தொண்ணூற்றியாறாவது ஸர்க்கம்
(விருத்திராசுரன் கதை)
அப்பொழுது லக்ஷ்மணன் ஸ்ரீராமனைப் பார்த்து ''அண்ணா ! ஏதேனுமொரு உத்தமமான யாகஞ் செய்ய வேண்டுமென்று தோன்றினால் அச்வமேதம் என்னும் உயர்ந்த யாகத்தைச் செய்யலாமே முன்பு இந்திரன் விருத்திராசுரனை வதம் செய்ததனால் உண்டான பிரம்மஹத்தியைப் போக்க வேண்டி அச்வமேதம் செய்து புனிதனானா னென்று வேதம் கூறுகிறது. அந்த சரிதத்தை விண்ணப்பம் செய்கிறேன்,கேழ்க்கவும்.
முன்பு நூறு யோசனை விஸ்தீர்ணமும், அதனினும் மும்மடங்கு உயரமு முடையவனான மிகப்பெரியனான விருத்திரனென்னு மஸுரனொருவன் இருந்தான். அவன் தருமநெறி வழுவாது, மேதையிற் சிறந்தவனாகி, மனுநீதி முறைப்படி மூவுலகங்களையும் அன்போடு பரிபாலித்து வந்தான். ராஜ்யமெங்கும் செழித்து அற்புதமாக விளங்க அவன் இங்ஙனம் ஆட்சி புரியுமளவில் மேலான தவம் செய்ய வேண்டுமெனறு அவனுக்கு விருப்பமுண்டாயிற்று. உடனே அவன் தனது ஜ்யேஷ்ட குமாரனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு தேவர்கள் வெதும்பித் தவிக்க, உக்ரமான தவம் செய்யலானான். அது கண்டு தேவேந்திரன மிகவும் வெதும்பித் திருமாலையடைந்து, “ தேவ! விருத்திராசுரன் கடுந்தவமியற்றப் புகுந்து இப்புவனங்கள் அனைத்தையும். கைக்கொள்ளு மாற்றலுடையவனாகின்றான். அவன் மிக்க பலசாலியும் தர்மிஷ்டனுமாதலால் மேலும் இவ்வாறே தவம் செய்வானாயின் எல்லா உலகங்களும் அவனுக்கு அதீனமாகிவிடுமன்றோ!! தேவபக்ஷபாதியான தேவரீர், எங்களிடத்தில் க்ருபை செய்து, அவ் வசுரனை வதம் செய்து எங்களை ரக்ஷித்தருளவும்”, என்று பிரார்த்தித்தான்.
தொண்ணூற்றியேழாவது ஸர்க்கம்
(தேவேந்திரனை ப்ரம்மஹத்தி சூழ்ந்து கொள்ளுதல்)
விஷ்ணுதேவன் இங்ஙனம் வேண்டிக் கொண்ட தேவராஜனையும் தேவர்களையும் நோக்கி “தேவர்காள்! யான் முன்னமே வ்ருத்திரனது விசுவாசத்திற்குக் கட்டுண்டவனாயினேன் ஆதலின் இப் பொழுது உங்களுக்குப் ப்ரீதி செய்வதன் பொருட்டு யான் அவனை கொல்லத் துணியேன். ஆதலின் வ்ருத்திரனை நீங்களே ஜயிக்குமாறு ஒரு உபாயம் கூறுகின்றேன். அங்ஙனம் செய்தால் அவ்வசுரன் மரணமடைவான். அசுரர்களே! என்னை மூன்று பாகமாகப் பிரித்து அவற்றுள் ஒரு அம்சத்தினால் இந்திரனிடம் அனு ப்ரவேசிக்கிறேன் ஒன்றினால் அவனது வஜ்ராயுதத்தில் புகுகின்றேன். விருத்திராசுரன் சரீரத்தை தாங்குமாறு மூன்றாவது பாகத்தினால் பூமியில் நுழைகின்றேன். இவ்வாறு செய்தால், வாசவனே விருத்திரனை எளிதில் வெல்ல வல்லவனாகுவான் என்றனர். விண்ணவர் அது கேட்டு மிகுந்த சந்தோஷத்துடன் நாராயணனை வணங்கி விடைபெற்றுக் கொண்டு விருத்திராசுரன் தவமியற்றும் வனம் போய்ச் சேர்ந்தனர். அங்கு அவ்வசுரன் ஆகாயத்தை எரிப்பது போல் அருந்தவம் புரிந்து சோதியுருவாய்த் திகழ்வது கண்டு தேவர்கள் அனைவரும் பயந்தவர்களாகி அவனையணுகவும் முடியாமல் திகைத்தனர், அச்சமயம் இந்திரன் வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்து அதனை அவ் வசுரனது சிரஸ்ஸில் விடுக்க அதனாலடியுண்ட சிரஸ் காலாக்னிபோல் பிரகாசித்துக் கொண்டு கீழே விழுந்தது. அவ்வசுரனது