2.
உவர்ந்த வுளத்த னாயுல கமளந் தண்டமுற
நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி
லரங்கத் தம்மானரைச்
சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.
நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி
லரங்கத் தம்மானரைச்
சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.
உவந்த
உள்ளத்தன் ஆய் – மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை உடையவனாய்க்கொண்டு;
உலகம் அளந்து – மூவுலகங்களையும் அளந்து;
அண்டம் உற – அண்டகடாஹத்தளவும் சென்று முட்டும்படி;
நிவர்ந்த – உயர்த்தியை உடைய; நீள்முடியன் – பெரிய திருமுடியை உடையனாய்; அன்று – முற்காலத்தில்; நேர்ந்த
– எதிர்ந்து வந்த; நிசாரரை – ராக்ஷஸர்களை; கவர்ந்த – உயிர்வாங்கின;
வெம்கணை – கொடிய அம்புகளை உடைய; காகுத்தன் – இராமபிரானாய்; கடி
ஆர் – மணம் மிக்க; பொழில் – சோலைகளை உடைய; அரங்கத்து – ஸ்ரீரங்கத்தில்
எழுந்தருளியிருப்பவரான; அம்மான் – எம்பிரானுடைய;
அரை – குருவரையில் (சாத்திய);
சிவந்த ஆடையின் மேல் – பீதாம்பரத்தின் மேல்;
என் சிந்தனை – என்னுடைய நினைவானது; சென்றது ஆம் – பதிந்ததாம்.
உவந்த
உள்ளத்தனாய் –
(1)
‘செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்’ என்றும்,प्रणवाकारं रंगम् (ப்ரணவாகாரம்
ரங்கம்) என்றும்
சொல்லுகிறபடி, முதல் மூன்று பாசுரங்களும் ப்ரணவாவயத்வாக்ஷரங்களோடு
தொடங்குகின்றன.
2)
பாதம் நீண்டுவந்ததற்குக் காரணம் உள்ள முவந்ததே என்கிறார். திருவடியின் ஸ்வபாவம் ‘ஓரெண்டானுமின்றியே
வந்தியலுமாறு உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானை’ என்றபடி நாம் எண்ணாமலும் அனுக்ரஹிப்பதாம். திருவடியின் ஸ்பர்ஸத்தை எல்லாருடைய சிரஸ்ஸுக்கும் அளித்தது உலகு அளந்த திரிவிக்ரமர். ‘என் கண்ணினிடம் நீண்டு வந்தது பெரிதோ அந்த த்ரிவிக்ரமப் பெருமானுக்கு’ என்று திருவுல களந்தருளின வ்ருத்தாந்தத்தை நினைத்து ஈடுபடுகிறார். வேதம் டிண்டிமமாக அந்த யசஸ்ஸைப் பரப்பியதென்பர். வேதம் பாடி உத்கோஷிக்கும் அந்த யசஸ்ஸைத் தாமும் பாடுகிறார். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ என்று கும்மியடித்துப்
பிராட்டிமாரும் ஆசைப்பட்டுப் பாடும் யசஸ்ஸு.
