்டாகியுள்ளனவென்று அறியப்படுகிறது. இது என்னை மிகவும் வாட்டுகிறது. நான் உயர்ந்ததான இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். ஸீதையும். உயர்ந்த ஜனக குலத்தில் உதித்தவள். லக்ஷ்மண! நீ இதை யறிவாய். முன்பு தண்டகாரண்யத்தில் தனித்திருந்த ஸீதையை ராவணன் அபஹரித்துச் சென்றான். அவனை நான் வதம் செய்தேன். அப்பொழுது அயலார் வீட்டில் வஸித்த இவளை எப்படி நான் மாசற்றவளாகக் கருதி நம் வீட்டிற்கு அழைத்து செல்வது என்று யோசித்தேன். அதன் பொருட்டு இவள் அக்னி பிரவேசம் செய்து தன்னை மாசற்றவளாக நிரூபித்தாள். இது உனது   கண் முன்பாகவே நடந்தது. அங்குக் கூடியிருந்த அனைவரின் முன்பும் அக்னி பகவானும் வாயுதேவனும், சூரிய சந்திரர்களும், ஸீதை குற்றமற்றவள், உத்தமபத்னீ என்றெல்லாம் கூறினர். இதையும் நீ நேரில் கண்டறிந்தவன். எனது அந்தராத்மாவும் ஸீதை பதிவ்ரதை என்பதை நன்கறிந்துள்ளது. எனவே நான் இவனை அயோத்யைக்கு அழைத்து வந்தேன். அப்படியிருந்தும் இந்த ஜனங்களால் கூறப்படும் அபவாதம் என்னை மிகவும் சோகத்திலாழ்த்துகிறது. லோகாபாவதம் மிகவும் பெரியதாகி விட்டதே. அபவாதம் ஒருவனுக்கு உலகில் பரப்பப்படுமாகில், அது உலகில் பரவ வழங்குமளவும், அவன் இழிவான உலகங்களை யடைந்து கஷ்டப்படுவான். இவ்வுலகில் உயர்ந்தவர்களான பலரும், பாடுபடுவதெல்லாம் புகழ் பெறுவதற்கேயன்றோ? நான் லோகாபவாதத்திற்கு மிகவும் பயந்தவனாதலால், அதனை விலக்கிக் கொள்ளுவதற்காக, நான் எனது உயிரையும் விட்டுவிடுவேன். புருஷச்ரேஷ்டர்களான உங்களையும் கைவிடுவேன். அங்ஙனமாக உள்ளபோது, ஸீதையை பரித்யாகம் செய்யக் கேட்கவும் வேண்டுமா? ஆகவே சோகஸாகரத்தில் மூழ்கியுள்ள என்னைப் பார்த்து எனது சொல்லுக்குக் கட்டுப்படுக" என்று கூறினான்.

        பிறகு லக்ஷ்மணனைப் பார்த்து - “ஹே லக்ஷ்மண! நீ நாளை விடியற்காலையில் ஸுமந்திரரால் செலுத்தப்படவுள்ள ரதத்தில் ஸீதையை ஏற்றிக் கொண்டு, நமது தேசத்தின் எல்லையில், கங்கா நதியின் மறுபக்கத்தில் விளங்கும் வால்மீகி மஹரிஷியினுடைய ஆசிரமத்திற்கு ஸமீபத்தில், ஒருவருமில்லாத ஸமயத்தில், ஒரு இடத்தில் அவளை விட்டு விட்டு வரவும், சீக்கிரமாக வரவேண்டும்.”

        இவ்விஷயத்தில் எனக்கு மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது. மறுத்தால் எனது அப்ரீதிக்கு விஷயமாவாய். நீங்கள் யாவருமே இவ்விஷயமாய் மறுத்துப் பேசுவதை நான் விரும்பவில்லை. எனது உயிரின்மீது ஆணை. எனது கைகளின் மீது ஆணை. எனது வார்த்தைக்கு மறுப்புச் சொல்பவன் எனது பகைவனாவான். இதை நன்கு உணரவும். ஸீதையை நான் சொன்னபடி அரண்யத்தில் விட்டு வரவும். முன்னொரு சமயம் ஸீதை என்னிடம் கங்காதீரத்திலுள்ள முனிவர்களின் ஆச்ரமங்களைக் காண வேண்டும் என்று கூறியுள்ளாள். அதையே வியாஜமாகக்கொண்டு, இப்பொழுது நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். நாளை உதயகாலத்தில் நீ ஸீதையைத் தேரிலேற்றிச் சென்று, நமது நாட்டுக்கு அப்பால் சேர்த்து விடவும். கங்காநதியின் அந்தப்பும் தமஸா நதி தீரத்தில் வால்மீகி முனிவரின் ஆச்ரமமுள்ளது. ஜ்ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.” என்று கூறினான்.

