எழுபத்தியொன்பதாவது ஸர்க்கம்
[லவணாசுரனுடன் யுத்தம்]
மறுநாள் பொழுது புலர்ந்ததும், சத்ருக்னன் ரிஷிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, யமுனா நதியைக் கடந்து மது நகரக் கோட்டை வாயிலில் வில்லுங் கையுமாகக் காத்து நின்றான். அன்று நடுப்பகலில் கொடுஞ் செயலை யுடையவனான அந்த அரக்கன், அனேகமாயிரம் பிராணிகளைப் பெரிய மூட்டையாகத் தோளிலே சுமந்து கொண்டு நகருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்படி வரும்போது கோட்டை வாயிலிலேயே சத்ருக்னன் ஆயுத பாணியாக நிற்பது கண்டு “அடே! நீயாரடா? உன்னைப் போன்ற ஆயுத பாணிகளை, நான் இதுவரை ஆயிரமாயிரமாகக் கொன்று தின்றிருக்கிறேன். விளக்கில் வந்து விழும விட்டிற் பூச்சியைப் போல, ஏன் வலிய வந்து விழுகிறாய்?' என்று இவ்வாறு கூறி ஆர்ப்பரித்தான். இது கேட்ட சத்ருக்னன், கோபத்தினால் கண்கள் சிவந்து, அந்த அரக்கனை நோக்கி, 'துஷ்ட! நான் ஸ்ரீராமனுக்குச் சகோதரன். சத்ருக்களை வெல்பவனாதலால், சத்ருக்னன் எனப் பெயர் பெற்றவன். போர் செய்ய ஆவல் கொண்டிருக்கும் என்னுடன் நீ எதிர்த்துப் போர் செய்யவும்' என்று பதில் கூறினான்.
சத்ருக்னனுடைய வார்த்தையைக் கேட்ட அவ்வரக்கன், அவனை நோக்கி, “மந்த மதியுடைய மானிடனே!இப்பொழுது நீ வந்து என்னிடம் தெய்வாதீனமாக சிக்கிக் கொண்டாய். ஒரு பெண்ணின் நிமித்தமாக, உனது தமையன், எனது மாமனான ராவணனைக் கொன்ற காலத்தில் மானிடப் பூச்சிகளுடனே, நாம் எதிர்த்துப் போர் செய்வது நமக்குத் தகுந்ததல்ல என்று அலக்ஷ்யத்தினால், ராமனை நான் இதுவரையில் பொறுத்திருந்தேன். முற்காலத்தவா், இக்காலத்தவர், வருங்காலத்தவர், ஆகிய மானிடர் களனைவரும் என் கையில் அடியுண்டு இறந்தவர்களே யாவர். அனேகரைப் புல்லினும் புன்மையானவர் என்றெண்ணி, அலக்ஷ்யமாய் அவமதித்து, ஓடிப்போகச் செய்தேன். சற்றுப் பொறு, வேகத்துடன் சென்று ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வந்து நீ வேண்டியபடி போர் செய்ய ஆயத்தமாக வருகிறேன்”, என்றான்.
லவணன் இவ்வாறு கூறக் கேட்ட சத்ருக்னன், ஆயுத மெடுத்து வரக் கருதிய அந்த அரக்கனை நோக்கி, “அடே ராக்ஷஸ! என் கண்ணிலகப்பட்ட பிறகு, இனி நான் உன்னை, அரைக்கணமும் உயிரோடு போக விட மாட்டேன். மதிமயக்கத்தால் அவ்வாறு எதிரிக்கு இடங்கொடுக்கின்றவன், தான் சாக மருந்து கொள்பவனேயாவான். ஆகையால் இப்பொழுதே, மூவுலகங்களுக்கும் சத்ருவான உன்னை, யமனுலகிற்கு அனுப்பப் போகிறேன்”, என்று கோபத்துடன் கூறினான்.