தலையறுபட்டு மிகவும் பயங்கரமாய் வீழ்ந்தது கண்டு எல்லா உலகமும் பயந்து நடுங்கின. தேவராஜன் நிரபராதியாய்த் தவம் செய்து கொண்டிருந்த தானவேந்திரனைக் கொன்றமையால் ப்ரம்மஹந்தி அவனை விடாது பிடித்துக் கொண்டது. அவன் அதற்கு பயந்து இவ்வுலகங்களுக்கு அப்பாலுள்ள பேரிருள் சூழ்ந்த ஓரிடத்தில் ஓடி ஒளிந்தும் ப்ரம்மஹத்தி அவனை விடவில்லை. அதனால் அவன் பெருந்துயரத்தில் மூழ்கினான். அப்பால் அக்னி முதலான தேவர்கள் இந்திரனைக் காணாது கலங்கி ஸ்ரீமந்நாராயணனை அடைந்து அவரை வணங்கி "தேவதேவ! தேவரீரது மஹிமையால் விருததிராசுரன் வதையுண்டானாயினும், இந்திரனை ப்ரம்மஹத்தி தோஷம் பிடிததுக் கொண்டு பீடிக்கின்றதே. அதற்கு விமோசனம் உண்டாகும் உபாயம் அருளிச் செய்ய வேண்டுகிறோம்” என்று ப்ரார்த்திததனர். அது கேட்டு மஹா விஷ்ணு தேவர்களைப் பாரத்து “தேவர்காள்! பயப்படவேண்டாம். இந்திரன் என்னைக் குறித்து யாகம் செய்வனாயின், யான் அவனை புண்யனாக்குவேன், மிகவும புனிதமான அசுவமேத யாகத்தினால் என்னை பூஜித்து மீண்டும் அவன் பீதியற்றவனாகித் தேவேந்திரபதவி அடைவான்”, எனறு அருளிச் செய்தார்.
தொண்ணூற்றியெட்டாவது ஸர்க்கம்
(இந்திரனைப் பிடித்த ப்ரம்மஹத்தி ஒழிந்ததைப் பற்றி கூறுதல்)
“அண்ணா! இங்ஙனம் இந்திரன் ப்ரம்மஹத்தியால் சூழப்பட்டவனாகித் தேசிழந்து, மதிகெட்டு இவ்வுலகததின் கடைசி சென்று ஆங்கு சில காலம் பெரிய பாம்புபோல் புரண்டு வாதைப்பட்டுக் கொண்டிருந்தனன். இந்திரன் ஒளிந்தவளவில் எல்லா உலகமும் செழியாது பூமி வறண்டு அழிந்தது போலாயிற்று. ஆறுகளும் ஏரிகளும் மடுக்களும் நீர்வற்றிப் பாழாய் இருந்தன. இவ்வாறு மழை பொழியாததால் ஸகல சராசரங்களும் கஷ்டப்பட்டுத் தவித்தன. இது கண்டு தேவர்களனைவரும் அசுவமேதம் இயற்றுவதற்கு வேண்டிய பொருட்களை யெடுத்துக் கொண்டு மஹரிஷிகளை அழைத்துக் கொண்டு இந்திரன் இருக்குமிடஞ் சென்று ;அவனை முன்னிட்டு ஆங்கு அசுவ மேத யாகம் செய்ய ஆரம்பித்தனர். அவ்வேள்வி முடிந்ததும் ப்ரம்மஹத்தி தேவேந்திரனை விட்டு நீங்கித் தேவர்கள் எதிரே வந்து நின்று "விண்ணவர்களே! நீவீர் இப்பொழுது எனக்கு எவ்விடத்தில் வாசஸ்தலம் விதிக்கின்றீர்கள்?" என்று கேட்க தேவர்கள் அதை பார்த்து "நீ உன்னை நான்கு பகுதிகளாகப் பகுத்து கெடுதலான ஸ்தலத்தில் வசி” என்றனர். உடனே அது யான் ஒரு பாகத்தினால் மழைக் காலத்தில் முதல் முதல் பெருக்கெடுத்து வருகின்ற ஆற்று வெள்ளங்களில் நான்கு மாசம் வாழ்வேன். மற்றுமொரு பகுதியினால் இப்பூமியில் ஓரிடத்தில் எந்நாளும் விடாது வாசம் செய்து கொண்டிருப்பேன். மூன்றாவது பாகத்தினால் யௌவனம் பெற்ற புஷ்பவதி யடைந்த பெண்களிடத்தில் மாதம் மூன்று நாள் வசிப்பேன். நான்காவது பகுதியினால் அந்தணர்களை வதைக்கும் கொடும் பாதகர்களைப்பற்றி வசிப்பேன்” என்று கூறி அவ்விடம் விட்டு சென்றது. அப்பால் வாசவனும் பரிசுத்தனாகிக் கலக்கம் ஒழிந்து மகிழ்ச்சியடைந்தான். ஹே, ரகுநந்தன. அச்வமேத யாகத்தின் ப்ரபாவம் இத்தன்மை யதன்றோ. ஆதலின் விருப்பமாயின் இதைச் செய்தருள்க” என்று லக்ஷ்மணன் கூறினான்.