        இப்படிக்கூறிய ராமன், கண்களில் நீர் தளும்பப்பெற்றவனாய் பெருமூச்சு விட்டுக்கொண்டு மனையுள் புகுந்தான்.

ஐம்பத்தி ஐந்தாம் ஸர்க்கம்

(லக்ஷ்மணன், ஸீதையை. ராமனின் கட்டளைப்படி, ரிஷிகளின் ஆச்ரமங்களைக்

காட்டுவதற்காக அழைத்துச் செல்வதாகக்கூறி அழைத்துச் செல்வது)

        பிறகு அன்றிரவு கழிந்ததும் மறுநாள் உதயத்தில். லக்ஷ்மணன் மிகுந்த துக்கமடைந்து, வாடிய முகத்துடன், ஸுமந்திரரைப் பார்த்து ஸீதையமர்ந்து செல்லும்படியான ஆஸனத்தை ஸித்தப்படுத்தி, ரதத்தைக் கொண்டு வரும்படி ஆஜ்ஞாபித்தான் பிறகு ஸீதையிடம் சென்று, 'தேவி! தேவரீர், முனிவர்களின் ஆச்ரமங்களைத் தரிசித்து வரவேண்டுமென்று. ஸ்ரீராமனை வேண்டினீர்களாம். அவரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாராம், அதன் பொருட்டு இன்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது தாங்கள் எழுந்தருளினால், கங்கா தீரத்தில் முனிவர்கள் ஆச்ரமங்கள் நிறைந்த அரண்யத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லுகிறேன்” என்று விண்ணப்பம் செய்தான். லக்ஷ்மணன் இப்படிக் கூறக்கேட்டு, ஸீதை மிகுந்த மன மகிழ்ச்சியுடன், உயர்ந்த ஆடையாபரணங்களை எடுத்துக் கொண்டு, “இவற்றை நான் அவ்வனத்திலுள்ள ரிஷி பத்னிகளுக்கு அளிக்கப் போகிறேன்”. என்று கூறிப் பிரயாணமாயினள்.'