எண்பதாவது ஸர்க்கம்
(லவணாசுர வதம்)
. இதைக் கட்ட லவணாசுரன் மிக்க கோபங் கொண்டவனாய், மிகப் பெரிய மரமொன்றைப் பெயர்த்து, சத்ருக்னனுடைய மார்பைக்குறி வைத்து வீசினான். சத்ருக்னன் அதைக் கூரான பாணங்களால் பல துண்டங்களாக்கி வீழ்த்தினான். தான் விடுத்த மரம் வீணானது கண்டு, லவணன் மீண்டும் பல மரங்களைப் பெயர்த்துச் சத்ருக்னன் மீது வீசலாயினன். அவற்றை யெல்லாம், லக்ஷ்மணனின் அனுஜனாகிய சத்ருக்னன், நான்கு பகழிகளைப் பெய்துச் சேதித்துத் தள்ளி, லவணன் மீது பாண மழையைப் பொழிந்தான். அதனால் அவன் சிறிதும் கஷ்டமடையாதவனாகி, பெருநகை நகைத்து ஒரு பெரிய மலையைப் பெயர்த்தெடுத்து, சத்ருக்னனுடைய தலையின் மீது போட அதனாலவன் சோர்ந்து வீழ்ந்து மூர்ச்சையடைந்தான். அது கண்டு ரிஷிகள் தேவர்கள் கந்தர்வர் ஆகிய பலரும், ஹா ஹா வென்று கூவிக் கதறினர்.
லவணாசுரன், சத்ருக்னன் மூர்ச்சித்துத தரையில் விழுந்தது கண்டு அவன் இறந்தனன் என நினைத்து வீட்டினுள் புகவாயினும் சூலம் கைக் கொள்ளவாயினும் கருதாது, தான் தேடிக் கொணர்ந்த உணவுகளைப் புசிக்கலாயினன்.
இங்ஙனம் ஒரு முகூர்த்த காலம் சென்றதும் சத்ருக்னன். மூர்ச்சை தெளிந்தெழுந்து முனிவர்களால் போற்றிப் புகழப் பெற்றவனாகி, ஆயுதத்தை கைக் கொண்டு, தனக்கு ராமனளித்த அற்புதமான அம்பைக் கையிலெடுத்துக் கொண்டு, லவணனை எதிர்த்து நின்றான். அதனால் ஸகல உலகங்களும் நடுங்கலாயின. அமரர்கள். அசுரர்கள், கந்தர்வர்,முனிவர், நாகர் முதலியோர், அதன் ஜாஜ்வல்யமான தேஜஸ்ஸைக் கண்டு அஞ்சி நடுங்கிப் பிரம்மதேவரிடம் சென்று, ! “ஸ்வாமின்! இதென்ன கொடுமை, உலகமழியுங் காலமோ? யுகப் பிரளயம் கிட்டியதோ? இத்தனைக் கொடிய தோற்றத்தை இதுவரை நாம் கண்டதில்லையே! கேட்டதுமில்லையே, இதன் காரண மென்ன,' என்று வினவினர்.
பிரம்மதேவன் அவர்களை நோக்கி, 'தேவர்களே இப்பொழுது லவணாசுரனைக் கொல்லும் பொருட்டு சத்ருக்னன் ஒரு பாணத்தைக் கையில் எடுத்துள்ளான். அது ஜகன்னாதனான மஹாவிஷ்ணுவின் பழமையான பாணம். அது சோதிமயமாகச் ஜ்வலிக்குமியல்புடையது. ஆகவே, நீங்களனைவரும் இவ்வாறு அஞ்ச வேண்டியதாயிற்று. இந்தப் பாணத்தினால் மகாவிஷ்ணு, முன்பு மதுகைடபரை ஸம்ஹரித்தனர். இதன் பிரபாவம் ஒப்புயர்வற்றது. சீக்கிரம் செல்லுங்கள், வீரரான சத்ருக்னன், லவணாசுரனை வதைக்கும் வினோதத்தைக் காண்பீர்கள்" என்று கூறினார்.
ஸரஸ்வதி வல்லபன் இவ்வாறு கூறக் கேட்டு, வானத்தவர்களனைவரும், சத்ருக்னனும், லவணாகரனும் போரிடுமிடஞ் சென்று சத்ருக்னனது கரத்தில் விளங்கும். ஒப்புயர்வற்ற அம்பைக் கண்டனர். அச்சமயம் சத்ருக்னன் தனது வில்லை, காதளவுமிழுத்து லவணாசுரனது மார்பை நோக்கி, பாணத்தைப் பிரயோகித்தான். அது உடனே லவணனது உடலைப் பிளந்து கொண்டு, பூமியிற் புகுந்து, தேவர்களனைவர்களாலும் புகழப்பெற்று, மீண்டும் சத்ருக்னனிடம் வந்து சேர்ந்தது. இங்ஙனம் சத்குக்னன் சரத்தினால் லவணாசுரன், வஜ்ராயுதத்தினாலடிபட்ட மலையென விழுந்த வளவில் அவனிடமிருந்த சிவபிரானது சூலாயுதமானது, தேவர்களனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மகாதேவனிடம் போய்ச் சேர்ந்தது. சகலமான தேவர்களும் சத்ருக்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்.
