வியாழன், 22 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 15


இருபத்தைந்தாவது ஸர்க்கம்.

(ராவணன் சூரியனிடம் செல்வதும், அவனை வென்றதாகத் தானே நினைப்பதும்)

       பிறகு ஆலோசனை செய்து ராவணன் சூரியனை ஜயிக்க நினைத்து, ஸூர்யலோகம் சென்றான். அங்கு அவன் ஒளிமயமானவனும், மங்களகரனும், உயர்ந்த கர்ண குண்டலங்களால் விளங்கிய முகமண்டலத்தை உடையவனும், உயர்ந்த ஸ்வர்ணமயமான தோள்வளைகளைத் தரித்தவனும், சிவந்த மாலையை அணிந்தவனும், செஞ்சந்தனம் பூசிய மேனியை உடையவனும், ஆயிரம் கிரணங்களோடு கூடியவனும், விபுவும், ஸப்தாச்வ வாஹனனும், ஆதி மத்ய அந்த ரஹிதனும், தேவதேவனுமான ஆதித்யனைக் கண்டான். அவனுடன் வந்த மந்திரிகள் சூரியனுடைய தாபத்தை ஸஹிக்க மாட்டாதவர்களாக நின்றனர்.

    அப்போது ராவணன் தனது மந்திரியான ப்ரஹஸ்தனைப் பார்த்து, “ ப்ரஹஸ்த! நீ உடனே சூரியனிடம் சென்று, ராவணன் வந்துள்ளான். நீ அவனுடன் போர் புரிகிறாயா? அல்லது தோற்றேன் என ஒப்புக் கொள்கிறாயா? என்று நான் கேட்டதாகச் சொல்லி , அவனது மறுமொழியை அறிந்து வா” எனக் கூறினான். அவனும் அவ்வாறே சூரியனிருக்குமிடம் சென்றான். அங்கே பிங்கன், தண்டீ என்ற இரண்டு த்வார பாலகர்களைக் கண்டு, அவர்கள் மூலமாக ராவணனின் விருப்பத்தைத் தெரிவிக்கச் செய்து, சூரியனிடம் தான் நெருங்க முடியாதபடியால் வெளியிலேயே நின்றான்.

      தண்டீ என்பவன் உள்ளே விஷயத்தைச் சூரியனிடம் கூறினான். அதற்கு, சூரியன் நன்கு ஆலோசித்து, “ நீ சென்று ராவணனை எதிர்த்து யுத்தஞ் செய்து வெற்றி பெறினும் பெறுக! அது முடியாதாகில் நான் தோற்றேன் என்று கூறினாலும் கூறுக. உனக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்க. எனக்கு வீண்பொழுது போக்க நேரமில்லை” என்று கூறினான். தண்டீ ராவணனிடம் சென்று சூரியன் சொன்னவற்றை விளங்கக் கூறினான். அது கேட்ட ராக்ஷஸ ராஜன் தான் வெற்றி கொண்டதாக எண்ணி ஜயகோஷம் செய்துகொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 14

இருபத்து மூன்றாம் ஸர்க்கம்


[ராவணன் நிவாதகவசர்களுடன் நட்புக் கொள்ளல்;
காலகேய வதம்; வருண புத்திரர்களை ஜயித்தல்.]