        ஸுமந்திரனால் ஸித்தமாகக் கொணரப்பட்ட தேரில், லக்ஷ்மணன் ஸீதாதேவியையேற்றிக் கொண்டு ராமனது கட்டளையை மனதிற் கொண்டு, குதிரைகளைத் தீவிரமாகச் செலுத்தி வேகமாகச் சென்றான். அப்படிச் செல்லுகின்றபொழுது, ஸீதை நடுவழியில், லக்ஷ்மணனைப் பார்த்து, 'லக்ஷ்மண! இதென்ன? நடுவே. அபசகுனங்கள் அனேகம் காணப்படுகின்றனவே! எனது கண் துடிக்கின்றது. உடல் நடுங்குகின்றது. உள்ளமும் நிலை கொள்ளாமல் கலக்கமுறுகின்றது. இப்பூமி முழுவதும் எனக்கு, சூன்யமாகவே காணப்படுகின்றது. அண்ணனிடத்தில் அன்பு மாறாத உத்தமனே! உனது அண்ணனுடைய திருமேனியை நான் எப்பொழுதும் நினைக்கிறேன். அவர் எனதுள்ளத்தினின்றும், ஒரு நிமிஷமேனும் அப்புறம் விலகுவதில்லை, அவருக்கு ஒருவித குறையுமில்லாதிருக்குமோ? மாமிமார்களுக்கும் மற்றுள்ள ஜனங்களுக்கும் துன்பமொன்றுமில்லாதிருக்க வேண்டுமே, என்று இப்படியாக, உரைத்து கைகூப்பிக் கொண்டு, தனது இஷ்ட தேவதைகளை வேண்டிக் கொண்டனள். இது கேட்டு லக்ஷ்மணன் உள்ளத்தில் துயரங் கொண்டவனாயிருந்தபோதிலும், அதை வெளியில் காட்டாமல் ஸந்தோஷமே காட்டி 'அனைவருக்கும் மங்களமுண்டாகட்டும்" என்று கூறி, அன்றிரவு கோமதீ நதிக்கரையிலுள்ள ஓர் ஆச்ரமத்தில் வஸித்தான். மறுநாள் உதயமானதும் கங்கா நதிக்கரையை யடைந்தான். அப்பொழுது நடுப்பகலாயிருந்தது. லக்ஷ்மணன் கங்கா நதியைப் பார்த்து. விசனமுள்ளடங்காமல், உரத்த குரலில் கதறலாயினன். இது கேட்டு, ஸீதை லக்ஷ்மணனை நோக்கி, ‘லக்ஷ்மண! நீயேன் இங்ஙனம் வருந்துகிறாய்? நீ எப்பொழுதும் ராமனை விட்டுப் பிரியாதவனாதலால் இவ்விரண்டு நாளாக, அவனது பிரிவாற்றாமை யினால் வருந்துகிறாயா? நானும் ராமனைக் காண ஆவல் கொள்கிறேன். சீக்கிரம் என்னை. இந்த கங்கா நதியின் அக்கரை சேர்ப்பித்து, அங்குள்ள முனிவர்களை எனக்குக் காட்டவும். நான் அவர்களுக்கு வஸ்திர ஆபராணாதிகளைக் கொடுத்து விதிப்படி அவர்களை வணங்கிப் பூஜித்து விட்டுத் திரும்புகிறேன், என்றாள். ஸீதை இவ்வாறு கூறக் கேட்டு, லக்ஷ்மணன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓடக்காரனையழைத்து. ஓடம் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவன் அவ்வாறே ஓடமொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினன்.

ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கம்

[ஸீதையை, கங்கையின் அக்கரையை யடைவித்து, வால்மீகி முனிவருடைய
ஆச்ரம ஸமீபமழைத்துச் சென்று
,
அங்கு ஸ்ரீராமனின் கட்டளையைக் கூறுவது]

        பிறகு லக்ஷ்மணன், தேரை ஸுமந்திரன் வசமிருத்தி, ஸீதையுடன் படகிலேறி கங்கா நதியின் தென் கரையை அடைந்தான். அங்கு, லக்ஷ்மணன் கண்களில் நீர் ததும்பக் கைகளை கூப்பிக் கொண்டு “ஹே ஸீதே! தேவி! இப்பொழுது நான் தங்களுக்கு, ஒரு செய்தியை விண்ணப்பம் செய்யப் போகிறேன். அது நமது மகாராஜாவின் கட்டளையாகும். அந்தோ! இத்தகைய கொடிய காரியம் செய்வதற்கு, உடன்பட்டு நான் உலகத்தாரின் பழிக்கு ஆளானேன். ஐயோ! எனக்கு இச்சமயத்தில் மரணமேனும் ம்ருத்யுவேனும் ஸம்பவிக்குமேயாகில் அதுவே மிகச்சிறப்புடையதாகும். தாங்கள் எனக்கு அருள் புரியவேண்டும். என்னை தவறு செய்பவனாக நினைக்கக் கூடாது" என்று புலம்பிய வண்ணம் கை கூப்பிக் கொண்டுக் கீழே விழுந்தான்.

