வியாழன், 18 ஆகஸ்ட், 2022

Sankalpa Suryodhayam Drama.pdf

Sankalpa Suryodhayam Drama.pdf

ஸ்வாமி தேசிகன் அருளிய ஸங்கல்ப சூர்யோதயம் முதலில் பார்த்தபோது -- சம்ஸ்க்ருதம் தெரியாததால் அப்படியே நூலை மூடி வைத்துவிட்டேன். பின்னர் ஶ்ரீரங்கநாத பாதுகாவில் ஒப்பிலியப்பன்கோவில் ஸ்வாமி மிக எளிய தமிழில் தொடராக எழுதியபோது படித்து அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் கிடைத்ததும் சேட்லூர் ஶ்ரீ ந்ருஸிம்மாச்சாரியார் அவரது வழக்கத்துக்கு மாறாக கிரந்தம் கலக்காமல் மூல நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்திருப்பதுமான நூலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது கையில் கிடைத்திருப்பதோ, அந்த நாளில் இதை நாடகமாக நடிக்கத் தோதான வகையில் சுருக்கி எழுதப்பட்ட 110 பக்கங்கே உள்ள நூல். இதுவும் மதுரை ஶ்ரீ GSR ஸ்வாமி கொடுத்து உதவியிருப்பது. அந்த நாள் வழக்கப்படி நெருக்கமாக பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். முடிந்த மட்டும் தெளிவாக வருடி சேமித்திருக்கிறேன். சில பக்கங்களில் வரிகளின் கடைசி எழுத்து விடுபட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ் என்பதால் ஊகித்துப் படிக்க முடியும். விரும்புவோர் நகலிறக்க
https://www.mediafire.com/file/6lsyjm9q9tbceuk/Sankalpa_Suryodhayam_Drama.pdf/file

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 18

ஶ்ரீ மஹாபாரத வினா விடை

முதல் பாகம்

ஆரண்ய காண்டம்

வினா 83 முதல் 101 வரை

 

வினா 83.- அர்ஜுனன்‌ இவ்வாறு வந்து சேர்ந்த பின்பு பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- நான்கு வருஷம்‌ அர்ஜுனனோடு பாண்டவர்கள்‌ குபேரனது உத்தியான வனங்களில்‌ கிரீடித்துக்கொண்டு வந்தார்கள்‌. இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ கந்தமாதன பர்வதத்தைவிட்டுக்‌ கீழே இறங்க யத்தனிக்கையில்‌ லோமசர்‌ அவர்களுக்கு வேண்டிய புத்திமதிகளைச்‌ சொல்லிவிட்டு ஸ்வர்க்கத்தை நோக்கிச் சென்றனர்‌. வருகிற வழியில்‌ அனேக இடங்களைத்‌ தரிசித்துக்கொண்டு பாண்டவர்கள்‌ யமுனா நதிக்‌ கரையில்‌ உள்ள ஒரு மலையருகில்‌ வந்து சேர்ந்தார்கள்‌.

வினா 84.- அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது? அது எவ்வாறு முடிந்தது?

விடை... அங்கு பீமன்‌ காட்டுவழியாய்‌ விளையாடிக்கொண்டு வெகு உல்லாஸமாய்‌ வருகையில்‌ ஒரு பெரிய மலைப்பாம்பைக்‌ கண்டு அதைப்‌ பிடிக்க அருகே போனான்‌. அப்பொழுது அந்தப்‌ பாம்பிற்கு முன்னமே இருந்த அனுக்கிரஹப்படி, இவன்‌ அதன்‌ சுற்றில்‌ அகப்பட்டு உடனே மூர்ச்சைபோய்‌ தனது பலம்‌ முழுவதையும்‌ இழந்து விட்டான்‌.

வினா 85.- இந்தப்‌ பாம்பு யார்‌? இவர்‌ ஏன்‌ பாம்பானார்‌? யார்‌ இவருக்கு இவ்வாறு அநுக்கிரஹித்தது?

விடை... இந்தப்‌ பாம்புதான்‌ பாண்டவரது மூதாதைகளுள்‌ ஒருவராகிய நகுஷராஜா. இவர்‌ 100-அசுவமேதயாகம்‌ செய்து இந்திரபதவிக்குத்‌ தகுந்தவராக, இவருக்கு இந்திரப்பட்டம்‌ கிடைத்தது. அங்கு சென்றும்‌ இவருக்குக்‌ காமம்‌ தீராதிருந்ததால்‌ உடனே இந்திராணியைப்‌ பெண்டாளவேண்டும்‌ என்ற கெட்ட எண்ணம் வர, வழக்கப்படி ஸப்தரிஷிகள்‌ சிவிகை தூக்க நகுஷன்‌ இந்திராணி வீடு நோக்கிச்‌ சென்றான்‌. போகும்பொழுது அவன்‌ “ஸர்ப்ப ஸர்ப்ப" (வேகமாய்ப்‌ போகட்டும்‌) என்று ஸப்தரிஷிகளை மதியாது அதட்ட, அவர்களுள்‌ அகஸ்தியருக்குக்‌ கோபம்‌ வந்தது. அவர்‌ “நீ மலைப்பாம்பாய்ப்‌ போகக்கடவாய்‌” என்று சபித்தார்‌. அப்பொழுது நகுஷன்‌ அகஸ்தியருக்குத்‌ தயவு வரும்படியாய்‌ நடந்து கொண்டபடியால்‌ அவர்‌ “நீ இந்த மலைப்பாம்புருவில்‌ எதைப்‌ பிடித்த போதிலும்‌ அதற்கு உள்ள பலம்‌ எல்லாம்‌ போய்விடட்டும்‌. கடைசியில்‌ ஒரு மஹானிடமிருந்து ஆத்மஞான விஷயங்களை நீ அறிந்து சாபத்தினின்றும்‌ நீங்குவாய்‌” என்று அனுக்கிரஹித்தார்‌.

வினா 86.- இவ்வாறு பலமிழந்து தத்தளிக்கும்‌ பீமனை யார்‌ எவ்வாறு விடுவித்தது? பாம்பின்‌ கதி என்னவாயிற்று?