            யமபுரியிலிருந்து திரும்பிய ராவணனை அவனது மந்திரிகளான மாரீசன் முதலானோர் வந்தடைந்தனர். ராவணனது உடம்பிலுள்ள காயங்களையும், அவற்றிலிருந்து பெருக்கெடுத்தோடும் ரத்தத்தையும் கண்டு நெகிழ்ந்தவர்களாய் 'ஜய விஜயீ பவ' என்று வாழ்த்தி மகிழ்வித்தனர். எல்லோருமாக மறுபடி புஷ்பக விமானத்தில் அமர்ந்து கொண்டு ரஸாதல லோகம் சென்றனர். அங்கே தைத்யர்கள் நாகங்கள் இவற்றுக்கு இருப்பிடமாயும், வருணனது ஆளுகைக்கு உட்பட்டதுமான 'போகவதி' என்கிற நகரத்தை அடைந்தான். அந்த நகரத்தை வாஸுகி என்கிற ஸர்ப்பராஜன் ஆண்டுவந்தான். ராவணன் அவனைத் தன் வசமாக்கிக்கொண்டான். பிறகு அங்கிருந்து ‘மணிமயீ’ என்கிற நகரத்தை அடைந்தான். அங்கே நிவாத கவசர்கள் என்கிற அரக்கர்கள் வஸித்து வந்தனர். அவர்கள் கடுந் தவம் புரிந்து பிறரால் ஜயிக்க முடியாதபடி வரம் பெற்றவர்களாக விளங்கி வந்தனர். அவர்களிடம் சென்ற ராவணன் அவர்களை யுத்தத்திற்கு அழைத்தான். அவர்களும் மஹாபலசாலிகளானபடியால் பலவித ஆயுதங்களுடன் கூடியவர்களாய் ராவண ஸைன்யத்துடன் யுத்தம் செய்தனர். இவ்விரு ஸைன்யங்களுக்கும் ஒரு வருஷகாலம் யுத்தம் நடைபெற்றது. இருதரப்பினரும் ஐயத்தையோ தோல்வியையோ அடையவில்லை.
        இப்படியான நிலையில் பிரம்மதேவன் அங்கே தோன்றி நிவாத கவசர்களிடம் "நீங்கள் இப்படிச் சமர் புரிவது நன்றன்று. ராவணனை வெல்வது என்பது அரிதானது. நீங்கள் இருவரும் ஒரே குலத்தவர்கள். நீங்கள் அழிவதை நான் விரும்பவில்லை. எனவே ராவணனுடன் நீங்கள் நட்புக் கொள்ளுங்கள்'' என்று உரைத்தார். அதன்படியே ராவணனும் அவர்களுடன் அக்னி ஸாக்ஷியாக நட்புச் செய்துகொண்டான். அவர்களும் ராவணனை ப்ரீதீயுடன் உபசரித்தனர். ஒரு வருட காலம் ராவணன், அவர்களுடன் அங்கே தங்கினான். தனது சொந்த நகரத்தைக் காட்டிலும் அங்கு நடைபெற்ற உபசரிப்பினால் மிகவும் மகிழ்ந்தான். அங்குள்ளபோது நூற்றுக்கும் மேலான மாயாஜால ப்ரயோகங்களைக் கற்றறிந்தான்.
          பிறகு அங்கிருந்து வருண பட்டணத்தைத் தேடிப் புறப்பட்டான். ‘அச்மபுரீ” என்கிற நகரத்தை அடைந்தான். அதைக் காலகேயர்கள் ஆண்டு வந்தனர். அவர்களை யுத்தத்தில் வென்றான். அவர்களில் ஒருவனாயும், தனது உடன்பிறந்த சூர்ப்பணகையின் கணவனும், மஹா பலசாலியும், கர்வியும், தனது நாக்கின் வலிமையினாலேயே சத்ருக்களை அழிப்பவனுமான வித்யுஜ்ஜிஹ்வனையும் விட்டு வைக்கவில்லை. அத்துடன் நிற்காமல் நானூறு அரக்கர்களையும் வென்றான்.
         பிறகு கைலை மலை போல் பிரகாசமுள்ளதும் உயர்ந்ததுமான வருண பட்டணத்தை அடைந்தான். அங்கு ஸதாகாலமும் பாலைப் பொழிந்துகொண்டும், அதனாலேயே பால்ஸமுத்திரம் எனப் பெயர் பெற்றதோ என்னலாம்படி விளக்க ஹேதுபூதமாக உள்ளதுமான 'ஸுரபி' என்கிற (காமதேனுவை) பசுவையும் கண்டான். குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரன் உதிக்கும் ஸ்தானத்தையும் கண்டான். ஸமுத்திர அலைகளிலுண்டாகும் நுரைகளை உண்டு தவம் புரியும் ரிஷிகளையும் கண்டான். அம்ருதம் உண்டான ப்ரதேசத்தையும் பித்ருக்களுக்குத் திருப்தி தரும் 'ஸ்வதை’ உண்டான பிரதேசத்தையும் கண்டான். அங்கே பிரகாசித்து நின்ற ஸுரபியை வலம் வந்து வணங்கினான்.
         பிறகு அனேக படர்களால் ரக்ஷிக்கப்பட்டதான வருணனுடைய அரண்மனையை ஆடைந்து அதன் பாதுகாவலர்களை வென்று மீதமுள்ளவர்களிடம் “உள்ளே சென்று, உங்கள் அரசனிடம் ராவணன் யுத்தம் செய்ய வந்துள்ளான்; யுத்தத்திற்கு வா, அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள் என்று கூறி அழைப்பதாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
         இப்படி இங்கே கோலாஹலம் உண்டாயிருக்கும்போதே வருணனுடைய புத்திரர்களும் பெளத்திரர்களும் ஸைன்யத்துடன் கூடியவர்களாய். இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் தன்மையையுடைய தேரில் அமர்ந்தவர்களாய்க்கொண்டு, ராவணனை எதிர்த்தனர். க்ஷணகாலத்திலேயே லருணனுடைய ஸைன்யம் ராவணபலத்தால் அழிக்கப்பட்டுவிட்டது.

