வியாழன், 14 ஜூலை, 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்.

அங்கம் 1 களம் 4

(தொடர்வது தசரதன் கதறல்)

கேகய குலத்தைக் கெடுக்க வந்தவளே! சூரிய குலத்தை அழிக்க வந்தவளே! நீ கெட்டுத்தான் போ! அக்கினியிற்றான் விழு! செத்துத்தான் போ! ஆயிரந் துண்டங்களாக பூமியில் வெடித்துத்தான் விழு! மனமார நான் உன் கருத்திற்கு எப்படி உடன்படுவேன்? கெடு நினைவுடையவளும், துஷ்டையும், பிறந்த குலத்தைக் குலைப்பவளும், புகுந்த குலத்தைத் தொலைப்பவளுமான உன் வாழ்க்கையால் யாருக்கு என்ன பிரயோஜனம்? என் குமாரனைக் கானனுப்பி என்னை வானனுப்பவோடி நீ பெண்ணெனப் பிறந்தாய்? அந்தோ!

மண்ணாள் கின்றா ராகி வலத்தான் மதியால்வைத்
தெண்ணா நின்றார் யாரையு மெல்லா விகலாலும்
விண்ணோர் காறும் வென்ற வெனக்கென் மனைவாழும்
பெண்ணால் வந்த தந்தர மென்னப் பெறுவேனோ.

அறிவும் ஆற்றலுமுள்ள அரசர்கள் பலரையும் வென்று, விண்ணுலகம் வரையுஞ் சென்று போர் செய்து வெற்றி பெற்றேன். அத்தகைய நான் எனது மனைவியால் இறந்தேன் என்று பழி தூற்றப்படுவேனே! ஐயோ! ‘நான் இறந்துவிட்டால் இராமனுக்குச் சுகமுண்டு’ என்பது ஒன்றிருந்தால் வெகு சந்தோஷமாக என் உயிரையும் விட்டுவிடுவேன். அடி, பாவீ! சத்தியசந்தனாகிய இராமனுக்கு ஏன் இவ்வாறு தீங்கு செய்கிறாய்? ‘காட்டிற்குப் போ’ என்று சொல்லும்போது எனது இராமன் முகம் இராகுவாற் பற்றப்பட்ட சந்திர பிம்பம்போல் வாடி நிற்க, நான் எவ்வண்ணம் பார்த்துச் சகிப்பேன்! நான் எனது மந்திரிகளுடனும், நகரமாந்தர்களுடனும் இராமனுக்கு முடிசூட்ட நிச்சயித்து விட்டதன்பின், அது இல்லையென்று முடிந்தால் அதனால் எனக்கு ஒரு பகைவனால் நேர்ந்த தோல்வியைவிட அதிக அவமானம் நேருமே. அநேக தேசங்களினின்றும் வந்திருக்கும் அரசர்கள் இந்த விஷயத்தைக் கேட்டபின், ‘இவ்வளவு மூடன் இத்தனைகாலம் வரையில் எவ்வாறு அரசாண்டான்’ என்று நகைப்பார்களே. இராமனைக் காட்டுக்கனுப்பினால், அவனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வதாகச் சொல்லிய சொல் பொய்த்து விடுமே!

வாய்மை தவறுமே! வாய்மை வழுவாது மன்னுயிர் காத்தலன்றோ செங்கோலெனப்படும்? வாய்மை வழுவியபின் என்து செங்கோலை, அளவிறந்த புகழ் படைத்த எனது குலத்தின் கீர்த்தியை அளவிட்டழிக்கவந்த அளவுகோலென்பேனோ! இந்தக் கள்ளக் கைகேயியின் கண்ணிமையில் கொடுமையைக் குழைத்துத் தீட்டிய அஞ்சனக்கோலென்பேனோ! என் மதியை மயக்கவந்த மாத்திரைக்கோலென்பேனோ! அறுபதினாயிரம் ஆண்டு அரசாண்ட எனக்கு என் மனைவியால் ஆயுள் முடிவென்று என் தலையில் எழுதிய எழுதுகோலென்பேனோ! இரவிகுலத்தில் ஊறிப்பெருகிய நீதியென்னும் நீரை இறைக்கும் ஏற்றக்கோலென்பேனோ! எத்திக்கும் தேரோட்டிப் புகழ் நாட்டிய எனதாற்றலை வாட்டிக் கத்தரிக்கும் கத்தரிக்கோலென்பேனோ! ஒன்றுக்கும் உதவாக் குருடன் கோலென்பேனோ! நெடுங்கால மாயிருந்த குலமுறையை மாற்றவந்த கொடுங்கோ லென்பேனோ! முன்னோர் தவத்தை எனது அவத்தொடு தூக்கித் தொலைக்கவந்த துலாக்கோலென்பேனோ! சூரிய குலத்தின் அழியாப் புகழை அழித்து ஒழியாப் பழியை முத்திரிக்கவந்த முத்திரைக்கோலென்பேனோ! பெருமையையிழந்து வெறுமையை அடைந்த வைக்கோலென்பேனோ! அல்லது என் அருமந்த மைந்தன் பிரிவில் யான் இறக்க என் பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோலென்பேனோ! என்ன கோலென்றுதான் எண்ணுவேன்? ஐயோ! உரிமை மைந்தனை வனம் போக்க மனம் பொருந்திய பாவியாகிய என்னைச் செங்கோலரசனென்று கூறுவது ‘காராட்டை வெள்ளாடென்றும், அமங்கல வாரத்தை மங்கல வாரமென்றும், நாகப்பாம்பை நல்ல பாம்பென்றும்’ வழங்குகிற வழக்கம் போன்றதன்றி உண்மையல்லவே!