3) ‘கண்ணுளே நிற்கும்’ என்ற ‘பொருமா நீள்படைத்’ திருவாய்மொழிப் பாசுரம் மனதிற்கு வந்தது. அதை முதல் பாசுரத்தில் பேசுகிறார். ‘திருமா நீள்கழலேழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என்
கண்ணுள தாகுமே’ என்ற முன் பாசுரமும் சேர்ந்து இங்கே திருவுள்ளத்தி லோடுகிறது. मुदितान्तरात्मा (முதிதாந்தராத்மா) என்று தனியனிற் கூறிய இவர் உவப்பைப் பிள்ளைலோகம் ஜீயர் ‘உவந்த உள்ளத்தரானார்’ என்று இந்த சப்தங்களால்
வர்ணித்தார். பெருமாள் உள்ள முவந்ததிலும் மேற்பட்ட ஹர்ஷமுண்டோ இவருக்கு? பெருமாள் உவப்பு இவர் நெஞ்சில் ப்ரதிபிம்பிதமாகும். प्रीतःप्रिणाति (ப்ரீத:ப்ரிணாதி)
உலகமளந்து
1) இப்பொழுது பள்ளிகொண்ட பெருமாளே அன்று த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்தவன் என்கிறார். ‘அன்று’ என்பதை இங்கும் சேர்த்துக் கொள்ளவேணும். काले दूत्य दृततरगतिम् (காலேதூத்ய த்ருததரகதிம்) என்றதும், இன்று தூங்கும் பெருமாளும் காலம் வந்தால் தூத்யம் செய்யவும் ஓடுபவர் என்றதைக் காட்டிற்று. ‘வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராதே எல்லார் தலையிலு மொக்கத் திருவடிகளை வைத்தபடி’ என்று நாயனார். நீசனாகிய என்னிடம் திருவடி நீண்டது த்ரிவிக்ரம சுபாவம். த்ரிவிக்ரமர் தாளின் நீதி. வானாட்டு நீதிமட்டுமல்ல.
அண்டமுற நிவந்த நீண்முடியன்:--
(1) திருவடி நீண்டு பரவி உயர வோங்கி நிமிர்ந்தது. திருமுடியும் நிவந்து நீண்டு அண்டமுற ஓங்கிற்று. आपादचूडमनुभूय हरिं शयअनअम् (ஆபாதசூடமநுபூய ஹரிம் சயானம்) என்றபடி பள்ளிகொண்ட
பெருமாளைத் திருவடி முதல் திருமுடி பர்யந்தம் நின்ற திருக்கோலமாக அனுபவிக்கிறார். (2) ‘நிவந்த --- பூவலர்ந்தாப்போலே’ என்று பிள்ளை. (3)
‘அண்டம் மோழையெழ’ என்பதைப் பிள்ளை உதாஹரித்தார்.
அன்று நேர்ந்த நிசாரரை:-- உடனே ராமாவதாரமாகப் பெருமாளை அனுபவிக்கிறார். ‘த்ரிவிக்ரமாவதாரத்தில் நிசாசரனாகிய மாவலியை வெங்கணையால் கொல்லவில்லை. ராமாவதாரத்தில்தான் அது உண்டு’ என்று வேற்றுமையைக்
காட்ட ‘அன்று’ என்ற ராமாவதார
காலத்தைப் பேசுகிறார். (2) நேர்ந்த – அவர்களாக வந்து
எதிர்த்தார்கள். (3) அவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று கூடியவரையில் ஸாமோபாயத்தை
நாடினார். அவர்கள் இணங்கவில்லை.
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்:-- கணை வெங்கணை; அது பொல்லாதது. அவருள்ளம் உவந்ததே. அருள் நிரம்பியதே. ‘உவந்த உள்ளத்தனாய்’ என்பது காகுத்தனோடும் அந்வயிக்கும். ராவண கும்பகர்ணரை மாளச் செய்ததும் கருணயே. உள்ளத்தின் உவப்பே. சாபத்தால தீரவேண்டிய
மூன்று ஜன்மங்களில் இரண்டு கழிவது அவர்களுக்கு ஹிதமே. ‘பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடு’ என்றபடி திருவாயுதங்களுக்கும்
கருணையும் ராகமும் உண்டு. வெங்கணையும்
ராகத்தால் அவர்களைக் கவர்ந்தது என்கிறார். ‘கவர்ந்தது’ என்னும் பதம் ராகத்தையும் கருணையையும் காட்டுகிறது.
