சனி, 7 ஜனவரி, 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

பத்தாங் களம்

இடம்: கைகேயியின் அந்தப்புரம்

காலம்: நண்பகல்

பாத்திரங்கள்: தசரதர், கோசலை, கைகேயி, சுமித்திரை, வசிஷ்டர், சுமந்திரர், இராமர், வாயில்
காப்போர் முதலியோர்

(தசரதர், தலையிற் கைவைத்தபடி சோகமாய்த் தரையில் உட்கார்ந்திருக்கிறார். கோசலை, சுமித்திரை இருவரும் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு அவருக்கிரு புறத்திலும் உட்கார்ந்திருக்கின்றனர். கைகேயி அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டு ஒரு புறமாய் நிற்கின்றாள். வசிஷ்டரும், சுமந்திரரும் சிந்தாக் கிரந்தராய் வாயிலில் நிற்கின்றனர். இராமர் வருகின்றார். அவரைத் தொடர்ந்து சீதையும் இலக்ஷ்மணரும் வருகின்றனர். மூவரும் சக்கரவர்த்தியை நமஸ்கரிக்கின்றனர். சக்கரவர்த்தி “ஆ! மகனே” என்று சோகித்து வீழ்கிறார். இராமர் அவரைத் தாங்கிக்கொண்டு)

இராமர்: பிதா! ஏன் சோகிக்கின்றீர்கள்? நான் ஆரணியஞ் சென்று பதினான்கு வருஷம் விளையாடிக் காலத்தைக் கழித்துத் தங்கள் வாக்கையும் காப்பாற்றிப், பிறகு தங்கள் பாதத்தை அடைவேன். சீதையும், இலக்ஷ்மணனும் என்னுடன் காட்டுக்கு வருகின்றார்கள். நான் அவர்களை வரவேண்டாமென்று என்னால் இயன்றவரை தடுத்தும் பிரயோஜனப்படவில்லை. ஆதலால் நாங்கள் மூவரும் காட்டுக்குச் செல்ல விடை யளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

தசரதர்: ஹே, இராமா! என் கண்மணி ! என் நெஞ்சை இரும்பென்று நினைத்தையா, அல்லது கல்லென்று கருதினாயா? என் உயிரினும் மேலாகிய உன்னைக் “காட்டிற்குப்போ” என்று உரைத்துப் பின் உயிர் தரித்து, நான் இவ்வுலகத்தில் இருப்பேனா?

இராமர்: எந்தாய்! அன்னையார்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் நீங்கள் பின்வாங்கக்கூடாது. சத்தியத்தின் மிக்கதொன்றில்லை யென்பதை சத்தியசந்தராகிய தாங்கள் அறிவீர்கள். ஆதலால் சிறிதும் ஆலோசியாது என்னைக் கானனுப்பி அன்னையார்க்குரைத்த உரையைப் போற்றியருளுங்கள்.

தசரதர்: இராகவா! கைகேயி வரத்தைக் கொண்டு என்னை வஞ்சித்துவிட்டாள். உனக்குப் பட்டத்தின் உரிமையுள்ளது. அவ்வுரிமையைக் கொண்டு, என் உரையை மறுத்து, நீயே இவ் வயோத்தியின் அரசைக் கைப்பற்றிக்கொள்.

இராமர்: (அஞ்சலி செய்து) பிதா ! தாங்கள் அறுபதினாயிரம் வருஷகாலமாக அரசாட்சி செய்து வருகிறீர்கள். இவ்வளவு நீண்ட அரசாட்சியில் சிறிதேனும் குறைபாடு இதுவரை நிகழ்ந்ததில்லை. உலகமெலாம் தங்களை மனுநெறி கடைப்பிடித்து மொழி தவறாது அரசு செலுத்தும் மன்னரென்று புகழ்ந்து கொண்டாடி வருகின்றது. அந்த மறுவற்ற புகழை மாசு படுத்துவது, தங்களுக்கு மகனென வந்த நானோ? பொய்யாத கீர்த்தியை மெய்யாலடைந்த அரிச்சந்திர மன்னர் வந்த மரபல்லவோ நமது மரபு. அவர் மெய்யை நிலைநிறுத்த எவ்வளவோ இன்னல்களுற்றார். கட்டுரை இழக்க அஞ்சி பதியிழந்தார்; பாலனை இழந்தார்; படைத்த நிதி இழந்தார்; தமக்குண்டென்று கருதிய கதியையும் இழக்கச் சித்தமாயிருந்தார். இத்தனை இடும்பைகளில் ஒன்றேனும் அடையத்தக்க துர்ப்பாக்கியம், கடவுள் கிருபையால் தங்களுக்கு நேரவில்லை. தாங்கள் பதியை இழக்கப் போகிறீர்களா? பாலனை இழக்கப் போகின்றீர்களா? படைத்த நிதியை இழக்கப் போகின்றீர்களா? ஒன்றுமில்லையே! அரிச்சந்திர மன்னருக்கு ஒரே புத்திரன் இருந்தான். அப்புத்திரனைச் சின்னஞ்சிறிய பருவத்தே ஒருவருக்கு அடிமையாக விட்டுப் பிரியும்படி நேர்ந்தது. தங்களுக்கோ புத்திரர் நால்வர் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவனாகிய என்னைச் சிலகாலம் பிரிந்திருக்கப் போகின்றீர்கள். அப்படித் தங்களை விட்டுப் பிரியும் நான் ஒன்றுமறியாத சிறுவனல்ல. ஒருவருக்கு அடிமையாகவும் தாங்கள் என்னை விற்றுவிடவில்லை. மகான்களும் மாதவரும் உறையும் வனத்தில் சர்வ சுதந்தரத்தோடும் வசித்துத் திரும்பித் தங்கள் பாத சேவைக்கு வந்துவிடுவேன். இதற்குத் தாங்கள் வருந்துவானேன்? கொஞ்சமும் சஞ்சலப்படாமல் விடை கொடுத்து அனுப்புங்கள்.