     ஆகாசத்தில் புஷ்பக விமானத்தின்மீதமர்ந்து யுத்தம் செய்யும் ராவணனைக் கண்ட வருணபுத்திரர்கள் தாங்களும் தேரிலமர்ந்து ஆகாசத்தில் சென்று ராவணனுடன் போரிட்டனர். அநேக விதமான ஆயுதங்களால் ராவணனை அடித்துத் துன்புறுத்தினர்.
      இப்படி இவர்கள், ராவணனை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்ட, ராவணனின் மந்திரிகளில் ஒருவனான, மஹோதரன் என்பவன் மிகவும் கோபமடைந்தவனாய் மிகப் பெரிய கதையைக் கையில் ஏந்தியவனாய் ஆகாயத்தில் கிளம்பி இவர்களின் தேர்க்குதிரைகளையும் ஸாரதிகளையும் அடித்துக் கொன்றான். தேரையும் குதிரைகளையும் இழந்து நிற்கும் இவர்களைப் பார்த்து ஸிம்ஹநாதம் செய்தான். தேரையிழந்த அவர்களும் சிறிதும் கவலை கொள்ளாமல் ஆகாயத்தில் நின்று கொண்டே இருவர்மீதும் பாணப் பிரயோகம் செய்து துன்புறுத்தினர். இவர்களுடைய தீரச் செயல்களைக் கண்ட ராவணன் மிக மிகக் கோபம் கொண்டவனாய் அநேக விதமான பாணங்களால் இவர்களை மர்ம ஸ்தானங்களில் அடித்தான். மேல்மேலும் பலபல விதங்களான  ஆயுதங்களினால் அடித்துத் துன்புறுத்திப் பூமியிலும் விழச் செய்தான். கீழே விழுந்தவர்களின் மீதும் பல ஆயுதங்களைப் பிரயோகித்துத் துன்பமடையச் செய்தான். சேற்றில் சிக்கிய யானைகள் போலாயினர் இவர்கள். இப்படித் துன்புறும் இவர்களை இவனது ஸைனிகர்கள் அரண்மணைக்கு எடுத்துச் சென்றனர்.
        இது கண்ட ராவணன் ஸிம்ஹநாதம் செய்தவனாய் வருண ஸைனிகர்களைப் பார்த்து, உள்ளே சென்று வருணனிடம் எனது வருகையைக் கூறுங்கள்" என்றான்.
     அதற்கு வருணனின் மந்திரிகளில் ஒருவனான ப்ரஹாஸன் என்பவன் அங்கே தோன்றி, வருணன் தேவகார்யார்த்தமாக ப்ரஹ்ம லோகம் சென்றதாகக் கூறி, மேலும் "அவனது குமாரர்களைத்தான் நீ ஜயித்துவிட்டாயே, இனி என்ன?" எனக் கூறினான்.

          இதைக் கேட்டுக் களிப்புற்ற ராவணன் தன் புகழைப் பாடிக் கொண்டே தான் வந்த வழியாகவே லங்கா பட்டணத்தை அடைந்தான்.


இருபத்து நான்காவது ஸர்க்கம்

[ராவணன் மஹாபலியிடம் செல்வது, அங்கு அவமானமடைவது முதலியன.]


       வருண  பவனத்தினின்றும் வெற்றிக் களிப்புடன்  திரும்பிய ராவணன் தனது பரிவாரங்களுடன் யுத்தமதம் கொண்டவனாக அச்ம நகரத்தையே சுற்றி வந்தான். அப்போது அங்கே ஸ்வர்ண மயமானதும், வஜ்ர வைடூர்ய கோமேதக மரதகக் கற்களாலான படிக்கட்டுக்களையும் ஸ்தம்பங்களையும், முத்துக்களாலான தோரணங்களை உடையதும். மஹேந்திர பவனத்திற்கொப்பானதும் மிக்க ஒளி பொருந்தியதுமான அழகியதொரு மாளிகையைக் கண்டான். உடனே அருகிலுள்ள ப்ரஹஸ்தனை அழைத்து, "ப்ரஹஸ்த! நீ சீக்கிரமாகச் சென்று மேருபர்வதமும் மந்திரமலையும் போன்று விளங்கும் இந்த மாளிகை யாருடையது என்று சீக்கிரமாக அறிந்து வா' எனக் கூறினான்.
      உடனே ப்ரஹஸ்தன் அந்த மாளிகையை அடைந்து முதற்கட்டில் பிரவேசித்தான். அங்கு ஒருவரும் இன்றி சூன்யமாய் இருந்தது இப்படியாக ஒருவருமற்றிருந்த ஆறு கட்டுகளையும் தாண்டி ஏழாவது கட்டில் செல்ல நினைக்கையில் அங்கே மிகப் பெரிய அக்னிஜ்வாலை உண்டாயிற்று. அதன் மத்தியில். யமனுக்கு நிகரானவனும், ஸ்வர்ணமாலையைத் தரித்தவனும், சூரியனைப் போலக் காண முடியாத ஒளியையுடையவனுமான ஒருவன் நின்று அட்டஹாஸமாகச் சிரித்தான். அவனைக் கண்டு பயந்த ப்ரஹஸ்தன் உடனே திரும்பி வந்து தான் கண்டனத ராவணனிடம் கூறினாள்.
        இதைக் கேட்டதும் ராவணன் தனது விமானத்தினின்றும் கீழே இறங்கி, மாளிகையினுள் பிரவேசித்தான். அப்போது அங்கே நீல மேனி மணிவண்ணனும், கிரீடதாரியும் மிகப் பெரிய உருவமுள்ளவனுமான புருஷன் ஒருவன் ஜ்வாலாமத்தியில் நின்றுகொண்டு வழிமறித்தான். அந்தப் புருஷனது உருவம், மிக்க பயத்தை உண்டுபண்ணுவதாகவும் சிவந்த கண்களையுடையதும், வெளுத்த முகத்தையும் சிவந்த உதடுகளையுடையதும், மேல்நோக்கிய முடியையுடையதும், மூச்சு விடும் போது பயங்கரமான மூக்கையுடையதும், சங்கம் போன்ற கழுத்தையுடையதும், பெரிய தாடைகளை (கன்னங்களை) உடையதும், (உடலில்) ஓர் எலும்புகூடத் தெரியாதபடி சதைப்பற்றுடையதாகவும் காணப்பட்டது அந்தப் புருஷன் தனது கையில் திருடமான இரும்புத் தடியைக் ஏந்தியவனாய் வழி மறித்து நின்றான்.

