சனி, 13 ஜூன், 2009

உங்கள் மொபைலில் தமிழ் வாசிக்க

உங்கள் மொபைலில் தமிழ் தெரியவில்லையா? ஒரே கட்டம் கட்டமாகவே தெரிகிறதா? போகிற போக்கில் வரும் மெயில்களில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் தெரியாமல் கட்டம் கட்டமாக மட்டும் காண்பிக்கிறதா? கவலையை விடுங்கள். வழிகாட்ட இங்கு ஒரு TVS 50 ரெடி. அதில் ஏறி பயன்பெற

http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html மொபைலில் GPRS வசதி வேண்டும். அதை மறந்து விடாதீர்கள். திருப்தியாக இருந்தால் டிவிஎஸ் ஸுக்கு நன்றி சொல்லுங்கோ!

வியாழன், 11 ஜூன், 2009

மதுரையம்பதி

எழுதுவது என்பது மிகப் பெரிய கலை. எப்போதுமே அடியேனுக்கு வசமாகாத ஒன்று. மிக எளியவற்றைக்கூட அடியேன் எழுத்து படிப்பவர்களுக்கு பெரும் குழப் பத்தை ஏற்படுத்தி அவர்களை ஒரு வழியாக்கிவிடும். இது என்னுடைய வலைப்பூ விற்கு வருகை தரும் அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த இணையத்தில் எழுதுபவர்கள், அதிலும் தமிழில் (அடியேனுக்குப் புரிவது அது ஒன்றுதானே) மிக மிக எளிமையாய் வெகு கனமான விஷயங்களைக் கூட பாமரனும் புரிந்து இன்புறும் வகையில் , அங்கு படிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களாகவே மேன் மேலும் தெரிந்து கொள்ள வைக்கிற அளவுக்குச் சுவையாக எழுதுபவர்கள் பலரது வலைகள்அவ்வப்போது இணையத்தில் எதையாவது தேடும்போது அடியேன் பார்வையில் படுவதுண்டு. அவ்வகையில் ஒரு மதுரைக்காரர் நடத்தும் தளம் "மதுரையம்பதி" போய்ப் படித்து ரசியுங்கள்.



அதிலும் குறிப்பாக மதுரையம்பதி: பக்தி சில எண்ணங்கள்......பகுதி -2 இதைப் படித்தால் நான் சொல்வது மெத்தச் சரி என்று ஆமோதிப்பீர்கள். சரணாகதியை எவ்வளவு அழகா எளிமையாகச் சொல்லியிருக்கிறார் படியுங்கள்.

புதன், 10 ஜூன், 2009

திருப்புல்லாணியில்லக்ஷார்ச்சனை – புஷ்பயாகம்

 

10-06-09_0719

  திருப்புல்லாணியில்  வரும்  22.7.2009 முதல் 25.7.2009 வரை ஸ்ரீபத்மாசனித் தாயாருக்கு  லக்ஷார்ச்சனையும்,  26.7.2009 ஞாயிற்றுக் கிழமையன்று ஸ்ரீ ஆதி ஜகன்னாதப் பெருமாளுக்கு புஷ்ப யாகமும்  நடைபெற உள்ளன. வயதில் இளையோர்கள் ஆனாலும் செயல்வீரர்களான ஸ்ரீ ஜயராம பட்டாச்சார்யாரும், முன்னாள் மணியார பரம்பரையில் வந்த கண்ணன் (எ) கிருஷ்ணமூர்த்தியும்  தாயார் மீது உள்ள அபார பக்தியால் இதை வருடாவருடம் பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நடத்தி வருகின்றனர். திருப்புல்லாணி அபிமானிகள் அனைவரும் கலந்து கொள்ள வேணுமாய் க்ஷேத்திர வாசியாய் அன்புடன் அவர்கள் சார்பாக அழைக்கிறேன்.

