வெள்ளி, 24 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷகம்


அங்கம் 2
முதல் களம்

தொடர்கிறது.

இலக்ஷ்மணர்: (குகனை நோக்கி) ஐயா! நீர் யார்?
குகன்: (இலக்ஷ்மணரது இரு திருவடிகளையும் வணங்கி) தேவா! தங்கள் திருவடிச் சேவைக்கு வந்தேன். யான் கங்கையில் போவார் வருவார்க்கு ஓடம் விடும் வேடனாவேன்.
இலக்ஷ்மணர்: அப்படியா! ஆனால் இங்குதானே சற்றிரு. இதோ வருகிறேன். (சற்று தூரத்தில் இருக்கும் இராமரிடம் வருகிறார்.)
இலக்ஷ்மணர்:- அண்ணா! வேடுவன் ஒருவன்; கங்கையில் ஓடம் விடுபவனாம்; தன் பரிசனங்களோடும் வந்துள்ளான். ஆனால் அவன் அவர்களைச் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டுத் தான்மட்டும் தனியே வந்து என்னைக் கண்டான். வெகு பரிசுத்தன்போல் காணப்படுகிறான். மிக வணக்கமாகப் பேசுகிறான்.
இராமர்:-- ஆயின் அவனை இங்கு அழைத்து வா. (இலக்ஷ்மணர் குகனிடம் சென்று, அவனை அழைத்துக்கொண்டு திரும்பவும் இராரிடம் வருகிறார். குகன் இராமரை நமஸ்கரித்துக் கைகட்டி வாய்புதைத்துத் தலைவணங்கி நிற்கின்றான்)
இராமர்:- (குகனைப் பார்த்து) ஐயா! இப்படி அமரலாமே.
குகன்:- சமூகத்தில் அடியேன் அமர்வதற் கேற்றவ னல்லேன்.
 இராமர்:- ஆயின், யாது கருதி எம்மைக் காண விரும்பியது?
குகன்:-- அரசே! அடியேனை, இதன் சமீபத்திலுள்ள சிருங்கிபேரம் என்னும் நகரத்திற்குத் தலைவன் என்று கூறுவார்கள். தாங்கள் அயோத்தியினின்று வந்திருப்பதாகத் தங்களை வழியிற்கண்ட வேதியர் சிலர் சொல்வாராயினர். அதன்மேல் தங்கள் திருவடிச் சேவை வேண்டி வந்தேன். என் பெயர் குகன் என்பதாகும். தேவரீர் திருவமுது செய்வதற்காகத் தேனும் மீனும் சிறிது கொண்டு வந்துள்ளேன். அருள் சுரந்து அவைகளை அங்கீகரிக்க வேண்டுகிறேன். (கொண்டுவந்த தேனையும் மீனையும் இராமருக்குமுன் வைக்கிறான்)
இராமர்:- (புன்னகை புரிந்து) குகா! நீ அன்பொடு கொணர்ந்தன அமிர்தினும் சிறந்தனவாகும். அவைகளை நான் உண்டது போலவே பாவித்துக்கொள். நாளையதினம் நாங்கள் மூவரும் கங்கையைக் கடந்து செல்லவேண்டும். ஆதலால் நீ காலையில் ஓர் ஓடம் கொண்டுவந்து அதில் நாங்கள் ஏறி அக்கரை சேரும்படி செய்வாயா?
குகன்:-- தங்கள் விருப்பம்போல் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.
இராமர்:-- ஆனால் சரி, நீ உன் இருப்பிடஞ் சென்று காலையில் வரலாம்.
குகன்த (இராமரை வணங்கி) அரசே! தங்களை இந்தக் கோலத்தோடு பார்க்க நேரிட்ட என் கண்களைப் பிடுங்கி எறியாதிருக்கின்றேனே! என்னைப்போலக் கள்வன் உண்டோ! அரசுரிமையுள்ள தாங்கள் இத் தவக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டும் தங்களைவிட்டு எவ்வாறு நீங்குவேன்? அடியேன் தங்கள் திருவடிக்குப் பணிவிடை செய்துகொண்டு இங்குதானே இருப்பேன்.
இராமர்:-- (சீதையின் முகத்தையும், இலக்ஷ்மணர் முகத்தையும் பார்த்து)சீதா! இலக்ஷ்மணா! இந்த வேடன் நம்மிடத்து எவ்வளவு அன்புடையவனா யிருக்கிறான், பார்த்தீர்களா? அருமருந்துபோல இவன் நமக்குக் கிடைத்தது நாம் செய்த பாக்கியந்தான். (குகனைப் பார்த்து) அன்ப! நீ எனக்கு எல்லோரினும் இனிய தோழன். உன் விருப்பம்போல் இன்று இங்குதானே இரு.
