சற்று நீளமான பதிவு! இருந்தாலும் விஷயம் ஒரே தொடர்ச்சியாக வரட்டும் என்பதாலும், உபயனம் பற்றி சற்று முழுமையாகத் தெரிந்து கொண்டு அதைச் சிலரிடமாவது பகிர்ந்து கொண்டால் எதிர்வரும் உபா கர்மாவை மேலும் சிரத்தையாகப் பண்ண ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்த நீண்ட ஒரே பதிவு. ஆதுரத்துடன் தன் சிரமங்களையும் பொருட்படுத்தாது தட்டச்சிட்டுக் கொடுத்து பழைய நடை இன்று பலருக்குப் புரியாததாதலால் எளிமையான தமிழில் மாற்றி அளித்திருக்கும் ஸ்ரீ NVS ஸ்வாமிக்கு அடியேனது க்ருதஜ்ஞைகள்.
உபநயன விஷயமான மந்த்ரார்த்த விளக்கங்கள்
உபநயன விவரம்
கர்பாஷ்டமத்தில் அதாவது கர்பம் தரித்ததிலிருந்து 8ம் வயதில் அதாவது பிறந்த நாளில் இருந்து 7ம் வயதில் அதாவது 6வயது நிறைவடைந்து 7ம் வயது ஆரம்பித்த நாள் முதல் ஒரு குமாரன் உபநயனம் செய்து வைக்க தகுதியானவன். ப்ரஹ்மவர்சஸ் எனப்படும் உயர்ந்த நிலையை குமாரன் அடையவேண்டும் என்று தந்தை விரும்பினால் ஐந்தாம் ஆண்டிலேயே உபநயனம் செய்துவிடலாம். மாசி மாதத்தில் உபநயனம் செய்தால் ஆவணி மாதம் வரும் உபாகர்மாவிற்கு உபநயன தீiக்ஷ ஆறு மாதம் கணக்காக இருக்கும் என்பதால் மாசி மாதத்தில் பெரும்பாலும் செய்யப்படுகிறது. தை முதல் ஆனி வரையிலான உத்தராயண காலத்தில் மட்டுமே உபநயனம் செய்யலாம்.
8 முதல் 16ம் வயது வரை செய்யலாம். முடிந்தவரை சிறு வயதில் செய்யவேண்டும். (‘காமம் புகுவதற்கு முன் காயத்ரி புகவேண்டும்" என்று ஒரு வசனம் சொல்வதுண்டு). நாள் அதிகம் கடத்துவது கௌண (கடைசீ) பக்ஷம் ஆகும். 16 வயதுக்குப் பிறகு செய்தும் செய்யாததுபோல்தான். அதன்பிறகு அவன் உபநயனம் செய்துகொண்டு கர்மா அநுஷ்டித்தாலும் அவை யாவும் வ்யர்த்தம் (வீண்) தான். அதற்காகக் கூறப்பட்டிருக்கும் ப்ராயச்சித்தங்கiளை செய்வதும் பெரும் கஷ்டமாகும். இதை நம் ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரார்த்தத்தில் விவரமாகக் காணலாம். மாதா கர்பமாயிருந்தாலும் உபநயனம் செய்விக்கக் கூடாது.
உபநயனம் என்னும் பதத்திற்கு அருகே அடைவித்தல் என்பது பொருளாகும். அதாவது பையனை ஆசார்யனிடம் கொண்டு விடுதல். ப்ராஹ்மணனுக்கு த்விஜன் என்றும் பெயர் உண்டு. அதாவரு இரு ஜந்மங்கள் எடுத்தவர். மாதாவின் கர்பத்திலிருந்து பிறத்தல் ஒரு ஜன்மம். உபநயனம் இரண்டாவது ஜந்மம் ஆகும். இதில் ஆசார்யனே தந்தையாகக் கருதப்படுகிறான். காயத்ரீ மந்த்ரமே மாதா ஆகும். இது மற்ற பிறவிகளைக் காட்டிலும் உயர்ந்ததாகும். முன் பிறவிகளில் உண்பது, உடுப்பது, உறங்குவது போன்றவற்றுக்கு எந்த நியமமும் இல்லை (அப்பொழுதும் ஸுரா பானம் எனும் மது, மாமிச உணவு இவை தவிர்க்கபடவேண்டியதே). அவற்றில் ஆத்மார்த்தமான வைதிக கர்மாக்கள் எதுவுமில்லை. இதற்குப் பிறகுதான் இவன் ப்ரஹ்மயோநியில் ஜனித்ததின் பயனை அடைய தகுதியாகிறான். நற்கதியை அடையும் வழியைத் தேடிக்கொள்ளும் யோக்யதையைப் பெறுகிறான். (காயத்ரி உபதேசம் செய்யப்போகும்) ஆசார்யன் நல்ல ஆசாரசீலனாகவும், காயத்ரி ஜபங்கள் நிறையச் செய்து தவவலிமை பெற்றவனாயும் இருக்கவேண்டும். ஆசார்யன் ஒவ்வொரு நாளும் 1008 காயத்ரிக்குக் குறையாமல் ஜபம் செய்பவனாயும், உபநயன மந்த்ரங்களின் அர்த்தங்களை நன்கு தெரிந்தவனாகவும் இருக்கவேண்டும். உபநயனத்தில் 100 ப்ராஹ்மணர்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். காயத்ரீ மந்த்ரம் பரப்ரஹ்மத்தை அடைவிக்க உபாயமானது என்பதால்தான் இதை ‘ப்ரஹ்மோபதேசம்" என்கின்றனர். தான் ஆசாரத்துடன் ஒழுகாதவன் சிஷ்யனுக்கு ஆசாரத்தை போதிக்க முடியாது. குரு அநுஷ்டிக்காவிட்டால் சிஷ்யனுக்கு அநுஷ்டானத்தில் ச்ரத்தையே ஏற்படாது, ஜந்மம் வீணாகும்.
(எலக்ட்ரிக்) மின்சார சக்திக்குமேல் விசேஷ சக்தியுள்ளது காயத்ரீ மந்த்ரம். அதை குரு சிஷ்யனுக்குப் பட்டால் மூடிக்கொண்டு உபதேசிப்பதால் பட்டு அந்த சக்தி வெளியில் செல்லாவண்ணம் தடுக்கின்றது. உபநயன கர்மாவை 4 நாட்கள் செய்யவேண்டும்.
பரம ஏழையும் இதை உரிய காலத்தில் செய்துவிடலாம். கல்யாணத்திற்குப் போல் இதில் வரன் தேடவேண்டிய கஷ்டமோ, செலவோ எதுவுமில்லை. எந்தக் கஷ்ட காலத்திலும் வைதீக செலவுக்கும், ப்ராஹ்மண போஜனத்திற்கும் உரிய சொல்ப தொகையைக் கொண்டு உபநயனத்தை நடத்தி, பையனை த்விஜனாக்கி ஸந்த்யாவந்தனம், ஸமிதாதானம், ப்ரஹ்மயஜ்ஞம், வேதாத்யயனத்திற்குத் தயாராக்கி, ஜந்மத்தை ஸாபல்யமாக்கும்; (பயனுடையதாக்கும்) வழியை உண்டாக்கிவிடலாம்.
