சனி, 9 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

திருப்புல்லாணி மாலை
இல்வாழ்க்கை (10வது குறள்)
மையற்றவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படு மென்பர் புல்லைத் திருநகர்வா
ழையற் கடிமைப்பட்டு இல்வாழ்க்கை நீதி அமைந்தவரை
மெய்மைக் கருத்துறச் சொல்வது அன்றோவந்த மேன்மைகளே.
குறிப்பு:-- மை=குற்றம்;ஐயற்கு=தலைவர்க்கு; மெய்மைக்கருத்து= தூய எண்ணத்துடன்;
வாழ்வாங்கு=வாழும் இயல்பினொடு; வான் உறையும் தெய்வம்= நித்திய
சூரிகள்; (திருப்புல்லாணி ஜகன்னாதனை வணங்கும் அடியார்களைத்
தூயமனதால் வழிபட்டால் எல்லா மேன்மைகளும் கிட்டும்
வாழ்க்கைத் துணைநலம் (4வது குறள்)
தருந்தக்க நாண்மடம் அச்சம்பயிர்ப்புத் தரித்த பெண்ணிற்
பெரும்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாக்கப் பெறிற்
பொருந்தச் சொல்லத்தனமை புல்லைப்பிரான் திருவடிப் பூவடியை
வருந்தித் தவம்புரிமாதர் கற்பல்லது மற்றில்லையே
குறிப்பு:-- தரும்தக்க-- கூறத்தக்க; நாண்-- வெட்கம்; பயிர்ப்பு-- மனம் கொள்ளாமை;
திண்மை-- கலங்காநிலைமை (புல்லைப் பிரானையே போற்றிவாழும் கற்பே
கற்பாகும்)
மலேகானில் குண்டு வெடிப்பு
இப்போது மசூதியில் குண்டு வெடித்தது. மும்பையிலோ,கோவையிலோ
மலேகானிலோ எங்கு வெடித்தாலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிகள்
உயிரிழப்பது பெரிய வேதனைதான். ஆனாலும்கூட இப்போது மசூதியில்
வெடித்த நாளை எல்லாத் தரப்பாரும் சற்று சிந்தித்தால், மதங்களிடையே
பல விஷயங்களில் உள்ள ஒற்றுமை புலனாகும்.
அன்று ஷப்-ஈ-பரத் என்னும் முக்கியமான தினமாம். மறைந்த முன்னோர்கள்
நினைவாக இந்த தினத்தில் அவர்களை நினைத்து தொழுகை செய்வதைக் குரான்
கட்டாயப் படுத்தியுள்ளதாக அனேகமாக எல்லா நாளிதழ்ச் செய்திகளும் தெரிவிக்
கின்றன.
இந்துக்களுக்கோ அது மாளயபக்ஷ ஆரம்ப தினம். அன்று முதல் அமாவாசை வரை
15 தினங்களும் பித்ருக்களுக்காக (மறைந்த மூதாதையர்கள்) திதி அளித்து விரதம்
அனுஷ்டிப்பது இந்துக்கள் கடமை. (தற்போது அந்தணர்கள் மட்டுமே கடைப் பிடிக்கின்
றார்கள் என்பது வேறு விஷயம்)
ஆக அடிப்படையான ஒன்று மூதாதையரை நினைத்து வழிபடுதல் பொது. அதை அனுசரிக்கும்
விதங்கள் மாறலாம். அது தேசாச்சாரம் எனப்படும். இப்படிபல விஷயங்கள் அடிப்படையிலே
ஒன்றுதான். இதை என்று நாம் எண்ணிப் பார்க்கப் போகிறோம்?
30 வருடங்களுக்கு முன்னே ஜாதியோ மதமோ அவரவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலும்,
துக்க காரியங்களிலும் மட்டுமே ப்ரதானமாக இருந்தன. என்னுடன் பள்ளியில் படித்த நண்பன்
இன்ன ஜாதியென்று போன வருடம் அவரது பெண் கல்யாணப் பத்திரிக்கை பார்த்துத் தான்
35 வருடத்திற்குப்பின் தெரியும். சீறாப்புராணத்தை நாராயணசுந்தரம் ஐயங்கார் அனுபவித்து
எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போல் யார் சொல்லப் போகிறார்கள்? ஈசான்யத்தைப்
பற்றியும், சைவ,வைணவ இலக்கியங்களைப் பற்றியும் நீதிமன்றங்களில் ஒன்றாகக்
காத்திருக்கும்போது கீழக்கரை SVM காசிம் அவர்கள் சொல்லச் சொல்லத் தானே
எனக்கு அவற்றின் அருமையை உணர்ந்து கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிந்தது
அவரவர் வழி அவரவருக்குச் சிறந்ததுதான். ஆனால் அதுதான் சிறந்தது மற்றவை மட்டம்
எனும் நினைப்புத் தானே கலகங்களுக்குக் காரணம்?
மாச்சரியங்களை உண்டாக்கி சுகம் காணும் சில சுயநலக் காரர்கள் விரிக்கும் பொய்மை
புரட்டுகளில் புத்தியைச் செலுத்தி உண்மை நிலை தெளிந்து வேறுபாடுகள் களையப் படவேண்டும்.
நடக்குமா? நடக்காது. ஏனென்றால் நாட்டில் பல அரசியல்வாதிகளுக்கு நாம் பிரிந்தே இருப்பது
தான் வசதி. இல்லையா?
திருதிரு

