இரண்டாம் அங்கம் ஆறாம் களம்
தொடர்கிறது
இராமர்:-- அப்படி என்
மனமறிய நான் ஒரு குற்றமும் செய்ததில்லையம்மா.
கோசலை:-- ஆனால், உன்மீது மிகவும் பிரியம் வைத்திருந்த அவர், திடீரென்று உன்னை வெறுக்க நேரிட்ட காரணம் என்ன?
இராமர்:-- அம்மா அவர்
என்னை வெறுக்கவுமில்லை;
நான் தங்களிடம் அவ்வாறு கூறவுமில்லையே!
கோசலை:-- மைந்தா!
நாட்டிலிருந்து அரசு செலுத்தச் சொல்லியவர் திடீரென்று காட்டிற் சென்று
கொடிய தவஞ் செய்யச்சொன்னதற்கு வேறு காரணந்தானென்ன?
இராமர்:-- அம்மணீ!
முன்னமே நான் கூறியவாறு மகரிஷிகளுடைய அனுக்கிரகத்தை நான் பெற்றுவர வேண்டு மென்பதே.
கோசலை:-- என்ன விந்தையடா
இது! நேற்றைய தினம் பட்டாபிஷேகம் செய்வதாகத் தீர்மானிப்பது, அதற்காக அரசரும் அந்தணரும், நகர மாந்தரும் வந்து காத்திருப்பது, சாமக்ரியைகளெல்லாம் சித்தமாயிருப்பது, இரவெல்லாம் நீயும் ஜானகியும் உபவாசமிருந்து தருப்பைப்
புல்லில் நித்திரை செய்கிறது,
பட்டாபிஷேக முகூர்த்த காலத்தில்
மகரிஷிகள் அனுக்கிரகம் பெற உன்னைக் காட்டுக்கனுப்புவது! அதுவும் ஒரு
நாளல்ல, இரண்டு நாளல்ல, பதினான்கு வருஷம்! இராமச்சந்திரா! உனது தந்தையின் கருணை நன்றாயிருக்கிறது! உன்னைப் புதல்வனெனப்
பெற்றுப் படுகுழியில் வீழ்த்த எத்தனை நாளடா காத்திருந்தார உன் தந்தை!
இராமர்:-- அம்மணீ!
பட்டாபிஷேகப் பிரயத்தனம் செய்வதற்கு முன்னம் தந்தையார் வழக்கம்போல கைகேயி
அன்னையாரை ஆலோசியாமல் போய்விட்டார். இல்லாவிட்டால், நான் சிலகாலம் காடுறைந்து வருவதற்குமுன் பட்டாபிஷேக யத்தனம்
சிறிதுமிருந்திராது.
கோசலை:-- ஆனால், உன் சிற்றன்னையின் ஆலோசனையின் பிறகுதான் நீ காடு செல்லவும், பரதன் நாடாளவும் தீர்மானிக்கப்பட்டதோ?
இராமர்:-- ஆம் அம்மணீ!
கைகேயி அன்னை சம்பராசுர யுத்தத்தில் தந்நையார்க்கு ஏதோ உதவி செய்தார்களாம்.
அதற்காகத் தந்தை மனமகிழ்ந்து இரண்டு வரங்கள் கொடுத்தனராம். அவை இதுவரையில் பெற்றுக் கொள்ளப்படவில்லை. இப்பொழுது
அவைகளை அன்னையார் கேட்டார். தந்தையும் தருவதாக வாக்களித்தனர்.
பிறகு அன்னையார் என் க்ஷேமாபிவிருத்தியைக் கருதி அவ்வரங்க ளிரண்டிலொன்றால்
நான் பதினான்கு வருஷம் வனவாசஞ்செய்து மகரிஷிகள் அநுக்கிரகத்தைப் பெற்று வரவும் மற்றொரு
வரத்தால் பட்டாபிஷேகப் பிரயத்தனம் வீணாகாமல் பரதனுக்கு முடிசூடும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
இதில் என்ன தோஷம்? ஏன் வருந்துகிறீர்கள்? பதினான்கு வருஷங்களும் பதினான்கு நாட்களாகக் கழிந்துவிடும். அதுவரையும்
ஆற்றியிருங்கள். இப்பொழுது எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள்.
கோசலை:-- (இராமருடைய
கரத்தைப் பிடித்துக்கொண்டு) ஹா! என் கண்மணீ!