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

திரு ஜயராம பட்டாச்சார்யார்  9443920136

கிருஷ்ணமூர்த்தி 9443714253

செவ்வாய், 9 ஜூன், 2009

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார்

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் -- ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) ஆனால் அவரது தேசீயத்தையும், தெய்வீகத்தையும் அறிந்தவர்களில்கூட எத்தனை பேருக்கு அவரது தமிழ்ப்புலமையும், தமிழாராய்ச்சித் திறமையும் தெரியுமோ தெரியாது. மதுரகவி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கையில், மதுரகவி வழிவந்தவரும், அனேகமாகத் தேவர் திருமகனாரால் பெரிதும் பண்படுத்தப் பட்டவருமான திரு கோவிந்தராஜன் எழுதிய குறிப்பு ஒன்றைப் படித்தேன். நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளாத தேவரின் அந்த முகத்தை அனைவரும் அறிய இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தொடர்வது திரு கோவிந்தராஜன் எழுதியது.

"ஒரு நாள் (மதுரை) அங்கயற்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும்போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து மாணவனாக இருந்த நான் ஆச்சர்யப்பட்டேன். அரசியலில் முடிசூடாமன்னனாகத்திகழ்ந்த முத்துராமலிங்கத்தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும், ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர், குறளைப் பற்றி என்ன பேசிவிடப் போகிறார் என்று அமர்ந்த நான் மெய்மறந்தேன். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலைமுடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத்தைத் தந்தது எனக்கு வியப்பு. அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும், வழக்கமும் இல்லாமல் போய்விட்டன.ஆனால் எனது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் கருத்தை ஓரளவு தருகிறேன். (தேவர் பேச்சு ஆரம்பம்)
''கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில்

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலிதரும்
.
என்பது ஒரு அரிய குறள். திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளவேண்டும். ஆன்மீகத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும். நான் மெத்தப் படித்தவன் அல்ல. தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும். எவ்வளவுதான் கற்றாலும் அது கைம்மண்ணளவேதான் ஆகும். நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் 'ஆள்வினை உடைமை' என்ற அதிகாரத்தில் உள்ளது.
திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலைசிறந்தவர்.'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டுபோனார். இது முற்றிலும் சரியே. வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள் வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லாரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் திட்பத்தையும் மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொய்யாமொழிகள் ஆகும். அவர் கூறியவை பொன்மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக்காலத்திற்கும், எந்த மக்களுக்கும் திருக்குறள் என்ற இந்த முழு நூல் முழுக்க முழுக்கப் பொருத்தமுடையது. இதனால் உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்த அரிய திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்களிலே, ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.
கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.
என்று திருக்குறள் பெருமையுடன் பேசப்படுகிறது. வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார். இம்மை, மறுமை இரண்டிற்கும் எழுமைக்குச் செம்மை நெறியில் தெளிவு பெற எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதன்பால் இல்லாத பொருள் எதுவும் இல்லை. ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதாய், வேதப்பொருளாய் மிக விளங்கிப் பொய்யாமொழிக்கும் பொருள் ஒன்றே. பரந்த பொருளெல்லாம் பார் அறிய வேறு தெரிந்து திறந்தோறும் சேரும் என்றெல்லாம் பல்வேறு புலவர்கள் பாராட்டிப் புகழப் பெருமை பெற்றவர் திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்.
நற்பலகை யொக்க இருக்க
உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில்
ஒருக்க ஓ வென்றதோர் சொல்.
என்ற இந்தத் திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டி அசரீரியாக வந்தது. இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்துக் காட்ட அல்ல. வள்ளுவர் எத்தகைய அறிஞர், புலவர் சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவேயாகும். இங்கு வீற்றிருக்கிற அறிஞர்களும், சான்றோர்களும் இதை நன்கு அறிவர். இல்லாத ஒன்றைச் சொல்லிவிட வில்லை. இருப்பதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்.
இங்கு கூடியிருப்பவர்களே ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும்" என்று எழுதியிருப்பாரா என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன். தெய்வத்தால் ஆகாதெனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?
புலவர் பெருமக்களே! அறிஞர்களே, சான்றோர்களே! சற்றுச் சிந்தியுங்கள்.! சிந்தியுங்கள்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம், பேனா, பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைகளைக் கருத்துக்களை, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இன்று இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணி பிடித்து எல்லாரும் எழுதிவிட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதைக் கருதுகிறேன். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறுதான் பாடியிருக்கக் கூடும் என்று அடியேன் மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப் பெரியவன். அவன்முன் நாம் தூசி மாத்திரம். ஓரணுவும் அவனன்றி அசையாத காரணத்தால் அவனைச் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம். ஆகவே அந்தக் குறள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
தெய்வத்தால் ஆகும் எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து நேர்,நேர் என்று சொல்லி தேமா என்று வாய்பாடு கூறுவர். ஆகும் என்ற சொல்லையும் ஆ+கும் என்று பிரித்தால் நேர், நேர் என்றும் கூறலாம். மா முன் நிரை அசை வரும் வாய்பாடு அகும். ஆகவே தளையும் தட்டவில்லை. தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகுமென்பதே சரி. தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன். சான்றோர்களாகிய நீங்களும் இக்கருத்தை ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்."