ஐயோ! நான் நெடுநாளாகத் தவஞ்செய்து புத்திரகாமேஷ்டி இயற்றிப் புத்திரனைப் பெற்றது வன சஞ்சாரத்துக்குத்தானோ? ஏ, இராமா! நீ செய்த பாவமா இது? ஆ, இராமன் என்ன செய்வான்? ‘மாதா பிதாக்கள் செய்தது மக்களுக்கு ‘ என்னும் பெரியோர் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் மகனுக்கு வந்தது!

நான் எப்பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ? எல்லோர் மனத்தையும் நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ! குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வையழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ! களவு செய்தோருக்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ! வரவு போக்கொழிய வழியடைத்தேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பம் கலைத்தேனோ! நட்டாற்றிற் கை நழுவ விட்டேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! குருவை வணங்கக் கூசி நின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ! ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! வெய்யிலுக்கொதுங்கும் விருக்ஷம் அழித்தேனோ! பகை கொண்டயலார் பயிரழித்தேனோ! பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ! ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ! அரிதாசரைப் பரிகாசஞ் செய்தேனோ! தவஞ் செய்தோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ! தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! என்ன பாவஞ் செய்தேனோ இன்னதென்றறியேனே! ஐயோ, நான் என் புதல்வனை மனத்தால் நினைக்கும் போதே களிக்கின்றேன். அவனைக் கண்ணாற் பார்த்தபோதோ எனது கிழத்தன்மை நீங்கி உற்சாகத்தால் இளையவன்போல் ஆகி விடுகிறேன். சூரியன் இன்றி ஜனங்கள் நடையாடலாம்; மழையின்றி இருக்கலாம். இராமன் இவ்விடம் விட்டுச் சென்றால் இவ்வுலகில் ஒருவரும் பிழையார். பிறர்க்கே இவ்வாறிருப்பின் என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? அடி கைகேயி! சற்றே மனமிரங்கு! உனக்குப் புண்ணியமுண்டு. இவ்வுலகமே சகலமுமென்று எண்ணாதே. நம்முடைய நடக்கையின் பயனை இறந்தபிறகுதான் நாம் அனுபவிப்போம். அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்னும் முதுமொழியை நீ கேட்டதில்லையா?

இளமையு நில்லா யாக்கையு நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது.

இளமை நிலையல்ல; அழகிய உன் சரீரமும் நிலையுள்ளதல்ல; இவ்வுலகமெல்லாம் நீ பெற்றாலும் அந்தப் பெருஞ் செல்வமும் என்றைக்காவது ஒரு நாள் அழியும். உன் மகனுக்கு நீ இராச்சியங் கொடுத்தால் அவன் உனக்கு மோக்ஷங் கொடுக்கப் போவதில்லை. நிலையில்லாத இந்த யாக்கை மடிந்தபிறகு மோக்ஷ பதவி அடையவேண்டும், நரகத் துன்பத்திற்கு ஆளாகாதிருக்க வேண்டும், என்ற எண்ணம் உனக்கிருந்தால் தரும வழியில் நட. தர்மம் ஒன்றே இம்மைக்கும் மறுமைக்கும் துணையாவது. பெற்ற புத்திரருந் துணையாகார். உற்றார் துணையாகார். உடன்பிறந்தார் துணையாகார். ஒருவருந் துணையாகார். ஆதலால், கைகேயி! தர்மநெறி தவறி ஸ்ரீராமனைக் காட்டுக்கேகச் சொல்லாதே! என் உயிரைப் கொல்லாதே! நானோ நன்னடத்தை உள்ளவன், மிகவும் எளியவன், உன்னை அடைந்துள்ளேன். ஆயுளையெல்லாம் அநேகமாகக் கழித்து விட்டவன். இவ்வளவுடன் அரசனாகவு மிருக்கிறேன். இந்தக் காரணங்களைக் கொண்டாவது நீ இரங்குவாய். அறிவு மயங்கி என்னென்னவோ சொல்லிவிட்டேன்; என்மீது கோபியாதே. நெஞ்சில் இரக்கமுள்ளவளாதலால் நீ என்னிடம் கருணை வைக்க வேண்டும். இராமனுக்கு இராச்சியங் கொடுப்பதாக இராஜசபையிற் சொல்லிவிட்டேன். ஆகையால், தேவி! எனது இராமனுக்கு இராச்சியத்தைக் கொடுத்து நீயே கீர்த்தியைக் கட்டிக் கொள்வாய். கறுத்த கண்ணையுடையாய்! எனக்கும் ஜனங்களுக்கும், பெரியவர்களுக்கும், பரதனுக்கும் விருப்பமான இதை நீ செய்துவைப்பாய். இராமனுக்கு இராச்சியம் கொடுப்பதில் உனக்குப் பிரியம் இல்லாவிட்டாலும், அவனை இராச்சியத்தைவிட்டு ஓட்டாதே. உன் கோபத்தை அவன்மீது காட்டாதே. என் மனத்தை வாட்டாதே. நான் உன் அபயம்! அபயம்!! அபயம்!!! முக்காலும் சொன்னேன். (மண்டியிட்டு இருகரங்களையுங் கூப்பிக் கைகேயியின் முகத்தை இரக்கத்தோடு பார்க்கிறார்)

