வெள்ளி, 25 நவம்பர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 32

வினா 54.- அஷ்டகன்‌ பிறந்தபின்பு மாதவி என்ன செய்தாள்‌?

விடை.- மாதவி ரிஷி காரியத்தை முடித்துவிட்டு, திரும்பி கன்னிகையாகவே யயாதியிடம்‌ செல்ல, அரசன்‌ இவளுக்கு ஸ்வயம்வரம்‌ ஏற்படுத்தினான்‌. இதைக்‌ கவனியாது மாதவி ஸந்நியாஸினியாகிக்‌ காட்டில்‌ மான்களைப்போல்‌ ஜீவித்துக் கொண்டு பகவத்தியானம்‌ செய்ய எண்ணி காட்டிற்குச்‌ சென்றாள்‌. இது முதல்‌ தன்காலம்‌ முடியும்‌ வரையில்‌ இப்படியே இருந்து காலக்கிரமத்தில்‌ மாதவி பரமபதம்‌ அடைந்தாள்‌. இவ்வாறு மாதவி துறவியாக, யயாதிக்கு உலக இன்பங்களில்‌ ஒருவாறு வைராக்கிய முண்டானது.

வினா 55.- இதன்‌ பின்பு எப்பொழுதாவது மாதவி யயாதியை ஸந்தித்தாளா?

 விடை... யயாதி ஸ்வர்க்கத்திலிருந்து கர்வ பங்கமாய்க்‌ கீழே விழுங்கால்‌ அஷ்டகர்‌ முதலிய பேரப்பிள்ளைகள்‌ செய்யும்‌ யாகப்‌ புகையால்‌ ஆகாசத்தில்‌ நிறுத்தப்பட்டதாகவும்‌, அப்பொழுது அவர்கள்‌ தமது பாட்டனார்‌ என்று அறியாமலே தமது புண்ணியங்‌களின்‌ பாகங்களை அவர்கள்‌ கொடுத்ததாகவும்‌ ஆதிபர்வத்தில்‌ சொல்லியிருக்கிறோம்‌. அப்பொழுது தான்‌ க்ஷத்திரியன்‌ என்றும்‌ தனக்கு பிறர்‌ கொடுப்பதை வாங்க அதிகாரமில்லை என்றும்‌ யயாதி சொல்லிக் கொண்டிருக்கையில்‌, மாதவி காட்டில்‌ உலாவிக்‌ கொண்டு அவ்விடம்‌ தற்செயலாய்‌ வந்து, தன்‌ தகப்பனது கஷ்டத்தைக்‌ கண்டு அவருக்கு யாகம்‌ செய்பவர்கள்‌ தன்வயிற்றில்‌ பிறந்த பேரப்பிள்ளைகள்‌ என்று எடுத்துரைத்தாள்‌. இவள்‌ செய்த இந்த ஸகாயத்தால்‌ யயாதி இவர்களது புண்ணியத்தைப்‌ பெற்றுக்கொண்டு ஸ்வர்க்கத்தை மறுபடியும்‌ அடைந்து ஸுகமாய்‌ வாழ்ந்திருந்தான்‌.

வினா 56.- இவ்விசித்திரமான காலவரிஷி கதையைச்‌ சொன்ன நாரதர்‌ துர்யோதனனுக்கு என்ன புத்திமதி கூறினார்‌?

விடை.- நாரதர்‌ துர்யோதனனை நோக்கி, “இம்மாதிரி யயாதி கர்வத்தால்‌ என்ன பாடுபட்டான்‌ பார்‌. காலவர்‌ (நல்ல விஷயத்தில்‌) பிடிவாதமாய்‌ இருந்ததினாலேயே என்ன பாடுபட்டார்‌ பார்‌. ஆகையால்‌ நீ உன்‌ முரட்டுத்தனத்தை அவசியம்‌ விடவேண்டும்‌. மேலும்‌ நீயோ கெட்டவிஷயத்தில்‌ பிடிவாதம்‌ பிடிக்கிறாய்‌. ஆகையால்‌, அதை நீ உடனே விட்டால்தான்‌ நலம்‌. நீ க்ஷேமம்‌ அடைய வேண்டுமானால்‌ சீக்கிரத்தில்‌, பாண்டவர்களோடூ ஸமாதானம்‌ செய்துகொள்‌என்று மிகுந்த ஆதரவுடன்‌ சொன்னார்‌.