இனி நான் என்ன செய்வேன்? மைந்தா ! இராகவா! நீ பிறவாதிருந்தால், பிள்ளையில்லாத ஒரே துயரத்தோடிருப்பேன். இப்பொழுது இந்தத்
துயரத்தையெல்லாம் அறுபவிக்க நேர்ந்திராது. உன் தந்தை கைகேயியை
விவாகஞ் செய்துகொண்ட நாள்முதல், என்னை அதிகமாகக் கவனிப்பதில்லை. பேர்மட்டும்
மூத்த பட்டஸ்திரீ யென்பதேயொழிய, அந்தக் கொடியாளாகிய கைகேயியே சகல அதிகாரங்களையும் செலுத்திக்கொண்டு
வந்தாள். எனக்குப்பின்
வந்தவளும் இளையாளுமாகிய ஒருத்தி என் கண்ணெதிரே அதிகாரஞ் செலுத்திவர நான் அதை எவ்வாறு
சகித்து வருவேன்? இருந்தபோதிலும், கொண்ட கணவர்க்கு மனம் வருந்துமென்று அஞ்சி என் துயரத்தையெல்லாம்
வெளிக்காட்டாது அடக்கி வந்தேன். பிறகு நீ பிறந்தாய். உன்
முகத்தைப் பார்த்துச்சிறிது ஆற்றியிருந்தேன். உனக்கு வயதுவந்து
பட்டாபிஷேகமாகி விட்டால் என் துயரம் மாறிவிடுமென் றெண்ணியிருந்த அந்த எண்ணமும் பாழாய்ப்
போயிற்று. இனி நான் துக்க சாகரத்தில் மூழ்கியவளானேன்.
குழந்தாய்! உனக்குப் பட்டமாகாவிட்டாலும், என் கண்ணெதிரேயேனும் இருப்பையேல், என் துயரம் சிறிது தாழும். என்னைவிட்டு
நீ பிரிந்து போவாயானால் என் கதி என்னாகுமோ? எனக்கே தெரியவில்லை. பர்த்தாவினால் அவமதிக்கப்பட்ட நான், உன்னையும் விட்டுப் பிரிவேனானால், கைகேயியின் வேலைக்காரிகளுக்கும் தாழ்ந்தவளாவேன். என் மனம் மகா
கடினமானது. உன் பிரிவைக்கேட்டும் பிளவாமலிருக்கிறதே. ’மகன் வனஞ்செல்கிறான்’ என்ற கொடிய சொல்லைக் கேட்டும் மடியாத என் நெஞ்சம் கல்லோ, மரமோ, இரும்போ வேறென்னவோ தெரியவில்லையே!
இராமர்: -- அம்மணீ!
தெரியாதவர்கள்போல் நீங்களும் இப்படி வருந்தலாமோ? இப்பொழுது என்ன குறை வந்துவிட்டது?
சிறந்த தம்பி திருவுற வெந்தையை
மறந்தும் பொய்யில னாக்கி வனத்திடை
உறைந்து தீரு முறுதிபெற் றேனிதிற்
பிறந்து நான்பெறும் பேறென்ப தியாவதோ.
மறந்தும் பொய்யில னாக்கி வனத்திடை
உறைந்து தீரு முறுதிபெற் றேனிதிற்
பிறந்து நான்பெறும் பேறென்ப தியாவதோ.
உத்தம குணங்களுக்கு உறைவிடமான
என் தம்பி பரதன் இராச்சிய பரிபாலனம் செய்யப் போகின்றான். சத்தியம் தவறாத
எனது தந்தையின் வாக்கைக் காக்க நான் கானகஞ் செல்லப் போகின்றேன். இதைவிட நான் பிறந்ததால் அடைந்த பலன்தானென்ன? ‘இராமன் பிறந்து தந்தையின் சத்தியத்தை நிலைநிறுத்தினான்’ என்று உலகோர் புகழ உடம்பெடுப்பதா? இராமன் கட்டளையை மீறியதால் அறுபதினாயிர வருஷம் சத்தியந்
தவறாது அரசாண்ட மன்னர் சத்தியந்தவற நேர்ந்தது என்று உலகோர் தூற்ற உடம்பெடுப்பதா?பரதன் யார்? என்னைப் போலவே சக்கரவர்த்திக்கு உரிய புத்திரன்தானே! நான் முற்பிறந்தேன், அவன் பின் பிறந்தான். இதனால் அவனுக்கு அரசுரிமை இல்லாமல் போய்விடுமோ? தந்தையின் செல்வம் பிள்ளைகள் அனைவர்க்கும் உரியதுதானே ! இராஜ குடும்பங்களில்
பல பிள்ளைகள் பிறப்பார்களானால் அவர்கள் எல்லார்க்கும் பங்கிட்டு இராச்சியத்தை உரிமைப்படுத்தினால்
அது சிதறுண்டு போகுமென்ற கருத்தால் பெரியோர் மூத்தவர்க்கே பட்டமுரியதென்று விதித்தார்களே
யொழிய வேறல்ல. இளையவர்களில் எவருக்கேனும் பட்டமாவது வழக்கத்துக்கு
விரோதமாகலாமே யொழிய நியாயத்துக்கு விரோதமாகாது. ஆதலால் அரசர்
பரதனுக்குப் பட்டங்கட்டுவது அநியாயாமுமாகாது; பரதன் அதைப் பெற்றுக்கொள்வது அநீதியுமாகாது. தாங்கள் வருந்துவது
வீண்.