குகன்:- ஐயனே! அடியேன் தவம் உடையவனானேன். அது ஒருபுறமிருக்கத் தேவரீர் இத் தவ வேடத்தோடு இங்கு வரக் காரணமென்னையோ? அதனை அறிய ஆவலுடையவனாயிருப்பதால் திருவுளங்கொண்டு வாய்மலர்ந்தருள்வீர்களானால், என் மனம் அமைதியுறும்.
இராமர்:-- அங்ஙனமாயின், எனது தம்பி நீ கேட்கும் வரலாறுகளைக் கூறுவான். அறிந்தகொள். (இலக்ஷ்மணரை நோக்கி) தம்பீ! இலக்ஷ்மணா! நடந்த வரலாற்றைக் குகனுக்குச் சொல். நான் சயனித்துக் கொள்கிறேன்.
இலக்ஷ்மணர்:-- சித்தம்.
                (தருப்பையாற் பரப்பிய படுக்கையில் இராமர் சயனிக்கிறார். சீதையும் அருகில் சயனிக்கிறாள். குகனும் இலக்ஷ்மணரும் அப்பாற் போகின்றனர்.)
இலக்ஷ்மணர்: -- (குகனை நோக்கி) நண்பா! அண்ணல் இராமமூர்த்தி அருங் கானடைவதற்கான காரணம் யாதென்றறிய விரும்பினையல்லவா? அந்தக் கொடுமையைக் கூறுகின்றேன். கேள். சக்கரவர்த்திக்குப் பட்டத்துத் தேவியர் மூவரல்லவா? அவர்களுள்,
கல்லும்வல் விரும்பும் வெண்ணெயென் றுரைப்பக் காழ்படு மனத்தகை கேசி
மல்லடு திணிதோட் பரதனுக் குலகம் வழங்கிநீ யேழிரு பருவம்
கொல்புலி வழங்கு கானிடைத் திரியக் கூறின னுந்தையென் றுரைப்ப
வில்விழுங் குயர்தோட் செம்மல்நீ பணித்த விலக்கல னெனத்தொழு தகன்றான்
இரண்டாவது பட்டத்தரசியாய் வந்த பாதகி ஒருத்தி உள்ளாள். வைரம் போல் வலிய அவள் மனத்தோடு ஒப்பிட்டால், கல்லும் இரும்பும், வெண்ணெய் போல் இளகிய பொருள்கள் என்று சொல்லலாம். அவ்வளவு கடின சித்தமுடையவள். அவள் இராமரது பட்டாபிஷேக தினத்தன்று அவரை அழைத்தாள். அண்ணல் யாது காரணமாக அழைக்கின்றாளோவென்று அந்தச் சண்டாளிக்கெதிரே சென்றார். அப்பொழுது அந் நீலி அவரை நோக்கி, " உனது தந்தை இவ் விராச்சியத்தை பரதன் ஆளும்படி நியமித்து உன்னை வனஞ் சென்று பதினான்கு வருஷம் மாதவம் செய்யும்படி கட்டளையிட்டார்" என்று வாய் கூசாது கூறினாள். தமது ஆற்றலால் அரன் வில்லை யொடித்த என் அண்ணல் அக்கொடியாளைப் பார்த்து, "அரசர் கட்டளையல்லாது, தங்கள் கட்டளையாக இருந்தாலும் நான் அதை மறுக்கேன்" என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு, மணக்கோலம் பூண்டு மணிமுடி தரிப்பதுபோகத் தவக்கோலம் பூண்டு, தர்மபத்தினி சீதாதேவியோடும், அயோத்தியை விட்டுப் புறப்பட்டார். இராமபிரானில்லாத அயோத்தியில் இருக்க விருப்பமற்றவனாகி நானும் அவரோடு வனஞ் செல்லத் தீர்மானித்து என் அன்னையார் சுமித்திராதேவியிடம் எனது கருத்தைத் தெரிவித்தேன். நான் செய்த பூஜாபலத்தால் எனக்குத் தாயாக வந்த அம் மங்கையர்க்கரசி,
ஆகாததன்றா லுனக்கவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல்இராமன் அம்மன்ன வன்வையமீந்தும்
போகாவுயிர்த் தாயர்நம் பூங்குழற் சீதையென்றே
ஏகாயினிவ் வயினிற் றலுமேத மென்றாள்.  
இராமனுக்கான வனவாசம் உனக்கு ஆகாததல்ல. ஆதலால் நீ விரும்பியவாறே இராமனுடன் செல். அரணிய வாசம் செய்ய நமக்கு விதியிருந்ததே என்று சிறிதும் மனக்குறை கொள்ளாதே. அந்த அரணியத்தையே இந்த அயோத்தியாயும், இராமனையே உனது தந்தையாகவும், சீதையையே நானாகவும் பாவித்துக்கொள். இனி நீ இங்கிருப்பதும் குற்றமாகும்என்று ஆணை தந்ததுமன்றி,