தொண்ணூற்றியொன்பதாவது ஸர்க்கம்
(இளோபாக்கியானம். இளனுக்கு சாபம் நேரிட்டது)
லக்ஷ்மணன் சொன்ன விருத்திராசுரவதத்தையும் அசுவமேதத்தின் ப்ரபாவத்தையும் கேட்ட ராமன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அவனைப் பார்த்து, "லக்ஷ்மணா நீ சொல்லியபடி அசுவமேதத்தின் பெருமை ஒப்பற்றதே ஆகும். இதைப் பற்றி மற்றெரு கதையும் உள்ளது, கூறுகின்றேன் கேள்:- முன் கர்த்தம ப்ரஜாபதியினது மகனான இளன் என்பவன் பெரும் புகழ் பெற்று பாஹலிக தேசத்தரசனாகி இப்பூமி முழுவதையும் தன் வசஞ் செய்து கொண்டு தர்மம் தவறாமல் அரசாட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் வேட்டையாட விரும்பி சித்திரை மாதத்தில் தனது பரிவாரங்களுடன் காட்டிற்குச் சென்று மிருகங்களை அநேகமாக வதஞ் செய்தான். அவன் அங்ஙனம் வேட்டையாடிக் கொண்டே குஹன் பிறந்த விடமான வனம் போய்ச் சேர்ந்தனன். அவ்விடத்தில் பரமேசுவரர் பார்வதியுடன் கூடி அவளுக்கு ஆனந்தம் விளைவிக்குமாறு தானும் ஸ்த்ரீ ரூபம் தரித்து அம்மலைச் சாரலில் ரமித்துக் கொண்டிருந்தனர். அது காரணமாக அக் காட்டிலுள்ள ஆண் இனமான பசு பக்ஷிகளும், மிருகாதிகளும், ஆண் இனமான எல்லா மரங்களும் பெண் உருவமாக மாற்றப்பட்டன. அங்குள்ள சராசரங்களும் ஸ்த்ரீ ரூபமாகவே காணப்பட்டன.
அத்தகைய காட்டில் இள மகாராஜன் நுழைந்ததும் அவனும் அவனது பரிஜனங்களும் பெண்களாக மாற்றப் பட்டனர். அது கண்டு அரசன் மகத்தான துக்கமடைந்து அது மலைமகள் கேள்வனது மாயச் செய்கை யென்று உணர்ந்து பீதியுள்ளவனாகித் தனது சகல பரிவாரங்களோடும் பரமசிவனைச் சரணமடைந்தான். உடனே சங்கரன் உமாதேவியுடன் அவ்வரசனுக்கு முன் தோன்றி “ஹே ராஜரிஷியே! இனி நீ புருஷனாக மாறுவதை வேண்டற்க! அஃதொன்றொழிய வேறு என்ன வரம் வேண்டினும் தருவேன”, என்று சொன்னார். அது கேட்டு இளமஹாராஜன் மனக்கஷ்டமடைந்து அருகில் நின்ற உமாதேவியை மிகுந்த பய பக்தியுடன் முடிதாழ்த்தி வணங்கி, “தேவி! நீ ஸகல லோகங்களுக்கும் நாயகியன்றோ? கதியற்றவனான அடியேனிடம் அருள் புரிவாயாக”, என வேண்டிக் கொண்டான். பரமேச்வரி அவனிடம் அருள் கூர்ந்து “ராஜனே! நீ ஒரு மாத காலம் பெண்ணுருவாயும் மற்றுமொரு மாத காலம் ஆணுருவாயும் இருந்து வாழ்வாயாக. ஆயினும் புருஷனாக மாறினவளவில் முன்பு நீ பெண்ணாயிருந்த காலத்து நடந்தவை யொன்றும் தோன்றாது; அங்ஙனமே பெண்ணாக மாறிய காலத்தில் புருஷனாய் இருந்தது ஞாபகம் வராது”, என இனிமையாக அருளிச் செய்தாள். பிறகு இள மஹாராஜன் ஒரு மாத காலம், புருஷனாகவும் மற்றொரு மாதம் த்ரிலோக சுந்தரியான இளை என்னும் அழகிய பெண்ணாகவும் உருவம் பெற்று வாழ்ந்து வந்தான்.