சனி, 15 ஆகஸ்ட், 2009

சரணாகதிமாலை இறுதிப் பகுதி

அக்ருத்யாநாஞ்ச கரணம்
க்ருத்யாநாம் வர்ஜநம் ச மே,
க்ஷமஸ்வ நிகிலம் தேவ
ப்ரணதார்த்திஹர ப்ரபோ (9)

(ப்ரணத ஆர்த்தி ஹர! சரணாகதர்களுடைய ஆர்த்தியைப் போக்குபவனே! ஆச்ரிதர்களுடைய அகில துக்கங்களையும் அறவே போக்குபவனே! ப்ரபோ! - ஸர்வஸ்வாமியே! ஸமர்த்தனாய் ஸ்வாமியானவனே! தேவ தேவனே! லீலாரஸப் ரவ்ருத்தனே! ஜகத் ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவனே! மே அடியேனுடைய : அக்ருத்யாநாம் - செய்யத்தகாதவைகளுடைய : கரணம் செய்தலையும் க்ருத் யாநாம் - செய்யத்தக்கவைகளின் செய்ய வேண்டுமவற்றினுடைய : வர்ஜநம் ச விடுதலையும்: நிகிலம் - இந்த அனைத்தையும் எல்லாவற்றையும்: க்ஷமஸ்வ பொறுத்தருள வேண்டும்.
அடைந்தவர்களுடைய வருத்தங்கள் அகற்றுபவனே! ஸர்வ விதமான சக்தி உடையவனே! தேவப்பெருமாளே! அடியேனது செய்யாதன செய்கை செய்ய வேண்டியதை விடுகையாகிய அனைத்தையும் பொறுத்து அருள வேண்டும்.
சரணாகதர்களுடைய துன்பம் அனைத்தையும் தொலைக்கும் ஸர்வ ஸ்வாமியான தேவாதி தேவனே! அடியேனுடைய அக்ருத்யம் செய்தலையும் செய்யத்தக்க க்ருத்யங்களைச் செய்யாது விடுதலையும் க்ஷமித்தருள வேண்டும்.
பாபங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன: அக்ருத்ய கரணம், க்ருத்யாகரணம் என்பன. சாஸ்த்ரங்களில் செய்யக்கூடாதன என்று விலக்கப்பட்டவைகளைச் செய்வது அக்ருத்ய கரணம். சாஸ்த்ரங்களில் அவசியம் செய்ய வேண்டியன என்று விதிக்கப் பெற்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பது க்ருத்யாகரணம். இவையனைத்தையும் ஸர்வ ஸ்வாமியாய் ப்ரணதார்த்தி ஹரனான தேவரீர் க்ஷமித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தபடி. தேவ! "பொன்னகில் சேர்ந்தலைக் கும்புனல் வேகை வட கரையிற் றென்ன னுகந்து தொழுந்தேன வேதியர் தெய்வ மொன்றே (தேசிகமாலை பன்னிருநாமம். 10)
ஜகத்ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவன். "லோகவத்துலீலா கைவல்யம்" என்பது ப்ரஹ்மஸுத்ரம். மன்னர்கள் பந்தாடுவதை விளையாட்டாகக் கொண்டிருப்பது போல் பரமாத்மாவும் ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றை விளையாட்டாகக் கொண்டிருக்கிறார். அதனாலேயே இந்த உலகத்திற்கு லீலாவிபூதி என்று பெயர். ஸ்ரீ பாஷ்யகாரரும் "அகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதி லீலே" என்று அகில உலகங்களையும் உண்டாக்கி அளித்து, அழிப்பதையே லீலையாக உடையவன் பகவான் என்று அருளிச் செய்திருக்கிறார். பிள்ளை லோகாசாரியரும் "இதற்கு ப்ரயோஜநம் கேவலலீலை" என்றார். லீலை என்றால் விளையாட்டு. அஃதாவது அப்பொழுது உண்டாகிற ஆனந்தத்தையொழியப் பின்வரும் பலனை எதிர்பாராமல் செய்யப்படும் செய்கையே விளையாட்டு.
துன்பமும் இன்பமு மாகிய
செய்வினை யாய்உல கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகிப்
பலபல மாய மயக்குக்களால்
இன்புறு மிவ்விளை யாட்டுடை
யானைப்பெற் றேதுமல் லலிலனே.
(திருவாய்மொழி 3-10-7)
என்பர் நம்மாழ்வார்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
(இராமாவதாரம் பாலகாண்டம் கடவுள் வாழ்த்து.1)
என்பர் கம்பநாட்டாழ்வான்.
"மநோ வாக்காயை ரநாதிகால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய கரண க்ருத்யாகரண பகவதபசார பாகவத அபசார அஸஹ்யாப சாரரூப நாநாவிதா நந்தாபசாராந் ஆரப்தகார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதாந் கரிஷ்யமாணாஞ்ச ஸர்வாநசேஷத: க்ஷமஸ்வ."
(சரணாகதிகத்யம்)
(மனம் வாக்கு சரீரம் என்கிற மூன்று உறுப்புகளினாலும், அடி தெரியாத நெடுநாளாக விளைந்த அளவில்லாத செய்யத் தகாத காரியங்களைச் செய்தலும், செய்ய வேண்டியதைச்செய்யாதொழிவ தும், எம்பெருமான் திறத்தில் அபசாரப்படுவதும், அவன் அடியார் திறத்தில் அபசாரப் படுகையும், பொறுக்க வொண்ணாதபடி அபசாரப்படுகையும் ஆக இவ்வாறுள்ள பலவகைப்பட்ட கணக்கற்ற குற்றங்களை பலன் கொடுக்க ஆரம்பித்தவைகளையும், பலன் அளிக்க ஆரம்பியாமல் இருப்பவை களையும், முன்பு செய்யப்பட்டவைகளையும், செய்யப்படுகிறவைகளையும், செய்யப்போகிறவை களையும் இந்த அனைத்தையும் அணுவளவும் மிஞ்சாதபடி பொறுத்தருள வேண்டும் என்று அருளிச் செய்திருப்பது இவண் அநுஸந்தேயம்)
ஸ்ரீமந் நியத பஞ்சாங்கம்
மத்ரக்ஷண பரார்ப்பணம்
அசீகர : ஸ்வயம் ஸ்வஸ்மிந்
அதோஹ மிஹ நிர்ப்பர: (10)