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற குறளுக்கு தேவர் பெருமகனார் அளித்த இன்னொரு விளக்கத்தையும் திரு கோவிந்தராஜன் எழுதியுள்ளார். அதை வேறொரு நாள் இங்கு எழுதுகிறேன்.

ஞாயிறு, 7 ஜூன், 2009

சரணாகதி மாலை

ப. ரெ. திருமலை அய்யங்கார் முகவுரையின் இறுதிப் பகுதி.

கோப்த்ருத்வவரணமாவது -- 'நீ எனக்கு ரக்ஷகனாக வேண்டும்' என்று பிரார்த்தித்தல் இதற்குக் காரணம் ஈச்வரன் ஸமர்த்தன், காருணிகன் என்று தெளிகை. இத் தெளிவு உண்டானால் 'நீ ரக்ஷிக்கவேண்டும்' என்று ப்ரார்த்திக்கை தானே ஸித்திக்கும். இதற்கு விரோதி ஈச்வரன் தயாதிகுணம் அற்றவனாகையாலே உதாஸீநன் என்று நினைத்தல். இதற்கு பலம் பலங்கொடுக்கவேண்டும் என்று ஈச்வரனுக்குத் திருவுள்ளம் உண்டாதல். ஈச்வரன் ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் பரம காருணிகனாய் இருந்தாலும் இச் சேதனன் தனக்கு ஸ்வரூப ப்ராப்தமான மோக்ஷத்தை இழந்து அநாதிகாலம் ஸம்ஸார ஸாகரத்தில் முழுகி அழுந்தித் துயர் உற்று இருந்தாலும் அவன் அர்த்தியாதே கொடுத்தால்தான் புருஷார்த்தம் கொடுத்தவனாக மாட்டான் ஆகையாலே நாம் ரக்ஷிக்கவேண்டும் என்று அபேக்ஷிக்கவேண்டியது கடமையாய் இருக்கிறது. ஆகையால் இந்த கோப்த்ருத்வ வரணத்துக்குப் பலங்கொடுக்கவேண்டும் என்று ஈச்வரன் திருவுள்ளமாகை பலம். இது இல்லையானால் ஈச்வரனுக்குத் திருவுள்ளம் இரங்காதாகையாலே பலம் கொடான் என்று நினைத்து அதனால் ப்ரபத்தியில் இழியா தொழிவன். இவ்வழியாய் இது அங்கமாகிறது. இது ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துன்புற்று அகிஞ்சனனாய் ப்ரபதநம் பண்ணுமவனுக்கு ஈச்வரன் ஸமர்த்தன், காருணிகன், ரக்ஷகன் என்கிற தெளிவோடு கூடிய மனத்தினாலே அநுஷ்டான காலத்தில் தானே உண்டாகும். இவ்வைந்தும் ப்ரபத்தியென்னும் ந்யாஸவித்யைக்கு அங்கம். இவ்வைந்து அங்கங்களுக்கும் விரோதியாகக் கீழ்ச்சொன்னவை ஐந்தும் நீங்கப்பெறுகை உபாங்கமாகும்.
இவ்வைந்து அன்றியில் நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாய் ஸாத்விகத்யாகம் என்று ஒரு அங்கம் உண்டு. அதாவது, இக்கர்மத்தை யான் செய்யவில்லை; இதன் பலம் என்னுடையதல்ல; இதற்கு யான் ஒன்றையும் பலமாகக் கோரவில்லை; ஒரு பலத்துக்காக இதை யான் செய்யவில்லை என்ற அபிஸந்தியோடே "ஸர்வேச்வரனே ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தன்னதீனனாயுந் தனக்கே சேஷனாயும் உள்ள என்னைக் கொண்டு தன்னுடைய ஸாமக்ரிகளாலே தன்னை ஆராதிப்பதற்காகவே தனக்குச் சேஷமான இக்கர்மத்தைத் தன் ப்ரீதிக்காகவே தானே செய்துவைக்கிறான்" என்று துவக்கும்போதும் "செய்துவைத்தான்" என்று முடிக்கும்போதும் அநுஸந்திக்கை. இது இங்கே அங்கங்களுக்கும் உண்டு, அங்கிக்கும் உண்டு. இதற்குக் காரணம் நாம் எம்பெருமானுக்குச் சேஷபூதர் என்றும், அவனுக்குப் பராதீனர் என்றும் தெளிகை. இதற்கு விரோதி தனக்கொரு பலம் வேண்டும் என்று அபேக்ஷிக்கை. இவ்விரோதி நீங்குகை, இதற்கு உபாங்கமாம். இவ்வுபாங்கங்களால் அங்கங்களுக்கும் அங்கங்களால் அங்கியும் நிறைவேறும்.