        மைதிலி இதுகண்டு திகைப்படைந்தவளாய் ‘லக்ஷ்மண! இஃதன்ன எனக்கொன்றும் விள்ங்கவில்லையே! நடந்த விருத்தாந்தமென்ன? நீ ஏன் இப்படி வருத்தமடைய வேண்டும்? என்றுகேட்டாள். இப்படி மைதிலி வினவியதும் லக்ஷ்மணன், அவளிடம், தழுதழுத்த குரலில், ராஜஸபையில், சாரன் சொன்ன செய்தியையும், அதனால் ஸ்ரீராமன் மனம் நொந்து, தனக்கு அளித்த கட்டளையையும் விரைவாக ஒன்றும் விடாமல் கூறி, மீண்டும் அவளை நோக்கி, ‘வைதேஹி! தாங்கள் சிறிதும் கலக்கமுற வேண்டாம். இதோ கங்கைக் கரையில் மஹரிஷிகளது ஆச்ரமங்கள் காணப் படுகின்றன. நமது தந்தையான தசரத சக்ரவர்த்திக்கு ஆப்த நண்பரான வால்மீகி முனிவர் இங்கு வஸிக்கிறார். அவர் கருணையே வடிவெடுத்து வந்தவர்போன்ற அந்தணர் பெருமான். அவர் திருவடிவாரம் சேர்ந்து, தாங்கள் அங்கு ஸுகமாக வஸிக்கவும். தாங்கள் பதிவ்ரதா சிரோமணியாதலால், கணவனையே என்றும் மனதினில் த்யானித்துக் கொண்டு, விரதத்துடன் உபவாஸமிருந்து இனிது வாழ்க. இப்படி அனுஷ்டித்து வருவீராகில் தங்களுக்கு நன்மையே உண்டாகும்', என்று விஜ்ஞாபித்தான்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் -- உத்தர காண்டம் 32

ஐம்பத்தோராவது ஸர்கம்

[ஸீதையும் இராமனும் உத்யான வனம் சென்று மகிழ்வதும், ஸீதை கர்ப்பம் தரித்தலும், அவள் மறுபடி கங்கா தீரம் சென்று ரிஷிகளாச்ரமத்தில் ஒரு நாளேனும் தங்கி வஸிக்க விரும்பியதும்.)

        இப்படியாக ஸ்ரீராமசந்திரன் புஷ்பக விமானத்திற்கு விடை கொடுத்து அனுப்பிய பிறகு, உல்லாஸமாக உலாவிப் பொழுது போக்குமாறு, ஒரு நாள் தனது உத்யான வனத்திற்குச் சென்றான். அந்த உத்யான வனத்தில் அனேக அழகிய மரங்களும், பல விதமான மணங்கமழும் புஷ்பச்செடிகளும், எங்கும் நிறைந்திருந்தன. அங்கு மதுவைக் குடித்து வண்டினங்கள் முரல, மயிலினங்கள் ஆட, குயிலினங்கள் கூவ மிகவும் ரமணீயமாயிருந்தது. தேன் நிறைந்து மணம் வீசுகின்ற தாமரை, கருநெய்தல் முதலான புஷ்பங்கள் மலர்ந்து, வேறு நானாவிதமான மலர்கள் நிறைந்த, பலவிதமான வாவிகள் தெளிந்த நீர் நிறையப் பெற்று அங்கங்கு அதிகமாகத் தோற்றமளித்தன. அவ்வாவிகளெங்கும், மாணிக்கக் கற்களால் படித்துறைகள் கட்டி, ஸ்படிகக் கற்களால் மறை சுவர் எடுத்து நீராடும் துறைகளமைந்து அழகு பெற்றிருந்தன. அந்த வாவிகளில் மலர்ந்த தாமரைக் காட்டிலே, சக்கரவாகம், ஹம்ஸம், ஸாரஸம் முதலான நீர்ப் பறவைகள் சிறகடித்துக் கலவிக்களித்து விளையாடிக் கொண்டிருந்தன. இவ்வித அழகு பெற்று, அங்கங்கே அனேகவிதமான ஆஸனங்களும், சிறு வீடுகளும், கொடிவீடுகளும் அமைந்து, தேவேந்திரனுடைய நந்தவனமெனவும், குபேரனது சைத்ரரதமெனவும் விளங்கும், அந்தப் பூஞ்சோலையில் புகுந்து, ஸ்ரீராமசந்திரன், ஸீதா தேவியுடன் அங்கோரிடத்தில் தனக்கென நிர்மாணித்திருந்த அழகான ஆஸனத்தில் அமர்ந்திருந்தனன். அப்பொழுது ஸ்ரீராமன் தனது காதலியைக் கையிற் பிடித்துக் கொண்டு, 'மைரேயம் என்கிற மதுரமான, ஒருவகைத் தேனை அந்த ஸீதைக்கு உண்பிக்கலாயினன். அக்காலையில், வேலையாட்கள் ஸ்ரீராமனுக்கு, அழுது செய்வதற்காகப் பலவிதமான கனிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆடல், பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களான அழகிய இளம் மங்கையர்கள் மது பானம் செய்து மதித்தவர்களாகி, ஸ்ரீராமனுக்கு முன்பு வந்து தோன்றி. ஆடிப்பாடிப் புகழ்ந்தனர். அகங் களிக்கச் செய்பவர்களான அவ்வழகிகளைக் கண்டு ஸ்ரீராமன் தனது காதலியோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான்.