(ஸ்ரீமந் : திருமாமகள்கேள்வனான நாராயணனே! நியத பஞ்ச அங்கம் - நீங்காத ஐந்து அங்கங்களை உடையதான: மத் ரக்ஷண பர அர்ப்பணம் - அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை : ஸ்வம் - தானாகவே ஸ்வஸ்மிந் - தன்னிடத்தில் அசீகர : செய்தீர் : அத ஆகையால் அஹம் - அடியேன். இஹ- அடியேனுடைய ரக்ஷணவிஷயத்தில் : நிர்ப்பர : - பொறுப்பில்லாதவனானேன். 'ஸ்ரீமாந்' 'அசீகரத்' என்பன பாடபேதங்கள். அப்பொழுது ஸ்ரீவிசிஷ்டனான நாராயணன் செய்து கொண்டான் என்பது பொருள்.
ஐந்து அங்கங்களோடு கூடின அடியேன் ரக்ஷிப்பதாகிற பரஸமர்ப்பணத்தைத் தானே தன்னிடத்திலேயே பெருந்தேவீ நாயிகாஸமேத தேவராஜன் செய்து கொண்டான். ஆகையினால் அடியேன் இங்கு எத்தகைய பாரமும் இல்லாதவனாக ஆகி விட்டேன். அடியேன் நிர்ப்பரன்.
ஸம்ஸார தொல்லைகளைப் போக்கும் பெருமை வாய்ந்த தேசிகர் கடாக்ஷத்தினால் வேறு வழியைப் பின்பற்றாமலும் செய்யாதன செய்வதில் துவக்கு அற்றவனாயும், உண்மை அறிந்து சங்கைகள் நீங்கி பேரருளாளரான தேவரீரைப் புகலாய்க் கொண்டு அடியேன் பாரத்தை வைத்து நிர்பரனாகவும், நிர்பயனாகவும் இருக்கிறேன்.
ஸ்ரீமந்நாராயணனே! அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை தேவரீரை அடியேனைக் கொண்டு பண்ணி வைத்தீர். இனிமேல் இவ்விஷயத்தில் அடியேனுக்கு ஒரு பொறுப்பு இல்லை.
நியத பஞ்சாங்கம் - பிரபத்திக்கு ஆநுகூல்யஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களும் இன்றியமையாதன. இவ்வங்கங்கள் இல்லாவிடில் பிரபத்தி பலியாது என்றதாயிற்று.
'நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத:
ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாக திரித்யபி.'
(லக்ஷ்மீதந்த்ரம் 17-74)
(நிக்ஷேபம் என்கிற மறு பெயரையுடையதும் ஐந்து அங்கங்களோடு கூடியதுமான பரந்யாஸம் ஸந்யாசம் என்றும் த்யாகம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்பெற்றது)
தொடக்கத்தில் அஹம் மத் ரக்ஷணபரம் (1) என்றும் இறுதியில் ஸ்ரீமாந் (10) என்றும் அருளிச் செய்தபடியால் ஆத்யந்தங்களில் ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும் என்பதாயிற்று.
நிர்ப்பர - இதனால் ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்ப்பரனாய் பயங்கெட்டு மார்பிலே கை வைத்துக்கொண்டு கிடந்து உறங்குகிறேன் என்றபடி.
(ஸாங்கமான பரஸமர்ப்பணத்தைத் தேவரீரே செய்து வைத்தருளினீர். ஆதலால் அடியேன் நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று விண்ணம் செய்து தசகத்தைப் பூர்த்தி செய்கிறார் இதில்.)