வினா 57.- இதைக்கேட்டதும்‌ திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? மேல்‌ என்ன நடந்து என்னமாய்‌ முடிந்தது?

விடை... திருதிராஷ்டிரன்‌ கிருஷ்ணபகவானை நோக்கி, "பகவானே! நான்‌ விதுரர்‌ பீஷ்மர்‌ முதலிய எல்லோரும்‌ துர்யோதனனுக்கு எவ்வளவோ இந்த விஷயத்தில்‌ சொல்லிப்‌ பார்த்தோம்‌; அவன்‌ கேட்கவில்லை. இனி மேல்‌ கடைசியாய்த்‌ தாங்களே சொல்லிப்‌ பார்க்கவேண்டும்‌ என்று விண்ணப்பம்‌ செய்தான்‌. உடனே பகவானும்‌, துர்யோதனனை நோக்கி, எவ்வளவோ நயமாய்‌ ஸமாதானம்‌ செய்துகொள்ளுவது நலம்‌ என்று சொல்லிப்‌ பார்த்தார்‌; அப்பொழுது பீஷ்மர்‌, துரோணர்‌, விதுரர்‌, திருதிராஷ்டிரர்‌, இவர்கள்‌ மறுபடியும்‌ தம்மாலியன்ற மட்டும்‌ நயமாயும்‌, கோபமாயும்‌, துக்ககரமாயும்‌ சொல்லிப்‌ பார்த்தார்கள்‌. அப்பொழுது துர்யோதனன்‌ ஊசி குத்தும்‌ இடங்கூட இனி நான்‌ பாண்டவர்களுக்குக்‌ கொடுக்கமாட்டேன்‌" என்று ஒரே பிடிவாதமாய்ச்‌ சொல்லிவிட்டான்‌. அப்பொழுது பகவான்‌ "யுத்தத்தில்‌ முன்வைத்த கால்‌ பின்வாங்காமல்‌ சண்டைசெய்து மாண்டால்‌ கீர்த்தியும்‌, வீரஸ்வர்க்கமும்‌ வருமென்று எண்ணுகிறாயோ? அவை இம்மாதிரியான அநியாயமாயும்‌, பெரியோர்களது வாக்கிற்கு விரோதமாயும்‌ ஏற்படும்‌ சண்டையால்‌ உனக்கு ஒருநாளும் கிடையா. உனக்கு அபகீர்த்தியும்‌ நரகமுமே கிடைக்கும்‌என்று கோபத்துடன் சொன்னார்‌. அப்பொழுது துச்சாஸனன்‌ மஹர்கர்வத்தோடு சிலவார்த்தைகள்‌ சொல்ல, துர்யோதனன்‌ மிகுந்த கோபத்தோடு ஸபையை விட்டு எழுந்து வெளியே போய்விட்டான்‌.

வினா 58.- இவ்வாறு துர்யோதனன்‌ மஹா கோபத்துடன்‌ ஸபையைவிட்டு வெளியே சென்றதும்‌, என்ன நடந்தது? எவ்வாறு முடிந்தது?

விடை.- இவ்வாறு துர்யோதனன்‌ வெளியே சென்றதும்‌ திருதிராஷ்டிரன்‌ காந்தாரியை அழைத்துவரும்படி சொல்லி அனுப்பிவிட்டு, விதுரரை அழைத்து, வெளியே சென்ற துர்யோதனனைத்‌ திரும்பவும்‌ ஸபைக்கு அழைத்து வரும்படி ஏவினான்‌. இதற்குள்‌ பகவான்‌, முன்பு விதுரர்‌ சொல்லிவந்தபடி துர்யோதனனை சிறைச்சாலையில்‌ அடைத்து வைத்துவிட்டு, மற்றையவர்கள்‌ பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்து கொள்ளுங்கள்‌என்று திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌. இப்படியிருக்கையில்‌, காந்தாரியும்‌ துர்யோதனனும்‌ ஸபைக்குவர, காந்தாரி, பிள்ளையை நோக்கி, தன்னால்‌ கூடிய வரையில்‌ ஸமாதானம்‌ செய்துகொள்ளுதலே நலம்‌ என்று சொல்லிப்‌ பார்த்தாள்‌. இதை அலட்சியம்‌ செய்து விட்டு, துர்யோதனன்‌ ஸபையைவிட்டு மறுபடியும்‌ வெளியே சென்றான்‌.

