செவ்வாய், 25 ஜூலை, 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

வேங்கடேச:

வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீரஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கடமாமலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்துநின்று, அதாவது தன்னை அடைந்த‌வர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.

கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்

ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் ப‌ள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழவல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய‌ ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டாநிற்கும்.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்

தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குணவிசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகவும் கொண்டு

இதன் கருத்து:--

இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ரபர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.

தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தரமலையிலே அதாவது:-- ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக்குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ்மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,

(தொட‌ரும்)

திங்கள், 24 ஜூலை, 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

இப்படிப் பொதுவில் இப்பிரபந்தத்தின் ஏற்றத்தைக் குறிப்பிட்டு மேலே இதின் மேன்மையைத் தாம் அறிந்துகொண்ட ப்ரகாரத்தை ஒரு ச்லோகத்தாலே நிரூபித்தருளுகிறார் – ‘ப்ரஜ்ஞாக்யே ­­--- என்றாரம்பித்து.

प्रज्ञाख्ये मन्थशैले प्रथितगुणरुचिं नेत्रयन् सम्प्रदायं

तत्तल्लब्धिप्रसक्तैरनुपधिविबुधैरर्थितो वे‍‍ङ्कटेश: |

तल्पं कल्पान्तयून: शठजिदुपनिषद्दुग्धसिन्धुं विमथ्नन्

ग्रथ्नाति स्वादुगाथालहरिदशशतीनिर्गतिं रत्नजातम् ||

ப்ரஜ்ஞாக்யே மந்தஶைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்

தத்தல்லப்திப்ரஸக்தைரநுபதிவிபுதைரர்த்திதோ வே‍‍ங்கடேஶ: |

தல்பம் கல்பாந்தயூந: ஶடஜிதுபநிஷத்துக்ஸிந்தும் விமத்நந்

க்ரத்நாதி ஸ்வாதுகாதாலஹரிதஶஶதீநிர்கதிம் ரத்நஜாதம் ||

தத்தல்லப்தி ப்ரஸக்தை: அனுபதிவிபுதை: அர்த்தித:

அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான

ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழி என்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப்போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை\ எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.

இங்கு உத்தரக்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதே நிசமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப்புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக்கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடைகயிறாகவும் கொண்டு, தான் கூர்மரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும்பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானேயாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம். ஆனால் இங்கு ஸ்வாமி தேசிகன் தன் பேறாக ஒன்றையும் கோரவில்லை என்பது ஏற்றம்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நம்மாழ்வார் வைபவம்

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன்திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்யவேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறுவிதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித்தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ..... மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை "ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்" என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குருவரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் "ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது" என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வமதத்தை "மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்டதுவே" என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார். ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர்சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண்மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ்வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை "வெஃகாவுது" என்றும், "அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது" என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண்காவைக் காட்டி, அது "எப்பாலைக்கும் சேமத்ததே" என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்யதேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் "எப்பாலைக்கும் சேமத்ததே" என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.