விடை.- இவ்வாறு கஷ்டப்படும்‌ பீமனை தர்மபுத்திரர்‌ தாம்‌ தேடிக்‌ கொண்டுவரும்‌ வழியில்‌ கண்டார்‌. உடனே பாம்பை நோக்கிப்‌ பீமனை விட்டுவிடவேண்டும்‌ என்று கேட்க அது ஆத்மஞான விஷயமாய்‌ அனேகம்‌ கேள்விகள்‌ கேட்டது. அப்பொழுது தர்மபுத்திரர்‌ எல்லாவற்றிற்கும்‌ தகுந்த விடைகொடுக்க உடனே பாம்பு பீமனை விட்டுவிட்டு நகுஷரூபந்தரித்து ஸ்வர்க்க லோகம்‌ சென்றது.

வினா 87.- நகுஷனாகிய மலைப்பாம்பு தர்மபுத்திரரைக்‌ கேட்ட முக்கிய கேள்விகளும்‌ அதற்கு அவர்‌ கொடுத்த விடைகளும்‌ என்ன? அதன்‌ பின்பு என்ன நடந்தது?

விடை.- பிராம்மணன்‌ யார்‌? ஸத்யம்‌, தர்மம்‌, தயை, தபஸ்‌ முதலிய நற்குணங்கள்‌ வாய்ந்தவன்‌ சூத்திரனாகிலும்‌, அவனே பிராமணன்‌. நாம்‌ அவசியம்‌ அறிய வேண்டியதென்ன? ஸுகதுக்கரகிதமாய் தம்மை அடைந்தவருக்குத்‌ துக்கநிவர்த்தி செய்யும்‌ தன்மை வாய்ந்த பரம்பொருளே நாம்‌ அவசியம்‌ அறியவேண்டிய வஸ்து. இதன்பின்பு தர்மபுத்திரர்‌ நகுஷனை அநேக கேள்விகள்‌ கேட்டு தனக்கிருந்த ஸந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டார்‌. இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ வனத்தை அடைந்து அங்கு சிலகாலம்‌ வஸித்துக்‌ கடைசியில்‌ காம்யக வனத்தில்‌ பிரவேசித்தார்கள்‌.

வினா 88.- அங்கு யார்‌ பாண்டவர்களைப் பார்க்க வந்தது? அப்பொழுது என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- கிருஷ்ணபகவான்‌ தமது பட்டஸ்திரீகள்‌, ஸுபத்திரை, அபிமன்யு ஆகிய இவர்களோடு பாண்டவர்களைப்‌ பார்க்க வந்தார்‌. அதன்‌ பின்பு மார்க்கண்டேய மஹாமுனியும்‌ அங்கு தற்செயலாய்‌ வந்து சேர, அவரை அரிய விஷயங்களைப்‌ பற்றிப்‌ பேசும்படியாக யாவரும்‌ வேண்டிக்கொண்டார்கள்‌.

வினா 89.- மார்க்கண்டேயர்‌ முதலில்‌ எவ்வெவ்‌ விஷயங்களைப்பற்றிச்‌ சுருக்கமாய்‌ எடுத்துரைத்தார்‌?

விடை.- ஸுகம்‌ மனிதனது புத்தியை மயக்கி உண்மை அதில்‌ படாதவண்ணம்‌ செய்யும்‌ தன்மை உடையது, துக்கமோ அவ்வாறின்றி மனிதனது அஞ்ஞானம்‌, துரபிமானம்‌ முதலிய கெட்டகுணங்களை வேறோடு அறுத்து மனத்தைச் சுத்தி செய்யும்‌ தன்மையையுடையது. உள்ளத்துறவுடையவர்களுக்கு அஸாத்தியமானது ஒன்றுமில்லை. வைவஸ்வதமனுவின்‌ சரித்திரம்‌, யுகங்களின்‌ ஸ்வபாவங்கள்‌, யுகப்‌ பிரளயம்‌, அதில்‌ தாம்‌ வடபத்திர சாயியான பகவானது வயிற்றில்‌ 14 லோகங்களையும்‌ கண்ட அற்புதக்‌ காட்சி, அப்பொழுது பகவான்‌ தமது ஸ்வரூபத்தை வெளியிட்ட வைபவம்‌, கலியுக தர்மம்‌, அதன்பின்‌ கிருத யுகம்‌ வரும் விதம்‌, இராஜதர்மம்‌ ஆகிய இவ்விஷயங்களைப்பற்றி மார்க்கண்டேய மஹாமுனி விஸ்தாரமாய்த்‌ தர்மபுத்திரருக்கு எடுத்துரைத்தார்‌.

வினா 90.- இதன்‌ பின்பு எந்த அரிய விஷயத்தைப்பற்றி மார்க்கண்டேயர்‌ எவ்வாறு பேசினார்‌?

விடை.- உள்ளபடி தானம்‌ செய்தல்‌ எவ்வாறிருக்க வேண்டும்‌ என்பதை நாரதருக்கும்‌ யயாதியின்‌ பேரர்களாகிய அஷ்டகர்‌ முதலியவருக்கும்‌ நடந்த ஸம்வாதமூலமாய்‌ நன்கு விளக்கினார்‌.

வினா 91.- எந்த ஸந்தர்ப்பத்தில்‌ நாரதருக்கும்‌ யயாதி பேரர்களுக்கும்‌ ஸம்வாதம்‌ ஏற்பட்டது?

விடை.- விசுவாமித்திர வம்சத்தில்‌ பிறந்த யயாதி பேரனாகிய அஷ்டகன்‌ ஒரு அசுவமேதயாகம்‌ செய்தான்‌. அதைப்‌ பார்க்க யயாதியின்‌ மற்றப்பேரப்‌ பிள்ளைகளாகிய பிரதர்த்தனன்‌, வஸுமனஸ்‌, சிபி என்பவர்கள்‌ வந்திருந்தார்கள்‌. யாகத்தின்‌ முடிவில்‌ நால்வரும்‌ ஒரு இரதத்தில்‌ எறிக்கொண்டு போகையில்‌ எதிரே நாரதர்வரக்கண்டு அவரையும்‌ தமது இரதத்தில்‌ ஏற்றிக்‌ கொண்டார்கள்‌. இக்காலத்‌தில்‌ தான்‌ நாரதருக்கும்‌, இவர்களுக்கும்‌ ஸம்வாதம்‌ உண்டாயிற்று.

வினா 92.- "நாங்கள்‌ நால்வரும்‌ புண்ணிய விசேஷத்தால்‌ ஸ்வர்க்க மடையப்‌ போகிறோம்‌. யார்‌ எங்களுள்‌ புண்யம்‌ குறைந்து முதலில்‌ பூமியில்‌ விழப்போகிறார்‌கள்‌?” என்று கேட்ட யயாதி பேரனுக்கு நாரதர்‌ என்ன மறுமொழி சொன்னார்‌? இதனால்‌ நாம்‌ என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?