        இப்படித் தினந்தோறும் ஒழிந்த வேளைகளில் அவ்விருவரும் உத்யானவனம் சென்று வினோதமாகப் பொழுதுபோக்கி வந்தனர். ஸகல போகபோக்யங்களையும் பெற்று வாழும் ஜாநகீ ராமர்களுக்கு, இவ்விதமாகவே பதினாயிரம் ஆண்டுகள் பெருமையாகச் சென்றன. அது காலையில் ஸ்ரீராமபிரான் பிரதி தினமும் முற்பகலில் ராஜாங்க ஸம்பந்தமான ஸகல காரியங்களையும், நீதி முறை தவறாது நிறை வேற்றி, அதன் பின்னர் அந்தப்புரம் சென்று பிராட்டியுடன்  அகமகிழ்ந்திருக்கலாயினன்.

        இங்ஙனம் நிகழ்ந்து வருகையில், ஸீதை கர்ப்பவதியாயினள். அப்பொழுது ஒரு நாள், ஸ்ரீராமன் ஸீதா தேவியை நோக்கி, ''வைதேஹி! நீ கர்ப்பமுற்றிருப்பது எனக்கு[T1]  மிகவும் ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறது. நீ இப்பொழுது விரும்புவது யாது? நீ எதை வேண்டினாலும் அதை நான் நிறைவேற்றுவேன்?' எனக் கூறினான். இது கேட்டு ஜனகராஜன் மகளான ஸீதை புன்னகை கொண்டு, "ஸ்வாமி, ஸகல கல்யாண குணங்களும் வாய்ந்த தேவரீரைக் கணவராகப் பெற்ற அடியாளுக்கு, வேறென்ன விருப்பமுள்ளது? ஆயினும் தேவரீரே இங்ஙனம் கேட்கிறபடியால், ஒன்று வேண்டுகிறேன். முன்பு போல இன்னுமொரு தரம் கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோவனங்களிற் சென்று, அங்கே கனி கிழங்குகளையே உணவாகக் கொண்டு, விளங்கும் மஹரிஷிகளுடைய பாத மூலத்தில் பணிவிடை செய்து கொண்டு அவ்விடத்தினழகை அனுபவிக்க விரும்புகிறேன். பலநாள் தங்கியிருக்க இயலாமற் போனாலும் ஒரு நாளாயினும், அவ்விடம் போயிருந்து வரவேண்டுமென விரும்புகிறேன்" எனக் கூறினாள். இது கேட்டு ஸ்ரீராமன், 'ஜானகி] அங்ஙனமேயாகுக. நாளைய தினமே அவ்விடம் சென்று வரலாம்'' என உரைத்து ஸந்தோஷித்திருந்தனன்.

 

ஐம்பத்து இரண்டாம் ஸர்க்கம்

[ஸ்ரீராகவன் சாரன் வாயிலாக, ஸீதாபவாதவார்த்தையை ஜனங்கள் கூறுவதாகக் கேட்டறிதல்.)

        இவ்வாறு ஆனந்தமாயிருக்கும் பொழுது, ஒரு நாள் ஸ்ரீராகவன் மந்திரி முதலானோர் புடைசூழ, ராஜ ஸபையில் எழுந்தருளியிருக்கையில், விஜயன், மதுமத்தன், காச்யபன், மங்களன், கடன், ஸுராஜன், காலியன், பத்ரன், தந்த வக்த்ரன், ஸுமாகதன், முதலானவர்கள் வந்து, பலவிதமான பரிஹாஸக் கதைகளை பேசி, அரசனுக்கு ஸந்தோஷத்தை விளைவித்து வந்தனர், அப்பொழுது ஸ்ரீராகவன் அவர்களைப் பார்த்து, 'நல்லது, இது இவ்வளவோடு நிற்கட்டும். ஹே பத்ர! நகரத்திலாயினும் நாட்டிலாயினும், நகரத்தாரும் நாட்டாரும், என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? ஸீதையைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? பரதன் லக்ஷ்மணன் சத்ருக்னன், நம் தாயாரான கைகேயி இவர்களைப் பற்றி என்ன என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர்? நாட்டிற்குப் புதிதான ஒரு அரசன் ஏற்படுகையில் ஜனங்கள் ஏதாவதொன்றை அவனைப் பற்றிக் கூறுவது உலக வழக்கமன்றோ” என்று கேட்டனன். அது கேட்ட பத்ரன் என்பவன், கை கூப்பிய வண்ணம் மேல் வருமாறு கூறினான்.