எண்பத்தி ஒன்றாவது ஸர்க்கம்
(சத்ருக்னன் மதுரா நகரை ஸ்தாபித்தல்)
அப்பொழுது தேவர்கள் சத்ருக்னனை நோக்கி, 'ரகு குல திலக, நீ விரும்பும் வரமளிக்க வந்துள்ளோம். வேண்டுவாயாக' என்றனர். அது கேட்டு சத்ருக்னன், “ஹே தேவர்களே உங்களால் முன்பு நிர்மாணிக்கப்பட்டதாய், மதுரை எனப் பெயர் பெற்ற, மிகவும் அழகியதான இந்த மதுரபுரியானது, சீக்கிரமாக ஜனங்கள் வஸித்தற்குரிய நகரமாகும்படி வேண்டுகிறேன்" என்றான். தேவர்கள் அவ்வாறே வரமளித்துத் தமது இருப்பிடம் சென்றனர்.
முன்பு மதுவென்பவன் வஸித்த இடமாதலாலும் காண்பதற்கு மதுரமாயிருந்ததாலும், அந்நகரத்திற்கு மதுரா நகரமெனப் பெயர் வழங்கலாயிற்று.
பிறகு சத்ருக்னன், தனது பெருஞ்சேனையைப் பட்டணத்திற்கு வரவழைத்துக் கொண்டனன். சிராவண மாதத்தில், சத்ருக்னன், தனது ஸேனைகள் அந்நகரத்தில் குடிபுகுமாறு செய்தனன். அப்பூமி முழுதும், செழிந்து விசேஷமான விளைவுள்ளதாயிற்று. இந்திரன் காலந் தாழாது மழை பொழியச் செய்தனன். சத்ருக்னனால் ஆளப்பட்ட அம்மதுராபுரி யிலுள்ள ஜனங்களனைவரும், அரோக திருடகாத்ரர்களாக அழகு பெற்று விளங்கினர். யமுனா நதி தீரத்தில் அந்த நகரமானது அர்த்த சந்திராகாரமாய் அமைக்கப்பட்டு. அற்புதமான மாட மாளிகைகளும், கோபுரப் பிராகாரங்களும், கடை வீதிகளு மமைந்து, தம் தம் நிலை தவறாத, நால்வகை வர்ணத்தவரும் நிறைந்து ஒன்றாலொன்று குறைவின்றி, நானாவிதமான விலைப் பண்டங்களும் பொருந்தியதாயிருந்தது.
இங்ஙனம் தேவேந்திர நகரத்தை யொத்து, ஸகல ஸம்பத்துக்களும் நிறைந்து செழிப்புற்று. மிகவும் நூதனமாக அந்நகரம் இருப்பதைக் கண்டு சத்ருக்னன் களிப்புற்றான். இப்படிப்பட்ட அற்புதமான அந் நகரில் சத்ருக்னன், பன்னிரண்டு ஆண்டுகள் அரசு செலுத்தி வருகையில், அவன் ராமனைக் காண மிக அவாக் கொண்டனன்.
எண்பத்தியிரண்டாவது ஸர்க்கம்
(சத்ருக்னன், வால்மீகி யாச்ரமத்தில் ராமாயணம் கேட்டது.]