தசரதர்: ஆ, மகனே! தேவதாசன் இவ்வளவு சாதுர்யமாகப் பேசியிருந்தால், அவன் தந்தை அவனை விட்டுப் பிரியுங்கால் என்னைப் போலவே வருந்தியிருப்பார். என் செல்வமே! உன் சாதுர்ய மொழி என் மன வருத்தத்தை மிகுவிக்கிறதடா!

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கௌசலைதன்
                                  குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணிந்த வரைத்தோளா வல்வினையேன்
                                  மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
                                   வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ
                                     காகுத்தா! கரிய கோவே !

கற்புக்கரசியாகிய கோசலையின் செல்வப் புதல்வா! சாதுரிய வார்த்தைகளால் என் மனமுருக்கத்தானே கற்றாய்! இது வரையில் அம்சதூளிகா மஞ்சத்தின்மீது துயில் கொண்ட நீ, இனி காட்டு மரங்களின் கீழே கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு படுத்து உறங்க வேண்டுமே; அதைக் கற்றுக் கொண்டனையோ? மைந்தா ! என் குடியைக் கெடுக்கப் பெண்வடிவு கொண்டு வந்த பேயாகிய, இந்தக் கைகேயி என்னை வஞ்சித்து வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அதனாலென்ன? நீ ஒரு தேசத்தை ஆளத்தக்க பல பராக்கிரமத்தோடு கூடிய யௌவன புருஷன். இவ்வரசும் முறைப்படி உனக்கு உரியது. ஆதலால் என்னையும், இந்தக் கைகேயியையும் அவளைச் சேர்ந்தவர்களையும் அடித்துத் துரத்திவிட்டு நீ அரசனாய் விடு. அது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் மனச் சமாதானத்தையும் கொடுக்கும். அதைவிட்டு, ஒரு ஸ்திரீயின் மாயவலையிற் சிக்கிய என் வார்த்தையைக் கொண்டு காட்டுக்குப் போகாதே, குலக் கொழுந்தே!

வெவ்வாயேன் வெவ்வினைகேட் டிருநிலத்தை
                             வேண்டாதே விரைந்துவென்றி
மைவாய களி றொழிந்து தேரொழிந்து
                             மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேனெடுங்கண் நேரிழையு
                              மிளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடப்பையோயெம் மிராமாவோ
                              எம்பெருமான் என்செய்கேனே!

இரக்கமற்ற பாவியாகிய என் சொல்லைக் கேட்டு நீ இவ்வரசைத் துறக்கலாமா? நீ ஊர்வலம் வருவதற்காக அரண்மனையிலுள்ள பசும்பொன் தேர்கள் எத்தனை! பட்டத்து யானைகளெத்தனை! பஞ்ச கல்யாணிக் குதிரைக ளெத்தனை! இத்தனையும் வேண்டா மென்றொழித்துவிட்டு, மெல்லிய பூங்கொடி போன்ற மைதிலியும், இளவல் இலக்ஷ்மணனும் பின்தொடர, கொடிய காட்டிற்கு எவ்வாறடா செல்வாய்? என் செல்வத் திருக்குமரா! உன்னைப் பிரிந்து நான் எவ்வாறு சகித்திருப்பேன்! நெடுநாள் வருந்தி, கொடுந்தவம் புரிந்து, குருடன் பெற்ற கண்போலவும் மிடியன் அடைந்த தனம் போலவும் உன்னை வேள்வி செய்து பெற்றேனடா! என் புத்திர சிகாமணி! மைந்தனின்றி வருந்திய என் மனக்குறை மாற்றவந்த மகனே! வயோதிக காலத்தில் என்னை வந்தடைந்த வாழ்வே! அயோத்தியை ஆண்டு என் அகத்தைக் குளிர்விப்பாய் என்று இறுமாந்திருந்தேனடா, என் அருமருந்தே!

வன்தாளின் இணைவணங்கி வளநகரம்
                         தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை
                          நெடுங்கானம் படரப் போகு
என்றாளெம் இராமாவோ உனைப்பயந்த
                            கைகேசி தன்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
                            நன்மகனே யுன்னை நானே.

இராமச்சந்திரா! உலகமெல்லாம் உன் திருவடியிணைகளை வணங்க அரசனாகி அரியணை மீது வீற்றிருக்க வேண்டியவனல்லனோ நீ? உன்னைக் ‘காட்டுக்குப் போ’ என்று கூசாது கூறினாளே அந்தக் கொடும்பாவி கைகேசி! இதற்குத்தானோ நீ அவளைப் பெற்ற தாயாகப் பாவித்து வந்தது? ஐயோ! அந்தப் பாவி சொல்லைக் கேட்டு நானும் உன்னைக் காட்டுக்கனுப்புவதோ! நான் உனக்கு அரசு தருவதாகச் சொன்னது வெகு அழகா யிருக்கிறது! நீ அரசாள்வாய், அதைக் கண்ணாற் பார்த்துச் சந்தோஷிக்கலாம் என்றெண்ணியிருந்தேனே! அந்தச் சந்தோஷம் தெய்வத்திற்குப் பொறுக்கவில்லையோ! குழந்தாய்! இராமா ! நீ வனஞ் செல்லாதே! சென்று என்னைக் கொல்லாதே! உரை தவறினான் தசரதன் என்று உலகம் என்னைத் தூற்றட்டும். நான் அதற்கு நாணேன். உன்னை இழந்து நான் காப்பாற்றும் வாக்குறுதியும் சத்தியமும் எதற்கு? வேண்டாம், நீ காட்டுக்குப் போகாதே , போனால் என் உயிர் தரியாது.