வினா 59.- இரண்டாந்தரம்‌ வெளியே சென்ற துர்யோதனனுக்கு என்ன விபரீத புத்தி உண்டாயிற்று இதனால்‌ என்ன விளைந்தது?

விடை... வெளியே போன துர்யோதனன்‌, சகுனி முதலிய துஷ்டர்களோடு ஆலோசனை செய்து, பகவானை எப்படியாவது சீக்கிரத்தில்‌ சிறைபிடித்துக்‌ கட்டிவிட்டால்‌ தமது காரியம்‌ ஜயமாகும்‌ என்று தீர்மானித்தான்‌. இந்த ஸமாசாரம்‌ ஸாத்யகிக்குத்‌ தெரிந்தது. உடனே கிருதவதர்மாவிடம்‌ சென்று, பகவான்‌ ஸஹாயத்திற்காகப்‌ படைகளை தயார்‌ செய்துவைக்கச்‌ சொல்லிவிட்டு, பகவானுக்கு இதைத்‌ தெரிவித்தான்‌. உடனே திருதிராஷ்டிரன்‌ துர்யோதனனை ஸபையில்‌ அழைத்துவரும்படி செய்து, அவனைப்‌ பலவாறு நிந்தித்துப்‌ பேசினான்‌. விதுரர்‌ அப்பொழுது பகவானது பல விசேஷங்களை எடுத்துச்‌ சொன்னார்‌. இவ்வளவு சொல்லியும்‌ துர்யோதனன்‌ கேட்காது, பகவானைக்‌ கட்டிப்பிடிக்க யத்தனிக்க எண்ணுகையில்‌, பகவான்‌ அந்த ஸபையில்‌ யாவரும்‌ பார்க்கும்படி தமது விசுவரூபத்தைக்‌ காட்டினார்‌. உலகங்கள்‌ யாவும்‌ பகவானிடம்‌ சிறு அணுக்களைப்‌ போல்‌ அடங்கி இருப்பதை யாவரும்‌ கண்டார்கள்‌. பீஷ்மர்‌, விதுரர்‌, ஸஞ்சயர்‌ முதலிய மஹாத்மாக்கள்‌ இந்த ஆனந்தஸேவையைக்‌ கண்டு களித்துத்‌ துதித்தார்கள்‌. தேவதுந்துபி ஆர்த்தன. ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது. அப்பொழுது பகவானது அனுக்கிரகத்தால்‌ திருதிராஷ்டிரனுக்குக்கூட கண்‌ உண்டாக, அவன்‌ பகவானைத்‌ தரிசித்து கிருதார்த்தனானான்‌. துர்யோதனன்‌ முதலிய துராத்மாக்களுக்கு இந்த உருவத்தைக்‌ கண்டதும்‌ பயமுண்டாக, கண்ணை மூடிக்‌ கொண்டார்கள்‌. கொஞ்ச நாழிகைக்கெல்லாம்‌ பகவான்‌ தன்‌ விசுவரூபத்தை ஒடுக்கிக்‌ கொண்டு ரிஷிகளிடம்‌ விடைபெற்று வெளியே புறப்பட்டார்‌. ரிஷிகளும்‌ விடை பெற்று உடனே மறைந்தருளினர்‌.

வினா 60.- பகவான்‌ இதன்‌ பின்பு எங்கே சென்றார்‌? அங்கு என்ன நடந்தது?

 விடை.- பகவான்‌ குந்தி வீடு சென்று ஸபையில்‌ அன்று நடந்தவைகளை ஆதியோடந்தமாய்ச்‌ சொல்ல, குந்தி, யுதிஷ்டிரருக்கு க்ஷத்திரியர்போல்‌ நடக்க வேண்டும்‌ என்றும்‌, விதுரர்‌, தோல்வி யடைந்து துக்கப்படும்‌ தன்‌ பிள்ளையை நோக்கிச்‌ சொன்ன வீரிய வாக்கியங்கள்‌ இன்னவை என்றும்‌ சொல்லி அனுப்பினாள்‌. அர்ஜுனனுக்கு, "திரெளபதி சொல்லுவதுபோல்‌ நடஎன்று குந்தி சொல்லி அனுப்பினாள்‌.

வினா 61.- கிருஷ்ணன்‌ உவப்லாவ்யம்‌ நோக்கிப்‌ போகையில்‌ என்ன செய்தார்‌?