அங்கியாவது ஆத்மநிக்ஷேபம். அதாவது, ஸர்வ சேஷியாய் ஸர்வரக்ஷகனாயிருக்கும் ஈச்வரனுக்கு நாமும் சேஷபூதராகையாலே, நம்முடையவும், நம்மைச் சேர்ந்தவர்களுடையவும் ரக்ஷணத்திலும் ரக்ஷண பலத்திலும் நமக்கு ஸம்பந்தம் இல்லை என்று தெளிவுடன் அத்யந்த பாரதந்த்ரியத்தோடே கூடின சேஷத்வாநு ஸந்தானமும், ரக்ஷணபாரத்தை அவனிடத்தில் வைக்கையும்; இதில் பரந்யாஸம் முக்யமாகையாலே பரஸமர்ப்பணம், பரந்யாஸம் என்பர். 'நீயே ரக்ஷிக்கவேண்டும்' என்று ப்ரார்த்திக்கையாலே ப்ரபத்தி, சரணாகதி என்பர். கீழ்ச்சொன்ன அஷ்டாங்க யோகத்தை உபாயபக்தி என்றும், இங்குச்சொன்ன ப்ரபத்தி என்னும் ஷடங்கயோகத்தைப் பலபக்தி (ஸாத்யபக்தி) என்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். பாப புண்யங்கள் ப்ராரப்தம் என்றும் அப்ராரப்தம் என்றும் இருவகைப்படும். இவன் செய்த கர்மங்கள் அனந்தமாயிருக்கையாலே அவற்றில் சிலவற்றைப் பிரித்து 'இவற்றை முன்னம் அநுபவிக்கட்டும், பின்னால் மற்றதைச் சில சில பிரிவாய் அநுபவிக்கச் செய்யலாம்' என்று வைக்கையாலே பலங்கொடுக்கத் தொடங்கியவை ப்ராரப்தங்களாம். ஏனையவை அப்ராரப்தங்களாம். அப்யுபகத ப்ராரப்தம் என்றும், அநப்யுபகத ப்ராரப்தம் என்றும் ப்ராரப்தங்கள் இரண்டு வகை. ப்ராரப்தங்கள் சிலவற்றை அந்தந்த ஜன்மங்களில் அநுபவிப்பதாக இசைந்து வருகையாலே அவை அப்யுபகத ப்ராரப்தங்கள். மற்றவை அநப்யுபகத ப்ராரப்தங்கள். அஷ்டாங்க யோகமானது அப்ராரப்த கர்மங்களை மட்டுமே நீக்கும். ப்ரபத்தி அப்யுபகத ப்ராரப்தம் நீங்கலான மற்ற எல்லா கர்மங்களையும் நீக்கும். இப்பிரபத்தியால் ப்ரஸந்நனான ஸர்வேச்வரன் தான் உபாயாந்தர ஸ்தாநத்தாலே நின்று மோக்ஷம் கொடுக்கும். அதாவது, இவன் ப்ராரப்தாவஸாநம் வரையில் பக்தியோகம் செய்தால் தான் கொடுக்கும் மோக்ஷத்தை இன்று ஒருகால் இவன் ப்ரபத்தி செய்வதால் தான் ஸந்தோஷித்து அந்த பக்தி யோகத்தின் ஸ்தானத்தில் தான் நின்று இவன் கேட்ட காலத்தில் மோக்ஷம் கொடுக்கிறான் என்கை. இப்ரபத்தி ஸகல பலத்துக்கும் ஸாதநம்.
இந்யாஸ வித்யைச்ருதிகளில் பலவாறு புகழ்ந்து விதித்திருக்கிறது; பகவத் சாஸ்திரங்களிலும், ஸ்மிருதிகளிலும், இதிஹாஸ புராணங்களிலும் இது ப்ரகாசிதம். ஆதிமுதல் அந்தம் இச் சரணாகதியையே முக்கியமாகச் சொல்லுகையாலே இதிஹாஸோத்தமமான ஸ்ரீ ராமாயணத்தை சரணாகதி ஸாரம் என்றும் தீர்க்க சரணாகதியென்றும் மேலோர் சொல்வது. ப்ரபந்ந ஸந்தானகூடஸ்தரான நம்மாழ்வார் வானமாமலைத் திருவடிகளிலே ஸாங்கமாக ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகிற 'நோற்ற நோன்பிலேன்' என்கிற திருவாய் மொழியிலே இவ்வங்காங்கிகள் அடைய அருளிச் செய்யப்பெற்றுள்ளன.