வெள்ளி, 8 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

         திருப்புல்லாணி மாலை      

 அறன் வலியுறுத்தல் (5வது குறள்)

பொன்னாட்டு இறையோடு அயிராணி போற்றும் அம்போருகப்பூ
மின்னாட்கு நாயகம் என்னும் புல்லாணியில் வீற்றிருக்கும்
அன்னார்க்கு அடியவர் சொல்வர் அழுக்காறுஅவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
எனவே.

குறிப்பு:--  பொன்னாடு-- தேவலோகம்; அயிராணி-- இந்திராணி;
                   அம்போருகப்பூ--- தாமரை; மின்னாட்கு--திருமகளுடைய
                   நாயகம்-- தலைவன்;  

 
     இது வாஸ்து அல்ல 
   மத்ஸ்ய புராணம் கூறும் கட்டிடக் கலை விதிகள்
   (நன்றி:  திரு சோ அவர்கள், "துக்ளக்")
 கட்டிடக் கலையை வகுத்தவர்கள்:
    ப்ருகு, அத்ரி, வசிஷ்டர், விச்வகர்மா, மயன், நாரதர்,நக்னஜிதன், விசாலாக்ஷன்,
   புரந்தரன், ப்ரும்மதேவன், கார்த்திகேயன், நந்தீச்வரன், சௌனகர்,கர்கர், வாஸூ
   தேவன், அநிருத்தன், சுக்ரன், ப்ருஹஸ்பதி  ஆகியோர்.
  
   சித்திரையில் கட்டிடம் துவங்கினால் நோய்வாய்ப்படுவான்;
  வைகாசியில் தொடங்குபவன் செல்வத்தைப் பெறுவான்.
   ஆடியில் தொடங்குபவனுக்கு நிறைய வேலையாட்கள் கிடைப்பர்.
   மார்கழி  தானியத்தையும், மாசி செல்வத்தையும், பங்குனி நன்மக்கட்பேற்றையும் அளிக்கும்.
   ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்கள் கட்டிட வேலை ஆரம்பிக்க உகந்த மாதங்கள் அல்ல.
 
  அச்வினி, ரோஹிணி, மூலம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷ நக்ஷத்திரங்கள் உகந்தவை.
  ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில்  கட்டிடம் கட்ட  ஆரம்பிக்கக்கூடாது."
  மீதி நாளைக்கு
 திருதிரு
 
  


              

புதன், 6 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

        நீத்தார் பெருமை (2வது குறள்)

குறைத்தாரெனாத் துறந்தார் பெருமைதுணைக் கூறின்வையத்
திறந்தாரை எண்ணிக்கொண்டற்று எனலால் இறவாது உனைச்சேர்
துறந்தார்பெருமை அறிந்தும் என்போலிகள் சொல்லவற்றோ
மறந்தார்கள் நீமறந்தேனுஞ் சொல்லாய்ப்புல்லை வாமனனே.

குறிப்பு:--குறைந்தார் எனா--- குறையுள்ளவர் எனக் கூறத்தகாத; துறந்தார்----அகங்கார மமகாரங்களை விட்டவர், துறவி எனலுமாம்;  இறவாது-- தாழ்வு இன்றி; சொல்ல---சொல்வதற்கு; அற்றோ--- தன்மையதோ; (தம்மடியார்கள் சிறப்பை எம்பெருமான் மறக்கமாட்டான்)

      தமிழிலேயே கணிணியில் எழுத எல்லாருக்கும் ஆசை. ஆனால் எழுதியதை மெயிலும்போது அடுத்தவர் சரியாகப் படித்தாரா, நாம் அனுப்பிய எழுத்துருக்கள் அவரிடம் இருக்கவேண்டுமே என எத்தனையோ கவலைகளால் தவிப்போருக்கு உதவ சென்னை கணியத்தமிழ் நிறுவனம் முன்வந்துள்ளது. "வரியுருமா" என்ற பெயரில் இது வெளியிட்டுள்ள மென்பொருள் எல்லாப் ப்ரச்சினைகளையும் தீர்க்குமாம். "தமிழ் கம்ப்யூட்டர்" ஆகஸ்ட் 15 தேதிய இதழில் படித்தேன். எந்த வடிவிலிருந்தும் எந்த வடிவுக்கும் மாற்றிக் கொள்ளலாமாம். www.kaniyatamil.com சென்று விவரங்கள் காணலாம். என்ன கொஞ்சம் விலை கூட.