விடை... 'அஷ்டகன்‌ முதலில்‌ விழுவான்‌. ஏனெனில்‌, இவன்‌ ஒரு காலத்தில்‌ என்னை ஊருக்கு வெளியில்‌ இரதத்தில்‌ ஏற்றிக்கொண்டு போகையில்‌ நான்‌ அனேகவர்ண பேதங்களையுடைய பசுக்களைக்‌ கண்டேன்‌. அப்பொழுது இவன், இவைகள்‌ தான்‌ தானங்கொடுத்த பசுக்கள்‌ என்று பெருமை பாராட்டினான்‌. ஆகையால்‌ இவன்‌ முதலில்‌ ஸ்வர்க்கத்திலிருந்து விழுவான்‌ என்றார்‌. இதனால்‌, நாம்‌ தானம்‌ செய்யுங்கால்‌ அதைப்பற்றிக்‌ கர்வமடையாதிருக்கவேண்டும்‌ என்பது விளங்கும்‌.

வினா 93.- மீதி இருக்கும்‌ மூவரில்‌ எவன்‌ முதலில்‌ கீழே விழுவான்‌ என்ற பேரனுக்கு நாரதர்‌ என்ன மறுமொழி சொன்னார்‌? இதனால்‌ நாம்‌ என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?

விடை... “பிரதர்த்தனன்‌ முதலில்‌ விழுவான்‌. ஏனெனில்‌ இவன்‌ வீட்டில்‌ நான்‌ சிலநாள்‌ வஸித்துக்கொண்டிருக்கையில்‌ நாங்களிருவரும்‌ ஒருநாள்‌ இரதத்தில்‌ ஏறிக்‌ கொண்டு வெளியே புறப்பட்டோம்‌. போகும்வழியில்‌ ஒரு பிராமணன்‌ வந்து அரசனை ஒரு குதிரை வேண்டும்‌ என்று யாசித்தான்‌. அரசன்‌ அரண்மனைக்குப்‌ போனதும்‌ குதிரையைத்‌ தருவதாகச்‌ சொல்லிப்பார்த்தான்‌. பிராமணன்‌ கேளாது தனக்கு அப்பொழுதே ஒரு குதிரை அவசியம்‌ வேண்டுமேன்று கேட்க, தேரில்‌ கட்டியிருந்த ஒரு குதிரையை அவிழ்த்துக்கொடுத்தான்‌. இதே மாதிரியாக வேறு மூன்று பிராமணர்கள்‌ வர, அவர்களும்‌, பிடிவாதமாய்‌ இருந்தது கண்டு ஒவ்வொருவருக்கும்‌ ஒவ்வொரு குதிரையைக்கொடுத்து விட்டு அவன்‌ தானே இரதத்தை இழுக்கத்‌ தொடங்கினான்‌. இழுக்கும்பொழுது பிராமணர்கள்‌ கேட்கத்தகுந்த வஸ்து இனி என்னிடம்‌ ஒன்றுமில்லை என்று சொல்லி அரசன்‌ அசிரத்தையைக்‌ காட்டினான்‌. இதனால்‌ தான்‌ அவன்‌ இரண்டாவதாகப்‌ பூமியில்‌ விழுவான்‌" என்று நாரதர்‌ சொன்னார்‌. எவ்வளவு சிறந்த தானத்தைச்‌ செய்தபோதிலும்‌ கொஞ்சம்‌ அசிரத்தை இருக்குமாயின்‌ அது கெட்‌டுப்போகும்‌ என்பது இதனால்‌ விளங்கும்‌.

வினா 94.- "மீதி இருக்கும்‌ இருவரில்‌ எவன்‌ முதலில்‌ ஸ்வர்க்கத்திலிருந்து விழுவான்‌" என்று கேட்ட பேரனுக்கு நாரதர்‌ என்ன பதில்‌ சொன்னார்‌? இதனால்‌ நாம்‌ என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?

விடை. வஸுமனஸ்‌ கீழே விழுவான்‌. ஏனெனில்‌, இவன்‌ ஒருகாலத்தில்‌ யாகம்‌ செய்து ஒரு அழகிய இரதத்தை வரவழைத்தான்‌; அதை நான்‌ புகழ்ந்து பேசினேன்‌. அப்போழுது இவன்‌, 'இது தங்களுடையதே' என்றான்‌. இவ்வாறு நான்‌ வேறு மூன்று ஸமயங்களில்‌ அந்த இரதத்தைப்‌ புகழ்ந்து பேசியும்‌, அரசன்‌ 'இது தங்களதே' என்று வாய்வார்த்தையாய்ச்‌ சொன்னானே ஒழிய இரதத்தை எனக்குக்‌ கொடுக்கவில்லை. இதனால்‌ தான்‌ இவன்‌ முன்றாவதாக விழுவான்‌' என்று நாரதர்‌ மறுமொழி சொன்னார்‌. இதனால்‌, யாசிப்போர்‌ நோக்கமறிந்து செய்யாத தானம்‌ பிரயோஜனமில்லை என்பது விளங்கும்‌.

வினா 95.- நாரதர்‌, சிபி ஆகிய இருவருள்‌ யார்‌ முதலில்‌ கீழே விழுவார்கள்‌? என்று கேட்க குபேரனுக்கு நாரதர்‌ என்ன மறுமொழி சொன்னார்‌? இதனால்‌ நாம்‌ என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?