       அவனைக் கண்ட ராவணன் மயிர்க் கூச்சமுண்டானவனாகவும் மனநடுக்கமுற்றவனாகவும் அசைவற்று நின்றுவிட்டான். இப்படி நின்ற ராவணனைக் கண்ட அந்தப் புருஷன் “வீரனே ஏன் இப்படி நிற்கிறாய்? என்ன ஆலோசனை செய்கிறாய்? உனக்கு யுத்தமாகிற அதிதி பூஜையைச் செய்ய நான் ஸித்தமாக இருக்கிறேன். உள்ளே (இவ்வரண்மனையின் உள்ளே) பலிச்சக்ரவர்த்தியுடன் யுத்தம் செய்ய விரும்புகிறாயா? அல்லது என்னுடன் மோத விரும்புகிறாயா?" என்று கேட்டான், இதைக் கேட்ட ராவணன் கொஞ்சம் தைரியத்தை யடைந்து, "உள்ளிருப்பவனோடேயே (க்ருஹாதிபதியுடனேயே) யுத்தம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
         அதற்கு அந்தப் புருஷன் 'உள்ளே இருப்பவரைப்பற்றிக் கூறுகிறேன். பிறகு உன் இஷ்டப்படிச் செய்" என்று கூற ஆரம்பித்தான். "உள்ளே உள்ளவர் தானவச்ரேஷ்டர்; மிக்க கொடையாளி; உண்மையான பராக்ரமத்தையுடையவர், வீரபுருஷர், குணங்களால் நிரம்பப் பெற்றவர், பாசக்கயிற்றைக் கைக்கொண்ட யமனுக்கு நிகரானவர்; இளஞ்சூரியன் போன்ற ஒளியுள்ளவர்; யுத்தத்தில் பின்னடையாதவர்; மிக்க கோபம் கொண்டவர்; பிறரால் ஜயிக்க முடியாதவர்; நற்குணங்களுக்கு இருப்பிடம்; நன்மையையே பேசுபவர்; குரு, பிராம்மணர் இவர்களிடத்தில் அன்பு பூண்டவர்; பலிஷ்டர், உண்மையையே பேசுபவர்; அழகிய உருவம் கொண்டவர், வேதமோதுபவர், நல்லவர்களுக்குத் தென்றல் போன்றவர், கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அக்னி ஜ்வாலை போல் காணப்படுபவர், எதிரிகளுக்குக் கொளுத்தும் நெருப்புப் போல் தகித்திடுபவர்; தேவர்கள், பூத கணங்கள் நாகங்கள், மகரிஷிகள் ஆகியவர்களிடமும் பயமற்றவர். அப்படிப்பட்ட மஹாபலியிடமா நீ யுத்தம் செய்ய விரும்புகிறாய்? நல்லது உள்ளே செல், அவருடன் யுத்தம் செய்'' என்று.
          அந்தப் புருஷனுடைய வார்த்தையைக் கேட்டு ராவணன் உள்ளே சென்றான். அங்கு உயர்ந்த ஆஸனத்தில் அமர்ந்திருந்த மஹாபலி, தசக்ரீவன் உள்ளே வருவதைக் கண்டு பெரிதாகச் சிரித்தான். பிறகு மத்யாஹ்ன ஸமயத்தில் காண முடியாத ஒளியுள்ள சூரியனைப் போல விளங்கும் மஹாபலி தனது ரூபத்தைப் பெரிதாகச் செய்து கொண்டு, ராவணனைக் கையால் பிடித்துத் தன் மடிமீது அமரச் செய்தான். அவனைப் பார்த்து, “தசக்ரீவனே! தோள்வலிமை மிக்கவனே! இங்கு நீ வந்த காரணம் யாது? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லவும்” என்று கேட்டான்,
      அதற்கு ராவணன், ''மஹாபாக்யசாலியே! நீர் முன்பு விஷ்ணுவினால் அடக்கப்பட்டு இங்குள்ளதாக அறிந்துள்ளேன். உம்மை விடுவிக்க என்னால் முடியும். இதில் 'உமக்கு ஸம்சயம் வேண்டாம்” என்றான்.
       இப்படிக் கூறிய ராவணனைப் பார்த்து, பலிச்சக்ரவர்த்தி பெரிதாகச் சிரிப்பொலி செய்து கூறலானார்  ----
             ராவண! நீ யாரை மிகச் சாமான்யராக நினைக்கிறாயோ அவரைப் பற்றிச் சொல்லுகிறேன், கேட்கவும். பச்சை மாமலை போன்ற மேனியனான ஒரு புருஷன் இம்மாளிகையின் வாயிலில் காவல் புரிகிறான் அல்லவா? மிக்க பலசாலியான இ்வன், பல அசுரர்களையும், பலம் மிக்க மற்ற தானவர்களையும் எளிதாகக் கொன்றவன், இவனாலேயே நானும் வஞ்சிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டேன். ஹே தசானன! இவனை வஞ்சித்துக் கொல்லும் ஸாமர்த்யம் யாருக்குமே கிடையாது. இவனை நீ யாரென்று நினைக்கிறாய்? ஆக்கல்-காத்தல்- அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும் மூலகர்த்தாவான ஜகந்நாதனே இவன்.
           இவனைப் போன்ற மஹாபுருஷன் உலகத்தில் வேறு யாருமில்லை. இவன் பலவாறாக உருக் கொண்டு பலரை வீழ்த்தியுள்ளான். எனவே இவன் ஸாமான்யனல்லன் என அறிந்துகொள்.” இப்படிக் கூறிய மஹாபலி ராவணனைப் பார்த்து, “நீ பராக்ரமசாலியாயின் அதோ ஒரு சக்கரம் அக்னி போல் எரிந்துகொண்டு ஆச்சர்யமாக விளங்குகிறதே! அதன் அருகில் சென்று அதை எடுத்து கொண்டு எனது அருகில் வா. அதன் பிறகு நீ என்னை விடுவிக்கும் மார்க்கத்தைக் கூறுகிறேன்' என்றும் சொன்னான்.
