A caution at the outset
திங்கள், 6 ஆகஸ்ட், 2012
Guru Paramparai vaibhavam dtd 6-8-2012
A caution at the outset
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
சுப மந்த்ரார்த்த ப்ரச்ந பாஷ்யம் 11
ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம் பின்வருவது.
கந்யா அபிமந்த்ரணம்
ஸோம ப்ரதம: ....
ஏ பெண்ணே! முதலில் உன்னை ஸோமதேவன் அடைந்தான், இரண்டாவதாக விச்வாசு என்னும் கந்தர்வ தேவன் அடைந்தான், மூன்றாவதாக அக்னி உனக்கு பதியானான். (இம் மூன்று தேவர்களும் முறையே பெண்ணுக்குத் தேவையான குணம், இளமை, அழகு இவற்றை அளித்ததாக வேதம் குறிப்பிடுகிறது).
பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாரீர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம்.
ஸோமோததது கந்தர்வாய ....
இவளை முதலில் ஸோமன் அநுக்ரஹித்து கந்தர்வனிடம் கொடுத்தான், கந்தர்வன் பிறகு இவளை அக்னியிடம் ஒப்புவித்தான். இப்போது இந்த அக்னிதேவன் இவளையும், புத்ரஸந்தானத்தையும், பரிபாலிக்கத் தேவையான தனங்களையும் எனக்கு அளிக்கவேண்டுமாய் அக்னிதேவனை ப்ரார்த்திக்கிறேன்.
ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.
குறிப்பு:- இந்த மந்திரம்பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர ஸம்பவமும், அதை ஒட்டி நாத்திகர்களால் எழுப்பப்படும் அபவாத்திற்கான ஸமாதானத்தையும் இங்கு காண்போம்.
நம் பூர்வாசார்யர்களில் ஒருவரான யாமுனாசாரியர் தன் குருவாகிய மஹாபாஷ்யபட்டருக்காக ஆக்கியாழ்வான் என்பவனை எதிர்த்து வாதிடும்போது, அவன் முன்னே, மறுத்து வாதிட இயலாததான 1. உன் தாய் மலடி அல்லள், 2. மஹாராஜா குற்றமற்றவன், 3. மஹாராணி கற்புக்கரசி என 3வாதங்களை வைத்து இவற்றை மறுத்து வாதிட்டால் நீர் வென்றவராவீர் என்றார். ஆக்கியாழ்வானால் முடியாதபோது, மஹாராணியின் உத்தரவுப்படி தானே அவற்றை மறுத்து நிரூபித்தார். 1. ‘ஒருமரம் தோப்பாகாது ஒன்றைப்பெற்றவள் தாயாகாள்" என்ற ஆதார வசனத்தைக் கூறி முதலாவதையும், 2. ‘குடிமக்களின் குற்றங்கள் கொற்றவனையே சாரும்" என்ற கூற்றால் இரண்டாவதையும், 3. மேற்படி ‘ஸோம: ப்ரதம:" என்கிற மந்திரத்தை ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டு மஹாராணி கற்புக்கரசி அல்ல என்று வாதிட முடியும் என்றும் நிரூபித்து ‘ஆளவந்தார்" என்ற பட்டத்தையும் பாதி ராஜ்யத்தையும் பெற்றார் என்பது சுவையான சரித்திர ஸம்பவம்.
இதே வாதத்தை நாத்திகர்கள் முன்வைத்து, மூவர் மணந்த பெண்ணை நான்காவதாக ஒருவனுக்கு மணம் செய்து வைப்பதாய் ப்ராமணர்கள் ஒரு இழுக்கான ஸம்ப்ரதாயத்தை கையாளுகின்றனர் என்று ப்ரசாரம் செய்கின்றனர்.
ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது.
‘மாநிலம் சேவடியாக தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாக, திசைகள் கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேதமுதல்வன் என்ப
தீதறவிளங்கிய திகிரியோனே"
என்றார் பரம்பொருளைப் பாரதம்பாடிய பெருந்தேவனார் நற்றிணையில்.
நாத்திகர் நம் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை இங்கு எடுத்துக்கொண்டோம். ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்நி எனும் தீயைப்போலவே, மதியமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.
மேலும் இந்த நாத்திகர்கள் கவலைப்படுவதெல்லாம் பெண்ணின் கற்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த ப்ராஹ்மணர்கள் என்பதுதான். இன்றுவரை சாஸ்த்ரம் கூறுவது, ப்ரயோகம் கூறுவது கந்யை என்று அதாவது பூப்படையாதவள் என்று. பூப்படையாத சிறுமியைத்தான் மூன்று தேவர்களும் தங்கள் அநுக்ரஹத்தால் பூப்படையச் செய்யும் யௌவனத்தை வழங்குகிறார்கள். இதில் கற்பு பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகர்கள் இயற்கையை அஃறிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள். இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?!