விடை.- "நான்‌ முதலில்‌ கீழேவிழுவேன்‌, சிபி ஸ்வர்க்கத்தில்‌ நெடுங்காலம்‌ வாழ்வான்‌, ஏனெனில்‌, சிபி விட்டிற்கு ஒரு நாள்‌ ஒரு பிராம்மணன்‌ போஜனம்‌ வேண்டும்‌ என்று வந்தான்‌. சிபி தான்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்று கேட்டதற்கு, பிராமணன்‌ உன்‌ பிள்ளையைக்கொன்று கறி சமைத்து எனக்குச்‌ சோறிட வேண்டும்‌' என்று கேட்டான்‌. உடனே சிபி அவ்வாறே செய்து ஸாமான்களை எடுத்துக்கொண்டு அதிதியைத்‌ தேடப்புறப்பட்டான்‌. போகும்‌ வழியில்‌ அந்த அதிதி அரண்மனையுட்‌ புகுந்து தனது ஸொத்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கொளுத்தி நாசம்‌ செய்வதாகச்‌ சிபி கேள்விப்பட்டான்‌. இப்படி செய்துகொண்டிருக்கும்‌ பிராமணனிடம்‌ சென்று கோபங்கொள்ளாது சிபி 'சாப்பாடு தயாராய்‌ இருக்கிறது' என்று மஹாவிநயத்துடன்‌ சொல்ல, அவர்‌ நீயே அதைப்‌ புஜி' என, அரசன்‌ மனங்கலங்காது அதைப்‌ புஜிக்கத்‌ தொடங்கினான்‌. உடனே பிராம்மணர்‌ அரசனதுகையைப்‌ பிடித்துக்கொண்டு அவனது பொறுமையைக்‌ கொண்டாடி அவனை வெகு மரியாதைசெய்து மறைந்தார்‌. பிரம்மாவே அரசனது குணத்தைப்‌ பரிசோதிக்க இவ்வுருக்கொண்டு வந்தது. இம்மாதிரிச்‌ சிறந்த தானத்தைச்‌ செய்ததால்‌ சிபி நெடுங்காலம்‌ ஸ்வர்க்கத்தில்‌ வாழ்வான்‌ என்று நாரதர்‌ சொன்னார்‌. இதனால்‌, தானம்‌ செய்யுங்கால்‌ எவ்வளவு கஷ்டம்‌ வந்தபோதிலும்‌ மனங்‌ கலங்காது பொறுமையோடு தைரியமாய்த்‌ தானம்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்பது விளங்கும்‌.

வினா 96.- இதன்‌ பின்பு என்ன அரிய விஷயத்தைப்பற்றி மார்க்கண்டேயர்‌ என்ன கதை சொன்னார்‌?

விடை...ஒவ்வொருவனும்‌ அவனவனது தர்மத்தை ஒழுங்காய்‌ நடத்தவேண்டியது. ஒருவனது தர்மம்‌ தாழ்ந்ததாய்‌ இருந்ததினால்‌ அவனுக்கு ஒரு தாழ்வுமில்லை. அதை நன்றாய்‌ நடத்தாமல்‌ போனால்‌ தான்‌ அவனுக்குத்‌ தாழ்வு, மேலான தனது தர்மத்தை அரைகுறையாய்ச்‌ செய்பவனைவிடத்‌ தாழ்ந்த தனது தர்மத்தை ஸரியாய்ச்‌ செய்பவன்‌ சிறந்தவன்‌' என்கிற விஷயத்தைப்பற்றி கெளசிக பிரம்மசாரி தர்மவ்யாதனிடம்‌ உபதேசம்‌ பெற்ற கதையைச்‌ சொன்னார்‌.

வினா 97.- கெளசிகப்‌ பிரம்மசாரி யார்‌? இவன்‌ ஸ்வபாவம்‌ என்ன? அது எவ்வாறு வெளிவந்தது?

விடை.- அவன்‌ காட்டில்‌ சென்று ஹடயோகாதிகள்‌ பழகிக்‌ கொண்டு தவம்‌ செய்து வந்த ஒரு பிரம்மசாரி; அவன்‌ மகா கோபமும்‌ கர்வமும்‌ நிறைந்தவன்‌. அவன்‌ ஒருநாள்‌ மரத்தடியில்‌ யோகாப்யாஸம்‌ செய்துகொண்டு இருக்கையில்‌ அவனுக்கு நேரே, மேலே இருந்த கொக்கு ஒன்று அவன்‌ தலையில்‌ எச்சமிட்டது. இதனால்‌ அவனுக்கு அடங்காக்‌ கோபம்‌ உண்டாக அந்தக்‌ கொக்கைக்‌ கண்விழித்து அண்ணாந்து பார்த்தான்‌. உடனே கொக்கு சாம்பலாய்‌ விழுந்தது. இதைக்கண்டதும்‌ கெளசிகப்‌ பிரம்மசாரிக்கு அநியாயமாய்‌ ஒரு உயிர்ப்‌ பிராணியைக்‌ கொன்று விட்டோமே என்ற துக்கம்‌ ஒரு பக்கமும்‌, தனது தபஸ்‌ இவ்வளவாவது பலித்ததே என்ற கர்வமொருபக்கமும்‌ பாதிக்கத்‌ தொடங்கின.

வினா 98.- இந்தக்‌ கர்வம்‌ எவ்வாறு வெளிவந்து எவ்வாறு பங்க மடைந்தது?

விடை.- இப்படிக்‌ கொக்கை எரித்துவிட்டு மத்தியான ஸமயத்தில்‌ அருகிலிருந்த கிராமத்துள்‌ பிக்ஷைக்குச்சென்று ஒரு வீட்டு வாசலில்‌ 'பவதீ பிக்ஷாந்தேகி' தாயே பிக்ஷையை யாசிக்கிறேன்‌) என்று சொல்லிக்கொண்டு நின்றான்‌. அங்கு வெகு நாழிகை கெளசிகன்‌ காத்திருக்க வேண்டி வந்தது. அதன்‌ பின்பு அந்த வீட்டு எஜமானி யம்மாள்‌ இவனுக்குப்‌ பிக்ஷை கொண்டுவந்து போட்டாள்‌. அவளை இவன்‌ வெகு கோபமாய்க்‌ கண்விழித்துப்‌ பார்த்தான்‌. அதற்கு அவள்‌ “என்‌ கணவனே எனக்குச்‌ சிறந்த தெய்வம்‌. அவர்‌ பசியோடிருப்பதைக்‌ கண்டு அவருக்கு வேண்டிய உபசாரங்களைச்‌ செய்துவிட்டுப்‌ பின்பு உமக்குப்‌ பிக்ஷை கொண்டு வந்தேன்‌. பிராமணர்களை நான்‌ அவமதிப்பவள்‌ என்று நீங்கள்‌ எண்ணிவிடக்கூடாது. என்னை மன்னிக்கவேண்டும்‌' என்று நயமாய்ச்சொன்னாள்‌. இப்படிச்‌ சொல்லியும்‌ கோபம்‌ தணியாது கெளசிகன்‌ மறுபடியும்‌ அந்தப்‌ பதிவிருதையை வெருட்டி நோக்கினான்‌. அப்பொழுது அவள்‌ 'நான்‌ கொக்கல்ல ஐயா. என்னை ஏன்‌ இப்படி எரிப்பவர்போல்‌ நோக்குகிறீர்‌. எனக்கு உமது யோகமும்‌ தெரியாது, உமது தபஸும்‌ தெரியாது. நான்‌ ஆராதிக்கும்‌ தெய்வம்‌ எனது கணவனே. இந்த ஆராதனையால்தான்‌ நீர்‌ காட்டில்‌ செய்த காரியம்‌ எனக்குத்‌ தெரியவந்தது. கோபம்‌ சண்டாளம்‌. இவ்வாறு இதை நீர்‌ விட்டுவிடாது வைத்து வளர்ப்பீராகில்‌, உமக்கு கேடுண்டாகிக்‌ கடைசியில்‌ உமது தபஸு யாவும்‌ கெட்டுப்போகும்‌' என்று புத்திமதி கூறினாள்‌.