இராமர்: பிதா! தாங்கள் இவ்வாறு கூறுவது தகுமோ? வெகு நாளாகத் தாங்கள் போற்றிவந்த சத்திய விரதத்தை என் பொருட்டோ இழப்பது?

புலையனும் விரும்பாதஇப் புன்புலால் யாக்கை
நிலையெனா மருண்டுயிரினு நெடிதுறச் சிறந்தே
தலைமைசேர் தருசத்தியம் பிறழ்வது தரியேன்
கலையுணர்ந் தநீயெனக்கிது கழறுவ தழகோ?

தந்தாய்! நாம் இறந்த பிறகு, வெகு அருமையாகப் போற்றி வந்த இந்த உடலைப் புலையனும் வெறுத்துத் தூரத்தே நின்று தீமூட்டிக் கோலாற் புரட்டிச் சுட்டுவிடுகிறான். அவ்வளவு இழிவான இந்த யாக்கையை நிலையென்று மயங்கிக் கருதி அதன்மீது வைத்த பாசத்தால் உயிரினுஞ் சிறந்த சத்தியத்தை விடுவதற்கு நான் ஒருபொழுதும் சம்மதியேன். சகல கலைகளையும் உணர்ந்த தாங்கள் இவ்வாறு சொல்லுவது அழகோ? தந்தாய்! அன்னையார்க்குக் கொடுத்த வாக்கை மாற்ற வேண்டாம். தங்களுக்கு நான் அருமைப் புதல்வனேயானாலும் என்னிலும் பன்மடங்கு அருமையுள்ளதாகும் வாய்மை என்பது. அதையோ என்பொருட்டு இழப்பது? உரைத்த உரையை மாற்றுவதாவது என்ன? பொய் கூறுதலன்றோ? பொய்யெனப் படுவது பஞ்ச மாபாதகங்களில் ஒன்றல்லவா?

இம்மை நலனழிக்கும் எச்சங் குறைபடுக்கும்
அம்மை யருநரகத் தாழ்விக்கும் – மெய்மை
யறந்தேயும் பின்னு மலர்மகளை நீக்கும்
மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய்

என்றபடி மறந்தேனும் பொய் கூறுவதால் வரும் தீங்கு ஒன்றோ? இப்பிறப்பில் அடையக்கூடிய புகழ், பொருள் முதலிய நலன்களையெல்லாம் அழிக்கும்; சந்ததி விருத்தியைக் கெடுக்கும்; இறந்தபிறகு கொடிய நரகத்தில் விழச் செய்யும். உண்மையான தர்ம நெறியைச் சிதைக்கும். மறந்தும் பொய் கூறல் இவ்வளவு தீங்குகளை விளைவிப்பதாய் இருக்க, தாங்கள் மனமறியக் கூறிய வாக்கை மாற்ற ஒருப்படுவது தருமமோ? எனக்கு இந்த இராஜ்யமும் பெரிதல்ல; நாட்டிலிருந்து அனுபவிக்கும் சுகசௌக்கியங்களும் பெரிதல்ல. தங்கள் வாக்கை நிறைவேற்றித் தங்களை மெய்மை தவறாதவராகச் செய்வதொன்றுதான் பெரியது. மேலும் காட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவ்விதம் தீர்மானித்ததை இனி மாற்றுவதாகாது. தாங்கள் எனக்கும், சீதை, இலக்ஷ்மணர் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்புமாறு பிரார்த்திக்கின்றேன்.

தசரதர்: குழந்தாய்! நான் என்ன சொல்லியும் கேளேனென்கிறாயே! இன்னும் நானென்ன சொல் மாட்டுவேன்? நீ தர்ம நெறி தவறாதவனாக இருப்பது எனக்கன்றோ துன்பத்தை விளைவிப்பதாயிருக்கிறது. என் செல்வனே! இனி உன்னைத் தடுக்க என்னாலாகாது. உன் விருப்பம்போல் சென்று வா. உன் சிந்தை தருமத்தில் வேரூன்றி இருக்கிறது. உன் புத்தியைக் கெடுக்க எவ்வாறு முடியும்? உன் தீர்மானப்படியே செல். அடவியில் பல பல வழிகள் காணப்படும். அவற்றுள் நல்லதாயும் அச்சமற்றதாயு மிருக்கும் வழியில் ஜாக்கிரதையாகப் போ. பிடிவாதமாய் உன்னைத் தொடர்ந்து வரும் ஜானகியைப் பத்திரமாகப் பாதுகாத்து வா. இலக்ஷ்மணனை அரை க்ஷணமும் விட்டுப் பிரியாதே. சென்று வா.

இராமர்: பிதா! நான் கிருதார்த்தனானேன். (நமஸ்கரிக்கிறார். பிறகு கோபத்தோடு இலக்ஷ்மணரும் அவருக்குப் பிறகு சீதையும் நமஸ்கரிக்கின்றனர். அப்பால், இராமர், இலக்ஷ்மணர், சீதை மூவரும் கைகேயியை நோக்கிச் செல்கின்றனர். கைகேயியை இராமர் நமஸ்கரிக்கிறார். கைகேயி அவரை நோக்கி)

கைகேயி: இராமச்சந்திரா ! வனத்தில் நீ அருந்தவர் ஆசீர்வாதங்களைப் பெறுவாயாக.