_____ ந்யாஸதசகத்தின் வ்யாக்யனமான சரணாகதிமாலை----
நிறைவு பெற்றது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஆராவமுதம்

நேற்று உலகமெங்கும் பலர் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர் அல்லவா ! அதையொட்டி "சந்தவசந்தம்" கூகுள் குழுவில் வந்த ஒரு கவிதை இங்கே !

மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது வானோர்
நிலம்பூத்தது நதிபூத்தது நெறிபூத்தது நல்லோர்
தலம்பூத்தது மனம்பூத்தது சனம்பூத்தது ஆயர்
குலம்பூத்தது கருமாமுகில் குழந்தைவர வாலே


இந்தப் பாடல் இன்று பூத்ததும் பொருத்தமே. நமது திருக்குடந்தை ஆண்டவனின் 8 உபந்யாஸங்களில் முதலாவதாக வருவதும் அந்த கிருஷ்ணனைப் பற்றியதுதானே ! இங்கு உள்ள லிங்கில் க்ளிக் செய்து அங்கு காணும் 8 ஆடியோக்களையும் தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆடியோ லிங்கின் அருகில் இருப்பது உபந்யாஸம் நடந்த தேதி. (391976 என்பது 3--9--1976 )


http://ishare.rediff.com/music/HHupan


ஓரிரு நாட்களில் தனியே download செய்து கொள்ள லிங்க் தருகிறேன். இப்போதைக்கு இரண்டு உபந்யாஸங்கள் இங்கு உள்ளன. நேரடியாக இறக்கிக் கொள்ளலாம்.


http://www.mediafire.com/folder/9fb4b6836e5e573824a64199ac7f73e552d82ba9a27b8d14b8eada0a1ae8665a

புதன், 12 ஆகஸ்ட், 2009

கொல்லன் தெருவில் ஊசி விற்கப் போகிறேன்

அடியேனுக்கு எது தெரியுமோ தெரியாதோ, ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். இந்த வலையைப் படிப்பவர்கள் வெகு சிலரே ஆனாலும், அவர்கள் எல்லாருமே, சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ஆசார்ய பக்தி, இவற்றால் விளைந்த ஞானம் ஆகியவைகளுடன் கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும் அடியேனைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்பது அடியேனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்த ஒன்று. ஆனாலும், அவ்வப்போது அடியேன் ஏதோ நிறைய கைங்கர்யங்கள் செய்வதாய் அவர்கள் பலமுறை தங்களது உயரிய குண நலன்களாலே பாராட்டுவது, நம்மகங்களில் சிறு குழந்தை மழலையில் ஏதோ உளறும்போது உற்சாகப் படுத்தி ஊக்குவிப்பது போல்தான். இன்று இங்கு அடியேன் தொடரப் போவதும் உங்களில் பலர் ஏற்கனவே அறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிலவற்றைப் பற்றித்தான்.