உலகம் வாழவேண்டும் என்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புல் திருவேங்கடநாதன் பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம் அநேக கிரந்தங்கள் செய்துள்ளனர். "ஸ்ரீரங்கத்தில் ஓர் புறச்சமயி வைஷ்ணவ மதத்தைத் தூஷித்து, அதை ஸ்தாபித்துக்கொண்டபிறகு திருவத்யயனோத்ஸவத்தை நடத்தக் கடவதென்று உத்ஸவத்தை நிறுத்திவைக்க, அங்குள்ளார் அவனை ஜயிக்கமுடியாமல் பெருமாள் கோயிலினின்றும் இவரை வரவழைத்தார்கள். இவர் அங்கு எழுந்தருளி அவனை வென்று உத்ஸவத்தை நடப்பித்தார். இப்படி இவர் வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தமையால் ஸ்ரீரங்கநாதன் வேதாந்தாசார்யர் என்கிற பட்டப்பெயரையும், ஸ்ரீரங்கநாச்சியார் இவர் பாண்டித்யத்தை மெச்சி ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்கிற பட்டப் பெயரையும், அங்குள்ள பெரியோர்கள் கவிதார்க்கிகசிம்மம் என்கிற பட்டப் பெயரையும் இவருக்கு ப்ரஸாதித்தார்கள். இவரது ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர என்னும் பட்டப் பெயரைப் பொறாமல் அநேகர் தம் தம் தந்த்ரங்களில் இவருடன் வாதம் செய்து ஸர்வ ப்ரகாரத்தாலும் பராஜிதரானார்கள். இவருடைய ப்ரபாவத்தை வைபவ ப்ரகாசிகை முதலியவைகளில் கண்டு கொள்வது. இவரை வடக்குத் திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யர் முகமாக அக்காலத்துள்ள சில பெரியோர்கள் ப்ரபத்தி சாஸ்த்ரார்த்தத்தை ஸங்கிரஹமாக ச்லோக ரூபமாய்ச் செய்து தரும்படி கேட்க, இவர், ந்யாஸ விம்சதியைச் செய்தருளி அதன் அநுஷ்டாந ப்ரகாரத்தைத் தெரிவிக்கும்படி இக்கிரந்தத்தையும் (ந்யாஸ தசகம்) அருளிச் செய்தார்.
(ந்யாஸ தசகம், நூலாசிரியர் வரலாறு, பக்கங்கள் 32-33. விஜய வருடம் புரட்டாசி மாதம் 1893)
ந்யாஸம் என்பது ஓர் வித்யை. அது மோக்ஷோபாயங்களில் ஒன்று. அது விஷயமான தசகம் -- பத்து. பத்து சுலோகங்கள் அடங்கிய கிரந்தம். ஆகவே அதற்கு ந்யாஸ தசகம் என்று திருநாமமாயிற்று. அதில் த்வயத்தின் அர்த்தமும் ஸங்க்ரஹிக்கப்பெற்றிருக்கிறது. முதல் மூன்று சுலோகங்களில் பூர்வ கண்டத்தின் பொருளும், மேல் ஒரு சுலோகத்தில் உத்தரகண்டத்தின் அர்த்தமும், மேல் ஐந்து சுலோகங்களில் உத்தர க்ருத்யத்தின் ப்ரகாரமும் இறுதி ச்லோகத்தில் ஸாத்விக த்யாகமும் நிரூபிக்கப்பெற்றுள்ளது.
தனக்குவமையில்லாத சீரும் சிறப்பும் எய்தி ஓங்கி விளங்கும் "ந்யாஸதசகம்" தமிழில் சுலோகம், பதவுரை, பொழிப்புரை விசேட விளக்கவுரை இவற்றினோடு "சரணாகதி மாலை" என்ற திருநாமத்துடன் இச்சங்கத்தின் ஐம்பத்தைந்தாவது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
இம்மாலைக்குப் பூரணபொருள் உதவி புரிந்த புண்ணியர் ஸ்ரீமான் கே. பாஷ்யம் அய்யங்கார் அவர்கள் அட்வொகேட், சென்னை. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயாபிவிருத்தியில் விசேட நன்னோக்கு உடையவரும், நன்மனத்தரும், சிறந்த தேசிக பக்தரும் ஆகிய அவரும் அவரது உற்றார் உறவினரும் மேன்மேலும் திருவருள் பெற்று இன்புறுவாராக.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக !
ஸ்ரீரங்கவிலாசம், ப.ரெ. திருமலை அய்யங்கார்
அம்பத்தூர் , காரியதரிசி.
27-9-1953.