சுமந்திரர்: (கைகேயியை நோக்கி) அம்மா! உம்முடைய கணவர் அடையும் துன்பத்துக்கும் இரங்காமல், மற்றோர் அபவாத மொழிகளுக்கும் அஞ்சாமல், நீர் செய்யும் தொழிலினுங் கொடியதொன்றில்லை. நீர் படுகொலைக்கும் அஞ்சாத பாறை நெஞ்சினர் என்றெண்ணுகிறேன். அறுபதினாயிரம் வருஷம் அரசாண்டவரும், அசுரர்களை வென்றவரும், சகல கலையுணர்ந்தவருமாகிய தசரதச் சக்கரவர்த்தியையும் தவிக்கச் செய்கின்றீரன்றோ? இது தகுமா? நீரோ பென்பால். பெண்களுக்குத் தம் கணவரே தெய்வம் என்பதை நீர் அறிவீர். அறிந்தும் உமது கணவரும் உலகுக்கு அரசரும் ஆகிய தசரதரை அவமதிக்கின்றீர். இது நியாயமல்ல. ‘தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை’ என்ற பழமொழி மெய்யே யென்பதை இன்றுணர்ந்தேன். உமது தாயாருடைய கெட்ட குணத்தைப் பற்றி நாங்கள் விசாரித்து அறிந்திருக்கிறோம். உங்கள் தந்தை மிருக பாஷை அறிந்தவர். அவர் ஒருநாள் ஓர் எறும்பின் ஒலியைக் கேட்டுச் சிரித்தார். அதைக்கண்டு உமது தாயார், அவர் சிரித்த காரணத்தைச் சொல்லும்படி வேண்டினார். அரசர் அதை வெளியிட்டால் தமக்கு மரணம் நேருமென்றார். அப்பொழுது உம் தாயார் அவரை நோக்கி, “நீர் இறந்தாலும் சரி, இருந்தாலும் சரி, எனக்கு நீர் அதைச் சொல்லித் தீரவேண்டும்” என்றார். கலக்கமற்ற மனத்தையுடைய உமது பிதா அவர் துர்க்குணத்தை அறிந்து அவரைத் தள்ளிவிட்டார். உமது தாய்போலவே நீரும் துர்க்குணம் உள்ளவராயிருக்கிறீர். வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். உலக வேந்தராகிய உமது கணவருக்கும் உமக்கும் பழி தேடிக் கொள்ளாதீர். ஸ்ரீராமச்சந்திரர் குலத்தில் மூத்தவர். தர்ம சொரூபி. எல்லார்க்கும் இனியவர். அவர் இந்நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விட்டால் உமக்குப் பெரிய அபவாதம் நேரிடும். ஊராரனைவரும் உம்மை நிந்திப்பார்கள். ஆதலால், இராமர் இங்கிருந்து அரசு புரியட்டும். நீரும் உமது புத்திரர் பரதரும் சகல செல்வங்களையும் அநுபவித்துக் கொண்டிருங்கள். இராமன் அரசாள்வது உமக்கு விருப்பில்லையாயின், உமதிஷ்டப்படி பரதரே அரச பாரத்தை வகிக்கட்டும். நாங்கள் இராமர் எங்கு செல்கின்றாரோ அங்கு செல்கிறோம். உமது இராச்சியத்தில் அந்தணர்கள் வசிப்பது தகாது.

கைகேயி: (சற்று கோபத்தோடு) அரசர் மனமாரக் கொடுத்த வரங்களைப் பற்றித் தாங்கள் இவ்வளவு தூரம் பேசவேண்டிய அவசியமில்லை.

தசரதர்: (சுமந்திரரைப் பார்த்து) சுமந்திரரே! நீர் சீக்கிரம் சதுரங்கங்களால் நிறைந்துள்ள சேனையைச் சித்தப் படுத்தும். பற்பல தொழிலாளிகளும், வியாபாரிகளும் புறப்பட்டு எனது குமாரனுடன் செல்லட்டும். முக்கியமான நகரத்தார்கள் அனைவரும் அவனுடன் போகட்டும். காட்டை நன்றாக அறிந்த வேடர்கள் முதலியோரும் இராமனைப் பின்தொடர்ந்து செல்லட்டும். இப்படி இருந்தால், இராமன், யானை முதலிய மிருகங்களைக் கொன்றும், காட்டுத் தேனைக் குடித்தும், அநேக புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும், மகரிஷிகளைத் தரிசித்தும் நாட்டைப் பற்றி நினையாமல் சுகமாகக் காலம் கழிப்பான்.. நமது தானியக் களஞ்சியமும் தனசாலையும் மனுஷ்ய சஞ்சாரமற்ற காட்டுக்குச் செல்லும் இராமனுடன் செல்லட்டும்.. நீர் இராமனைத் தேர்மேலேற்றி அழைத்துப் போம்.

கைகேயி: (குரல் மாறி, உள்ளம் நடுங்கி, தசரதரைப் பார்த்து) அரசரே! மனிதரற்றதும், சகல செல்வங்களும் நீங்கியதும், சாரமற்ற சக்கை போன்றதுமான இராச்சியத்தைப் பரதன் பெற்றுக் கொள்ளமாட்டான்.

தசரதர்: (கைகேயியைக் கோபத்தோடு பார்த்து) அடி, அநியாயக்காரி! உனக்கு வரத்தைக் கொடுத்து அவதிப்படும் என்னை ஏனடி இன்னும் வருத்துகிறாய்? உனக்கு வரம் கொடுக்கும்போது ‘ஒருவரும் இராமனுடன் போகக்கூடாது’ என்று நீ கேட்டுக்கொள்ள வில்லையே! பாவத்தின் அவதாரமே! உன்னையும் பெண் என்று பிரமன் ஏன் படைத்தான்? நான் எனது கண்மணி இராமனுடன் காட்டுக்குப் போகின்றேன். நீ பரதனுடன் இவ்விராச்சியத்தை ஆண்டுகொண்டு சுகமாக வாழ்ந்திரு.

இராமர்: (தசரதரைப் பார்த்து) தந்தாய்! சகல சுகங்களையும் வெறுத்து, காட்டுக்குத் தவஞ் செய்யச் செல்லும் எனக்கு யானை, சேனைகளால் என்ன பயன்? யானையை விட்டுவிட்டு யானையைக் கட்டும் கயிற்றைப் பத்திரமாக வைத்திருப்பவர் எவரேனும் உண்டோ? அரசைத் துறந்து செல்லும் எனக்கு அரசிற்கு அங்கங்களான யானை சேனை பரிவாரங்களும், பொன்னும் பூஷணங்களும் எதற்கு?