வினா 99.- இந்தப்‌ புத்திமதியைக்‌ கேட்டதும்‌ கெளசிகன்‌ ஸ்திதி என்னமாயிற்று? பதிவிருதை என்ன சொன்னாள்‌?

விடை.- கெளசிகனுக்குத்‌ தனது அறியாமை விளங்கியதும்‌ வெட்க முண்டாகித்‌ தலைகுனிந்துவிட்டான்‌. கேவலம்‌ இந்தப்‌ பதிவிருதைக்கு உள்ள ஞானதிருஷ்டியும்‌, சாந்தமும்‌, தான்‌ தபஸ்வியாயினும்‌ தனக்குக்‌ கிடைக்கவில்லையே என்ற எண்ணம்‌ அவன்‌ மனதைப்‌ பாதிக்கத்தொடங்கியது. உடனே மஹா விநயத்துடன்‌ 'அம்மணி இன்னும்‌ உனக்கு இந்த விஷயத்தில்‌ தெரிந்தவைகளை நான்‌ கேட்டு நல்லவழிக்கு வரும்படி வெளியிடு என்று கெளசிகன்‌ கேட்டான்‌. பதிவிரதை 'ஐயா எனக்கு இவ்விஷயங்களைப்‌ பற்றி அதிகமாய்த்‌ தெரியாது. உமக்கு மேல்‌ தெரிய வேண்டுமானால்‌ மிதிலா நகரத்தில்‌ தர்மவியாதன்‌ என்ற ஒரு கசாப்புக்‌ காரனிருக்கிறான்‌ ; அவனை அடுத்துக் கேட்டால்‌ அவன்‌ உமக்குத்‌ தகுந்தபடி விடைகொடுப்பான்‌' என்று சொல்லிவிட்டு விட்டுக்குள்‌ சென்றாள்‌.

வினா 100.- இதன்‌ பின்பு கெளசிகன்‌ என்ன செய்தான்‌? அங்கு என்ன விசித்திரத்தைக்‌ கண்டான்‌?

விடை.- பதிவிரதா ஸ்திரீயினது மேன்மையை அறிந்த கெளசிகன்‌ தர்மரகஸியங்‌ களை நன்கு உணர மிதிலா நகரம்‌ தர்ம வியாதனிடம்‌ போவதாக எண்ணித்‌ தனது கர்வம்‌ முதலியவைகளை அடக்கத்‌ தீர்மானித்தான்‌. அப்படியே இவன்‌ மிதிலா நகரம்‌ செல்ல, அங்கு ஒரு கசாப்புக்கடையில்‌ வியாதன்‌ வியாபாரம்‌ செய்து கொண்டிருப்பதை ஜனங்கள்‌ மூலமாய்க்‌ கேட்டறிந்து கெளசிகன்‌ அங்கு போய்‌ ஒதுங்கி ஓரிடத்தில்‌ நின்றான்‌. இதை யறிந்த தர்மவியாதன்‌ தனது இடம்விட்டு எழுந்து பிராம்மணனுக்குத்‌ தகுந்த மரியாதைகள்‌ செய்துவிட்டு “நீர்‌ ஒரு பதிவிரதா ஸ்திரீயிடமிருந்து வருகிறவர்‌. நீர்‌ என்ன எண்ணத்தோடு இங்கு வந்திருக்கிறீர்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌' என்று சொல்லிவிட்டு, அவரை ஒரு ஆஸனத்தில்‌ உட்காருவித்தான்‌. அதன்‌ பின்பு தர்மவியாதன்‌ தன்‌ வேலையைப்‌ பார்க்கப்‌ புகுந்தான்‌. பிராம்மணன்‌ இந்த பாபத்தொழிலைச்‌ செய்யும்‌ வியாதனுக்கு இந்த ஞான திருஷ்டி எவ்வாறு வந்ததென்று வியந்துகொண்டிருந்தான்‌.

வினா 101.- பின்பு தர்மவியாதன்‌ எவ்வாறு என்ன விஷயங்களைக்‌ கெளசிகனுக்கு உபதேசித்தான்‌?

விடை.- தன்‌ வேலை முடிந்த பின்னர்‌ பிராம்மணரை தன்‌ விட்டிற்கு அழைத்துப்‌ போய்‌ கெளசிகனுக்கு, ஸ்வதர்மா சரண ரகஸியம்‌, தர்மம்‌ ஸ்வரூபம்‌ அதிஸூக்ஷமம்‌, ஆகையால்‌ தர்மா தர்ம விவேகம்‌ வருதல்‌ மிகக்‌ கஷ்டம்‌, மாம்ஸ பக்ஷணத்தின்‌ உண்மையான நிலை, கர்மம்‌, மறுபிறப்பு, தேவாஸுரஸம்பத்‌, மனோ நிரோதம்‌, திரிகுண ஸ்வரூபம்‌ ஆகிய அரிய விஷயங்களை எடுத்துச்‌ சொன்னான்‌. இதன்‌ பின்பு தனது குலதர்மமாகிய கசாப்புத்‌ தொழிலை ஸரியாய்ப்பார்ப்பதும்‌, தனது தாய்‌ தந்தையரைப்‌ பேணலுமே தான்‌ செய்யும்‌ தபஸ்‌. இதனால்‌ தான்‌ பதிவிரதை சொன்னதை அறியும்படியான சக்தி தனக்கு வந்தது என்று வியாதன்‌ சொல்லி தனது கிழவரான தாய்தந்தையரைக்‌ கெளசிகனுக்குக்‌ காட்டினான்‌. இந்த உபதேசத்திற்கே ஆரண்ய பர்வத்தில்‌ வியாதகீதை என்றுபெயர்‌.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 17

வினா 70 முதல் 82 வரை

வினா 70.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எந்த தீர்த்த விசேஷத்திற்குச்‌ சென்றார்கள்‌?