விடை.- கர்ணனைத்‌ தனது தேரில்‌ ஏற்றிக்கொண்டு, வெகு தூரம்‌ பகவான்‌ போய்‌, அங்கு அவன்‌ இவ்வாறு குந்தியின்‌ கன்னியாப்பருவத்தில்‌ அவளுக்கு ஸூர்யானுக்‌ கிரகத்தால்‌ பிறந்தான்‌ என்றும்‌, ஆகையால்‌ அவன்‌ தர்மபுத்திரருக்கும்‌ தமயனாக வேண்டுமென்றும்‌, அவன்‌ பாண்டவர்கள்‌ பக்கத்திற்கு அப்பொழுது வந்தால்‌ அவனுக்கு இராஜ்யம்‌ கிடைக்கும்‌ என்றும்‌, உண்மையை உள்ளபடி எடுத்துச்‌ சொன்னார்‌.

வினா 62.- இதற்குக்‌ கர்ணன்‌ என்ன பதில்‌ சொன்னான்‌?

விடை... நான்‌ குந்திக்குப்‌ பிறந்தவனாய்‌ இருந்தும்‌, என்னைக்‌ குந்தி கவனிக்கவே இல்லை. நான்‌ ஒரு எ௭ஃூதன்‌ வீட்டில்‌ வளர்ந்து துர்யோதனனால்‌ மேன்மை அடைந்தேன்‌. நல்ல காலங்களில்‌ அவனிடம்‌ இருந்துவிட்டு, இந்த அபாயகாலத்தில்‌ நான்‌ பிரிந்து வருவது நியாயமன்று. மேலும்‌, எனக்கு இராஜ்யம்‌ வரும்‌ என்ற எண்ணத்துடன்‌ நான்‌ வருவது இன்னும்‌ கேவலமான விஷயம்‌. இப்பொழுது நான்‌ பாண்டவர்கள்‌ பக்கம்‌ போனால்‌ அர்ஜுனனோடு சண்டை செய்யப்‌ பயந்து போனதாகப்‌ பலரும்‌ பழிப்பார்கள்‌. நான்‌ பாண்டவர்களை நிந்தித்தது யாவும்‌ துர்யோதனனைத்‌ திருப்தி செய்வதற்காகவே. அந்தப்‌ பாபச்‌ செயலை நான்‌ நினைத்தால்‌ எனக்கு மிகுந்த துக்கமுண்டாகிறது. நான்‌ அவசியம்‌ அர்ஜுனனால்‌ இறக்கப்‌ போகிறேன்‌. கெளரவர்களும்‌ அவர்களுக்கு ஸகாயமாக வந்திருக்கும்‌ அரசர்களும்‌ இந்தச்‌ சண்டையில்‌ மாண்டு போவார்கள்‌. இவ்வாறு நடக்கவேண்டி இருப்பதால்‌ எனது உறவைப்‌ பாண்டவர்களுக்கு வெளியிடாது, அவர்களை யுத்தத்திற்கு அழைத்து வாருங்கள்‌' என்று கர்ணன்‌ மறுமொழி சொன்னான்‌.

வினா 63.- பகவான்‌ இதற்கு என்ன பதில்‌ சொன்னார்‌? கடைசியில்‌ இவர்கள்‌ எவ்வாறு பிரிந்தனர்‌?

விடை... நான்‌ சொல்லியபடி ஒன்றும்‌ நடக்காததால்‌, இந்த யுத்தத்தில்‌ எல்லோரும்‌ மாண்டு போவார்கள்‌. இவர்கள்‌ மாண்டதும்‌, கலியுகம்‌ ஆரம்பித்து விடும்‌. சீக்கிரம்‌ பீஷ்மாதிகளிடம்‌ போய்‌, இந்த மாஸம்‌ எங்கும்‌ செழிப்பாய்‌ இருக்கிறது, ஆகையால்‌ இன்னும்‌ ஏழுநாளைக்குள்‌ வரும்‌ அமாவாஸை யன்றையதினம்‌, யுத்தத்தை ஆரம்பிக்கலாம்‌ என்று சொல்லிவிடு என்று பகவான்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்டதும்‌ கர்ணன்‌, 'இதை அறிந்திருந்தும்‌ நீர்‌ ஏன்‌ என்னைப்‌ பாண்டவர்கள்‌ பக்கம்‌ வாவென்று ஆசைகாட்டினீர்‌. மேலும்‌ நான்‌ தர்மபுத்திரருக்கு ஜயம்‌ வரப்போகிறது என்று குறிப்பிக்கும்‌ ஒரு ஸ்வப்பனம்‌ கண்டேன்‌. ஆகையால்‌ நான்‌ உயிரோடிருந்தால்‌, உம்மை யுத்தம்‌ முடிந்ததும்‌ பார்த்துக்கொள்ளுகிறேன்‌, இல்லாவிடில்‌ நான்‌ உம்மை ஸ்வர்க்கத்தில்‌ பார்க்கிறேன்‌ என்று மறுமொழி கூற, இருவரும்‌ ஒருவரை ஒருவர்‌ ஆலிங்கனம்‌ செய்துகொண்டு பிரிந்தார்கள்‌. பகவான்‌ பாண்டவர்களிருக்குமிடம்‌ சென்றார்‌.