(கைகேயி மரவுரிகளை எடுத்துவந்து, இராமர் கையில் இரண்டும், சீதை கையில் இரண்டும், இலக்ஷ்மணர் கையில் இரண்டுமாகக் கொடுக்கிறாள். இராமர் மரவுரிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, பிறகு உடுத்திக் கொள்கிறார். இலக்ஷ்மணரும் அங்ஙனமே செய்கிறார். சீதை மரவுரிகளை உடுத்திக்கொள்ள அறியாது வெட்கப்பட்டவளாய், இராமனைப் பார்க்கிறாள்.)

                                ….. தொடரும்………

வெள்ளி, 6 ஜனவரி, 2017

கோதாஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

சுலோகம் 11
திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
         ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
         நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:||       (11)


பொன்னோக்குங் கோதாய்நீ போந்ததிசை மாலரங்கன்
தன்னோக்க மெய்துந் தரத்தினான் -- மன்னோக்கு
மண்ணிற் பயனளிக்கும் வண்மையினான் மாமுனிவர்
எண்ணுத் தரதிசை யாயிற்று.                 (11)


பதவுரை

         தேவி -- கோதாதேவியே! திக் தக்ஷிணாபி -- தெற்குத் திக்குங்கூட; பரிபக்த்ரிம்புண்யலப்யாத் -- பரிபக்குவமான புண்யத்தால் கிடைக்கத்தக்க; தவ அவதாராத் -- உன்னுடைய அவதாரத்தால்; ஸர்வோத்தரா -- எல்லா விதத்திலும் உத்தரமாய் (ச்ரேஷ்டமாய், வடக்காய்); பவதி -- ஆகிறது; யத்ரைவ -- எந்தத் திக்கிலேயே; நித்ராளு நாபி -- தூங்கிக்கொண்டிருந்தாலும்; ரங்கபதிநா -- ரங்கேச்வரரால்; பஹுமாந பூர்வம் -- பஹுமானத்தோடுகூட; நியதம் -- இடைவிடாமல்; (நியமமாக); காடாக்ஷ: -- கடாக்ஷங்கள்; நிஹித: -- வைக்கப்பட்டுளவோ?

         அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால், தென்திசைகூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று). ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக்கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப்பட்டிருக்கின்றன!

         அவதாரிகை

         (1) நம்மாழ்வாரிலும் என் பிதா மஹத்தரரான பெயரை அடைந்தார் என்றீரே! என் பிதா வாங்கி என் மாலையை ஸமர்ப்பித்ததால் அப்படி அரும் பெரும் ஏற்றம் கிடைக்குமோ? அம்மா! இது என்ன ஆச்சர்யம்! நீ அவதரித்த மஹிமையால் தக்ஷிண திக்கும் ஸர்வோத்தரமாயிற்றே! ஓர் ஆழ்வார் உன்னை அவதரிப்பித்து வளர்த்த பிதாவானதால், மஹத்தரராவது அரிதோ? 'ஸர்வோத்தரம்' என்பதால் உத்தமமாயிற்று. ஓர் திக்கு நீ பிறந்த திக்கு என்கிற ஏத்தோ ஒரு ஸம்பந்தத்தாலே ஸர்வோத்தமாகையில், ஆழ்வாரான உன் பிதா நீ அவதரித்ததால், மஹத்தரராவது கொஞ்சமே என்று சொல்ல வேண்டும்.

         (2) பெருமாளுடைய அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களைப் பேசினார். இங்கே கோதைப்பிராட்டியான தேவி ஆழ்வார்களைப்போல பிரபந்தமியற்றிய கவியாக அவதாரம் செய்ததைப் பேசுகிறார்.

         திக் தக்ஷிணா அபி -- தென்திசை கூட; தென் திக்கின் அதிபதி 'பித்ருபதி' என்பர். அவர் பேரே நடுங்கச் செய்யும். பித்ருநாமத்தை உடையவராய் அதிஷ்டிதமான ஓர் திக்கின் ஓர் மூலையில் பிறப்பென்னும் ஸம்பந்தம்கூட பயத்தைக் கொடுக்கக் கூடிய திக்குக்கூட.

         பரிபக்த்ரிம புண்யலஹ்யாத் --  எத்தனை புண்யங்கள் பரிபாக தசையை அடைந்து இப்படிக்கொத்த பயனைக் கொடுக்கவேணும்! 'தர்மராஜர்' பயங்கரரென்று உலகம் பயந்தாலும், அவர் தர்மமூர்த்தியல்லவோ? தர்மம், புண்யம். அந்த திக்பதியின் மஹாபுண்யங்களெல்லாம் அந்தத் திக்கைச் சேர்ந்தது. பதியின் புண்யம் பத்நிக்குடையது.

         தேவி தவ் அவதாராத் -- தேவி! என்னுடைய திவ்யமான அவதாரத்தால், விபீஷணாழ்வார் அவதரித்ததும், அரசு செலுத்துவதுமான திக்கென்று முன்பு ஏற்றமுண்டு. நம்மாழ்வார் அவதரித்ததால், அந்தத் திக்கு முன்பே ஓர் ஏற்றம் பெற்றது. அந்த அவதாரமும் மஹாபுண்ய பரிபாகத்தால் ஸப்யம். ஆனால், அது தேவன் அவதாரம். பெருமாளோ, விஷ்வக்ஸேன தேவரோ நம்மாழ்வாராய் அவதரித்தார். இங்கே தேவியான உன்னுடைய அவதாரம். 'உன்னுடைய அவதாரக்ஷணத்திலிருந்து' என்றும் பொருள். விபீஷணர் தேவரல்ல.