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரார்தம்
யஜ்ஞோபவீதம் மிகவும் பரிசுத்தமானது. ப்ரஹ்மாவுடன் கூடவே முன் உண்டானது. அது நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியது. மிகவும் மேன்மையானது. வெண்மையானது. அதை நான் அணிகிறேன். பலமும், ப்ரஹ்மவர்சஸும் (எனக்கு) உண்டாகட்டும்.
தனக்குத் தானே போட்டுக்கொள்வதாய் இருந்தால் ‘யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே" என்றும், பிள்ளைக்கு (மற்றொருவர் குழந்தைக்கு) போட்டு வைப்பதாய் இருந்தால் ‘காரயிஷ்யே" - தரிக்கச் செய்கிறேன் என்றும் ஸங்கல்பத்தில் கூறவேண்டும்.
நாந்தீ ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களுக்கு போஜனம் செய்துவைத்து, அவர்களது ஆசீர்வாதம் பெற்று குமாரபோஜனம் செய்விக்கவேண்டும். பிறகு (உபநயனத்தின் அங்கமான) சௌள கர்மா.
மந்த்ரப்ரச்நம் 2ம் ப்ரச்நம் முதல் கண்டம் ஆரம்பம்
முதல் வாக்யத்தால் வெந்நீரைக் குளிர்ந்த நீரில் விட்டு, இரண்டாவது வாக்யத்தால் பையனின் தலையில் கிழக்கிலிருந்து ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக அந்த ஜலத்தால் தலையை நனைக்க வேண்டும்.
1. உஷ்ணேந வாயோ :- ஓ வாயு தேவனே! இப்போது வபநத்திற்கு (முடி திருத்தி குடுமி வைத்தல்) வேண்டிய உஷ்ண ஜலத்துடன் வருவீராக. தேவர்களின் தாய் ஆன அதிதி தேவதை, இவனது தலைமுடியை நீக்கட்டும். (என்று வாயு, அதிதி ஆகிய இரு தேவதைகளின் அநுக்ரஹத்திற்கு ப்ரார்த்தனை செய்யப்பட்டது)
2. ஆப உந்தந்து :- இவன் 116 ஆண்டுகள் ஜீவித்திருக்கவும், தேஜஸ் உள்ளவனாயிருக்கவும், ஸூர்ய தர்சனம் செய்ய கண் பார்வை கெடாமல் இருக்கவேண்டி ஜல அபிமானி தேவதைகள் ப்ரார்த்திக்கப்படுகிறார்கள்.
பையனின் தலையில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் மும்மூன்று தர்பங்களுடன் சிறிது மயிரையும் சேர்த்து வைத்துக்கொண்டு, அந்தந்த மந்த்ரத்தால் தந்தை ப்ரதக்ஷிணமாய் குடுமி வைத்தலை செய்யவேண்டும்.
1. யேநாவவத் :- எந்தக் கத்தியினால் ஸூர்யன் ஸோமனுக்கும், வருணனுக்கும் கேசங்களை வழித்தாரோ, அந்தக் கத்தியினால் நான் என் குமாரனுக்கும் வபநம் செய்ய ப்ராஹ்மணர்களே நீங்கள் அனுமதி தாருங்கள். இந்தப் பெயரையுடைய பையன் தீர்காயுள் உள்ளவனாயும், நல்ல ஜீரண சக்தி உடையவனாகவும் இருக்கவேண்டும்.
2. யேந பூஷா :- தெற்குப் பக்கம் வபநம் செய்ய மந்த்ரம்
பூஷா என்னும் தேவன் எப்படிப்பட்ட கத்தியினால் ஆயுள் வ்ருத்திக்காக ப்ருஹஸ்பதி, அக்னி, இந்த்ரன் போன்றோருக்கு வபநம் செய்தானோ அதேபோன்றதொரு கத்தியினால் இந்தக் குமாரனுக்கு ஆயுள், கீர்த்தி, க்ஷேமம் ஏற்பட நீ வபனம் செய் என்று ஸபையில் (மண்டபத்தில்) உள்ள பெரியோர் குமாரனின் தந்தைக்கு அநுமதி கொடுத்தது போன்றது.
3. யேநபூய: :- மேற்குப் பக்கம் வபநம் செய்ய மந்த்ரம்
எதுபோன்றதொரு கத்தியினால் வபனம் செய்தால் இவன் உலகில் மேன்மையை அடைவானோ, ஸூர்யனை நன்கு நீண்டகாலம் தரிசிப்பானோ, அத்தகைய கத்தியினால் இந்தக் குமாரனின் தலையில், தீர்காயுள், கீர்த்தி, க்ஷேமம் போன்றவற்றிற்காக வபனம் செய்வாயாக.
4. யேந பூஷா: :- வடக்குப் பக்கம் வபநம் செய்ய மந்த்ரம்:
எந்தக் கத்தியினால் ப்ரஹஸ்பதி, அக்னி, இந்த்ரன் ஆகியோருக்கு பூஷா தேவன், தீர்காயுள் ஏற்பட வபநம் செய்தாரோ, அந்தக் கத்தியினால் ...... என்ற பெயருடைய குமாரனே! உனக்கு மந்த்ர பூர்வமாக வபநம் செய்கிறேன். உனக்கும் ஆயுள், தேஜஸ், ஜ்ஞானம் இவை உண்டாகட்டும்.
மந்த்ர வபநம் ஆனபிறகு நாபிதனால் வபனம் செய்யப்படும்போது, ஆசார்யன் அல்லது வேறொரு ப்ரஹ்மசாரி சொல்லவேண்டிய மந்த்ரம்:
யத்க்ஷ{ரேண :- நாபிதனே! மிகவும் கூர்மையானதும், பளபளப்பாய் உள்ளதுமான இந்தக் கத்தியினால் (மயிரை விடாமல் வேருடன் ஒட்ட) வழித்துத் தள்ளி, தலையைச் சுத்தமாக்கு. அவனது ஆயுளுக்கு நோய் போன்ற எந்தக் கெடுதியும் வாராமல் இருக்கட்டும்.
வேறொரு ப்ரஹமச்சாரி சாணத்துடன் கூடிய அந்த மந்த்திரத்துடன் வபனம் செய்து சேர்க்கப்பட்ட மயிர்கள், தர்பங்கள் இவற்றை அத்தி மரத்தின் அடியிலோ அல்லது தர்ப்பம் விளையும் புதரின் அடியிலோ கொண்டுபோய் சேர்க்கவேண்டும் அதற்கான மந்த்ரம்:
உப்த்வாய கேசாந் :- ப்ருஹஸ்பதி, ஸவிதா, ஸோமன், அக்னி ஆகிய தேவதைகள் வருண தேவனின் கேசங்களை வபனம் செய்து அவைகளை ஆகாசம், பூமி, இவை இரண்டும் நடுவிலுள்ள இடம், ஜலங்கள், ஸ்வர்கம் போன்ற பல இடங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன்படி நானும் இவனது கேசங்களை அத்தி மரத்தின் அடியிலோ, தர்பக்காட்டிலோ சேர்த்துவிடுகிறேன்.