கைகேயி:- (ஒரு புறமாய் ஒதுங்கி) சக்கரவர்த்தீ! நாங்கள் செய்வது தகாத காரியம். எதற்காகத் தங்கள் மனைவியாகிய என்னிடத்தில் அபயமிட்டு அஞ்சலி செய்கிறீர்கள்? வாய்மையை மாற்றவா, வாய்மையைப்போற்றவா? உரைத்த உரை மாறா உறுதியன்றோ அறமெனப்படுவது? பெரியவர்கள் சத்தியம் என்பதை உத்தமமான தருமம் என்று சொல்லுகறார்கள். தாங்களும் சத்தியந் தவறாத சக்கரவர்த்தி என்று பேர் படைத்துள்ளீர்கள். நானும் அந்தச் சத்தியத்திற் குடன்பட்டுத்தான் உங்களைத் தருமத்தில் நிற்க வேண்டிக் கொள்ளுகிறேன். சத்தியத்தை ஸ்தாபிக்கச் சதையை அரிந்துகொடுத்த சிபிச் சக்கரவர்த்தியும் தங்கள் குலத்தவர்தானே! சத்தியத்திற்கஞ்சியன்றோ அலைகடல் கரைகடவாதிருப்பது?

மெய்யே சிறந்த பெருநலமா மெய்யே யெவையு நிலைபெறுத்தும்
மெய்யா லழல்கால் கதிர்பிறவுந் தந்தந் தொழிலின் விலகாவா
மெய்யே யெவைக்கு மிருப்பிடமா மெய்யே மெய்யே யிறையாகு
மெய்யே பிரம பதமுமெனில் மெய்யிற் சிறந்த தொன்றுண்டோ?

நலங்களுக்கெல்லாம் நாயகமாவது சத்தியம் ஒன்றே. சத்தியமே எல்லாவற்றையும் நிலை நிறுத்தும். கதிரவனும் கலைமதியும் தங் கதி வழுவாது நிற்றல் சத்தியத்தால்தான். மற்ற கிரகங்கள் முதலியன நெறி மாறாதிருத்தல் சத்தியத்தினால்தான். சற்குணங்களுக்கிருப்பிடம் சத்தியம் ஒன்றே. கட்புலனுக்குத் தோன்றாக் கடவுளும் சத்திய வடிவே. தாங்கள் சொல்லுகிற மோட்ச பதவியும் சத்திய லோகமே. சத்தியத்தால்தான் தருமம் தங்கி நிற்கிறது. சத்தியந்தான் ஒரு நாளும் அழியாத வேதம். சத்தியத்தாலேதான் நற்பயன் அடைதல் கூடும். ஆகையால் தங்களுக்குத் தரும வழியில் நடக்க மனமிருந்தால் சத்தியத்திற்குக் கட்டுண்டு நடக்க வேண்டும். நான் கேட்ட வரத்தை எனக்குக் கொடுத்து விட்டீர்கள். இனி அதை நிறைவேற்றி வைப்பீர். தருமத்தைச் சரியாய் நடத்துவதினிமித்தம் உமது புத்திரனான இராமனைக் காட்டிற்கு அனுப்பும்! அனுப்பும்!! அனுப்பும்!!! மூன்று தரம் சொல்லிவிட்டேன். நாயகா! நீர் சொன்னவண்ணம் இராமனை இன்று காட்டுக்கு அனுப்பாவிட்டால், உபேக்ஷித்த உமது காலின்கீழ் எனது உயிரை விடுகின்றேன்.

தசரதர்:- ஏ, படுபாவி! நீயே மதிமயங்கி இவ்வாறு கூறுகின்றனையா? வேறு துன்மார்க்கர் எவரேனும் இப்படிக் கேட்கும்படி உன்னைத் தூண்டினார்களா? என் மேலாணை, உண்மையைக் கூறடி!

திங்கள், 11 ஜூலை, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி நிகழ்த்திவரும் “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி உபந்யாஸத்தின் 44வது உபந்யாஸம் (இன்று 11-07-2016 காலையில் நிகழ்த்தியது) நகலிறக்கி, கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/download/99kz5p9b49xwwph/044_SSR_%2811-07-2016%29.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkgGlOmf02NcZ7fqr

நேரடியாகவே கேட்டு மகிழ

https://soundcloud.com/pamaran/044-ssr-11-07-2016