         ஸர்வோத்தரா பவதி -- எல்லாவற்றிலும் சிரேஷ்டமாயாகிறது. தெற்குத் திக்கு வடகோடியாகி விடுகிறது என்பது ஆச்சரியம்! 'உத்தர' என்பது ச்ரேஷ்டத்தையும் சொல்லும், வடக்கையும் சொல்லும். 'ரொம்ப தூரம் கிழக்கே போனால், அது மேற்காகி விடும்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி. 'கிழக்கும் மேற்கும் ஓரிடத்தில் சேரும்' என்பர். 'தெற்கும் வடக்கும் ஒருகாலும் சேராது, நித்திய விரோதிகள்' என்பர். உன் அவதார மஹிமையால் இளப்பமானது லோகோத்தரமாகும். சேராத விருத்தங்களும் விரோதத்தை விட்டுச் சேர்ந்து விடும்.

         யத்ரைவ -- எந்தத் திக்கை நோக்கியே

         ரங்கபதிநா -- "தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்" என்பர். தென் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் மத்தியத்திலுள்ள ரங்கபதி. இரண்டு திக்குகளுக்கும் பொதுவாய்ப் பக்ஷபாதமில்லாமல் மத்தியஸ்தமாயிருக்க வேண்டியவர். அப்படி மத்தியஸ்தராக இருக்கவேண்டியவரான "ரங்கபதியாலேகூட" . திருவரங்கத் திருப்பதி மத்தியஸ்தமாய் இருப்பதுபோல அத்திருப்பதியின் பதியும் மத்தியஸ்தமாய் இருக்க வேண்டாவோ?

         பஹுமான பூர்வம் -- பஹுமானத்தோடுகூட. அரங்கத்தில் தூக்கம் நடனமேயம்மா! நீ பிறந்த திக்கென்று பஹுமதியாய் எண்ணிக் கொண்டேயிருக்கிறார். மனது லயமடைந்தால் அல்லவோ தூக்கம்! தெற்குத் திக்கிலேயே உன் அவதார ஸம்பந்தத்தையிட்டும் இத்தனை பஹுமானமிருக்கும்போது, அதை 'உத்தம'மாக 'ஸர்வோத்தர'மாகச் செய்யும்போது, உன் பிதாவை மஹத்தரராக்குவது அரிதாகுமோ? திக்கை 'தம'மாக்குபவர் உன் பிதாவை 'தா'ரராக்காரோ?

         நித்ராளுநா அபி -- தூக்கமாயிருந்தாலும், ரங்கத்தில் தூக்கத்தை நடிப்பதுபோலத்தான் ரங்கபதியின் தூக்கம். 'நித்ராதி ஜாகர்யயா' 'விழித்துக்கொண்டே தூங்குகிறார்', 'யோகநித்ரை'. என்ன யோகம்? ஆண்டாள் யோகம். "அநித்ர:ஸததம் ராம" என்று சொல்லி நிறுத்திவிட வேணும்.

         நியதம் -- நிரந்தரமாய். யோகத்தில் எப்படி இடைவிடாமல் அவிச்சின்னமான நினைப்போ, அப்படியே.

         கடாக்ஷ: நிஹித: -- கடாக்ஷங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவோ. 'உன்னுடைய அவதார காலத்திலிருந்து இப்படி நியதமாக த்ருஷ்டி வைக்கப் பட்டுளது' 'தவ அவதாராத்' என்பதை இங்கும் அந்வயிக்க. 'எப்போ வருவாளோ?' என்று த்யானம்.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

  சுலோகம் 10

தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்
         கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
         லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் ||    (10)


மாகர்துதிக் கெட்டா மணவாள னின்றமப்ப
னாகுமவன் பாட்டுக் கருள்புரிதல் -- நாகிளம்பூஞ்
சோலைசூழ் வில்லிபுத்தூர்த் தோகாய்நீ சூடியருண்
மாலையா லன்றோ மகிழ்ந்து.           (10)


பதவுரை

         தே -- உன்னுடைய; தாதஸ்து -- தகப்பனாரோ என்றால்; ஸ்துதிலேஶ்வஶ்யாத் -- கொஞ்சம் தோத்திரத்தாலேயேகூட வசப்படக்கூடிய; மதுபித: -- பெருமாளிடமிருந்து; கர்ணாம்ருதை: -- செவிக்கு அமுதமான; ஸ்துதிஶதை: -- பல நூறு துதிப் பாசுரங்களாலும்; மஹத்தரபதாகுணம் -- மஹத்தரர் (மிகப் பெரியவர்) என்னும் திருநாமம் பெறுவதற்கேற்ற; (பதவிக்கேற்ற); ப்ரஸாதம் -- அநுக்ரஹத்தை; த்வந்மௌளி கந்த ஸுபகாம் -- உன்னுடைய கூந்தல் வாசனை ஏறியதால் ஸௌபாக்யம் பெற்ற; மாலாம் -- மாலையை; உபஹ்ருத்ய -- உபஹாரமாக ஸமர்ப்பித்து; லேபே -- பெற்றார்.