ஞாயிறு, 20 நவம்பர், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 31

வினா 45.- இதன்‌ பின்பு யார்‌ துர்யோதனனுக்கு இவ்விஷயத்தில்‌ புத்திமதி எவ்வாறு கூறியது?

விடை.- நாரதர்‌, நல்ல விஷயத்திலேயே முரட்டுத்தனம்‌ அதிகமாயிருந்தால்‌ கேடுவிளையும்‌ என்பதைக்‌ காலவரிஷி உபாக்கியானத்தால்‌ வெளியிட்டு, துர்யோதனனை நோக்கி அவன்‌ கெட்ட விஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌ இருந்தால்‌ அதிகக்கேடு உண்டாகும்‌ என்று பயமுறுத்தினார்‌.

 

வினா 46.- காலவ ரிஷி யார்‌? இவர்‌ எந்த நல்லவிஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌ இருந்தார்‌? என்ன கெடுதி இவருக்கு உண்டாயிற்று?

விடை... விசுவாமித்திரர்‌ முன்காலத்தில்‌ பிராம்மண்யம்‌ தமக்கு வரவேண்டும்‌ என்று தபஸு செய்தார்‌. இந்த தபஸு பலிக்குங்காலம்‌ வந்தபொழுது இவருக்கு ஒரு கஷ்டம்‌ வந்தது. இந்தக்‌ கஷ்டகாலத்தில் காலவர்‌ என்ற மஹாரிஷி விசுவாமித்திரர்‌ அருகில்‌ சிஷ்யராய்‌ இருந்து, அவருக்கு வேண்டிய சிசுரூஷை செய்துவந்தார்‌. இவரது பக்திக்கு மெச்சி, விசுவாமித்திரர்‌, 'இனிமேல்‌ உன்‌ இஷ்டமான இடம்‌ வெகு தாராளமாய்ப்‌ போகலாம்‌' என்று உத்தரவு கொடுத்தார்‌. அப்பொழுது காலவர்‌ ஏதாவது குருதக்ஷிணை கொடுத்துவிட்டு தான்‌ போவதாகச்‌ சொல்ல, விசுவாமித்திரர்‌ வேண்டியதில்லை என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும்‌, சிஷ்யன்‌ பின்னும்‌ பிடிவாதமாய்‌ இருக்கக்கண்டு, அவருக்குக்‌ கோபம்‌ வர, 'எனக்கு வெளுப்பாகவும்‌, ஒரு காதுமாத்திரம்‌ கறுப்பாகவும்‌ உள்ள 800 குதிரைகளைக்‌ குருதக்ஷிணையாகக்‌ கொடு, என்றார்‌. அவைகளைக்‌ கொண்டுவருவதில்‌ காலவர்‌ மிகுந்த கஷ்டப்பட்டுப்‌ போனார்‌.

வினா 47.- விசுவாமித்திரருக்கு தபஸுபலிக்குங்காலத்தில்‌ என்ன கஷ்டம்‌ வந்தது?