நேற்று ஸ்ரீமத் ஆண்டவன் உபந்யாஸத்தை வலையேற்றியவுடன் அடியேனுடன் தனி மின்னஞ்சல், தொலைபேசி வழியாகப் பலர் தொடர்பு கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப் படுத்தினர். அவர்களில் சிலருக்கு on-lineல் கேட்பது விருப்பம். வேறு சிலரோ download செய்து கொண்டு நிதானமாக தங்களுக்கு ஸௌகர்யப்படும்போது off-lineல் கேட்க வழி செய்தால் நல்லது என்றனர். இரண்டு பிரிவையும் சந்தோஷப்படுத்த அடியேனுக்கும் ஆசைதான். ஆனால் இரண்டு வெவ்வேறு இடங்களில் தனித்தனியே upload செய்யவேண்டும். எங்களூரிலோ கரண்ட் அடிக்கடி காணாமல் போகும் . அதை நம்பி upload செய்தால் ஒன்றையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்க வேண்டும். இரண்டையும் ஒரே சமயத்தில், கேட்டுக் கொண்டே download செய்ய வைக்க முடியுமோ? என்ன செய்யலாம்? எங்கள் ஆண்டவன் திருக்குரலை ஆசையுள்ள எல்லாரும் கேட்க ஒரு வழி காட்டு என அடியேன் அடிக்கடி தஞ்சமடையும் கூகுளாண்டவரையே கேட்டேன். வழிகாட்டிவிட்டார். இதைத்தான் நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே எனப் பலர் சொல்லலாம். தெரியாத ஒரு சிலருக்காக எழுதுகிறேன். எனவேதான் இந்தத் தலைப்பும்கூட.

இப்படி உபந்யாஸத்தைக் கேட்டுக் கொண்டே பதிவிறக்கம் செய்து கொள்ள எளிதான இரு வழிகள் உள்ளன.
Free Recorder என்பது இரண்டிலும் மிக எளிதானது. இதை இறக்கி பதிந்துகொண்டால், internet explorer, firefox browserகளில் இது tool bar ஒன்றினை நிறுவிக் கொள்ளும். இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்
http://freecorder.com/sound-recorder/

தரவிறக்கி நிறுவிக் கொண்டவுடன் அடியில் காணும் tool bar address bar கீழே வந்து அமர்ந்து கொள்ளும்.

Photobucket

அதில் Record, Play/Pause, Stop buttons இருப்பதையும் காணலாம்.

settings மாற்ற வேண்டுமா என்று கேட்கும். எதையும் மாற்றாமல் OK கொடுத்து விடலாம். Record from free record driver என்பது மட்டும் தேர்வு ஆகியுள்ளதா என உறுதி செய்து கொண்டு , தேவையானால் saving destinationஐ மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.

Photobucket

இப்போது ஆடியோ லிங்க்கை க்ளிக் செய்து பாட ஆரம்பிக்கும்போது மேலே recorder tool barல் Record பட்டனை க்ளிக் செய்யவேண்டியதுதான் நம் வேலை. உடனே ரெக்கார்டிங் ஆரம்பித்து விடும். அப்போது இந்த மாதிரி கட்டத்தில் பச்சைக் கோடுகள் ஓடுவதைக் காணலாம்.

Photobucket

முழுமையும் பதிவான பிறகு அதாவது அந்த ஆடியோ முழுமையாகப் பாடி முடிந்த பிறகு tool bar stop button மூலம் நிறுத்திவிட்டு மீண்டும் Play button மூலம் உறுதிப் படுத்திக் கொண்டு வெளியேறலாம்.

ஹூ ஹூம் ! இந்த வேலையே வேண்டாம். அது வழியாய் ஏதாவது ஸ்பைவேர், மால்வேர் வந்துவிடும் என நினைப்பவர்கள் MP3MyMP3 என்ற மென்பொருளை நிறுவிக் கொண்டு இதே வேலைகளைச் செய்யலாம்.

Photobucket

Free Recorder நமது கணிணியிலுள்ள sound cardல் வருபவற்றை பதிவு செய்வதால், speaker off ஆக இருந்தாலும் mute செய்திருந்தாலும் பதிவு செய்து விடும். ஆனால் MP3MyMP3க்கு இரண்டுமே on conditionல் இருப்பது அவசியம்.

MP3 formatல் சேமித்தவைகளை உங்களுக்கு வசதியான கோப்பாக ஒரே நொடியில் மாற்றிக் கொள்ள இருக்கவே இருக்கிறது Format Factory.