       இதைக் கேட்டதும் ராவணன் பரிஹாஸமாகச் சிரித்துவிட்டு அந்தச் சக்கரத்தின் அருகில் சென்றான். விளையாட்டாக அதை எடுக்க முயன்றான். முடியாமற் போகவே வெட்கமடைந்தவனாகி, தனது வலிமையெல்லாம் கொண்டு அதை எடுக்க முயன்றபோது அவனது உடலெல்லாம் இரத்த வெள்ளம் பெருக, வேரற்ற மரம் போல் பூமியில் விழுந்தான். இதைக் கண்ட அவனது மந்திரிகள் பெரும் கூச்சலிட்டனர் ஒரு முஹூர்த்த காலம் கழித்து ராவணன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். வெட்கத்தினால் தலைகுனிந்து நின்ற அவனைப் பார்த்து, பலி கூறினான்- 'ராக்ஷஸச்ரேஷ்ட! நீ எடுக்க முயன்ற இந்த மணிகுண்டலமானது எனது பாட்டனாரான ஹிரண்யகசிபுவினுடைய காதின் குண்டலம். அவர் இறந்தபோது இங்கு வந்து வீழ்ந்தது. மற்றொன்று இந்தப் பர்வதத்தின் தாழ்வரையில் விழுந்துள்ளது. அவர் யுத்தம் செய்தபொழுது கிரீடமானது தலையிலிருந்து சிதறிச் சேதி தேசத்தருகே சென்று வீழ்ந்தது. தசானன்! அந்த ஹிரண்யகசிபு தபஸ் செய்து எவரும் பெறுதற்கரியனவான வரங்களைப் பெற்றவர். அவருக்கு மரணபயமே கிடையாது. வியாதி அவரைப் பீடிக்காது. மருத்யு நெருங்கமாட்டான். பகலிலும் இரவிலும் மரணம் ஸம்பவிக்காது, உலர்ந்த அல்லது ஈரமுள்ள ஆயுதங்களாலும் ம்ருத்யு உண்டாகக்கூடாது, இவை முதலானவை அவர் பெற்ற வரங்கள். அப்படிப்பட்ட மஹாவீரரான ஹிரண்யகசிபு தமது மகனான பிரஹ்லாதனிடம் மிக்க கடுமையான வாதம் செய்து அவனுக்குத் தீங்குகள் பல செய்தார். விஷ்ணு பக்தனான அவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டு பொறுக்காதவரான மஹாவிஷ்ணு, நரசிங்க உருக்கொண்டு தனது கூரிய நகங்களால் அவரைக் கொன்றார். அந்தப் பரமபுருஷனான வாஸுதேவனே நீல மேனியுடையவனாய்  எனது மாளிகையின் வாசலில் காவலனாக நிற்கிறான். அவருடைய பெருமையும் புகழும் யாராலும் வர்ணிக்க முடியாதவை, ஜகத் காரணபூதனும் ஆதியந்தமில்லாதவனுமான அந்தப் புருஷனுடைய மஹிமையை மேலும் அறிந்திடுவாயாக. ஆயிரம் தேவேந்திரர்களும், பதினாயிரம் தேவர்களும், நூற்றுக்கணக்கான ரிஷிகளும் இவருடைய வசத்தில் உள்ளனர். அதிகமாகச் சொல்லி என்ன? இவ்வுலக மனைத்துமே இவனுக்கு உட்பட்டது. அப்படிப்பட்ட மஹாபுருஷனே எனது அரண்மனை வாசலிலுள்ளான்” என்று.
         மஹாபலியின் வார்த்தையைக் கேட்ட ராவணன். "யமன், வருணன், வித்யுஜ்ஜிஹ்வன், தம்ஷ்ட்ராகராளன், ஸர்ப்பம். தேள் இவைகளையே ரோமங்(மயிர்)களாக உடைய மஹரஜ்வாலன், ரக்தாக்ஷன் முதலான பலருடன் போர்புரிந்து அவர்களை ஜயித்துள்ளேன். எனக்குக் கிஞ்சித்தேனும் பயமில்லை. நீ சொல்லுமவனை நான் இதுவரை அறிந்ததில்லை. அவனைப்பற்றிக் கூற வேண்டும்" என்று கேட்க, மறுபடி மஹாபலி கூறுகிறார் "ராவண! இவர்தாம் மூவுலகங்களையும் தரிப்பவர். ஸமர்த்தர், இவரையே ஹரி, நாரயணன், அனந்தன் என்றும் சொல்லுவார்கள். மோக்ஷார்த்திகளான ரிஷிகள் மற்றும் பலபடியாக ஸ்தோத்ரம் செய்வார்கள். இவரை உள்ளபடி அறிந்தவர்கள் பாபங்களிலிருந்து விடுபட்டவர்களாவார்கள். இவரை நினைத்துத் துதித்துப் பூஜித்துப் பலரும் தங்கள் தங்கள் இஷ்டங்களை அடைந்துள்ளார்கள்" என்று.
         இதைக் கேட்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கையில் ஆயுதங்களை ஸித்தமாகக் கொண்டு வெளியே வந்தான்.
       இப்படி வந்த ராவணனைக் கண்டு, வாசலில் நின்ற புருஷன், பிரம்மதேவன் இவனுக்குக் கொடுத்த வரத்தை மனத்தில் கொண்டு இப்போது இவனைக் கொல்வது தகாது என்று நினைத்து மறைந்து போனான். புருஷன் அங்கில்லாததைக் கண்ட ராவணன் மனமகிழ்ச்சி யடைந்தவனாய் ஐயமடைந்தேன் என்று கூவிக் கொண்டு, சென்ற வழியே திரும்பினான்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 13