           அப்புறம், தேசிகன் என்று ஒரு இளைஞர் வலைப்பூவில் நிறைய எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாள் "கல்கி" இந்தக் கால "சுஜாதா" இருவரையும் ஒன்றுசேர்த்தாற்போல இயல்பான நகைச் சுவையுடன் பல நல்ல விஷயங்களை அளித்துவந்தார். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் விதைத்தவர் அவரே. யுனிகோடு என்பதை எனக்கு அறிமுகப் படுத்தியதும் அவரது வலைப் பூக்கள்தான் (http;//desikann.blogspot.com)  ஏனோ தெரியவில்லை செப் 2005க்குப் பின் அவர் தளம் புதுப்பிக்கப்படவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் "தமிழ் மண"த்தில் இருக்கவேண்டும், அவர்கள் மூலம் எனது துரோணாச்சார்யரான திரு தேசிகனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் என்ற ப்ரார்த்தனையுடன் இன்று விடைபெறும்,
திருதிரு

திங்கள், 4 செப்டம்பர், 2006

thiruppullaani maalai

நினைத்தபடி தினம் தொடரமுடியவில்லை. இதுவரை யாரும் படித்ததாகவும் தெரியவில்லை. எனவே யாருக்கும் ஏமாற்றமும் இருந்திருக்காது. இந்தக் காலத்தில் யாராவது உன் பழம் பஞ்சாங்கத்தைப் படித்து ரசிப்பார்களா என சில நண்பர்கள் தெரிவிக்கும் கருத்திலும் உண்மை உண்டு. ஆனாலும் ஒரு ஆசை. தமிழ்கூறும் நல்லுலகில் யாராவது ஓரிருவராவது வள்ளுவன்பால் கொண்டபிரியத்துக்காகவாவது இதைத் தொடர்ந்து படிக்கமாட்டார்களா, அப்படிப் படித்து இதில் சரியானபடி பொருள் தெரியாமல் உள்ள பலவற்றுக்கு அர்த்தம் கிடைக்குமா என்ற நினைப்பால் தொடர்கின்றேன்.
திருப்புல்லாணி மாலை
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து (1வது குறள்)
மூதுரை வள்ளுவர் அகரமுதல எழுத்தெல்லா
மாதிபகவன் முதற்றே உலகென லாயமைத்த
நீதிஉனை அன்றிநீணிலம் உய்யநெறி மற்று உண்டோ
மாதவ! புல்லைத்தலத்தும் என்நெஞ்சத் தும்வாழ்பவனே.
குறிப்பு:--மூதுரை--- பழம்பெருவாக்கு; நெறி--- வழி, உபாயம் என்றபடி ; நீண்ட+நிலம் =நீணிலம்

வான் சிறப்பு (3வது குறள்)
விண்ணன்று விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின்று டற்றும்பசி யெனலாற்புல்லை யூரின்மழை
வண்ணம்சிறந் தவன்வந்து அருளாவிடில் வாடும் உயிர்த்
தண்ணம் பயிரெனற்கு ஐயமுண்டோ இச்சகதலத்தே.
குறிப்பு;-- விண்--மேகம் என ஆயிற்று; (விண்-வானம், நின்று பொய்ப்பின் --- பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமல்) விண்ணின்று--- வானத்திலிருந்து; வியன் உலகத்து--- பரந்த உலகத்து; உடற்றும்-- உயிர்களை வருத்தும்; தண்-- குளிர்ந்த; அம்-- அழகிய ; எனற்கு--என்பதற்கு (ஆதிஜகன்னாதன் என்னும் மேகம் இங்கு எழுந்தருளாவிடில் உயிர்களாகிய பயிர் வாடிவிடும் என்றவாறு.)
தமிழிலே படித்துச் சுவைக்க ஒரு அருமையான தளம் உள்ளது தெரியுமோ? இதைப் போலவே அதையும் எண்ணிவிடவேண்டாம். மரபுக் கவிதைகளும் உண்டு. நிகழ்கால அவலங்களை நையாண்டி செய்யும் புதுக் கவிதைகளும் உண்டு. 10நொடிக் கவிதைகளாய் சிரிக்கவைக்கும் பலவும் அங்கு உண்டு. கண்ணைவிட்டு அகலாத வண்ணச் சித்திரங்களும், மேடை முழக்கங்களுமாய்க் கலந்து கட்டும் நல்ல தளம் அது. ஒருமுறை www.geocities.com/magudadeepan தளத்துக்குள் சென்று பாருங்களேன்.
தினம்தினம் எத்தனையோ படிக்கின்றேன். அதில் சிலவற்றை நாளை முதல்(?) கூடுதலாகப் பகிர்ந்து கொள்வேன்.
"திருதிரு"