2ம் கண்டம்
பிறகு தந்தையும், குமாரனும் ஸ்நாநம் செய்து, அக்நி ப்ரதிஷ்டை முதல் ஆஜ்யபாகம் என்பது வரை செய்துகொண்டு, பின்வரும் மந்திரத்தை ஆசார்யன் சொல்லி, குமாரனைக் கொண்டு ஒரு ஸமித்தை அக்னியில் சேர்க்கச் செய்யவேண்டும்.
1. ஆயுர்தாதேவ :- ஓ அக்னி தேவனே! நீர் ஆயுளைக் கொடுப்பவர். எங்கள் துதிகளை ஏற்றுக்கொள்பவர். ஒளிவிடும் திருமேனியைக் கொண்டவர், நெய்யினால் பெருக்கம் அடைபவர். பசுவின் பாலிலிருந்து உண்டான, அம்ருதம் போன்ற நெய்யை உண்டு, த்ருப்தியடைந்தவராய், குமாரனுக்குத் தந்தைபோல முதுமை வரை உறுதியான உடலுடன் விளங்கவேண்டுமாய் அநுக்ரஹியும்.
அக்னிக்கு வடக்கே ஒரு கருங்கல்லைச் சேர்த்து அதன் மீது குமாரன் வலது காலால் ஏறும்பொழுது தந்தை சொல்லும் மந்த்ரம்:
2. ஆதிஷ்டேமம் :- (குமாரனே!) இந்தக் கல்லின் மீது நில். நீ இந்தக் கல்லைப்போல் திடமாக, உறுதியாக இரு. உன்னுடன் சண்டைக்கு வருவோரை பின்வாங்காது எதிர்த்து நில். அவர்களைப் பொருட்படுத்தாதே. (அவர்களைப் பார்த்து நீ பயம்கொள்ள வேண்டாம். அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சட்டும்).
இதே மந்திரம்தான் கல்யாணப் பெண் அம்மி மிதிக்கும்பொழுதும் சொல்லப்படுகிறது.
புதிய வஸ்த்ரத்தை இரண்டு மந்த்ரங்களால் தொட்டு மந்திரிக்க வேண்டும்.
1. ரேவதீஸ்த்வா :- ஓ வஸ்த்ரமே! நீ பஞ்சாக இருந்தபோது ரேவதீ தேவதைகள் உன்னையும் கொட்டையையும் வேறாக்கினார்கள். பின் க்ருத்திகா தேவதைகள் உன்னை நூலாக நூற்றனர். ‘திய:" என்னும் பெண் தேவதைகள் உன்னை துணியாக நெய்தனர். ‘க்நா" என்னும் தேவதைகள் உன்னைத் தரியிலிருந்து நீக்கினர். இவர்களும் மற்றோரும் ஆயிரக்கணக்கான கரை போட்டு துணிகளை ஒழுங்காக்கினர். (இவ்வாறாக அனைத்து தேவதைகளின் ஸம்பந்தம் உள்ளது இந்த வஸ்த்ரம்).
2. இந்த தேவதைகளே ஸவிதா தேவனுக்கும் வஸ்த்ரத்தை நெய்து தந்தனர். அப்படிப்பட்ட மஹிமை உள்ளது உனது இந்த வஸ்த்ரததிற்கு.
குமாரனுக்கு அந்த வஸ்த்ரத்தை உடுத்திவிட மூன்று மந்திரங்கள்:
யா அக்ருந்தன் :- இப்படி பலவித கார்யங்களைச் செய்த இந்த ரேவதீ முதலான தேவதைகள் உன்னைக் கிழவனாகும்வரை காக்கட்டும். (இந்த வஸ்த்ரத்தால் உனக்கு நீண்ட ஆயுள் ஏற்படவேண்டும்).
2. பரிதத்த தத்த :- ரேவதீ முதலிய தேவதைகளே! இந்தக் குமாரனுக்கு நீங்கள் இந்தத் துணியை நன்கு அணிந்துவிடுங்கள். இவனை நூறாண்டுகள் வாழும்படி அநுக்ரஹியுங்கள். ஸோம தேவனுக்கு ஆயுள் அதிகரிப்பதற்காக இதுபோன்ற புதத் துணியை ப்ருஹஸ்பதி அணிவித்ததுபோல நானும் இக்குமாரன் நீண்ட ஆயுளுடன் விளங்க இந்தத் துணியை அணிவிக்கிறேன்.
3. ஜராம் கச்சாஸி :- குமாரனே! நீ இதை அணிந்துகொள். கிழத்தன்மை ஏற்படும்வரை துணியை அணிந்தவனாயிரு. உன் சுற்றத்தாரை பேணிக் காப்பாயாக. நீ வர்சஸ்வியாக (புத்திக் கூர்மையுடன் கூடிய வலிமை) நூறாண்டுகள் வாழு. இந்த மந்திரிக்கப்பட்ட துணியின் மேன்மையால் நீ செல்வந்தனாகு.
பிறகு குமாரனை தொட்டுக்கொண்டு சொல்லவேண்டிய மந்தரம்:
பரீதம் வாஸ: :- ஓ குமாரனே! உன் நலனுக்காக இந்தத் துணி உனக்கு அணிவிக்கப்பட்டது. இனி நீ உன் உறவினர்களையும் நண்பர்களையும் பேணிக் காப்பாயாக. நூறாண்டுகள் வரை வாழ்வாயாக. நேர்மையான முறையில் பொருள் ஈட்டு, அதை நற்காரியங்களுக்காக தாராளமாய் செலவிடு.
மௌஞ்ஜீ அணிய இரு மந்திரங்கள்:
1 இயம் துருக்தாத் :- இந்த மௌஞ்ஜீ எனப்படும் இடுப்பில் அணியப்படும் மேகலையானது உனக்குக் கெட்ட பெயர் ஏற்படாதவாறு காக்கும். நமது இல்லத்தை சுத்தமாக்கும். உடலில் உள்ள ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான என்னும் ஐந்து உயிர் நிலைகளுக்கும் சக்தியைக் கொடுக்கும். தேவர்களுக்கும் விருப்பமானது. அதனால் மிகவும் நன்மையானது.
2. ரிதஸ்யகோப்த்ரீ :- இது ஸத்யத்தை அல்லது யாகத்தை காக்கிறது. தவத்தையும் நன்கு காப்பாற்றுகிறது. ராக்ஷஸர்களை அழிக்கிறது. பகைவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறது. இப்படிப்பட்ட மேகலையே! இந்தக் குமாரனது இடுப்பைச் சுற்றி இருப்பாயாக. மங்களகரமான உன்னை அணிபவர்களுக்கு மற்றவரால் எந்தத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கட்டும்.