21வது ஸர்க்கம்


[ராவணன் யமலோகம் செல்வது, அங்கு ராவணன் யம ஸைன் யத்துடன் யுத்தம் செய்வது]


       இப்படி எண்ணிய நாரதர் வேகமாக யமனின் பட்டிணத்தை அடைந்தார். அங்கு அக்னிக்கொப்பானவனும், எந்த எந்த ப்ராணிகள் எந்தெந்த கர்மாக்களைச் செய்தனரோ, அவரவர்க்கு, அததற்கனுகுணமான தண்டனைகளை விதித்துக் கொண்டிருப்பவனுமான தர்மராஜனைக் கண்டார். நாரதரின் வருகையை அறிந்து அவனும் முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து ஆஸனத்தில் அமரச் செய்து, “மஹர்ஷே! தாங்கள் க்ஷேமமாக உள்ளீர்களா? இங்கு தாங்கள் எழுந்தருளியதன் காரணமெதுவோ? தயை கூர்ந்து அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
       அதற்கு நாரதர்- “பித்ருராஜனான யமதர்மனே! நான் வந்த காரணத்தைக் கூறுகிறேன். செவிமடுத்து, அதற்கானதைச் செய்யவும். தசக்ரீவன் என்கிற அசுரன் உன்னை ஜயித்து அவனுக்கு அடங்கியவனாக உன்னைச் செய்து கொள்ள விரும்பி வருகிறான். இதை முன் கூட் டியே உனக்கு தெரிவிக்க ஓடோடி வந்தேன்” என்று கூறினார்.
      இப்படி இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெகு தூரத்தில் ராவணனது வருகை தெரிந்தது. அவனது விமானமான புஷ்பகத்தின் ஒளியால் அங்கிருந்த இருள் அகன்றது. அந்த விமானத்தின் மீதமர்ந்தவாறே ராவணன் - யமதர்மராஜனையும் அவனது பரிவாரங்களையும் ஸைன்யங்களையும் கண்டான். மற்றும் அங்கு ஸுக துக்கங்களையும் கண்டான் யம படர்களால் கடுமையாக தண்டிக்கப் படுபவர்களையும். அந்த தண்டனைகளை ஸஹிக்க முடியாமல் ஓலமிடுபவர்களையும், பாம்பு-முதலை - செந்நாய்கள் இவைகளால் கடித்துக் குதறப்படுகிறவர்களையும், வைதரிணீ நதியைக் கடந்து செல்லக் கடப்பவர்களையும், மிகவும் காய்ந்து சூடேறிய மணல்களின்மீது படுக்க வைத்துப் புரள்பவர்களையும் அபத்ரவனம் என்கிற தீட்டப்பட்ட கத்திகளையே இலைகளாக உடைய  மரங்கள் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் பெருகும் உடல்களை  உடையவர்களையும். ரெளரவம் எனப்படும் கொடிய நரகத்தில் ஓலமிடுபவர்களையும், உப்பங்கழிகளில் தள்ளப்பட்டு "குடிக்கத் தண்ணீர் - தண்ணீர் தண்ணீர்" என்று பரிதாபக் குரலிடுபவர்களையும். பசித்தவர்களையும் மெலிந்தவர்களையும், அலை குலைந்த கேசங்களை . உடையவர்களையும், பயந்து அங்குமிங்குமாக ஓடுபவர்களையும். இப்படி அநேகவிதமாக கஷ்டப்படுபவர்களையும் கண்டான். மற்றோரிடத்தில் உயர்ந்த மாளிகைகளில் பாட்டையும் பரதத்தையும் கேட்டும் கண்டும் ஆனந்தமடைந்தவர்களையும கண்டான். கோதானம் செய்தவர்கள் பாலைப் பருகி மகிழ்வதையும் அந்நதானம் செய்தவர்கள் உயர்ந்த அந்நத்தை புஜித்து மகிழ்வதையும், க்ருஹதானம் செய்தவர்கள் அழகிய க்ருஹத்தில் உள்ளதையும், இப்படியாக அவரவர் செய்த நல்ல காரியங்களுக்கொப்ப நல்ல பலன்களை அனுபவிப்பதையும் கண்டான்.
           இப்படியாகக் கண்ட ராவணன் கஷ்டப்படுபவர்களை அவர்கள வாட்டியெடுக்கும் யம படர்களிடமிருந்து தனது பலத்தினாலே விடுவித்தான். அப்போது ஒரு முஹூர்த்த காலம் அங்கு யமயாதனையே இல்லாமல் போயிற்று.
         இதைக் கண்டு வெகுண்டனர் யம படர்கள். அவர்கள் ஆயிரக் கணக்காக ஒன்று சேர்ந்து, அநேக ஆயுதங்களால் ராவணனை அடித்தனர். புஷ்பக விமானத்தையும் சேதப் படுத்தினர். அவர்களால் அநேக விதமாக சேதப்படுத்தப்பட்டாலும் அவ்விமானம் மறுபடி மறுபடி பழையது போலவே பொலிந்து விளங்கியது.
        யம படர்கள் சூழ்ந்து கொண்டு ராவணனை எதிர்த்தனர். பாறைகளாலும், மரங்களாலும் மற்றும் பற்பல அஸ்த்ரங்களாலும் ராவணனைத் துன்புறுத்தினர். அவனது கவசத்தைப் பிளந்தனர். சற்றே களைப்புற்று, உணர்ச்சி பெற்ற ராவணன். புஷ்பகத்திலிருந்து கீழே குதித்தான். மிகப் பெரியதான வில்லைக் கையிலெடுத்துக் கொண்டு எதிர்த்து நிற்கும் படர்களைப் பார்த்து-"நில்லுங்கள், இந்த அடியைப் பெற்றுக் கொள்ளுங்கள்'” என்று கூறி "பாசுபதாஸ்த்ரத்தை" அபிமந்த்ரணம் செய்து பிரயோகித்தான். அதானது த்ரிபுராஸுர ஸம்ஹாரத்தின்போது ருத்ரனால் விடப்பட்ட அஸ்த்ரம் போன்று விளங்கியதாம்.. அந்த க்ரூரமான அஸ்த்ரமானது வனங்களையும், செடி கொடிகளையும் தஹித்தது. அதனின்றும் அநேகமாயிரம் கொடியவர்கள் தோன்றி யமனது ஸைன்யங்களை அழித்தனர். அதைக் கண்டு தசானனனும் அவனது மந்திரி முதலானோரும் களிப்படைந்து ஸிம்மநாதம் செய்தனர். அதைக் கேட்டு பூமியே அதிர்ந்தது.