பின்னும் பகர்வாண் மகனே யிவன்பின்செல் தம்பி
என்னும்படி யன்றடியாரினிலேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின்வா வதன்றேல்
முன்னம் முடியென்றனள் கண்பனிசோர நின்றாள்.

                ‘இராமனுக்குத் தம்பி யென்னும் உரிமையால் அவனுக்கு ஊழியம் செய்வதில் அலட்சியமாயிராது, அவன் அடியானாக இருந்து ஏவல் செய். அவன் அயோத்திக்கு மீண்டு வந்தால் நீ வா; இன்றேல் வராதேஎனவும் கட்டளையிட்டனுப்பினார்கள். உடனே, நான், இராமபிரான், சீதை மூவரும் அயோத்தி விட்டு வந்துவிட்டோம். சுமந்திரர் எங்களைத் தேரிலேற்றி வந்தார். நகரமாந்தரும் எம்மைப் பின்தொடர்ந்து வந்தனர். அயோத்தியின் எல்லையைத் தாண்டவும் பொழுதும் பட்டது. எல்லோரும் தங்கினோம். எம்மை விடாது தொடர்ந்த ஜனங்களைவிட்டுச் செல்லவேண்டி யாவரும் உறங்கும் சமயம் பார்த்து, சுமந்திரரிடம் விடை பெற்று,
தையறன்கற்புந்தன்றகவுந்தம்பியும்
மையறுகருணையுமுணர்வும்வாய்மையும்
செய்யதன்வில்லுமேசேமமாகக்கொண்
டையனுநீங்கினான்அல்லினாப்பணே.
சீதாதேவியின் சிறந்த கற்பும், தம்பியாய்ப் பிறக்கும் பாக்கியம் பெற்ற நானும், தமது குற்றமற்ற கருணையும், அறிவும், சத்தியமும், வீரவில்லும் ஆகிய இவற்றையே தமக்குப் பாதுகாப்பாகக் கொண்டு ஸ்ரீஇராமபிரான் அவ்விடம் விட்டு, அர்த்தராத்திரியில் நீங்கினார். இதுவே நடந்த வரலாறு.
குகன்:-- ! கஷ்டம்! கஷ்டம்! (பெருமூச்செறிகிறான்)