க்ருஷ்ணாஜினம் என்னும் மான் தோல் மேலாடைபோல் அணிவிக்க மந்த்ரம்:
மித்ரஸ்ய :- (மானின் தோலை அணிவதால் நீண்ட ஆயுள் உண்டாகிறது. அதனால் ஸூர்யனை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது). இந்த மான்தோல் ஸூரியனுக்கு கண்போல இருக்கிறது. மிகுந்த வலிமையுள்ள தேசுபொருந்தியதாய் இருக்கிறது. புகழ் மிக்கது. அனைத்திலும் நிறைவைக் கொடுக்கிறது. ஒளிபொருந்தியது. பெண்ணுடன் உறவுகொள்ளத் தகாததானது. மேலாடையாய் அணிய வல்லது. நீண்ட ஆயுளை அருளுகிறது. உணவுத் தன்னிறைவை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட இந்த மான் தோலை உனக்கு அணிவிக்கிறேன்.
3ம் கண்டம்
இதுவரை அம்மியின் மேல் நின்றிருந்த குமாரனை அக்னிக்கு வடக்கே பரப்பியுள்ள தர்பங்களின் மேல் நிற்கவைக்க மந்த்ரம்:
ஆகந்த்ரா :- ஆசார்யனை அடைந்துவிட்டோம். ஆசார்ய ஸம்பந்தத்தினால் அகால மரண பயம் இல்லை. நோய் போன்ற எந்த பாதிப்பும் இன்றி இருப்போம். ப்ரஹ்மச்சர்யத்திலிருந்து க்ருஹஸ்த ஆச்ரமம் செல்லும்வரை நலமுடன் விளங்குவாயாக.
குமாரனைப் ப்ரோக்ஷிக்க மந்த்ரம் :
ஸமுத்ராத் ஊர்மி: :- என்மீது வந்துவிழும் நீர்த்துளிகள் கடலிலிருந்து இனிமையான அலைகளாய் வந்தடைந்ததாக ஆகிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த நீரினால் எனக்கு அமரத்வம் ஏற்படுகிறது. இவை ஸூர்யனின் கிரணங்கள் போன்றவை. (ஸூர்யனின் ஒளியினால் மழை உண்டாவதால்), எந்த ஜலத் திவலைகளால் எமது முன்னோர்களான பித்ருக்கள் தேவர்களுடன் சேர்ந்து ஸோம பானத்தை அடைந்தனரோ, அதே நீர்த்துளிகள் என் மேலும் விழுந்தமையால் நானும் தேவபானம் அருந்தக்கடவேன்.
குமாரனின் கையைப் பிடிக்க மந்த்ரம்:
அக்நிஷ்டே ஹஸ்தம் அக்ரபீத் :- குமாரனே! நான் கரத்தைப் பற்றுகிறேன், இது அக்னி தேனே உன்னை பற்றுவதுபோல் ஆகட்டும். அதுபோலவே ஸோமன், ஸவிதா, ஸரஸ்வதீ, பூஷா, அர்யமா, அம்சன், பகன், மித்ரன் போன்ற தேவதைகளின் கைகளில் உன்னை ஒப்படைக்கிறேன். மித்ரனைப்போல நீயும் பிறர்நலன் பேணு. அக்னி உனக்கு ஆசார்யனாகட்டும்.
இது பற்றி வேதத்தில் உள்ள ஒரு கதை :- ஒரு பொழுது தேவர்கள் அனைவரும் கூடி மித்ர தேவனிடம், ‘நாம் அனைவருமாக ஸோமராஜனைக் கொன்றுவிடலாம்" என்றனர். அதற்கு மித்ரன், ‘நான் அனைவரிடத்தும் தோழமை உள்ளவனும், அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டவனும் ஆவேன், அதனால் உங்களது இந்தச் செய்கைக்கு நான் உடன்படமாட்டேன்" என்று கூறிவிட்டானாம்.
குமாரனை அந்தந்த தேவதைகள் தத்தமது மேன்மையை குமாரனுக்கு அளிக்க அந்தந்த தேவதைகளிடம் ஒப்படைக்க மந்த்ரம்:
அக்நயேத்வா பரிததாமி :- குமாரனுடைய பெயரைச் சொல்லி
உன்னை ரக்ஷிக்க அக்னி தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ஸோம தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ஸவிதா தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ஸரஸ்வதி தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ம்ருத்யு தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க யம தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க கத (நோய்) தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க அந்தக தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ஜல தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க ஓஷதி தேவனிடம் ஒப்படைக்கிறேன்.
உன்னை ரக்ஷிக்க பூமி, வைச்வாநரன் போன்ற அனைத்து தேவர்களும் உன்னை தத்தமது மேன்மையை உனக்களித்து உன்னைப் பாதுகாக்கவேண்டி அவர்களிடம் உன்னை ஒப்படைக்கிறேன்.
உபநயன மந்த்ரம்
(இந்த மந்த்ரத்தில்தான் ‘உபநயே" என்னும் வார்த்தை இருக்கிறது)
தேவஸ்யத்வா :- ..... சர்மந் (பெயருடைய குமாரனே!) ஸவிதா தேவனின் அனுமதியைப் பெற்று நான் உன்னை ஆசார்யனாகிய என்னிடம் சேர்த்துக்கொள்கிறேன்.
ஆசார்யன் சிஷ்யனை அநுக்ரஹிக்கும் மந்த்ரம் :-
உனக்கு நல்ல வாரிசுகள் உண்டாகட்டும். உனக்கு பேரனகள் உண்டாகட்டும். நல்ல ஒளிபொருந்திய, வலிமையுள்ள உடல்வன்மையுடன் விளங்கு.
குருவைப் பார்த்து சீடன் சொல்லும் மந்த்ரம்:
ப்ரஹ்மசர்யம் ஆகாம் :- ஓ குருவே! ஸவித்ரு தேவனால் அநுமதிக்கப்பெற்று நீர் என்னை உம்மிடம் சேர்த்துக்கொண்டீர். நான் வேதம் பயிலும் ப்ரஹ்மச்சாரியாகிவிட்டேன். (ப்ருஹ்மம் என்றால் வேதம். அதற்குத் தாய் காயத்ரீ மந்த்ரம். வேதத்தால் கூறப்படும் தெய்வம் பரப்ருஹ்மம். இம்மூன்றிலும் பயிற்சி மேற்கொள்பவன் - என்பதால் ப்ரஹ்மச்சாரி என்று பெயர்.)
குரு சீடன் உரையாடல்:
குரு :- கோ நாமாஸி? நீ எந்தப் பெயர் கொண்டவன்?
சீடன் :- .... .... இந்தப் பெயரை உடையவனாயிருக்கிறேன்!
குரு :- யாருடைய ப்ரஹ்மசாரியாய் இருக்கிறாய் .... பெயரோனே?
சீடன் :- நான் ப்ராணனாகிய உள்ளுரையும் பரம்பொருளுக்கு ப்ரஹ்மசாரியாய் இருக்கிறேன்.
குரு வேண்டுதல் :- ஹே ஸூர்ய தேவா! இந்தக் குமாரன் உம்முடைய மாணவனாக இருக்கிறான், இவனை நீர் காப்பாற்றும். இவனை உம்முடைய புத்ரனைப்போல் பாவியும். அவன் நீண்ட ஆயுள் உள்ளவனாயிருக்கட்டும். குறைந்த ஆயுள் இருக்கக்கூடாது. அக்னி, வாயு, ஸூர்யன், சந்த்ரன், ஜல தேவதைகள் போன்றோர் எப்படிப்பட்ட சிறப்பை அடைகிறார்களோ, அப்படிப்பட்டதொரு மேன்மையை இந்த சீடனும் அடையவேண்டும்.