         கொஞ்சம் துதி செய்தாலேயே வசப்பட்டுவிடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

அவதாரிகை

         (1) ஆழ்வார்களெல்லோரும் உன்னைப் புத்திரி என்று அபிமானிக்கிறார்கள். ஆனால் நீ விஷ்ணுசித்தரிடமிருந்துதான் தோன்றியவளென்றீர். எல்லா ஆழ்வார்களும் அபிமானத் தாதைகளாய் இருந்தாலும் விஷ்ணுசித்தரை விசேஷித்துப் பிதா என்று கொள்ளக் காரணம் என்ன? அம்மா! எல்லா ஆழ்வார்களும் பொதுவில் ஆழ்வார்களென்ற மஹத்தான பதத்தைப் பெற்றவர்கள். ஆழ்வார் பதம் மஹத்தானது என்பதில் ஐயமில்லை. பெருமாளுடைய தசாவதாரங்கள்போல், அவர்கள் அவருடைய அபிநவ தசாவதாரங்கள். தமிழ்வேத மந்த்ர த்ரஷ்டாக்களான தச ரிஷிகள். மஹத் பதம் மஹர்ஷி பதம்தான். ஆழ்வார் பதமே மஹாபதமாயிருக்கையில், 'பெரியாழ்வார்' என்று உன் தகப்பனாருக்குத்தானே 'மஹத்தர' பதம் கிடைத்தது! மஹத்தான ஆழ்வார் பதத்திற்கும் மேற்பட்ட 'பெரிய' பதம் கிடைத்தது. அவர் வேதப் பாசுரங்களால் கிடைத்தது ஆழ்வார் பதம். உன் பிதாவால் நீ சூடிக்கொடுத்த மாலையை ஸமர்ப்பித்ததால் ஆழ்வார்களிலும் 'பெரிய ஆழ்வார்' என்னும் பஹுமான பதம் கிடைத்தது. மற்ற ஆழ்வார்கள் குடிக்கும் நீ ஸந்ததி என்று அபிமானத்தில் பேசினாலும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லையே!

         (2) பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று முன் ச்லோகத்தின் முடிவில் ஸாதித்தார். பெரியபிராட்டியாரை 'கந்தத்வாராம்' என்று ஸர்வகந்தரான பெருமாளுடைய ஸௌகந்தயத்திலீடுபட்ட வேதம் புகழ்ந்தது. அவளுக்கு உடன் பிறந்தாளும், அவளோடுகூட பெருமாளுக்குப் பத்தினியுமாவதற்கு ஆநுகுண்யத்தைக் கோதையின் ஸர்வோத்தரமான ஸௌகந்த்யத்தைக் காட்டி ஸமர்த்திக்கிறார்.

         தாதஸ்து தே -- உன் தகப்பனாரான பெரியாழ்வாரோ என்றால்; விசேஷித்து உன் பிதாவானதால் மற்ற ஆழ்வார்களிலும் மேலாக 'பெரிய' என்னும் உயர்த்தியான உபபதத்தைப் பெற்றார். 'து' என்பதால் இந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. 'உன் தகப்பனார்' ஆனதுபற்றித்தான் இந்த ஏற்றம். ஆழ்வாரானதால் மட்டுமல்ல. உன் விஷயமான இந்த கோதாஸ்துதியைப் படிப்பவன்கூட அவருக்கு (பெருமாளுக்கு) பஹுமான்யராகும்போது உன் மாலையை ஸமர்ப்பித்த உன் தகப்பனாரை இப்படி அவர் பஹுமானியாது இருப்பாரோ?

         மதுபித:-- வேதங்களை அபஹரித்த மது என்னும் அஸுரனை ஸம்ஹரித்து வேதங்களை மீட்ட பெருமாளிடமிருந்து. இதனால் வேதங்களின் அரும்பெருமையைப் பெருமாளே அறிந்தவர் என்பது ஸூசனம். வேதங்களை அப்படி அரும்பெரும் பாடுபட்டுப் பஹுமானிக்கும் பெருமாள் வேதங்களான ஆழ்வார்கள் ப்ரபந்தங்களைப் பஹுமானித்து அவர்களுக்கு 'ஆழ்வார்கள்' என்று 'மஹத்' பதத்தை அளிப்பது உசிதமே. வேதங்களை அஸுரர் அபஹரித்தாலும், தமிழ் வேதங்களிருந்தால் போதும். ஸம்ஸ்க்ருத வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தது போதுமோ? அதன் பொருளைத் தெளிய தமிழ் மறைகளும் வேணும்.

         ஸுத்திலேஶவஶ்யாத் - 'ஸ்தவப்ரிய:' என்று திருநாமம். ஸ்வாராதரென்பர். ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரென்பர்.

         கர்ணாம்ருதை: -- "ப்ரதி ச்லோகமும் அபத்தமாயிருந்தாலும், அநந்தனுடைய யசோமுத்ரை உடைய திருநாமங்கள் கலந்திருப்பதால், ஸாதுக்கள் கேட்டும், பாடியும் மகிழ்வர்" என்று பகவத் ஸ்தோத்ரங்களின் பெருமையை சுகர் மகிழ்ந்து பாடினார். "கிருஷ்ணகர்ணாம்ருதம்", "ராமகர்ணாம்ருதம்" என்று பகவத் ஸ்தவங்களுக்குத் திருநாமமிடுவர்.

         ஸ்துதிஶதை: -- யோகியான ஒரு ஆழ்வார் 'பத்தே' பாசுரங்கள் பாடினார். உன் தகப்பனார் கிட்டத்தட்ட ஐந்நூறுகள் பாடினார்.

         அநவாப்தபூர்வம் -- கர்ணாம்ருதமான வேதங்களான பல நூறுகள் பாடியதற்கு மற்ற ஆழ்வார்களைப்போல, 'ஆழ்வார்' என்று திருநாமம் மட்டும் கிடைத்தது. 'பெரிய" என்று ஏற்றப் பதம் கிடைக்கவில்லை. மற்ற ஆழ்வார்களுக்கும் அது கிடைக்கவில்லை.

