திங்கள், 25 ஜனவரி, 2010

பெண்களிடம் பணம் பெருகுவது ஏன்?

எதையும் வித்யாசமாகவே யோசிக்கும் நண்பரைப் பற்றி முன்பு ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன். இன்று நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருந்தார். அவர் வந்த நேரத்தில் எங்கிருந்தோ T.M.S. "சேர்த்து வைத்த பணத்தை அம்மா கையிலே கொடுத்துப் போடு செல்லக்கண்ணு, அவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக் கண்ணு" என்று பாடுவது காற்றில் மிதந்து வந்தது. 
  நண்பர் கேட்டார். "அது என்ன பெண்களால் மட்டும் ஆறை நூறாக்க முடிகிறது? ஏன் ஆண்களால் முடியாதா? இந்தப் பாடல் சரிதானா?"
  நம் அனுபவம் கைகொடுத்தது. எதைச் சொன்னாலும் இவர்தான் ஏற்க மாட்டாரே! ஏன் வம்பு? " உங்கள் அளவு யோசிக்கும் திறன்தான் அடியேனுக்குக் கிடையாதே! நீங்களே சொல்லுங்களேன்" மெள்ள ஜகா வாங்கினேன்.
  "என்றுதான் நீ பதில் சொல்லியிருக்கிறாய்" என்று என்னைப் பார்த்து  " சரி, நம் தமிழ்நாட்டுப் பெண்களை வைத்தே பேசுவோம். பெரும்பாலான பெண்கள் வெளியே செல்லும்போது தங்கள் பர்ஸை எங்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள்? "


சொன்னேன். (படம் பார்க்க)
ஆனால் ஆண்கள்? கேள்வியைக் கேட்டு அவரே தொடர்ந்தார். "அனேகமாக எல்லாரும் வேட்டியை மறந்தாயிற்று. Pant அணிபவர்கள் பிருஷ்ட பாகத்தில் ஒரு பாக்கெட் வைத்துக் கொண்டு அங்கேதான் பர்ஸை வைத்துக் கொள்கிறார்கள். வைதிகர்களில் வயதானவர்கள் இடுப்பில் பணத்தைச் சுருட்டி வைக்கிறார்கள். இளவயது வைதிகர்களோ ஒரு பவுச் -- அது அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருக்கும்-- அதில் பாதுகாக்கிறார்கள். லாரி லோடுமேன் போன்றவர்களோ கேட்கவே வேண்டாம் underwearல் ஒரு பாக்கெட் அதில் வைத்துக் கொள்கிறார்கள். இப்போது தெரிகிறதா பெண்களிடம் பணம் பெருகும் ரகசியம்?"
நம் ஜாதக விசேஷம் எதையும் பலமுறை சொன்னாலே பாதிதான் புரியும்! "ஹூஹூம்!" உதட்டைப் பிதுக்கினேன். "அடப்பாவி! ஏதோ பழைய புஸ்தகங்களையெல்லாம் வலையேற்றுவதாகச் சொன்னாயே! அவற்றிலெல்லாம் நான் சொல்ல வருவதைக் கண்டிப்பாய்ப் படித்திருப்பாயே" என்றார். அடியேன் பண்ணுவது வெறும் DTP operator வேலைதான் என்று அவருக்குச் சொன்னேன்.
 " பர்ஸ் அதாவது பணம் அதாவது திரு அதாவது லக்ஷ்மீ இல்லையா" 
ஆமாம் ஆமாம் இது அடியேன்.
"நம் தத்துவங்களெல்லாம், ஆசாரியர்கள் எல்லாம், ஒவ்வொருவரின் இதயத்திலும் இறைவன் அந்தர்யாமியாய், அங்குஷ்டப்ரமாணம் இருக்கிறான் என்று சொல்லுகின்றன அல்லவா? அந்த பரந்தாமனுக்குப் ப்ரீதியானவள் லக்ஷ்மீ இல்லையா? அந்த ப்ரீதியினாலே அவளைத் தன் மார்பிலேயே தாங்கி மகிழ்கிறானில்லையா? அந்த மஹாலக்ஷ்மியை -- அதாவது பணத்தை, செல்வத்தை-- இந்தப் பெண்கள் எல்லாம் அவன் உகக்கும் வண்ணம் அவனருகில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆண்களோ? இடுப்புக்குக் கீழே எல்லாம் அசுத்தி என்பதை மறந்து அவன் மனம் நோகும்படி எங்கு லக்ஷ்மியை வைத்தால் அவன் கொதிப்பானோ, வெறுப்பானோ அங்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆகவே பெண்கள் பால் அவன் கருணை பெருகி அவர்களிடம் செல்வம் நிறைகிறது. ஆண்களிடம் பணம் அழிகிறது. சரிதானா?"  என்றார்.
சரி சரி சரியே என்று ஆமோதித்தேன். 
"நான் சந்திக்கும் ஆண்களிடம் வெளிப் பாக்கெட் பாதுகாப்பில்லைதான். சட்டைக்குள்ளே உள்பாக்கெட் வைத்துக் கொண்டு அதில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். கேட்பார்தான் எவருமில்லை" என்று வருத்தப் பட்டுக் கொண்டே விடைபெற்றார்.