திருமாலடியவர்க்கு மெய்யனார் செய்ய
திருமாமகள் என்றும் சேரும் -- திருமார்பில்
இம்மணிக்கோவையுடன் ஏற்கின்றார் என்றன்
மும்மணிக்கோவை மொழி. .2.
திருமால் ------ ஶ்ரிய:பதியான ஸர்வேச்வரன்; அடியவர்க்கு மெய்யனார் ---- தாஸ பூதர்களான பக்தர்கள் விஷயத்தில் ஸத்யம் தவறாதவர்; செய்ய --- சிவந்த (அல்லது நேர்மையையுடைய); திருமாமகள் -- பெரிய பிராட்டியார்;
என்றும் --- எப்போதும்; சேரும் --- சேர்ந்து நிற்கும்; திரு மார்பில் --- (தமது) அழகிய மார்பில்; இம்மணிக் கோவையுடன் --- இந்த மணிகளாலான ஹாரத்துடன்; என்தன் -- என்னுடையதான; மும்மணிக்கோவைமொழி -- மும்மணிக் கோவையாகிய சொல்லை; ஏற்கின்றார் --- ஏற்றுக் கொள்ளுகிறார்.
திருமால், அடியவர்க்கு மெய்யனார் -- திருமாலா யிருத்தல் பற்றி அவர் அடியவர்க்கு மெய்யனாராகிறார். அல்லது திருமாலடியவர்க்கு மெய்யனார்-- திருமாலுடைய அடியவர்க்கு மெய்யனார் என்று ஒரே பதமாகப் பொருள் கொள்ளலாம் -- அப்போது தத்வ, ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் திருவும் மாலும் சேர்ந்த ஒரு மிதுனமே என்று நிச்சய ஜ்ஞானமுடையவர் திறத்து மெய்யன் என்ற தாயிற்று.
செய்ய -- முன் பதங்களோடு சேர்த்து அந்வயித்து ஒரு பொருளும் கொள்ளும்படி இந்தப் பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. செய்ய -- பெருமாள் இந்தப் பிரபந்தத்தைத் தான் செய்துவிட்டு எனது பிரபந்தம் என்று பெயரிட்டார் என்று ஒரு பொருள் த்வனிக்கிறது. மேலே “என்றன்” என்ற பதமும் இதை உறுதிப் படுத்துகிறது. இது பிரபந்தாரம்பத்தில் செய்யும் ஸாத்விக த்யாகத்தைக் குறிக்கும் மனோபாவம். திருமால் செய்ய, செய்யுள் அவதரித்தபடி. “செய்ய திருமகள்” -- சிவந்த பிராட்டியார் அல்லது செம்மையுடைய திரு.
என்றும் சேரும் -- நித்யவாஸம் செய்யும்
திருமார்பில் -- திருவின் சேர்த்தியால் திருமார்பு: அன்றிக்கே ஸ்வயம் அழகையுடைய மார்பு. பொன்தோய் வரைமார்பின் போக்யதையை அன்று கண்டுகொண்டன்றோ அதைத் தனக்கு ஆலயமாக அமைத்துக் கொண்டாள் பிராட்டி
இம்மணிக்கோவை -- இது எதைக் குறிக்கிறது என்று ஆராய வேண்டியிருக்கிறது. “இந்த” என்று சுட்டிக் காட்டுவதால் இந்தப் பிரபந்தத்தை என்று பொருள் கொள்ளலாம். பெருமாள் திருமார்பில் இருக்கும் ரத்ன ஹாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். அது பொருந்துமா என்று ஆலோசிக்க வேண்டும். “இன்மணிக் கோவை” என்று பாடம் கொண்டு இனிமையான ரத்னங்கள் என்றும் பொருள் கொள்ளுகிறார்கள். ஆனால், “இன்மணி” எதுகைக்குப் பொருந்தாது.
ஏற்கின்றார் -- அடியேன் பணிவுடன் ஸமர்ப்பிப்பதை ப்ரீதியுடன் அங்கீகரிக்கிறார்.
என்றன் -- என்னுடையதான, அகங்காரமமகாரங்களையறவே யொழித்த ஆசார்யன் “என்றன்” என்று பேசினால் “என் சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்து” என்ற நம்மாழ்வார் அருளிச்செயலை அடியொற்றிப் பேசியதாகக் கொள்ள வேண்டும்.
மும்மணிக்கோவை மொழி -- இந்தப் பிரபந்தத்தின் பெயர் இருப்பதைக்கொண்டு ஓர் அர்த்தம் இருக்கவே இருக்கிறது. “மொழி” என்பது வடமொழி தென்மொழி என்ற பாஷைகளில் போல பாஷையைச் சொல்லும். நவ மணிமாலையின் கடைசிப் பாசுரத்தில்,
“அந்தமில் சீர் அயிந்தைநகர் அமர்ந்த நாதன்
அடியிணைமேல் அடியுரையால் ஐம்ப தேத்திச்
சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்து”
என்று அருளிச்செய்திருப்பதை நோக்கின், “ இம்மணிக் கோவை மொழி” என்றவிடத்து, ஸம்ஸ்கிருதம், பிராக்ருதம், தமிழ் என்ற மூன்று மணிகள் போன்ற மொழிகளின் கோவை யொன்று இப்பிரபந்த நிர்மாணத்தால் பூர்த்தியாயிற்று என்று பாசுரமிடுவதாகத் தெரிகிறது. (2)