அப்பால் சத்ருக்னன் அரசாக்ஷியை மந்திரிகளிடம் ஒப்புவித்து விட்டு, முதல்மையான சில குதிரைகளும், நூறு ரதங்களும் பின் தொடரப் புறப்பட்டு, ஏழெட்டு நாட்கள் வழித் தங்கி வால்மீகி முனிவரின் ஆச்ரமத்தை யடைந்தான். அன்றிரவு அவ் வாச்ரமத்தில் தங்கியிருக்கும் பொழுது வால்மீகி முனிவர், அவனுக்கு பற்பல மதுரமான கதைகளைச் சொல்லி அவன் லவணனை வதம் செய்தது பற்றி அவனைக் கொண்டாடினார். பிறகு அம் முனிவர் சத்ருக்னனை உச்சி முகர்ந்து, அவனுக்கும் அவனுடன் வந்த பரிஜனங்களுக்கும் விசேஷமாக விருந்தளித்தனர். அச்சமயம் அவ்வாச்ரமத்தில், மிகவும் மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. அது ஸ்ரீராம சரிதத்தை, ஸம்ஸ் க்குத பாஷையில் இசைக்கொத்த தாள வகைகளுடனே யாழிலிட்டு விலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவியுற்றவுடன் சத்ருக்னனுக்கு, முன் நடைபெற்ற ஸ்ரீராம சரித்திரம் முழுமையும் மறுபடி தன் கண் முன்பே நடப்பது போலத் தோற்றியது. அதனால் மனம் தளாந்து கண்ணீர்மல்க ஒரு முகூர்த்த காலம் யாதொன்றும் தோன்றாது மயங்கி நின்றனன். பின். தெளிந்து அச்சரித்திரம் முழுமையும் ஸங்கீதத்தில் பாடக் கேட்டனன். அவனது பரிஜனங்கள் அனைவரும். அவ்வற்புதமான ஸங்கீதத்தைச் செவியுற்று, தலை குனிந்து தீனர்களாகி, இப்பொழுது யாம் எங்கிருக்கிறோம்? இதுவோர் கனவோ? அல்லது நனவோ? நனவோ? என வியப்புற்றவர்களாகி, அதைப் பற்றி சத்ருக்னனை வினவலாயினர். அவன், அவர்களை நோக்கி, இதைப் பற்றி வால்மீகி முனிவரை நாம் கேழ்ப்பது ஏற்றதன்று. முனிவர் ஆச்ரமத்தில் அதிசயங்கள் அநேகமுண்டு அவைகளை யாம் கண்டறியலாகுமோ எனப் புகன்று நித்திரை செய்யலாயினன்.
எண்பத்து மூன்றாவது ஸர்க்கம்
சத்ருக்னன் ஸ்ரீராமனை வணங்கி, மறுபடியும் மதுராபட்டிணம் வந்து சேர்ந்தது.]
மறுநாள் காலை பொழுது புலர்ந்தவுடன் சத்ருக்னன் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, வால்மீகி முனிவரிடம் விடை பெற்று அயோத்தி நோக்கிப் பிரயாணமாயினன். சீக்கிரம் அயோத்தி நகரை யடைந்து, அற்புதமாய் அலங்கரிக்கப் பெற்ற ஸ்ரீராமனது மாளிகையில் பிரவேசித்தனன். அங்கு மந்திரிகளின் மத்தியில் ஜ்யோதி மயமாய் விளங்கும் ஸ்ரீராமபிரானை, சத்ருக்னன் வணங்கிக் கைகூப்பி நின்று "மஹாராஜரே, தேவரீருடைய கட்டளைப் படி. அடியேன யாவும் செய்து முடித்தேன். இப் பன்னிரெண்டாண்டளவும் அந்த லவணனது நகரம் நன்று பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. அன்று முதல், அடியேன், தேவரீரை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்தது, அடியேனது தௌர்பாக்யமே யாகும். இனியாகிலும், அடியேன் தேவரீரை விட்டுப் பிரியாதிருக்கும் வண்ணம் அருள் புரிய வேண்டும். தேவரீரை விட்டுப் பிரியுமளவில். அடியேன், தாயை விட்டுப் பிரிந்த கன்றென தவிப்புறுகின்றேன்" எனப் பலவாறு வேண்டி, விண்ணப்பம் செய்தனன்.
இவ்வாறு உரை செய்து, அல்லலுறுகின்ற இளையோனை எடுத்து ஆலிங்கனம் செய்து கொண்டு அயோத்தி மன்னன், "குழந்தாய்! மகாசூரனான நீ இப்படிச் சோகிக்கலாகுமா? இப்படிப் பிரிவில் கரைதல், க்ஷத்திரிய தர்மமன்றே. ரகு குலதிலக! க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொண்டு பிரஜைகளை பரிபாலித்தல் நமது கடமையன்றோ. நீ அப்பொழுதைக்கப்பொழுது, அயோத்யாபுரிக்கு வந்து என்னைப் பார்த்து விட்டுப் போகலாம். கடைக்குட்டியான உன்னை விட்டுப் பிரிந்திருக்க, எனக்கு மாத்திரம் இஷ்டமோ? நீ எனக்கு உயிர் நிலை போன்றவனன்றே. "யாது செய்வது? தர்மத்திற்கு யாருமடங்க வேண்டுமன்றோ!! ஆதலின், குழந்தாய்!.நீ ஏழு நாள் இங்கே நம்முடன் கூடிக் களிப்புற்றிருந்து, பிறரு மதுரா புரிக்குப் பிரயாணமாகுக" என்றனன்.
சத்ருக்னன், மூத்தோனது கட்டளைப்படி அயோத்தியில், ஏழு தாட்கள் தங்கியிருந்து, பிறகு மதுராபுரிக்குத் திரும்பிச் சென்றனன்.