கடியார் பொழிலரங்கத்தம்மான்:-- (1) அரங்கத்தில்
சோலைகளின் புஷ்பங்களைக் கந்தவஹ மென்னும் காற்று இவருக்கு என்றும் அநுபவிப்பித்தது. ‘கடி’ என்பது மணத்தைச் சொல்லுவதோடு, ‘’படிச்சோதியாடையோடும் பல்கலனாய் நின் பைம்பொற் கடிச்சோடி கலந்ததுவோ’ என்கிற முடிச்சோதி அனுபவத்தின் நினைவையும் காட்டும். (2) ‘அரைச்சிவந்த ஆடை’ என்று அரை என்னும்
பதமிருந்தாலும் ‘கடி’ என்ற சப்த மாத்ரத்தால்
அரை ஆடையின் அனுபவத்தால் ‘முடிச்சோதி’யில் நம்மாழ்வாருடைய விசித்ரமான அனுபவத்தையும் நினைவையும் உட்கொள்ளும். (3) ‘திருவுலகளந்தருளின இடமே பிடித்து அடியொற்றி ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே
புகுந்து சாய்ந்தருளினான். இன்னமும் வேர்ப்பு
அடங்கவில்லை. திருச்சோலையில் பரிமளம் விடாய் ஒரு ஶிஶிரோபசாரமானபடி’ என்று பிள்ளை.
அரைச் சிவந்த ஆடையின்மேல்:-- (1) ஆடையின் சிவப்பு
இவரிடம் ராகத்தின் மிகுதியாலே வந்ததுபோலும. ஆடையத்தனை ராகத்தைக் காட்டுகையில் தன் சிந்தனை எப்படி அதன்மேல் செல்லாமலிருக்கு
மென்கிறார். कृते च प्रतिकर्तव्यमेष धर्मस्सनातनः (க்ருதே ப்ரதிகர்த்தவ்யமேஷ
தர்மஸ்ஸநாதன:) என்பர். ஸ்நேகத்திற்கு
ஸ்நேகரூபமான ப்ரதிக்ருதி இல்லாமற் போகலாமோ? कृतग्ने नास्ति निष्कृतिः (க்ருதக்னே நாஸ்தி
நிஷ்க்ருதி:) என்பரே. (2) तस्य यधा माहारजनं वास: (தஸ்ய யதா மாஹாரஜனம் வாச:) என்று நேதி நேதி
ப்ரகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹத்திலுள்ள பீதாம்பரத்தை ச்ருதி அனுபவித்தது. माहारजनं वास: (மாஹாரஜனம் வாச:) என்றதைச் ‘சிவந்த ஆடை’ என்று வர்ணிக்கிறார். இது पीतांबरतरःस्रग्नी साक्षान्मन्मथमन्मथः (பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷான் மன்மதமன்மத:) என்ற கோவலன் நினைவையும் காட்டும். காகுத்தனுக்குப்
பின்பு கோவலன் அனுபவம். क्षौमाश्लिष्टं किमपि (க்ஷௌமாச்லிஷ்டம்
கிமபி) என்று ஸோபானத்தில் பட்டு ஆடை ராகத்தோடு திருத்துடைகளை யணைந்ததும்
வர்ணிக்கப்பட்டது. (3)
‘செய்ய கார்முகில் திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரம்’ என்று பிள்ளை. ‘ஸர்வகந்து வஸ்து கண்வளர்ந்தருளுகையாலே கடியார் பொழிலாயிருக்குமிறே’ என்று நாயனார்.
சென்றதாம் என் சிந்தனையே:-- (1) எனக்கு என் நெஞ்சினால்
ஸ்பர்சிக்கவும் அச்சமே. ஆயினும் என் மனசு – என் சிந்தனை – என்னை யறியாமலே பாய்ந்து சென்றுவிட்டது. சென்றபிறகுதான் எனக்குத் தெரிகிறதென்பதை ‘சென்றதாம்’ என்பதால் காட்டுகிறார். (2) ‘என் சிந்தனை மட்டுமே சென்றது, நான் அணுகவில்லை’ என்று தன் அச்சத்தை (நைச்யத்தை) அனுசந்திக்கிறார். (3) இங்கும் ஒரு
சந்தி ரஸத்தின் அனுபவம். சந்த்யாகாலம்
அருளும் சந்த்யாராகச் சிவப்பும் கலந்ததாக இருக்கும். காரிருள் திருமேனியில் சிவந்த ஆடை பரவி இருப்பதும் ஒரு சந்த்யானுபவமாகும்.