22 ஆவது ஸர்க்கம்


[யமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம்,

ராவணனைக் கொல்வதற் காக யமன் காலதண்டத்தை ப்ரயோகம் செய்ய முற்படுதல்,

ப்ரம்ஹ தேவன் அதைத் தடுத்தல், ராவணனது வெற்றி முழக்கம்.]


        ராவணனது ஸிம்ஹநாதத்தைச் செவியுற்றான் யமன். தனது சைன்யம் அழிவுற்றது- ராவணன் வெற்றி பெற்றானெனவறிந்து மிகுந்த கோபம் அடைந்தான். உடனே ஸாரதியை விளித்து யுத்தத்திற்காக தனது ரதத்தை ஸந்நத்தம் செய்ய உத்திரவிட்டாள். ரதம் ஸஜ்ஜமானதும் ஸமஸ்த ஆயுதங்களுடன் அதன் மீது அமர்ந்து கொண்டான். அவனது முன்பாக பிராஸாதம், தோமரம் என்கிற ஆயுதங்களையேந்திய ம்ருத்யு நின்றான். மூவுலகங்களையும் அழித்திடும் சக்திமானன்றோ இவன் ! யமனது பார்ச்வ பாகத்தில் உருவமுள்ள காலதாண்டமானது விளங்கியது. அதன் பக்கலில் யமபாசங்கள் சூழ்ந்து நின்றன. இவையெல்லாம் நெருப்பைக் கக்கிக் கொண்டவைகளாய் விளங்கின. அதன் ஸமீபத்தில் முள்மயமான உலக்கை (ஆயுதம்) விளங்கியது.
    இப்படி ஆயுததரனாகவும் மிகுந்த கோபமுடையவனுமான யம தர்மராஜனைக் கண்ட தேவர்களனைவரும் பயமடைந்தனர். ஸாரதி ரதத்தை ராவணனின் முன் செலுத்துகின்றான்.
    தனது பரிவாரத்துடன் கோபிஷ்டனாக வந்து நின்ற யமதர்மனைக் கண்ட ராவணனது மந்த்ரிகள் மிகவும் பயம் கொண்டவர்களாய் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ஆனால் ராவணன் மட்டும் கொஞ்சமும் பயமடையவில்லை - மனக்கலக்கமுமடையவில்லை. இருவருமாகக் கடும் போர் புரிந்தனர். ஏழு தினங்கள் இவர்களுடைய யுத்தம் நடைபெற்றது. இந்த மஹாயுத்தத்தைக் காண பிரம்ஹதேவனுடன் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.
      ராவணன் மிகவும் கோபமடைந்தவனாய், மிருத்யுவை நான்கு பாணங்களாலும், ஸாரதியை ஏழு பாணங்களாலும் அடித்துத் துன்புறுத்தினான் யமனையும் அநேகமாயிரம் பாணங்களால் மர்மஸ்தானங்களில் அடித்துப் பீடித்தான்.