இவைகளை நிறுவிக் கொண்டு நாளை இங்கு அடியேன் தரப் போகும் சுட்டிகளிலிருந்து ஸ்ரீமத் ஆண்டவன் உபந்யாஸங்கள் எட்டையும் (அதுகூட ஒரு அஷ்டாக்ஷரமாக அமைந்ததும் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹமே) நெஞ்சுருக அனுபவித்துக் கொண்டே கம்ப்யூட்டரில் சேமிக்கவும் தயாராயிருங்கள். நாளை வரை!

(சில ஸ்ரீக்கள் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்று கேலியாகச் சிரிப்பதும் அடியேன் மனதுக்குத் தெரிகிறது)
திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இன்று ஒரு புதையல்

திருப்புல்லாணி போன்ற சிறு கிராமங்களில் வசிப்பதில் எத்தனையோ சிரமங்கள் உண்டுதான். ஆனால் பெரு நகரங்களில் அல்லது போக பூமிகளில் சகல விதமான ஸௌகர்யங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரிய பாக்யம் அடியோங்களுக்கு உண்டு. அங்கெல்லாம் இருப்பவர்கள் பெரிய யதிகளையோ, ஸம்ப்ரதாயத்தில் சிறந்தாரையோ, கைங்கர்ய சீமான்களையோ தேடிச் சென்று ஸேவிக்க வேண்டியிருக்க, இந்தத் திருப்புல்லாணியிலுள்ளவர்களை எல்லாரும் தேடி வந்து அடியோங்களை ஆஸீர்வதிக்கின்ற மஹா பாக்யம் அது. அதிலும் அடியேன் பித்ருக்கள் செய்த நல்லவைகளால் அடியேனுக்குக் கிட்டிய பெரும் பேறு ஸ்ரீமத் ஆண்டவனே இங்கு ஒரு சாதுர்மாஸ்யம் அநுஷ்டித்து அனுக்ரஹித்தது. இப்படி வருகின்ற ஆஸீர்வாதங்களால் ஒரு எழுத்தும் அறியாத அடியேன் வசம் அடிக்கடி புதையல்கள் போல பல புஸ்தகங்கள் வருவதும், அதில் எதுவுமே புரியாமல் யாராவது அர்த்தம் சொல்வார்களோ என்ற ஆசையால் இங்கு அவற்றை இடுவதும் அடியேன் வாடிக்கை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஸ்ரீமத் ஆண்டவன் மண்டுகளைப் பற்றி "நன்றாக அலம்பி, துடைத்து, கவிழ்த்து வைத்த பாத்திரம் " என்று கூறுவதுண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணமான அடியேனுக்கு, பரம காருணிகரான ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தாலும், இங்கு ஆச்ரமத்தில் தங்கி முழு மன நிறைவுடன் ஊர் திரும்புகின்ற பல பெரியோர்களது இதயபூர்வமான ஆசிகளாலும் இன்று எதிர்பாராமல் கிடைத்த ஒரு பொக்கிஷத்தின் ஒரு பகுதியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சுட்டிகள் மீது க்ளிக் பண்ணி அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். (இரண்டு பாகங்கள் உள்ளன.)
Get this widget | Track details | eSnips Social DNA


03.9.1976--Side-B....

இங்கு அடியேன் எழுதுவதையெல்லாம் எல்லாரும் படிக்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை. ஏற்கனவே அடிக்கடி எழுதியிருக்கிறேன். யாருக்காவது, எப்போதாவது, என்றாவது பயன்படும் என இந்தப் பதிவுகளை எழுதி வருகிறேன். ஆனால் இப்போதோ எல்லாரும் வர வேண்டும் அடியேன் பெற்ற பாக்யம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும், எப்படி இன்று முதல் முறையாக இந்த தெய்வக் குரலை அடியேன் கேட்டு பரவசப்பட்டேனோ, அதேபோல் இதுவரை கேட்காதவர்கள் அனுபவிக்க வேண்டும், ஏற்கனவே பல முறை கேட்டிருப்பவர்கள் மீண்டும் கேட்டு அந்த இனிய நாட்களின் நினைவிலே மகிழ வேண்டும் என்றெல்லாம் மனசு ஆசைப் படுகிறது. கேட்டவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி பலர் கேட்டு மகிழ உதவ வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.