கோசலை:-- இராமச்சந்திரா!
பரதனுக்குப் பட்டமாவதை நான் தடுக்கவில்லை. உன்னைக்
காட்டுக்கனுப்ப நான் எவ்வாறு சம்மதிப்பேன்? பரதனே அரசாளட்டும். நீ காட்டிற்குச் செல்லாதேயடா கண்மணீ.
இராமர்:-- அம்மணீ!
விண்ணு மண்ணு மிவ்வேலையு மற்றும்வே
றெண்ணும் பூதமெ லாமிறந் தேகினும்
அண்ண தேவன் மறுக்க வடியனேற்
கொண்ணு மோஇதற் குள்ளழியே லன்னாய்.
றெண்ணும் பூதமெ லாமிறந் தேகினும்
அண்ண தேவன் மறுக்க வடியனேற்
கொண்ணு மோஇதற் குள்ளழியே லன்னாய்.
என்ன வார்த்தை கூறுகிறீர்கள்? ஆகாயமே அழிந்தாலும், பூலோகமே போயொழிந்தாலும், கனைகடலே கரை கடந்தாலும், வெங்கதிர்க் கனலியும், தண்மதியமும், தம்கதி வழுவினாலும், வேறு எவை எவ்வாறானாலும், தந்தையிட்ட கட்டளையை மீறி நடப்பது அடியேனுக்கு அடுக்குமோ? தாங்கள் வீணேவருந்துவது தகாது. தந்தை சொல்லைத்
தடுத்துப் பெருமை யடைந்தவர்கள் ஒருவருமில்லை. தந்தை சொல்லைக் கேட்டுக்
குறைவடைந்த வர்களும் ஒருவருமில்லை. ஆதலால், என்னைத் தடுக்க வேண்டாமென்று தலைவணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயை செய்து
எனக்கு விடை கொடுங்கள்.
கோசலை:-- ஐயோ, தெய்வமே! என் கதி இப்படியா ஆயிற்று! கொண்ட கணவர் எனக்குக் கொடுமை செய்துவிட்டார். பெற்ற பிள்ளையும்
என்னைப் பரிதவிக்க விடுகின்றது. இனி நான் இருந்தென்ன இறந்தென்ன? இவ்வுயிர் ஏன் என்னைவிட்டுப் போக மாட்டேனென்கிறது? இன்னும் நான் ஏன் இவ்வுயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்? ஈசா!இக்கணம் இந்த இயமன் கூசாதெனை யழைத்தால் நான்
வாய்பேசாது வந்துவிடுவேனே ! வஞ்ச நமனே! என் நெஞ்சுறுதியைக் கண்டு என்னை அணுக நீயும் அஞ்சுகின்றனையோ?
ஆகி னைய வரசன்ற னாணையால்
ஏக லென்ப தியானு முரைக்கிலேன்
சாகலா வுயிர் தாங்கவல் லேனையும்
போகி னின்னொடுங் கொண்டனை போவையே?
ஏக லென்ப தியானு முரைக்கிலேன்
சாகலா வுயிர் தாங்கவல் லேனையும்
போகி னின்னொடுங் கொண்டனை போவையே?
இராமச்சந்திரா! என் உயிர் மாளாது.