 விடை... விசுவாமித்திரர்‌ தபஸு செய்யுங்கால்‌ யமதர்மராஜன்‌ இவரது குணத்தைப்‌ பரீக்ஷித்தறிய எண்ணி, வஸிஷ்டர்‌ உருக்கொண்டு இவரிடம்‌ வந்து போஜனம்‌ பண்ண வேண்டும்‌ என, விசுவாமித்திரர்‌ மனதில்‌ விரோதமின்றி வஸிஷ்டரை இருக்கச்‌ சொல்லிவிட்டு பயபக்தியுடன்‌ போஜனம்‌ தயார்‌ செய்து வஸிஷ்டரைத்‌ தேடிப்‌ பார்த்தார்‌. சோதிக்கவந்த தர்மராஜன்‌ மறையவே, வஸிஷ்டரை எங்கே தேடியும்‌ அகப்பட வில்லை. உடனே வஸிஷ்டருக்காகத்‌ தயார்‌ செய்த போஜனத்‌தைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டு தூண்போல்‌ அசைவற்றிருந்து வெகு காலம்‌ இவர்‌ வாயுபக்ஷணம்‌ செய்துகொண்டிருந்தார்‌. வெகு காலமான பின்பு தர்மராஜன்‌ வஸிஷ்டர்‌ உருவத்தோடு வந்து அந்த உணவை உண்டு விசுவாமித்திரரை வாழ்த்திச்‌ சென்றான்‌.

வினா 48.- காலவரிஷி இக்குதிரைகளை ஸம்பாதிக்க முதலில்‌ எப்படிக்‌ கஷ்டப்பட்‌டார்‌?

விடை... காலவரிஷி முதலில்‌ தாமே பரதகண்டம்‌ முழுவதும்‌ திரிந்து பார்த்தார்‌. எங்கும்‌ இம்மாதிரி ஒரு குதிரை கூட அகப்படவில்லை. அதன்‌ பின்பு, இவர்‌ மஹாவிஷ்ணுவைத்‌ துதிக்க, அவர்‌ இவரை நினைத்த இடத்திற்கெல்லாம்‌ எடுத்துச்‌ செல்லும்படி உத்திரவு செய்து, கருடனை அனுப்பினார்‌. கருடனது ஸஹாயத்தால்‌ காலவர்‌ எல்லாதிக்கின்‌ முடிவுவரையில்‌ சென்று தேடிவருகையில்‌ ஸமுத்திரங்‌களது அக்கரையில்‌ ரிஷப மலையின்‌ சிகரத்தில்‌ வந்து இறங்கினார்‌. அங்கு சாண்டிலி என்ற ஸந்நியாஸினியைக்‌ கண்டார்‌. அவளால்‌ கொடுக்கப்பட்ட உணவை உண்டு இருவரும்‌ தூங்கினார்கள்‌. கருடன்‌ தூங்கி விழித்து, பறக்க யத்தனிக்கையில்‌ தனக்குச்‌ சிறகுகளே இல்லாதிருப்பதைக்‌ கண்டு மிகுந்த கஷ்டத்தை அடைந்தான்‌. காலவரிஷி இதன்‌ காரணம்‌ என்ன வென்று கேட்க கருடன்‌, 'இந்த ஸந்நியாஸினியைக்‌ கண்டதும்‌ இவளைத்‌ தூக்கிப்போய்‌ மகாவிஷ்ணுவினிடம்‌ விடவேண்டும்‌ என்று எனக்குத்‌ தோன்றியது. இதனால்‌ தான்‌ எனக்கு இந்தக்‌ கஷ்டம்‌ வந்திருக்கும்‌. ஆகையால்‌ நான்‌ இப்பொழுது அந்தச்‌ சிறந்தவளை மனதார மன்னிப்புக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌' என்று பச்சாத்தாபத்துடன்‌ மறுமொழி சொன்னான்‌. இதைக்‌ கேட்டதும்‌ சாண்டிலி கருடனுக்கு இறகு உண்டாகும்படி செய்து, பறந்துபோகும்படி அனுப்பினாள்‌. இவ்வளவு கஷ்டப்பட்டும்‌ காலவருக்குக்‌ குதிரைகள்‌ அகப்படவில்‌லை, வேறு இடம்‌ நோக்கிப்போகையில்‌ வழியில் விசுவாமித்திரர்‌ காலவரைக்கண்டு, 'குருதக்ஷணை கொடுக்கும்‌ காலம்‌ வந்துவிட்டது. ஆனாலும்‌ நான்‌ இன்னும்‌ கொஞ்ச நாள்‌ பொறுத்துக்கொள்ளுகிறேன்‌' என்று காலவருக்கு குருதகூிணையை ஞாபகப்‌ படுத்த, அவர்‌ மிகுந்த கஷ்டத்தை அடைந்தார்‌.

வினா 49.- காலவரிஷி இதன்பின்பு எப்படி பிரயத்தனப்பட்டார்‌? இதன்‌ பலன்‌ என்ன?