விடை.- உத்தாலகரிஷி ஆசிரமத்தருகிலிருக்கும்‌ தீர்த்தம்‌ சென்றார்கள்‌. இங்கு, லோமசர்‌ உத்தாலகரது பிள்ளையாகிய சுவேத கேதுவும்‌ அவரது பேரனாகிய அஷ்டாவக்கிரரும்‌ ஜனக ஸபைசென்று அஷ்டாவக்கிரரது தகப்பனாரைத்‌ தர்க்கத்தில்‌ வென்று ஸமுத்திரத்துள்‌ அழுத்தி வைத்திருந்த பந்தி என்ற ஜனகஸபை வித்வானைத்‌ தர்க்கத்தில்‌ அஷ்டாவக்கிரர்‌ வென்று தன்‌ தகப்பனாரை அடைந்த விசேஷக்‌ கதையைச்‌ சொன்னார்‌.

வினா 71- இவ்வாறு தீர்த்தயாத்திரையின்‌ கடைசியில்‌ பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌?

விடை... வடக்குத்‌ திக்கிலிருக்கும்‌ கந்தமாதன பர்வதத்தை நோக்கிப்‌ பாண்டவர்கள்‌ சென்றார்கள்‌. போகும்‌ வழியில்‌ திரெளபதிக்குக்‌ கஷ்டம்‌ தோன்ற, கடோற்கசனை அவர்கள்‌ வரவழைத்து அவளைத்‌ தூக்கிச்செல்லும்படி ஏவ அவனும்‌ அவ்வாறே செய்தான்‌. மற்றைய பாண்டவர்களைக்‌ கடோற்கசனோடு வந்த இராக்ஷஸர்கள்‌ தூக்கிச் சென்றார்கள்‌. இவர்கள்‌ கந்தமாதன பர்வதம்வந்து சிலநாள்‌ அங்கு வஸித்தார்கள்‌.

வினா 72.- அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது? அது எவ்வாறு முடிந்தது?

விடை... அங்கு அர்ஜுனனைக்‌ காணவேண்டும்‌ என்சிற ஆவலோடு பாண்டவர்களும்‌ திரெளபதியும்‌ இருக்கையில்‌ ஒரு இளம்‌ காற்று ஆயிரதளங்கள்‌ அமைந்த ஒரு தாமரைப்‌ புஷ்பத்தைத்‌ திரெளபதிமுன்‌ கொண்டுவந்து போட்டது. அவள்‌ பீமஸேனனிடம்‌ அந்தப்‌ புஷ்பம்‌ வேண்டும்‌ என்கிற தனது இஷ்டத்தைத்‌ தெரிவித்தாள்‌. உடனே பீமன்‌ புஷ்பம்‌ கொண்டு வருவதற்காக அது வந்த திக்கை நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 73.- இவ்வாறு பீமன்‌ புஷ்பம்‌ கொண்டுவரப்‌ போனவிடத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை. தனது தம்பி பீமன்‌ வருவதையறிந்த கதலீ வனத்திலிருந்த ஹனுமார்‌ அவனுக்கு நன்மை செய்ய எண்ணி அவன்‌ வரும்வழியை மறித்துக்கொண்டு நின்றார்‌. பீமன்‌ ஹனுமாரிடம்‌ வந்து சிங்கனாதம்‌ செய்ய, அவர்‌ கவனியாதவர்போல்‌ அசிரத்தையாய்க்‌ கண்ணைவிழித்துப்‌ பார்த்து "நீ இதோடு நிற்கவேண்டியது தான்‌. மேலே போக உன்னால்‌ முடியாது. என்னோடு ஸுகமாய்க்‌ கொஞ்ச காலம்‌ இருந்துவிட்டு கீழே திரும்பிப்‌ போ” என்றார்‌. உடனே பீமனுக்கும்‌, ஹனுமாருக்கும்‌ ஒரு தர்க்கம்‌ உண்டாயிற்று.

வினா 74.- இந்தத்‌ தர்க்கம்‌ எப்படி முடிந்தது?

விடை... இதன்‌ முடிவில்‌ ஹனுமார்‌ தனக்கு எழுந்திருக்க முடியவில்லை என்றும்‌, தன்னை வேண்டுமானால்‌ தாண்டிக்‌ கொண்டு போகலாம்‌ என்றும்‌ சொன்னார்‌. பீமன்‌ இதற்கு இசையவில்லை. அதன்பின்பு அவர்‌ தாம்‌ கிழவர்‌ என்றும்‌, தமது வாலைத்தூக்கி வேறோரிடத்தில்‌ வைத்து விட்டுப்‌ போகலாம்‌ என்றும்‌ சொல்ல அவன்‌ தனது இடதுகையால்‌ வாலை அசைத்தான்‌. அது அசையாதது கண்டு தனது முழுப்‌ பலத்தோடு தூக்கிப்பார்த்தான்‌. உடனே தனது ஹீனஸ்திதியை அறிந்து “நீர்‌ யார்‌" என்று மஹா வினயத்தோடும்‌, பக்தியோடும்‌ பீமன்‌ கேட்டான்‌. அதற்கு ஹனுமார்‌ தனது பிறப்பு, தான்‌ இராமருக்காகப்‌ பட்டபாடுகள்‌ முதலியவைகளை ஆதியோடந்தமாகச்‌ சொன்னார்‌. உடனே பீமன்‌ தனது தமயன்‌ காலில்‌ அடியற்ற மரம்போல்‌ விழுந்து மஹாவிநயத்தோடு எழுந்து நின்றான்‌.

வினா 75.- இவ்வாறு நின்ற பீமனுக்கு ஹனுமார்‌ என்ன சொன்னார்‌?