        அரசரே! தேவரீர் ராவணனை வதம் செய்து வெற்றி வீரனாக வந்ததை இந்நகரத்தாரனைவரும் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்றான். அதனைக் கேட்ட ஸ்ரீராமன், 'ஹே பத்ர! இது மட்டுமா? இன்னும் ஏதேனுமுள்ளதா? நன்மையோ தீமையோ, நகர வாஸிகள் கூறுமெல்லாவற்றையும் ஒன்று கூட விடாது யாவும் உண்மையாக நீ கூறவேண்டும், நன்மையோ தீமையோ எனக்குத் தெரிந்ததாகில் தீமையை ஒழித்து நன்மையை நான் வளர்த்த முயலலாகுமன்றே. ஆகவே நீ பயமின்றி தைரியத்துடனே, நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும், எங்களைப் பற்றிக் கூறிக் கொள்ளுகின்ற அனைத்தையும் விளக்கமாகக் கூறுவாயாக' என்று பணித்தனன்.

                ஸ்ரீராமன் இவ்வாறு கூறக்கேட்டு, பத்ரன், அவரை வணங்கி, “ராஜனே! ஜனங்கள் பலரும் பேசிக்கொள்வது யாவதெனில், ஸ்ரீராமன் ஸமுத்திரத்தில் அணை கட்டி சூரனான ராவணனை வென்று, ஸீதா தேவியை மீட்டு வந்தது மிக்கப் பெருமையாகக் கொண்டாடத் தகுந்ததேயாயினும், அவனுக்கு ரோஷமென்பது சிறிதுமில்லாமற் போனது மாத்திரமே ஒரு பெருங்குற்றமாகும். ராவணன் வலிய எடுத்து, தன் மடி மீது வைத்துக் கொண்டு, இலங்கை சென்று வெகு நாள் சிறை வைத்த ஸீதையை ஸ்ரீராமன் மறுபடி தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தானே! அந்த ஸீதையினிடத்தில் அவனுக்கென்ன அத்தனை மோகமா? இவ்வாறு இராக்கதர் வசத்தில், வெகு நாள் இருந்த மனைவியை இவ்விராமன் ஏன் வெறுக்காது, வைத்துக் குலாவுகின்றானோ? யாமறியோம். இதனைப் பார்க்கையில், நமது பெண்டிர்கள் இங்ஙனம் பிறர் வீட்டிற் போயிருந்து மீண்டு வரினும் நாமும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தாகின்றதே, அரசன் செல்லுகின்ற வழியேயன்றோ குடிகளும் செல்லும். "யதாஹி குருதே ராஜா ப்ரஜா தமநுவர்ததே"  यथाहि कुरुते राजा प्रअजा तमनुवर्तते என்று நாடு நகரத்திலுள்ள ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொள்ளுகின்றனர், என விண்ணப்பம் செய்தான். இதனைக் கேட்ட ஸ்ரீராகவன் மிகவும் துக்கமடைந்தவனாக, மற்றைய ஸுஹ்ருத்துக்களைப் பார்த்து, இந்த பத்ரன் கூறுவது உண்மை தானா? என்று கேட்டான். அதற்கு அவர்களனைவரும், வணக்கத்துடன், 'இவன் கூறுவது யாவும் உண்மையே' எனக் கூறினர். இதனால் மேலும் துக்கமடைந்த ராகவன், ஸபையைக் கலைத்து, அவர்களை யனுப்பிவைத்தான்.