விடை.- இவ்வளவு தேடியும்‌ காணாதது கண்டு, கருடன்‌ காலவரிஷியை எவ்விதத்திலாவது குதிரைகளை வாங்கப்‌ பணம்‌ முதலில்‌ ஸம்பாதிக்கச்‌ சொன்னான்‌. இதன்படி கருடனும்‌, காலவரும்‌ சந்திர வம்சத்தில்‌ பிறந்த யயாதி ராஜனிடம் செல்ல காலவர்‌, தமது கோரிக்கையைத்‌ தெரிவித்தார்‌. கருடன்‌ காலவருக்கு நல்ல சிபாரிசை செய்தான்‌. அப்போழுது யயாதி நன்றாய்‌ ஆலோசித்துப்‌ பார்த்து காலவருக்கு அனுகூலமாக சீக்கிரத்தில்‌ 800 குதிரை கிடைப்பதற்குத்‌ தனது பெண்‌ மாதவியை அவருக்குக்‌ கொடுத்தான்‌.

வினா 50.- இதனால்‌ காலவர்‌ எண்ணம்‌ எப்படி நிறைவேற இடமுண்டாயிற்று? விடை.- இந்த மாதவிக்கு நான்கு கல்யாணம்‌ செய்துகொள்ளலாம்‌ என்றும்‌, ஒவ்வொரு கல்யாணத்தின்‌ பிறகு மறுபடியும்‌ இவளுக்குக்‌ கன்யாப்பருவம்‌ வந்து விடும்‌ என்றும்‌, ஒரு ரிஷியின்‌ வரம்‌ இருந்தது. இதை உத்தேசித்து இவளை நான்கு இராஜாக்களுக்குக்‌ கல்யாணம்‌ செய்து கொடுத்தால்‌ காலவருக்கு 800 குதிரைகள்‌ கிடைக்கலாம்‌ என்று எண்ணியே யயாதி இவளை காலவருக்குக்‌ கொடுத்தான்‌. காலவரும்‌ இந்தக்‌ குறிப்பை நன்றாய்‌ அறிந்து கொண்டு, திருப்தியோடு பெண்ணை வாங்கிக்‌ கொண்டார்‌.

வினா 51.- இதன்‌ பின்பு காலவர்‌ எவ்வாறு 800 குதிரைகளை மாதவியின்‌ மூலமாய்‌ ஸம்பாதித்தார்‌?

விடை. இத்தருணத்தில்‌ கருடன்‌ காலவரிடம்‌ விடைபெற்றுப்போக முதலில்‌ இக்ஷ்வாகு வம்சத்தில்‌ பிறந்து அயோத்தியில்‌ அரசாண்டு வந்து பிள்ளையில்லாது தவித்துக்கொண்டிருந்த ஹரியசுவராஜனுக்கு மாதவியைக்‌ கல்யாணம்‌ செய்விக்க, அதற்கு விலையாக 20௦ குதிரைகள்‌, வேண்டிய மாதிரியில்‌ காலவருக்கு அரசன்‌ கொடுத்தான்‌. இவ்வரசனுக்கு மாதவியினிடம்‌ வஸுமனஸ என்ற பிள்ளை பிறந்தது. உடனே மாதவிக்குக்‌ கன்யாப்பருவம்‌ வந்துவிட்டது. காலவர்‌ தாம்‌ மாதவியை உபயோகப்படுத்தும்‌ எண்ணத்தை இவ்வரசனுக்கு வெளியிட, அரசன்‌ அதை ஒப்புக்கொண்டான்‌. உடனே மாதவியை அழைத்துக்‌ கொண்டும்‌ காசி தேசத்தில்‌ பிள்ளை வேண்டும்‌ என்ற ஆவலோடிருந்த திவோதாஸ ராஜனிடம்‌ செல்ல முன்‌ போல மாதவியின்‌ மூலமாய்‌ 200 குதிரைகள்‌ இவருக்குக்‌ கிடைத்தன. இவ்வரசனுக்கு மாதவியிடம்‌ பிரதர்த்தனன்‌ என்ற பிள்ளை பிறந்ததும்‌, முன்போல அவளுக்கு கன்யாப்பருவம்‌ வந்தது. முன்போலவே காலவர்‌ மாதவியைப்‌ பெற்று அரசன்‌ அனுமதியின்‌ பேரில்‌ போஜர்களுக்கு அரசரான உசீனரிடம்‌ போய்‌ இப்பெண்ணைக்‌ கொடுக்க அங்கு அவருக்கு 200 குதிரைகள்‌ அகப்பட்டன. உசீனருக்கு மாதவியிடம்‌ சிபி என்ற மஹாத்மா பிறந்தார்‌. இதன்‌ பின்பு காலவர்‌, கன்னிகையாகி யிருக்கும்‌ மாதவியை அழைத்துக்கொண்டு, இன்னாரிடம்‌ போவது என்று அறியாமல்‌ தத்தளித்துக்கொண்டிருந்தார்‌.