விடை.- பீமனுக்கு ஹனுமார்‌ கிருத யுகத்தில்‌ ஜாதி பேதமே இல்லை என்றும்‌, அவரவர்கள்‌ தமது தர்மத்தைத்‌ தாமே நடத்திவந்தார்கள்‌ என்றும்‌, திரேதா யுகத்தில்‌ தர்மம்‌ கால்வாசி குறைந்தபடியால்‌ யாகாதிக்‌ கிருதுக்கள்‌ ஏற்பட்டன வென்றும்‌, நான்கு வர்ணங்கள்‌ ஏற்பட்டு தர்மங்கள்‌ நன்றாய்‌ நடந்து வந்தன வென்றும்‌, துவாபர யுகத்தில்‌ தர்மம்‌ பாதியாய்‌ விட்டது என்றும்‌, வேதங்கள்‌ நான்காய்ப்‌ பிரிந்தன வென்றும்‌, கர்மாக்கள்‌ அதிகரித்தன என்றும்‌ ஸ்மசான வைராக்யாதி ஆபாஸ வைராக்கியங்களால்‌ ஸன்னியாஸு முண்டாயின என்றும்‌, கலியுகத்தில்‌ தர்மத்தில்‌ கால்பாகந்தான்‌ இருக்கும்‌ என்றும், இதனால்‌ ஜனங்களுக்குப்‌ பலம்குறையும்‌ என்றும்‌, ஸகல வியாதிகளும்‌ அவர்களைப்‌ பீடிக்கும்‌ என்றும்‌, கர்மாக்கள்‌ நஷ்டமாகும்‌ என்றும்‌, எடுத்துரைத்தார்‌. பின்பு பீமனுக்கு ஹனுமார்‌ தமது விசுவரூபத்தைக்‌ காட்டினார்‌. இதன்‌ பின்பு நான்கு வர்ணத்தாரது தர்மங்களையும்‌ விஸ்தாரமாய்‌ எடுத்துச்சொல்லிப்‌ பீமனைக்‌ கட்டிக்கொண்டு அவனது சிரமத்தைத்‌ தீர்த்து வைத்தார்‌. அதன்பின்பு தாம்‌, யுத்த ஸமயங்களில்‌ அர்ஜுனனது கொடியில்‌ வந்திருந்துகொண்டு தமது அட்டஹாஸம்‌ முதலியனகளால்‌ எதிரி ஸேனையைப்‌ பயப்படுத்துவதாக வாக்களித்தார்‌. கடைசியில்‌ ஹனுமாரிடமிருந்து ஸெளகந்திகத்‌ ‌ தாமரை ஓடை இருக்கும்‌ இடத்தைத்‌ தெரிந்துகொண்டு பீமன்‌ குபேரனது இருப்பிடம்‌ வந்து சேர்ந்தான்‌.

வினா 76.- அங்கு வந்து பீமன்‌ என்ன செய்தான்‌? அங்கு என்ன பிரமாதம்‌ விளைந்தது?

விடை.- அங்குள்ள புஷ்பங்களைப்‌ பறிக்க யத்தனிக்கையில்‌ அவ்வோடையைக்‌ காத்துவந்த இராக்ஷஸர்களிடம்‌ தனது காரியத்தைப்‌ பீமன்‌ சொல்லிவிட்டு நிர்பயமாய்‌ தாமரைகளைப்‌ பறிக்கத்‌ தொடங்கினான்‌. அப்பொழுது இராக்ஷஸர்களுக்கும்‌ பீமனுக்கும்‌ பிரமாத யுத்தமுண்டாயிற்று. அதில்‌ குபேரனது ஸேவகர்‌ தோல்வியடைந்து எஜமானனிடம்‌ ஸமாசாரத்தைத்‌ தெரிவிக்க அவர்‌ பீமனுக்குப்‌ புஷ்பம்‌ பறிக்க அனுமதி கொடுத்து விட்டார்‌.

வினா 77.- இங்கு இவ்வாறிருக்க தர்மபுத்திராதிகள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- தர்மபுத்திரர்‌ இருக்குமிடத்தில்‌ அனேக அபசகுனங்கள்‌ உண்டாகத்‌ திரெளபதியினிடமிருந்து பீமன்‌ போன விடத்தை அறிந்துகொண்டு எல்லோரும்‌ கடோற்கசன்‌ முதலிய இராக்ஷஸாது ஸகாயத்தால்‌ ஸெளகந்திகத்‌ தாமரை ஓடைவந்து, பீமன் செய்த கோரயுத்தத்தைக்‌ கண்டு மகிழ்ந்து குபேரனது உத்திரவின்பேரில்‌ அங்கேயே இவர்கள்‌ அர்ஜுனன்‌ வரவை எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌.

வினா 78.- இங்கிருந்து பாண்டவர்கள்‌ எங்கு சென்றார்கள்‌? அங்கு என்ன விபரீத முண்டாய்‌ என்னமாய்‌ முடிந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ பதரிகாசிரமம்‌ சென்று வஸிக்குங்கால்‌ ஒருநாள்‌ பீமன்‌ வெளியில்‌ போயிருக்கும்‌ தருணத்தில்‌ தர்மபுத்திரர்‌, நகுலன்‌, ஸகாதேவன்‌, திரெளபதி இவர்களை ஒரு இராக்ஷஸன்‌ தூக்கிக்கொண்டுபோய்‌ விட்டான்‌. இவன்‌ பெயர்‌ ஜடாஸுரன்‌. இவன்‌, வெகுநாளாகப்‌ பிராம்மண உருவத்தோடு பாண்டவர்களது ஆயுதம்‌ முதலியவைகளை ஸமயம்பார்த்துக்‌ கொள்ளை கொள்ள வெண்டும்‌ என்கிற எண்ணத்தோடு, கூடவே வந்து கொண்டிருந்தான்‌. இப்பொழுது ஸமயம்‌ வாய்த்ததும்‌ இவ்வாறு செய்யக்‌ கொஞ்ச நாழிகையில்‌ பீமன்‌ வந்து சேர்ந்தான்‌. தனது ஸஹோதரர்‌ முதலியவர்களைக்‌ காணாது பீமன்‌ அட்டஹாஸம்‌ செய்ய இராக்ஷஸன்‌ பயத்தால்‌ தான்‌ எடுத்துப்‌ பொனவர்களை கீழேவிட்டு விட்டான்‌. உடனே பீமனுக்கும்‌ ஜடாஸுரனுக்கும்‌ பெரிய யுத்தம்‌ உண்டாக கடைசியில்‌ ஜடாஸுரன்‌ பீமனால்‌ ஸம்ஹரிக்கப்‌ பட்டான்‌.

வினா 79.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எந்த ஸ்தலங்களுக்குச்‌ சென்றார்கள்‌? பின்பு என்ன நடந்தது?