 [T1]

வியாழன், 16 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 31

நாற்பத்தொன்பதாவது ஸர்கம்

[ஸ்ரீமானான ராமபிரான் வானரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் விடையளித்தனுப்புதல்)

                இப்படியாக அயோத்யாதிபதியான ஸ்ரீராமன் அவர்களை விட்டுப் பிரிய மனமின்றி எப்பொழுதும் அவர்களுடனே கூடிக் களித்திருந்தான். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீராமன், ஸுக்ரீவனை நோக்கி 'வானர அரசனே! நீ உனது ராஜ்யமான கிஷ்கிந்தையை விட்டு வந்து வெகுநாட்களாகின்றபடியால், சீக்கிரமே அங்கு சென்று உனது மந்திரிகளுடன் கூடி ஸந்தோஷமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வரவும்' என்று கூறி; அவனை மார்புறத் தழுவி, பின்னும் மற்ற வானர வீரர்களையும் தனித் தனியே ஆலிங்கனம் செய்து கொண்டனன். பிறகு விபீஷண ஆழ்வானை நோக்கி, 'அரக்கர் கோனே! நீ தர்மங்களனைத்தையும் நன்குணர்ந்தவன் என்பது எனது துணிவு. ஆதலால் நீ உனது ஸாமர்த்யத்தைக் கொண்டு, தர்மமார்க்கம் தவறாமல் இலங்கா ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்து வரவும்.

                உனது நகரத்திலுள்ளவர்களுக்கும் மற்றுமுள்ள ராக்ஷஸர்களுக்கும் உனது ஸஹோதரனான குபேரனுக்கும், நீ உண்மையான விருப்பத்திற்கு இடமானவனன்றோ? ஆகவே அவர்களின்பால் நீ விரோதமான செய்கை எதனையும் செய்யாமலிருக்கவும். எப்பொழுதும் நீ அதர்மமான காரியத்தில் மனதைச் செலுத்தாமலிருக்க வேண்டும். ஸுக்ரீவனையும் என்னையும் நீ என்றைக்கும் மறவாது உள்ளத்தில் வைத்து அதிகமான அன்பு பாராட்டி வரவேண்டும். இனி நான் உனக்கு விடை கொடுக்கிறேன். நீ உடனே புறப்பட்டு இலங்காபுரி செல்லவும்" எனக் கூறி அனுமதி யளித்தான்.

        அப்படி ஸ்ரீராமன் அனுமான் வேண்டிக் கொண்டபடி, அவனை நோக்கி, 'வானரச்ரேஷ்டனே! இவ்வுலகத்தில் எனது சரித்திரம் என்வளவு காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் உனது புகழும் நீடித்து நிலைத்திருக்கக் கடவது. இவ்வுலகம் எத்தனை காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் எனது கதையும் இங்கு அழியாதிருக்கும். ஆஞ்சநேய! அவ்வளவு காலம் உனது சரீரத்தில் ஜீவனும் நிலைத்திருக்கும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும் கைமாறாக நான் எனது பிராணனை அளித்தாலும் போதுமோ? கைம்மாறு செய்வதற்கு ஆபத்துக் காலமே ஏற்ற தருணமாகும். உனக்கு ஆபத்தும் நேர வேண்டாம். நான் கைம்மாறு செய்யவும் வேண்டாம்” எனக்கூறி தான் கழுத்தில் அணிந்து கொண்டிருந்ந சந்திரனுக்குச் சமமானச் சோதி பெற்ற அற்புதமான ஹாரமொன்றைக்கழற்றி அனுமானது கழுத்திலிட்டனன். பிறகு வானரர்களும் ராக்ஷஸர்களும், ஸ்ரீராமச்சந்திரனைத் தலை குனிந்து, அடிபணிந்து விடை கொள்ளலாயினர்.

        ஸுக்ரீவன் ஸ்ரீராமனை மார்புறத் தழுவி அவனை விட்டுப் பிரிய வேண்டுமேயென்கிற துயரத்தினால் மெய்மறந்தவனாகியதும் ராமனால் ஸமாதானம் செய்யப் பெற்று விடை கொண்டான். ஸகலமான வானரர்களும் இராக்கதர்களும் உடலை விட்டுப் பிரியும் உயிரென அடங்காத துயரத்துடன், கண்ணீர் தாரை தாரையாகப் பெருக. ஶ்ரீராமச்சந்திரனை வணங்கி விடை பெற்றுத் தத்தம் இருப்பிடம் போய்ச் சேரலாயினர்.