வினா 52.- இவ்வாறு இன்னும்‌ 200 குதிரைகள்‌ கிடைக்காமல்‌ வருந்தும்‌ காலவரை யார்‌ எவ்வாறு காப்பாற்றியது? குருதக்ஷிணையை காலவர்‌ எவ்வாறு கொடுத்தார்‌?

 விடை.- இப்படி காலவர்‌ தத்தளித்துக்கொண்டிருக்கையில்‌ வழியில்‌ இவர்‌ கருடனைச்‌ சந்தித்தார்‌. கருடன்‌ 60 குதிரைகள்‌ தான்‌ அகப்படும்‌ என்றும்‌, இனிமேல்‌ ஒன்றும்‌ அகப்படாதென்றும்‌ சொல்ல, காலவருக்கு மிகுந்த துக்கம்‌ வந்துவிட்டது. அப்பொழுது கருடன்‌ 'விசுவாமித்திரருக்கே இப்பெண்ணைக்‌ கொடுத்து 200 குதிரைக்குப்‌ பதிலாக இவளிடமிருந்து ஒரு பிள்ளையை அடைந்து கொள்ளும்படி செய்து உம்முடைய பிரதிக்கினையை நிறைவேற்றலாம்‌' என்று உபாயம்‌ சொல்லிக்‌ கொடுக்க, காலவர்‌ அவ்வாறே செய்தார்‌. விசுவாமித்திரருக்கு, தனது முரட்டுத்தனத்துக்காக சிஷ்யன்‌ பட்டபாடு போதும்‌ என்ற கருணைவர, மாதவியிடம்‌ தனக்கு உண்டான அஷ்டகன்‌ என்ற பிள்ளையை 200 குதிரைக்குப்‌ பதிலாக வைத்துக்கொண்டு மற்ற 6௦0 குதிரைகளைப்‌ பெற்று தனக்கு குருதக்ஷ்ணை பூர்த்தியாக கொடுத்து ஆய்விட்டதாக ஸந்தோஷத்துடன்‌ சிஷ்யனை ஆசீர்வதித்தார்‌.

வினா 53.- 200 குதிரைகள்‌ கிடைக்காமலே போகக்காரணம்‌ என்ன?

விடை... முன்காலத்தில்‌, யுசீகர்‌ என்ற மஹாரிஷி விசுவாமித்திரரது பாட்டனாரான காசிராஜனது பெண்ணாகிய ஸத்யவதியை தனக்கு பெண்சாதியாய்‌ வரிக்க, அரசன்‌ கன்யா சுல்கமாக சந்திரனைப்போல்‌ வெளுத்ததும்‌, ஒரு காது மாத்திரம்‌ கறுத்ததுமாக இருக்கும்‌ 1000 குதிரைகள்‌ வேண்டும்‌ என்றார்‌. உடனே ரிஷி வருணனிடம்‌ இதைச்‌ சொல்ல, அவன்‌ தனது அசுவதீர்த்தத்திலிருந்து குதிரைகளை எழுப்பிக்கொடுத்தான்‌. இதை அரசனிடம்‌ ரிஷி கொண்டுவந்து கொடுத்து ஸத்தியவதியைக்‌ கல்யாணம்‌ செய்துகொண்டார்‌. அந்த 1000 குதிரைகளில்‌ 400 - ஐ ஒரு ஆற்றுவெள்ளம்‌ அடித்துக்கொண்டு போய்விட, உலகில்‌ 600 குதிரைகள்‌ தான்‌ மிஞ்சின. அதைக்‌ காலவர்‌ முதலில்‌ ஸம்பாதித்துவிட்டார்‌. இதனால்‌ தான்‌ கருடன்‌ 200 குதிரைகள்‌ அகப்படமாட்டாது என்றான்‌.