         த்வந் மௌளிகந்த ஸுபகாம் -- தம்முடைய கர்ணாம்ருத வேதப் பாசுரங்களால் கிடைக்கவில்லை. தம் மாலைகளால் கிடைக்கவில்லை. நீ அவதரிக்குமுன் எத்தனையோ பூமாலைகள் ஸமர்ப்பித்தவரே. உன் பூமாலையால் கிடைத்தது. பாக்களால் கிடைக்கவில்லை. உன் ஒரு பூமாலையால் கிடைத்தது. நீ சூடி வாசனையேற்றிக் கொடுத்த ஒரு பூமாலையை உபஹாரமாக ஸமர்ப்பிக்கும் பாக்யம் உன் பிதாவுக்குத்தானே கிடைத்தது! உன் சிரஸான மூளையின் (புத்தி வ்ருத்திகளின்) வாசனை உன் பாமாலையிலேறியுளதுபோல், நீ சூடின பூமாலையிலும் ஏறியது. "மௌளி" என்பது மூளையென்னும் புத்திஸ்தானமுமாகும். உன் கூந்தல் வாசனையால் மாலை ஸுபகமாயிற்று என்றால், உன் ஸௌபாக்யத்திற்குக் கேட்க வேணுமோ?

         மாலாம் உபஹ்ருத்ய -- மாலையை உபஹாரமாக ஸமர்ப்பித்து (உடனே)

         லேபே -- உபஹ்ருத்ய லேபே -- இரண்டு பதங்களையும் சேர்த்தது ரஸம். ஸமர்ப்பித்த உடனே பெற்றார். நடுவில் ஒரு க்ஷணமேனும் தாமதமில்லை. "நாகாரணா தாநந்தர்யம்" என்று ந்யாயம். உன் மாலையை ஸமர்ப்பித்ததுதான் 'பெரிய' என்ற 'மஹத்தர' பதம் கிடைத்ததற்குக் காரணம். அந்வய வ்யதிரேகங்களால் கார்ய காரண பலம் ஸித்திக்கும். நூற்றுக்கணக்கான பாமாலைகளாலும் பூமாலைகளாலும் முன்பு அடையப்படாதது என்று வ்யதிரேகம் காட்டப்பட்டது. இங்கே அந்வயம் காட்டப்பட்டது.

         மஹத்தரபதாநுகுணம் ப்ரஸாதம் -- ஆழ்வார்களிலும் உயர்த்தியாய் 'பெரிய ஆழ்வார்' என்னும் ஏற்ற பதவி கிடைக்கும்படியான அநுக்ரஹத்தைப் பெற்றார். ஏனைய ஆழ்வார்கள் சிலர் நாயகீ பாவத்தில் ஆழ்ந்து மூழ்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணுக்கே ஸபத்நியாகவில்லை. உன் பிதா சில அவஸரங்களில் உனக்கே ஸபத்நீபாவத்தை அடைந்தார். மூன்றாம் சதகத்தில் 'ஐயபுழுதி'யில் "மாயன் மாமணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே" என்றும், "நல்லதோர் தாமரை"யில் "என் மகளை எங்கும் காணேன்", "செங்கண்மால்தான் கொண்டுபோனான்" என்றும், இவ்வாழ்வாரைப் பெற்ற தாயலற்றியதைக் கவனிக்கவேண்டும். புருஷ‌ப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தது, ஏதோ பெண்ணாக மாறிவிட்டது. அது போகட்டும். பெண்ணாக மாறிவிட்ட என் புருஷ‌க் குழந்தையை இந்தப் பாடா படுத்தவேண்டும் என்று அலற்றல். உன் மணாளனுக்கே பத்தினியாகி அவருடைய அந்த ரீதியான அநுபவ ஆழ்ச்சி மற்றவர் ஆழ்ச்சியிலும் பெரிதாயிற்று. மிக வியக்கத் தக்கதாயிற்று. இன்னுமொரு ரஸமும் உண்டு. 'பெருமாள்', 'பெரிய புருஷர்', 'மஹாபுருஷர்'. ஆண் என்பது 'ஓர் புருஷன்'. ஜீவாத்மாக்கள் 'புருஷர்கள்'. பெருமாள் மஹத்தான 'மஹா புருஷர்'. உன் பிதா அவருக்கும் மாமனாராகி அம்மஹா புருஷனுக்குக் குருவானார். ஹிமவானை "த்ரயம்பக ஈச்வரரான குரு" என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வர்ணிக்கப்பட்டது. 'பூர்வரான குருக்களுக்கும் குருதமர்' என்று ஜனகர் வசிஷ்டரை வர்ணித்தார். மஹாபுருஷனுக்கு மஹனீயரான ச்வசுர குருவானதால் 'மஹத்தரர்' என்னும் பதம். 'மஹத்தரபதம்' என்பது பரமபதத்தைச் சொல்லுவதாகவும் உரை கொள்ளுவர். 'விஷ்ணுவின் பரமம் பதம்' என்று ச்ருதி. விஷ்ணுசித்தர் விஷ்ணுவின் பரமமான பதத்தைப் பெற்றார். இது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானதால், வைலக்ஷண்யம் ஏற்படாமற் போகும். ரஸிகர் மனமே ப்ரமாணம். "பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ" என்பதைக் கவனிக்கவேண்டும். ச்வசுரராகிய பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர் இவர் மணாளனானதும், அந்த ச்வசுரராகிய வீட்டையும் படுக்கையையும் விட்டு இந்த ச்வசுரர் மனக்கடலில் பள்ளிகொண்டார். "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்றபடி இவர் மணாளன் மாயன். "ஔதந்வதே மஹதி ஸத்மதி" என்ற பாற்கடலாகிய அந்த மஹாக்ருஹத்திலும் மஹத்தரமான க்ருஹமாயிற்று இவர் மனக்கடல். பெரிய பெருமாளான மஹாபுருஷருக்கும் பெரிய குருவானார், மஹத்தரானார். முத்ராராக்ஷஸாதி நாடகங்களில் 'ஸ்வஜாதிமஹத்தர' என்று கௌரவமாயழைப்பர். 'உம் ஜாதியில் (குலத்தில்) உயர்ந்தவரே' என்று 'மஹத்தர' பதத்தாலழைப்பர். ஆழ்வார் ஜாதியில் (குலத்தில்) பெரியவரே, மஹத்தரரே என்று அழைப்பு. .10.