ஐம்பதாவது ஸர்கம்

[குபேரனால் அனுப்பப்பட்ட புஷ்பக விமானத்தை மீண்டும் அவனிடமே செல்ல விடை கொடுத்தது, பரதன் கூறிய ராஜ்ய வளர்ச்சி)

        இப்படியாக, ஸ்ரீராமபத்ரன் வானரர்களுக்கும். இராக்கதர்களுக்கும், விடை கொடுத்து அனுப்பிய பின், ஒரு நாள். ஸஹோதரர்களுடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில் ஆகாயத்தில் அற்புதமான சப்தத்துடன் ஒரு வாக்குக் கேட்டது. அது என்ன வெளில்?

        ''ஹே ராம! நான் குபேரனிடமிருந்து, அவனாலனுப்பப்பட்டு வந்துள்ளேன். புஷ்பகமெனப் பெயர் பெற்றவன். முன்பு நான் உம்மிடமிருந்து விடைபெற்று குபேரனுக்குப் பணி விடை செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டேன். அவன் என்னை நோக்கி, 'அயோத்யாதிபதி ராமனால் எவராலும் வெல்ல முடியாத ராவணன் வதம் செய்யப்பட்டு, அவனிடமிருந்து நீ ராமனால் ஸ்வீகரிக்கப்பட்டவன், பரமாத்மாவான ஸ்ரீராமன் அந்த ராவணனை வென்று உன்னை ஸ்வாதீனம் செய்து கொண்டபடியால் நீ அவனுக்கு அதீனமாகின்றனை. ஆகையால் இனி நீ அந்த ராமனுக்கே வாகனமாயிருக்கக் கடவாய். இதுவே எனது விருப்பம். நீ ஸந்தோஷமாக அவனிடம் சென்று, அவ்வுத்தமனுக்கு வேண்டிய இடம் செல்லச் சிறந்த வாகனமாய் ஆவாய்" என்று கட்டளை யிட்டருளினான். ராம! அவ் வண்ணமே நான் உன்னை யடைந்துள்ளேன். ஆக்ஷேபணையின்றி என்னை ஏற்றுக் கொள்ளவும்'' என்று வேண்டிக் கொண்டது. புஷ்பக விமானதேவதை தன்னிடம் திரும்பி வந்து இவ்வாறு கூறியதைக் கேட்டு, ரகுவீரன், அத்தேவதையை நோக்கி, புஷ்பக விமானமே! அந்தக் குபேரன் எனக்கு நண்பனேயனறி வேறில்லை. நீ எங்கிருப்பிலும் வித்யாஸமில்லை. தற்சமயம் நீ அவனிடமே போய்ச் சேரவும். நான் எப்பொழுது மனத்தில் நினைக்கிறேனோ அப்பொழுது எனனிடம் சேர்ந்து, வேண்டிய இடங்களுக்கு ஆகாயமார்க்கமாய் என்னை வஹித்துக் கொண்டு செல்லவும், நீ பத்துத் திக்குகளிலும் உனக்கு இஷ்டமானப்படி செல்லலாம். நீ செல்லுமனவில் உனக்கு எவ்விடத்திலும் தடையுண்டாகாது. என்று கூறி அனுமதியளிக்க அவ்விமானம் ‘அவ்விதமே யாகுக' என்று தனக்கிஷ்டமானபடி சென்றது.

        இப்படியாக அந்தப் புஷ்பக விமானம் சென்றவுடன், பரதன் ஸ்ரீராமனை வணங்கிப் பின்வருமாறு கூறினன் - ஸ்ரீ ரவிகுர! தாங்களாக்ஷி புரியுங் காலத்தில், பிரஜைகள், வியாதியற்றவர்களாகவும், வயோதிகர்களும் மரணமடையாமலும், கர்ப்பிணி ஸ்த்ரீகள் ஸுக ப்ரஸவமுள்ளவர்களாவும், எல்லோரும் ஸந்துஷ்டர்களாகவுமே யுள்ளார்கள். மழையும் உசித காலத்தில் பொழிகிறது. காற்றும் ஸுக கரமாகவே வீசுகிறது. ஜனங்களெல்லோரும், இப்படிப்பட்ட அரசன் சிரஞ்ஜீவியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.' என்று. இந்த மதுரமான பரதனுடைய வார்த்தையைக் கேட்டு ஸ்ரீராம பத்ரன் மனம் மகிழ்ந்தான்.