      இப்படி அடிபட்ட யமனில் வாயிலிருந்து புகையுடன் கூடிய கோபாக்னியானது வெளிக்கிளம்பியது. அதைக்கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.  "ம்ருத்யுவும் காலனும் யமனது கோபத்தைக் ண்டு குதூஹலித்தனர். அப்போது மிருத்யு மிகுந்த  கோபத்துடன் யமனைப் பார்த்து தலைவ! என்னை ஏவி விடுங்கள். மஹா பாபியான இந்த அரக்கனை நான் ஸம்ஹாரம் செய்கிறேன். என்னால் முடியுமா? என்று சங்கை வேண்டாம் – ஹிரண்யகசிபு - ஸம்பரன் -- நமுசி -- நிஸந்தி - தூமகேது-(மஹா) பலி – விரோசனன் - - சம்புவரக்கன் -- வ்ருத்ரன்-பாணாஸுரன் - அநேக ராஜரிஷிகள்-மதம் கொண்ட கந்தர்வர்கள் - இன்னும் எத்தனையோ பலசாலிகளை நான் என் வசமாக்கி யுள்ளேன். இறக்கச் செய்வது எனது தொழில் சங்கைப்படாமல் என்னை பிரயோகியுங்கள்.  இவனது உயிரை நான் அபஹரிக்கிறேன்'' என்று உறுதி கூறினான்.
     இப்படி ம்ருத்யு கூறக் கேட்ட யமன் – “ம்ருத்யுவே! சற்று நீ இருப்பாயாக, இந்த துஷ்டனை யுத்தத்தில் நானே வதம் செய்கிறேன்”. என்று கூறி மிகுந்த கோபத்துடன் - பக்கத்தில் இருந்த கால தண்டத்தை பிரயோகம் செய்யக் கையில் எடுத்தான். அந்த தண்டத்தைச் சூழ்ந்து கால பாசங்கள் பிரகாசித்தன. அதன் பக்கலில் வஜ்ராயுதத்திற் கொப்பான முத்கரம் என்கிற ஆயுதம் பிரகாசித்தது.  கண்டமாத்ரத்தாலேயே உயிர்களைப்  பறித்திடும்  சக்தி பெற்றது அவ்வாயுதம்.
        இப்படிப்பட்ட காலதண்டத்தை, யமதர்மன் ராவணன் மீது பிரயோகிக்க நினைத்தமாத்ரத்தில் ஸகல பிராணிகளும் - தேவர்களும் பயந்தனர். என்ன நேரிடுமோ என்று அஞ்சி ஓடினர்.
         அது ஸமயம் ப்ரம்ஹதேவன் யமனிடம் வந்தார்.
        அவனைப் பார்த்து-"அளவிடற்கரிய பராக்ரமமுடையவனே! கால தண்டத்தை பிரயோகித்து நீ ராவணனைக் கொல்ல நினைக்காதே இவனை நீ கொன்றால் நான் இவனுக்குக் கொடுத்த வரம் பொய்த்து விடும். அதாவது "தேவர்களால் நீ கொல்லத்தகாதவன் என்பது எனது (நான் கொடுத்த) வரம். அந்த எனது வார்த்தையை நீ பொய்யாக்குவது உனக்குத் தகாது இந்த கால தண்டமும் என்னால் உண்டாக்கப்பட்டதேயாகும். இதை யார் மீது பிரயோகித்தாலும் அவனைக் கொன்றே தீரும், வ்யர்த்தமாகாது. இதன் பிரயோகத்தால் ராவணன் அழிந்தாலும் எனது வார்த்தை பொய்த்துப் போகும். அப்படி ராவணன் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தால், இந்தக் கால தண்டத்திற்கு நான் கொடுத்த சக்தி பொய்த்துப் போம். இரண்டு விதத்திலும் எனக்கு அபகீர்த்தியே உண்டாகும். எனவே நீ இம் முயற்சியைக் கைவிடவும்" என்றார்.  

        இப்படிக் கூறிய பிரம்மதேவனை வணங்கிய யமன், "ஸ்வாமி! தேவரீரே எங்கள் தலைவர். உமதிஷ்டப்படியே ஆகட்டும். நான் இனி என் செய்வது. தண்டப்பிரயோகம் செய்வதிலிருந்து  நிருத்தனாகிறேன். இனி இவன் முன் நில்லாமல் மறைவதைத் தவிர நான் வேறொன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி ரதத்துடன் அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டான்.
       யமன் மறைந்ததும் ராவணன், தான் ஜயம் அடைந்ததாகக் கோஷித்துக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு யம லோகத்திலிருந்து திரும்பச் சென்றான்.
         யமதர்மராஜனும் பிரம்மா முதலிய தேவர்களுடன் தன் இருப் பிடம் அடைந்தான். நாரதரும் கண்டு களித்து ஸ்வர்க்கலோகம் சென்றார்.