சீடன் சொல்லும் மந்த்ரம் :-
அத்வநாம் :- அனைத்து வழிகளுக்கும் உரியவனான ஸூர்ய தேவனே! உமது அநுக்ரஹத்தால் இந்த ப்ருஹ்மச்சர்யத்தில் எனக்கு எந்த ஒரு கெடுதலும் இல்லாமல், தடங்கலற்றதாய் அமையட்டும்.
4ம் கண்டம்
உபநயன ஹோம மந்த்ரங்கள்
1. யோகே யோகே தவஸ்தரம் :- ப்ரஹ்மசர்யத்தில் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் முதலில் இந்த்ரனை ப்ரார்த்தித்து அவரது அநுமதியின் மேல் செய்வோம்.
2. இமமக்ந ஆயுஷே :- ஓ அக்நி தேவனே! இவனை நீண்மட ஆயுள் உள்ளவனாகச் செய்யும். ஹே வருண! இவனுக்கு (க்ருஹஸ்தாச்ரமத்தில்) ப்ரியமான புத்ரனை அநுக்ரஹியும். ஓஷதீசனான ஓ ஸோமனே! ஓ அதிதி தேவியே! நீங்கள் இவனுக்குத் தாயைப்போல் சுகத்தைக் கொடு;ங்கள். ஓ விச்வேதேவர்களே! நீங்களும் இவனுக்கு தீர்காயுஸைத் தந்து ஸுகமாயிருக்க அநுக்ரஹியுங்கள்.
3. சதமின்னு சரத: ஓ தேவர்களே! மனிதர்களாகிய எங்களுக்கு மொத்த ஆயுளே கேவலம் 100 ஆண்டுகள்தான். இதில் இளமைப் பருவத்தில் சிறிது காலமும், குழந்தைகளுக்குத் தந்தையாக வாலிபம் சில காலமும், முதுமையில் பெரும் பகுதியும் செல்கின்றன. இந்தக் காலங்களில் குடும்பத்தைக் காப்பது போன்ற கவலைகள் பல உண்டு. எனவே கிழத்தன்மையால் செயலிழந்து சரீரம் வீழும்வரை எங்களை வாழவிட்டு, இடையில் அகால மரணம் ஏற்படாதவாறு முழுமையான ஆயுளைத் தந்தருளுவீர்களாக.
4. அக்நிஷ்டே ஆயு: :- (இதை குரு சொன்ன பிறகு சிஷ்யம் ஹோமம் செய்யவேண்டும்). அக்நி தேவன் இவனுக்கு தீர்காயுளைக் கொடுக்கட்டும். அக்நியே இந்தக் குமாரனுக்கு மேனியை வலிமையுள்ளதாகச் செய்யட்டும். இந்த்ரனும் மருத்(காற்று) தேவதைகளும் சேர்ந்து ஒவ்வொரு ருதுவிலும் (கால ரீதியாக) சரீர பலத்தைக் கொடுக்கட்டும். அவர்களே ஆதித்யர்களோடும், வஸுக்களோடும், புஷ்டியை ஏற்படுத்தட்டும்.
5. மேதாம் மஹ்யம் :- அங்கிரஸ் என்ற ரிஷிகள், ஸப்த ரிஷிகள், ப்ரஹ்மா, அக்நி தேவதைகள் எனக்கு மேதையைத் தரட்டும்.
6. அப்ஸராஸு யாமேதா: :- அப்ஸரஸ் (தேவகன்னிகைகள்) ஸுகனிடம் உள்ள மேதை(புத்தி), கந்தர்வனிடம் உள்ள கீர்த்தி(புகழ்)யும், மேதையும், தேவர்கள் - மனிதர்களிடமுள்ள புத்திசாதுர்யத்தையும், யசஸ்ஸும் என்னை வந்தடையட்டும்.
7. இமம்மே வருண :- ஹே வருண தேவனே! என் வேண்டுகோளைக் கேளும். கேட்டு, எனக்கு இப்பொழுதே சுத்தைத் தாரும். எனது ரக்ஷணத்திற்காக உம்மை துதிக்கிறேன்.
8. தத்வாயாமி :- ஓ வருண! அனைவராலும் துதிக்கப்படுபவரே! உம்மை, வேத மந்திரத்தால் துதித்து, ஹவிஸ் - ஆகாரத்தால் த்ருப்தி செய்விப்பவனாக உம்மிடம் எனது நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன். நீர் கோபம் கொள்ளாது எனது வேண்டுதலைச் செவிமடுக்கவேண்டும். எனது ஆயுளை அபஹரிக்காதீர்.
9. த்வந்நோ அக்நே :- ஹே அக்நி தேவனே! நீர் அனைத்தும் அறிந்தவர். வருண தேவனுக்கு எம் மீது இருக்கும் கோபத்தைப் போக்கும். நீர் மிகவும் வணங்கத்தக்கவர். அந்தந்த தேவதைகளுக்குரிய ஹவிஸ்ஸுக்களை அவர்களின் ரகசியமான இடங்களை அறிந்து அங்கு கொண்டுபோய் சேர்த்து அவர்களை எளிதில் மனநிறைவு பெறச்செய்யக் கூடியவர் (யத்ரவேத்த வநஸ்பதே - எனும் ஆஹ{தி ஸம்ஸர்க்க ப்ராயச்சித்த ஹோம மந்த்ரததில் அக்னிபற்றி இவ்வாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது). அதிக தேஜஸ் உள்ளவர். பகைவர்களினால் எமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் காப்பீராக.
10. ஸத்வந்நோ அக்நே :- தேவர்களுள் முதல்வரான அக்னிதேவனே! எங்களைப் பாதுகாக்க விடியற்காலத்திலும் - எப்பொழுதும் எம்முடன் இரும். தன் பாசத்தை வீசி கோபத்தினால் எம்மைத் துன்புறுத்த வரும் வருணனை சாந்தப்படுத்துவீராக. எம்முடைய மனவேட்கையை நிறைவேற்றும். என்னால் அளிக்கப்படும் சுவையுள்ள ஹவிஸ்ஸை அருந்தும். நாங்கள் எப்போது அழைத்தாலும் வந்து எமது விண்ணப்பத்தை நிறைவேற்றித் தாரும்.
11. த்வமக்நே :- ஓ அக்னி தேவனே! நீர் போற்றத்தக்கவர். துதிப்பவர்களின் துதியை ஏற்க வருபவர். மிகவும் எளிமையாக அடையத்தக்கவர். நாங்கள் வழங்கும் தேவ உணவை அந்தந்த தேவதைகளிடம் கொண்டுபோய் சேர்ப்பித்து, அதனால் வரும் பலனை எமக்குத் தாரும். (அயா - எளிதில் நெருங்கத்தக்கவர்).