விடை.- நரநாராயணாள்‌ ஆசிரமத்தைவிட்டு வடக்கேயுள்ள கைலாஸம்‌, மைனாகம்‌ முதலிய மலைகளைப்பார்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ கந்தமாதனம்‌ வந்து ‌ ஹரிஷ்டஸேனர்‌ என்ற ரிஷியின்‌ ஆசிரமத்தில்‌ வஸித்தார்கள்‌. அங்கு சில சிறந்த புஷ்பங்கள்‌ வர திரெளபதி பீமனை அவைகளைப்போன்ற புஷ்பங்களைக்‌ கொண்டு வரும்படி ஏவினாள்‌. உடனே பீமன்‌ குபேரனது அரண்மனை அருகில்‌ சென்று தனது சங்கத்தை ஊத அங்குக்‌ காவலாய்‌ இருந்த யக்ஷ ராக்ஷஸ‌ கந்தர்வர்கள்‌ சண்டைக்கு வந்தார்கள்‌. அவர்கள்‌ தோல்வி யடைந்தவுடன்‌ மணிமான்‌ என்ற குபேரனது ஸ்நேகிதனாகிய இராக்ஷஸாதிபதி யுத்தத்திற்குவர, கோரயுத்தம்‌ ஆரம்பித்தது. இதையறிந்த பாண்டவர்கள்‌ ஆயுதபாணிகளாக திரெளபதியை ஹரிஷ்டஸேனரிடம்‌ விட்டுவிட்டு பீமனுக்கு ஸஹாயமாக வந்தார்கள்‌. இதில்‌ மணிமான்‌ இறந்தான்‌. தர்மபுத்திரர்‌ சண்டையை நிறுத்திவிடும்படி சொல்லிக்கொண்டிருக்கையில்‌ குபேரனுக்கு யுத்தத்தில்‌ அனேகம்‌ பேர்‌ மாண்டு போனது தெரியவர, அதிக கோபத்தோடு தனது இரதத்திலேறிக்கொண்டு வந்தான்‌. பாண்டவர்களைக்‌ கண்டதும்‌ அவனுக்குக்‌ கோபந்தணிய பீமனைப்‌ புகழ்ந்து பேசினான்‌.

வினா 80.- இவ்வளவு கஷ்டம்‌ வந்தும்‌ தன்‌ கோபத்தைப்‌ பாராட்டாது இருந்ததற்குக்‌ குபேரன்‌ என்ன காரணம்‌ சொன்னான்‌? கடைசியில்‌ அவன்‌ என்ன சொன்னான்‌?

விடை... ஒருகாலத்தில்‌ குசாவதியில்‌ ஒரு தேவ ஸபை கூடியது. அதற்கு எனது இராக்ஷஸர்‌ முதலிய பரிவாரங்களோடு நான்‌ போனேன்‌. வழியில்‌ யமுனைக்‌ கரையில்‌ அகஸ்தியர்‌ தபஸு செய்துகொண்டிருந்தார்‌. அப்பொழுது என்னுடன்‌ ஆகாயத்தில்‌ வந்துகொண்டிருந்த இராக்ஷஸாதிபதியாகிய மணிமான்‌ என்ற என்‌ ஸ்நேகிதன்‌ அகஸ்தியர்மேல்‌ உமிழ்ந்தான்‌. உடனே அகஸ்தியர்‌ மிகுந்தகோபத்தோடு மணிமானுக்கு மனிதனால்‌ சாவு வரட்டும்‌ என்றும்‌, இவ்வாறு மணிமானது பரிவாரங்கள்‌ இறப்பதைக் கண்டதும்‌ என்‌ பாபம்‌ நீங்கும்‌ என்றும்‌, மணிமான்‌ முதலிய இராக்ஷஸர்களது ஸந்ததிகளை இச்சாபம்‌ தொடராது என்றும்‌ எடுத்துரைத்தார்‌' என்று குபேரன்‌ சொன்னான்‌. கடைசியில்‌ பீமன்‌ செய்தது மாத்திரம்‌ அநியாயம்‌ என்றும்‌ அதற்காகத்‌ தர்மபுத்திரர்‌ பீமனைக்‌ கண்டிக்கவேண்டும்‌ என்றும்‌ அவன்‌ சொல்லி முடித்தான்‌.

வினா 81.- இவ்வாறு பாண்டவர்கள்‌ ஸுகமாய்‌ கந்தமாதன பர்வதத்தில்‌ வஸித்துக்‌ கொண்டிருக்கையில்‌ யார்‌ வந்து சேர்ந்தார்கள்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை... மாதலியால்‌ நடத்தப்பட்ட இந்திரனது இரதத்தில்‌ அர்ஜுனன்‌ இந்திரலோகத்திலிருந்து பாண்டவரிடம்‌ வந்து சேர்ந்தான்‌. எல்லாருக்கும்‌ தகுந்தபடி மரியாதைகள்‌ செய்த பின்பு, தான்‌ பரமசிவன்‌ முதலிய தேவர்களிடமிருந்து அஸ்திர விசேஷங்களைப்‌ பெற்றுக்கொண்ட மாதிரியை எடுத்துச்‌ சொன்னான்‌.

வினா 82.- இவ்வாறு அர்ஜுனன்‌ சொல்லி முடித்ததும்‌ பாண்டவர்களிடம்‌ யார்‌ வந்து என்ன சொன்னார்கள்‌? அதன்மேல்‌ என்ன நடந்தது?

விடை... இந்திரன்‌ தனது இரதத்தில்‌ ஏறிக்கொண்டு வந்து தன்லோகத்தில்‌ அர்ஜுனனால்‌ நடத்தப்பட்ட திவ்யகாரியங்களை ஒருவாறு சுருக்கிச்‌ சொல்லி விட்டுத்‌ தனது லோகம்‌ சென்றான்‌. பின்பு தர்மபுத்திரர்‌ அர்ஜுனனிடமிருந்து நிவாதகவச காலகேயாளோடு அவன்‌ செய்த யுத்தத்தை விஸ்தாரமாகத்‌ தெரிந்து கொண்டார்‌. அதன்‌ பின்பு அர்ஜுனன்‌ தான்‌ தேவதைகளிடமிருந்து பெற்ற அஸ்திரங்களை எல்லாருக்கும்‌ காண்பித்து, அவைகளை உபயோகிக்கும்‌ விதம்‌ தேவர்களிடம்‌ இருந்து தான்‌ அறிந்தபடி அவர்களுக்கு எடுத்துரைத்தான்‌.