{ முகவுரையே மறுபடி மறுபடி படிக்குமாறு அமைந்துள்ளதை கவனித்திருப்பீர்கள். தசகத்திற்குள் போகும் முன்னால், முகவுரையில் குறிப்பிட்டவற்றை ஓரிரு நாட்கள் மீண்டும் படித்து உள்வாங்கிக் கொள்வோம். அதன்பின் 61 பக்கங்களில் விரியும் நூலின் விளக்கத்தை தினமும் இங்கு அனுபவிக்கலாம். 10ம் தேதி முதல் ஆரம்பிக்கிறேன்.}

சென்ற நூற்றாண்டில் ஒரு அழைப்பிதழ்

நூல் வெளியீட்டிற்கு இப்போது அழைப்பிதழ்கள் எப்படி அடிக்கப் படுகின்றன என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் சென்ற நூற்றாண்டு வரை நூல்கள் அரங்கேறித்தான் உள்ளன. வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமி இயற்றியுள்ள ஒரு அற்புதமான நூல் "திருவரங்கத் திருவாயிரம்" டெல்லி ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி மூலமாக அடியேனுக்குக் கிடைத்தது. திருவரங்கனைப் பற்றிய ஆயிரம் பாடல்கள். அத்துடன் திருமாமகளைப் பற்றி ஒரு திருமகள் அந்தாதியும். ( அதை இங்கே இடப் போவதில்லை. யாரும் பயப்பட வேண்டாம்) அந்த நூல் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஸர்வதாரி ஆண்டிலே ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியுள்ளது. அதற்காக ஒரு அழைப்பிதழை தண்டபாணி சுவாமி அனுப்பியள்ளார். அதை மட்டும் இங்கே தருகிறேன்.