பிறகு ஆசார்யன் ஜயாதி ஹோமம் முதல் பரிஷேசநம் வரை செய்துவிட்டு, குமாரனுக்கு ப்ரஹ்மோபதேசம் செய்வதற்காக அக்நிக்கு மேற்கில் வடக்கு நுனியாகப் போடப்பட்ட தர்ப்ப கூர்ச்சத்தின் மேல் உட்காருவதற்கான மந்த்ரம்:
ராஷ்ட்ரப்ருதஸி :- ஓ தர்பக் கூர்ச்சமே! நீ உலகத்தை தாங்குகிறாய். (குருவானவர் கூர்ச்சத்தின் மீது அமர்ந்து நல்லருளுரை வழங்குவதால், கூர்ச்சமே ராஜாங்கத்தை தாங்குவதாக சொல்லப்படுகிறது). ஆசார்யனுக்கு ஆஸனம். இதில் உட்காரும் நான் உன்னைவிட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும். (ஆசார்ய பதவி என்னைவிட்டு விலகாமலிருக்கவேண்டும் என்றபடி).
ப்ரஹ்மோபதேசம்
ஆசார்யன் கிழக்கு நோக்கியும், மாணவன் அவருக்கு எதிரில் மேற்கு நோக்கியும் அமர்ந்திருக்கவேண்டும். மாணவன் தன் வலது கையால் அவரது வலது பாதத்தைப் பிடித்துக்கொண்டு ‘குருவே எனக்கு ஸாவித்ரியை உபசேதம் செய்யும்" என்று விண்ணப்பிக்வேண்டும்.
பிறகு குருவானவர் ப்ரஹ்ம யஜ்ஞ க்ரமத்தில் காயத்ரீ மந்த்திரத்தை பட்டினால் இருவரும் மூடப்பட்டிருக்கும்படி உபதேசிக்கவேண்டும். குமாரன் தன் வாயால் அதைச் சொல்லவேண்டும்.
காயத்ரயின் பொருள்:
எந்த (ஸவிதா) ப்ரகாசிக்கும் ஸூர்யனுடைய தேஜஸ்ஸானது அனைவராலும் த்யானிக்கத் தகுந்ததோ, எவர் நம் புத்தியைத் தர்ம வழியில் செல்லத் தூண்டுகிறாரோ அவருடைய பாபத்தை அழிக்கும் தேஜஸ்ஸை த்யானிக்கிறோம்.
நான் எல்லோருக்கும் ஆத்மா என்கிறார் பகவான். சந்த்ர ஸூர்யருள் ஒளி நான் என்கிறார். எவ்வொளி ஸூர்யனை அடைந்து மூன்று உலகங்களையும் ஒளிமயமாக்குகிறதோ, அதை என்னுடையதாக அறிவாயாக என்றும் கூறியிருப்பதால் அந்த தேஜஸ் பகவானேதான்.
குமாரனின் உதடுகளை குரு தொட மந்த்ரம்:
அவ்ருதமஸெள :- இந்த ப்ரஹ்மோபதேசததினால் நான் தன்யன் ஆனேன். (ஸாதுக்களுக்கு வேதமே தநம். அதனால்தான் அவர்களை அத்யயன ஸம்பந்தர் என்கிறோம்). காயத்ரியின் மூன்று பாதங்களும் மூன்று வேதத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால் இப்பொழுது அழிவற்ற செல்வத்தை அடைந்தவனாகிவிட்டேன். ஓ ஆத்மாவே! அடையப்பெற்ற ஸாவித்ரியாகிய செல்வத்தை நன்கு பாதுகாப்போமாக.
15 ப்ரஹ்மண: ஓ காதுகளே! நீங்கள் வேதத்திற்கு ஆணிகளாய் இருப்பீர்களாக. எப்படி ஆணிபோட்டு அடைக்கப்பட்ட வஸ்துவானது வெளியேறாதோ, அப்படி இந்த காயத்ரி மந்த்ரமும் (பசுமரத்தில் அறையப்பட்ட ஆணிபோல் பதியட்டும்) வெளியே வரவேண்டாம்.
5ம் கண்டம்
ப்ராஹ்மணன் பலாசத்தையும் (புரசு), க்ஷத்ரியன் ஆலமரத்தையும், வைச்யன் இலந்தை மரத்தையும் தண்டமாக (கோல்) உபயோகிக்க வேண்டும் என்று ஸூத்திரக்காரர் விதிக்கிறார். அரசு போன்ற யாகத்துக்கு தகுதியுள்ள மரத்தின் தண்டத்தை உபயோகிப்பது சிஷ்டர்கள் ஆசாராம்.
பலாச தண்டத்தை தரிக்க மந்த்ரம்:
தைத்ரிய ச்ருதியில், தேவர்கள் ஒரு ஸமயம் ப்ரஹ்மவிசாரம் செய்தனர். அதை இந்த மரம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆதலால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நல்ல காதைப் படைத்தாயென்னும் பலாச தண்டமே! உன்னை;போல் என்னையும் ஸத் விஷயங்களைக் கேட்டு க்ரஹிக்க (அத்யயனத்தில்) நல்ல காது பலமுள்ளவனாகச் செய்வாயாக. ஓ தண்டமே! நீ எப்படி தேவர்களின் நிதியான யஜ்ஞத்தை பாதுகாக்கிறாயோ, அப்படித்தான் ப்ராஹ்மணர்களின் நிதியான வேதத்தை ரக்ஷிப்பவனாக ஆகும்படி அநுக்ரஹிக்கவும்.
சிஷ்யனுக்கு குரு கூறும் நியமங்கள்:
ஸ்ம்ருதஞ்சமே :- மாணவன் எனக்கு கீழ்கண்ட வ்ரதங்கள் ப்ரஹ்மசர்யத்தில் அநுஷ்டிக்கப்பட வேண்டும். அறிந்திருக்கவேண்டியவைகளில் நல்ல நினைவுத் திறனும், மறக்கவேண்டியவைகளை மறக்கும் தன்மையும், நிந்தனை செய்யவேண்டியவைகளை நிந்திப்பதும், நல்லவற்றை நிந்தியாமல் இருக்கும் தன்மையும், அவசியம் செய்யவேண்டியவைகளில் அக்கறையும் (ச்ரத்தையும்), செய்யக்கூடாததான இழிவான விஷயங்களில் ஈடுபாடின்மையும், கற்கவேண்டிய விஷயங்களை கற்றலும், பொருளற்ற, தேவையற்ற விஷயங்களை கல்லாமல் இருப்பதும், வேதம் வேதாங்கம், இதிஹாஸ புராணாதிகளில் கேட்டு அறிதலும், சாஸ்த்ரத்தால் தவிர்க்கவேண்டும் என்று கூறப்பட்டவற்றை காதுகளால் கேட்காமல் இருத்தலும், ஸத்யத்தையே எப்பொழுதும் பேசுவதும், ஒருபொழுதும் உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசாதிருத்தலும், அவசியம் அடையவேண்டியவற்றில் தவமியற்றி அடைதலும், வேண்டாதவற்றில் முயலாமல் விடுதலும், கடைபிடிக்கவேண்டிய விதிகளை சரியாகக் கடைபிடித்தலும், விதியற்றவைகளை கடைபிடியாதிருத்தலும், ப்ராஹ்மணர்கள், இந்த்ரன், ப்ரஜாபதி, தேவன், தேவராஜன், மநுஷ்யன், ராஜா, பித்ருக்கள், பித்ரு ராஜா, கந்தர்வர், அப்ஸரஸுகள், அக்நி போன்ற அனைவருக்கும் என்னால் செய்யப்படவேண்டிய அனைத்தையும் சரியாகக் கடைபிடித்தல் எனது வ்ரதமாகட்டும்.