என்னால் இனி இங்கிருக்கவும் ஏலாது. வலியற்ற பசு
தனது இளங்கன்றைத் தொடர்வது போல உன்னோடு நானும் காட்டுக்கு வருகிறேன். நான் அரண்மனையில் நோற்ற நோன்புகளும், செய்த தவங்களும் வீணாயின. இனி உன்னோடு அரணியத்துக்கு வந்து அங்கே
தவஞ் செய்கிறேன். அதனால் ஏதேனும் பலன் கிட்டுகிறதா பார்ப்போம்.
நீ செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்.
இராமர்:-- அம்மா, இதுதானோ அழகு?
என்னை நீங்கி யிடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானந் தொடரத் துணிவதோ
அன்னையே யறம் பார்க்கிலா துரைத்தனை.
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானந் தொடரத் துணிவதோ
அன்னையே யறம் பார்க்கிலா துரைத்தனை.
தங்கள் கணவர் என்மீதி அளவு கடந்த
அன்பு வைத்திருப்பவர். நான் காட்டுக்குச் செல்வதால் மிகவும் துயரத்தி
லாழ்ந்திருப்பார். என்னைவிட்டுப் பிரிய மனந்தேற மாட்டார்.
தாங்கள் இங்கிருந்தால் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டிருப்பீர்கள்.
கணவர் மனங்கலங்க நிற்கும்போது அவரை விட்டுப் பிரிதல் தங்களுக்குத் தர்மமா? அவர் பரதனுக்கு முடிசூட்டி வைத்துவிட்டத் தவஞ் செய்யப்போவார். அப்பொழுது நீங்கள், அவருடன் சென்று உங்கள் விருப்பப்படி தவஞ் செய்யலாம். இப்பொழுது என்னைத்
தொடர்ந்து வருவது நீதியாகாது. நான் போவதைக் குறித்தும் மனங்கலங்க
வேண்டாம்.
சித்த நீதிகைக்கின்றதென் தேவரும்
ஒத்த மாதவஞ் செய்துயர்ந் தாரன்றே
எத்த னைக்குள வாண்டுக ளீண்டவை
பத்து நாலும் பகலல வோவம்மா.
ஒத்த மாதவஞ் செய்துயர்ந் தாரன்றே
எத்த னைக்குள வாண்டுக ளீண்டவை
பத்து நாலும் பகலல வோவம்மா.
எதற்காகத் தாங்கள் திகைக்க வேண்டும்? தேவர்களும் தவம் செய்துதானே சிறப்படைந்தார்கள்? நான் தவஞ் செய்வதால் எனக்குச் சிறப்பு வருமே ஒழியத் தாழ்வு
வராது. அப்படி நான்
அதிக காலம் தங்கிவிடப் போகிறதில்லை. பதினான்கே வருஷம்.
இந்தப் பதினான்கு வருஷங்களும் பதினான்கு நாட்களாகக் கழிந்து விடும்.
கழிந்ததும் நான் நல்ல ஞானத்தையும், பெரியோர்களுடைய அனுக்கிரகத்தையும் பெற்று க்ஷேமமாய்த்
திரும்பி வருவேன். தாங்கள் அதைப் பார்ப்பீர்கள். மேலும் தந்நை எனக்கிட்ட கட்டளை அவ்வளவு கஷ்டமானதல்ல. ஒவ்வொருவர் தம் தந்தை சொல்லைக் காக்கவேண்டி எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்திருக்கின்றனர்.
சகரர் தம் தந்தையால் உயிரை விட்டார்; பரசுராமர் தந்தை சொற்படி தாயைக் கொலை செய்தார். எனக்கவ்விதமான
கொடுங்கட்டளைகள் ஒன்றும் எனது தந்தை கொடுக்கவில்லை. நான் செய்யப்போகும்
காரியமும் அருமை யானதல்ல. ஆதலால் தாங்கள் தனயன் சொல்லைத் தட்டாது
தந்தையிடம் சென்று அவரைத் தேற்றுங்கள். எனக்கு விடை கொடுங்கள்.
கோசலை:-- இராமா! உனது இங்கிதமும் இன்மொழியும் யாருக்கடா
வரும்? இத்தகைய நயமொழியும் நற்குணமும் நிறைந்த என் உயிரினுமினிய
அருமந்த மைந்தனை விட்டுப் பிரிந்து நான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?பரதனே நாட்டையாளட்டும். நான் உனது விருப்பப்படி தந்தையிடம் செல்லுகிறேன். அவரைத்
தேற்றி அவர் மனத்தை மாற்ற முயலுகிறேன். (போகிறாள்)