திருவரங்கத் திருவாயிரம் அரங்கேற்றிய
பிரசித்தப் பத்திரிகை.
நேரிசை வெண்பா
வேத வியாசன்முதன் மிக்கபொதுத் தேசிகர்வா
யோதன்முழு தேற்கு முணர்வுள்ளீர் -- சீதத்
திருவரங்க நாதனுக்கினியான் செப்பு துதியீண்
டொருவரங்க மென்றுகொள்ளீ ரோ.

வாசகம்.
பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்க ஸ்தலத்தில் ஸ்ரீ அகிலாண்டகோடி பிரமாண்டநாயகரா யெழுந்தருளி யிராநின்ற ஸ்ரீரங்கநாதரது திவ்விய சந்நிதானத்தில் திருவரங்கத் திருவாயிர மென்றும் திருமக ளந்தாதி யென்றும் பெயர் பெற்ற தமிழ்ப் பிரபந்தங்களை நாளது ஸர்வதாரி வருஷம் ஆனி மாதம் மங்களவாரமுந் திருவோண நட்சத்திரமுங் கூடிய சுபதினத்திற் றுவக்கி யவை முற்றுப்பெறுகிற பரியந்த மரங்கேற்றுகிறபடியால் விஷ்டுணு பத்தியுந் தமிழ் விற்பத்தியும் பொருந்திய புண்ணியவான்க ளியாவரும் வந்திருந்து சிரவணானந்தஞ் செய்யும்படி ப்ரார்த்திக்கிறேன்.
தன்படை வேற்றுப்படை யறியாது சொற்ப பேதங்களைக் காரணமாகக் கொண்டு போராடு மிளம்பத்தர்களையுஞ் சொற்சுவை பொருட்சார முதலான நயங்களறியாது பொறாமை மேற்கொண் டோழுகு மிளம் புலவர்களையுங்கூட விகழாது தழுவும் பெருந்தன்மைக்குத் திருவருளே சாட்சியா யிருக்கும்.
ஊமை கண்ட கனவுபோன் மனச்சாட்சியான வநுபவமுள்ள மகான்களு மிவ்வுலகத்தி லிருப்பார்க ளென்றே நம்புகிறேன்.
எல்லாச் சமயங்களுக்கு மவ்வச் சமயத்துள்ள மெய்யடியார்களே வித்தாவார்களென்றுந் தெய்வம் பொதுப் பொருளே யென்று முள்ளபடி யுணர்ந்த ஞானவான்களது பாத தூளிக்கேதாவது மகத்துவ முண்டென்ற பட்சத்தி லுண்மை வெளிப்படுமென்றே நினைக்கிறேன்.
பாத்திரமும் விஷயமுமறிந் துதவி செய்யத்தக்க செல்வவான்களையும் விரும்புகிறேன்.
வண்ணக்கலி விருத்தம்
குறிப்பு -- தானந்தனாதனனா
நீலங்கொண் மால்வரைபோ னீவந்தெ னூடொருநா
ளோலஞ்செ யாமுனமே யோதுஞ்சொல் பாழ்படுமோ
ஞாலம்பல் சீர்பெறவே நாடன்பெ னாணவமோ
சீலங்கெ டார்பலர்வாழ் சீரங்க நாயகனே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
இங்ஙனம்,
முருகதாசனென்றும் திருப்புகழ்க்காரனென்றும் விளங்குகின்ற,
தண்டபாணிப் பரதேசி.
தெய்வமே துணை.