இவைகளுடன் என் ஆத்மாவுக்கு என்னிடமுள்ள வ்ரதம் இவைகள் அனைத்தினாலும் நான் எல்லா வ்ரதங்களையும் அநுஷ்டிப்பவனாக ஆவேனாக.
அவையாவன :- அக்னி ரக்ஷணம், இந்த்ரனுக்கு ப்ரதானனாயிருத்தல், ப்ரஜாபதிக்கு ச்ருஷ்டி செய்தல், தேவர்களுக்கு தானம், தேவராஜனுக்கு தேவர்களை த்ருப்தி செய்தல், மனிதர்களுக்கு ப்ரியம் பேசுதல், ராஜனுக்கு குடிமக்களை பாதுகாத்தல், பித்ருக்களுக்கு வாரிசுகளை உண்டுபண்ணுவது, பித்ரு ராஜனான யமனுக்கு அனைவரிடத்தும் சமமாக இருத்தல், கந்தர்வர்களுக்கு தேவர்களை துதித்தல், அப்ஸரஸுகளுக்கு தேவர்களுக்கு கைங்கர்யம் செய்தலும் வ்ரதங்களாகும். இவை அனைத்தும் எனக்கும் ஏற்படவேண்டும் என்று ப்ரார்த்தனை.
குரு சிஷ்யனை எழுந்திருக்கச் செய்ய மந்த்ரம்:
ஆசார்யனே சிஷ்யனின் ஸ்தானத்திலிருந்து ப்ரார்த்திப்பது.
உதாயுஷா :- எனது தீர்காயுளான 100 வயதுவரையில், ஓஷதிகளின் பலத்தை அளிக்கும் சாருகளாலும், மேகத்தின் சக்தியாலும் நான் எழுந்திருக்கிறேன்.
ஸூர்யனைப் பார்த்து குமாரன் உபஸ்தானம் செய்யும் மந்த்ரம்:
தச்சக்ஷ{: :- ஸூர்யனின் ஒளி உலகத்திற்கு கண்ணாகவும், இந்திரனால் ஆணையிடப்பட்டதும், கிழக்கில் உதிப்பதுமான பரிசுத்தமான ஸூர்யனின் க்ரணங்களை
பச்யேம சரதஶ;ஶதம் :- நூறு ஆண்டுகள் வரை தரிசிப்பேனாக. சுகங்களை அநுபவித்துக்கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்வேனாக. பிள்ளை, பேரன்கள், சொத்துக்களுடன் நல்லதைக் கேட்டுக்கொண்டும், நல்லவற்றை போதித்துக்கொண்டும், பகைவர்களால் வெல்லப்படாதவாறு நூறாண்டுகள் ஸூர்யனை தரிசித்தவாறு இருக்கவேண்டும்.
சிஷ்யனின் கையை குரு பற்ற மந்த்ரம் :
யஸ்மின் பூதஞ்ச :- எந்த ப்ரஹ்மாவிடம் மூன்று காலங்களும், உலகின் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி உள்ளனவோ, அவரது அநுக்ரஹத்தால் நீ என்னைவிட்டுப் பிரியா வண்ணம் உன் கையைப் பிடித்து (குருகுல வாஸத்திற்கு) அழைத்துக்கொள்கிறேன்.
6ம் கண்டம்
ஸமிதாதானம்
(உபநயனமான குமாரன் உப்பு உரைப்பின்றி மூன்றுநாட்கள் உண்ணவேண்டும். அக்நியும் அணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.)
அக்னியின் நான்கு புறத்தையும் சுத்தம் செய்யும் மந்த்ரம்:
பரித்வாக்நே :- ஓ அக்னி தேவனே! உமக்கு நான்கு பக்கங்களிலும் இந்த தீரத்தத்தால் நான் சுத்தம் செய்கிறேன். எனக்கு நீண்ட ஆயுளையும், தனம், வாரிசுகள், வலிமையான உடல், நல்ல இல்லம், போற்றத்தக்க ஆசார்யன், எதையும் எளிதில் உள்வாங்கும் சக்தி, நினைவாற்றல், உடன் பயிலும் தோழர்களுடன் கல்விச் செல்வமும் உண்டாக நீர் அநுக்ரஹிக்கவேண்டும்.
அக்நியில் 12 ஆஹ{திகள் :
1. அக்நேய ஸமிதம் :- ஓ அக்நிதேவனே! மேன்மை வாய்ந்தவரும், அனைத்தையும் அறிகிறவரும், துதிப்பவர்களை மேன்மை அடையச் செய்பவருமான உமக்கு இந்த ஸமித்தை அர்பணம் செய்கிறேன். இதனால் நீர் எப்படி ஒளிபெறுகிறீரோ, அதுபோல் எனக்கும் தீர்காயுள், வர்சஸ், லாபம், புத்திக்கூர்மை, பசு, ப்ரஹ்ம தேஜஸ், உண்ணும் சக்தி போன்றவை நன்கு பெருக ஆசீர்வதிப்பீராக.
2. ஏதோஸி :- ஓ ஸமித்தே! நீ அக்நி ஜ்வலிப்பதற்கு காரணமாக இருக்கிறாய். உன்னை ஹோமம் செய்யும் நானும் நன்கு மேன்மை அடையவேண்டும்.
3. ஸமிதஸி :- ஓ ஸமித்தே! அக்னியை ப்ரகாசிக்கச் செய்யும் அதே நேரத்தில் எம்மையும் ப்ரகாசிக்கச் செய்யும்.
4. தேஜோஸி :- ஓ ஸமித்தே! நீ அக்னியின் தேஜஸ்ஸுக்கு காரணம், எனக்கும் காந்தியைத் தா.
5. அபோ அத்ய :- இப்போது நான் ஸமிதாதானம் எனும் கர்மாவைச் செய்கிறேன். இதனால் எனக்கு மேன்மேலும் கர்ம அநுஷ்டானத்தில் ச்ரத்தை அதிகரிக்கவேண்டும். உம்மை நெய்யாலும், பாலாலும் ஹோம் செய்பவனாய் விளங்கவேண்டும். அதனால் எனக்கு ப்ரஹ்மவர்சஸ் அதிகரிக்கவேண்டும்.
6. ஸம்மாக்நே :- எனக்கு ப்ரஹ்மதேஜஸ், ஸந்ததி, தனங்கள் உண்டாக அநுக்ரஹியும்.
7. வித்யுந்மே :- ஹோமம் செய்யும் என்னை இந்த்ராதி தேவர்களும், வசிஷ்டாதி ரிஷிகளும் என்னை கடாக்ஷிக்கட்டும்.
8. அக்நயே ப்ருஹதே :- வல்லமை பொருந்தியவரும், ஸ்வ்கத்தில் வஸிப்பவருமான அக்நியின் அருளுக்காக இந்த ஸமித்தை ஹோமம் செய்கிறேன்.
9. த்யாவாப்ருதிவீப்யாம் :- ஆகாயம், பூமிகளுக்காக இந்த ஹோமம்.
10. ஏஷாதே அக்நே :- ஏ அக்னி தேவனே! இந்த ஸமித்தினால் உமது ஒளி பெருகட்டும், முழுமையடையும். நானும் வளர்ச்சிபெற்று முழுமை அடைவேனாக.
11. யோமாக்நே :- ஓ அக்னி தேவனே! எவன் ஒருவன் எனக்குக் கிடைக்கவேண்டியதைத் தடுத்துத் தான் அநுபவிக்க எண்ணுவானோ, அவனுடைய அந்த தீய எண்ணம் நிறைவேறாது, எனக்கே கிட்டும்படியாக செய்வீராக.
12. ஸமிதமாதாய :- என் ப்ரஹ்மசர்ய வ்ரத அநுஷ்டானத்தில் அதிகம், குறைபாடு ஏதேனும் இருந்தால் என் இந்த ஸமிதான கர்மாவினால் அவை குறைவற்றதாக, சரியாக அநுஷ்டிக்கப்பட்டதாக ஆகட்டும்.
ப்ரஹ்மசார்யஸி :- குரு மாணவனைப் பார்த்துக் கூறுகிறார்:
ஹே மாணவனே! நீ ப்ரஹ்மசர்யத்தை அடைந்தவனாகிறாய்.
(இனி ப்ரஹ்மசாரிகளுக்கான ஆஹார நியமத்தை பின்பற்றவேண்டும் என்பது குறிப்பு)
அபோசாநா :- உணவு எடுத்துக்கொள் என நான் அநுமதி கொடாதவரை நீ நீரை மட்டுமே உணவாக உட்கொள்ளலாம்.
கர்ம குரு :- ப்ரஹ்மசாரிகளுக்குண்டான வர்ணாச்ரம தர்மத்தை ஒழுகு.
மாசுஷ{ப்தா: :- பகலில் உறங்காதே.
பிக்ஷhசர்யஞ்சர :- இனி யாசித்துப் பெற்ற உணவையே உண்ணவேண்டும்.
ஆசார்யதீநோ பவ :- குருவின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருந்து கடமைகளை சரியாகச் செய்.
(குரு உறங்கிய பிறகு உறங்கி, அவர் விழிப்பதற்கு முன் விழித்தெழும் சீடன் உறங்காதவனாகவே கருதப்படுவான். இங்கு உறங்காதே என்று குரு கூறுவதற்குப் பொருள் இதுவே. மேலும், அனைத்து உயர்ந்த சாஸ்த்ரங்களும் குருவிடம் கேட்டு அறிவதைக் காட்டிலும் அவரது அநுஷ்டானத்தை இடைவிடாது கவனித்து அறிவதே சிறப்பு என்கிறது. இதனால் குரு விழித்திருக்கும்போது உறங்கும் சீடம், குருவின் பல அரிய ஒழுக்கங்களை அறியாமல் போக நேரிடும்.)
குருவின் மேற்படி ஒவ்வொரு ஆணைகளுக்கும், சீடன் ‘பாடம்" - ஆம் அப்படியே செய்கிறேன் என்று பதில் கூறவேண்டும்.
உபநயனம் முதல் இந்த நான்கு நாட்களும், சீடன் உடுத்தியிருந்த (மஞ்சள்) துணியை குருவிடம் ஸமர்ப்பித்து, அவனுக்கு வேறு வஸ்த்ரம் அணவிக்க மந்த்ரம் :
யஸ்யதே :- உனது இந்த வஸ்த்ரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். உன்னை எல்லா தேவர்களும் அநுக்ரஹிக்கட்டும். இந்த நல்ல பிறவியை அடைந்த உன்னைப்போலவே உனக்கு நல்ல ஸஹோதரர்கள் உண்டாகவேண்டும்.
6ம் கண்ட முடிவு
ஸமிதான கர்மாவின் இறுதியில் சொல்லப்படும் மந்த்ர அர்த்தம்:
3ம் காண்டம் 5ம் ப்ரச்னம்
யத்தே அக்நே :- ஓ அக்னி தேவனே! உம்மை ஸமிதானத்தால் தினமும் துதிக்கும் நான் உம்மைப்போலவே தேஜஸ் உள்ளவனாக ஆவேனாக. உமது வர்சஸ் போல எனக்கும் வர்சஸ் ஏற்படவேண்டும். உமது பாபத்தைப் போக்கும் சக்தியால் எனது பாபத்தை போக்கியருளவேண்டும்.
அக்னி தேவன் எனக்கு மேதையையும், ப்ரஜையையும், தேஸ்ஸையும் அளிக்கவேண்டும். இந்த்ரனும் எனக்கு மேதை, ப்ரஜை மற்றும் இந்த்ரியங்களின் சக்தியைப் பெருக்கட்டும். ஸூர்ய தேவனும் எனக்கு மேதை, ப்ரஜை மற்றும் ப்ரஹ்ம தேஜஸ்ஸை அளிக்கட்டும்.
மந்த்ர ஹீநம் : ஓ அக்நி தேவனே! என்னால் செய்யப்பட்ட இந்த அக்னி கார்யத்தில் உபயோகிக்கப்பட்ட மந்த்ரங்களிலோ, செய்கைகளிலோ, அவற்றை செயல்படுத்திய முறையில் பக்தி ஈடுபாடு குறைபாடுகளோ எவை இருந்தாலும் நான் செய்த இந்த கர்மா முழுமை பெற்றதாக்கி அருளவேண்டும்.
தவங்கள், ப்ராயச்சித்தங்கள் இவை யாவற்றையும் காட்டிலும் ஸ்ரீக்ருஷ்ண பகவானை த்யானித்து அவன் நாமாவை கூறுவது எல்லாவற்றைக் காட்டிலும் மிகச் சிறந்த ப்ராயச்சித்தம் என ஸ்ம்ருதிகளில் கண்டுள்ளபடியால் நானும் ஸ்ரீக்ருஷ்ண பகவானை த்யானித்து இந்தக் கர்மாவின் பூர்த்திக்காக வேண்டி நமஸ்கரிக்கிறேன்.
மாநஸ்தோகே :- ஓ ருத்ரதேவரே! எனக்கு உண்டாகும் சிசு, ஆயுள், பசு, குதிரைகளிடமும் ஹிம்சையின்றி க்ருபையுடன் இரும். கோபத்தால் எனது வேலையாட்களை துன்புறுத்தவேண்டாம். நான் ஹோம த்ரவ்யத்தோடு நமஸ்கரித்து உபசரிக்கிறேன்.
உபநயன மந்த்ரம் ஸமாப்தி